சரியான கட்டணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2024
பார்வையிட்டோர்: 209 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்த ஆட்டோ பின்னால் எழுதியிருந்த வாசகம் மனோவைக் கவர்ந்தது. சாதாரணமாக என்ன எழுதியிருக்கும். பிரசவத்திற்கு இலவசம்.. ( ஒரு பாசக்கார ஆளாக இருக்க வேண்டும்) சீறும் பாம்பை நம்பு சிரிக்கும் பெண்ணை நம்பாதே! (காதல் தோல்வி? )

இது வித்தியாசமாக இருந்தது. சரியான கட்டணம் நிறைவான பயணம். அட புதுசாக இருக்கிறதே.. வரிசையில் நான்காவதாக இருந்தது அந்த ஆட்டோ.. மூன்று ஆட்டோக்களுக்கு ஆட்கள் வரும்வரை காத்திருந்து விட்டு அந்த ஆட்டோவில் ஏறிக்கொண்டான் மனோ.

ஓட்டுனனுக்கு இருபது வயது தான் இருக்கும். முன்னிருக்கும் கண்ணாடியில் ஒரு முதியவரின் புகைப்படம் இருந்தது., வேறு கடவுளர் படங்கள் ஏதும் இல்லை. மெல்ல பேச்சுக் கொடுத்தான் மனோ. ‘என்ன தம்பி படிக்கலியா?’

“முடிச்சுட்டேங்க.. இளங்கலை அறிவியல்.. முதல் வகுப்பில் தேர்வாகியிருக்கேன்”

“அரசு வேலை அல்லது தனியார் வேலை கெடைக்கலியா?”

“கெடச்சுதுங்க ஆனா போகல“

ஆச்சர்யப்பட்டான் மனோ.. சில பேர் இப்படி இருக்கிறார்கள். ஒருவரிடம் அடிமையாக வேலை செய்ய மாட்டேன். சுய தொழில் தான் செய்வேன் என்கிற வைராக்கியம். அதுவாக இருக்குமோ காரணம்.

“ஏன் தம்பி ஒருத்தர் கிட்ட வேலை பார்க்கிறது பிடிக்க்கலியா கேவலமா.. ஆட்டோ கூட ஒரு முதலாளிக்கு சொந்தம்தானே.. அப்ப?”

“ஆமாங்க இது கூட ஒரு முதலாளிக்கு சொந்தம் தான் ஆனா அந்த மொதலாளி நான் தான்”

வியப்பு கூடியது மனோவுக்கு. இருபது வயதில் சொந்த ஆட்டோ.. வசதி இருக்கும் போல. அவன் எண்ணத்தை படித்தது போல சொன்னான் அந்த இளைஞன்.

“வசதியெல்லாம் இல்லீங்க.. சாதாரணக்குடும்பம் தான். ஆனால் கை தூக்கி விட என் மாமா இருந்தாரு. இதோ இந்த புகைப்படத்துல இருக்கறவருதான் அவரு”

சரவணன் பிறந்தபோதே அவனது தந்தை இறந்து போயிருந்தார். கோஷ்டி சண்டை கட்சி பாகுபாடு என்று எத்தனையோ காரணங்கள் அதற்குச் சொல்லப்பட்டன. ஆதரவற்ற சரவணனையும் அவன் தாயையும் எடுத்து காப்பாற்றியவர் செல்லமுத்து. செல்லமுத்து அந்த பகுதியில் ஒரு முதலாளி. ஆறு ஆட்டோ ரெண்டு டெம்போ என்று வசதியாக வாழ்பவர்.

பட்டறையிலே ஆளில்லைன்னு தங்கைச்சி புள்ளையை எடுத்து வளக்குறாரு. அவரு புள்ளைங்கள்ளாம் கான்வெண்டில படிக்கும். இவனுக்கு ஸ்பேனர்தான் “ ஊரே பேசியது. பொய்யாகினார் செல்லமுத்து. கவர்மெண்ட் பள்ளிதான் ஆனால் நல்ல பள்ளி. வாரத்துக்கு ஒரு முறை தானே சென்று பள்ளி முதல்வரையும் ஆசிரியரையும் சந்தித்து சரவணனின் வளர்ச்சி பற்றி விசாரிக்க தவற மாட்டார் செல்லமுத்து. அவர் பிள்ளைகள் நடந்தே பள்ளிக்கு போகும். சரவணனுக்கு ஆட்டோதான். ஆனால் சரியாக மதிப்பெண்கள் வாங்கவில்லை என்றால் அவர் பிள்ளைகள் வசவோடு தப்பித்துவிடும். ஆனால் சரவணனுக்கு உடம்பு காய்த்துப் போகும். இரவு அவரே உட்கார்ந்து எண்ணெய் தடவுவார் அவன் முதுக்கு.

கொஞ்சம் பெரியவனான உடன் அவனிடம் சொன்னார் செல்லமுத்து.

“எப்படி இது எல்லாம் வந்தது தெரியுமா? நியாயமான வழியில இல்லை. மீட்டருக்கு சூடு வக்கிறது. ஊர் தெரியாத ஆட்கள் வந்தா சுத்திகினு போயி காசை ஏத்தறது.. கொஞ்ச நாள் கூலிப்படைக்கு கூட ஆட்டோ ஓட்டியிருக்கேன்.. ஆனா என்னா பிரயோசனம் இத அனுபவிக்கறதுக்கு எனக்கு ஆரோக்கியம் இல்லையே”

சரவணன் மனதில் இது ஆழமாக பதிந்து போனது. என்ன படித்தாலும் நானும் ஆட்டோதான் ஓட்டப்போகிறேன். ஆனால் நேர்வழியில் நியாயமான வழியில்.

பட்டப்படிப்பு படித்து முடித்தவுடன் மந்திரி சிபாரிசில் அவனுக்கு அரசு வேலை காத்திருந்தது.

நிராகரித்தான். ஆட்டோ என்றது செல்லமுத்து அவனை கோபத்துடன் பார்த்தார். அவன் முறைப்பைக் கண்டு அடங்கிப்போனார். முதல் ஆட்டோ அவருடையது.

“சந்தையில இதன் மதிப்பு எவ்வளவு?”

“அது எதுக்கு உனக்கு?“

“சொல்லேன்”

“நாப்பதாயிரம் ரூபா”

இரவு பகலாக ஓட்டி ஒரே வருடத்தில் அடைத்தான் அந்த பணத்தை. இப்போது ஆட்டோ அவனுக்கு ஒரு பந்தம். நேர்மை எப்போதும் சொந்தம்.

மனோ இறங்கிப் போகும்போது மீட்டரில் நாற்பத்தைந்து ரூபாய் ஆகியிருந்தது. சரவணன் சில்லறை தேடிக்கொண்டிருக்கும்போது இறங்கி வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

சர்ரென்று ஆட்டோ அவனருகில் வந்து நின்றது. ஐந்து ரூபாய் தாளை நீட்டியபடி சிரித்தான் சரவணன்.

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *