சின்னதாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2018
பார்வையிட்டோர்: 6,689 
 
 

சின்ன தாத்தாவைப் பற்றிய என் நினைவுகள், சிறு வயதிலிருந்தே அழகான படிமங்களாக சேர்ந்திருந்தது. நான் என் அண்ணா, பக்கத்து வீடுகளிலிருந்த எங்கள் நண்பர்கள் என அனைவரும் அவரை ஒரு அழகான கதை சொல்லியாகவே அறிந்திருந்தோம்.

விசாலமான முற்றத்தை கொண்ட மர வேலைப்பாடுகள் நிறைந்த காரை வீடு எங்களுடையது. வீட்டின் தரைகளை பெரும்பாலும் சிமெண்டால் பூசி சில இடங்கள் மாட்டு சாணம் கலந்த களிமண் பயன்படுத்தி மெழுகப்பட்டிருகும். காற்றோட்டமான திறந்த வெளி வராண்டாவில் தூங்குவது தான் எங்கள் வழக்கம் சின்ன தாத்தாவைத் தவிர வீட்டில் யாருக்கும் தனி அறைகள் கிடையாது.

வீட்டின் வாசலை அழகான நெல்லி மரம் அலங்கரிக்கும். அதன் அருகே போடப்பட்டிருக்கும் திண்ணையில் இரவு உணவு முடித்து உறங்குவதற்கு முன்

சின்னதாத்தா சிறிது நேரம் இளைப்பாறுவார். அப்போது அவரைச் சுற்றி நாங்கள் அமர்ந்துகொள்வோம்.

எதைப்பற்றிக் கேட்டாலும் சிறிது கூட தயக்கமின்றி சளைக்காமல் பதில் சொல்வார். ஒரு முறை வானில் பறந்துகொண்டிருந்த ராக்கெட்டை காட்டி “தாத்தா இதெல்லாம் எப்படி செய்யறாங்க?” என்றேன், அவர், “அதெல்லாம் ஒண்ணும்பிரமாதமில்லைடா இந்த தீபாவளி ராக்கெட்டெல்லாம் செய்றோமில்லை அதே மாதிரிதான் என்ன இது சைஸ் கொஞ்சம்பெரிசு அதனால மருந்து கொஞ்சம் ஜாஸ்தி அவ்வளவு தான்” என்றார். சரியா? தவறா? என்றெல்லாம் ஆராயத்தெரியாத வயது, அவர் எது சொன்னாலும் வாயைப் பிளந்து கொண்டு கேட்டுக்கொண்டிருப்போம் இப்போது நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது.

அஷ்டாவதானி, போல பல திறமைகள் அவரிடமிருந்தது. திடீரென ஜோதிடம் சொல்வார், சில நேரங்களில் லோக்கல்கேபிள் டி வியில் தோன்றி சனி ராகு கேது பெயர்ச்சிக்குப் பரிகாரங்கள் சொல்லிக் கொண்டிருப்பார். கோவிலில் அர்ச்சகர் இல்லாத சமயங்களில் பட்டராக அம்பாளுக்குப் பூஜை செய்வார். மாலை நேரங்களில் சயின்ஸ் ஃபிக்ஷனில் எங்களுக்குக்கதை சொல்வார். எனவே அந்த வயதில் அவர் எங்களுக்கு ஒரு நாயகனாகக் காட்சியளித்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

சின்ன தாத்தா கேபிள் டி வியில் ஜோதிடம் சொல்வதால், தன்னை மிகவும் பிரபலமானவராக நினைத்துக்கொண்டார்.

ஒருமுறை என்னை சலூனுக்கு அழைத்துச் சென்றவர், அங்கிருந்த கட்டைக்காரரிடம், “எங்க அண்ணனுடைய பேரன்தான் கொஞ்சம்சீக்கிரம் முடி வெட்டி அனுப்புப்பா” என்று சொல்லிவிட்டு அவர் பதிலுக்கு கூட காத்திராமல் சென்றுவிட்டார். அவரிடம்எதுவுமே பதில் பேசாத முடி வெட்டுபவர், பாதி முடி வெட்டிக் கொண்டிருந்த போது திடீரென “தம்பி எனக்கொரு சந்தேகம் நீ அவங்க அண்ணனோட பேரன் சரி, அவர் யாரு? என்றார். எனக்கு எங்கே பாதியில் நிறுத்தி அனுப்பிவிடுவாறோ என்று ‘திக்’கென்று இருந்தது. நல்லவேளை அவ்வாறு நடக்கவில்லை.

ஒருமுறை எங்கள் வகுப்பில் மாலதி டீச்சர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். கொஞ்சம் கண்டிப்பானவர், மேலும் அன்று அவர் சிறிது கோபத்திலிருந்தார் என்பது ஆரம்பத்திலேயே எங்களுக்குப் புரிந்துவிட்டதால் வாலை சுறுட்டி அமர்ந்திருந்தோம். அவர் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். அப்போது “கொஞ்சம் நிறுத்தும்மா” என்ற அதிகார தோரணையுடன் வசலில் இருந்து வந்த குரல் அனைவரின் கவனத்தையும் கலைத்தது. “பையன் சாப்பாட்டு கூடையை மறந்துட்டான்மா, இது கூடவா சொல்லித்தரதில்லை, கொஞ்சம் பாடத்தோட சேர்த்து ஒழுக்கத்தையும் சொல்லி கொடும்மா” என்று டீச்சரை கடிந்துகொண்டவர் நேராக என்னிடம் கூடையை தந்துவிட்டு விடுவிடுவென சென்றுவிட்டார்.

அவர் எங்கள் பள்ளித் தாளாளருக்கு ஆஸ்தான ஜோதிடரென்பது டீச்சருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, சாதாரணமாகவே மிகுந்த கண்டிப்பானவர், அன்று கொஞ்சம் கோபத்தில் வேறு இருந்தார், என்றால் எனக்கு என்ன நேர்ந்திருக்கும் என்பதை விவரிக்கவேண்டுமா என்ன? அதற்குப் பிறகு தொடர்ந்து மாலதி டீச்சரை எங்கு பார்த்தாலும் லேசாக உதறலெடுக்கும். அவர் நாங்கள் வசித்து வந்த தெருவுக்கு மூன்றாவது தெருவில் வசித்துவந்ததால் அந்தப் பக்கம் போவதைக் கொஞ்ச நாட்கள் தவிர்த்துவந்தேன்.

வீட்டிலும் அவர் அதிகாரம்தான் கொடி கட்டிப் பறக்கும். அவர் சொல்லுக்கு மறுத்துப் பேசும் தைரியம் எங்கள் தாத்தா உட்படவீட்டில் யாருக்கும் இல்லை. இத்தனைக்கும் அவர் இவரைவிட வயதில் மூத்தவர். ஒருமுறை அப்பாவிடம் இது பற்றிக்கேட்டபோது, “பாவம்டா கல்யாணமே பண்ணிக்காம தனிக்கட்டையா இருந்துட்டார் அதனால அவர் மேல எல்லாருக்கும் ஒரு கரிசனம்” என்றார். எனக்கும் அது நியாயமாகவே பட்டது.

ஒரு வழியாக மாலதி டீச்சர் வீடு மாற்றிச் சென்று அங்கே ஒரு போஸ்ட்மாஸ்டர் குடும்பம் குடிவந்தது. இருப்பினும்அந்த வழியாகச் செல்லும்போது மாலதி டீச்சர் இருந்த வீட்டைக் கடக்க நேரிட்டால் ஏற்படும் படபடப்பை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை.

இன்னிலையில் ஒரு நாள் திடீரென எங்கள் சின்ன தாத்தா தன் அண்ணனிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச்சென்றுவிட்டார். அவரைக் காணவில்லை என்று வீடே அல்லோலப்பட்டது. நல்லவேளையாக சிறிது நாட்களில்அவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது அதில் தான் திருவல்லிக்கேணியில் ஒரு அறை எடுத்துத் தங்கியிருப்பதாகவும், யாரும் தேட வேண்டாமென்றும் குறிப்பிட்டிருந்தார், அவர் முகவரியும் இருந்தது. கொஞ்ச நாட்களில் அவரே கோபம் தணிந்து திரும்ப வருவார் என்று அனைவரும் சமாதானமடைந்தோம்.

பத்தாம் வகுப்பு விடுமுறையில் எனக்கு அவரைப் பார்க்கும் ஆவல் அதிகரித்தது. அப்பாவின் பர்ஸிலிருந்து கொஞ்சம் காசு எடுத்துக்கொண்டு சென்னைக்கு கிளம்பிவிட்டேன். திருவல்லிக்கேணியில் அவரைக் கண்டபோது மிகுந்த கோபமடைந்தார். பின்பு ஒரு வழியாகச் சமாதானமானவர், “என் மேல உனக்கு அவ்வளவு பிரியமா?” என்று வாஞ்சையுடன் என்னைஅணைத்துக்கொண்டார்.

அன்று காலை, அழகாக உடையணிந்து, மிக நேர்த்தியாகத் தன்னை அலங்காரம் செய்து கொண்டவர். “கல்யாண சாப்பாடுசாப்பிடலாம் வா” என்று என்னையும் அழைத்துக்கொண்டு அருகில் இருந்த ஒரு சத்திரத்துக்கு சென்றார். எனக்கு அந்தச்சத்திரத்திலிருந்த யாருடைய முகமும் பரிச்சயமானதாக இல்லை. நேராக டைனிங் டேபிளுக்கு சென்றவர் வழக்கமானஅதிகார தோரணையில் அங்கிருந்தவர்களை விரட்டினார். அவர்களும் பவ்யமாக அவருக்குப் பரிமாறினார்கள். காசு இல்லாத சமயங்களில் இது போல் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன், கொஞ்சம் அவமானமாகஇருந்தது. அவரிடம் இது பற்றி விவாதிக்கவும் மனமில்லை.

அடுத்த நாள் காலை அவரே ரயில் நிலையம் வரை வந்து என்னை வழியனுப்பினார்.

“தாத்தா நீங்களும் எங்க கூடவந்திடுங்க” என்றேன். அவர், “உனக்குத் தான் விலாசம் தெரியுமே வேணும்போது நீதான் வந்து என்னைப் பாறேன்” என்றார். பின்பு தாத்தாவின் மரணம், அண்ணாவின் திருமணம் என எந்த நல்லது கெட்டதிலும் அவர் பங்கேற்கவில்லை ஒன்றிரண்டு முறை நான் மட்டும் அவரைப் பார்க்க சென்றிருந்தேன்.

என் படிப்பெல்லாம் முடிந்து நல்ல இடத்தில் கை நிறைய சம்பளத்ல் வேலையும் கிடைத்தது வீட்டில் எனக்குப் பெண்பார்க்க முடிவு செய்தார்கள். அப்போது சின்ன தாத்தவைப் பார்க்கச் சென்னை சென்றிருந்தேன்.

என்னைப் பார்த்ததும்உற்சாகத்துடன் வரவேற்றவர் நீண்ட நேரம் என்னுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்பு தான் நான் கோபித்துக்கொண்டுவந்திருப்பதை அறிந்து “ஆமா காசு கூட இல்லாம கிளம்பிட்டேன்ற, ஒரு வேளை நான் இங்க இல்லாம வீடு மாறியிருந்தா என்ன செய்வே? என்றார்

“என்ன செய்றது உன்னைமாதிரி நானும் ஏதாவது கல்யாணத்தில போய் ஓசில சாப்பிட வேண்டியது தான்” என்றேன்

“ஓசி சாப்பாடா, எப்ப?” என்றார் அப்பாவியாக

“நான் டெந்த் முடிச்சிட்டு ஒருமுறை வந்தேன்ல அப்ப?” என்றேன்

“அடப்பாவி அப்ப மெட்றாஸ் வந்த புதுசில ரெண்டு மூணு சமையல் கான்ட்ராக்டர் கிட்டச் வேலை ஏதாவது வேணும்னு சொல்லி வச்சிருந்தேன், அவங்க எல்லாம் பந்தி பரிமாறரதுக்கு முன்னாடி உப்பு புளியெல்ல சரியா இருகான்னு என்னை சாப்பிட்டு பாக்க சொன்னாங்க அதை நீ தப்பா எடுத்துகிட்டியா? சரி விடு ஆமா திடீர்னு இப்படி கோவிச்சுட்டு வந்துட்டேன்றியே உனக்கு யார் மேல என்ன கோவம்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

வீட்டில் எனக்குப் பெண் பார்த்துக்கொண்டிருப்பதையும் அதில் எனக்கு விருப்பமில்லை என்றும் கூறினேன். அதைக் கேட்டு நீண்ட நேரம்மௌனமாக இருந்தவர்,

“லவ்வா?” என்றார்.

நான் பதில் பேசாத நிலையில் அவரே தொடர்ந்து, “பொண்ணு யாரு?” என்றார்.

“மூணாவது தெருவில நீ ஊரை விட்டு வந்தபோது குடி வந்தாரே போஸ்ட் மாஸ்டர் அவரோட பொண்ணு சுஜாதா” என்றேன்.

மீண்டும் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். கைகள் லேசாக உதறிக்கொண்டிருந்தன. வாய் அவரையறியாமல் ஏதோ முணுமுணுத்தது. பின்பு அவரே தொடர்ந்து “நமக்கும் அவங்களுக்கும் மொதல்லேர்ந்தே ஆகாதேடா!: என்றார்

எனக்கு அதெல்லாம் தெரியாது என்று முகத்தை திருப்பிக்கொண்டேன்.

சிறிது நேர மௌனம் நிலவியது.

“சரி போகட்டும், அந்த பொண்ணு சுஜாதாக்கு இதுல விருப்பமா” என்றார்.

“ரெண்டு மூணு தடவை பேசியிருக்கேன், அவளுக்கு என்னை பிடிக்கும்னு தான் நினைக்கிறேன், மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது, யார்கிட்ட சொல்றதுக்கும் எனக்குப் பயமா இருக்கு” என்றேன்.

நீண்ட நேரம் மௌனமாக இருந்தார். ஏதோவொரு முடிவுக்கு வந்தவராக என்னிடம்,

”அந்த காலண்டர்ல வர்ற திங்கக்கிழமை சோமவார பிரதோஷமான்னு பாரு” என்றார்

“அப்படின்னா?”என்றேன்

“இது கூட தெரியாதா? என்று தள்ளாடியவாறே மெல்ல எழுந்து ஜன்னலில் மாட்டியிருந்த காலண்டரை வெளிச்சத்தில் பார்த்து உறுதி செய்துகொண்டவர்,

“ நீ புறப்பட்டு ஊருக்குப் போ, வீட்ல சனிக்கிழமை நான் வறேன்னு சொல்லு, என் ரூமை ரெடி பண்ணி வெக்கச்சொல்லு” என்று வழக்கம்போல் ரயில் நிலையம்வரை வந்து என்னை வழியனுப்பிவைத்தார்.

சொந்த அண்ணன் மறைவுக்குக் கூட வராதவர், இப்போது வருகிறேன் என்றது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

சனிக்கிழமை மாலை ஆட்டோ ரிக்ஷாவில் வந்து இறங்கினார். அன்றைக்கு முழுவதும் அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரைப் பார்க்க வந்திருந்தனர். ஞாயிரன்றும் இது தொடர்ந்தது. தாத்தா எல்லோரிடமும் அலுக்காமல் பேட்டி கொடுத்துக்கொண்டிருந்தார்.

திங்கக்கிழமை மாலை சுமார் ஆறு மணியளவில் ஜுப்பா வேஷ்டியில் அங்கவஸ்திரத்துடன் தன்னைஅலங்காரம் செய்து கொண்டு “கோயிலுக்கு போய்ட்டு வரேண்டா” என அப்பாவிடம் மட்டும் சொல்லி விட்டுக் கிளம்பினார்.

எனக்கு சஸ்பென்ஸ் தாளவில்லை, ‘ஸோம வார பிரதோஷ’ தினத்தில் கோவிலில் ஏதோ விஷேசம்இருக்கிறது என்று சிறிது நேர இடைவெளியில் நானும் அவரைத் தொடர்ந்தேன். கோவிலை அடந்து பிரகாரம் முழுதும் தேடினேன், லேசாக இருட்டியிருந்தது, கோவில் காம்பவுண்டு சுவரை ஒட்டியிருந்த நந்தவனத்தை பார்த்தவாறு ஒரு பெண்மணியிடம் பேசிக்கொண்டிருந்தார்.

அருகில் சென்று பார்த்தபோது.. அட! இது சுஜாதாவோட பாட்டி, அது சரி அவங்க இன்னைக்கி கோவிலுக்கு வருவாங்கன்னு இவருக்கு எப்படித்தெரியும்? என்ற ஆச்சரியம் நிறைந்த கேள்வியுடன் மேலும் அருகில் சென்றபோது சின்ன தாத்தா பேசியது தெளிவாக கேட்டது.

“அந்த காலத்தில நமக்கு இந்த மாதிரி சந்தர்ப்பமில்ல, அதுவுமில்லாம மரகதம் அவனும் என்னாட்டம் ஆயிடக்கூடாது பாரு, அதனால தான் சொல்றேன்” என்று அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது முதல் முறையாக அவர் குரல் கம்மியிருந்தது.

சின்ன தாத்தாவைப் பற்றிய என் நினைவுகளில் அவரை எப்போதும் ஒரு கம்பீரமானவராகவே இருத்திக்கொள்ள முடிவுசெய்து சத்தமில்லாமல் அங்கிருந்து கழன்று கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *