தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 8,336 
 

“”பானு… அந்த குழந்தையை ஊருக்கு அனுப்பிடலாமா?”
மனசாட்சியின் வேர் ஆழமாய் ஓடி, இதயத்தின் அணுவை அறுக்கத் தொடங்கிய நொடி, இவ்வாறு கேட்டான் சிவா. ரிமோட்டை அமுக்கி, “டிவி’யை ஊமையாக்கி, இவன் புறமாய் திரும்பினாள் பானு…
“”அனுப்பிடுங்க… ஆனா, இன்னொரு ஆள் கிடைக்கற வரை, நிச்சயமா என்னால லீவு போட முடியாது; நீங்கதான் லீவு போட்டாகணும். இதை காரணமா காட்டி என்னை வேலையை விட வைக்கணும்ன்னோ, உங்கம்மாவை இங்க அழைச்சுட்டு வந்துடலாம்ன்னோ மனசுல கூட நினைக்காதீங்க…” பானுவிற்கு தெரியும், எப்போதும் பொங்குவதை அடக்க, நீர் தெளித்தால் போதும் என்று.
சரியான பாதை!எதுவும் பேசவில்லை சிவா. ஹாலுக்கு வந்து, டீபாயில் கால் நீட்டி அமர்ந்து கொண்டான். அனிச்சையாய் மூடிய கண்களில் நீர் கோர்த்தது…
“பாவம் அம்மா… போன வாரம் போன் செய்த போது கூட, மிச்சம் இருக்கற என்னுடைய வாழ்க்கைக்கு ஆதாரமில்லையேடா…’ என்று கண்ணீர் விட்டு பேசியது, மனசுக்குள் பாசி படர்ந்து கிடக்கிறது. கடந்த முறை வந்த போது, நிகழ்ந்த ரசாபாசத்தால், அம்மா இங்கு வருவதே இல்லை. அன்பில்லா பெண்டிர் கையில் உண்பது இவனுக்கு பழகியிருக்கலாம்… அம்மாவிற்கு என்ன தலையெழுத்து?
அந்த நாட்கள் நினைவில் இருக்கின்றன…
அம்மாவைப் பார்ப்பதற்காக மதுரைக்கு வந்து, சோழவந்தான் பஸ் பிடிக்க காத்திருந்த இடைவெளியில், சண்முகானந்த பவனில் அம்மாவிற்கு சாப்பாடு வாங்கி, மர நிழல் ஓரமாய் நடந்து வந்த போது, முதுகில் பெயர் வந்து மோத, திரும்பி பார்த்தான் சிவா.
ராதா வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்த போது, மளுக்கென்று உணர்வுகள் உடைந்தது.
“ராதாவா… என்னாச்சு உனக்கு… ஏம்புள்ளை இப்படி இருக்க… இளைச்சு துரும்பாகி…’ சிவா ஆச்சரியமும், பரிதாபமும் கலந்து ஆற்றி, கேள்விகளை தருவதற்குள், கை உயர்த்தி தடுத்தாள் ராதா.
“எதுவும் கேட்காதே சிவா… சொல்ற நெலையில நானும் இல்லை; கேட்டு தாங்கக் கூடிய நிலையில் நீயும் இல்லை. என்னோட கடைசி கடமையை முடிக்கறதுக்குள்ள உன்னை ஒரு தடவை பார்த்துடணும்ன்னு மீனாட்சி அம்மனை வேண்டிக்கிட்டு இருந்தேன்… இன்னைக்கு பாத்துட்டேன்… நான் சாயங்காலம் உன் வீட்டுக்கு வரட்டுமா?’
ராதா, சிவாவின் அம்மாவிற்கு தூரத்து உறவுமுறை.
மாலை வீட்டிற்கு வரும் போது, ராதா தன்னுடைய மகள் வித்யாவை உடன் அழைத்து வந்திருந்தாள். எட்டு வயதிற்கான எந்த சுறுசுறுப்பும் இல்லாமல், அம்மாவையே ஒட்டிக் கொண்டு நின்றது.
தன்னுடைய கதையை கண்ணீரோடு சொன்னாள் ராதா…
பாதியில் நின்ற படிப்பு, லாரி டிரைவருடன் நடந்த அவசரத் திருமணம், எய்ட்சால் திடீரென்று அவனுக்கு நிகழ்ந்த அகால மரணம், தன்னுடைய காதல் பரிசாய் அவன் விட்டுப் போன நோயால், தனக்கு நிகழக் காத்திருக்கும் மரணம் என்று அவள் கூறி முடித்த போது, நிஜமாகவே இதயம் கனத்தது.
“எனக்கு யாருமில்லை சிவா… எனக்கு கஷ்டம்ன்னு வந்ததும் உன்னோட ஞாபகம் தான் வந்தது… ஏன்னா நீ நேர்மையானவன், மனசாட்சிக்கு மதிப்பு தர்ற அசலான மனுஷன். என்னையும், என் மகளையும் உலகம் வெறுத்து ஒதுக்கிடுச்சு. நீதான் என்னோட மகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைச்சு தரணும். அவளுக்கு இந்த உலகம் புரியும். தனக்கு கிடைச்ச சிறு உளியை வைச்சு, மலையை செதுக்குற பக்குவத்தை ஆண்டவன் அவளுக்கு தந்திடுவான். அவளை ஏதாவது ஹாஸ்டல்ல சேர்த்துடு… என்னுடைய வாழ்க்கை முடியறப்போ அவ இங்க இருக்க வேணாம்…’
அவளுடைய வார்த்தைகளை நம்ப இயலாமல், தன்னைத் தானே கிள்ளிக் கொண்டான் சிவா. உண்மையில் மனைவி பானு அவனை இங்கு அனுப்பியதே, இதுபோன்ற சின்னப் பெண்ணை வேலைக்கு அழைத்து வருவதற்காகத்தான்.
“என்னம்மா செய்யட்டும்?’ அம்மாவிடம் கேட்டான்.
“தெரியலடா… ஆனா, ராதாவுக்கு ஏதாவது செய்யணும். யாருமே இல்லாத அனாதைடா அவ. ஆனா, பொறுப்பு ரொம்பப் பெரிசு. உன்னால சரியா நிறைவேத்த முடியுமான்னு யோசிச்சுக்க…’
வித்யாவை அழைத்து வந்த நாள் இன்னும் நினைவில் இருக்கிறது.
“பானு… இது ரொம்ப ஏழ்மைப் பட்ட குழந்தை. அதுக்கு நல்ல எதிர் காலத்தை அமைச்சு தர்றதா சொல் லிட்டு அழைச் சுட்டு வந்திருக் கேன். அவளை ஸ்கூலுக்கு அனுப் பணும். ஸ்கூல் போயிட்டு வந்த நேரம் போக, மீதி நேரத்துல அவ நமக்கு உதவியா இருக் கட்டும்…’
ஏற இறங்க பார்த் தாள் பானு. அதில் மிகுந்து கிடந்த அவமானம், வார்த்தையில் வடிக்க இயலாதது.
“நான்… பொழுது போகல, எனக்கு வளர்க்க ரெண்டு புள்ளைங்களை கூட்டிட்டு வாங்கன்னு உங்ககிட்ட சொல்லல. எம் புள்ளைங்க எதிர்காலத்துக்கு, நான் வேலைக்கு போகணும். அந்த நேரத்துல என் குழந்தைகளை பார்த்துக்க ஒரு சின்னப் பொண்ணா கேட்டேன்…’ என்றாள் அலட்சியமாய்.
“அதுக்கு சின்னப் பொண்ணாத் தான் வேணுமா?’
“கண்டிப்பா… பெரிய ஆளுங்க நிரந்தரமா இங்க தங்க மாட்டாங்க. அப்படியே தங்கினாலும், அவங்களுக்கு அதிக சம்பளம் தரணும். தினமும் காலைல எழுந்திருக்கும் போதே, அவங்க வருவாங்களான்னு என்னால கவலைப்பட முடியாது. இது எல்லாத்துக்கும் மேலாக, பூனைக்கு புலிவேஷம் போட்டுட்டு அது, எந்தப்பக்கம் போகும்ன்னு யார் வேவு பாக்குறது?’
கூர்மையாய் பார்த்தபடி அவள் சொன்ன போது, ஓங்கி அடித்து கொன்று விடலாம் போலிருந்தது.
இந்த ஆறு மாதத்தில் பானு நிச்சயமாய், வித்யாவிடம் எந்த வில்லித்தனமும் காட்டவில்லை. காலையில் ஒண்ணரை வயது குழந்தை சுகாந்தை, வித்யாவின் பொறுப்பில் விட்டு, விட்டுப் போய் விடுவர். மாலையில் இவர்கள் வீடு திரும்பியதும், அதை, மேஜிக் ஹோலில் பார்த்து உறுதி செய்து கொண்ட பிறகுதான் கதவை திறக்க வேண்டும்.
வித்யாவிற்கு இந்த வாழ்க்கை முறை வெகுவாய் பிடித்தமானதாய் இருந்தாலும், கள் குடிக்க பழகிய கிழவனின் நிலைதான் அந்த வாழ்க்கை. இந்த வாழ் வியலால் எதிர்காலம் என்ற எதுவுமே அவளுக்கு இல்லை என்பது அவளுக்கு புரியுமா என்ன?
பானுவும், அளவிற்கு அதிகமாய் வித்யாவை வேலை வாங்க மாட்டாள். அதேநேரம், வித்யாவுடைய பின்னணியைப் பற்றி தெரிந்து கொள்ளவோ, அவளுடைய ஆசாபாசங்களைப் பற்றி தெரிந்து கொள்ளவோ அவள் எப்போதும் விருப்பப்படவே இல்லை.
அலுவலகத்தில் ஆடிட்டிங் பைலில் மூழ்கியிருந்த நேரம், அம்மாவிடம் இருந்து போன் வந்தது.
“என்னம்மா… இந்த நேரத்துல…’
“சிவா… ஒரு சங்கடமான செய்திடா… ராதா இறந்துட்டா…’
அம்மாவுடைய வார்த்தைகள் நிச்சயமாய் வேரோடு சரிக்கவில்லை; ஆனால், தாள முடியாத துக்கமாய் இருந்தது.
“அப்படியா… என்ன சொல்றதுன்னு தெரியலம்மா…’ என்றான்.
“எனக்கும் அப்படித்தாண்டா இருக்கு… ரொம்ப தனிமைப்பட்டு போய்ட்டா. இந்த சின்ன வயசுக்குள்ளயே அவ பட்ட கஷ்டங்களை பார்க்கும் போது, எனக்கு பயமா இருக்குடா… எனக்கும் எந்த ஆதரவும் இல்லைல இப்போ…’
துணுக்குற்றுப் போனான்.
“என்னம்மா இப்படி பேசற… நீ தானே இங்க இருக்க பிடிக்காம கிளம்பி போன… நீ தனி இல்லம்மா, நான் இருக்கேன்…’
“சிவா… நம்பிக்கை, வார்த்தையில வர்றதில்லை… வாழ்க்கையில ஏற்படணும். நீ இருக்க எனக்கு… ஆனா, நான் உன் கூட வந்துட்டா, உன் வாழ்க்கையில நிம்மதி இருக்குமா… சொல்லு!’
நிஜம்தான்… நிச்சயமாய் அவனால் மட்டுமல்ல, யாராலயுமே இரட்டை வண்டியில் ஒரே நேரத்தில் பயணிக்க முடியுமா என்ன!
அவன் மவுனமாகவே இருந்தான்.
“பாத்தியா சிவா… உன்னால உடனே பதில் சொல்ல முடியல… என்னோட மிச்ச நாளு எப்படி போகுமோன்னு, எனக்கு பயமா இருக்குடா… ஒரு பிடிப்பும் இல்லாம மனசு தவிக்குதுய்யா… ஆனா, நான் வயசான மனுஷி, எம்பாடு எப்படிப் போனா என்ன… நீ, ராதாவுக்கு குடுத்த வாக்கை மறந்துடாத… ஏன்னா, விரோதியக் கூட காலம் மன்னிச்சுடும்; துரோகிய மன்னிக்கிற சக்தி எந்த தெய்வத்துக்கும் இல்லப்பா…’
அம்மாவுடைய வார்த்தைகள், மனசில் அறைய விக்கித்துப் போனான் சிவா.
“என்னம்மா பெரிய வார்த்தை சொல்றீங்க…’
“கொடுத்த வாக்கை நிறைவேத்தாதது கூட ஒருவகையில் துரோகம்தான்… நம்பிக்கைத் துரோகம். ஒரு மனுஷனுக்கு எட்டு வகை கறியோட சோறு போடறதை விட, அவன் எட்டணா சம்பாதிக்க வழியமைச்சு தந்தாலே போதும். நீ அதுல வித்யாவுக்கு எதை செய்யப் போற?’
மனசு நடுங்கித்தான் போனது. அம்மாவின் வார்த்தையில், மாலை வீடு திரும்பி வெகுநேரம் அந்த நமைச்சல் நின்றபாடில்லை.
பெருத்த யோசனையாய் அமர்ந்திருந்தவனை, சப்பாத்திக்கு மாவு பிசைந்தபடி ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள் பானு.
அப்போது, பாத்ரூமில் இருந்து வீறீட்ட அழுகையுடன் ஓடி வந்தாள் வித்யா.
“என்னாச்சு வித்யா?’ பதறிப் போனான்.
“அண்ணே… அந்த பாத்ரூம் கொழாய்ல தலை இடுச்சுட்டது…’ நெற்றில் புடைப்பாய் வீங்கியதை காட்டி அழுதாள்.
தாயும், தகப்பனுமற்ற குழந்தை… தன் தாய் இன்றைக்கு செத்துப் போனதை கூட, அறிந்திடாத பரிதாபகரமான பிறவி.
“அடடா… கவனமா இருக்கக் கூடாதா வித்யா… நந்தினி டீபாய் மேல, அயோடெக்ஸ் இருக்கு எடுத்துக் குடு…’ என்ற போது, நந்தினி சொன்ன பதில்தான் தூக்கி வாரிப் போட்டது.
“போங்க டாடி… இவளுக்கு அயோடெக்ஸ் எல்லாம் வேணாம். கீழ தாத்தா கடையில சுண்ணாம்பு வாங்கித் தடவிக்குவா… முன்னாடி ஒரு தடவை அப்படித்தான் செஞ்சா…’
ஐந்தே வயதான நந்தினுக்குள்ளிருந்த வர்க்கபேதம் ஒரு நொடி குலுக்கி வீசியது. இதை, அந்த பிஞ்சு மனசில் விதைத்தது யார்? நாளை இந்த உணர்வு மேலோங்கி, மேலோங்கி இரு வர்க்க போராட்டத்திற்கு அடிப்படை வித்தாக அமைந்து போகுமே… ஒரு வேளை உலக மக்களிடையே ஏற்பட்டு கிடக்கும் இந்த பேதமைக்கு இந்த வர்க்கப் பேதமை தான் அடிப்படை காரணமோ…
“என்ன அப்படியே உட்கார்ந்திருக்கீங்க?’ என்றாள் பானு.
“இல்ல… நந்தினி சொன்ன வார்த்தைகள் எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. ஒரு குழந்தை, இன்னொரு குழந்தையை பத்தி இப்படி யோசிக்க முடியுமா? எனக்கு பயமா இருக்கு இதெல்லாம் பார்க்க…’
“போதும்… வர்க்க பேதமை பத்தி பேசறதுக்கு இது அரசியல் மீட்டிங் இல்ல… நந்தினி சின்ன குழந்தை; அவளுக்கு என்ன தெரியும்…’
“நான், அவ பேசறது தப்புன்னு சொல்லலே பானு… ஜாதிக் கொடுமையையே நம்மால அழிக்க முடியல… அதுக்குள்ள இதுமாதிரி வர்க்க கொடுமை வந்துட்டா, நம்ம நாடு என்னாகும்?’
“ஒண்ணும் ஆகாது. குதிரை மேல எத்தனை அன்பிருந்தாலும், அதுக்கு லாடம் தான் கட்டணும், ஹை-ஹீல்ஸ் செருப்பு வாங்கி போட முடியாது. போய் பேசாம படுங்க…’
இரவு படுக்கையில் வெகுநேரம் விழித்திருந்தான்.
“முந்தைய தலைமுறையில் பிறந்த அம்மாவின் வார்த்தைக்கும், இந்த தலைமுறையின் பானுவின் வார்த்தைக்கும் எத்தனை வேறுபாடு மிதமிஞ்சி கிடக்கிறது. இந்த தலைமுறை இடைவெளியில் நசித்து போவது எதிர்கால தலைமுறையின் இளந்தளிர்கள் அல்லவா…’
இந்த எண்ணம் தோன்றிய போது, “ஏசி’ அறையிலும், வியர்த்து, வெளியில் வந்தான். சோபாவை ஒட்டிய தரையில் பிளாஸ்டிக் பாய் விரித்து, உறங்கிக் கொண்டிருந்தாள் வித்யா. கான்வெட்டில் படித்து, கார்ட்டூன் நெட்வொர்க்கில் மூழ்கிக் கிடக்கும், இந்த வயது குழந்தைகளோடு ஒப்பிட்டு பார்க்க மனசு கனத்தது.
இந்த வித்யா வளர்ந்து, பெரியவளாகி, கல்யாணமாகி, நாளைய இன்னொரு வேலைக்கார பெண்ணை பெற்று எடுப்பாள்… தன்னுடைய மகளுக்கு அந்த நிலைமை வரவேக் கூடாது என்றுதானே இவ அம்மா மனம் கலங்கினாள். குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு என்பது நிச்சயமாய் ஏழைகளின் கையில் இல்லை… அது, பணக்காரர்களின் சிந்தனையில் மட்டுமே சாத்தியம்.
“”நான் வேணா வித்யாவோட பேரண்ட்ஸ்ட்ட பேசட்டுமா?” கெஞ்சாத குறையாக கேட்டாள் பானு.
“”விடேன்… நீ பேசி என்னாகப் போகுது… அவங்க குழந்தைய ஸ்கூலுக்கு அனுப்பணும்ன்னு விரும்பறாங்க,” என்றான் பெட்டியை கையில் தூக்கியபடி.
“”ஷிட்… இவங்க எப்பவும் இப்படித்தான். இன்னைக்கு இருக்கிற பசிக்கு சோறு தேட மாட்டாங்க. நாளைக்கு வரப்போற தலைவலிக்கு தைலம் காய்ச்சுவாங்க. அது சரி… ஊர்ல போய் உங்கம்மாகிட்ட உறவாடிட்டு இருக்காமே, ரெண்டு நாளானாலும் இருந்து இன்னொரு பொண்ணை வேலைக்கு பிடிச்சுட்டு வாங்க,” என்றாள்.
சிரித்துக் கொண்டான் சிவா.
இனிமேல் இதுபோன்ற அபவாதத்தில் ஈடுபட அவன் மனசு ஒப்புமா என்ன?
சோழவந்தான் வந்ததும், வித்யாவை அம்மாவின் கையில் ஒப்படைத்தான்.
“”சிவா… என்னடா இது… எதுக்குடா வித்யாவை திருப்பி கூட்டிட்டு வந்துட்ட…” அம்மா விசனமாய் கேட்டாள்.
“”ஆமாம்மா… நீ அடிக்கடி சொல்வியே… உன் வாழ்க்கையில பிடிப்பு இல்லைன்னு, இதோ இதுதான்மா உனக்கான பிடிப்பு. நான் பாறையில் விதை தூவி பயிராகும்ன்னு காத்திருந்தேன்; நிச்சயமா அது வீண் முயற்சி. இப்போதுதான் எனக்கு சரியான பாதை தெரிஞ்சிருக்கு…
“”நிச்சயமா… அடுத்த தலைமுறை, மூத்த தலைமுறையோட அரவணைப்பில் தான் சரியான வழிகாட்டுதலை அடைய முடியும். இடையில ஒரு தலைமுறை தன்னோட சுயநல சித்தாந்தத்தால தனக்கும், தன்னுடைய முன்பின் தலைமுறைக்கும், அறிந்தும், அறியாமலும் செய்ற பாவத்தில் இருந்து காப்பாத்த இது ஒண்ணுதான் வழி.
“”ஆதரவில்லாத வித்யாவுக்கு, அர்த்தமில்லாது போன உன் வாழ்க்கை துணையா இருக்கட்டும். உங்க ரெண்டு பேருக்கும் நான் எப்பவும் பாதுகாவலனாய் இருப்பேன். ஏன்னா இப்படித்தான்மா குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கணும்.”
சிவா பேசி முடிக்க, அம்மா இருவரையும் ஒருசேர அணைத்துக் கொண்டாள்.

– எஸ்.ஜாஸ்மீன் (அக்டோபர் 2011)

சொந்த ஊர்: பழனி.
கல்வித் தகுதி: எம்.பி.ஏ.,
சிறு வயது முதல் நிறைய புத்தகங்கள் படிப்பதில் ஆர்வம் உள்ளவர். அந்த ஆர்வமே, தற்போது கதை எழுத வழி வகுத்துள்ளது. அப்படி எழுதப்பட்ட முதல் கதையே ஆறுதல் பரிசு பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *