ரம்யாவிற்கு எரிச்சல்!!
கணவன், மனைவி சம்பாதிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறோம். பிள்ளைகள் எதிர்காலத்திற்காக இப்போதே வாயைக் கட்டி வயிற்றைக் கட்டிச் சேர்க்கலாம் என்றால் மாமனார் விடுவதில்லை.
“இதென்ன.. கூட்டு, பொரியல் இல்லாமல் சாம்பார் ரசம்,.? “குதிப்பார்.
அவருக்கு வாரம் இரண்டு நாட்களாவது கறி, மீன், தினமும் முட்டை வேண்டும்.
இதில் கொஞ்சம் குறைந்தாலும்….
“வயசானக் காலத்துல என் பொண்டாட்டியும் நானும் வயிறார சாப்பிட்டு நிம்மதியாய்ப் போய்ச் சேரணுமில்லே..? என்று இந்த வாய் ருசிக்கு வக்காலத்துப் பேச்சு. கோணல் காரணம். “!
மாதம் தவறாமல் அவர் ஓய்வூதிய பணத்தையும் கொடுக்கிறார் இல்லே. அதான் இப்படி கேட்க வைக்குது..? இது சரி வராது. தனிக்குடித்தனம் போய் விட வேண்டியதுதான். ! ‘ முடிவெடுத்து மாமனார் – மாமியார் இருக்கும் அறையை நெருங்கினாள்.
உள்ளே அவர்கள் பேச்சு காதில் விழுந்தது.
“இருந்தாலும் நீங்க செய்யிறது சரி இல்லே. வீட்டுல சிக்கனமா செலவு செய்ய விட மாட்டேங்கிறீங்க..”மாமியார் குரல்.
“அடிப்போடி போக்கத்தவளே.! என் மனசு புரியாம பேசறே..?”
“என்ன உங்க மனசு பெரிய பொல்லாத மனசு….?”
“தின்னு சலிச்சு, வாழ்ந்து முடிச்ச நமக்கு ஏன்டி நாக்கு ருசி. !!”
“அப்புறம்..?!”
“எல்லாம் நம்ம மகன், மருமகள், பேரப்புள்ளைங்களுக்குத்தான். !”
“புரியல..?!”
“நம்ம மகன் மருமகள் சின்னஞ் சிறுசுகள். பேரப் புள்ளைங்க.. வளரும் குழந்தைங்க. இந்த வயசுல நல்லா சாப்பிட்டாத்தான் பிற்காலத்துல நம்ம வயசுலேயும் அவுங்க நல்ல இருப்பாங்க. இப்பவே எதிகாலத் தேவைக்கு வேணும், புள்ளைங்க படிப்புக்கு வேணும், அதுக்கு வேணும், இதுக்கு வேணும்ன்னு சிக்கனம் கடை பிடிக்கிறேன்னு வயித்தைக் கட்டினால் பிற்காலத்துல எப்படி ஆரோக்கியமா இருப்பாங்க…? நோய்நொடி வந்து சேர்த்ததெல்லாம் அதுக்கே செலவு செய்யும்படி ஆகும்.
இந்தக் காலத்துல எல்லாம் இப்படித்தான் நடக்குது. இப்படியெல்லாம் நடக்கக்கூடாதுன்னுதான் என் ஓய்வூதிய பணத்தையும் கொடுத்து செலவழிக்க வைக்கிறேன். சிக்கனமா இருக்க வேண்டியதுதான். அதுக்காகச் சாப்பாட்டுல கஞ்சத்தனம் இருக்கக் கூடாது. நம்ம மக்கள் பேரப்புள்ளைங்க நல்லா சாப்பிடனும்ன்னுதான் எனக்கு வாரம் ரெண்டு முறை கறி. கவுச்சி தினம் முட்டை வேணும்ன்னு அடம். இப்பப் புரியுதா..? “சொல்லிச் சிரித்தார் சிங்காரம்.
தன் மாமனாரின் மனசு புரிந்த ரம்யா மனம் மாறித் திரும்பினாள்.