சர்க்கஸ் சபலம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 1, 2023
பார்வையிட்டோர்: 5,444 
 
 

கோவில்பட்டிக்கு சர்க்கஸ் வந்திருப்பதே எங்கும் பேச்சாக இருந்தது. திருநெல்வேலியில் வெற்றிகரமாக ஓடிவிட்டு இப்பொழுது இங்கு வந்திருந்தது. அதன் விளம்பரங்கள் ஊரை நிரப்பின. கூடாரத்திலிருந்து எழும்பிய இசைத்தட்டு சங்கீதமும் பாண்டு வாத்தியமும் எல்லா மூலை முடுக்குகளிலும் பரவின. அதன் ஊடே ஒரு சிங்கத்தின் உறுமலும் கேட்டுக்கொண்டே இருந்தது. எந்தக் குழந்தை வந்தாலும், எந்தப் பெரியவர் வந்தாலும், சர்க்கஸை பற்றியே பேசினார்கள்.

பழனியம்மா மாடிக்குச் சென்று ஜன்னல் வழியே எட்டி நோக்கினாள். கூடாரத்தின் மேல் தொங்கவிடப்பட்டிருந்த சரவிளக்குகளின் வண்ண ஒளி அவள் உள்ளத்தைக் கவர்ந்தது. அவள் கீழே இறங்கி வந்தாள்.

‘ஏட்டி! மச்சுக்குப்போக இதுதான் சமயமா? மாட்டுக்குத் தண்ணி வைக்கவில்லை. தோசைக்கு அரைச்சபாடில்லை’ என்று தாயார் ஏசுவது கேட்டுத்தான் அவள் கீழே வந்தாள்.

‘அம்மா, சர்க்கிஸ் விளக்கு என்னமா இருக்கு! இரவுவேளைதானே? அப்பாவும் நீயுமா என்னைக் கூட்டிட்டுபோறீகளா அம்மா?’ என்று கெஞ்சினாள் பெண்.

‘அம்மாடியோ! ஆத்தாடீ! பிறவு நான் என்ன செய்ய, எங்கே போக! கேட்டயா, இம்புட்டு ஆசையா உனக்கு!’ என்று முகவாயில் கை வைத்தாள் தாய்.

‘என்னம்மா? எத்தனை புள்ளைக போகலே? நீங்கதான் இப்படித் தடை உத்தரவு போடுறீக’ என்று பிணங்கினாள் பெண்.

‘சமைஞ்ச பெண்ணைக் கூத்தும் பார்க்கக் கூட்டிக்கிட்டுப் போனேன் என்றால் அது பெறவு நல்ல கூத்தாகத்தான் முடியும். எந்த முகத்தை வச்சிக்கிட்டு மனுசங்க எதிரே திரிவேன்? போடி வேலையற்ற களுதை’ என்று அன்னை அவளைத் திட்டி அனுப்பிவிட்டாள்.

பழனியம்மா ஏமாற்றத்துடன் தன் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினாள். தோசை மாவை அரைத்து வழித்துக்கொண்டிருக்கும்போது, அடுத்த வீட்டிலிருந்து அவள் வயதையொத்த பெண் சடையம்மா வந்தாள்.

‘என்ன பளனி, முகவாட்டமா இருக்கு?’ என்று வினவினாள் அவள்.
‘என்ன போ! எனக்கு ஒண்ணும் புடிக்கலை. பொழுதன்னிக்கும் வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடைக்கணும். சர்க்கஸ்லே கூட்டியாந்திருக்கிற மிருகத்துக்குக் கணக்கா! என்று அவள் அலுத்துக் கொண்டாள்.

சடையம்மா கலகலவென்று சிரித்தாளே தவிர வேறு ஒன்றும் பதில் சொல்லவில்லை.

‘ஏட்டி, உடன் ஒத்த பெண் பேசாமல் இல்லை? நீதான் கிடந்து துள்ளறே’ என்று தாயார் கண்டிக்கவும் பழனி மேலே பேசவில்லை.

‘பளனி தண்ணி எடுக்க வாரியா. வீட்டுல பொட்டுத் தண்ணி இல்லை. குழாயடிக்குப் போக துணை வேண்டும்’ என்று கேட்டாள் சடையம்மா.

‘ஆமாம் போ, நீயும் போய் நாலு பானை எடுத்துட்டு வா. பகலெல்லாம் எடுத்து எடுத்து இடுப்பே கழன்றுவிட்டது’ என்றாள் தாய்.

கையில் குடமும், வாளியும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தோழியர் இருவருமாக குழாயடிக்குச் சென்றபோது, அங்கு அதிகக் கூட்டமே இல்லை. இளம்பெண்கள் மூன்று பேர்கள்தான் தண்ணீர் பிடித்துக்கொண்டிருந்தனர்.

‘என்ன பளனி, என்ன சடையம்மா, ஏது இம்பிட்டு நேரமாயிச்சு? உங்க வீட்டுக்கு வேண்டிய தண்ணீரை உங்க அம்மாளே எடுத்துட்டுவிட்டாளோ? உங்களுக்கு என்னம்மா? எங்களைப்போலவா? பகலெல்லாம் மில்லிலே உழைத்துவிட்டு இரவெல்லாம் தண்ணீரை பிடித்தாலும் கொப்பரை நிரம்பமாட்டேங்குது.’

‘ஆமாம் மதனி, எங்க சுகத்தை நீங்கதான் மெச்சிக்கணும். கூண்டிலே அடைப்பட்ட கிளிங்கபோல விளுந்து கிடக்கோம்! காத்து வாட்டமா வெளியை தலையை நீட்டலாமா? அங்கிட்டுப் போகாதே தாயீ, இங்கிட்டு வராதே தாயீ! என்று நல்லதனமாகவே அடைச்சிப்போடறாக’ என்றாள் சடையம்மா.

‘இப்பத்தான் காத்து வாங்க வர்றீகளோ’ என்று கூறி ஒருவள் சிரித்தாள்.
‘ஆமாம் வீட்டுக்குத் தண்ணீர் வேண்டுமில்லே.’

பழனியம்மாவும் சடையம்மாவும் ஒரு நடை கொண்டு கொட்டிவிட்டு மீண்டார்கள். அதற்குள் அங்கு கூடி இருந்தவர்கள் பேச்சு சர்க்கஸை குறித்து திரும்பிற்று.

‘என்ன மதனீ. நீங்க சர்க்கஸ் போய் பார்த்துவிட்டீர்களோ?’

‘ஆமாம்’

‘எப்படி இருக்கு?’

முளு மீனை முளுங்கிட்டு அப்படியே துப்பிவிடறான். பார்க்கத்தான் என்ன அதிசயமாயிருக்கு என்றாள் ஒருத்தி.

மோட்டார் சைக்கிள் தலைகீளாப் போகும்போதுதான் என் குடல் நடுங்கிச்சு என்றாள் மற்றொருத்தி.

பழனியம்மாவும், சடையம்மாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அவர்கள் பேச்சுக்கு அங்கே இடமேது?

இரண்டாவது நடையும் தண்ணீர் கொட்டிவிட்டு வந்தனர். அதன்பிறகு நான்கு ஐந்து தடவை வரை அவர்கள் இருவரும் வாய் திறவாமல் வேலையைப் பார்த்தனர்.

‘என்ன பளனி, என்ன சடையம்மா? மூச்சுக் காட்டமாட்டேன் என்கிறீங்களே?’ என்றார்கள் மற்றவர்கள் அவ்வளவு நிசப்தமாக இருவரும் தண்ணீரை எடுப்பதில் முனைந்தனர்.

‘நாங்க என்ன மூச்சுக் காட்ட, அக்கா? நீங்க பேசிக்கிற விஷயத்தை நாங்கள் கண்டதும் இல்லை, காணப்போறதும் இல்லை. இரவு உறக்கம் வரவிடாம சிங்கம் உறுமுதே, அதுதவிர சர்க்கஸைப் பத்தி நாங்க என்ன கண்டோம்?’ என்று அடக்கமாட்டாத துக்கத்துடன் கூறினாள் பழனி.

‘நல்ல ஆம்புளையா பார்த்துக் கல்யாணம் கட்டிக்கிட்டீக என்றால் யார் என்ன சொல்லப்போறாக? அப்ப, புருசனும் பெண்சாதியும் கைகோத்துகிட்டுப் போகலாமில்ல?’ என்று ஒருவள் கேலி செய்தாள்.

பழனியம்மா பதில் சொல்லவில்லை. சிரித்துவிட்டாள். ‘போங்க அக்கா, உங்களுக்கு நிதம் நிதம் இதுதான் பேச்சு! விருந்து சாப்பிடணும்னு ஆசையாக இருந்தால் வாங்க என் கையாலே சமைச்சுப்போடறேன்’ என்று மெதுவாகப் பதில் சொன்னாள்.

சடையம்மா துடுக்கானவள். ‘ஒரு மகாராஜனும் வந்தபாடில்லை. அதுக்காக அதுவரை நாங்க அடைஞ்சு கிடைக்க வேண்டியதுதானா? என்றாள்.

எல்லோரும் அதை ஒரு வேடிக்கையெனக் கருதிச் சிரித்தனர்.

‘அடைஞ்சு கிடப்பானேன்? என்னோடு வாங்க. கூடாரத்தைப் பார்த்துவிட்டு வருவோம்’ என்று ஒருத்தி சொல்லவும், பழனியம்மாளும் சடையம்மாளும் மிக்க ஆதுரத்துடன் அவளை நோக்கினர்.

‘நெசமாவேயா அக்கா’ என்று அவர்கள் கேட்டது மற்றவர்களுக்குத் தொட்டுவிட்டது.

‘வாங்களேன், இதில் என்ன வந்துவிட்டது!’ என்று அவள் சொல்லிவிட்டாள்.

‘இரு அக்கா, இதோ நொடியிலே வாரோம்’ என்று கூறிக்கொண்டே, இருவரும் வீட்டுக்கு விரைந்தனர். வழியெல்லாம் குசுகுசுவென்று பேசிச் சிரித்துக்கொண்டே சென்றனர்.

பழனியம்மாவும், சடையம்மாவும் புடைவையை மாற்றுவதைக் கண்ட பழனியின் தாயார், அதைக் குறித்துக் கேட்டாள்.

‘எதுக்கு இப்ப உடை மாற்ற வேண்டும்?’ என்று கேட்டாள் அவள், எங்கோ வேலையைக் கவனித்தபடியே.

‘புடவையெல்லாம் நடைஞ்சிட்டுது’ என்று பதிலளித்தாள் சடையம்மா.

‘தண்ணியெல்லாம் எடுத்தாச்சா?’

‘இன்னும் குடி தண்ணீர் எடுக்கல்லை. ஆனைக் கிணற்றுக்குப் போகப்போறோம்’ என்று பழனி பதிலளித்துவிட்டு நிற்காமல், குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டு தன் தோழியையும் அழைத்துக்கொண்டு தெருவில் வேகமாக விரைந்தோடினாள்.

பழனியம்மாவின் தாயார் வாயிற்புறம் வந்தாள்.

கூடத்தில் பழனியம்மாளின் பெட்டி திறந்திருந்தது. அதிலிருந்து ஒரு பட்டுச் சட்டை கீழே விழுந்து அலங்கோலமாக இருந்தது.

‘இது என்ன? புதுப் புடவையா உடுத்திக்கிட்டாளுக! நல்லா இருக்கு!’ என்று வியந்தபடியே தாய் அதை ஒழுங்காக எடுத்து வைத்துவிட்டு, பெண்ணின் வருகைக்காக வாயிற்புறம் காத்துக்கொண்டிருந்தாள்.
ஒரு மணி நேரமாகியும் காணவில்லை. அவளோடு கூடச்சென்ற தோழியையும் காணவில்லை. பிறகு மிகவும் கவலைப்பட்டுக்கொண்டு அவள் தன் கணவனிடம் இதைச் சொன்னாள்.

‘உங்க அருமை மகளைப் பாத்தீகளா? தண்ணீர் கொண்டுவரப்போன புள்ளையை இதுவரைக்கும் காணவில்லை. ஊரோ கெட்டுக்கிடக்கு. அந்த சடையம்மா பேச்சைக் கேட்டுக்கிட்டு, இதுவுமில்ல களுதையாப் போச்சு’ என்று அவள் கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார் செந்திலாண்டவன் பிள்ளை.

‘சும்மா இரைச்சல் போடாதே. உன் பெண் இருக்கற கேட்டுக்கு ஊரார் பிள்ளையைப் பளிப்பானேன்? வா. குழாயடிக்குப் போய்ப் பார்ப்போம் என்று கூறி, மேல்துண்டைத் தட்டிப் போட்டுக்கொண்டு அவர் கிளம்பினார்.

பெற்றோர் இருவரும் குழாயடிக்கு வரும்போது அனேகம் பெணிகள் நீர் நிரப்புவதில் முனைந்திருந்தனர். வாய் பேசாது அவர்கள் மத்தியில் இரு பெண்களும் பேசிக்கொண்டு நிற்கிறார்களோ என்று கவனித்தார்கள்.
‘என்ன ஆச்சியம்மா… ஏது இம்பிட்டுத் தூரம் இருட்டிலே வந்து நிற்கிறது?’ என்று அக்கூட்டத்தில் ஒருவள் கேட்கவும், வேறு வழியின்றி அவர்கள் வந்த விஷயத்தை சொன்னாள் தாய்.

‘இந்தக் குட்டி பளனியும் சடையம்மாவும் காணோம். எங்கே யார் வீட்டுக்குப் போய்ப் பேசிக்கிட்டு நிற்கிறார்களோ தெரியலை.’

‘அவுங்க நல்ல சீலை உடுத்தி சர்க்கஸ் பார்க்கத்தானே போயிருக்காக’ என்றாள் ஒருவள்.

‘இல்லை, பழனியம்மா போவாளா? வீட்டைவிட்டு வெளியே வந்ததில்லையே? ஆளைக் கிணத்துலே குடி தண்ணி எடுக்கப்போயிருக்கும்’ என்று மற்றொருவள் கூறினாள்.

‘சர்க்கீஸ் கொட்டகையைப் பார்க்கப் போயிருப்பாக’ என்று ஒருவள் கூறினாள்.

‘சமைஞ்ச பொண்ணுங்க ரெண்டும்! பெரியவங்க துணை இல்லாம ஆளைக் கிணத்துக்கு மட்டும் போகலாமா? ஆத்தாடீ, உலகம் கெட்டுப்போச்சு’ என்று மற்றொருவள் வம்புக்கு ஆரம்பிக்கவும், சற்று விலகியிருந்த செந்திலாண்டவன் பிள்ளை, தன் மனைவியை அழைத்தார்.

‘அதுதானே பார்த்தேன். நாளை புதனுக்கு பரிசம் போட வருகிறார்களாம். பளனியம்மா வாசல் வழிவந்து பார்த்தவங்க கிடையாது. தண்ணி எடுக்கப்போகும்போதுகூட, இருட்டின பிறவு, ரெண்டு பேரைத் துணை கூட்டிக்கிட்டு குனிந்த தலை நிமிராமப் போகுமே!’ என்று பேச்சு திரும்பியது குழாயடியில்.

‘உனக்கு புத்திகித்தி இருக்கா? பத்துப் பொம்பளைங்க, வம்பளக்கிற இடத்தில போய், பெரியவளான என் பெண் சொல்லாம எங்கேயோ போயிருக்கான்னு சொல்லிவிட்டு வர்றியே? நாளைக்கு ஊரெல்லாம் இது பரவிவிடாதோ?’ என்று மனைவியை பிள்ளை கண்டித்தார்.

பிறகு அவர்கள் இருவரும் தம் வீட்டிற்கே போய் பெண்ணுக்காகக் காத்துக்கொண்டிருந்தனர். சடையம்மாவின் தாயும் தந்தையும் வந்தனர்.

‘இந்தக் குட்டி இங்கே வந்தாளா? தண்ணி கொண்டு வாரேன்னு சொன்னா, பிறவு காணோம்’ என்றார்கள்.

‘வந்தாள், அவளும் பளனியுமா நாலுநடை ஒளுங்காத் தண்ணி எடுத்தாக. பிறகு இங்கு வந்து புடவை நனைச்சிட்டுது, மாத்தணும்னு சொல்லி மாத்திக்கிட்டாக. இதுவரைக்கும் காணோம். பைப்புகிட்டேயும் இல்லை. கேட்டா ஆனைக் கிணத்துக்கு நல்ல தண்ணி எடுக்கப்போய்ட்டாங்களாம்.’

இவர்கள் இங்கு இப்படிக் காத்திருக்க, பழனியும் சடையம்மாவும் சர்க்கஸ் கொட்டகையின் பக்கத்தில் சுற்றிக்கொண்டிருந்தனர். கொட்டகையின் ஒரு பக்கத்தில் நடக்கும் வேடிக்கைகள் தெரிந்தன. அப்போதுதான் ஒரு பெண்மணி ஒரு கயிற்றின் மேல் ஒய்யாரமாக நடந்துகொண்டிருந்தாள்.

பழனியம்மா தன் மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டாள்.

‘ஆத்தா எப்படித்தான் துணிச்சலோடு நடை பழகுறாளோ?’ என்று மெதுவாகக் கூறினாள் அவள்.

அதற்குள் யாரோ வந்து அவர்களை அதட்டினார்கள்.

‘யார் அங்கே?’ என்று ஒரு ஆண் மகன் குரல். கேட்டதும் இருவரும் நடுநடுங்கிவிட்டனர்.

ஆனால் அவர்களை அழைத்து வந்திருந்தவள் முன் வந்து பதிலளித்தாள்.

‘என்ன அண்ணாச்சி நான்தான். இந்தக் குட்டிக குடி தண்ணீர் எடுக்க வந்திச்சிங்க. வேடிக்கை பாக்கணும்னு கொள்ளை ஆசைப்பட்டது. ஆனா அவுக வீட்டிலே விடமாட்டாக. இதோ பாத்தாச்சு. நான் கூட்டிகிட்டுப்போறேன்’ என்றதும், அந்த ஆடவன் சம்மதித்துவிட்டான்.

‘யாரு, கோடி வீட்டு பொன்னம்மாளா? யாரோன்னு நினைச்சுக்கிட்டேன். பார்க்கட்டும். யார் அந்தப் பிள்ளைங்க?’

‘நம்ம செந்திலாண்டவன் பிள்ளை மகளும், எசக்கியா பிள்ளை மகளும்’ என்று பழனியம்மாவும் சடையம்மாவும் பதறிவிட்டனர்.

‘என்னங்க அக்கா, பேரைச் சொல்லிட்டீக?’

‘யார்? செந்திலாண்டவன் பிள்ளை மகளா? பளனியம்மாவா’ என்று வேறு ஒரு வாலிபனின் குரல் கேட்கவும், பழனியும் சடையம்மாவும் தலை குனிந்தனர்.

‘ஏட்டி, சடையம்மா, நாமெ வீட்டுக்கு எப்படி போக? யார் தெரியுமா அது? கோமதிநாயகம் பிள்ளை மகன்போல இருக்கு!’ என்று நெஞ்சம் படபடக்கக் கூறினாள் பழனியம்மாள்.

பிறகு இருவரும் வேகமாக வீட்டுப்பக்கம் நடையைக் கட்டினர். பொன்னம்மாவும் அவர்களுடன் ஓடி வந்தாள்.

‘அக்கா, எங்க வீட்டு வரையிலும் வறீகளா? என்று இரு பெண்களும் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பிறகு, பொன்னம்மாள் அவர்கள் வீடு வரையும் செல்ல இசைந்தாள்.

அவர்கள் வீட்டின் முன் முற்றத்தில் கால் வைக்கும்போதே மனம் திக்கென்றது. பழனியைப் பெண் கேட்க வந்திருந்தனர்.

‘பெண் கொல்லைப்புறத்திலே மாட்டைக் கட்டுகிறாள் என்று சொன்னீயளே. வெளியே போய்விட்டு வருகிறாப்போல இருக்குது என்று ஒரு பெரியவர் கேட்டார். பிறகு எல்லோரும் பேச வந்ததைச் சொல்லாமல், திடீரென்று எழுந்து போய்விட்டனர்.

‘மதனி, இனிமேல் சர்க்கஸுக்குப் பெண்ணை அனுப்புவதானால், தகுந்த துணையோடு அனுப்புங்க’ என்று வந்த பெண் பொடி வைத்துப் பேசிவிட்டு ஆடவர்களுடன் நடந்து கட்டினாள்.

அவர்கள் சென்ற பிறகு வீடு திமிலோகப்பட்டது. சடையம்மாவின் தாய் மகளை இரண்டு அடி வைத்து இழுத்துச் சென்றாள்.

பழனியின் பெற்றோர்கள் தங்கள் தலையில் இரண்டடி அடித்துக்கொண்டு, அவளையும் நையப் புடைத்தனர்.
‘போ உள்ளே, களுதை. இத்தனை வருசமா மானமாப் பிளைச்சவங்க முகத்துல கரியைப் பூசினாயா? பீடை, தொலை’ என்று அவளை நெட்டித் தள்ளிக்கொண்டு சமையலறையில் தள்ளினார்கள்.

அன்று முதல் பழனியம்மாள் அங்கேயே கிடந்தாள். கன்றுகுட்டி அறுத்துக்கொண்டுபோய் பாலை ஊட்டிவிட்டால்கூட அவள் அந்தப் படியைத் தாண்டக்கூடாது என்று கட்டளை பிறந்தது. அவள் அங்கேயே குளித்தாள், அங்கேயே உண்டாள், உறங்கினாள்.

அங்கணத்திலிருந்த மற்றப் பெண்கள், அவளுடைய தோழிகள் ஒவ்வொருவரின் மணமானபோது, பழனிக்கு இடியும், சொல்லும் கிடைத்தன. அவள் விடியாத கண்ணீர் வடித்துக்கொண்டு சிறை வாசம் செய்தாள். மாதங்கள் ஏழு, எட்டு என்று மறைந்தன.

அவளுடைய தமக்கைமார் வந்தார்கள். கணவன்மார்களுடன். சினிமாவுக்குப் போனார்கள். கோவிலுக்குக் கிளம்பினார்கள். பிறகு அதைப்பற்றி எல்லாம் அளவளாவினர். ஒருநாள் சபலத்தில் இடம் கொடுத்ததற்காக, பழனியம்மா நிந்தைக்கும் ஏளனத்திற்கும் ஆளாகிக் கிடந்தாள்.

‘எட்டி பளனி, மச்சுக்குப் போய் ரெண்டு கட்டு துவரை மிலார் கொண்டு வா’ என்று ஒரு தமக்கை ஒருநாள் ஆக்ஞாபித்தாள்.

‘நான் போகக்கூடாது, ஐயா திட்டுவாரு’ என்று துக்கமடைக்கும் குரலில் கூறிவிட்டு திரும்பினாள் பழனியம்மா.

‘அம்மாவும் அப்பாவும் வெளியே போயிருக்காக. நல்ல பிள்ளையில்ல… போய் எடுத்துக்கிட்டு வா’ என்று கெஞ்சினாள் தமக்கை.

பழனியம்மா வேறு வழியின்றி மிக்க அச்சத்துடன் வெளியே வந்து, முற்றத்தின் வழியாக ஏணி ஏறி மச்சுக்குச் சென்றாள். இரண்டு கட்டுத் துவரை மிலாரை எடுத்துக்கொண்டு இப்படி அப்படிப் பாராமல் இறங்கும்போது, சீலை தடுக்கிக் குனியவும், ஒரு கட்டு கை தவறி சுவற்றுக்கு அப்பால் விழுந்துவிட்டது. பழனியம்மா பீதியுடன் நோக்கினாள். தான் ஏணி மேல் இருப்பதை யாரேனும் பார்த்துவிட்டார்களோ என்று அச்சுறும்போது, அவள் குழப்பத்தை அதிகரிக்கும்படி ஒன்று நேர்ந்தது.

விழுந்த கட்டை வெளிப்புறம் அலாக்காகப் பிடித்துக்கொண்டு, கோமதிநாயகம் பிள்ளையின் மகன் சுப்பையா பல்லை இளித்துக்கொண்டு நின்றான்.

‘இந்தா’ என்று கூறிக்கொண்டே, அவன் தூக்கிக் கொடுக்கவும், பதறும் கைகளுடன் அதைப் பெற்றுக்கொண்டு அவள் ஓடி மறைந்தாள். தனது வழக்கமான மூலைக்குப் போய்ப்படுத்து, விம்மி விம்மி அழுதாள்.

‘ஏட்டி, என்ன, என்ன’ என்று தமக்கையர் கேட்டும், பதில் பழனியம்மா சொல்லவில்லை.

அதற்குள் வாசற்புறத்தில் யாரோ அழைப்புக் கேட்டு மூத்தவள் அங்கு சென்றாள்.

ஏதோ பிடிபடாத பேச்சும், அக்காளின் ‘ஆ’ என்ற ஆச்சரியக் குரலும் கேட்டன. ஆனால் அதிலெல்லாம் பழனியின் மனம் செல்லவில்லை. அன்று நடந்த அவமானத்தையே நினைத்து நினைத்து உருகினாள்.
‘அன்றைக்கு ஏனோ சர்க்கஸுக்குப் போனேன்? அதனால்தானே இன்றைக்கு அந்த ஆளு என் முகத்தைப் பார்த்து தைரியமா சிரிச்சிட்டாரு’ என்று வெதும்பினாள் அவள். பெண்களுக்குரிய நாணமற்றவள் என்று அவருக்குள் கருத்துப்பட்டுவிட்டதாக எண்ணி மனம் புழுங்கினாள் பழனியம்மா.

‘ஏ பளனி, எந்திரி, அவுக வராங்களாம். அதுதான் கோமதிநாயகம் பிள்ளை ஆச்சி வீட்டுவங்க. பரிசம் கொண்டுவரப் போறாங்களாம். நீ கிடந்து அளுறியே? என்று அவளை எழுப்பினாள் தமக்கை.

‘ஆமாம் என்னைப் பிடிச்சுக் கேலி செய்யாமல் போனா உனக்குத் தூக்கம் வருமா? வெந்த புண்ணைக் குத்திப் பாத்தாத்தானே காக்கைக்கு மனம் குளிருமாம்’ என்று குரோதமாகப் பதிலளித்தாள் பழனியம்மா.

‘அப்படிச் செய்ய நான் யார்? அசல் வீட்டுக்காரியா? அண்டை வீட்டுக்காரியா? பைத்தியம்! எளுந்திரு. முகம் களுவிப் பொட்டு வை, தலையைக் கட்டிவிடுறேன்’.

பழனியம்மா கேட்காமல் திரும்பிப் படுத்தாள். அதற்குள் அவள் பெற்றோர் வந்துவிட்டனர். வேறு வேற்றுக் குரலும் கேட்டது. வீட்டில்  உள்ள மின்சார விளக்கெல்லாம் எரியத் தொடங்கின. பழமும் வெற்றிலையும் பாக்கும் வாங்க ஆட்கள் பறந்தனர். கோவில் பட்டர் வந்தார். அப்பொழுது பழனியம்மா அலங்கோலமாகப் படுத்துக் கிடந்தாள்.

வந்தவர்கள் போய், அடுத்த நாள் பரிசத்துடன் வந்தனர். நல்ல காஞ்சீபுரம் ஜரிகைச் சேலையும், கழுத்துக்கு புதுவிதமான தங்க நெக்லஸும் அணிந்துகொண்டாள் பழனியம்மா. பிள்ளை வீட்டினர் விருந்து உண்டு, வீடு திரும்ப ஆயத்தமாக இருந்தனர். அடுத்த அறையில், பெண்கள் வெற்றிலை போட்டுக்கொண்டு உரையாடிக்கொண்டே இருந்தனர்.

‘இப்பக் கேட்டால் என்ன? இது எப்படி நேர்ந்தது? என்று மெல்ல விசாரித்தாள் பழனியின் தாயார். கலகலவென்று சிரிப்பொலி கேட்டது. அதைத் தொடர்ந்து சுப்பையாவின் தாயாரின் குரல் கேட்டது.
‘அதுவா? அப்ப எங்க அக்காளை அனுப்பி இருந்தேனில்ல? அவுக திரும்பி வந்துவிட்டாக. அந்தப் பிள்ளை நமக்கு வேண்டாம்’ என்று மட்டும் சொன்னாக. நாங்களும் என்னமோ ஏதோ என்றிருந்துட்டோம். இப்பத்தான், போன வாரம் சுப்பையா வேலை பார்க்கிற இடத்திலிருந்து ஓய்வு எடுத்துக்கிட்டு வந்தான். பிறகு விசாரித்துப் பார்த்தோம். குழந்தை சர்க்கீஸ் பாக்க ஆசைப்பட்டு அந்தப் பக்கம் போன குற்றத்துக்காக அவுக வந்துவிட்டதாகத் தெரிந்தது. பிறகு உடனே வந்திட்டோம்…’

‘பெரிய குற்றம்தானே அது. பெரிய வீட்டுப் பெண், சடங்கு கழித்து வீட்டில் இருக்கறவ போகலாமா? நீங்க பெரிய மனசுக்காரரு’ என்று செந்திலாண்டவன் பிள்ளை குறுக்கிட்டார்.

‘அதெல்லாம் ஒன்றுமில்லை மாமா. உங்களுக்கு நினைப்பு இல்லையா. நான் ஒரு சமயம் தேர்த் திருவிழா பார்க்கறதுக்கு மாமரம் ஏறி, கிளை ஒடிஞ்சு விழுந்துடலை? ஆத்தாடீ… என்ன திட்டிட்டாங்க அப்போ?’ என்று கூறிச் சிரித்தாள் அந்த அம்மா.

பழனியம்மாவுக்கு தன் மாமியைப் பிடித்துவிட்டது. ஆயினும் ஒரு விஷயம் மட்டும் அவளை உறுத்திக்கொண்டே இருந்தது. அதையும் சீக்கிரமே தெளிவுபடுத்திக்கொள்ள முயன்றாள்.

கல்யாணமெல்லாம் முடிந்து, அவள் புக்ககத்தில் இருந்தாள். மல்லிகைப் பூவை சரமாகக் கட்டிக்கொண்டு அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் கணவன் அங்கு வந்தான்.

‘பளனீ, இன்னிக்கு சர்க்கஸ் வேடிக்கைப் பார்க்க வரயா?’ என்று அழைத்தான். பழனியம்மாள் கண்களில் நீர்த்துளிகள் வந்துவிட்டது.

‘அப்படிக் குத்திக் காண்பிக்கணுமா? ஒருநாள் ஆசைப்பட்டதுக்காகத் துணிச்சல்காரின்னு நினைச்சுப்புட்டீங்க இல்லையா? இல்லாட்டிப் போனா, அன்னிக்கு என் முகத்தைப் பார்த்து நேரே சிரிச்சிட்டீகளே… வேற எந்தப் பொண்ணாவது இருந்தா அப்படிச்  செய்திருப்பீயளா’ என்று அவள் கேட்டாள்.

‘வேறு எந்தப் பெண்ணைப் பார்த்து நான் ஏன் சிரிக்கறேன்? நான் கட்டிக்கப்போற பெண்ணாச்சே என்று உரிமையோடு இளிச்சேன். குற்றம் என் மேல் இருக்க, உன்னைச் சொல்லி என்ன பயன்? வேலை பார்க்கறேன் என்று திருவனந்தபுரம் போய் உட்காராமல் இருந்தால், முன்னமேயே நம்ம கல்யாணம் நடந்திருக்கும். நீ இந்தக் கஷ்டமே பட நேந்திருக்காதே பளனி. எங்க அம்மாளும் உன்னைப்போல ஒரு பெண் பிள்ளைதானே? சிறு பெண்ணு. நீ சகஜமா ஆசைப்பட்டதை நாங்க தப்பாக நினைப்போமா? அதுக்காகக் கொடுத்த வாக்கை திருப்பிவிடுவோமா?’ என்றான்.

‘என்னை மன்னிச்சிடுங்க’ என்றாள் பழனி. அவள் குரலில் அன்பும் விநயமும் பொங்கியது.

– 24.08.1952, தினமணி கதிர்

அநுத்தமா 16.4.1922 -ல் ஆந்திராவிலுள்ள நெல்லூரில் பிறந்தார் என்றாலும், பூர்வீகம் வட ஆற்காடு மாவட்டம்தான். இவரது இயற்பெயர் ராஜேஸ்வரி பத்மனாபன். படிப்பில் மிக ஆர்வமாக இருந்த ராஜேஸ்வரிக்கு எழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே அதாவது 14 வயதிலேயே திடீரென்று திருமணம் செய்து வைத்து விட்டார்கள். அதனால் படிப்பு தடைப்பட்டது. திருமணமாகி ஒன்பது வருடங்கள் கழித்து, சென்னையில் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி, மாகாணத்திலேயே முதல் மாணவியாக வந்தார். அந்தக் காலத்திலேயே கதை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *