கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 18, 2020
பார்வையிட்டோர்: 4,506 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

சாவித்திரிக்கு ஒரே பரபரப்பு. அவள். ஏற்பாடு செய்திருந்த விருந்து வெற்றிகரமாக அமைய வேண்டுமே என்றுதான். பிறர் மதிப்பையும் பாராட்டுதலையும் பெறத் தவிக்கிற எந்த அம்மாளுக்கும் இயல்பாக இருக்கக்கூடிய ஆசை தானே அது!

சாவித்திரி சமூக அந்தஸ்தில் மிக உயர்ந்து விட்டவளும் அல்ல; தாழ்ந்து கிடப்பவளும் அல்ல. மத்தியதர வர்க்கத்துக் குடும்ப விளக்குகளுக்குச் சரியான பிரதிநிதி அவள், பிறந்த இடத்திலோ, புகுந்த இடத்திலோ செல்வம் குப்பை மாதிரிச் சிதறிக் கிடக்காவிட்டாலும் கூட, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலே பிறந்து வளர்ந்து வாழும் பெருமை பெற்றவள் போல்தான் அவள் நினைப்பாள், நடப்பாள், செயல் புரிவாள்; ஜம்பமாகப் பேசி மகிழ்வடைவாள்.

அவள் ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, விருந்து ஏற்பாடு செய்துவிட்டாள். மேனாமினுக்கி இனத்தின் பிரதிநிதியாக விளங்கும் வசந்தா, வாய்வீச்சு வீசுவதில் வல்லவளான பத்மா, தனது திறமைக்கு அகில உலகமும் தலைவணங்கக் காத்திருக்கிறது என்று பெருமை கொள்ளும் கர்வி ஜானகி. புதுப் பணக்காரி” மீனாட்சி அம்மாள் – விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த இத்தனை பேரும் ஆடம்பர அலங்காரங்களோடு ஆஜராகி விட்டார்கள்.

அதையும் இதையும் பார்த்து, அவளையும் இவளையும் பற்றிப் பேசி, ஒவ்வொருத்தியும் மற்றவளின் நகை – உடை- சிங்காரிப்பு முதலியவைகளை ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டு, சாப்பிடுவதற்குத் தயாரானார்கள்.

சாவித்திரி அடுப்பங்கரைக்குப் போனவள் “ஐய்யோ !” என்று கூவதற்கு வாயெடுத்தாள். உடனடியாகவே, தனக்குத் தானே கட்டுப்பாடு விதித்து, ஓங்கிவந்த ஓலத்தை அமுக்கிக் கொன்றுவிட்டாள். அவள் சிரத்தையோடு தயாரித்து வைத்திருந்த பால் பாயசத்தை, கறுப்புப் பூனை ஒன்று – அதுக்கு இழவெடுக்க இந்த வீட்டிலே அசந்து மறந்து ஒரு சாமானைத் திறந்து போட்டுவிட்டுப் போக வழியில்லே!” – சுவாரஸ்யமாக ருசி பார்த்துக் கொண்டிருப்பதைக் காணும் போது “சபாஷ்டா பாண்டியா!” என்று பாராட்டும் மன எழுச்சியா சாவித்திரிக்கு உண்டாக முடியும்? தன் வயிற்றெரிச் சலையும் வசவு வேகத்தையும் அவள் ஒடுக்கிவிட முயன்றதன் காரணம், “விருந்தாளிகள் பசியுடன் காத்திருக்கிறார்கள் ; விருந்து வெற்றிகரமாக நிகழ வேண்டுமே” எனும் நினைப்புத்தான்.

பூனை தலை நிமிர்ந்து பார்த்தது. மீசை மயிரைச் சரிசெய்து கொள்வது போல் நாக்கினால் அப்படியும் இப்படியும் தடவிக்கொண்டது. “பாயசம் பலே ஜோர்!” என்று சொல்வது போல் அவள் பக்கம் பார்த்துக் கண்களைச் சிமிட்டி, “மியூவ்’ என்று மென்குரல் கொடுத்துவிட்டு, ஒய்யார நடை நடந்து சென்றது.

இன்னொரு சமயமாக இருந்திருக்குமேயானால், சாவித்திரி சும்மா பொம்மை மாதிரி நின்றிருக்கமாட்டாள். தாளிதச் சட்டியில் போடப்பட்ட கடுகுகள் மாதிரி சூடான வார்த்தைகள் வெடித்துச் சிதறும் அவள் வாயிலிருந்து. அவள் கை வெறும் விறகுக் கட்டையையோ அல்லது கேவலம் துடைப்பக் கட்டையையோ அந்தப் பூனைமீது – அது நாசமாய்ப் போக! அதுக்குச் சாவு வரமாட்டேன்கிறதே!” – வீசி அடித்திருப்பாள்.

இப்பொழுதோ, விருந்தாளிகள் வந்து காத்திருக்கிறார்கள். பெரிய தனமும், ராங்கியும் பெற்ற “ராணிகள்” அவர்கள்! அவர்களின் மதிப்பையும் பாராட்டுதலையும் பெற ஆசைப்படும் சாவித்திரி முட்டாள் தனமாகக் காரியம் செய்யத் துணிவாளா என்ன?

ஆகவே விருந்து ஜாம் ஜாமென்று நடந்தது. பால் பாயாசத்தோடுதான். அறியாத்தனமாக ஒரு பூனை – “அதுக்குப் பாடைகுலைய அதுக்கு வாந்தி பேதி வர!” வாய் வைத்துவிட்டது என்பதற்காக, ஒரு சட்டி பாயாசத்தையும் கழுநீர்த் தொட்டியிலே கொட்டிவிட மனம் வருமாபின்னே?

எல்லோரும் பாயாசத்தை விரும்பிக் குடித்தார்கள். தாராளமாகப் பாராட்டினார்கள். அவசரம் எதுவும் இல்லாமல் நிதானமாகவே சாப்பிட்டு முடித்தார்கள்.

இதற்குள், ஒரு அரை மணி நேரம் பறந்து போய்விட்டது.

அரைமணி நேரத்திற்குள் ஊரிலே உலகத்திலே என்னென்னவோ நடந்திருக்கக் கூடும் – எங்கும் எதுவேண்டு மானாலும் நடக்க முடியும் என்பது சாவித்திரிக்குத் தெரியாத விஷயமில்லை . என்றாலும், இப்படி ஒரு காரியம் நிகழ்ந்துவிடும் என்று அவள் சொப்பனத்திலேகூட நினைத்திருக்க முடியாது. தனது பத்தினித் தன்மையின் மின்சக்தி அப்பாவிப் பூனையைக் கொல்லும் ஆற்றலுடையதுதான் என்ற எண்ணம் ஏனோ அவளுக்கு வரவில்லை! பூனை சாகட்டும் என்று அவள் தீவிரமாக எண்ணினாள். வாஸ்தவம் பூனை தோட்டத்திலே செத்துக் கிடந்தது. அதுவும் மறுக்க முடியாத உண்மையேயாகும். அவள் மகிழ்ச்சி அடைய வேண்டியது தானே நியாயம்? ஆனால், பாருங்கள், இந்த உலகத்தில் மகிழ்ச்சி – மன நிறைவு-திருப்தி என்பதெல்லாம் யாருக்கும் சுலபத்தில் ஏற்பட்டுவிடும் என்று தோன்றவில்லை. சாவித்திரியும் மனிதப் பிராணிகளின் பிரதிநிதிதானே!

அவள் மறுபடியும் திடுக்கிட்டாள். “ஐயோ!” என்று இரண்டாவது தடவையாக அலறத் தவித்தவள் அதை அடக்கிக் கொண்டாள்.

விருந்தினர் வெற்றிலை போட்டுக் கொள்வதற்காக, சுண்ணாம்பு எடுத்துப் போக அந்தப் பக்கம் வந்தவள் அவள். அவளுடைய பார்வையில் அந்தக் காட்சி உறுத்தியது. தோட்டத்தில், ஒரு செடியின் அருகில் பூனை கிடந்தது; செத்துக் கிடந்தது. சாவித்திரி அருகில் சென்று நன்றாக ஆராய்ந்து “பூனை செத்தேவிட்டது” என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் உறுதிப்படுத்திக் கொண்டாள்.

அது செத்து நாசமாகட்டும் என்று மனசாறச் சபித்த சாவித்திரியின் நெஞ்சு இப்போது “பக் – பக் ” என்று அடித்துக் கொண்டது. அவள் உள்ளம் கலவரம் அடைந்தது. அவள் வயிற்றை எதுவோ என்னவோ செய்வது போலிருந்தது. “கடன்காரப் பூனை! அது இருந்தும் கெடுத்தது; செத்தும் கெடுத்தது என்பது சரியாயிருக்கு. எனக்கு ஏன்தான் இதெல்லாம் வரணுமோ? என்று வருத்தப்பட்டாள் அவள். பாயசத்தைப் பருகியதனால் தான் அந்தப் பூனை செத்துவிட்டது. இதில் சந்தேகமே கிடையாது. இல்லையென்றால், நல்லாயிருந்த பூனை அரைமணி நேரத்திற்குள் எப்படிச் செத் திருக்க முடியும்? – இவ்விதம் அவள் மனம் புலம்பியது. அறிவு
ஆமோதித்தது. உணர்வுகள் குழம்பின.

என்ன செய்வது என்றே புரியவில்லை அவளுக்கு. தான் விருந்து நடத்திப் பெயர்பெற ஆசைப்பட்ட மடத்னத்துக்காகத் ளதன்னைத்தானே நிந்தித்துக் கொண்டாள் சாவித்திரி. உணவிலே விஷம். அங்கே சாவு, இங்கே பலர் பலி சர்க்கரையிலும் விஷம் கலந்துவிட்டது இந்த மாதிரிச் செய்திகள் பலவும் பத்திரிகைகளில் அவள் படித்தவை எல்லாம் இப்பொழுது அவளது உள்ள அரங்கிலே மின்னல் நாட்டியம் ஆடின. அவளுக்குப் பயம் அதிகரித்தது.

“சரி, நடக்கிறபடி நடக்கட்டும். வருவது வரட்டும் என்று துணிந்தாள் சாவித்திரி, எனவே, வாய்மூடி மௌனியாக இருந்துவிட்டாள் என்று எண்ண வேண்டாம். சாவித்திரி நேர்மை யானவள். அவசியமிருந்தால் பொய் சொல்வாள். அதேமாதிரி, அவசியம் ஏற்படும் போது உண்மையை உள்ளபடி எடுத்துச் சொல்லவும் தயங்கமாட்டாள்.
விருந்து உண்டு மகிழ்ச்சியோடும், உண்ட களைப்போடும் சாய்ந்திருந்த சிநேகிதிகளிடம் உள்ளதை உள்ளபடி சொன்னாள் சாவித்திரி. பூனை செத்துக் கிடப்பதையும், பாயாசத்தில் விஷம் கலந்திருக்குமோ என்ற சந்தேகம் தனக்கு ஏற்பட்டிருப்பதையும் அவள் விளக்கமாக எடுத்துரைத்தாள்.

“ஆங்” என்றாள் வசந்தா. “இதை அப்பவே சொல்லி யிருக்கப்படாதோ? நான் பாயசத்தை “டச்” பண்ணியிருக்கவே மாட்டேனே என்று பதறினாள் பதமா விருந்து வைக்க ஆசைப்பட்ட மூஞ்சியைப் பாரு என்று முனங்கினாள் காவி ஜானகி. “ஐயய்யோ ! மற்றவங்களை விட நான் தானே அதிக அளவு பாயசம் சாப்பிட்டேன் என்று திடுக்கிட்டாள் புதுப்பணக்காரி மீனாட்சி, ஒவ்வொருவர் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தபடி நின்றாள் சாவித்திரி “நிக்கிறதைப் பாரு முண்டம் மாதிரி டாக்டருக்கு போன் பண்ணு. போன் இல்லைன்னா ஆளை அனுப்பு. அர்ஜன்ட்” என்று கத்தினாள் ஜானகி.

“எனக்கு மயக்கம் வருவது போலிருக்கே!” என்று தலையில் கைவைத்துக் கொண்டு சுவரிலே சாய்ந்தாள் வசந்தா.

கோளாறு பத்மா வாந்தி எடுக்க வாசல் பக்கம் ஓடினாள். மீனாட்சி அம்மாளோ பேச்சுமூச்சு இல்லாமல் நீட்டி நிமிர்ந்து விட்டாள்.

பாவம், சாவித்திரி அவள் தன் போதாத காலத்தையும் பொல்லாத விதியையும் எண்ணித் தவித்தாள் கண் கலங்கினாள். கைகளைப் பிசைந்தாள். டாக்டருக்கு ஆள் அனுப்பினாள். அங்குமிங்கும் அலைந்தாள். அமைதியையும் ஆனந்தத்தையும் அடியோடு இழந்து விட்டாள் அவள்.

நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. சாவித்திரியின் உள்ளம் வேதனையைச் சுமந்து. குழப்பத்தால் கலங்கி, அவதியுற்றது.

டாக்டர் வந்து பார்த்தார். அபாயம் எதுவுமில்லை என்று சொன்னார். பத்மா நிம்மதியாக மூச்சுவிட்டாள். ஜானகி மௌனமாகத் தலையை ஆட்டினாள். மீனாட்சி அம்மாள் அசைந்து கொடுத்தாள்.

சாவித்திரி, பாக்டரை வழி அனுப்புவதற்காக வெளியே வந்தவள், அடுத்த வீட்டின் பக்கம் திரும்பிப் பார்த்தாள். அங்கே நின்ற சூரியகாந்தம். சாவித்திரி. உன்னிடம் ஒரு சமாச்சாரம் சொல்லணும்” என்று கூறியபடி நெருங்கி வந்தாள்.

“அப்பவே சொல்லியிருக்கணும். சொல்லிவிடலாம்னு கூட நினைச்சேன் ஆனால் உங்க வீட்டிலே யார்யாரோ வந்திருப்பதாகத் தெரிஞ்சுது. சரி, அப்புறம் சொல்லிக் கொள்ளலாமே, எல்லோரும் சந்தோஷமா இருக்கிறபோது, நாம் போயி அநாவசியமாக…”.

அவசரம் இல்லாமலே பேசத் தொடங்கிய அம்மாளிடம் “என்ன” என்ன விஷயம்?” என்று அவசரமாக விசாரித்தாள் சாவித்திரி.

“உன் பூனை இருக்குது பாரு… அதாவது, ஒரு கறுப்புப் பூனை இருந்தது பாரு – அது வந்து… அடுத்த வீட்டு அம்மாள் அவசரப்படும் பண்பு இல்லாதவள். இழுத்து இழுத்துப் பேசிக் கொண்டிருந்தாள்.

அது சாவித்திரிக்குப் பிடிக்கவில்லை.

“சீக்கிரம் சொல்லுங்க” என்று தூண்டினாள் அவள்.

எங்க வீட்டு அவர் வந்து ஷெடலேயிருந்து காரை எடுத்தார். எடுக்கிற போது இந்தப் பூனை சக்கரத்திலே அடிப்பட்டு விட்டது. மூதேவி அது காருக்கடியிலே போயிப் படுத்துக் கிடக்கும்னு யாருக்குத் தெரியும் ஒரு பூனைக்கு ஒன்பது ஆயுசு அது லேசிலே சாகாது என்பாக. ஆனால் இந்தப் பூனை – இதனுடைய ஒன்பது ஆயுசும் முன்னாலேயே தீர்ந்து போச்சோ என்னவோ! இது பத்தாவது ஆயுசாக இருக்குமோ என்னவோ – செத்தே போச்சு. இதிலே ஒரு அதிசயம் பாரு. அது உடம்பிலே காயம் பட்டதாகவே தெரியலே. பூனை செத்துப்போன உடனேயே உன்கிட்டே அறிவித்துவிடலாமனு எட்டிப் பார்த்தேன். ஏதோ விருந்து நடந்துதா? அப்ப வந்து இந்த விஷயத்தைச் சொல்வானேன்னு நினைச்சு பூனையை எடுத்து உங்க வீட்டுத் தோட்டத்திலே படுக்கப்போட்டேன்…”.

“உன் பண்பாட்டிலே இடி விழ” என்று வாழ்த்தியது சாவித்திரியின் உள்ளம். பரவால்லே மாமி. இப்ப அதனாலே என்ன” என்றது அவள் வாய்.

இந்த உரையாடலைக் கேட்டு நின்ற டாக்டர் சிரித்துக்கொண்டார். “இப்போ உங்களுக்கு எல்லாம் தெளிவாகியிருக்கும். இல்லையா!” என்றார்.

சாவித்திரி வெட்கத்தோடு தலை அசைத்தாள்.

“வியாதியால் சாகிறவர்களைவிட, மனம் சிருஷ்டிக்கிற பீதியினால் பாதிக்கப்படுகிறவர்கள் தொகை அதிகமானது. உண்மையான நோய் செய்கிற அழிவைவிட, நோய் எனும் நினைப்பு செய்கிற சேதம்தான் மிகவும் பயங்கரமானது. புலியை விடக் கிலி அதிக சக்தி பெற்றது. உணவிலே விஷம் கலந்திருக்கும் என்ற பயம்தான் உங்கள் சிநேகிதிகளுக்குக் கோளாறை உண்டாக்கியதே தவிர, விஷம் எதுவுமில்ல. மனிதருக்கு வாய்த்திருக்கிற மனசே ஒரு பெரிய கோளாறுதான்…”.

டாக்டர் தமது அறிவின் விசாலத் தன்மையை அம்பலப்படுத்த முயன்றார்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார்” என்று கூறி அவரை அனுப்பி வைப்பதில் ஆர்வம் காட்டினாள் சாவித்திரி. எப்பொழுதும் எதிலும் – எதற்கெடுத்தாலும் அவசரம் என்பது அவள் குணவிசேஷங்களில் ஒன்றாகும்.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *