சபாபதித் தாத்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 2, 2024
பார்வையிட்டோர்: 649 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சபாபதித் தாத்தா சாகக் கிடந்தார். அவரை சபாபதி தாத்தான்னும் எழுதலாம். எப்படி எழுதினாலும் அவர் சாகத்தானே போறார். வயசு எண்பதுக்கு மேலே ஆயிடிச்சு. தன்னோட வாழ்நாளில் தான் இது வரை ஏன் பிறந்தோம் என அவர் வருத்தப்பட்டதில்லை. அதனால் ஏன் சாகப் போகிறோங்கிற வருத்தமும் அவருக்கில்லை. அவருக்கே வருத்தம் இல்லாததால் வீட்டில் உள்ளவர்களின் துணை வருத்தங்கள் தேவைப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் வீடே ஒரு வித திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. சொந்தமெல்லாம் ஒன்று கூடியதால் வந்தக் கோலம். தாத்தாவுக்கு பிள்ளைகளும் பேரன் பேத்திகளும் நிறைய.

அவரோட பேத்திகளில் ஒருவளான சியாமளாவும் அவளோட புருஷன் சேதனனும் வந்த போது நிறைந்த வரவேற்பு. “கூட்டம் ரொம்ப அதிகமா தெரியுதே! பேசாம ஒரு மண்டபம் பிடிச்சிருவோமா சியா?”ன்னு கிசு கிசுப்பா கேட்ட சேதனன் காலிலே மிதி வாங்கினான். “உன் லூசுத்தனத்தெல்லாம் ஃபேஸ்புக்கோட வச்சுக்கோ”.

தாத்தா யார் கிட்டவும் ரொம்ப ஒட்ட மாட்டார், ஆனா சேதனனை மட்டும் கூப்பிட்டு வச்சு ரொம்ப பேசுவார். வீட்டில் எல்லாருமே ஆச்சரியப்படுற விஷயம் இது. சேதனனோட முகராசியே அப்படித்தான். வேலைக்கு சேர்ந்து ஒரு வாரத்திலேயே இவன் வேலைக்கு லாயக்கு இல்லைன்னு அவன் அலுவலகத்துக்கு தெரிஞ்சு போச்சு, இருந்தும் நல்ல சம்பளமும் ஒரு இண்டர்நெட் கனெக்ஷனும் கொடுத்து நல்லபடியா வச்சிருக்கிறாங்க. சியாமளா அறிமுகம் ஆனதும் அலுவலகத்தில் தான். ப்ளாக்கில் அபத்தமா எழுதுவதே தன்னோட வேலையா இருந்தவன் இப்படி ஒண்ணு எழுதினான்.

வன்புணர்வு என ஒரு வழக்கு அவன் மேல் -இல்லை, மென்புணர்வு அது என மறுத்தான் அவன்.

இதென்ன நுண்புணர்வு என திகைத்த மக்கள் கண்புணர்வு கொண்டனர்.

இதைப் படித்த சியாமளாவுக்கு வந்த சந்தேகம்தான் அவர்களுக்குள்ளே அறிமுகம் ஏற்படுத்தியது.

“புணர்வுன்னா என்னதுங்க?”

“?”

“இல்ல. நான் தமிழ் மீடியத்துலயே படிச்சு வந்துட்டேன். அதான் புரியலை.”

“அன்புணர்வு தெரியுமில்ல உங்களுக்கு? திருவள்ளுவர் கூட நிறைய அது பத்தி நெறைய எழுதிருக்கார். அதத்தான் இப்போ சுருக்கமாச் சொல்றோம்.” எப்படியோ சமாளிச்சிட்டான்.

இப்படி ஒரு அப்பாவியைத் தான் கல்யாணம் பண்ணனும்னு அன்னைக்கே முடிவும் பண்ணிட்டான்.

அவனோட சுபாவம் சியாமளா வீட்டில எல்லாருக்குமே ரொம்பப் பிடிச்சுப் போச்சு. தாத்தா மட்டும் மற்றவர்களிடம் போலவே அவனிடமும் பட்டும்படாமல் இருந்தார். சேதனன் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை. அவன் பாட்டுக்கு தாத்தா ரூமுக்கு போய் உட்கார்ந்து டீவி பார்ப்பான். அப்படி ஒரு முறை பார்த்த மனோகரா படம்தான் தாத்தாவையும் அவனையும் நெருக்கமா ஆக்கிச்சு. டி.ஆர். ராஜகுமாரியின் வஞ்சனையைப் பார்த்த சேதனன் தன்னை மறந்து கமெண்ட் அடித்தான்.

“இந்த ஒரு பார்வையே போதும். என்னைய இப்படிப் பாத்து தாத்தாவ கொல்லுன்னு சொன்னா, கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேன்”.

அன்றையிலிருந்து தாத்தாவும் சேதனனும் ரொம்ப அந்நியோன்யம். அவன் வந்தாலே ரெண்டு பேருக்கும் சேர்த்து தின்பண்டங்களும் காப்பியும் தாத்தா ரூமுக்குப் போயிரும். சியாமளாவுக்கு தாத்தா தன் புருஷன் கூட மட்டும் தான் பேசுறார்ங்கிறதுல ரொம்பவே பெருமை.

தாத்தா சாகப்போறது சேதனனுக்கு ரொம்பவே துக்கமான விஷயம் தான், ஆனால் அவன் இது போன்ற உணர்வுகளை வெளியே காட்டிக் கொள்வதில்லை. தன் உணர்வு இல்லாமல் ரொம்பவே தளர்ந்து கிடந்தார் தாத்தா. மருத்துவரின் கணக்குப்படி நேத்தே போயிருக்க வேண்டியது, இருக்கவா போகவான்னு இன்னும் ஊசலாடிக்கிட்டுருந்தார். வீட்டில உள்ள பெரியங்க சில பேர் வீட்டுச்சுவரை கொஞ்சம் சுரண்டி மண் எடுத்து பால்ல கரைச்சு தாத்தா வாயில ஊத்தினாங்க. சேதனனுக்குப் புரியலை, என்ன விஷயம்னு கேட்டான்.

“ஏதாவது ஒரு ஆசை பிடிச்சு உயிரை நிப்பாட்டியிருக்கும். இந்த வீடு அவர் ஆசையா கட்டினது இல்லையா, அந்த மண்ண கொஞ்சம் குடுத்தா நிம்மதியா போயிருவார்னு ஒரு நம்பிக்கை”.

கொஞ்ச நேரம் கழிச்சு தாத்தாவுக்கு பிடிச்ச திண்பண்டம் எல்லாத்தையும் ஒரு கலவையா பால்ல கரைச்சு அதையும் தாத்தா வாயில ஊத்தினாங்க. இதையெல்லம் பார்த்துகிட்டேயிருந்த சேதனன் வெளியே போயிட்டு தானும் ஒரு கிண்ணத்தில் பாலோட வந்து தாத்தா வாயில ஊத்தினான். ஊத்தும்போதே தாத்தா முகம் கொஞ்சம் அசைவு கொடுத்து அப்படியே அடங்கிருச்சு. ஏதோ திருப்தி தெரிஞ்சது அவர் முகத்தில.

ஊருக்குத் திரும்பினதும் சியாமளா கேட்டாள் “அதெப்படி நீங்க பால் கொடுத்ததும் தாத்தா செத்துப் போனார்?”. “நான் அவருக்குப் பிடிச்ச பேரன்ல! அதனால இருக்கும்” ன்னான். தன் சட்டைப் பையில் இருந்த ஒரு பழைய வாரப்பத்திரிகையின் பக்கத்தை எடுத்துப் பார்த்தான். இன்னும் கொஞ்சம் ஈரம் மிச்சம் இருந்தது.

– சிறுநனி சிறுகதைத் தொகுப்பு, ஜூலை 2014, வெளியீடு: Freetamilebooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *