‘ சொல்லவா. . கூடாதா. .? சொன்னால் தாங்குவாரா. .. அதற்காகச் சொல்லாமல் விடுவது சரியா. .??! ‘ என்று ரொம்பவே குழம்பிய கமலம் கணவர் தலையைக் கண்டதும் துணிந்தாள்.
வெளியிலிருந்து உள்ளே நுழைந்த மோகனரங்கம்…
” அப்பாடா. ..! ” என்று சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.
” என்னங்க. ..? ” கமலம் மெல்ல அழைத்து அவர் முன் நின்றாள்.
” என்ன. .? ” ஏறிட்டார்.
” ஒ . …ஒரு சேதி. ..”
” சொல். .? ”
” மா. .. மாப்பிள்ளை வீட்டிலேர்ந்து தொலைபேசியில் பேசினாங்க. ..”
” என்ன. .? ”
” கொஞ்சம் அதிர்ச்சியான விசயம். ..”
” ரொம்ப அதிர்ச்சின்னா குண்டை மெதுவா போடு. ..”
” வந்து. .. வந்து. …”
” சொல்லுடி. .! ” அதட்டினார்.
” பொண்ணு வேணாம். நிச்சயம் செய்யிற தேதியில நிச்சயம் வேணாம். நிறுத்திடுங்கன்னு சொன்னாங்க. ..”
மோகனரங்கத்திற்கு அதிர்ச்சியாகத்தானிருந்தது. தாங்கிக் கொண்டார்.
” ஏன். …? ” ஏறிட்டார்.
” உண்மை தெரிஞ்சி போச்சி. சாதி, மதம் தெரியாத பொண்ணு வேணாமாம். உங்களுக்கும் சேதி சொல்லச் சொல்லி சம்பந்தி கண்டிச்சுட்டார். ”
மோகனரங்கத்திற்கும் கமலத்திற்கும் பத்து ஆண்டுகளாய் குழந்தை இல்லை. எல்லா முயற்சிகளும் எடுத்து இறுதியாய் முடியாது என்று தெரிந்த போது அனாதை ஆசிரமம் சென்று அப்போதுதான் பிறந்து புதிதாக வந்த பெண் குழந்தையைஒன்றை முறையாகத் தத்தெடுத்து வந்து வளர்த்தார்கள். இப்போது பிரச்சனை. !
சிறிது நேரம் யோசனையுடன் இருந்த மோகனரங்கம் சிறிது நேரத்தில் முகம் தெளிந்து ஒரு முடிவுடன் எழுந்தார்.
” வெளியில போயிட்டு வர்றேன். .” மனைவியின் பதிலை எதிர்பாராது கிளம்பினார்.
” எங்கேயும் தகராறு வேணாம். ..! ” கமலம் உரக்கச் சொல்லியும் அவர் காதில் வாங்கவில்லை.
இரு சக்கர வாகனத்தை எடுத்தார். நேரே சம்பந்தி வீட்டில்தான் இறங்கினார்.
நல்ல வேளையாக கணவன் மனைவி தணிகாசலமும் தாமரையும் இருந்தார்கள்.
ஆளை பார்த்து கொஞ்சம் திடுக்கிட்டாலும். ..
” வாங்க. ..வாங்க. .” வரவேற்றார்கள்.
” உட்காருங்க. .” தணிகாசலம் சொன்னதும். ….
” இதோ…. காபி எடுத்து வர்றேன். .” தாமரை உள்ளே சென்றாள்.
காபி வரும்வரை மெளனமாக இருந்த மோகனரங்கம் அது குடித்து முடித்ததும். …
”நிச்சயம் வேணாம்ன்னு சொன்னீங்களாம். ..” பேச்சை ஆரம்பித்தார்.
” ஆமாம். .”
தாமரை கணவன் அருகில் அமர்ந்தாள்.
” காரணம். .? ”
” அதான் தொலைபேசியில் சொன்னேனே. .”
” வீட்டுக்காரி சொன்னாள். பொண்ணோட வாழ்க்கை. பேசியது நின்னு போனா அவ மனசை வேறு பாதிக்கும். நாங்க உண்மையைச் சொல்லாமல் சொந்த பொண்ணா வளர்த்துட்டோம். உங்க முடிவை மறுபரிசீலனை செய்யுங்க. யோசனை பண்ணி சொல்லுங்க…”
” யோசனைக்கே வேலை இல்லே .எங்க முடிவுல மாத்தமில்லே. விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்துன்னா நாங்க பெண் பார்க்கவே வந்து இருக்க மாட்டோம். நீங்களும் மறைச்சுட்டீங்க. .” தணிகாசலம் திடமாக சொல்லி வந்தவர் மீதே குற்றம் சுமத்தினார்.
” அது அனாவசியமுன்னு நெனைச்சேன். …” இழுத்தார்.
” அனாவசியமில்லே. அவசியம். ! விடுங்க. பேச்சு முடிஞ்சு போச்சு. ” வெட்டினார்.
மோகனரங்கம் அசரவில்லை. எழவும் இல்லை.
” நீங்க என்ன சாதி. .? ” அமைதியாய்க் கேட்டார்.
‘ இது வம்பு ! ‘ – தணிகாசலத்திற்குப் புரிந்தது.
உள்ளுக்குள் துணுக்குற்றாலும் வெளிக் கட்டிக்க கொள்ளாமல், ‘வந்ததை சமாளித்துதானே ஆகவேண்டும் ! ‘ என்கிற முடிவில். .. தன் சாதியைச் சொன்னார்.
” தங்கச்சி. ..? ” மோகனரங்கம் தாமரைப் பார்த்தார்.
” என் சாதி தான். ! ” – தணிகாசலம் பதில் சொன்னார்.
” உங்க தோட்டத்து வேலையாள் என்ன சாதி. .? ”
‘ இது என்ன சம்பந்தா சம்பந்தமில்லாத கேள்வி ! ” என்று நினைத்து குழம்பி…..
” அவன் வேற சாதி. ..” சொன்னார்.
” அவனுக்கும் உங்களுக்கும் … ஏன் நம்ப எல்லோருக்குமே ஏதாவது சாதி அடையாளம் இருக்கா. .? ” மோகனரங்கம் கேட்டு அவர்களை உற்றுப் பார்த்தார்.
கணவன் மனைவி விழித்தார்கள்.
” சாதியாலோ மதத்தாலோ மனுசனுக்கு எந்த அடையாளமுமில்லே. கடவுள் வைக்கவே இல்லை. அப்புறம் ஏன்யா அதை பிடிச்சிக்கிட்டுத் தொங்குறீங்க. ..?! ” மோகனரங்கம் கொஞ்சம் காட்டமாக கேட்டார்.
தணிகாசலம் தாமரை பதில் சொல்லவில்லை.
‘ எப்படி சொல்ல முடியும். ..? ‘
” சரி விடுங்க. உங்க பையன். . அதாவது மாப்பிள்ளை எங்கே பிறந்தார். ..? ”
” இந்த ஊர் அரசு பொது மருத்துவமனையில். .” தணிகாசலம் எதற்காக இந்த கேள்வி என்று நிதானித்து பொறுமையாக பதில் சொன்னார்.
” தினம் அங்கே எத்தினி பிரசவம் நடக்கும். ..? ”
” கணக்கு வழக்குக் கிடையாது. நான் பிரசவிக்கும் போதே ரெண்டு பேர் பிரசிவிச்சாங்க. எல்லாம் ஆம்பளைப் புள்ளைங்க. ” தாமரை பெருமையாக சொன்னாள்.
” பையன் உங்க சொந்தக் குழந்தையாய் இல்லாம…மத்தவங்க பெத்த அந்தக் குழந்தைகள்ல ஒன்னா ஏன் இருக்கக் கூடாது. …? ”
” ஐயா. .” இருவரும் அலறினார்கள். திடுக்கிட்டாகள் .
” பிரசவம் பார்த்த நர்சுகள், குழந்தைகளைக் குளிப்பாட்டி சுத்தம் செய்யும் போது தெரிஞ்சி மாத்தி இருக்கலாம். தெரியாமலும் மாத்தி இருக்கலாம். இல்லியா ..?..”
இருவருக்கும் திக்கென்றது. ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தார்கள்.
” நடக்க வாய்ப்புண்டா இல்லியா. ..? ” மோகனரங்கம் விடாமல் கராறாகக் கேட்டார்.
” உ. ….உண்டு. ..” இழுத்த தணிகாசலம்…..
” என் குழந்தை மாறல. அவன் என் ஜாடையில் இருக்கான். ” சொன்னார்.
” உலகத்துல அச்சு அசலாய் ஒரே உருவத்துல ஏழு பேர் இருக்கிறது என்பது அறிவிக்கப்பட்ட உண்மை ! இது ரகசியம் இல்லே. எல்லோருக்கும் தெரிந்த சேதி. எல்லா தாய்மார்களும் உங்ககிட்ட வந்துதான் பெத்தாங்களா. ..? நீங்கதான் தந்தையா. .? இல்லே நீங்க ரெண்டு பேரும்தான் மத்தவங்களுக்கு வித்தீங்களா. ..? ”
‘ இவர் என்ன இப்படி ஏடாகூடமாய் பேசுகிறார் ! ? ‘தணிகாசலம், தாமரை நினைத்தார்கள்.
” அங்க அடையாளங்களை வச்சு இது என் குழந்தைன்னு சொல்றது தப்பு. குழந்தை மாறலைன்னு நினைக்கிறதும் தவறு, மடத்தனம். ! மரபணு சோதனை மூலம்தான் அவன் உங்க குழந்தைன்னு நிரூபிக்க முடியும். இல்லாத பட்சத்துல எப்படி நிருபிப்பீங்க. இன்னைய வரைக்கும் மாப்பிள்ளையை உங்க குழந்தையாய் வளர்த்துட்டீங்க. நாளை மரபணு சோதனையில் அவர் உங்க குழந்தை இல்லேன்னா என்ன பண்ணுவீங்க. …? ”
தணிகாசலமும் தாமரையும் திக்கு முக்காடி திணறினார்கள்.
” இதுல புருஷனுக்குப் பொறுக்காத குழந்தைங்க வேற இருக்கு. .! ” சொல்லி மோகனரங்கம் ஒரு அணுகுண்டையும் வெடித்தார்.
தம்பதிகள் ஆடிப் போய் சிதறினார்கள்.
” ஐயா. .! பெத்தத் தாய்க்கு மட்டும்தான் ‘ ‘கரு ‘ எவரால் உருவானதுன்னு தெரியும். அவ பெத்த குழந்தையும் தன் குழந்தைன்னு நிரூபிக்க வாய்ப்பில்லே. காரணம் மாற்றம் ! ”
” சம்பந்தி ! எந்த குழந்தையும் சாதி, மதம், குலம், கோத்திரம் பார்த்து பிறக்கிறதில்லே. அது இருக்கிற இடத்தைப் பொறுத்துதான் எல்லாம் அமையுது. அப்படித்தான் என் பொண்ணும் பிறந்தாள். என் வளர்ப்பில் நம் சாதி சனம் ஆனாள். இப்போ நாம பேசினபடி சம்பந்தி ஆகலாமா. … கூடாதா, முடியுமா முடியாதா !.? ” கேட்டு பார்த்தார்.
” சம்பந்தி ஆகலாம்ங்க. ..” கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சொன்னார்கள்.
மோகனரங்கம் முகத்தில் மலர்ச்சி !.
மௌனமாக இருந்துவிட்டால் மௌனித்தே போகிறது பல விடயங்கள். எதையும் பேசித்தீருங்கள் என்பதையும் சொல்லாமல் சொல்லிச் சென்றிருக்கிறார் எழுத்தாளன். நன்று