அரசுயர் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு ‘இ’ பிரிவு வருகைப் பதிவேட்டில் முருகேசன் பெயர் இருக்கிறது. அவனோ ‘ஐவரின் கரந்துறை வாழ்க்கை’ப் போல, மறைந்து மறைந்து வாழ்ந்தான்.
பள்ளி ஆசிரியர்கள், ‘சர்வ சிட்ச அபியான்’ என்ற மத்திய அரசின் கல்வித் துறை அலுவலர்கள், கூடப்படிக்கும் மாணவர்கள்…, யார்க்கண்ணில் பட்டாலும் பள்ளிக்கூடத்துக்குக் கொத்திக்கொண்டுப் போய்விடுவார்கள்.
பள்ளிக்கூடம் அறவேக் கசந்தது அவனுக்கு. பகல் முழுதும் வீட்டுக்குள்ளேத், தன் பணிப்பட்டரைக்குள்ளேயேக் கனவுகளோடும், கற்பனைகளோடும் கழித்தான்.
கொரோனா நேரத்தில், எல்லா மாணவர்களுக்கும் அத்தியாவசியமாகவிருந்த கைப்பேசி, இப்போது முருகேசனுக்கு முதுகெலும்பாய் ஆகிப்போனது.
‘யூ டியூப்’ என்ற செயலியில் தொழில் கற்றான்;
உலகின் பல்வேறு பகுதிகளில், மண் பானைகள், பீங்கான் பானைகள் வனையும் முறைகளைச் சுவாரசியமாகப் பார்த்துக் பார்த்துச் செய்துப் பழகினான்.
‘நாமும் இதுபோல வித்தியாசமான வடிவங்களில் பானைகளும், பாத்திரங்களும் வனையவேண்டுமென்றத் தீராதத்தாகமும், ஆவலும் அவனுள் கணன்றன. கண் பார்த்ததைக் கை செய்தது.
தன் தொழிலுக்கும் உதவியாக இருந்ததால், பெற்ற தகப்பனும் “ஏன் பள்ளிக்கூடம் போகவில்லை?” என்று ஒருபோதும் மகனைக் கேட்டதேயில்லை.
முருகேசனின் தந்தை மண்பாண்டங்கள் தயாரிக்கும் குயவர். பல விதமான மண்பாட்டங்களை மிகச்சிறப்பாக வனையும் நிபுணரவர்.
‘குலவித்தை கல்லாமல் பாகம்படும்’ என்பார்களல்லவா…!, அதைப்போல, பல தலைமுறைகளாகச் செய்துவந்தத் தொழிலில் பெரும் ஈடுபாடும், நிபுணத்துவமும், நிறைந்திருந்தன முருகேசனிடம்.
இயற்கையிலேயேத் தொழில் நுணுக்கங்கள் வசப்பட்டதால், அவனுடைய வனைவுகள் நேர்த்தியாகவேயிருந்தன.
ஒரு நாள் மண் கலயம் வாங்க வந்தார் வரசராசனய்யா.
“எலேய், முருகேசா, அய்யாவுக்கு, மண் மடக்கு ஒண்ணு, கலயம் ஒண்ணு கொண்டாலேய்…!”-
கொண்டு வந்தான் ஒரு சிறுவன்.
‘என் மகனய்யா இவன்…” பெருமையுடன் சொன்னார் தகப்பன்.
“அப்படியா?” – வரதராசனய்யா, பையனை ஏற இறங்கப் பார்த்தார்.
“பயலுக்கு… வயதென்ன?”
“ஏழுங்க…!”
ஏழு வயசு மகனை பள்ளிக்கூடம் அனுப்பாத முருகேசனைப் பார்த்தார்.
“ஐந்து வயது முடிந்தவுடனேயே உன் மகனைப் பள்ளிக்கூடத்துல சேர்த்திருக்கணும். படிப்பு, குழந்தைகளின் உரிமை. படிக்கவேண்டிய பையனை இப்படி வேலை வாங்குவது, சட்டப்படியும், தர்மப்படியும் குற்றம்.”- உரிமையோடுக் கோபித்துக் கொண்டார் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியின் தமிழாசிரியர் வரதராசனார்.
தன் வாடிக்கையாளரும், அவ்வப்போது தனக்கு உதவிகள் செய்யும், தமிழையாவின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, விசயதசமி நன்னாளில் அரசு துவக்கப்பள்ளியில் ‘இரண்டாம் வகுப்பில்’ முருகேசனைச் சேர்த்தார்.
சேர்ந்த நாள் முதல் பள்ளியில் இருப்பேக்கொள்ளவில்லை முருகேசனுக்கு.
கல்வித்துறைக் கொடுத்த விலையில்லாப் புத்தகங்களும், குறிப்பேடுகளும், விலையில்லா முதுகுப் பையில் புத்தம்புதியதாயிருந்தன.
பயன்படுத்தினால்தானேப் புத்தகம் அழுக்காகும். அவன்தான் அவைகளை தொட்டுக்கூடப் பார்ப்பதில்லையே?
வகுப்பில் அமர்ந்திருந்தாலும் மனம் முழுதும் பாண்டம் வனையும் படுக்கை வசச் சக்கரத்திலேயே சுழன்று கொண்டிருந்தது.
அந்தச் சுழலும் சக்கரத்தில்தான் முருகேசனுக்கு எத்தனை ஈர்ப்பு…!
‘போகப்போக மாறிவிடுவான், நாளாவட்டத்தில் கல்வியில் கவனம் கொண்டுவிடுவான்,’- என்று ஆசிரியர்கள், விட்டுப்பிடித்தார்கள்.
வயிற்றுப் பொருமல், தலை நோவு, கண் கரிப்பு, கால் குடைச்சல் என ஒவ்வொருநாளும், ஏதாவது நோவு சொல்வதும், அழுது கொண்டே வீட்டிற்கு செல்வதுமே வாடிக்கையானது முருகேசனுக்கு.
வீட்டிற்கு வருவான். அப்பாவுக்கு உதவியாக சக்கரம் சுற்றுவான்; களிமண் மிதித்துப் பதமாக்குவன்; நீர் தெளித்துக் கைகளால் பிசைந்து கொடுப்பான்; பட்டரையில் உட்கார்ந்து பானையும் வனைவான், வனைந்த பச்சைப் பானைகளைத் தட்டித் தட்டி வலுவேற்றுவான்.
கூளம் சுமந்து வந்து சுடுகுழியில் பரப்புவான். பச்சைப் பானைகளின் மேல் செம்மண் பூசி, கூளம் அடைத்துக் காளவாயில், பதமாய் அடுக்கி வேகவைக்க உதவுவான்.
சுட்டுச் சிவந்தச் சட்டிப்-பானைகளைத் தட்டித்-தரம்பார்த்துத் துடைத்தடுக்குவான்.
வழக்கமான வாரச்சந்தையிலும், பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்குமுன் நகரத்தில் பரப்பும் பானைக்கடையிலும், கோவில் திருவிழாச்சந்தையிலும், வாடிக்கையாளர்கள் சூழ முருகேசனைப் பார்க்கலாம்.
படிப்பின் அருமையும் அவசியமுமறியாதப் படிப்பறிவற்றத் தந்தையின் அறியாமையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டான் முருகேசன்.
குழந்தைகளின் கற்றலில் தேக்கநிலைக் கூடாதென்பதாலும், மேல்வகுப்புக்குச் செல்லும்போதுப் பொறுப்புணர்ந்துப் படிக்கத்துவங்கிவிடுவானென்ற நம்பிக்கையாலும் ஐந்தாம் வகுப்புவரை கொடுத்தக் கட்டாயத் தேர்ச்சியின்விளைவால் துவக்கக் கல்வியை தாண்டிவிட்டான் முருகேசன்.
தொடர்ந்து, நடுநிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்ந்தானேவொழிய, பள்ளிக்குச் செல்லவேயில்லை.
‘கொரோனா’வெனும் கொடிய நோய்ப் பரவி, உச்சமடைந்து, ஆயிரமாயிரமாய் உயிர்ச்சேதம் அடைந்த ஆண்டுகளவை.
கொரோனா அரக்கன் துணையால் நடுநிலைப் பள்ளிப் படிப்பும் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது அவனுக்கு.
அடுத்து உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் அவனைச் சேர்ந்து விட்டார் வரதராசனார். முருகேசனுக்கு வகுப்பாசிரியரும் அவர்தான்.
இரண்டாம் வகுப்புக்கான மனவளர்ச்சியுடன், ஒன்பதாம் வகுப்பில் அமர்ந்திருந்த, முருகேசனைக் கண்டு மனம் வெதும்பினார்.
“முயன்றுக் கற்றால் கொரோனாத் தொற்றால் ஏற்பட்டக் கல்வியிழப்பை ஈடு செய்யலாம்…!” என்ற அறிவுரைகளையெல்லாம் அலட்சியப்படுத்தும் பதின்மவயது முருகேசனை எப்படியேனும் திருத்தி நல்வழிப்படுத்த ஆவல் கொண்டார் தமிழாசிரியர்.
ஆனால் அவனோ பள்ளிக்கு வருவதையேத் தவிர்த்தான். கல்வி கசந்தது எட்டிக்காயாய்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த வரதராசனார், ஒரு முடிவுக்கு வந்தார்.
விடுமுறை நாளில் முருகேசன் வீட்டுக்குச் சென்றார்.
இல்லத்தின் முகப்பில், மரத்தின்கீழ் வெந்தப் பானைகளைத் தட்டிப் பார்த்துத் தரம் பார்த்து அடுக்கிக் கொண்டிருந்தார் முருகேசனின் தந்தை.
தமிழாசிரியரை கண்டதும் வணங்கினார். மரத்தின் கீழ் கிடத்தப்பட்டிருந்த கயிற்றுக் கட்டிலில் அவரை அமரச் சொன்னார்.
“இளநீர் அருந்துகிறீர்களா ஐயா?” விருந்து உபசரித்தார்.
“தித்திக்குந் தெள்…
அமுதாய்த் தெள்…
அமுதின்மே….
லானமுத்திக்….
கனியே, என்முத்த….
மிளே புத்திக்குள்…”
தப்பும் தவறுமாய், சிதைவொலியாய் வனைப்பட்டறையிலிருந்து பாட்டொன்று புறப்பட்டு வந்து, காய்ச்சிய ஈயமாய் தமிழாசிரியரின் காதுகளில் புகுந்தது.
“என் மகன், அதாவது உங்கள் மாணவன்தான் பாடுகிறானய்யா. தாங்கள் கற்றுக்கொடுத்ததாகத்தான் சொன்னானய்யா!”- பெருமையுடன் சொன்னார் முருகேசனின் அப்பா.
‘தன் மகனைப்பற்றி உயர்மதிப்பு வைத்துள்ள’த் தந்தையின் எண்ணத்தை மாற்ற விரும்பவில்லை தமிழய்யா.
“ஆம்…! ஆம்…! சிறப்பாய்ப் பாடுகிறான்…!”- வலிந்து புன்னகையை வரவழைத்துக் கொண்டார்.
‘பொய்மையும் வாய்மையிடத்து’ என்று அறிந்தவரல்லவா அய்யா அவர்கள்.
“ஐயா, நான் மட்டும் உள்ளே சென்று என் மாணவனைச் சந்தித்து உரையாடவேண்டும்,”- என்றவர் பணிப்பட்டறைக்குள் நுழைந்தார்.
தமிழய்யாவை இங்கே எதிர்பாராத முருகேசன் அதிர்ந்தான்.
தமிழாசிரியர் வலிந்துத், தன் முகத்தில் கடுமையை ஏற்றிக் கொண்டார்.
“பாடலா நீ பாடுகிறாய்? சன்னி கண்டவன் போல் பிதற்றுகிறாயே?”-என்று கர்ஜித்தார்.
“ஐயா, இது தாங்கள் கற்பித்த “தமிளோவியம்மய்யா…”- சமாதானம் கூற வந்த முருகேசனின் வாயை அடக்கினார்..
தமிழின் சிறப்பு ‘ழ’ கரம் சிதைவதை சகித்துக் கொள்ள முடியாத அவர் சன்னதம் வந்தவர் போல் நடந்து கொண்டார். அவனை நோக்கி ஆத்திரமாய்ப் போனார். சக்கரத்தை விட்டு அப்பால் நகர்ந்தான் முருகேசன்.
முருகேசன் அமர்ந்திருந்த பீடத்தில், தற்போது அமர்ந்தார் வரதராசனார்.
வழுவழுவென, பிசிரின்றி, நேர்த்தியாய், கம்பீரமாய் சக்கரத்தின் நடுவில் மிடுக்காய் நின்ற பச்சைமண் பானையைப் பார்த்தார்.
சக்கரத்திலிருந்து அறுத்துப் பிரித்தெடுக்கும் நிறைவான கட்டத்திலிருந்த பானைப் பார்க்கவே ரசனைக்குறியதாகத்தான் இருந்தது.
வலிந்து, மனதைக் கல்லாக்கிக்கொண்டார்.
கோலால் சக்கரஞ்சுற்றி, இளம் விரல்களால் தொட்டுத்தொட்டு வனைந்த அழகான பச்சைப்பானையின் ஓரங்களை ஆத்திரத்தோடு, ‘மடக் மடக்’கென்று ஒடித்தெடுத்தார். ஒடித்தத் துண்டுகளை நாற்புறமும் வீசினார்.
அருகிலிருந்த குச்சியால், பானையின் பக்கவாட்டில் குத்திட்டுத் துளையிட்டார். உருவமற்றுச் சிதைத்தார்.
‘மணிக்கணக்காய் உழைத்துக் கலையம்சத்தோடு உருவாக்கியப் பானையின் அழகையும் வடிவையும் இப்படிச் சிதைத்துவிட்டாரே?’ – தமிழாசிரியரின் இழி, அழிசெயல் பார்த்து மனமுடைந்து மருகினான் முருகேசன். கண்ணீர் விட்டு, அமைதியாய் அழுதான்.
தமிழாசிரியரென்பதால் ஆத்திரத்திலும் அமைதியோடு நின்றான். வேறு யாரேனுமெனில் பூகம்பமாய் வெடித்திருப்பான் முருகேசன்.
தனக்குள் பொங்கிய கோபத்தையும், ஆற்றாமையையும் அடக்கிக் கொண்டான்.
“ஏனையா இப்படிச் சிதைத்தீர்கள்…!”- கண்ணீர் மல்கக் கேட்டான் முருகேசன்.
பார்த்துப் பார்த்து பல மணி நேரங்கள் உழைத்து வனைந்த உன் படைப்பைச் (பானையை) சிதைக்கும்போது உனக்கு இவ்வளவு வலி ஏற்படுகிறதே; அதுபோலத்தானே மிகச் சிறந்த புலவர்களின் சிந்தனையில் உதித்த கவிதைகளை நீ சிதைக்கும்போது தமிழாசிரியரான எனக்கும் இருந்திருக்கும்.
“….”
அய்யாவின் கூரிய சொல், அம்பாய் குத்த, தன் தவற்றை எண்ணிய முருகேசன், சில மணித்துளிகள் அமைதியாய் நின்றான். அதைத் தொடர்ந்து “என்னை மன்னித்துவிடுங்களய்யா?” என்று வணங்கினான்.
“தம்பி, முருகேசா; உன்னை நினைக்கும்பொழுது மிகவும் பெருமைகொள்கிறேன். போற்றுதலுக்குரிய உன் தொழில் திறமையை கண்டு வியக்கிறேன்.
“திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே!”
என்கிறார் மகாகவி பாரதி.
மகாகவியின் கருத்தில், முன் பாதியை நீ திறம்படச் செய்கிறாய்.
திறமையாகப் பானை வனைகிறாய். பாரதியின் வாக்குப்படி ‘தேர்ந்த கல்வி, ஞானம்’பெற பள்ளிக்குத் தவறாது வருகைதருதல் வேண்டும்.
பள்ளிநேரம் போக, ஓய்வுநேரங்களில் நீ உன் தந்தைக்கு உதவியாய் இந்தத் தொழிலைச் செய். எந்தத் தொழிலும் இழித்தன்று.”
மனதார வாழ்த்தி விட்டுப் பணிப்பட்டரையிலிருந்து வெளியே வந்தார் தமிழாசிரியர்.
வெளியில் மரத்தடியில் தயாராய் வைத்திருந்த இளநீரை வாங்கிப் பருகிவிட்டு இல்லம் திரும்பினார் வரதராசனார்.
தமிழாசிரியர் தன் வீட்டுக்கு வந்துப் பணிப்பட்டரையில் முருகேசனை தனியே சந்தித்துப் பேசிவிட்டுச்சென்றத் தருணம் முதல், முருகேசன் காலம் தவறாது பள்ளிக்குச் சென்றான்.
படிப்பில் கவனன் செலுத்திப் படித்தான்.
வீட்டிலமர்ந்துப் பள்ளிப் பாடங்களை முறைப்படிப் படித்தான். எழுதினான்.
தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றான்.
அனைத்து ஆசிரியர்களிடமும் நற்பெயர் பெற்றான்.
நன் மாணாக்கன் என்ற பெயர் பெற்றான்.
ஓய்வு நேரங்களில் பானை வனைவில் தந்தைக்கு உதவியும் செய்தான்.
முருகேசனின் ஆக்கபூர்வமான மாற்றத்திற்கானக் காரணத்தை எவரும் அறியாவிட்டாலும் அனைவரும் அவன் மாற்றத்தை கண்டு மகிழ்ச்சியே அடைந்தனர்.
– தேன் சிட்டு தீபாவளி மலர் 2023