சமையல் அறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2020
பார்வையிட்டோர்: 5,344 
 
 

(இதற்கு முந்தைய ‘தேவன்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது).

நான் சந்தித்த இரண்டாவது கதாவாசகர், சந்தேகமே இல்லாமல் என் மதுரம் சித்திதான்.

அவ்வப்போது அகிலன், மு.வரதராசனார், நா.பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களையும் வாசித்துப் பார்த்துக் கொண்டிருந்த சித்தி, வாசித்தவற்றில் இருந்து அவருக்கான மேன்மைகளை உள் வாங்கிக் கொண்டதை, சந்தோஷத்தின் வெளிப்பாடாக சிறு சிறு வரிகளில் என்னிடம் பகிர்ந்து கொண்டபோது எனக்கு மதுரம் சித்தி என் அப்பாவின் பெண் வடிவமாகத் தெரிந்தார்.

ஒரே ஒரு வித்தியாசம். என் அப்பாவுக்கு தான் படித்தவற்றை ஆணித்தரமாக சொல்ல வரும். மதுரம் சித்திக்கு அப்படிச் சொல்ல வராது.

கல்யாண வீட்டுச் சந்திப்புகளில் சித்தி என்னிடம் தமிழ் தொடர்கதைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்ததில், அவரின் குறிப்பான சில தன்மைகள் எனக்குத் தெரிந்த மாதிரி; டிக்கன்ஸ், ஹெமிங்வே, சாமிர்செட்மாம் போன்றோரின் ஆங்கில எழுத்துக்களைப் பற்றி தெரிந்தவரை அவரிடம் நான் விவரித்ததில் சித்திக்கு என்னுடைய சில முக்கிய குறிப்பான தன்மைகள் குறிப்பான தளத்தில் அழகாக சந்தித்து விட்டன.

இந்தச் சந்திப்பின் பரிவர்த்தனைகளுக்கு கல்யாண வீட்டுச் சந்திப்பின் பேச்சுக்கள் எங்களுக்குப் போதுமானதாக இல்லை. அதனால் ஒரு கல்யாணச் சந்திப்பின்போது சித்தி, “அப்பப்ப நீ எங்க வீட்டுக்கு வாயேன். உக்காந்து ஆற அமர பேசலாம்… இப்படி நாம கல்யாண வீட்ல பேசறது எனக்கென்னமோ தெருவுல நின்னு பேசற மாதிரி இருக்கு…” என்றாள்.

“சரி வரேன் சித்தி” என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டேன். அதன் பிறகு பல மாதங்கள் ஓடிவிட்டன…

இப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். சித்திக்கு ஒரு மகன் பிறந்து விட்டிருந்தான். சிவராமன் சித்தப்பாவின் வீடு எங்கள் வீட்டுக்கு நான்கு தெருக்கள் தள்ளி பக்கத்தில்தான் இருந்தது. அவர்களின் வீடும் பெரிசுதான். நீளத்தில் நூறு அடியும், அகலத்தில் முப்பது அடியும் கொண்ட விஸ்தாரமான; நிறைய இடங்களில் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட வீடு.

முன்னும் பின்னுமாக வீட்டுக்கு இரண்டு வாசல்கள். இரண்டு வாசல்களும் இரண்டு வேறு தெருக்களில். பொதுவாக சமையல் அறையை ஒட்டிய பின்பக்க வாசல் வழியாகத்தான் எல்லா சொந்தக்காரர்களும் போய் வருவார்கள்.

சிவராமன் சித்தப்பாவிற்கு வட்டி வியாபாரம். வீட்டின் முன்பக்க ஹால்தான் அதற்கான ஆபீஸ். அந்த வியாபார விஷயமாக வந்து போகிறவர்கள் முன்பக்க வாசலை உபயோகிப்பார்கள். வீடுதான் ஆபீஸும் என்பதால் சிவராமன் சித்தப்பா எப்போதும் வீட்டில்தான் இருப்பார்.

சுபாவத்தில் அவர் பெரிய கோபக்காரர். அவரிடம் வேலை பார்க்கும் பணியாட்களை அடிமை போல நடத்துவார். அவரின் பேச்சிலும் வார்த்தைகளிலும் பல நேரங்களில் நெருப்பு தகிக்கும். எல்லோரிடமுமே ஒருவித எஜமானத் தோரணையிலேயே பேசப் பார்க்கும் தோரணை அவரின் முகத்தில் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும். அதே நேரம் அதை வார்த்தையில் காட்டி விடாத ஒரு தளுக்கும் பேச்சில் இருக்கும். அதற்கும் மேல் ஒரு பொய்யான சிரிப்பும் அவரின் முகத்தில் இருக்கும்.

சிவராமன் சித்தப்பா மதுரம் சித்தியிடம் அன்பாகவே நடந்து கொள்வார். அதே நேரம் தான் அன்பு காட்டுவதே பெரிய மனிதத்தனமான நன்கொடை என்கிற மாதிரியான மிடுக்கையும் சித்தப்பா சேர்த்தே காட்டுவார். சித்தியிடம் சிறிது நேரம் அன்புடன் பேசியதும், தான் கொஞ்சம் அதிகமாக பேசி விட்டதாகத் தோன்றிவிடும் அவருக்கு.

உடனே “சரி சரி போய் வேலையைப் பாரு. பேச ஆரம்பிச்சிட்டா, என் வாயைப் பாத்துகிட்டு நிப்பா. அப்படியே விட்டா, இருக்கிற வேலை எல்லாத்தையும் மறந்திட்டு, இங்கனயே நின்றுகொண்டு வாயைப் பிளப்பா…” என்று அதிகாரத்துடன் கூறிவிட்டு வேட்டியை உதறி விட்டுக்கொண்டே அங்கிருந்து நகர்ந்து போவார்.

அன்று நான் மதுரம் சித்தியைப் பார்க்க அவர்கள் வீட்டுக்குப் போனேன். எல்லா சொந்தக்காரர்களையும் போல நானும் பின்பக்க வாசல் வழியாகப் போனேன். முதல் முறையாக நான் போனபோது சித்தப்பாவும் யதேச்சையாக சமையல் அறையில் காப்பி அருந்தியபடி நின்று கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடன் சித்தப்பாவுக்கு ரொம்ப ஆச்சர்யம், “யேய், வா… வா. என்ன இன்னிக்கி அதிசயம்.. மழைதான் கொட்டப் போகுது…” என்றார்.

சித்தப்பாவுக்கு தொண்டை ரொம்பப் பெரிசு. எட்டு வீட்டுக்கு கேட்கிற மாதிரி சப்தமாகத்தான் பேச முடியும். அவருக்கு நேர் எதிர் சித்தியின் குரல். சித்தி பேசினால் அடுத்த வீட்டுக்குக் கூட கேட்காது.

சித்தி அமைதியாக “நம்ம குமரேசு மச்சான் வீட்டுக் கல்யாணத்துல பாத்தப்ப நாந்தேன் இவனை வீட்டுக்கு வாயேன்னு கூப்பிட்டேன்… அதான் இப்ப வந்திருக்கான்.” என்றாள்.

“பேச்சுத் துணைக்கு சரியான ஆள்தான் இவன். காலேஜ்ல வேற இப்ப படிக்கிறான்… நீ பேசிட்டு இரு” என்று சொல்லிவிட்டு சித்தப்பா, பின் வேட்டியின் முன்புறத்தை கொஞ்சம் உயர்த்தி உதறி விட்டுக் கொண்டே முன் ஹால் நோக்கி வேகமாக நடந்துவிட்டார். வேட்டியை சதா உதறி விட்டுக் கொள்வதும் அதை அவிழ்த்து அவிழ்த்து கட்டிக் கொள்வதும் சித்தப்பாவிற்கு வழக்கம்.

சித்தப்பா வீட்டுச் சமையல் அறையில் யார் வந்தாலும் உட்கார்ந்து பேசுவதற்கு தோதாக நீளமான பெஞ்சு போடப் பட்டிருக்கும். சித்தி அவர்களுடன் உட்கார்ந்து பேசுவது இந்த பெஞ்சில்தான். சித்தி உட்கார்ந்துகொண்டு கதைகள் படிப்பதும் அதே பெஞ்சில்தான். அம்மாவிற்கும் சகோதரிகளுக்கும் கடிதங்கள் எழுதுவதும் அதே பெஞ்சில் அமர்ந்துகொண்டுதான்.

பிற்பகலில் சிறிது நேரம் படுத்து ஓய்வு எடுத்துக் கொள்வதும் அதே சமையல் அறை பெஞ்சில்தான்… சுருக்கமாகச் சொன்னால் மதுரம் சித்தியின் உலகம் அவரின் சமையல் அறையே. ஆனால் அந்த பெஞ்சு ஒருபோதும் அசுத்தமாக இருந்ததில்லை. வீணாகிப்போன காயோ, காய்களின் தோலோ எந்த இடத்திலும் பார்க்க முடியாது. சமையல் அறை படுசுத்தமாக இருக்கும்.

அந்தக் காலத்து விறகு அடுப்பு சதா எரிந்த வண்ணம்தான் இருக்கும். சமையல் அறை மிக விஸ்தாரமானது என்பதால் அடுப்பின் வெம்மையை கொஞ்சம்கூட உணர முடியாது. எல்லா நிமிஷமும் சிறிதும் அமைதி கலங்காமலேயே தோன்றுகிற அறை அது.

மதுரம் சித்தி என்ற மனுஷியின் மிருதுத் தன்மையின் பிரவகிப்பு எப்படி ஒரு சமையல் அறையின் தோற்றத்தில் கூட இதமான டிரான்ஸ்பர்மேஷனை பரிமளிக்க வைத்து விடுகிறது என்பதற்கு அந்த இடம் அழகிய சாட்சி.

எனக்கும் மதுரம் சித்திக்கும் இடையில் அந்த சமையல் அறையில்தான் கனிவு தோய்ந்த உறவு வேர்விட்டு வளர்ந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *