சஞ்சீவினி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 2, 2024
பார்வையிட்டோர்: 280 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

வெளியிலும் பெரிய மழை பெய்து அப்பொழுதுதான் ஓய்ந்திருந்தது. வீட்டிற்குள்ளும் பலமான விவாதம் ஏற்பட்டு ஒருவர்க்கு ஒருவர் இரைந்து பேசிக்கொண்டு அப்பொழுதுதான் ஓய்ந்திருந்தார்கள். விளையாட்டு வினை யாய்விட்டது. தன் கணவனைத் தன் தமையன்மார்கள் எல்லைமீறிப் பரிகாசம் செய்கிறார்கள்; ‘அவர் தங்களைப்போலப் படிக்காதவர் என்பதற்காக எவ்வளவு தூரம் பரிகாசம் செய்வது? அப்படிச் செய்து பிரயோசனந்தான் என்ன? இதில் என்னைத் துன்புறுத்துவதுதான் இவர்களுடைய நோக்கம் என்று விபரீதமான ஓர் எண்ணம் தோன்றிவிட்டது சஞ்சீவினிக்கு. அவள் தன் பிறந்தகத்தை விட்டுக் கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து ஒற்றைக்காலால் நின்றாள். “இனி ஒரு க்ஷண மாவது இங்கே இருக்கமாட்டேன்” என்றாள். அவளுடைய கணவர் மல்லிநாதருக்கும் அதுதான் சரியென்று பட்டது. 

“நாளே சரியாயில்லை” என்றார்கள் தமையன்மார்கள். ‘சரியாயிருக்கவேண்டாம்” என்றாள் சஞ்சீவினி. 

“மழையில் பிரயாணம் செய்வது சுலபம் அல்ல ” என்றார்கள் மதனிகள். 

“எனக்கு எல்லாம் சுபந்தான்” என்று ஆத்திரப்பட்டாள் அவள். 

தம்பதிகள் வண்டியில் ஏற் வாசலுக்கு வந்தார்கள். “சஞ்சீவினி ரொம்பச் சமத்தாய்விட்டாள் என்றான் மூத்த தமையன். 

முகத்தைத் திருப்பிக்கொண்டு, “நான் வருகிறேன்” என்று  சஞ்சீவினி தன் மதனிகளிடம் சொல்லிக்கொண்டாள். மல்லிநாதர் சொல்லிக்கொண்டதை மைத்துனர்கள் கவனிக்கவேயில்லை. வண்டியில் ஏறும்போது, மணமக்கள் தலையில் அக்ஷதை விழுவதைப் போலச் சிறு தூற்றல்கள் விழுந்தன, அவர்கள் தலையில். இப்படித் தூற்றலில், ஏன்னா ” என்று மதனிகள் இழுத்தபொழுது மைத்துனர்கள் முறைத்தார்கள். எப்படியும் பிரயாணம் நிற்கவில்லை.  

வண்டி போய்க்கொண்டிருக்கிறது. சஞ்சீவினி ஏதோ யோசித்துக்கொண்டிருந்தாள். மல்லிநாதர் ஏதாவது பேசலா மென்று ஆரம்பிப்பார். அவள் எங்கேயோ கவனமாக இருப்பதைப் பார்த்துவிட்டுப் பேசாமல் இருந்துவிடுவார். 


சஞ்சீவினி ராமநாத தீர்த்தர் என்ற மகா பண்டிதருடைய பெண், இன்று வரையில், அதாவது தன் பதினெட்டாவது வயசு வரையில், தந்தை வீட்டிலேயே இருந்தவள். தமையன்மார்களும் வெளியிலிருந்து வந்த வித்தியார்த்திகளும் தன் தகப்பனாரிடம் பாடம் கேட்கும்போதெல்லாம் அவளும் கூடவேதான் இருப்பாள். தாயில்லாக் குழந்தையான அவளிடத்தில் தீர்த்தர் உயிராயிருந்தார். தமையன்மார்களின் பத்தினிகள் குடும்பப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருந்தார்கள். அவளுக்கு என்ன வேலை இருக்கப் போகிறது? சதா ஸர்வகாலமும் இலக்கிய இலக்கண சர்ச்சையிலேயே கழித்துவந்தாள். 

மல்லிநாதர் பக்கத்து ஊர்தான். பாகவத சிம்மம் என்று பெயர் பெற்ற பிரகலாத பட்டரின் ஏக புத்திரர் அவர். அதுவும் பட்டருக்கு விருத்தாப்ய தசையில் பிறந்த குழந்தை. அதி பால்யத்தில் தாயை இழந்த குலவிளக்கினிடத்தில் பட்டர் அதிகமான பிரியம் வைத்துச் செல்லம் கொடுத்தார் என்றால் யாரைக் குறை கூறுவது? பிரசித்திபெற்ற சமகாலப் பண்டிதர்கள் என்ற முறையில் பட்டரும் தீர்த்தரும் சம்பந்தம் செய்துகொண்டனர். எல்லை கடந்த அவர்களுடைய சிநேகம் மல்லிநாதருடைய படிப் பில்லாத்தன்மையை மறைத்துவிட்டது. தம் மக்களைக் கிருகஸ் தர்களாகப் பார்ப்பதையே லக்ஷ்யமாகக் கொண்டு பிறந்தவர்கள் போல் அது கைகூடிய உடனே இறந்துவிட்டார்கள் இருவரும். மாமனார் வீட்டில் இருந்துவந்தார் மல்லிநாதர். தாம் படிக்காதவர் என்பதை அவர்கள் ஒரு க்ஷணமாவது மறக்காமல் ஏதாவது கிண்டல் செய்துகொண்டே இருந்தது அவருக்குத் தெரியாமற் போகவில்லை. தம் ஊரில் சொத்திருக்கிறது, வீடிருக்கிறது, அவளும் சம்மதித்துக் கிளம்பும்போது இங்கென்ன வேலை என்று நினைத்துக் கிளம்பினார். வரப்போகும் புதுக் குடித்தனத்தைப் பற்றி அவர் யோசித்துக் கொண்டிருந்தார், உருப்படியாய் ஒன்றும் புரியாமல். 

சிறிது தூரம் போன பிறகு வண்டிக்காரக் கிழவன் யோசித்தான். மாட்டை அதட்டி அதட்டி அவனுக்கும் வாய் வலிக்க ஆரம்பித்தது. சின்னஞ் சிறிசுகள் ஊருக்குப் போகும் போது எப்படி உத்ஸாகமாய் இருப்பார்கள் என்று அவனுக்கு நன்கு தெரியும். வண்டிக்குள்ளிருந்து வண்டிக்காரன் வரைக்கும் எட்டி,ஒரே சிரிப்பாய் இருக்கும் வழிமுழுதும். கிழவன் என்ற உரிமையில் அதிகமாய்க்கூடச் சிரிக்கச் சிரிக்கப் பேசுவதுண்டு அவன். இதெல்லாம் ஞாபகம் வந்ததும் மெதுவாய் உள்ளே திரும்பிப் பார்த்தான். கொஞ்சம் விலகியே பேசாமல் உட்கார்ந் திருந்தார்கள் இளந் தம்பதிகள். 

“ஐயா, மாப்பிள்ளை சாமி, கொஞ்சம் உள்ளே வாங்க; முன் பாரம் வேணும் என்றான் சாதாரணமாய்; “அம்மா நீங்க நகர வேண்டாம்” என்றான் சிரித்துக்கொண்டு. 

சிரிக்காமல் இருக்க முடியவில்லை சஞ்சீவினிக்கு. 

“ஏ, அப்பா! ரொம்பப் புதிசாயிருக்கே நீங்க விளையாடறது கண்ணாமூச்சிமாதிரி பேசாமூச்சியாம்மா இது? ? போவுது, கொஞ்சம் வெத்திலை பாக்குக் கொடுங்களேன்” என்று ஒருக்களித்து உட்கார்ந்துகொண்டு, கயிற்றைக் காலில் போட்டுக் கொண்டான் கிழவன். 

தன் கையில் சுருட்டிக் கசக்கி வைத்துக்கொண்டிருந்ததை அப்படியே அவனிடம் கொடுத்தாள் சஞ்சீவினி. 

“வெத்தலையே இவ்வளவு சுடுதே” என்றான் கிழவன் வெகண்டையாய். 

இந்தத் தடவை சத்தம்போட்டே சிரித்தாள் சஞ்சீவினி. மல்லிநாதருக்கு மகா சந்தோஷம். “அம்மா கொளந்தே, 
அவருக்கும் குடேன். சாமி வெத்தலை போடுங்க” என்று பொக்கை வாயால் அழுத்தமாய்ச் சிரித்தான் அவன். 

தாம்பூலம் தரித்துக்கொண்டார்கள் இருவரும். “எங்கே சாமீ, நல்லாச் செவந்திருக்கே; எங்கம்மாவுக்கு அதிருஷ்டந்தான்; பிரியமா வெச்சிப்பீங்க” என்றான் கிழவன். 

இருபக்கமும் பசுமை. எதிரிலும் பசுமை. நேரே செல்லும் வண்டி பசுமையில் முட்டிக்கொண்டு நிற்கவேண்டியிருக்குமோ என்று தோன்றுகிறது பாதை. கிழவன் பறவைகளைக் காட்டிக் காட்டி அவற்றின் குலகோத்திரங்களையும் குண விசேஷங்களையும் வர்ணித்துக்கொண்டு வந்தான். கொச்சைக் கவிதையில் அவற்றின் சகுனங்களை வேறு சொன்னான் அவன். மழை இல்லை. மோடம் கவிந்திருந்தது. கிழக்கு நோக்கிப் போகும் பிரயாணம் எதிர் வெயிலின் தாபம் இல்லாமல் சுகமாயிருந்தது. மூவரும் வெளியே பார்த்துக்கொண்டிருந்தார்கள். சவுக்க காலக் கீர்த்தனைபோல், சுவட்டில் மந்தகதியில் போய்க்கொண்டிருந்தது வண்டி, “இதென்ன கிழக்கில் சூர்யாஸ்தமனம்?” என்று வியப்புடன் கேட்டாள் சஞ்சீவினி. அந்த இடம் உண்மையில் அப்படியேதான் இருந்தது. நெருங்கி வளர்ந்திருந்த புரச மரங்களில் அடர்ந்து கொத்துக் கொத்தாய்ப் பூத்திருந்தன சிவப்புப் பூக்கள். தூரப் பார்வைக்கு இருபுறமும் கூடுவதுபோல் தோன்றிய பசுமைக் கிடையில் மிளிரும் அந்தச் சிவப்பு, அந்தி என்ற பிரமையை வளர்த்தது. 

மூவரும் அதையேதான் பார்த்தார்கள். தெரிந்தோ தெரியாமலோ, மல்லிநாதரும் அதைக் கூர்ந்தே கவனித்தார். சஞ்சீவினி இயற்கையின் வசப்பட்டு அதன் அழகில் மோகித் திருந்தாள். விரிந்த கண்களுடன் வண்டிக்காரக் கிழவனும் பார்த்தான்; ஆனால் கேலியாய்ச் சிரித்துக்கொண்டே பார்த்தான். சஞ்சீவினிக்கு அவன் சிரிப்பது புரியவில்லை. கிழவன் சொன்னான்: “பகட்டுச் சேப்பல்ல இது; கொரட்டாம் பழம் நல்ல மலையாளத்து அம்மானைக் கணக்கா, அப்படியே உரிக்காமே விளுங்கிடணும் போலத்தான் இருக்கும். பறிச்சாலே நாறும்; தோலை உரிச்சால் கொடலைப்புடுங்கும்; அதைப்போய் இம்புட்டு அளகாப் படைச் சிருக்கான் ஆண்டவன். இதே கதைதான் புரசம்பூவுக்கும். வெறும் மண்ணுல்ல இது; பார்க்க அளகாத்தான் இருக்கும். எல்லாருக்கும் பூவுன்னா வாசனையின்னுட்டுல்ல நெனைப்பு வரும். இதுலே என்னா இருக்கு? படிப்பு அறிவுன்னு இதெல்லாம் இன்னதுன்னே தெரியாத வெத்தாளு மாதிரி அம்மா இது.”நிறுத்த மனமில்லா தவன்போல நிறுத்தினான் கிழவன். 

மல்லிநாதர் சஞ்சீவினி இருவருக்குமே சுருக்கென்றது. ஒரு கணம் இருவரும் ஸ்தம்பித்துப்போய்ப் பார்த்துக்கொண்டார்கள். சஞ்சீவினி குனிந்துகொண்டாள். மல்லிநாதர் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். கிழவன் இன்னும் புரசங்காட்டை விட்டுத் தன் பார்வை கவனம் இரண்டையும் திருப்பவில்லை. * ம்ச என்று ஒரு தடவை சிரித்துவிட்டு, “இதைப் பார்க்கும் போதெல்லாம் சிரிக்காமே இருக்க முடியறதேயில்லை கொளந்தே என்று சொல்லிக்கொண்டே திரும்பினான். 

தலை நிமிர்ந்து ஏக்கமாய் அவனைப் பார்த்தாள் சஞ்சீவினி. கலக்கம் புரண்டது அவள் கண்களில். “எங்கேயோ மெதுவாய் அடங்கிக் கிடந்த வேதனையைக் கிளறிவிட்டாயே” என்று சிணுங்கின அவளுடைய இமை மேடுகள். அவள் சஞ்சலப்பட ஆரம்பித்தாள். இஷ்டமே இல்லை; என்னவோ உறுத்தியதுபோல் இருந்ததால் கண்ணை மூடியவள் திறந்தபோது தானாய்ப் பெருக ஆரம்பித்தது உணர்ச்சி. அதி வேகமாய், தான் முன் தான் முன்னென்று பழைய ஞாபகங்கள் குவிய ஆரம்பித்தன, அவள் மனத்தில். 

மல்லிநாதருக்கும் ஒன்றும் புரியாமல் இல்லை. ‘என்ன செய்வது’ என்று கவலைப்படும் அளவுக்கு அவர் இதுவரை யோசித்ததில்லை; அவ்வளவுதான். ஆனால் இப்பொழுது அவர் தீர்மானத்திற்கே வந்துவிட்டார். “சஞ்சீவினி,நீ நீ என்ன செய்யச் சொல் கிறாயோ செய்கிறேன் ; நீ அழுவது எனக்கு என்னவோ போல -?” கெஞ்சும் முறையில் அவள் முகத்தைத் தூக்கினார் அவர். அவருடைய மணிக்கட்டு நனைந்தது. அப்பொழுதுதான் வாழ்க் கையிலேயே முதல்முதலாய் அவருடைய கண்களில் ஜலம் பெருகிற்று. “சஞ்சீ” என்று ஆரம்பித்தார். ஆனால் ஒன்றும் பேச முடியவில்லை. முகத்தைப் பிடித்துக்கொண்டிருந்த அவருடைய கை நடுங்கிற்று. 

சஞ்சீவினி கண் திறக்கவில்லை. முகம் துவள ஆரம்பித்தது. நடுங்கும் விரல்களால் இமையைத் திறக்க முயன்றார் மல்லிநாதர். 

வண்டியை நிறுத்திக் கீழே குதித்துப் பின்புறம் வந்து நின்ற கிழவன், “என்னாங்க, என்னாங்க என்றதற்கு இருவரும் பதில் சொல்லவில்லை. இரைந்து, ‘சாமி, கொளந்தே, கொளந்தே, அம்மா, சாமி” என்றான் கிழவன். ”ஊ-ம்” என்று திரும்பிக் கொண்டே உதடுகளை நனைத்துக்கொண்டார் மல்லிநாதர். சஞ்சீவினியும் மெதுவாய்க் கண் விழித்தாள். பிழிந்த துணிபோல் பாதி ஈரத்தில் முறுக்கிக்கொண்டிருந்தன அவளுடைய கண்கள். தன் தலையை அப்படியும் இப்படியும் அசைத்துக் கைகளைக் கூப்பிக்கொண்டு இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் கிழவன். “கொளந்தே, சாமீ, சாதாரணமா அநுபவத்திலே பேசிக்கிற விஷயமின்னுட்டு, வேடிக்கையாச் சொன்னேனுங்க ; வெத்தியா சமாயிருந்தா மன்னிக்கணும்; வெவகாரத்துக்கு, போது போற துக்கு, அநுபவத்துலே, அறிவாலே தெரிஞ்சுக்கிட்டத்தை முடிக்க முடியவில்லை கிழவனுக்கு. குரல் நடுங்கிற்று. தான் ஒரு நோக்கமும் வைத்துப் பேசவில்லை என்பதை வெளியிடப் பாஷை கிடைக்காமல் குழறினான் அவன். தம்பதிகளை அழவிட்டதைத் தான் செய்த பெரிய பாபமென்று நினைத்துக்கொண்டு அவன் தவியாய்த் தவித்தான். 

“வேறென்ன சொல்வது? அதெல்லாம் உன்னை ஒன்றும் சொல்வதற்கில்லை. சொல்லமாட்டோம்” என்று அழுத்தமாய்ச் சொன்னார் மல்லிநாதர். 

“வண்டி ஏன் நிற்கிறது?” என்று கேட்டாள் சஞ்சீவினி. “ச.ஞ்… சீ…” நிறுத்தி நிதானமாய்க் கூப்பிட்டார் மல்லி நாதர். 

“ஒன்றுமே இல்லை” என்று மெதுவாய்ச் சிரித்துக்கொண்டு உதடுகளை வருடிக்கொண்டாள் சஞ்சீவினி. 

“என்ன, ஒன்றுமே இல்லையே? மெதுவாய்ப் பல் வெளியே தெரிந்தால் அதற்குச் சிரிப்பென்றா பெயர்? நான் ஒரு…” 

“காரியமும் செய்யவேண்டியதில்லை.- கிழவா, விடேன் ஏன் நிற்கிறாய்?” சமாளித்துக் கொள்வதாய் எண்ணம் சஞ்சீவினிக்கு. 

மல்லிநாதர் ஆரம்பித்தார்:”நான் ஒரு பிரதிக்ஞை செய்யப் செய்துவிட்டேன்.” 

“நான் ஒன்றும் தவறு…” அவள் கண் மறுபடியும் கலங்கிற்று; “ஒன்றுமில்லையே” என்று தழுதழுத்துக்கொண்டு கைகளால் கால்களைப் பிடிக்கப்போனாள். 

மல்லிநாதர் அவள் கைகளைப் பிடித்துக்கொண்டார்.குழைந்த கண்களால் கெஞ்சி உருகினாள் சஞ்சீவினி. 

“நீ திரும்பி ஊருக்குப் போ. இன்னும் இரண்டே வருஷங் களில் ஞானத்தைச் சம்பாதித்துக்கொண்டு உன்னை வந்து அழைத்துக் கொள்கிறேன். இது சத்தியம்” என்றார் மல்லிநாதர். அவர் கைகள் சஞ்சீவினியின் கைகளைப் பலமாய் அழுத்தின. அதைவிட அதிக அழுத்தம் தொனித்தது அவர் குரலில். 

மறுத்துப் பயனில்லை என்று நினைத்தாளோ, அல்லது அவளுக்கே அது இஷ்டமாயிருந்ததோ, அவளுடைய கண்கள் ஒப்புக்கொண்டன அந்தப் பிரதிக்ஞையை. 

”ஊருக்கு நீங்களும் வந்துவிட்டு…” என்று இழுத்தான் கிழவன். வேண்டாமென்றார் மல்லிநாதர். வண்டியைக் கிழவன் திருப்பினான். மூவருடைய மனத்திலும் மிக அழகிய தெளிவு ஒன்று ஏற்பட்டு மூவருடைய முகமும் இயல்பில் பொலிந்தன. 

“அவர்களிடம் எப்படிச் சொல்ல வேண்டுமோ, அப்படிச் சொல்’ என்று கிழவனுக்குச் சொல்லிவிட்டு, “நான் வருகிறேன் சஞ்சீவினி ; கவலைப்படாதே என்று கிளம்பினார் மல்லிநாதர். கோதாவரிக் கரையில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பண்டிதரிடம் வந்துசேர்ந்தார். 

ஆரம்பத்தில் பெண்கள் அந்த இடத்தைத் தாண்டும் பாழுது, சிரிப்புத் தாங்க முடியாமல் விரல்களால் உதட்டைப் பொத்திக்கொண்டு, குலுங்கி நடந்துசென்று, பத்தடிக்கப்புறம் குடங்களை இறக்கிவைத்து மறுபடியும் அங்கிருந்து கிளம்புவது வழக்கம். 

“இந்தப் பிள்ளையாண்டான் பொறுமையைப் பார்த்தால் கழுதைகூட..” என்பாள் ஒருத்தி. 

“பச்சைக் குழந்தையடி, இப்பத்தான் அரிக்குழி நோண்டறது. எல்லாப் பல்லும் விழுவதற்குள் சப்தமஞ்சரியை முடித்து விடுவான்!” என்பாள் மற்றொருத்தி. 

இன்னொருத்தி,”இதுக்கும் ஒத்தி கழுத்தை நீட்டினாளே! என்று அவருக்கு வாய்த்த அந்த அபாக்கியவதியைப் பற்றிக் கவலைப்படுவாள். தேர்ச் சீலைபோலச் சதா நெளிந்துகொண்டே இருக்கும் ஒருத்தி, அவனுடைய தாயின்மேல் அனுதாபத்தை அபிஷேகம் செய்வாள், “பெத்தாளே!” என்று. 

இதற்குள் ஒரு துடுக்குக்காரி,”ஆள் நல்ல…” என்று கிண்ட லாய்ச் சிரித்துப் பக்கவாட்டில் முழங்கைகளைத் தூக்குவாள். ஆகப்போக, ஒரு குட்டிக் கதம்ப நாடகம் ஆடிவிட்டுத்தான் துறைக்குப் போவார்கள் பெண்கள். வரும்போதும் பழைய நாடகத்தையே மெளனமாய் அபிநயத்தோடு சுருக்கமாகவாவது நடத்திவிட்டுத்தான் நகருவார்கள். 

இவ்வளவும் அவருக்குத் தெரிய வழியேயில்லை. தமக் கெதிரில் இருக்கும் மணலில் கையைத் தேய்த்து வர்ணமாலையை எழுதிக்கொண்டே இருப்பார் அழித்தழித்து. ஜீவன் முக்தனைப் போல, அவருக்குள்ளே புறத்தில், செய்கையில் பேச்சில், பார்வை யில் எங்கும் ஒன்றே ஒன்று – அதுதான் எழுத்துக்கள். 

கிருகஸ்தனாய் விட்ட இருபத்தைந்து வயசு யுவ புருஷன், அக்ஷராப்பியாசம் ஆரம்பிக்கும் நிலையில் தம்மிடம் வந்தால் யார்தாம் ஆச்சரியப்படாமல் இருக்கமுடியும்! நம்பு வதற்கே முடியாமல் இருந்தது கிருஷ்ண பண்டிதருக்கு. உண்மை தானா இந்தச் சிரத்தை என்பதைப் பரீட்சிக்கவே அவனைத் தன் வீட்டுவாசலில், ஊர்ப் பெண்களெல்லாம் நதிக்குச் செல்லும் ஒரே வழியில் உள்ள தம் வீட்டு வாசலில், மணலைக்கொட்டி எழுதச் சொல்லி, யுவாவைச் சிசுவாக்கியிருந்தார். சாப்பிடும் போதுகூட எழுத்துக்களையே தியானிக்கும் அந்த அகால மாணவர் இலையில், “க்வ,த்ய” என்று எழுதிக்கொண்டிருப்பார். அவர் ஏன் பெண்களை நிமிர்ந்து பார்க்கப் போகிறார்? இரண்டாவது மாதத்திலேயே சிறு காவியங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டார். கேலி செய்த பெண்கள் ஆச்சரியப்பட்டு மரியாதைகூடக் காட்டத் தொடங்கினர். இரவும் பகலும் படித்துவந்தார் அவர். 

கிருஷ்ண பண்டிதருடைய மனைவி அவனிடமிருந்து சுச் ருஷைகளை எதிர்பார்க்காததே பெரிய ஆச்சரியம் என்பது ஊரார் கருத்து. ஆனால்,”அவள் இவனிடம் புத்திர வாஞ்சை வைத்திருக்கிறாள். இவனுக்கு அறிவு ஏற்ஏற, இவனை விட்டுப் பிரிய வேண்டுமே என்று கவலைப்படுகிறாள் ” என்கிறார் பண்டிதர். 

மல்லிநாதர் இப்பொழுது காவிய நாடகங்களைப் படித்து வருகிறார். நடுப்புதரில் மஞ்சளாய்த் தலை நீட்டும் தாழைபோல அவர் மனத்திற்குள் ஒரு மலர்ச்சி தோன்றியிருக்கிறது. ஹிருதயத்தை அறிவதில் முனைந்து, சிந்தனை செய்யும் நிலையில் இருந்தார். இப்பொழுது, மிகப் பழைய கனவுகள் தேசலாய் அரை குறை உருவத்தில் ஞாபகத்திற்கு வந்து, விளங்காமலேயே மனத்தைச் சிந்தனைப் பாதையில் அழைத்துப் போகுமே சில சமயம், அதுபோலத் தன் மாமனார் வீட்டில் கேட்டதுபோல் உள்ள விஷயங்கள் ஞாபகத்திற்கு வந்தன அவருக்கு. அவை ஒரே தடவை கேட்ட அபூர்வ ராகத்தின் சஞ்சாரத் துணுக்குகள்போல் வாய்விட்டுச் சொல்ல உருவாகாதனவா யிருந்தன. அந்த ராக மூர்ச்சனை மட்டும் ஸ்பஷ்டமாய் ஞாபகம் இருப்பதுபோல், ‘நாம் முழு மூடனாயிருந்தோம்; மாமனார் வீட்டில் யாரும் அதை ஒரு கணமாவது மறக்கவில்லை’ என்பது மாத்திரம் நினைவிருந்தது. அந்த நினைவிலேயே உக்கிரமாக முயன்றுவந்தார் அவர். 

அங்கு, அறுபது நாழிகையும் உத்ஸாகத்தோடு விளையாட்டும் கேலியுமாய் வளைய வந்துகொண்டிருந்த அதே பிறந்தகத்தில், மல்லிநாதரை எதிர்பார்த்துக்கொண்டு, தேய்பிறையின் இரவுகள் போலக் குழம்பிச் சோர்ந்து ஊர்ந்து கொண்டிருந்தாள் சஞ்சீவினி. வியாதியுற்ற குழந்தையை இடுப்பில் தூக்கிக்கொண்ட தாய் போல, தனது ஏக்கம் பிடித்த மனத்தோடு ஒன்றிலும் பாவாமல் என்னவோ இருந்துவந்தாள். 

அவளுடைய விரகம் உலக சரித்திரத்திலேயே புதுமை யானது. சந்திரனையும் சந்தனத்தையும் வெறுத்துக் கரித்துச் சுடும் விரகவேதனையை வர்ணிக்கும் பதினாயிரம் சுலோகம் தெரியும் அவளுக்கு. அவற்றில் எல்லாம் உண்மை என்ன என்பதும் அவள் அறிவாள். அவளுக்கு அந்தப் பாவம் இல்லை. அவளுடைய பருவமும் விரகத்திற்குப் பாத்திரம் ஆகக்கூடாதது அல்ல. அவள் கணவனைக் காணுவதற்குத் துடித்துக் கொண் டிருந்தாள்; விரகத்தால் அல்லவே அல்ல; விசனத்தால். பகீரதப் பிரயத்தனம் என்று சொல்வார்கள், வெறும் பேச்சிற்கு ; உண்மை யிலேயே பகீரப்பிரயத்தனமல்லவா செய்து, ஞான கங்கையைக் கொண்டுவரக் கிளம்பியிருக்கிறார் அவள் கணவர்? அது சாத்திய மாகி வெற்றியோடு திரும்பிவரவேண்டுமே அவர். வெற்றி கிடைக்காவிடில் பிரதிக்ஞைக்குப் பங்கம் வருமே என்று அவள் பயப்பட்டதாயிருந்தால் அது புராணம்; அவர் வெற்றி அடையா விட்டால் இருவர் வாழ்க்கையும் வறண்டுவிடுமே என்பதுதான் அவள் கவலையெல்லாம். அவளுடைய அறிவொளிதான் வழிகாட் டிது.கட்டாயம் வருவாரென்ற நம்பிக்கையில் இருந்து வந்தாள் சஞ்சீவினி. 

இரண்டாவது வருஷம் ஆரம்பித்துச் சில மாதங்களும் கடந்தன. கிருஷ்ண பண்டிதர் கணக்குப்படி, இது ஐந்தாவது வருஷம்; அவ்வளவு வேகத்தில் படித்திருக்கிறார் மல்லிநாதர். பாஷா ஞானம் முதிர்ந்து பின் நயங்களை ஆராய்ந்து அறிந்த அவர், இலக்கணத்தை விரும்பவில்லை என்பதில்லை. பண்டிதரும் லக்கண நூல்களின் போக்கைச் சிறிது காண்பித்துக் கொடுத்து விட்டு அனுப்பத்தான் எண்ணியிருந்தார். மல்லிநாதருக்கும் சிரத்தை குறைந்துவிடவில்லை; ஆனால் சம்பளம் பையில் ஏறிய உடனேயே வீட்டுக்கு ஓடிவிடும் தன் மனத்தைப் பின்பற்றித் தானும் ஓட விரும்பும் உத்தியோகஸ்தனைப்போல, தன் அறிவைச் சஞ்சீவினிக்குக் காட்டி அவள் மனம் பொங்குவதைக் காண வேண்டிப் பறக்கும் மனத்தோடு அவர் ஆவல் கொண்டார். 

இரண்டாவது வருஷ ஆரம்பத்திலிருந்தே சஞ்சீவினிக்கும் தைரியம் குறைய ஆரம்பித்தது. சொந்தத் தேறுதல்கள் போதவில்லை மனத்திற்கு. அடிக்கடித் தைரியம் தேய்ந்து அதன் பிடியிலிருந்து விலகிச் சஞ்சரித்த சிந்தனை, சுருதியிலிருந்து விலகிய சங்கீதம் மாதிரி விரசமாய்க் கொண்டிருந்தது அவளுக்கே. மதனி மார்கள் அடிக்கடித் தேற்றுவார்கள்; தமையன்மார்களும் தேற்றுவார்கள். ஆனாலும் வரவரச் சஞ்சீவினி பலஹீனமடைந்து வந்தாள். எப்பொழுதாவதுதான் அவள், தமையன்களும் வித்தி யார்த்திகளும் இருக்கும் இடத்திற்கு வந்து தனியாய் நிற்பாள். அவர்களுடைய சர்ச்சைகளிலும் கலந்துகொள்வதில்லை. விக்கிரக மில்லாத கர்ப்பக் கிருகம்போல வெறிச்சென்றிருந்தது சர்ச்சைக் கூடம். அவர்களுக்கும் அன்றிலிருந்து இன்றுவரை வேதனை யாய்த்தான் இருந்தது. மல்லிநாதர் எங்கு யாரிடம் படிக்கிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியவில்லை.யாரிடம் படித்தால் தான் என்ன? இனிமேலா அவருக்குப் பாண்டித்தியம் ஏற்படப் போகிறது? “எது எப்படியிருந்தாலும் சஞ்சீவினி இப்படி ஆக வேண்டாம், வருத்தப்படுத்த வேண்டுமென்றா, இவ்வளவு தூரத்திற்கு வருமென்று தெரிந்துகொண்டா, பரிகாசம் செய்தோம்? வெறும் வேடிக்கைக்கு. இவள் பிரமாதப்படுத்திவிட்டாள். இ பொழுது எல்லோரும் புழுங்கிச் சாகிறோம். இப்படித்தான் பரிசீலனை செய்தார்கள், நிலைமையைத் தமையன்கள். “சரி, தாமே வந்து அழைத்துக்கொண்டு போவார்,நாம் என்ன செய்ய லாம்?” என்று தீர்மானித்திருந்தார்கள். அவர்கள் புருஷர்கள். அவர்கள் இயல்பிற்கு அது பொருந்திவிட்டது. மதனிகளுக்குத் தான் பெரிய சுமையாய்க் கனத்தது இந்த விஷயம். நாத்தி என்றில்லாமல் சகோதரியைப்போல நினைத்தே அவர்கள் முன்பும் ரட்சித்தார்கள் சஞ்சீவினியை. ஏன்? தீத்தர் இருக்கும் போது, அவரே இதை வாய்விட்டுச் சொல்லி, தம் மாட்டுப் பெண் களைப் போற்றி யிருக்கிறார். இப்பொழுதும் அவர்கள் இருவரும் பலவந்தம் செய்தாவது சஞ்சீவினிக்கு வேண்டியதைச் செய்து வந்தார்கள்.”உடம்புக்காகாது; பட்டினி கிடக்கக்கூடாது; தலை காயக்கூடாது. என்று இதையெல்லாம் சொல்லலாமே தவிர, தாங்கள் செய்துகொண்டா அவளைப் போஷிக்கமுடியும்? தானாகக் கெடுத்துக்கொண்டு விட்டாள் உடம்பை. 

அவளோடு மதனிகளும் பட்டினி கிடக்கவேண்டி ஏற்பட்டது ஒருநாள். சூரியன் உச்சிக்கு வந்த பிறகுதான், தனக்காக அவர்கள் பட்டினிகிடப்பது தெரிந்தது சஞ்சீவினிக்கு. அன்று, தானே எழுந்து சென்று, சாப்பிடுவதுபோல ஏதோ பாவனை செய்து அவர்களைச் சாப்பிடச் செய்தாள். பிறகு, பலதினங்களாக அந்தப் பக்கமே போகாதவள், சுவடிகள் இருந்த முன்பக்கத்து அறைக்குச் சென்று, ஏதோ புஸ்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந் தாள். கவனம் அதில் செல்லவில்லை. பட்டினி கிடக்கும் நிலைவரைக்குமா போய்விட்டது, தன் அதைரியம்?’ என்று நினைத்துப் பார்த்தாள். அவளுக்கே வெட்கமாய்ப் போய்விட்டது; ஆச்சு, இன்னும் கொஞ்சநாளில் அவர் வந்துவிடப்போகிறார். அதற்குள்…? இந்த நினைவே சற்று ஊக்கிவிட்டது அவளை முனைந்துவிட்டால் மனிதனுக்கு முடியாததென்றா ஒன்று இருக்கிறது அப்பொழுது நாங்கள் இருவரும் ஒரு சோகம் அனுபவித்தோமே வண்டியில், அது சோகநிலை தாண்டி மூர்ச்சைக்கும் அப்பால் போய் மரணமாகவல்லவா ஆய்விட்டிருந் தது? அந்தச் சில விநாடிகள் எங்கள் ஆத்மாவே ஓய்ந்து, அப் படியே மரத்தல்லவா போயிருந்தோம்? பிறகு ஞாபகமாய் வர வில்லையே! மறுபடியும் புதிய உயிரல்லவா பெற்றோம்? அந்தப் புதுப்பிறப்பில் செய்த பிரதிக்ஞை நிறைவேறாமலா போகும்? இந்தச் சமாதானம் துவண்டுபோயிருந்த அவள் ஜீவலதையை நிமிர்த்திற்று. அவள் நினைவும் மெதுவாய்ச் சிலிர்த்து விரிந்து படர ஆரம்பித்தது. 

“அவர் வருவார்; கட்டாயம் ஞானத்தோடு வருவார்; நான் புதிதாய் இப்பொழுதுதான் அவரை, சுயம்வரமாய் மணக்கப் போகிறேன் ; வாஸ்தவந்தான். எனக்கு இப்பொழுது வாசனை ஏது? அவர் வந்த பிறகுதான் நான் மணம் பெறுவேன். சீதை ராமனுடைய கணையாழியைப் பார்த்தபோதே ராமனை அடைந்து விட்டாள் என்கிறார் வால்மீகி. இருக்கட்டுமே; எல்லாம் பழைய ராமன்தானே? எனக்கு அப்படியில்லை.பின் எப்படி? அவரிடமே கேட்டுப் பதில் வாங்கவேண்டும். அசோகவன சர்க்கத்தை யெல்லாம் நிறுத்திப் படிக்கவேண்டும்; நான்தான் படிப்பேன். சீதையைப்பற்றி அவர் என்ன சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அண்ணாவோடு சேர்ந்துகொண்டு முன்பெல்லாம் செய்வதுபோல அவர் வாயைக் கிண்டலாமா?-சீ,சீ, தவிட்டு வியாபாரி தங்கவியாபாரி ஆனபிறகுங்கூட அவனிடம் தவிடு தண்டியதுபோலத் தங்கம் தண்டுவதா? வாயைக் கொடுத்துவிட்டு விழிக்கக்கூடாது. அப்புறம் இப்படி இழைத்து நூற்றுக் கொண்டிருந்தது அவளுடைய மனராட்டை. சற்றே அவள் உதடுகள் விரிந்து மறுபடியும் கூடின. நூற்ற இழையைக் கதிரில் சுற்றுவதுபோல், நினைப்புகளைக் கூட்டி இணைக்கப் பார்த்தாள். 

பக்கத்து வீட்டுக் குழந்தை படித்துக்கொண்டிருந்தான். “ஐந்தில் வளையாதது….. இளமூங்கிலை ….”சிந்தனை இழை விடுபட்டது. மனமும் காரியம் இல்லாமல் சுழன்றது. பழையபடி புது இழை தொடங்கவேண்டும், சிடுக்குகளைப் பிய்த்தெறிந்து விட்டு. குழப்பம் அடங்குவதற்குள் அவள் மனத்தில் சோகமும் வெறுப்பும் சுரந்தன. கல்யாணக் கனவு கலைந்தெழுந்த வயசான கன்னிகைபோல் அவள் மனம் நிராசையால் அயர ஆரம்பித்தது. வாய்விட்டுச் சொல்லமுடியாமல் ஏதோ அதிர்ச்சி ஏற்பட்டது போல் இருந்தது. மார்பு கலகலத்ததுபோல உணர்ந்தாள். உடல் முழுவதும் ஓய்ச்சல் பரவி முழுவதும் வியர்த்தது. தூணைப்  பிடித்துக்கொண்டு தள்ளாடிக்கொண்டே நின்றாள். கால்கள் பூமியில் படுவதுபோலவே தோன்றவில்லை. தேய்த்துக்கொண்டே நடந்து சென்று படுத்துவிட்டாள். அன்றிரவு படுக்கையில் முக்கி முனகி உடம்பை முறித்துக்கொண்டாள் புரண்டு புரண்டு. அருகில் நெருங்கக்கூட முடியாதபடி உடம்பு அனலடித்தது. நாலைந்து நாட்களுக்கு இறங்கவே இல்லை ஜூரம். 

ஜுரம் போல் வந்ததே தவிர, என்னவெல்லாமோ படுத்தி விட்டுக் கடைசியில் வாய் பேசமுடியாமல் செய்துவிட்டது நோய். எவ்வளவோ முயற்சி செய்யாமலா இருப்பார்கள்? ஒன்றும் பயனில்லை. படுத்த படுக்கை, பேச்சில்லை, சைகைகூட மிகச் சிரமப்பட்டு, என்று ஆகிவிட்டாள் சஞ்சீவினி. 

ஊரெல்லையில் வரும்போது சிலர் தம்மை வருத்தமாய்ப் பார்த்ததை அதிகமாய்க் கவனித்துப் புரிந்துகொள்ள முயலவில்லை மல்லிநாதர். சண்டை போட்டுக் கொண்டுபோய்த் திரும்பி வருவ தால் அப்படிப் பார்த்தார்கள் ; அதனால் என்ன?’ என்று நடையை வர வர வேகமாக்கிக்கொண்டு வந்தார். மாமனார் வீட்டை நெருங்கும்போது மூத்த மைத்துனரைச் சந்தித்தார். அவர் ஓடி வந்து தம்மைக் கட்டிக்கொண்டு துக்கப்படும்போது மல்லிநாத ருக்குப் பரந்து போய் விட்டது. “என்ன, என்ன?” என்றார். மைத்துனர் ஒன்றுமே பேசாமல் அவரை இழுத்துக்கொண்டு சஞ்சீவினியின் படுக்கைக்கு அருகில் விட்டார். 

பாய்ந்து சென்று, “ஹா,ஹா,ஹாங்!” என்று அவள் கையை, காலை, முகத்தை, இடுப்பைத் தொட்டு, “சஞ்சீ, சஞ்சீ!” என்று குழந்தைபோல் விசித்தார் மல்லிநாதர். மெல்லக் கண் திறந்தாள் சஞ்சீவினி. தமையன்மார்கள் ஒருபுறம் பெருமூச்சு விட்டார்கள்; மற்றொருபுறம் மதனிகள் கண்ணைத் துடைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். எல்லோரையும் சுற்றிப் பார்த்துவிட்டு, தன் கன்னங்களை மெதுவாய்த் தடவும் மல்லிநாதரைப் பார்த்தாள் அவள். 

பக்கத்தில் துவண்டு கிடக்கும் தன் கைகளை மெல்ல அசைந்து நகர்த்திக்கொண்டே, பஞ்சடைந்த கண்களால் கணவர் முகத்தை ஏற இறங்கப் பார்த்தாள். 

“சஞ்சீ, படித்துவிட்டேன்; சஞ்சீ, நன்றாய்ப் படித்திருக் கிறேனே; இன்னும் என்ன? சந்தோஷமாயிரு; குணமாய்விடும்!” என்று கண்களை மலர்த்திக்கொண்டு தேற்றினார் மல்லிநாதர். 

அவருடைய முகப்பொலிவைப் பார்த்து அவளுடைய முகத்திலும் சோபையின் நிழல் ஒன்று படிந்தது. நெற்றி வியர்த்தது. துடைமேல் ஏற முடியாமல் அவள் கைகள் தவித்ததைப் பார்த்துக்கொண்டிருந்த மூத்த மதனி, அருகில் ஓடி வந்து அவற்றைச் சேர்த்துக் கொடுத்தாள். கணவர் முகத்தைத் தன் கைகளால் தாங்கினாள் சஞ்சீவினி. தம் கைகளால் அவற்று குப் பலம் கொடுத்துக்கொண்டு ஒட்டித் தொய்ந்திருந்த அந்த கைகளில் முகத்தைப் புதைத்துக்கொண்டார் மல்லிநாத சஞ்சீவினியின் மார்பில் போர்த்தியிருந்த போர்வை ஏறி இறங்கிற்று, கொஞ்சம் துரிதமாய். அவர் கண்களிலிருந்து ஜலம் பெருகிற்று. அவர் மூச்சு விடும் வேகத்தில் சஞ்சீவினியின் வகிடு நெளிந்தது. அழகாய்ப் பார்த்துக்கொண்டிருந்த அவளுடைய கண்கள் சொருகிக்கொண்டே மூட ஆரம்பித்தன. மதனிமார் அவள் மார்பைத் தடவினர். தமையன்மார்கள் அவள் மோவாய்க் கட்டையைத் தொட்டார்கள். இதை எல்லாம் கவனிக்காமல் அவளுடைய கைகளையே கண்ணில் இழுத்து இழுத்து ஒத்திக் கொண்டிருந்தார் மல்லிநாதர்.”ஐயோ, சஞ்சி!” என்று மைத்துனர். கள் அலறியதுந்தான் அவர் தம் முகத்தைத் தூக்கினார். கைகளை விட்டார். அவற்றை மார்பில் சேர்த்து வைத்தார்கள் மதனிகள். எல்லோரும் அலறினர். மல்லிநாதர் முக்கி முனகக்கூட வில்லை. வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்; அவ்வளவுதான். 

எல்லாம் ஆயிற்று. மகாவிசனத்தில் ஆழ்ந்திருந்தார் மல்லி நாதர். பம்பையில் ராமர் கதறுவதையும், இந்துமதிக்காக அஜன் பிரலாபித்ததையும் புரிந்துகொள்ள முடியாமல் பாரா யிருந்த நிலையில், அவர் மகாபண்டிதையான சஞ்சீவினியை அடைந்துவிட்டார், அட்சரம் தெரியாத அந்தணன் மகாசாம்ராஜ் யத்தை அடைந்ததைப் போல. மந்திரிகள் ஆலோசனை கூறும்போது அந்தப் பிராமணன் விழிப்பது போலத்தான் அவர் விழித்தார், அவளும் அவள் சகோதரர்களும் காவிய சர்ச்சை செய்யும்போது. அப்பொழுது அவருக்கே தெரியாமல் ஊமைக்காயம் போல் பட்டிருந்த மனப்புண்தான் வண்டியில் உடைந்தது. எங்கோ சென்று அறிவுடன் திரும்பிவந்தார் பரம சுகத்தை எதிர்பார்த்து. 

இங்கு, விபரீதமாகப் புரட்டிவிட்டது விதி. நிழல்கள் மாதிரி நடமாடும் மைத்துனர்களையும் அவர்கள் மனைவியையும் பார்க்கப் பார்க்க அவருடைய சோகம் எல்லை மீறிப் பொங்கியது. மிகச் சங்கடமான நிலை. யாருக்கு யார் தேறுதல் சொல்வது? சஞ்சீவினியின் சுவடிகளை விரிப்பதும், புரட்டுவதும், கண்ணில் ஒத்திக்கொள்வதுமாய், நீண்டுகொண்டே இருக்கும் அந்தச் சோக தினங்களைக் கழித்தார். அழவும் இல்லை; ஒன்றுமே செய்யவில்லை. ஒருவித உணர்ச்சியுமின்றிச் சருகாய்ப்போன அவருடைய தோற்றமும், சிறிதும் சப்தமில்லாத அவருடைய செயல்களும் அந்த ஊரையே அயரச்செய்திருந்தன. அயர்ச்சியும் மௌனமும் அவர்கள் வீட்டை ஊமை ஆவிகளின் இருப்பிடமாக்கிவிட்டன. நடுப்பகல். இரைந்து தன் மைத்துனர்களைக் கூப்பிட்டார் மல்லிநாதர். அப்பொழுது, ஏட்டுச் சுவடிகளைத் தலையில் வைத்துக் கொண்டிருந்தார். ஒன்றும் தெரிந்துகொள்ள முடியாத மைத்துனர்கள் அவரைப் பேசவாவது வைப்போமென்று, “என்ன? என்ன சொன்னீர்கள்? எங்கே, சொல்லுங்கள் ” என்று ஒருமிக்கக் கூவினார்கள். ‘சஞ்சீவினி வந்துவிட்டாள்! இதோ பாருங்கள்: இங்கே என் இருதயத்தில் தங்கியிருக்கிறாள். அவளுடைய சங்கேதங்கள் நிறைந்த காவியங்கள்தாம் இவை. இவற்றுக்கு அவளே வியாக்கியானம் எழுதப் போகிறாளாம்” என்று சாந்த மாய்ச் சொல்லிவிட்டுக் கிளம்பி நேரே தம் ஊருக்குச் சென்றார். இரவும் பகலுமாய் எழுதினார். காளிதாஸனுடைய காவியங்களுக்கு முதலில் வியாக்கியானம் எழுதினார். அதன் பெயர் ”சஞ்சீவினி.

– கதைக் கோவை (தொகுதி IV), 75 எழுத்தாளர்கள் எழுதிய 75 சிறந்த சிறுகதைகள், முதற் பதிப்பு: 1945. அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *