கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 24, 2020
பார்வையிட்டோர்: 4,557 
 

(இதற்கு முந்தைய ‘அந்தக் காலத்தில்…’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது).

ஆனந்த விகடன், கல்கி, கலைமகள் போன்ற பத்திரிகைகளில் பிரசுரமாகிக் கொண்டிருந்த தொடர்கதைகளை மதுரம் சித்தி ஒன்று விடாமல் ஒரு தீவிரத் தன்மையோடு வாசித்துக் கொண்டிருந்தார்.

அம்பை, சிவசங்கரி, இந்துமதி, லக்ஷ்மி, ராஜம் கிருஷ்ணன் போன்றோரின் எழுத்துக்களை சித்தி விடாமல் வாசித்து வந்தார். எனக்கு இந்தத் தொடர்கதைகள் எதைப் பற்றியும் எந்த விவரங்களும் தெரியாது. அதனால் அவற்றைப் பற்றிய அபிப்பிராயங்களும் கிடையாது. அவற்றை எல்லாம் படித்துப் பார்க்கலாமா என்ற சிந்தனையும் எனக்குள் வந்ததில்லை.

ஆனால் மனதிற்குள் நான் ஒரு அழுத்தமான கதை உலக வாசக மனிதனாக இருந்து கொண்டிருந்தேன். பல நேரங்களில் என்னைச் சுற்றிக் கிடந்த வாழ்க்கையே மாபெரும் கதையாகத்தான் எனக்குத் தெரிந்து கொண்டிருந்தது. மனிதர்கள் அனைவருமே ஏதோவொரு கதையின் பாத்திரங்களாக தோற்றம் கொண்டிருந்தார்கள்.

இந்தத் தோற்றத்திற்கு நதி மூலமாய் அமைந்தது, என்னுடைய பதினைந்தாவது வயதில் அப்பாவின் அலமாரியில் இருந்து நான் எடுத்துப் படித்த சார்லஸ் டிக்கன்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம்.

அவரின் வாழ்க்கையை தெரிந்து கொண்டபின், அவருடைய சில நாவல்களைப் படித்தபோது, அவருடைய வாழ்க்கையின் சில அனுபவங்கள் நாவல்களின் காட்சிகளாகவும்; சார்லஸ் டிக்கன்ஸனே நாவலின் கதாபாத்திரமாகவும் வடிக்கப் பட்டிருத்த ரஸவாதம் எனக்கு வியப்பையும் உற்சாகத்தையும் கொடுத்தது.

இந்த இழையில் எனக்குள்ளும் ஒரு ரஸவாத பிரதிபலிப்பு நிகழ்ந்தது. இதனால் சிறு வயதில் இருந்தே முழுக்கத் திறந்த என் இதயத்தால் –- மூளையால் அல்ல – வாழ்க்கையையும் மனிதர்களையும் அலுக்காமல் வாசித்துக் கொண்டே இருந்தேன்.

தெரிந்தோ தெரியாமலோ என் அப்பா என்னுடைய வாசிப்புக்கு களம் உருவாக்கிக் கொடுத்திருந்தார். வாழ்க்கையில் நான் மிக அருகாமையில் பார்த்த முதல் கதா வாசகர் அவர்தானே…

நான் பாளையங்கோட்டை தூய சவேரியார் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரத்தில், என் அப்பா அடிக்கடி பேசிப்பேசி மாய்ந்துபோன தமிழ் எழுத்தாளர் தேவன். நான் தேவனின் தொடர்கதை எதையும் வாசித்ததில்லை. அப்பா தேவனுடைய துப்பறியும் சாம்பு, மிஸ்டர் வேதாந்தம்; ஜஸ்டிஸ் ஜகந்நாதன்; ஸ்ரீமான் சுதர்சனம் போன்ற தொடர்கதைகள் ஒவ்வொன்றையும் பற்றி வரிக்கு வரி என்னிடம் பேசி இருக்கிறார்.

வாழ்க்கையில் ஒழுக்கம், தர்மம், பக்தி போன்றவைகள் ஒவ்வொரு மனிதனாலும் கடைபிடிக்கப் படவேண்டும் என்ற நெறிகளைக் கொண்டவர் என் அப்பா. அந்த நெறிகளில்தான் அவர் கடைசிவரை வாழ்ந்து இறந்தார்.

தேவனின் கதைகள் எல்லாவற்றிலுமே அப்பா போற்றிய நெறிகள் வலியுறுத்தப் பட்டிருந்தன. இறுதியில் அதர்மம் அழிந்து தர்மமே வெல்லும் என்ற நீதியை லட்சிய நோக்குடன் தேவன் அவருடைய கதைகளில் சொல்லி இருந்தார். இதனால் தேவன் என் அப்பாவிற்கு ஒரு மஹா புருஷனாகவே தெரிந்தார். தேவனை அப்பா மிகமிக நேசித்தார்.

தேவன் முருகக் கடவுளின் தீவிர பக்தர். என் அப்பாவும் பெரிய முருக பக்தர். நினைத்தால் எங்களை எல்லாம் திருச்செந்தூருக்கு அழைத்துப் போய்விடுவர். திருச்செந்தூர் எங்கள் ஊரிலிருந்து ரொம்பப் பக்கம். ஒரு மணிநேர பஸ் பயணம்தான்.

நாழிக் கிணற்றில் குளித்துவிட்டு, கோயிலில் முருகனை வழிபட்டுவிட்டு நாங்கள் கடற்கரை மணலில் போய் மணல்களை அளைந்தபடி ரொம்ப நேரம் அமர்ந்திருப்போம். அந்தச் சூழ்நிலை மிகவும் ரம்மியமாக இருக்கும்.

கோயில்களும், கோயில்களைச் சார்ந்த மலைகள், கடல்கள், அழகழகான குளங்கள், நதிகள்… மனித நாகரீகத்தில் வேறு எந்த மண்ணிலும் பார்க்க முடியாத இணையில்லாத இந்தியக் கலாச்சார வடிவங்கள் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

கோயில்களில் மயில் உண்டு, பசுக்கள் உண்டு, யானைகளும் உண்டு. கோயிலுக்கு ஒரு மரம் உண்டு. ஜடப் பொருளோ, உயிர் ததும்பும் இனமோ – அனைத்திலும் பொதிந்திருக்கும் உண்மை ஒன்றே என்ற மெய்ப் பொருளின் பிரதிமைகள்தான் இவை என்ற தரிசனம் இன்றுவரை பகுத்தறிவுவாதிகளின் பார்வைக்கு கிட்டாததாகவே இருக்கிறது.

மண்ணையும், மலையையும் நதிப் பிரயாகைகளையும் வணங்கி மாண்பு தந்தது, இந்திய சமுதாயம் மட்டும்தான். இல்லையா?

ஒருநாள் அப்பா திருச்செந்தூருக்கு என்னை மட்டும் அழைத்துப் போயிருந்தார். சில நேரங்களில் இந்த மாதிரி அவர் செய்வதுண்டு. அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.

வழக்கம் போல முதலில் நாழிக் கிணறு சென்று குளித்தோம். பிறகு கோயிலுக்குப் போய் முருகனை வழிபட்டோம். பின் எப்போதும் போல கடற்கரையில் அமர்ந்தோம். ஆரவாரமின்றி அன்று கடல் அமைதியாகக் காணப்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு அப்பா திடீரென்று, “முருகன்கிட்ட ஆனந்த விகடன் தேவனுக்கு சீக்கிரமா ஒரு பிள்ளை பாக்கியத்தைக் குடுன்னு சொல்லி வேண்டிட்டு இருக்கேன்…” அப்பாவிடம் இருந்து திடீரென்று இப்படி ஒரு வார்த்தையை சற்றும் நான் எதிர் பார்க்கவில்லை.

அவருடைய வார்த்தைகள் என் மனதை என்னவோ செய்தது. ஏனோ எனக்கு அழுகை வந்து விட்டது. அப்பா கருணையுடன் என் முதுகைத் தடவித் தந்தார். தேவனுக்கு குழந்தைகள் கிடையாது. அந்தத் துயரத்தை தன் ஒவ்வொரு தொடர்கதையிலும் ஏதேனும் ஒரு கதா பாத்திரத்தின் மூலம் தேவன் வெளிப்படுத்தி இருக்கிறார் என்று அப்பா எனக்கு ஏற்கனவே சொல்லி இருக்கிறார்.

முதல் மனைவி இறந்தபின் குழந்தைப் பாக்கியம் வேண்டும் என்பதற்காகவே தேவன் மறுபடியும் ஒரு கல்யாணம் செய்து கொண்டார். அந்தத் திருமணத்திலும் அவருக்கு குழந்தைப் பாக்கியம் கிட்டவில்லை. அந்த ஏக்கத்தை வடித்துக் கொள்வதற்காகவே ‘ராஜியின் பிள்ளை’ என்ற படைப்பை எழுதி, அதன் மூலம் மானசீகமாய் மகனைப் பெற்று கற்பனையில் சந்தோஷமாக வாழ்ந்து பார்த்துக் கொண்டார். அந்த மானசீக மகிழ்ச்சியிலே தேவனின் வாழ்க்கை சொற்ப ஆயுளில் முடிவுக்கு வந்து விட்டது. அவர் இறக்கும்போது அவருக்கு 44 வயதுதான்.

தேவனின் கதைகள் என் அப்பாவை மிகவும் ஈர்த்திருந்தன என்பதற்காக, அவரின் கதைகளை நாமும் வாசித்துப் பார்ப்போமே என்ற ஆர்வம் எனக்குள் வந்ததே இல்லை. ஆனால் தேவனுடைய எழுத்துக்களில் இருந்து அப்பா அவருக்கான நெறித்தன்மைகளுக்கான சாரத்தை கிரஹித்துக் கொண்டு, என்னிடம் அவற்றை எல்லாம் முதன்மைப் படுத்தி பேச்சால் அடுக்கிக்கொண்டே வந்தாரே – அந்த மனிதத் தன்மை எனக்கும் அவருக்கும் இடையே நட்பையும் அழுத்தமான அன்னியோன்னியத்தையும் பிரமாதமாக உருவாக்கி இருந்தது.

அந்த நெருக்கமே தேவனை வாசித்துவிட்டது போன்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தி இருந்தது. இதனால் எல்லாம்தான் வாழ்வில் நான் சந்தித்த முதல் கதாவாசகர் என் அப்பாதான் என்று நான் நினைத்துக் கொள்வது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *