சமையல் சோம்பேறிகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2021
பார்வையிட்டோர்: 3,938 
 
 

ஞாயிறு விடிகாலை…

ரெஸ்ட் ரூம் போவதற்காக எழுந்திருந்தவளை விஸ்வநாத ஐயர் “கல்யாணி, பெரியப்பாவுக்கு சூடா ஒரு காபி போட்டுக்கொண்டு வாயேன்…” என்றார்.

கல்யாணி பதில் பேசாமல் விறுவிறென கிச்சனுக்குள் நுழைந்து காபி மேக்கரில் காபி போட்டு, அவரின் மனைவிக்கும் சேர்த்து இரண்டு காபிகள் எடுத்து வந்தாள்.

கல்யாணி போட்டுக் கொடுத்த காபி சகிக்கவில்லை.

விஸ்வநாத ஐயர் முகத்தைச் சுழித்துக் கொண்டார். எனினும், தம்பியின் மாட்டுப் பெண்ணாயிற்றே என்று வெறுப்புடன் குடித்து வைத்தார்.

இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஒரு நல்ல காபி போடத் தெரியவில்லை. வெறுமனே பாலைச் சுட மட்டும் வைத்து காபி கலக்கிறார்கள்; பாலை கேஸ் சிம்மில் நன்கு காய வைத்து, அதன் பிறகு டிகாஷனுடன் காய்ச்சிய பாலை அளவுடன் கலந்து கொடுத்தால்தான் அது சுவையான காபி. இதுகளுக்கு ஒன்றும் தெரியாது. கடனே என்று காபி கலக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டார்.

கல்யாணி “இன்னிக்கி சண்டே பெரியப்பா… சாடர்டே, சண்டேயில் நாங்க எட்டு மணிக்குதான் எந்திரிப்போம்…” என்று சொல்லிவிட்டு ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

கூடப்பிறந்த தம்பி பஞ்சாபகேசனின் மாட்டுப்பெண்தான் கல்யாணி. தம்பி ஸ்ரீரங்கத்தில் மனைவியுடன் இருக்கிறான். தம்பியின் மகன் நந்துவும், கல்யாணியும் மட்டும் சமீபத்தில் கல்யாணமாகி பெங்களூர் ஒயிட்பீல்டில் இருக்கிறார்கள். இருவரும் ஒரே ஐடி கம்பெனியில் பணி புரிகிறார்கள்.

மல்லேஸ்வரத்தில் ஒரு கல்யாணத்திற்காக சென்னையிலிருந்து மனைவியுடன் விஸ்வநாத ஐயர் வந்திருந்தார். நந்து வருந்திக் கூப்பிட்டதாலும்; தம்பிவேறு ஸ்ரீரங்கத்தில் இருந்து என் பையன் வீட்டுக்கு போயிட்டுவாடா என்று சொன்னதாலும் மல்லேஸ்வரத்தில் கல்யாணம் முடிந்ததும் அன்று இரவே ஒயிட்பீல்டுக்கு மனைவியுடன் வந்திருந்தார் விஸ்வநாத ஐயர்.

அடுத்து ப்ரேக்பாஸ்டிற்கு சட்னி சாம்பாருடன் சுடச்சுட இட்லி அல்லது தோசை பண்ணிப் போடுவாள் என்று பார்த்தால், கல்யாணி வெறும் ப்ரெட் டோஸ்ட்; டெட்ரா பேக் ஆப்பிள் ஜூஸ் மட்டும் கொடுத்துவிட்டு ப்ரேக்பாஸ்டை நிறைவு செய்துவிட்டாள்.

விஸ்வநாத ஐயருக்கு வெறுத்துப் போயிற்று. மனைவியிடம் “இதுகள் என்ன இப்படிக் குடித்தனம் நடத்துறதுகள்…” என்று முனகினார்.

“நந்துவுக்கு பிடிச்சிருக்கு… காதல் கல்யாணம் பண்ணிண்டான்… இப்ப ரெண்டு பெரும் அவாளுக்கு பிடிச்ச மாதிரி இருந்துட்டுப் போறா, வந்த இடத்துல நீங்க வாயை வச்சிண்டு சும்மா இருங்கோ… நமக்கு நாளைக்கு காத்தால சென்னைக்கு சதாப்தி எக்ஸ்பிரஸ்…” என்றாள்.

அன்று மதியம் கல்யாணி சமைக்கக்கூட இல்லை. மொபைலில் நுழைந்து ஆப்பில் அவள் ஆர்டர் செய்து டெலிவரி செய்யப்பட்டதை நான்கு பேரும் பகிர்ந்து உண்டனர். விஸ்வநாத ஐயர் கடுப்பாகி விட்டார்.

‘வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கு ஒரு சாம்பார், ரசம், கூட்டு வைத்து சமைக்கக்கூட துப்பில்லையா…!’ என்று வெதும்பினார். அன்று மாலை மறுபடியும் டெட்ரா பேக் ஆப்பிள் ஜூஸ்தான்.

இரவில் எம்டிஆர் ஹோட்டலுக்கு நந்து அவர்களைக் கூட்டிச் சென்றான். அவர்கள் சென்ற காரைக்கூட கல்யாணிதான் ஓட்டி வந்தாள். கல்யாணி சொல்வதெற்கெல்லாம் நந்து ஆமாம் போட்டபடியே இருந்தான்.

“ஏண்டா நந்து, ஒனக்கு கார் ஓட்டத் தெரியாதா?”

“இன்னமும் கத்துக்கல பெரியப்பா.”

விஸ்வநாத ஐயர், ‘பஞ்சுவின் பிள்ளை நந்து சரியான பெண்டாட்டிதாசன்… அப்புண்டு… நம்ம கோத்திரத்துல இப்படி ஒரு அசமஞ்சம்…’ என்று எண்ணிக் குமைந்தார்.

வீட்டிற்கு காரில் திரும்பி வரும்போது மனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், “ஏம்மா கல்யாணி, வீட்ல நீ சமைக்கவே மாட்டியா?” என்றார்.

கல்யாணி மிக இயல்பாக, “ஆமாம் பெரியப்பா… சமைக்கவே மாட்டேன். அதற்கு இரண்டு காரணங்கள்… ஒன்று எனக்கு சமைக்கவே தெரியாது. அதை இப்போதைக்கு கற்றுக் கொள்ள ஆசையோ அல்லது அவசியமோ எனக்குக் கிடையாது. ஏனென்றால் நாங்கள் பிரேக்பாஸ்ட் ப்ரெட் ஆம்லேட் மட்டும் சாப்பிட்டுவிட்டு ஒரு ஜூஸ் குடித்துவிட்டு சேர்ந்தே ஆபீஸுக்கு காரில் கிளம்பிவிடுவோம். பத்து மணி காபி, டீயிலிருந்து இரவு உணவுவரை ஆபீஸ் கேன்டீனில் முடித்துக்கொண்டு இரவுதான் சேர்ந்தே வீடு திரும்புவோம்…”

“…………………………..”

“எனி லேர்னிங் இஸ் ஆல்ஸோ நீட் பேஸ்டு, சமையல் உட்பட… இல்லியா பெரியப்பா?”

நந்து, “சனி ஞாயிறுகளில், வேண்டிய உணவுகளை அவள் மொபைல் ஆப் மூலமாக வரவழைத்துக் கொள்வாள் பெரியப்பா…” என்று ஒத்துப் பாடினான்.

கல்யாணி பெருமையாக, “சமையல் அறையை நான் யூஸ் பண்ணுவதே இல்லை… இத்தனைக்கும் அதில் கேஸ் ஸ்டவ்; மைக்ரோ வேவ் ஓவன்; ரைஸ் குக்கர்; இண்டக்ஷன் ஸ்டவ்; காபி மேக்கர்; சப்பாத்தி மேக்கர்; ப்ரெட் டோஸ்டர்; சாண்ட்விச் மேக்கர்; எலெக்ட்ரிக் கெட்டில் என ஏகப்பட்ட சாதனங்கள் இருக்கின்றன பெரியப்பா…” என்று பீற்றிக் கொண்டாள்.

விஸ்வநாத ஐயர் வாயடைத்துப் போனார்.

மறுநாள் விடிகாலையில் கல்யாணி அவர்களை சென்னைக்குச் செல்ல ஸ்டேஷனில் இறக்கி விட்டாள்.

சதாப்தி கிளம்பியதும், “ஏண்டி, ஒரு பழுத்த சுமங்கலி நீ வீட்டுக்கு வந்திருக்கே… நாம கிளம்பும்போது ஒரு ப்ளவுஸ் பீஸ் வச்சு குங்குமம் கொடுத்து அனுப்ப மாட்டாளோ? வளர்ப்பு சரியில்லை. இதுகளுக்கு எதுக்கு வீடு? பேசாமல் ஒரு லாட்ஜில் குடித்தனம் பண்ணலாமே?” என்றார்.

“அது அவா அவா வசதி. புரிதலுடன் சந்தோஷமா குடித்தனம் பண்றாளே அது மட்டும் போதும்…”

மனைவியின் இந்தப் பதில் அவருக்கு சரியாகப்படவில்லை. பயணம் செய்தபோது ஐயரின் மனம் பலவாறாகச் சிந்தித்தது…

அன்புடன் சமைப்பது என்பது, பாசத்துடன் குடும்பத்தை இணைப்பதாகும். சமையல் என்பது ஒரு கலை மட்டும் அல்ல. குடும்ப கலாசாரத்தின் மையப்புள்ளி அது. அந்த மையப்புள்ளியை நம் பாட்டிகள் மிக்க வாஞ்சையுடன் அக்கறையுடன் பராமரித்தார்கள்.

சமையல் அறை இல்லாது படுக்கை அறை மட்டும் இருந்தால், அது குடும்பம் அல்ல. வெறும் தங்கும் விடுதிதான். சமையல் அறையை மூடிவிட்டுப் படுக்கை அறை மட்டும் போதும் என்று நினத்தால் அது நமக்கு அவலம்.

1980 வரை கூட்டுக் குடும்பமாக இருந்த இந்தியக் குடும்பங்கள் எண்பது சதவிகிதம்; ஆனால் அதுவே 2020 ல் முப்பது சதவிகிதமாக நலிந்துவிட்டது. அன்று ஒற்றுமையுடன் வாழ்ந்த குடும்பங்களாக இருந்தது, இன்று தீவுகளாகி வெறும் தங்கும் வீடுகளாகி விட்டன.

இந்தியாவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் பத்து சதவிகிதம். ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் முப்பது சதவிகிதம். ஆறு சதவிகித வீடுகள் அப்பாவோ அம்மாவோ மட்டுமே வசிக்கும் வீடுகள். மற்ற வீடுகள் குடும்பமாக சேர்ந்து தங்கும் இடங்கள்.

இன்று பிறக்கும் மொத்தக் குழந்தைகளில் இரண்டு சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்குப் பிறக்கின்றன. இருபது சதவிகித முதல் காதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அதன் பிறகு நடக்கும் இரண்டாவது, மூன்றாவது திருமணங்களும் விவாகரத்து ஆகிவிடுகின்றன. ஏனெனில் பெண்களுக்கு இப்போது விவாகரத்து என்பதே அதிகமாகப் பழகிவிட்டதால், அவர்களுக்கு அது இயல்பான ஒரு மரத்துப்போன சங்கதியாகி விட்டது.

படுக்கை அறை மட்டுமே குடும்பம் அல்ல; சமையல் அறை இல்லாது படுக்கை அறை மட்டுமே இருந்தால், திருமணம் நிலை குலைந்துவிடும். குடும்பங்கள் அழிந்தால் மன நலமும், உடல் நலமும் சீரழியும்.

வெளியில் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டாலோ அல்லது ஆப்பில் ஆர்டர் செய்து சாப்பிட்டாலோ உடல் ஊதிப் போகிறது. ஏராளமான தொற்று நோய்கள் வருகின்றன. சேமிப்பும் நிறைய குறைகிறது.

எனவே சமையல் அறை, சமையல் என்பது எல்லாம் குடும்ப நலனுக்கு மட்டுமே ஆதாரம் அல்ல. உடல் நலம், மன நலம், பொருளாதாரத்திற்கும் கூட ஆதார அவசியம்.

இதிலிருந்து நாம் ஒன்றை நன்றாக உணர்ந்துகொள்ளலாம். அது, அனைத்து நன்மைகளுக்கும் பெண்கள் இயற்கையிலேயே இன்றியமையாத கடவுளின் படைப்பு என்பதை ஆண்கள் நன்றாக உணரலாம்.

வீட்டில் வாஞ்சையுடன் சமைத்துப் பரிமாறாத கல்யாணமான பெண்கள், சரியான சமையல் சோம்பேறிகள்… சாக்குப்போக்கு சொல்பவர்கள்.

பெண்களை, குறிப்பாக மனைவியை ‘போஜ்யேஷூ மாதா’, அதாவது உணவூட்டுவதில் தாய் என்கிறது ஸமஸ்க்ருத சுபாஷிதம்.

அறம் சார்ந்த வாழ்க்கையை யார் இப்போது நேர் கோட்டில் வாழ்கிறார்கள்? என்று மனம் வெதும்பினார்…

***

வீடுகளில் சமைப்பது நின்றுபோன அமெரிக்காவில் என்ன நடந்தது தெரியுமா?

புகழ்பெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள், “சமையல் அறையை தனியார் கம்பெனிகளுக்கு தாரை வார்த்தாகி விட்டது; குழந்தைகளின் பராமரிப்பையும் அரசாங்கத்திடம் கொடுத்துவிட்டால், குடும்பப் பொறுப்பும், அதன் பாங்கும் முற்றிலும் அழிந்துவிடும்…” என்று தீர்க்கமாகக் கூறினார்கள்.

அவர்கள் எச்சரித்தபடியே, பொறுப்பும் பாங்கும் அற்ற அமெரிக்கக் குடும்பங்கள் ஏறக்குறைய அழிந்து விட்டன.

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *