சாவித்திரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2012
பார்வையிட்டோர்: 8,971 
 
 

பௌர்ணமி கழிந்த இரண்டாம் நாள், ஆற்றங்கரையில் அரூபமாய் காய்ந்து கொண்டிருந்தது நிலா,பிசிறு பிசிறாய் மேகங்கள் நிலவின் முன்னும் பின்னும் ஒழிய இடம் தேடி கிடைக்காமல் வேக வேகமாய் நகர்ந்து கொண்டிருந்தன .மழை வருவதற்கான அறிகுறி மண் வாசம் பூமியைப் பிளந்து எழுந்து திண்ணைகளில் மடக்கு கட்டில்களில் தூங்கிய கிழடு கட்டைகளின் மூக்கில் குளிர் நிரப்பிப் பாய்ந்தது

மார்கழிக் கூதல் மந்தைப் புளியமரத்தை உருவிக் கொண்டு மெல்லிய புகையாய் கசிந்து கசிந்து ஆற்றை ஒட்டியே இருந்த ஷண்முகக் கோனார் தோட்டத்தின் மொட்டைக் கிணற்றை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. சாவித்ரிக்கு நிலை கொள்ளவில்லை .அவளும் கூதலோடு கூதலாய் மிதந்து போய் கொண்டிருந்தாள். நனைந்த சேலை வேறு ,பிழியக் கூட இல்லை அதற்குள் உயிர் போய்விட்டதால் இன்றைக்கும் நனைந்த சேலையோடு தான் அலைகிறாள்.

கிணற்றடிக்கு வந்ததும் அதுவரை இருந்த நிலைகொள்ளாமை பெருங் கொண்ட ஆவேசமாய் சுழற்றி அடிக்க சாவித்திரி சடக்கென தான் வந்த பாதையில் திரும்பி நின்று கொண்டு முப்பது வயது வரையிலும் பிறந்து வளர்ந்து வாழ்க்கைப்
பட்ட தனது ஊரை வெறி கொண்ட கண்களால் சில நொடிகள் உற்றுப் பார்க்க ஆரம்பித்தாள் .

சொசைட்டி ஆலமரத்தில் அடித்து இறக்கப் பட்டிருந்த ஆணிகளில் துடித்துக்கொண்டிருந்த ஜெயக்கொடியும் பாலகிருஷ்ணனும் சாவித்திரி அத்தையின் உக்கிரப்பார்வையின் தணல் தாங்காது மெல்ல முகம் திருப்பிக் கொண்டார்கள்.அவர்களுக்குத் தெரியும் சாவித்திரி அடுத்து என்ன செய்வாள் என;

உலுக்கப்பட்டவர்கள் போல கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பவானியும் பத்மநாபனும் ,ராஜாத்தியும் கூட திடுக்கிட்டு தலை தூக்கிப் பார்த்து விட்டு மீண்டும் தலை கீழாக தொங்குதலை தொடர்ந்தார்கள். இத்தனை உக்கிரம் எதற்கு இவளுக்கு…செத்து சுண்ணாம்பாகி இத்தனை காலத்தின் பின்னும்?! கேன்சரில் உடல் அழுகி செத்தும் வாழும் ஆசை தீராத கமலபாக்கியம் தனக்குள் முனகிக் கொண்டாள்.அவள் சாவித்ரிக்கு சம ஜோடு.

இவள் நினைப்பை ஊடுருவிப் பார்த்தவளைப் போல சாவித்திரி சரக்கென பாய்ந்து மிதந்து இவளருகே வந்தாள் .

“இந்த வருஷமும் யாரும் என்னை நினைக்க காணோம் பார்த்தியா ?!” என்பதாக இருந்தது தான் பெற்ற மக்களை எதிர்நோக்கி ஏமாந்த அவளது ஆவேசம் .

கமலா பாக்கியத்தின் நோயில் வறண்டு கரடு தட்டிப் போன முகத்தின் மேல் நீர்த்துளிகள் சிதற ஆரம்பித்தன ,மழை!

சாவித்ரிக்கு அவள் பதில் அனாவசியம், அவள் பாட்டில் மழையைப் பொருட்படுத்தாமல் ஜிவ்வெனப் பறந்து தான் வாழ்க்கைப் பட்ட வீட்டின் முற்றத்தில் வந்து இறங்கினாள் .

வந்த வேகத்தில் காற்று அதிர்ந்து அடங்கியது .

தெரு முக்கில் ஐயப்ப நாயக்கர் வீட்டு நாய் சாவித்ரியைப் பார்த்தமாத்திரத்தில் குரூரமாய் ஊளையிட்டது .

வாசலில் மடக்கு கட்டிலில் வலது கையை தலைக்கு வைத்து தூங்கிக் கொண்டிருந்த பெரிய நாச்சம்மை காற்றரவத்தில் எழுந்து கொண்டவள் .தன்னை ஏதோ கட்டிலோடு சேர்த்து அமுக்குவதாகப் பாவித்துக் கொண்டாள்.உண்மையில் சாவித்திரி அவளை அமுக்கிக்கொண்டு தான் இருந்தாள் .

என்ன சத்தம் இது ?

திடுக்கிட்டுத் திரும்பினால் ராஜி ;

தொட்டிலில் குழந்தையை ஆட்டிக் கொண்டே தன்னில் ஆழ்ந்து போய் எதையோ யோசித்துக் கொண்டிருந்தவளுக்கு விழுந்தது எதுவென்று அறிய சில நிமிடங்கள் ஆனது .தூங்கும் குழந்தையை எழுப்பி விடக் கூடாதே என்று வைப்ரேட் மோடில் பிரிஜ்ஜின் மேல் வைத்திருந்த செல்ஃபோன் தான் மடாரென்று தரையில் விழுந்து கதறிக் கொண்டிருந்தது .

மதர் காலிங் … அம்மா தான் … “சொல்லும்மா” என்றவாறு எடுத்துக் காதில் வைத்தாள் .அம்மா சொன்னதற்கு பதிலாய் …

“ம்மா நான் அவர் கிட்ட கேட்டுப் பார்க்கறேன்ம்மா …என்ன சொல்வரோ தெரியல!” என்றாள்.

அப்பா வீட்டிலிருந்து அப்பா வழி சொந்தங்கள் அத்தைகள்,சித்தப்பாக்களின் குடும்பங்கள் எல்லோரும் சேர்ந்து பஸ் வைத்துக் கொண்டு எந்தக் காலத்திலோ மூன்று நான்கு தலை முறைகளை கும்பிட மறந்து விட்டுப் போன பெண் குல தெய்வம் ஒன்றை ஜோசியக்காரன் புண்யத்தில் மீட்டெடுத்து இந்த தைப் பொங்கலுக்கு கும்பிட்டு அந்த தெய்வத்தின் அருளை புணரமைக்கலாம் என்று கிளம்பி இருக்கிறார்களாம் ”

அம்மா தலைச்சன் மகளாச்சே என்று ராஜியையும் மாப்பிள்ளையையும் சாமி கும்பிடுக்கு கூப்பிடத்தான் ஃ போன செய்திருந்தாள் .

“லஞ்சுக்கு வராரா இல்லையான்னு தெரியலம்மா …வந்தா கேட்டுட்டு உனக்குச் சொல்றேன் “என்றவாறு ராஜி ஃபோனை வைத்தாள் .

ராஜிக்கு இந்த வீடு பிடிக்கவே இல்லை .குடி வந்து மூன்று மாதங்கள் தான் ஆகின்றன. இப்போது உடனே வீடு மாறலாம் என்று ரகுவிடம் சொன்னால் கடித்துக்குதறி விடுவான் .அவன் வீட்டிலிருந்தோ ,இவள் வீட்டிலிருந்தோ உதவிக்கென்று வந்து இவர்களோடு இருக்க முடியாத நிலை .மூன்று மாதக்கைக்குழந்தையை வைத்துக் கொண்டு இந்த புறநகர்ப் புறத்து வீட்டில் எதுவானாலும் இவளே தான் சமாளித்துக் கொள்ள வேண்டும் .

சாமி கும்பிடும் சாக்கில் மூன்று மாதம் கடத்தலாம் அதற்குள் வீடு மாறி விடலாம் என்பது ராஜியின் கனவு ;

“கோயிலுக்குப் போறேன்னு நீ பாட்டுக்கு இன்னும் ஒரு மூணு மாசம் நாலு மாசம் அங்கேயே டேரா போட்டுடுவா ,வேணாம் ஒட்டு மொத்தமா சம்மர்ல போய் எல்லா சாமியும் கும்பிட்டுக்கலாம் ” என்று இவளது ஆசையை ரகு நிராகரித்து விடுவான் என்ற பயமும் அவளுக்கு இருந்தது ..பிரசவத்திற்கு ஏழாம் மாசமே போய் விட்டதால் அப்படி ஒரு மூன்று மாதம் பிறகொரு மூன்று மாதம் என ஆறு மாதம் ஹோட்டல்களில் சாப்பிட்டு நொந்து போன கடுப்பில் இருந்தான் அவன்;

எதற்கும் அவனிடம் சொல்லுகிற விதத்தில் சொல்லிப் பார்க்க வேண்டும் .இந்த சாக்கிலாவது இந்த வீட்ட விட்டு ஊருக்கு போயி தீர்வது என்று ராஜி தீர்மானமாய் இருந்தாள் ..

வீடு பிடிக்காமலிருப்பதைக் கூட பழகிப் போனால் சகித்துக் கொள்ளலாம்.ஆனால் போன வாரத்தில் ஒருநாள் திடீரென்று இவள் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் போல பேசிக் கொண்டிருந்த கீழ் வீட்டு மாமி புதுதாய் ஒரு புரளியைக்கிளப்பி விட்டுப் போயிருந்தாள். அதைக்கேட்டதிலிருந்து ராஜிக்குப் பட்டப் பகலிலும் இந்த வீட்டில் தனித்திருக்க பயம் தான்.

ரெண்டோருநாட்களாய் ரகு ஆபீசுக்கு கிளம்பிப் போய் விட்டான் என்றால் பகலெல்லாம் பின்புற சிட் அவுட் கதவை அகலத் திறந்து வைத்துக்கொண்டாள்,எப்படியும் ராத்திரிக்கு ரகு வீட்டிற்கு வந்து விடுவான். பிறகு இப்படி பயந்து சாக வேண்டும் என்பதில்லை .ஆனாலும் பகல் தூக்கம் போனதில் ராஜி வெகு பாடு பட்டுப் போனாள் ,கண்களில் கருவளையம் வைக்காத குறை,ராவெல்லாம் குழந்தை வேறு தூங்க விடாமல் அழிச்சாட்டியம் செய்தது ,பகலில் சமையல் வேலையெல்லாம் முடிந்ததும் குழந்தையைத் தூங்கப் போட்டு விட்டு தானும் தூங்கி எழுவாள்.ஒரு வாரமாய் ராஜியின் ரொட்டீன் வாழ்வே மாறி விட்டது .

ரகு ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவான் .பிறகு குளித்து விட்டு கொஞ்ச நேரம் குழந்தையை வைத்துக் கொண்டு ஏதாவது விளையாட்டுக் காட்டுவான்.அந்நேரம் தான் ராஜி டிபன் செய்வாள் .இன்றைக்கென்னவோ ஆறு மணி தாண்டி ஏழு மணி எட்டு மணி வரை கூட ரகுவைக் காணோம் .செல்லில் பத்துப்பதினைந்து முறை அழைத்துப் பார்த்து விட்டாள் ,ரிங் போய்க் கொண்டே இருக்கிறதே தவிர அவன் ஃபோன் எடுக்கவே இல்லை.”என்ன மனிதன் இவன்?!” பெண்டாட்டி அழைத்தால் என்னவென்று கூடவா பார்க்க மாட்டான் ” ராஜிக்கு கடுங்கோபம் வந்தது .வீட்டில் யாரிருக்கிறார்கள் இவளது கோபத்தை தாங்கிக் கொண்டு சமாதானம் சொல்ல .அவளே அமைதியாகித் தீர வேண்டியவளாய் பொறுமையாக சமையலை முடித்து குழந்தைக்கு செரிலாக் ஊட்டி உடம்பு கழுவி தொட்டிலில் இட்டு தூங்க வைத்தால்.அதுவரை லேசு பாசாய் இருந்த பயமும் அலைக்கழிப்புகளும் குழந்தை தூங்கி மனதளவில் ராஜி தனியானதும் பெருங்கொண்டு எழுந்தன.

மாமி சொன்னதே திரும்பத் திரும்ப காதில் ஒலிக்க ஆரம்பித்தது .

“ராஜி உங்களுக்கென்ன தலையெழுத்தா இந்த வீட்டுக்குப்போய் குடி வந்திருக்கிங்க. சொல்றேன்னு தப்பா எடுத்துக்க வேணாம்,நான் உங்கம்மா மாதிரி ,பொண்ணு நல்லாருக்கனுமேன்னு சொல்றேன் .ஒனக்கு இந்த வீடு வேணாம்,துஷ்டி பிடிச்ச வீடு இது .இதுல குடி இருந்தவங்க ஒருத்தர் கூட நல்லா இருந்ததா சரித்திரமே இல்ல .நீங்க வர முன்ன இந்த வீடு கட்டி வாடகைக்கு விட்டதும் முதல் முதல்ல இங்க குடி இருந்த பாமா புருஷன் சொந்தக்கடை வச்சிருந்தான் பாடில ,நல்ல வருமானம் ,வீடு கட்டணும்னு பணம் சேர்த்தாங்க .எடம் வாங்கி நாளைக்கு வாஸ்து பண்ணப் போறோம்க்கான்னு முதல் நா நைட் வந்து புருஷனும் பெண்டாட்டியுமா என்கிட்டே சொல்லிட்டு வண்டில என் கண் முன்னால தான் கிளம்பிப் போனாங்க .போன அரை மணி நேரத்துல தகவல் வந்தது லூகாஸ் கிட்ட ஆக்சிடன்ட் ஆகி கார்ப்பரேசன் பஸ்சுக்கு அடில ரெண்டு பெரும் கூழா நசுங்கிப் போனாங்கன்னு ,பதை பதிக்க ஓடிப் போய் பார்த்தோம்.

சாகற வயசா என்ன?

அம்புட்டு அழகு அவ்ளோ ஒத்துமையா இருந்த தம்பதிங்க.விதி இப்டி பண்ணிடுச்சே,அவங்க தலையெழுத்து இப்டியா ஆகணும்னு புலம்பிட்டு இருந்தோம்.

பாமாவும் அவ புருஷனும் செத்தப்புறம் வீட்டை காலி பண்ணிட்டு போனாங்க அவங்க அப்பாம்மா ,அப்புறம் இந்த பேராசை பிடிச்ச ஹவுஸ் ஓனர் வாடகைய இன்னும்ஜாஸ்தி பண்ணி கணபதி ஹோமம் பண்ணிட்டு சுசிலாவுக்கு இந்த வீட்டை வாடகைக்கு விட்டான் ,

சுசிலா மாமியார் எப்டிச் செத்தாங்க தெரியுமா?!”

ராஜிக்கு திகிலாய் இருந்தது ,போதும் மாமி .வீட்டை மாத்தலாம்னா எங்க வீட்ல அவர் இப்ப ஒத்துக்க மாட்டார் ,நீங்க வேற ரொம்ப பயமுறுத்தாதிங்க …

“சரிடிம்மா …நான் சொல்லல …

ஆனா உன் அம்மாப் போல சொல்றேன் கேளு ,நீ இங்க இருக்காத ,எத்தனை சீக்கிரம் முடியுமோ அத்தனை சீக்கிரம் வீட்ட மாத்தப்பார்.”

“ம்ம் …”

“வேணாம் ராஜி ஒனக்கு இந்த வீடு வேணாம் ”

இன்னும் ரகுவைக் காணோம் மாமி சொன்னதே காதில் ஒலித்துக் கொண்டிருக்க பயம் பிடித்தாட்ட ராஜி பூஜையறைக்குப் போய் “அயிகிரி நந்தினி” சொல்ல ஆரம்பித்தாள், நிசப்தமான வீட்டில் ராத்திரி மணி பத்துக்கு மேல் அது பயத்தை இன்னும் அதிகப்படுத்தியது ..மூன்று பக்கங்கள் தாண்டுவதற்குள் செல் ஒலிக்கவே அப்படியே போட்டு விட்டு ஓடி வந்து எடுத்தாள். ரகு தான் .

“ஷ் …அப்பாடா’ என்று உள்ளூர நிம்மதியோடு ஃபோனை காதில் வைத்ததும் பொரிய ஆரம்பித்தாள் .

‘கொஞ்சமாச்சும் அறிவிருக்காங்க உங்களுக்கு ,குழந்தையோட தனியா இருக்காளேன்னு …அவள் முடிக்கவில்லை எதிர் முனையில் இருந்து வந்த பதிலில் காலுக்குக் கீழ் தரை நழுவ தலைக்குள் வண்டுகள் குடைய கை நழுவிய செல் போனை காதோடு இறுகப் பற்றிக் கொண்டு…

ஐயய்யோ என்னது …என்னங்க ஆச்சு?ஐயோ அவருக்கொன்னும் இல்லியே ! ப்ளீஸ் அவர் கிட்ட ஃபோன் கொடுங்க பேசணும் நான் ..அவள் இந்தப் பக்கம் திணறலாய் சொல்லிக் கொண்டே இருக்க .

“இந்தாம்மா உன் புருஷனுக்கு திருமங்கலம் ஜங்சன் கிட்ட ஆக்சிடண்டுங்கறேன் …பேசறதாம்ல பேசறது , ஹிட் அண்ட் ரன் கேஸ் .சீக்ரமா துணைக்கு யாரையாச்சும் கூட்டிட்டு வீ கேர் ஆஸ்பத்திரிக்குப் போ உசிர் பொழச்சிருந்தா பார்க்கலாம் ! ”

காலையில் இவள் கையால் இட்லியும் சாம்பாரும் சாப்பிட்டு விட்டு ” இத்தனை நாளாச்சு இன்னும் சாம்பார் நல்லா வைக்கத் தெரியுதாடி ஒனக்கு,எம்பொண்ணுக்காச்சும் ஒழுங்கா சாம்பார் வைக்க கத்துக் கொடு இப்ப இருந்தே?” என்று வம்பிழுத்து விட்டு கையசைத்து விடை பெற்றுப் போன கணவன் …

ராஜிக்கு பொங்கிப் பொங்கி அழுகை வந்தது ;

ராஜி இப்போது என்ன செய்ய வேண்டும் ?!

– செப்டம்பர் 30th, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *