சக்திவேல்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 28, 2022
பார்வையிட்டோர்: 2,472 
 

(2017ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நாற்காலியின் விளிம்பில் கூனிக்குறுகி அமர்ந்திருந்தான் சக்திவேல். அவனுக்கு எதிரே இருந்த மேசையில் குறிப்புப் புத்தகம் ஒருபக்கமும், பல வண்ணக் கோப்புகள் இன்னொரு பக்கமும் ஒழுங்கில்லாமல் கிடந்தன. மேசையின் மத்தியில் ஒரு பீங்கான் கோப்பையில் பாதி குடித்த காப்பி மீதமிருந்தது. தன்னைப் போல விஸ்வநாதனுக்காகக் காத்திருக்கும் அந்தக் கோப்பையை நேசமாகப் பார்த்தான்.

கறை படிந்த படிந்த கோப்பையின் விளிம்பைத் தவிர்க்க முற்பட்டாலும் விழிகள் பிடிவாதமாக நகர அவனது மறுத்தன. எவ்வளவு நேரம் தான் இந்தக் கோப்பையை வெறிக்கப் பார்ப்பது. சலிப்படைந்தவனாக விழிகளை நகர்த்தி சுவர்க் கடிகாரத்தின் பக்கம் திரும்பினான். விஸ்வநாதனுக்காகக் காத்திருந்து பதினைந்து நிமிடங்கள் ஓடிவிட்டன என்பதை உணர்த்திற்று.

விஸ்வநாதனைப் பலமுறை சந்தித்திருந்தாலும் இன்றைய சந்திப்புதான் இறுதியானது. மலையடிவாரத்தில் உருண்டு விழுந்த பாறையாகத் தனித்திருந்தவனை, ஒருமைப்படுத்தி அவனுக்குப் புது வடிவம் கொடுத்ததே விஸ்வநாதன் தான். இப்பொழுது அவரைப் பிரிவதை நினைத்து ஒரு பக்கம் வருத்தமிருந்தாலும், தன்னை நோக்கி வரும் சவால்களைத் துகள் துகளாக்குவது தான் இப்போதைய முக்கியப் பணி என்று உணர்ந்திருந்தான். நடைப்பாதையின் ஓரத்தில் கிடக்கும் கல் அல்ல, வானுயர்ந்த கட்டிடத்தின் அடிக்கல் என்று அம்மாவுக்குத் தன்னை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியம் மனமெங்கும் வியாபித்திருந்தது.

அம்மாவை நினைத்ததும் பார்வையின் கூர்மை மழுங்க, எதிரே இருந்த பொருட்களெல்லாம் மறையத் தொடங்கின. மூடித் திறந்த ஈரமான இமைகளை அழுந்தத் துடைத்துக் கொண்டான். ஆண்டுகள் கடந்தாலும் அவனைக் காண வராத அம்மாவை நினைக்காமல் ஒரு நாளையும் அவன் கடந்ததில்லை..

அவன் சிந்தனைச் சிறகுகள் விரியுமுன்னே, கதவைத் திறந்து உள்ளே நுழைந்தார் ஜெயிலர் விஸ்வநாதன். எழுந்து நிற்க முயன்றவனை அமரும்படிக் கையால் சைகை செய்துவிட்டு அவரும் அமர்ந்தார்.

“ஒருவழியாக நீ எதிர்பார்த்துக் காத்திருந்த நாள் வந்துருச்சு, இல்லையா சக்தி?” மேசை மீதிருந்த கோப்புகளை ஒழுங்குபடுத்தி ஓர் ஓரமாக வைத்தார். அதிலிருந்து சக்திவேலுவின் பெயர் பொறிக்கப்பட்ட கோப்பை உருவி எடுத்தார்.

“சக்தி, இது உனக்கு மறுவாழ்வு மாதிரித்தான், புரியுதா? மூக்கின் நுனியில் தொங்கிக்கொண்டிருந்த மூக்குக் கண்ணாடியை மேலே ஏற்றிவிட்டு அவன் முகத்தை ஒரு வினாடி உற்று நோக்கினார்.

“உன்னோட முன் கோபத்தையும், அவசரப் புத்தியையும் மூட்டை கட்டி வச்சிட்டு, இனிமேலாவது நிதானமா நடந்துக்க” கணினித் திரையில் கோடிட்டு அழுத்தம் கொடுத்த எழுத்துகளைப்போல் அவன் மனதில் ஆழப் பதிந்த வார்த்தைகள். பலமுறை விஸ்வநாதன் இதைக் கூறியிருந்தாலும் இந்த முறை அவரது குரலில் கண்டிப்புடன் கூடிய கனிவும் இருப்பதை உணர்ந்தான்.

“இருந்தாலும் உள்ளுக்குள்ளே கொஞ்சம் பயம் இருக்கு சார். அம்மா…” என்று ஆரம்பித்தவனை இடைமறித்தார்.

“நீ புது சக்தியா மாறியதை இந்த உலகத்துக்கு நிரூபிச்சுக் காட்டு. உனக்குள்ள இருக்கற திறமைகளை வளர்த்துக்கோ, நிச்சயமா அம்மாவோட அன்பும் ஆசீர்வாதமும் உனக்கு எப்போதும் இருக்கும்..”

“சரி சார், அப்போ நான் கிளம்பறேன்…” அவர் கையெழுத்துப் போடச் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டு நிமிர்கையில் இருவரின் கண்களும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டன. இருவருக்கும் கண்கள் கலங்கின. மேலும் அங்கே நேரத்தைக் கடத்த விரும்பாதவனாய், தனது உடைமைகளை எடுத்துக்கொண்டு வேகமாக வெளியேறினான்.

சுட்டெரிக்கும் வெயில் அவனை வரவேற்றது. வெயிலின் கூர்மை அவன் கண்களைக் கூசச் செய்தது. வலது கையைத் தூக்கி, புருவத்தின் மேலே உயர்த்திப் பிடித்து, சுற்றும் முற்றும் பார்த்தான். இருபது அடி எடுத்து வைத்தால் பேருந்து நிலையம். தம்பனிஸ் போகும் பேருந்தில் ஏறி ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தான். பேருந்து நகரவும் சாலையோரங்களும், மரங்களும் பின்நோக்கி நகர ஆரம்பித்தன. அவனுடைய தலையெழுத்தைப் புரட்டிப்போட்ட நிகழ்வுகள் முன்னகர்ந்து வந்தன. சிறைக்குள் அவன் கழித்த ஒவ்வோர் இரவுக்குள்ளும் அவனின் அனுமதி இல்லாமலேயே நுழைந்து புற்றுநோயாய் அவனை அரித்த சம்பவத்தொடர்கள். அதை நினைத்துக் கலங்காத நாட்களே இல்லை.

பட்டய படிப்பையும் முடித்து, தேசியச் சேவையையும் ஒருவழியாக முடித்து வேலைக்காகக் காத்திருந்த சமயம். வேலை தேடுகிறேன் என்று அம்மாவிடம் போக்குக் காண்பித்து, நண்பர்களுடன் கும்மாளம் போட்டுக் காலத்தை விரயமாக்கிக் கொண்டிருந்தான். கொண்டிருந்தான். கைப்பேசிக்குப் பணம் கொடுக்கும் இயந்திரங்களாகத் தான் இவனைப் போலவே இவனது நண்பர்களும் தங்களது பெற்றோர்களை உபயோகித்துக் கொண்டிருந்தார்கள். வெள்ளி மற்றும் சனிக்கிழமை இரவுகளில் நண்பர்களுடன் இரவு விடுதிக்குப் போவதையும், குடித்துவிட்டு அங்கே வரும் இளம் பெண்களிடம் சில்மிஷம் செய்வதும்தான் அவர்களுடைய பொழுதுபோக்கு.

ஆரம்பத்தில் அம்மா அன்பாகக் கண்டித்தாள். பின் அதட்டியும் மிரட்டியும் பார்த்தாள், எதுவும் பயனளிக்கவில்லை. அந்தத் துர்ச்சம்பவம் நடக்கவிருந்த அன்றைய தினத்தின் காலையில் அம்மா கடுங்கோபத்துடன் அவனிடம் நடந்து கொண்டாள்.

“ஏன்டா, நீ சோறு சாப்பிடுறியா, இல்ல வேற ஏதாவதா?” அன்றைய விடியல் இப்படித்தான் துவங்கியது.

“ஏன், உங்க சமையல்தானே, நீங்க சோறு சமைக்கிறீங்களா இல்ல வேற ஏதாவது சமைக்கிறீங்களான்னு உங்களுக்குத் தெரியாதா?” அவனின் அலட்சியமான எதிர்க் கேள்வியால் அம்மாவின் இரத்த அழுத்தம் எகிறியது.

“அப்பா இல்லாத பிள்ளைன்னு செல்லம் கொடுத்ததற்கு.. நீ இதையும் கேட்பே, இதுக்கு மேலேயும் கேட்பே! அந்த வீணாப் போனவன்களோட சுத்துறத நிறுத்துனாதான் நீ உருப்படுவ…” பேசிக்கொண்டே கழுவதற்கான பாத்திரங்களை அள்ளி வந்து கை கழுவும் தொட்டிக்குள் டங்கென்று போட்டாள்.

“அப்பா இருந்திருந்தா அஞ்சு, பத்துக்குன்னு உன்கிட்டே கையேந்திருக்க மாட்டேன்… சதீஷும் மதனும் பாக்கெட் நிறைய மகாலட்சுமியோடதான் சுத்துறானுங்க, கொடுத்து வெச்சவனுங்க..” பல் துலக்கிக் கொண்டே வார்த்தைகளைத் துப்பினான்.

“வாயைக் கட்டி, வயித்தக் கட்டி, அஞ்சு காசு கடன் வாங்காம உன்ன டிப்ளோமா வரைக்கும் படிக்க வச்சதுக்குப் பெத்த வயிறு குளிர்ர மாதிரி பேசறடா, நல்லா இருப்பேடா…” அடிப்பிடித்த சட்டியை, பானை விளக்கும் கம்பியால் அழுந்தத் தேய்த்துக்கொண்டே அம்மா வார்த்தைகளைக் கொட்டினாள். வார்த்தைகளோடு அவள் விழிகளில் இருந்து கண்ணீரும் சிந்தின. அன்று மைதிலி மட்டும் அம்மாவுக்கும் அண்ணனுக்கும் இடையில் குறுக்கிடாமல் இருந்திருந்தால் அநேகமாக அக்கம் பக்கம் இருப்பவர்களே வழக்கம்போல காவலர்களுக்குத் தகவல் சொல்லியிருப்பார்கள்.

அதுதான் அவர்கள் இருவருக்கும் இடையே நடந்த கடைசி வாக்குவாதம். அதன் பிறகு அதற்கான சந்தர்ப்பம் ஏற்படவில்லை. சற்றும் எதிர்பாராதவிதமாக அன்றைய நிகழ்வுக்குப் பின் இருள் சூழ் விடியல்கள்தான் அவனுடைய குடும்பத்தை கவ்விக்கொண்டன.

அவனும்! அவன் நண்பர்களும் அடிக்கடிச் செல்லும் குட்டி இந்தியா இரவு விடுதி ஒன்றில், அன்றைய இரவில் நடந்த கைகலப்பில் சக்திவேல் பீர் பாட்டிலால் மைக்கல் என்பவனின் வயிற்றில் வெறியோடு சொருகியதும், அவன் அம்மா…’ என்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு விழுந்த காட்சியும் இன்னமும் அவனது இதய மடிப்புகளில் ஒளிந்துகொண்டு அவ்வப்போது தலையை நீட்டும்.

மைக்கலின் வயிற்றில் இருந்து தண்ணீராகப் பாய்ந்து வந்த இரத்தம் தரையைச் செந்நிறமாக்கியது. இரத்தக் கறை படிந்த கைகளைப் பார்த்ததும் மிரட்சியால் அவன் கைகள் நடுங்க, பீரின் வாடையுடன் கலந்த இரத்த வாடை, அவன் நாசியில் புகுந்து குமட்டிக்கொண்டு வந்தது. காலகள் பூமிக்கடியில் புதையுண்டதுபோல நகர முடியாமல் திணறி, அங்கேயே மூர்ச்சையாகி விழுந்தான்.

அதன் பிறகு, காவலர்கள் அவர்களிருவருக்கும் முதலுதவி செய்து, இரு ‘ஆம்புலன்சுகளில்’ அவர்களைச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் என்று நண்பர்கள் கூறத் தெரிந்துகொண்டான். வழக்கு நீதி மன்றத்துக்கு வந்தபோது, இது திட்டமிடாத செயல் என்பதாலும், சக்திவேலு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்புக் கேட்டதாலும், மேலும் முக்கியமாக மைக்கேல் பிழைத்துக் கொண்டதாலும் தண்டனை குறைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் சிறை வாசம் எனத் தீர்ப்பாயிற்று.

மிகுந்த மன வேதனையோடு அவன் அவன் அம்மாவும் தங்கையும் அவனைப் பார்க்கச் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். அம்மாவிடம் பரிவையும் ஆதரவையும் எதிர்பார்த்தவனுக்கு கிடைத்தது ஏமாற்றம்தான்.

“கொலைகாரப் பயலே, உங்கப்பாவோட மானத்த வாங்குறதுக்குன்னே என் வயித்திலே வந்து பிறந்தாயா?” வயிற்றில் அடித்துக்கொண்டு அழுத அம்மாவைப் பார்க்க அவனுக்குச் சக்தி இல்லை. அம்மாவின் கோபம் அவனுடைய சுயத்தைச் சுட்டெரித்தது.

“நான் செத்தாலும் என்னோட முகத்துல விழிக்காதே… இங்கேயே ஒழிஞ்சு போ!” கொந்தளிப்போடு தங்கையின் கைப்பற்றிச் சென்றவளை அதன் பிறகு அவன் பார்க்கவே இல்லை. கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல் என்று பல பண்டிகைகளும், புத்தாண்டுகளும் வந்து போயின. ஆனால், மறந்தும் அவனது அம்மா தங்கை இருவரும், சிறைச்சாலைப் பக்கம் கூட ஒதுங்கவில்லை.

“துரோன் அடேய், இன்டெர் சேஞ் சுடா ரத்தாங்..” பேருந்து ஓட்டுநர் மலாய் மொழியில் பேருந்து நிற்கும் இறுதி நிறுத்தத்திற்கு வந்ததை அறிவித்த பிறகுதான் பழையச் சம்பவங்களில் இருந்து விடுதலையானான் சக்திவேல்.

‘இனிமேல் இதை நினைக்கவே கூடாது, தனக்கெனப் புத்தம்புது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். அம்மாவோடும் தங்கையோடும் சந்தோசமாக மீதிக் காலத்தைக் கழித்திட வேண்டும்’ என்ற உறுதியோடு தம்பனிஸ் பேருந்து நிறுத்தும் வளாகத்தில் இறங்கினான்.

இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. இத்தனை நாட்களாகத் தன்னைக் காண வராத அம்மா மன்னித்துத் தன்னை ஏற்றுக்கொள்வாரா, ஓடி வந்து கட்டிக்கொள்வாரா.. அல்லது வெளியே போ! என்று விரட்டுவாரா…? குழப்பங்களின் கைபிடித்து அவனது புளோக் 946 நோக்கி நடக்கலானான்.

இந்த ஐந்து வருடங்களில், தம்பனிஸ் வட்டாரம் பிரமாண்டமாக மாறியிருப்பதைக் கவனித்தான். முன்பு புல் தரைகளாக இருந்த திடல்களில் இன்று புதிதாகக் கட்டப்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளும், தனியார் வீடுகளும் முளைத்திருந்தன. அவனது புளோக் தம்பனிஸ் விளையாட்டு மைதானத்திற்குப் பின்னால் இருக்கிறது. மைதானத்தைக் கடக்கையில் மேம்பாட்டுப் பணிகளுக்காக அது தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதை அறிந்தான். இத்தகைய மேம்பாட்டுப் பணிகள்தான் ஒரு வட்டாரத்தை என்றும் இளமையாகவும் புதுமையாகவும் காண்பிக்கிறது என்று எண்ணி வியந்தான்.

இந்த மைதானத்திற்குத்தான் அவனும் மைதிலியும் மெது ஓட்டத்திற்கு வருவார்கள். மைதிலியைப் பற்றிய நினைவுகள் மெதுவாக அவனைச் சூழத் தொடங்கின. அவனைவிட நான்கு வயது இளையவளானாலும் சிந்தனை யிலிலும் செயல்திறனிலும் இவனைவிட முதிர்ச்சியானவள். வேளைகளில் அம்மாவுக்கும் இவனுக்கும் நடக்கும் வாக்குவாதங்களில் இடையில் புகுந்து அவர்களின் கருத்து வேறுபாடுகளுக்குச் சமரசம் செய்து வைக்கும் அளவுக்கு விவேகமானவளும்கூட. வேலைக்குப் போயிருப்பாளா அல்லது திருமணம் முடித்திருப்பாளா என்று அறியும் ஆவலோடு நடையைத் துரிதப்படுத்தினான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் அவனது வீட்டு வாசலை அடைந்தான். வீட்டுக் கதவு பச்சை நிறத்தில் பசுமையாகக் காட்சியளித்தது. சற்றுத் தயங்கியவாறு கதவைத் தட்டினான். வீட்டிற்குள் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. அழைப்பு மணியை அழுத்தியும் யாரும் கதவைத் திறக்கவில்லை.

‘ஒருவேளை இருவரும் வேலைக்குப் போயிருப் பார்களோ?’ யோசனை ஒருபுறம், பசி வயிற்றைக் கிள்ளியது மறுபுறம். தனது சட்டைப் பாக்கெட்டைத் தொட்டுப் பார்த்தான், சிறையில் வேலை செய்ததற்கான கூலிப் பணத்தைப் பத்திரமாக வைத்திருந்தான். இரண்டு புளோக் தள்ளி இருக்கும் காப்பிக் கடையில் சாப்பிட்டு வரலாம் என்று கிளம்பினான்.

பிற்பகல் மணி மூன்று. கூட்டம் அவ்வளவாக இல்லை. கடைக்காரர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, இரவு உணவுக்கான ஆயத்தங்கள் செய்துகொண்டிருந்தனர். சிலர் காலையில் நடந்த வியாபாரக் கணக்கைச் சரி பார்த்துக் கொண்டிருந்தனர். இன்னும் சிலர் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தனர். பரிச்சயமான முகங்கள் தெரிகின்றனவா என்று தேடிப் பார்த்தான். பல புதிய முகங்களுக்கு இடை டையில் அவனும் புதிதாய் இருப்பதை உணர்ந்தான்.

“மீ ருபுஸ் சத்து” அவனுக்குப் பிடித்த உணவு. அம்மா வார இறுதி நாட்களில் சந்தையிலிருந்து திரும்பும் போதெல்லாம் அவனுக்கான பொட்டலத்தோடும்தான் வீடு திரும்புவார். அவனின் விருப்பு வெறுப்புகளையும் தேவைகளையும் விரல் நுனியில் வைத்திருந்தாள். இவ்வளவு அன்பைப் பொழிந்த அம்மாவால் எப்படி அவனைப் பார்க்காமல் இருக்க முடிந்தது என்று அவனுக்கு விளங்கவே இல்லை. “உனக்குக் கல் மனசா’ என்று அம்மாவை நறுக்காகக் கேள்வி கேட்டால் தான் அவன் மனம் ஆறும் போல் இருந்தது. “மீனோம் அப்ப?” நீல நிறப் பனியன், அரைக்கால் சட்டை, பெப்பர் அண்ட் சால்ட் முடி அலங்காரத்துடன் ஓர் அறுபது வயது மதிக்கத்தக்க முதியவர் நின்று கொண்டிருந்தார்.

“அங்கிள், பெப்சி சத்து,” அவனது பாக்கெட்டில் கைவிட்டு இரண்டு வெள்ளியை முதியவரிடம் நீட்டினான்.

அடுத்த கரண்டி மீ ருபுஸ் அவன் வாய்க்குள் போவதற்குள் ஒரு பெப்சி கேனையும் ஐஸ் கட்டிகள் நிரம்பிய கோப்பையையும், மீதிச் சில்லரையையும் அவன் மேசை மேல் வைத்தார். சக்திவேல் கூறிய நன்றியை வாங்காமல் அவர் பக்கத்துக்கு மேசையில் அமர்ந்த புதிய வாடிக்கையாளரை நோக்கி சிட்டாய்ப் பறந்தார்.

வயோதிகத்திலும் தளராமல் மேசைக்கு மேசை தாவும் அவரது சுறுசுறுப்பை ஆச்சரியமாகப் பார்த்தான். வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் தான் சிறைக்குள் வெட்டியாகக் கழித்த நாட்களை எண்ணி வெட்கிப்போனான். விஸ்வநாதன் கூறியதுபோல் காலம் மீண்டும் அவனுக்கு மறுவாய்ப்புக் கொடுத்திருக்கிறது, இதைச் சரியாகப் பயன்படுத்தி கவிழ்ந்த குடும்பக் கௌரவத்தை நிமிர்த்த வேண்டும் என்று மீரூபுஸ் சாறைக் குடித்துக்கொண்டே திட்டமிட்டான்.

வேலையில் சேரும்படி வந்த கடிதம் அவன் தோளில் சுமந்திருந்த பையில் இருப்பதை மீண்டும் உறுதி செய்து கொண்டான். அவன் சிறைச் சாலையில் இருக்கும்போதே முன்னாள் குற்றவாளிகளின் மறுவாழ்வுக்கான மஞ்சள் ரிப்பன் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் நிறுவனங்களில் ஒன்று அவனுடைய திறமைகளை அறிந்து, அவனுக்கு வேலை கொடுக்க முன்வந்தது. விஸ்வநாதனின் சிபாரிசும் இந்த வேலை வாய்ப்பு அவனுக்குக் கிடைப்பதற்குப் பெரும் பங்காற்றியிருக்கிறது என்பதை அவன் அறிவான். இது அம்மாவிற்குத் தெரிந்தால் நிச்சயம் மகிழ்ச்சி அடைவாள். இனியாவது, அம்மாவைக் கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று விரும்பினான்.

மெதுவாக நடந்து மீண்டும் தன் இல்லம் வந்தான். இந்த முறை வாசலில் ஒரு ஜோடிச் செருப்புகள் இருந்தன. அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தான். கதவுக்குப் பின்னால் எட்டிப்பார்க்கும் முகத்தைக் காண ஆவலாய் இருந்தான். சில வினாடிகளுக்குப் பிறகு கதவு திறந்தது.

எண்ணெய் தடவி நேர்த்தியாகச் சீவிய கூந்தல், சிறிய பொட்டு, மெலிந்த உடல், ரோஜாப்பூப் போட்ட ‘சல்வார் காமீஸ்’. கதவுக்குப் பின்னால் எட்டிப் பார்த்த முகத்தை அடையாளம் கண்டுகொண்டான்.

“மைதிலி, நான்தான்…” குரல் தழுதழுக்கக் கூறிய சக்திவேலுவைக் கண்டதும் இருண்ட அறைக்குள் திடீரென இயக்கப்பட்ட விளக்குகளைப்போல் அவள் கண்கள் அகல விரிந்தன.

“அண்ணா நீங்களா? உள்ளே வாங்கண்ணா” வேகமாக இரும்புக் கம்பிகளைத் திறந்து அவன் உள்ளே வருவதற்கு இடம் விட்டு நகர்ந்தாள்.

அவன் நினைத்தது போலல்லாமல் வீடு முன்பு இருந்த மாதிரிதான் இருந்தது. சோபா உறைகள் மட்டும் புதுசாக இருந்தன. மற்றபடி, அதே மரப்பலகையால் செய்த சோபா செட், வழக்கம்போல மேஜை மீது நாளிதழ்கள், ஹாலில் அம்மாவுக்குப் பிடித்த வெண்ணை சாப்பிடும் குழந்தைக் கிருஷ்ணன் படம், தொலைக்காட்சிப் பெட்டி, தொலைபேசி ‘என அது அது இருந்த இடத்தில் அப்படியே இருந்தன.

“சாப்பிடீங்களா அண்ணா, ஏதாவது எடுத்துட்டு வரட்டுமா?” தங்கையின் உபசரிப்பில் கிறங்கிப் போனான்.

“சாப்பிடேன்மா, அம்மா வேலைக்குப் போயிருக்காங்களா?” ஏக்கத்தோடு கேட்டான்.

“அம்மா வீட்டில இல்லேண்ணா, உட்காருங்க, குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன்” அவசரமாக அடுப்பங்கரைக்குள் நுழைந்தாள்.

ஏமாற்றத்தோடு சோபாவில் விழுந்தான். மேஜையில் இரைந்து கிடந்த நாளிதழ்களைக் கையிலெடுத்தான். அதில் படிந்திருந்த தூசியைத் தட்டிய வேகத்தில் அது நாசியில் ஏறித் தும்மலைக் கிளப்பியது. தொடர்ந்து வந்த தும்மலால் கையிலிருந்த நாளிதழ்கள் சிதறி அவன் காலடியில் விழுந்தன. அவற்றை மீண்டும் பொறுக்கி எடுக்கும்போது ஒரு நாளிதழின் முதல் பக்கத்தில் அவனுக்கு மிகவும் பரிச்சயமான புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருந்ததைக் கண்டான். ஆர்வமுடன் அந்தச் செய்தித்தாளைக் கையிலெடுத்து தேதியைப் பார்த்தான். நான்காண்டுகளுக்கு முன்பான நாளிதழ். குழப்பத்துடன் அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்த்தான். நண்பன் சதீஷின் புகைப்படம் போல இருந்தது. தலைப்பை நோட்டமிட்டான்.

‘தம்பனிஸில் வாலிபன் கொலை, மாது கைது தலைப்பைப் படிக்கவும் கலவரத்துடன் அதில் அச்சடிக்கப்பட்ட எழுத்துகளை வாசிக்க முற்பட்டான்.

‘வீட்டில் தனித்திருந்த இளம் பெண்ணை மானபங்கம் செய்ய முயற்சித்த இருபத்தி நான்கு வயது சதீஷ்குமார் த/பெ தண்டபாணி என்ற வாலிபனை உயிர் போகும்வரைக் கத்தியால் குத்திக் கொலை செய்த கல்பனா த/பெ கந்தசாமி (வயது 52) என்ற மாது கைது…..’ இமைக்காத கண்களின் வழியே உருண்டோடிய கண்ணீர் நாளிதழின் மேல் விழுந்து எழுத்துக்களை நனைத்தது. தொடர்ந்து படிக்க இயலாமல் கல்லாய் உட்கார்ந்திருந்தான் சக்திவேல்.

– நீர்த் திவலைகள் (சிறுகதைகள்), டிசம்பர் 2017, ஆர்யா கிரியேஷன், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *