சிறிது கலைத்தே நடந்து வந்தான் ஷங்கர். தலை கலைந்திருந்தது. காலில் இருந்த ரப்பர் செருப்பு பணக்காரர்கள் ரொட்டியில் தடவும் வெண்ணையை போல மெலிதாகி இருந்தன. ஒரு தோளில் துணிப்பையும் மற்றொரு கையில் காகித பொட்டலத்துடன் நடந்தான். தெரு முனையை தொடுகையிலே அம்மா வெளியே காத்திருப்பது தெரிந்தது. தானாக கால்கள் வேகம் எடுத்ததை அவன் உணரவில்லை.
“வா சங்கரு” என்று பையையும் பொட்டலத்தையும் வாங்கியவளை முகம் முழுக்க கேள்வியுடன் பார்த்தான். ஏன் அம்மாவிற்கு “ஷ” வும் “ர்” உம் வரவேமாட்டேங்குது. பாப்பா என்னமா பண்ணுது என்று வள்ளியை நோக்கி சென்றான். இப்போ தான் டா தூங்கி எழுந்து ஏதோ வெளாடிடிருக்கா என்றவள், கை கால் கழுவிட்டு தூக்கு ராசா என்றால். கழுவும்போதே அத்தனை செம்மண் கரைந்தோடின தண்ணீருடன்.
தங்கையுடன வெலயாதும்போதே அம்மா பசிக்குது மா என்றான். சிறிது அரிசியை மறு நாளைக்கு எடுத்து வைத்து விட்டு, தன் பிள்ளைகள் விளையாடும் அழகை ரசித்து கொண்டிருந்தவள் பாப்பாவையும் கூட்டிட்டு வா தம்பி என்றால்.
பூண்டு ரசம் சோறும் பட்டாணி சுண்டலும் இரவுக்கு. பாதியை தரையிலும் பாதியை தன் உடலிலுமாக வள்ளி தன் பங்கை முடித்தால். வள்ளியுடன் சங்கரின் விளையாட்டு தொடர்ந்தது. மதியம் தூங்கிய வள்ளிக்கு ஈடு கொடுக்க முடியவில்லை சங்கரால்.அவன் கண்கள் சொருகின. ஓலை பாயையும் அம்மாவின் அணியா சேலையையும் விரித்தான். அண்ணனின் அன்பினால் தானும் அருகில் படுத்துகொண்டாள் வள்ளி. இருந்தும் கொட்ட கொட்ட முழித்துகொண்டிருந்தன அவள் கண்கள். காற்றில் அவள் விரல்கள் கோலமிட்டன. அடுப்படி வேலைகளை முடித்த அம்மாவும் வள்ளியின் அடுத்து கிடந்தாள். இரவு நேரம் முன்னோக்கி செல்ல அவள் நினைவுகள் பின்னோக்கி சென்றது.
சொந்தமாக தோட்டம் இல்லை என்றாலும் கஷ்டப்படும் குடும்பம் இல்லை ஆனந்தியுடையது . வாழ்கையில் கஷ்டம் என்பதே அவள் அறிய கூடாது என்பதற்காகவே பெற்றோர்கள் வைத்த பெயர் என பிற்பாடு அறிந்து கொண்டால்.
நகரத்தில் இருந்து வெகு தூரம் இருக்கும் கிராமம் என்பதினால் கல்வி என்பது பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களுக்கு மட்டுமே என்பதாயிருந்தது. ஊரின் ஒரே பள்ளிக்கூடத்தை கடக்கும் போதெல்லாம் ஆனந்திக்கு கல்வியின் மேல் ஒரு ஆவல் எழுந்துகொண்டே இருக்கும். ஊரின் பழக்கம் வேறு என்பதால் அது அமுத்தபட்டது. வயது வந்த பெண்ணை பார்க்கவே இளவட்டங்கள் அவ்வப்போது அவள் வீட்டெதிரே இருக்கும் குட்டி சுவரில் காவல் காத்தன. ஆனந்திக்கும் அது சிரிப்பை தந்தது.
சுந்தரம் ஊரின் ஒரே கல்யாண தரகர். அவர் வீட்டிற்கு வருவதை கண்டு ஆனந்திக்கு வயற்றில் பட்டாம்பூச்சி. இவர்தாங்க நா சொன்ன பய்யன். டவுன்ல மெக்கானிக்கடை வெச்சுருக்காரு. படிப்பெல்லாம் ஒன்னும் இல்லே ஆனா நல்ல வேலக்காரன்னு ஊர்ல பேச்சு இருக்கு. பெத்தவங்க இல்லே. திருச்சி தாண்டி ஒரு கிராமம் தான் பூர்வீகம். சொத்து பத்துன்னு ஒன்னும் இல்லே. தனி கட்ட. விசாரிச்சதுல நல்லாதேன் சொல்ராய்ங்க நாட்ல என்றவர் கையில் இருந்த கலர் போட்டோவை கொடுத்தார். அதை பார்த்து அப்பா சிரித்ததில் ஆனந்திக்கு ஒரு பூரிப்பு. எதுக்கும் நா ஒருக்கா போய் பாத்துட்டு வந்துடறேன் என்று துண்டை உதறி தோளில் போட்டவரை தலை அசைத்து அமோதித்தார்கள் கதவின் பின்னல் மறைந்திருந்த மனைவியும் மகளும். தலையை சொரிந்த சுந்தரிடம், ஆவட்டம் யா நல்லபடியா முடியட்டும். வூட்ல சொல்லிர்க்கேன் பணியாரமும் காபி தண்ணியும் குடிச்சுட்டு போ என்றான். இரவு தெளிவுடன் திரும்பிய தந்தையின் முகத்திலேயே முடிவை அறிந்தால் ஆனந்தி. இதான் புள்ள மாப்ள நல்லா பாத்துக்க என கை மாறின அதே போட்டோ.
கடமையாகத்தான் முடிகிறது திருமணம் ஒவ்வொரு கல்வி அறிவில்லாதவன் வீட்டிலும். சடங்குகள் முடிந்து சீடை முறுக்கு புது மெத்தை பெட்டியுமாக கிளம்பியது ஒரு டெம்போ வண்டி. வளர்ந்த ஊரையும் பெற்றோரையும் விட்டு போகிறோம் என்ற நெருடல் இருந்தாலும் நகரத்தின் ஆசையும் புதுக்கனவனின் ஜவ்வாது மனமும் ஒரு சொல்ல இயலாத மன உணர்வை தந்தது ஆனந்திக்கு. சுந்தரத்தின் சட்டை பை நிரம்பியது. ஒரே பெண் விட்டு போகும் வருத்தம் குறைவாகவும் கடமை முடிந்த நிம்மதி அதிகமாகவும் கலந்த ஒரு பெருமூச்சு பெற்றோர்களுக்கு.
ஆசை அறுபது நாட்களும் மோகம் முப்பது நாட்களுமாக மூன்று மாதங்கள் கழிந்தன. அடுத்த மாதம் மூலையில் இருக்கவில்லை ஆனந்தி. கடையில் அனைவருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்தார் இன்னமும் புது மோதிரமும் டிஸ்கோ செய்னும் அணிந்திருந்த குமார். இன்னிக்கு ராத்திரி என்னன்னே என்றான் வேலையால் ஒருவன். கண்டிப்பா டா அண்ணன் செமகுஷி களேபரம் பண்ணுவோம் என்றான். கடைக்கு ஆனந்தியை அழைத்து வந்ததே இல்லை குமார்.
தாய் வந்து மகளுக்கு எல்லாம் செய்து கொடுத்தால். இந்த வருடம் மழை பொய்த்ததால் விளைச்சல் இல்லை என்றும் வீட்டில் இருக்கும் சாமான் சட்டி வைத்து தான் நாட்கள் போவதாகவும் கூறினால்.சுக பிரசவத்தில் ஆண் மகன். குமார் வைத்த பெயர் தான் அது. ஏனோ ஆனந்திக்கும் அவள் குடும்பத்திற்கு மட்டும் “சங்கரு” ஆனது. வேலை முடிந்ததால் ஊர் திரும்பினால் அம்மா. அதற்க்கு மேல் அவ்வளவு போக்குவரத்து இல்லாமல் தான் இருந்தது.
பிள்ளையை கொஞ்சி கொண்டிருந்த குமாரிடம் என்னங்க என்றால் ஆனந்தி. என்ன சொல்லு என்றான் பிள்ளையை பார்த்து சிரித்துக்கொண்டே. புள்ள பொறந்துட்டான் இனிமேலாவது நிறுத்தலாம் இல்லே நானும் எவ்ளோ நாள் தான் சொல்லிட்டே இருப்பேன். ஷெட்டுல நெறைய வேல டி. எனக்கு மட்டும் ஆசையா என்ன, எழவு உள்ள போனா தான் தூக்கம் வருது. கவர்மென்ட் தான் விக்குதே அப்புறம் எதுக்கு ஊருக்கு ஒதுக்கு புறமா போவானே. கவர்மென்ட் வெறும் தண்ணிய தந்துட்டு காசு புடுங்கி ஏமாத்ரான்டி. அதுல “ஒண்ணுமே” இல்லே என்றவன் செரி நீ போய் தூங்கு என்றான்.
நாட்கள் கழிந்தன. ஷங்கரும் அம்மா அப்பா என்று சொல்ல வளர்ந்துவிட்டான். தலை வாரும் போது கீழே விழுந்த சீப்பை குனிந்து எடுத்து மேலே நீட்டினான் அப்பாவிடம். அத்தனை அழகு அந்த செயலில்.
அன்றிரவு வெகு நேரம் ஆகியும் வரவில்லை குமார். பதற்றம் ஒட்டி கொண்டது ஆனந்தியை. எங்கே செல்வது என்று தெரியவில்லை. தனக்கு மறுபடியும் நாட்கள் தள்ளி போனதை சொல்ல ஆவலுடன் இருந்தால். கடையில் வேலை செய்யும் ஆள் மூலம் வந்து சேர்ந்தது செய்தி ஆச்பித்ரியில் குமார் கவலைக்கிடமாக இருக்கிறான் என்று. நடக்க தெரிந்தும் சங்கரை தோளில் போட்டு ஓடினால் ஆனந்தி. குடித்த சாராயத்தில் ஏதோ கலந்திருந்ததால் மூலையில் ரத்தம் கசிந்திருப்பதாகவும் குமார் உட்பட இருபது பேருக்கு எதுவும் நடக்கும் என்றும் டாக்டர் கூறினார். அதன் பின் மூடப்பட்டன இருபது முகங்களும்.
நடு வீதியில் விட்டுவிட்டு சென்றது போல் உணர்ந்தால் ஆனந்தி. ஊரில் விசாரித்ததில் பெற்றோர் கடன் திரும்ப தர இயலாமல் இருப்பிடம் மாறி இருந்ததை அறிந்தால். அடுத்த கர்ப்பத்தை நினைத்து அழுவதா என தெரியவில்லை ஆனந்திக்கு. முகத்தை பார்த்து “அப்பா” என்று மட்டும் சொல்லும் ரெண்டுங்கட்டான் சங்கரை பார்த்தாலே அழுகை வருகிறது. சேமித்தது கையில் காதில் கழுத்தில் இருந்தது வரை வாடகையும் சாப்பாடும்.சேமிப்பிலேயே பிறந்தால் வள்ளி. ஏதும் வழி தெரியாது இருந்த போது சாந்தியை சந்தித்தால் ஒரு கோவிலில் தனது குடிசையில் சிறு இடத்தை கொடுத்தால் சாந்தி. தான் கட்டுமான பணிக்கு போவதாக சொன்னவளிடம் தானும் வருவதாக சொன்னால். பச்ச உடம்புக்காரி இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்றால் சாந்தி.
கவர்மென்ட் பள்ளியில் சங்கரை சேர்த்தால். வள்ளியை கூட்டி கொண்டு சாந்தி உடன் வேலைக்கு சென்றால். தினக்கூலி அன்றைய தேவையை பூர்த்தி செய்தது. இரண்டு தெரு தள்ளி தனி குடிசைக்கு குடி பெயர்ந்தால் நெஞ்சம் முழுக்க சாந்திக்கு நன்றி சொல்லி. பள்ளி முடிந்த பின் அம்மா வேலை செய்யும் இடத்தில் விளையாட்டு சங்கருக்கு. சில நேரம் அம்மாக்கு உதவியும் செய்வான்.
இளவட்டங்கள் எட்டிப்பார்த்த அதே அழகு இரண்டு பிள்ளை பெற்றும் குறையவில்லை. இதனால் கூட குமார் தன் ஷெட்கு அவளை கூடி போனதே இல்லையோ என்னவோ. பூவை மொய்க்கும் வண்டாய் அவளை வெறித்து பார்பதும், சிரிப்பதும், அவ்வப்போது உரசுவதுமாக இருந்தான் கான்ட்ட்ராக்டர் ரத்தினம். அந்த நாயி அப்படிதான் நீ கண்டுக்காத என்றால் சாந்தி. ஆனந்தி இணங்கியே விட்டால் என்று ஒரு நாள் அத்து மீறிய ரத்தினத்தின் கைகள். பளேரென விழுந்தன அவன் கன்னத்தில் ஆனந்தியின் விரல் அச்சுக்கள். வியர்துவிட்டான். இனிமே உன்ன எங்கயுமே வேல செய்ய வுடமாட்டேன் பாத்துக்கோ என்றான் தன் கன்னத்தில் கை வைத்தும் கண்கள் அவளை பாராமலும்.வருமானம் இல்லாமல் என்ன செய்வது என்று அழுத ஆனந்தியின் கண்களை துடைத்தன சங்கரின் பிஞ்சு விரல்கள்.
விடியலின் ஒளி கூரையின் வழி உள்ளே விழ வாசல் தெளித்தால். சங்கரும் எழுந்து தயாரானான். வல்லிக்கு முத்தமிட்டு பையுடன் கிளம்பினான். “அரிசி ராசா” என்றால் அம்மா. திரும்பி புன்முறுவலுடன் தலை அசைத்தான். அப்பாவின் சீப்பு எடுத்துகொடுத்த அதே கைகள் அதே தோரணையில் சில வருடங்களில் செங்கல் எடுத்து தருகின்றன.நூறு ரூபாய் கூலி, சாந்தி இப்பொழுது வேலை செய்யும் இடத்தில் இவனுக்கு வேலை. உணவின் போது பையில் இருந்த காலி டப்பாவில் சாம்பார் நிரப்பினால் சாந்தி. கொட்டாம எடுத்துட்டு போய என்றவளை தலை அசைத்து அமோதித்தான். சாயங்காலம் வீடு திரும்பையில் மளிகை கடைக்கு சென்றான். ரெண்டு கிலோ அரிசிணா என்றான். தோளிலிருந்த பையில் போட்டான் அரிசி பொட்டலத்தை. படித்த பள்ளியை கடக்கும்போது ஆனந்திக்கு இருந்த அதே ஆவல். இதுவும் அமுக்கப்பட்டது, ஊர் பழக்கம் அல்ல இது அப்பாவின் பழக்கத்தின் விளைவால். பெருமாள் கோவில் வந்து சேர்ந்தான். இன்று தேங்காய் சுண்டல் காகித பொட்டலம் தான் பிரசாதம்.
சிறிது கலைத்தே நடந்து வந்தான் ஷங்கர். தலை கலைந்திருந்தது. செம்மண் கைகாளுடன், பழைய செருப்பணிந்து வீடு நோக்கி அல்ல அல்ல வாசலில் காத்திருந்த தாயை நோக்கி நடந்து வந்தான் சற்று வேகமாக.