கோழி போடணும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 2, 2023
பார்வையிட்டோர்: 2,569 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சபாபதிக்கு கிட்டத்தட்ட எழுபது வயது இருக்கும். மெலிதான சந்தன நிற ஜிப்பாவும், தங்க பிரேம் கண்ணாடியும், வெள்ளை வெளேரென்ற வேட்டியும் அவரது அடையாளங்கள். ஒரு கோடிஸ்வரனுக்கு உண்டான தகுதியும் அவருக்கு இருந்தது. அவரது முயற்சியில் பல நிறுவனங்கள் தழைத்தன. அதனால் பல உயிர்கள் பிழைத்தன. அவரது ஆளுமையில் பல ஆலைகளும் சில சேலைகளும் அடக்கம். புதிய டொயட்டோ காரில் அவர் இப்போதெல்லாம் வலம் வருகிறார். கிழக்குக் கடற்கரைச்சாலைதான் அவருக்கு பிடித்தமான ரோந்து போகும் இடம். குளிரூட்டப்பட்ட கார். சூரிய வெளிச்சம் உள்புகாத கலர் கண்ணாடிக் கதவுகள். அந்தக் கண்ணாடிகள் விசேசமானவை. வெளியிலிருந்து பார்த்தால் உள் நடப்பது ஒன்றும் தெரியாது. ஆனால் உள்ளிருந்து பார்த்தால் வெளியில் நடப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டும். சபாபதி தனியாகத்தான் இந்த ரோந்துக்குப் போவார். சாலையோரம் நடக்கும் காட்சிகளை உள்வாங்கிக்கொண்டே அவரது படகு கார் மெல்ல மிதந்து போகும். கடற்கரையோரம் மாலை நேரங்களில் மறைவிடங்களில் எசகு பிசகாக இருக்கும் இளம் ஜோடிகள் தான் அவர் விரும்புவது. தன்னால் இந்த வயதில் முடியாததை, இன்னும் தன் எண்ண அடுக்குகளில் நீங்காமல் நிலைத்திருப்பதை பார்ப்பதிலே அவருக்கு ஆனந்தம். அவரது வசதிக்கு தனியாக திரையரங்கு அமைத்து இம்மாதிரி திரைப்படங்களை போட்டு ஆனந்தப்படலாம்தான். ஆனால் அதிலெல்லாம் அவருக்கு ஈடுபாடு இல்லை. எதையுமே ரத்தமும் சதையுமாக பார்ப்பதில் அவருக்கு விருப்பம் அதிகம். ஆனால் இப்படியெல்லாம் சொல்வதனால் அவர் ஏதோ குரூரமானவர் என்று எண்ணிவிடவேண்டாம். அவர் மிக மென்மையானவர். அவரால் அனுபவிக்கப்பட்ட பல பெண்கள் அவரிடம் அபரிமிதமான அன்பு கொண்டே அவரிடமிருந்து விலகியிருக்கிறார்கள். இவ்வளவு அன்பு அவர்களது புருஷன்மார்களுக்குக்கூட கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. பெண்ணை பூவைப்போல கையாளும் வித்தை தெரிந்தவர் அவர். கிள்ளாமலே செடியை விட்டு விலகி அவர் மடியில் விழுந்த மலர்கள்தாம் அதிகம். அவர் சூடியபிறகும் அவை வாடாமல் இருப்பதுதான் விசேசம்.

சபாபதிக்கு இன்று ஒரு புதுவிதமான கிளர்ச்சி ஏற்பட்டிருந்தது. அதைஎன்னவென்று இனம் கண்டுகொள்ளமுடியவில்லை அவரால். இதற்கான வடிகால் என்ன என்பதைக் கண்டுபிடிக்கும்வரை தன் மனம் ஓயாது என்பதை மட்டும் அவரால் உணரமுடிந்தது. குளிரூட்டப்பட்ட கார் சூடாகியதுபோல் இருந்தது அவருக்கு. குளிர்சாதனம் உச்சக்கட்டத்தில் இருந்தது. இதற்குமேல் அதை அதிகப்படுத்த வாய்ப்பில்லை. கிழக்குக் கடற்கரை சாலையில் மெதுவாக வழுக்கிக்கொண்டு போய்க்கொண்டிருக்கிறது அவரது கார்.

இன்று கிழக்குக் கடற்கரை சாலை வெறுமையாக இருந்தது. கடற்கரையும் அப்படித்தான். ஒரு ஜோடியைக்கூட காணோம். குப்பை அள்ளும் மெஷின் போல காதலர்களை அள்ளும் மெஷின் ஏதாவது அவர்களை அப்புறப்படுத்திவிட்டதா என்று யோசித்தார். சுங்கக்கட்டணம் வசூல் செய்யும் இடம் வந்தபோது தான் அவருக்கு அந்தக் காட்சி கண்ணில் பட்டது.

அதீதமாக வளர்ந்திருந்தான் அவன். சராசரிக்கும் அதிகமான உயரம். சராசரிக்கும் அதிகமான உடல். ஒரு வளர்ந்த பனைமரத்தைப்போல அவன் இருந்தான். நிறமும் மரத்தை ஒத்திருந்தது. பனை ஓலைகளைப்போலவே அவனது கேசமும் கலைந்து ஆங்காங்கே தூக்கிக்கொண்டிருந்தது. சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் இடத்துக்கருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் அவன் நின்றிருந்தான். காப்பிக்கலர் கை வைத்த சட்டையும் ஒரு அழுக்கு கைலியும் அணிந்திருந்தான். அவனது சட்டையில் ஒரு கை மடிக்கப்பட்டும் ஒரு கை மடிக்கப்படாமலும் இருந்தது. யாரோடோ பேசுவது போல் இருந்தது அவனது பாவனை. ஆனால் சுற்றுவட்டாரத்தில் யாரும் இல்லை.

சபாபதி அவனை கொஞ்ச நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். அவன் உதட்டசைவிலிருந்து அவன் என்ன சொல்கிறான் என்று அவரால் உணரமுடியவில்லை. கொஞ்சமாக கதவுக்கண்ணாடியை இறக்கிவிட்டு அதன் விளிம்பில் காதை வைத்து உற்றுக்கேட்டார்.

கோழி போடணும்.. கோழி போடணும் .. கோழி போடணும்..

திரும்பத்திரும்ப இதையே அவன் சொல்லிக்கொண்டிருந்தான். அவன் எதைப்பற்றி பேசுகிறான் என்பது அவரால் சுலபமாக அனுமானிக்கமுடியவில்லை. ஆனாலும் தொடர்ந்து அவன் பால் திரும்பிய கண்களைத் திருப்ப முடியவில்லை. அவன் கண்களில் ஒரு வித ஒளி இருந்தது. பார்ப்பவரை சுண்டியிழுக்கும் கண்கள். அவனை பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் மனம் அவரை விட்டு விலகி வேறு காட்சிகளை உருவகப்படுத்த ஆரம்பித்தது.

அவன் இப்போது சுத்தமாக குளித்துவிட்டு நல்ல ஆடைகளை அணிந்திருந்தான். மழுமழுவென்று சவரம் செய்யப்பட்டதாக இருந்தது அவன் முகம். மீசை தாடியெல்லாம் களைந்தபிறகு அவன் இன்னும் ஈர்ப்புடையவனாக மாறி இருந்தான். அவரது அருகில் அவரது காரில் அவன் உட்கார்ந்திருந்தான். ஆனாலும் அவன் வாய் திரும்பத்திரும்ப, முன்பு சொன்னைதையே உச்சரித்துக்கொண்டிருந்தது. ஒரு பெரிய நட்சத்திர ஓட்டலின் உணவு விடுதிக்குள் அந்தக் கார் நுழைந்தது. அசைவ உணவு வகைகள் பரிமாறப்படும் உணவகம் அது. அங்கு குறிப்பிட்ட தொகை கட்டிவிட்டால்ம், மேசைகளின் மேல் வித விதமாக வைக்கப்படும் உணவுப் பொருட்களை இஷ்டம்போல் வெட்டலாம். பஃவே என்று அழைக்கப்படும் உணவு பரிமாறும் முறை. குளிரூட்டப்பட்டிருந்த உணவக சாப்பாட்டு அறையில் வரிசையாக மேசைகள். அதன் மேல் வெள்ளைத் துணி. மெலிதாக எரிந்து கொண்டிருக்கும் சுடருக்கு மேல் முகம் தெரியும் பளபளப்பான அகலவாய்ப் பாத்திரங்களில் அசைவ பதார்த்தங்கள் காத்திருந்தன. ஆண்களும் பெண்களும் ஆங்காங்கே குழுமி எலும்பைக் கடித்துக்கொண்டு, சதையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

அவன் வெகு வேகமாக செயல்பட்டான். ஒரு தட்டில் கொள்ளாத அளவுக்கு அவன் உணவை அடுக்கிக்கொண்டான். சபாபதி அவனை ஒரு நிலைப்பாட்டில் கொண்டுவருவதற்கு மிகவும் சிரமப்பட்டார். கொஞ்சம் பசி அடங்கியவுடன் அவன் கொஞ்சம் நிதானப்பட்டான். மெதுவாக அவன் சுற்றியிருக்கும் உணவு வகைகளை நோட்டம் விட்டு ஒவ்வொன்றாக சாப்பிட ஆரம்பித்தான். சபாபதி தனக்கு ஏற்ற வகையில் பழரசம், காய்கறித் துண்டுகள், கொஞ்சம் சிக்கன் சூப் என்று மெல்ல ஆரம்பித்தார். இதற்கு மேல் வயிற்றில் இடமில்லை என்ற நிலை வந்தவுடன் அவன் அவரைப்பார்த்தான். அவருக்கு புரிந்தாற்போல் இருந்தது. அவனை மெதுவாக காருக்கு கொண்டுவந்தார். வரும்வழியெங்கும் அவன் சொல்லிக்கொண்டே வந்தான் ‘கோழி போடணும்’ அப்போதுதான் அவரது ‘செல்’லம் சிணுங்கியது. சாலாட்சி பேசினாள்.

சாலாட்சி சமிபத்திய கண்டுபிடிப்பு. இதே உணவகத்தில் அவரை அவள் சந்தித்திருக்கிறாள். அவள் அந்த நட்சத்திர ஓட்டலில் வேலை செய்பவள். உணவகத்தின் நிர்வாகிகளில் ஒருவர். வாடிக்கையாளர் சேவை நன்றாக நடப்பதிலும், அவர்களது இச்சைகள் பூர்த்தியாவதலும் நிர்வாகத்திற்கு நல்ல பெயர் கிடைக்க அயராது உழைப்பவள். அவளது அகராதியில் இல்லை என்பதே இல்லை.

சாலாட்சி என்பது ஒரு கர்னாடகமான பெயராக இருக்கிறதே என்று எண்ணுகிறீர்களா! அவளும் கர்னாடகக்காரிதான். வெள்ளைத்தோலும், கொஞ்சம் பெரிய பற்களும் அவருக்கு சொந்த மண் தந்த சொத்து. சிரிக்கும்போது பற்கள் பளிச்சென்று பார்ப்பவரை சுண்டியிழுக்கும். அன்று அவள் சபாபதியை உணவகத்தில் பார்த்திருக்கிறாள். உணவருந்தும் ஒருவர் அவளை மறித்து ஏதோ உணவு தீர்ந்துவிட்டதாக சொல்லிய அந்த அசந்தர்ப்ப நேரத்தில் அவளது கடைக்கண் ஓரம் சபாபதி அவனுடன் வெளியேறுவது ஒரு மின்னலைப்போல் தோன்றி மறைந்தது. உணவு ஏற்பாடு செய்யும் நேரத்தில்தான் அவள் அவரை செல்லில் கூப்பிட்டாள். சாலாட்சியின் அழைப்பு சபாபதியின் ஏற்பாடுகளை திசை திருப்பியது. பக்கவாட்டில் திரும்பி அவனை பார்த்தார். அவன் மெலிதாக குறட்டை விட்டுக்கொண்டிருந்தான். சாலாவிடம் மெல்லிய குரலில் பேசினார். அவனைப்பற்றி சொன்னார். அவளும் அவனைப் பார்த்த நொடிப்பொழுதில் ஈர்க்கப்பட்டிருந்தாள். அவனை தெரிந்துகொள்வதில் அவளுக்கு ஆர்வம் இருந்தது. முன்பொரு சமயம் அந்தப் பருவத்திற்கேற்ற காதலன் ஒருவனுடன் அவள் சல்லாபம் செய்வதை சபாபதி இமை கொட்டாமல் பார்த்திருக்கிறார். ஒரு லட்ச ரூபாய் செலவில் அரங்கேறிய தனிக் காட்சி அது. அதன் நினைவலைகள் அவருக்குள் வந்து போயின. சாலாவுடன் அவனைப் பொருத்திக் கற்பனை செய்தபோதே அவரது உடல் சூடாகிப்போனது.

சாலாட்சி பத்து மணியளவில் அவரது பிரத்தியேக விருந்தினர் மாளிகைக்கு வந்தாள். செயற்கை நீரூற்றுகளும் வண்ண விளக்குகளுமாக ஒரு கனவுலோக மாளிகையாக காட்சியளித்தது அது.அவள் லேசாக மது அருந்தியிருந்தாள். இம்மாதிரியான அனுபவங்களுக்கு மது, மாதுக்களுக்கு அவசியமாகி போய்விட்ட ஒன்று. ஆனாலும் இது வரை மதுவைப் பொறுத்தவரை சாலா எல்லை மீறியதில்லை. எந்த நிலையிலும் தன்னை யாரும் படம் பிடித்துவிடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையே அதற்குக் காரணம். சமூக அந்தஸ்து பாதிக்கப்படும் வகையில் எந்த கேளிக்கைகளிலும் அவள் ஈடுபடுவது கிடையாது. அவளது சல்லாபங்களுக்கு அவளே இடம் தேர்ந்தெடுப்பாள். அவள் ஆளுமையிலேயே அவளது ஆண்கள் இருப்பார்கள். முன்னறையிலேயே அவர்கள் பிறந்த மேனியாக்கப்படுவார்கள். அதனால் எதையும் மறைத்துக் கொண்டுவரும் சாத்தியம் முறியடிக்கப்படும். மீறி ஏதாவது எடுத்து வரவும் அவர்களிடம் பதுங்கு குழிகளும் கிடையாது.

சபாபதி மிகவும் உற்சாகமாக இருந்தார். சாலாவை வாசற்படியிலேயே நின்று வரவேற்றார். அவளுக்கும் அவர் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. தன் சமூக அந்தஸ்தை விட அவரது உயர்ந்தது என்று அவள் உணர்ந்திருந்தாள். அதனால் எந்தவித தயக்கமுமின்றி புன்னகையோடு அந்த மாளிகைக்குள் நுழைந்தாள்.குட்டி லிப்ட் வழியாக படுக்கை அறைக்குச் சென்றாள்.

அவன் வட்ட வடிவமான படுக்கை மேல் தூங்கிக்கொண்டிருந்தான். தூக்கத்திலும் அவன் வாய் முணுமுணுத்தது ‘கோழி போடணும்’.

சாலாட்சி சிரித்துக்கொண்டே உடைகளைக் களைந்தாள். சபாபதி படுக்கை அறையை ஒட்டிய கண்ணாடித்தடுப்பின் பின்னால் உட்கார்ந்திருந்தார். உட்கார்ந்தால் அழுந்தும் உயர்ரக சோபா அது. ஆனாலும் அவரால் சாய்ந்து உட்கார முடியவில்லை. சோபா நுனியில் ஒரு எதிர்பார்ப்புடன் கன்னத்தில் ருகைகளையும் வைத்தபடி, பார்வையை எந்தப்பக்கமும் திருப்பாமல், வைத்த கண் வாங்காமல் படுக்கையையே பார்த்துக்கொண்டிருந்தார்.

சாலா மெல்ல அவன் தோளைத் தொட்டு அசைத்தாள். அவன் மெதுவாக அவளைப்பார்த்தான். கண்கள் லேசாக விரிந்தன. இதழோரம் ஒரு எதிர்பார்ப்பு புன்னகை சம்மணம் போட்டு உட்கார்ந்து கொண்டது. மெல்ல எழுந்து சோம்பல் முறித்தான். அவளைப்பார்த்து சொன்னான்: ‘கோழி போடணும்’ சாலா இணக்கத்துடன் தலையசைத்து அவன் உடைகளைக் கழற்றினாள். அவனைப் படுக்கையில் தள்ளி அவன் மேல் படர்ந்தாள்.

சபாபதி கார் கண்ணாடியை இன்னும் இறக்கினார். அவன் இவரைப் பார்ப்பதாகவே இல்லை. அவனை எப்படி அழைப்பது? அவரருகில் இருக்கும் தண்ணீர் குடுவையைப் பார்த்தபோது ஒரு எண்ணம் தோன்றியது. சிவப்பு நிறக்குடுவை அது. வெளிநாட்டில் வாங்கியது. மெல்ல அதை எடுத்து வெளிப்புறமாக கைகளை நீட்டி தண்ணீர் குடிக்க ஆரம்பித்தார். இயல்பாக நழுவுவது போல் அதை கீழே போட்டார். அவனது கண்களில் அந்தச் சிவப்பு பட்டிருக்கவேண்டும். அவன் அவரைப் பார்த்தான். அதற்காகவே காத்திருந்ததுபோல் அவர் அவனைப்பார்த்து சைகை செய்தார். அவன் மெல்ல அவர் பக்கமாக திரும்பினான். அவரை நோக்கி வர ஆரம்பித்தான். அருகில் வந்ததும் குனிந்து குடுவையை எடுத்தான். சிறிது நேரம் அதையே உற்று பார்த்தான். சிறிதளவு தண்ணீர் அதில் மிச்சம் இருந்தது. அதை முழுவதுமாக அவன் தன் தொண்டையில் சரித்துக்கொண்டான். குடுவையை அவரிடம் நீட்டியபடியே சொன்னான்: ‘கோழி போடணும்‘

அவர் அவனைப் பார்த்து சினேகமாகச் சிரித்தார். கதவைத் திறந்துவிட்டார். அவன் அவரை சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். பிறகு தலையை ஒருமாதிரி சாய்த்துக்கொண்டு காருக்குள் நுழைந்தான். சுவாதீனமாக காலை நீட்டிக்கொண்டு சாய்ந்து உட்கார்ந்து கொண்டான். கதவு திறந்தே கிடந்தது. சபாபதி அவனைத் தாண்டி கையை நீட்டி கதவைச் சாத்தினார்.

அதற்கப்புறம் நடந்ததெல்லாம் அவர் கற்பனை செய்தபடியே நடந்தது. நட்சத்திர ஓட்டலின் உணவகத்தில் அவன் விரும்பியவற்றை சாப்பிட்டான். அவனை வெளியே அழைத்து வரும்போது கவனித்தார். அவன் கோழி இறைச்சி மட்டும் சாப்பிடவில்லை. அவருக்கு ஏதோ புரிந்தாற்போல் இருந்தது.

சாலாட்சிக்கு செல்லில் செய்தி அனுப்பியிருந்தார். பதிலுக்கு அவளும் பத்து மணிக்குமேல் வருவதாக சேதி சொல்லியிருந்தாள். என்ன இது கற்பனைக்கும் நிஜத்திற்கும் ஒரு வித்தியாசம் கூட இருக்காது போலிருக்கிறதே என்று நினைத்து சிரித்துக் கொண்டார் சபாபதி.

அவன் ஏகாந்தமாக குளித்தான். அந்த மாளிகையின் எந்த அறையையும் பார்ப்பதற்கு ரகசிய கண்ணாடி அறைகள் அமைக்கப்பட்டிருந்தன. அவனது உடற்பாகங்கள் அவனது உருவத்திற்கேற்றபடியே அமைந்திருந்தன. பளிங்குக் குளியல் தொட்டியில் அவன் அசைந்தபோது அலை எழும்பி தரையில் வழிந்தது. ஏற்கனவே நிரப்பட்டிருந்த வெதுவெதுப்பான நறுமண நீர் அவனை இன்னும் உற்சாகப்படுத்தியது. கால்களுக்கிடையில் வெகுநேரம் கைகளால் தேய்த்துக்கொண்டிருந்தான். அவனுக்கான வெல்வெட் உடை சலவை செய்யப்பட்டு குளியலறை ஓரம் தொங்கிக்கொண்டிருந்தது. அவனது பார்வை அதன் பால் சென்றது. நடுவில் நாடாக்கயிறுகள் கொண்ட உடை அது. வினாடி நேரத்தில் அவிழ்க்கக் கூடியது. படுக்கை அறைக்கு ஏற்றது. அவன் ஜட்டி அணியும் பழக்கம் இல்லாதவனாக இருந்தான். அதனால் அவனுடை பழைய அரை டிரவுசரையே திரும்பவும் அணிந்துகொண்டான். அதன் மேல் அந்த வெல்வெட் உடையை அணிந்தான். நாடாக் கயிறு கட்டும்

வேலையை அவன் செய்யவில்லை. நேரம் மிச்சம் என்று நினைத்துக்கொண்டார் சபாபதி.

குளியலறையிலிருந்து வந்து படுக்கையில் படுத்து தூங்கிப்போனான்.

சாலா சரியாக பத்து மணிக்கு வந்தாள். சபாபதியின் வரவேற்பை ஏற்றாள். படுக்கை அறைக்குப் போனாள். உடை களைந்தாள். சபாபதி புதைமணல் சோபாவில் பக்கத்து கண்ணாடி அறையில் இருக்கை நுனியில் இருந்தார்.

சாலா தோள்களைத் தொட்டு அவனை எழுப்பினாள். அவன் படாரென்று கண்களைத் திறந்தான். கோழி என்றான். மெல்ல எழுந்தான். இருகையால் அவனை லேசாக மறுபடியும் படுக்கையில் தள்ள எத்தனித்தாள் சாலா. அவன் மிகுந்த வேகத்துடன் அவள் கைகளைப் பற்றி இழுத்து படுக்கையில் தள்ளினான். சபாபதி கால் மேல் கால் போட்டுக்கொண்டு இன்னும் உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார்.

அவன் அவளை ஒரு மூட்டையை புரட்டுவது போல் புரட்டிப்போட்டான். உடையுடன் அவள் மேல் பாய்ந்தான். சபாபதி புது விளையாட்டைப் பார்க்கும் ஆர்வம் மேலிட எழுந்து நின்று கொண்டார். அவன் அவள் மேல் முழுவதுமாக படர்ந்திருந்தான். ஒரு கையால் அவளது கூந்தலை இறுக்கமாகப் பற்றியிருந்தான். அரை டிரவுசர் பாக்கெட்டிலிருந்து ஒரு சிறிய கத்தியை எடுத்து மெதுவாக அவள் கழுத்தை அறுக்க ஆரம்பித்தான்.

– மார்ச் 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *