கோரைக் கிழங்கை சுண்டு விரல் நகத்தால் ஏழு தலைமுறையாய் விடாது தேடும் கொழுவன் கதை பத்தாம் பருவத்தில் எனக்குச் சொல்லப்பட்டு என் ரத்தத்தின் நிறமாகி கலந்துவிட்டது. கதைகள் எப்பொழுதும் கதைகளாகவே இருப்பதில்லை. கதைக்குள் நிழலாக நடப்பவர்கள் திடுமென்று ஒருநாள் உயிர்பெற்று எழுந்து நம் நரம்போடு பின்னிப் பிணைந்து ரத்தமும் சதையுமாய் சரீரத்தோடு அய்க்கியமாகிவிடுவார்கள். அப்படித்தான் கதையில் கோரைக் கிழங்கு தோண்டிய கொழுவன் ஒருநாள் என்னோடு நிஜமாகவே ஒட்டிக்கொண்டு வீட்டுக்குள் என்னோடு நடமாடினான்; சண்டையிட்டான்; சிரித்தான்; கோபித்துக்கொண்டான்; சேர்ந்து உறங்கினான்; சிக்கலாகவும், சிதிலமான உறவாகவும் நிஜரூபமாய் என் வாழ்வுக்குள் உருக்கொள்ள ஆரம்பித்தான்.
கொழுவன் அழகானவன் கிடையாது. பன்றி முகம் உள்ளவன். கோரைப் பற்களும் வெறி கொண்டு மண்ணை முட்டிக் கிளறும் கோபமும் கொண்டவன். ‘கொழுவனின் கதை புனைவல்ல. அவன் வாழ்ந்தவன். வாழ்ந்துகொண்டிருப்பவன்; என்று பாட்டி பீடிகையோடுதான் கதை சொன்னாள். அது உண்மைதான். இப்பொழுது கொழுவன் உயிர் பெற்று நடமாடும் ஒரு மனுசன். என் இரவின் மீது தூக்கத்திலும் விருப்பமோடு கால் போட்டு உறங்கும் உயிர் பெற்ற நிஜம்.
எங்கள் ஊரின் தெற்கில் ராட்சசமாய் விரிந்திருக்கும் பெரிய ஆலமரத்தின் அடியில், தன் தொப்புள் கொடியை தானே அறுத்து கொழுவனை பெற்றெடுத்தால் பூமா என்று பாட்டி கதையின் முதல் முடிச்சை அவிழ்ப்பாள். பன்றி முகத்தவனை பெற்ற பூமாவுக்கு பன்றி முகம் கிடையாது. அழகான கறுத்த நிறத்தில் மின்னும் உடம்பும், ஈர்க்கும் பருவமும் கொண்டவள். ஒற்றை எருமையை ஏரில் பூட்டி பகல் முழுதும் நிலத்தை உழுது இரவில் பறவை எச்சங்களை விதைத்து கட்டாந்தரையை வனமாக்கி மேகங்களை நதியாக்கியவள். ஒற்றைப் பிள்ளை கொழுவனை பாசமாக வளர்த்து பெரியவனானதும் நிலங்களை அவனுக்குத் தந்து, “மகனே, இதோ இந்த பூமி இதில் உள்ள மரம், புல் பூண்டு, கனி காய், மகரந்தம், காற்று, பூச்சி புழு, பெரிய சிறிய உயிர் எல்லாம் இன்று முதல் உனக்கானது” என்றாள்.
அப்பொழுது கொழுவன் சுண்டு விரல் நகத்தால் மண்னைக் கிளற ஆரம்பித்தான். அதைக்கண்டு திகைத்துப்போன பூமா, “மகனே மண்ணை உழுவது இப்படி அல்ல. ஒற்றை எருமை ஏர் பூட்டி உழவேண்டும்” என்றாள்.
அதைக்கேட்டு ஆத்திரமாய் கத்தினான் கொழுவன். “உழுவது எப்படி என்று எனக்குத் தெரியும். நீ தந்த இந்த நிலத்தைப் பார். இது ஒரு பாலைவனம். வேண்டாதது எல்லாம் இதில் இருக்கிறது. எனக்கு தேவையான கோரைக் கிழங்கு மட்டும் இந்த மண்ணில் இல்லையே… பிசாசே! உதவாத நிலம் தந்த நீ மண்ணில் புதைந்து கோரைக் கிழங்காய் போ” என்று பன்றியின் கோரைப்பல் துருத்த சபித்தான்.
விருட்சம், செடி கொடிகள், அதன் கனி, அதன் காய், பூ, தளிர் இத்தனையும் இருக்கிறது பூமா தந்த நிலத்தில். ஆனால் வேண்டாத கோரைக்கிழங்கு இல்லை என்று சபிக்கிறான் கொழுவன். பூமா ஓலமிட்டு அழுதாள். “ஏ கொழுவா! உன்னால் பெரும் துக்கம் வந்தது. நானும் திருப்பி சபிக்க முடியும். ஆனால் நீ என் ஒரே மகன். பாசம் உனக்கு மறு உயிர் தந்திருக்கிறது. இந்த நிலத்தில் நீ பன்றியாக மாறி யுகம் யுகத்திற்கு கோரைக் கிழங்கை தோண்டிச் சளிக்கப்போகிறாய். நான் கோரைக்கிழங்காக இங்கே இருப்பேன்” என்றாள்.
முகம் மட்டும் பன்றியாக இருந்த கொழுவன் பூமாவின் சாபத்தால் மொத்தமும் பன்றியாகி நின்றான். தனக்கு வந்த சாபத்தையும் தாயின் துக்கத்தையும் அறிந்து பதறிப்போன கொழுவன் “பாசமாக வளர்த்து என்னை பன்றியாக ஆக்கிவிட்டாயே… அம்மா” என்று கதறினான்.
பூமா கொழுவனின் பன்றிக் கண்களை அழுதுகொண்டே துடைத்தாள். “கொழுவா… கொடுத்த சாபம் கறந்த பாலைப் போல் திரும்பப் புகாது. ஆனாலும் கவலைப்படாதே. இந்தக் கதை காதுக்கு காதாக ஊரில் சொல்லப்பட்டு வரும். இந்த துக்கக் கதை கேட்டு ஒரு கன்னிப் பெண் என்றைக்கு சிரிக்கிறாளோ அன்றைக்கு நீ மனிதனாவாய். பிறகு சிரித்த கன்னிப் பெண்ணை கல்யாணம் செய்துகொள்வாய். ஆனாலும் கொழுவா! ஒரு தாயின் வேதனையும் துக்கமும் பிள்ளைகளை சும்மாவிடுவதில்லை. அதனால் நீ வாழும் காலம் முழுதும் இருக்கிற சந்தோசங்களை விட்டுவிட்டு இல்லாத ஒரு அற்பப் பொருளுக்காக ஏங்கி உன் வாழ்வை தொலைத்து நிம்மதி அற்று இருப்பாய்” என்று பூமா சொன்னாள்.
பிறகு அந்த ராட்சச ஆலமரத்துக்கடியில் இருந்த பெரிய பாம்புப் புற்றுக்குள் பூமா புதையுண்டு போனால் என்று பாட்டி கதையை முடிப்பாள்.
சிரிக்காதே என்று எச்சரிக்கை செய்துவிட்டுத்தான் பாட்டி இந்தக் கதையை சொன்னாள். நான் அப்பொழுது கன்னிப் பெண் கிடையாது; சிறுமி. ஒரு பன்றியை ஒருத்தி கல்யாணம் செய்துகொண்டால் எப்படி இருக்கும் என்ற நினைப்பு என் உடையற்ற மார்பில் கிளுகிளுத்துக் கிளம்பியதால் நான் சிரித்துத் தொலைத்தேன். நான் சிரித்த அந்த கனத்தில் அதுவரை பன்றி உருவில் சீற்றத்தோடு கோரைக் கிழங்கை தோண்டிய கொழுவன் மனிதனாக உரு மாறியதும், என்னை கல்யாணம் செய்துகொள்வதற்காக அவன் எங்கோ வளர ஆரம்பித்ததும் எனக்கு அப்பொழுது தெரியாது.
வினோதக் கதைகளின் காலம் சிறுபிராயத்தோடு முற்றுகிறது.
நான் பருவடைந்து, முழுதாகி, கல்யாணத்திற்கு நிற்கும்போழுது கொழுவன் கதை மறந்தே போயிருந்தது. பெண் பார்க்க அவன் வந்தபொழுது பன்றி முகம் இல்லாததால்; வந்தது கொழுவனென்று எனக்கு உறைக்கவில்லை. உறைத்திருந்தால் ‘காமம் துறந்தேனும் கடைசீக் கிழப்பிராயம் வரையிலும் தனித்திருப்பேன்’ என்று சபதத்தோடு ஒண்டியாகி வாழ்ந்திருப்பேன். வந்தவன் முகம் வட்டமாய் என்னை வசீகரித்ததால் உள்ளுக்குள் பூரிப்பு வெடித்து பூப்பூவாய் கொட்ட, மண்டையை நாலா பக்கமும் ஆட்டி என் சம்மதத்தை சொல்லி சகதியில் முதல் காலை எடுத்து வைத்தேன்.
ஆழம் மிக்க ஆள் விழுங்கும் நாற்றமிக்க புதைமண் கொண்ட சகதி அது என்பது அப்பொழுது புரியாவிட்டாலும் போகப் போக புரிந்தது.
பெண் பார்க்க வந்தவன் முகம் வட்டமாக இல்லாமல் செவ்வகமாகவோ, இல்லை அறுங்கோண முக்கோணமாகவோ இருந்திருந்தால் அந்த முக்கோணத் தலையனை பார்த்த மாத்திரத்தில் அப்பாவே திருமணப் பேச்சை நிறுத்தியிருப்பார். என்னளவிற்கு நான் தப்பியிருப்பேன். ஆதிக் கொழுவன் கதையின் நம்பகத்தன்மை வீர்யத்தினால் என்னை பெண் பார்க்க வந்த உலகத்தின் முதல் ஆணும் கடைசி ஆணும் அவனாகவே இருந்தான்.
பாட்டி, தன்னை பெண்காட்டி நிற்கும் காலத்தில் பதினெட்டு குடம் காபியும் மூன்று சாக்குப் பை பனியார பண்டமும் சில ஆயிரம் ரூபாயும் செலவு அந்தக் காலத்திலேயே ஆனதாக சொல்வாள். ஆகக் கடைசியாக வந்த பதினேழாவது மாப்பிள்ளை எனக்கு தாத்தாவாகும் பொருட்டு பாட்டிக்கு மெட்டி போட்டு கட்டிக்கொண்டாராம். ஒத்தைத் தம்ளர் காபியோடு என் பெண்காட்டும் படலம் முடிந்ததில் வருத்தம் எனக்கு. நானும் ஒரு சாக்குப்பை அளவுக்கு பனியார பண்டம் செலவளித்தாவது சரியான மாப்பிள்ளை தேர்ந்தெடுத்திருக்கலாம். ஆனால் இந்த புத்தி நுட்பம் தன் புழுப்பருவத்தை எட்டுவதற்குள்ளாகவே எனக்கும் என் புருசனுக்குமான பல இரவுகள் ஒரு போர்வைக்குள் முடிந்து போயிருந்தது.
நரகத்தின் கொடுமைகளும், துன்பங்களும் அதன் வாசலில் இருந்தே ஆரம்பிக்காது. நரகத்தின் வாசல் ஈர்க்கும் பேரழகோடு, பூந்தோரணம் கட்டப்பட்டு வாசனையும் பாடல்களுமாய்த்தான் இருக்கும். வாசலுக்குள் நுழைந்து நடக்க நடக்கத்தான் நரகம் ஆரம்பிக்கும். சபிக்கப்பட்ட தாம்பத்தியங்களும் ஆரம்பத்தில் இனிமையாக ஆரம்பிப்பதும் அப்படியான ஒன்றுதான்.
கல்யாணமான புதிதில் என் புருசன், தன்னுடைய தேடல்கள், ஆசைகள், கனவுகள் எல்லாவற்றையும் மார்பு இருக்குமிடத்தில் தன் முகத்தை வைத்து சொல்லச் சொல்ல சந்தோசத்தில் என் வஸ்த்திரத்தின் நூல் படபடவென தெறித்தது. மந்தைகளாய்த் திரியுமொரு தேவதைக் கூட்டத்தின் நடுவில் என் வாழ்வு சுபிட்சமாய் கழியப்போகிறது என்று நான் சந்தோசப்பட்டேன். என்னை புரிந்துகொண்ட அவன்; அவனைப் புரிந்துகொண்ட நான். இதைவிட பக்குவமான இல்லற இனிமை உண்டா உலகத்தில்? எனக்கென்ன தெரியும். உள்ளுக்குள் ஒழிந்திருக்கும் நகங்களும் அதன் பிராண்டல்களும். கொட்டை சிதைத்து பழத்தை துளைத்து வெளிவரும்வரை அழகாகவே தெரிகிறது மாம்பழம். பழத்தின் நடு வண்டிற்கான முட்டை பூ மொக்குக் காலத்திலேயே வைக்கப்பட்டுவிடுகிறதே. அப்படித்தான் கோரை தேடும் கொழுவன் ஒரு நாள் எனக்கு முகம் காட்டினான்.
எல்லாவற்றிலும் நேர்த்தியான என் புருசன் உண்ணும் விசயத்தில் படு நேர்த்தி. உணவில் உப்பின் ஒரு எழுத்து கூடுதலாகவோ, காரத்தின் ஒரு ஸ்ருதி குறைவாகவோ இருக்கக்கூடாது. உணவற்று செத்தாலும் உண்ணாமல் இருப்பான். சமைக்;க கற்றுத் தராத அம்மா மேல் எனக்கு ஆத்திரம் வந்தாலும் பாத்திரம் அடிக்கும் தூரத்தில் அவள் இல்லாததால் அடக்கிக்கொண்டேன். கோபப்பட்டும் உபயோகமில்லை. காரணம் என் அம்மாவுக்கே இத்தனை வருச தாம்பத்தியத்தில் எல்லா பதார்த்தங்களும் ருசியாய் இருக்கும் ஒரு வேளை உணவையும் சமைக்கத் தெரிந்ததில்லை. என் அப்பா தவிட்டை வைத்தாலும் மௌனமாய் சாப்பிடும் பசு.
ஆனால் எனக்கு கிடைத்திருப்பது நாக்கிற்கு வணக்கம் சொல்லும் புருசன். சமைக்கவே தெரியாத நான். உருப்படுமா தாம்பத்தியம்?
காமனும், காமத் தீயும் ஆகப் பெருசாய் இருந்த சிலநாள் வரை நான் அடுப்படிப் பக்கம் போகாமல் தப்பித்தேன். ஆனால் ஒரு பெண் அடுப்பில் இருக்கும் நெருப்பைப் பார்க்காமலே வாழ்ந்து மரிப்பது உலகத்தில் சாத்தியமா? நானும் நெருப்பை பார்க்கவேண்டிய நாள் வந்தது. அடுப்புக்குள் உறங்கும் நெருப்பு முதலில் பெண்களை வேகவைக்கிறது. அதன் பிறகுதான் உணவை.
கணவன் மேல் பனியென உருகிய நான் அவனுக்கு பிடித்ததை சமைத்துப் பழகி செய்து கொடுத்து சில அனுபவங்களை பரிசாகவும், திருட்டுத்தனமாகவும் அள்ள ஆசைகொண்டேன். புருசனிடம் கேட்டேன். “உனக்குப் பிடித்த உணவு எது?” என்று.
அவன் “தோசை என்னுடைய உயிர்” என்றான்.
ஆதிப் பேய்களின் உயிர் ஏழு கடல் தாண்டிய கூண்டுக் கிளியின் கண்ணில் இருக்குமென்று கேள்விப்பட்ட நான் என் புருசனின் உயிர் கேவலம் அடுப்பங்கரையில் வார்க்கப்படும் கருப்புச் சட்டியின் தோசையில் இருக்கிறது என்றதும் அதிசயப்பட்டேன்.
கணவனுக்கு பிடித்த உசிரை எப்படியாவது சுட்டுவிட பிரயத்தனப்பட்டேன். எத்தனையோ விதமான வட்டங்களை போட்டுப்பார்த்தும் பக்குவமான ஒரு தோசையை என்னால் சுட்டு அறுவடை செய்ய முடியவில்லை. புருசன் முறுகலான தோசை வேண்டுமென்றான். நானோ கறுகலான தோசைகளை சுட்டுத்தள்ளினேன். நான் வார்த்துத் தரப்போகும் ஒரு தோசைக்காக பல மணி நேரம் அட்சயப் பாத்திரத்தின் வெற்றிடத்தையே பார்த்தபடி இருந்த புருசன் கடைசியில் கேட்டான் “உனக்கு தோசை சுடத் தெரியுமா? தெரியாதா?”
நான் தெரியாது என்று சொல்லியிருக்கலாம். ஆனால் புதுமனைவி புருசனிடம் நகைச்சுவையாக பேசுவது பின் மண்டையில் முறத்தால் அடிக்கும் பாதகமில்லை என்று நினைத்துக் கொண்டு “நல்ல துப்பாக்கியும் ஒரு வட்ட தோசையும் இருந்தால் நன்றாக குறி பார்த்து சுடுவேன்” என்றேன்.
அப்பொழுது என் புருசன் என்னைப் பார்த்த பார்வையில், பாட்டி வாய் விரித்து சொன்ன கதையின் கொழுவன் பிம்பம் எனக்குள் தெரிந்தது. பாட்டி இன்னும் கதை விவரிக்கிறாள். கழுவிய கால்களின் ஈரம்படாத திட்டுக்குள் சட்டென்று வந்தமர்வான் ஏழரைநாட்டான். மகாராணி தலை மீது காக்கை எச்சமிடப் போகிறது. ராஜா பரதேசம் சுற்றி பஞ்சம் பிழைக்கப்போகிறான். இப்படி ஒரு நொடிக்குள் சாம்ராஜ்யத்தின் கால்கள் வான் நோக்கி பதட்டத்தோடு உதைத்துக் கொண்டு சமாதியாகிறது. பாட்டியின் கதை இப்படி விவரனை ஆகும். அந்த கதை எனக்கு புருசன் பார்த்த அந்த பார்வையில் நினைவுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை. என் நகைச்சுவை பேச்சுதான் வாழ்வின் புதிர்க் கண்ணி. அது தன் வேலையை தொடங்கிவிட்டது. கொழுவன் கோரைக் கிழங்கை தோண்ட ஆரம்பித்துவிட்டான்.
நான் படித்திருக்கிறேன். அழகாய் இருப்பதாய் பல பையன்கள் காகிதத்தில் எழுதித் தந்திருக்கிறார்கள். அறிவும் சாதுர்யமும் எனக்கு உண்டு என்று கல்லூரி விரிவுரையாளராக இருந்த தலைமுடி குறைச்சலான ஒரு பெண் பொறாமையோடு ஒப்புக்கொண்டிருக்கிறாள். படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியிருக்கிறேன். நான் வாசிக்கும் இசைக்கருவிக்காக ஒரு சங்கீதப் பெரியவர் கண்ணீர் விட்டிருக்கிறார். தையல் தெரியும். நிஜம் போலவே ஓவியம் வரைவேன். விளையாட்டு மைதானத்தில் ஓடி செலுமையானவைதான் என் கெண்டைக் கால்களும் துல்லியமான தேர்ந்த உடலமைப்பும். நீச்சல் தெரியும். கார் ஓட்டுவேன். மணல் லாரியை கூட தெரிந்தவன் பக்கத்தில் உட்கார்ந்து முயற்சித்திருக்கிறேன். நல்லவர்களிடத்தில் ‘நீ நல்லாயிருப்பே மகராசி’ என்று ஆசீர்வாதம் பெற்றிருக்கிறேன். பிச்சைக்காரர்களை என் கருணையினால் தேற்றி பசியாற்றிருக்கிறேன். உனக்கு எப்படி இத்தனை அறிவு என்று குடும்பம் வியக்க சகலமறிந்த பெண்ணாய் நான் வளர்ந்ததை என் அப்பாவே ஒப்புக்கொண்டிருக்கிறார். இனி உனக்குச் சொல்லித்தர ஒன்றுமில்லை என்று வாத்தியார், தகப்பன், தாய், பாட்டி, உறவு என்று எல்லோருமே சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் அசடுகளா, மக்குகளா? உங்களுக்குத் தெரியுமா? உலகத்தில் ஒரு பெண் முதலில் தெரிந்து கொள்ளவேண்டியது மணல் லாரி ஓட்டுவதை அல்ல. தோசைச் சுடுவதை. எனக்குத்தான் அது தெரியாதே. ஹய்யா… இப்பொழுது நான் என் திறமைக்காக சந்தோசப்பட வேண்டுமா? இல்லை அவமானப்படவேண்டுமா? இல்லை ஹே…! என்று அலட்சியம் காட்டவேண்டுமா? எனக்குத்தான் இத்தனை குழப்பம். என் புருசன் தெளிவாக இருந்தான். “ஒரு பொண்ணா இருந்துகிட்டு தோசைச் சுடத் தெரியாதுன்னு சொல்ல வெக்கமா இல்லையா?” என்று கேட்கிறான்.
நான் அவனிடம் கேட்டேன். “எனக்கு தோசை சுடத்தெரியாது அதனால நான் பொம்பளைன்னு சொல்ல வெக்கப்படணும், சரி. நீங்க ஆம்பளைன்னு எப்படி சொல்லி நிரூபிப்பிங்க. பெரிய வில்லை எடுத்து அம்பு விட்டு அதை உடைக்கத் தெரியுமா? செய்யுங்க பாப்போம்” என்றேன்.
தர்க்கத்தின் பெரும் பேத்தியாய் நான் என் திறமை கேள்வியில் காட்டிவிட்டேன். அதற்காக என் புருசன் விழுந்து விழுந்து சிரிப்பான் என்றும் சாயிந்தரம் கடைத்தெருவிற்கு கூட்டிப்போய் எனக்குப் பிடித்த சுட்ட மக்காச் சோளக்கதிரை பரிசாக வாங்கித்தருவான் என்றும் எதிர்பார்த்தேன். அவனோ என்னை மக்காச்சோளக் கதிரை தின்று சொத்தையாக்கிய புளுவைப் பார்ப்பது போல ஒரு மாதிரியாக பார்த்தான். பிறகு என்னிடம் எதுவும் சொல்லாமல் அவன் அம்மாவிடம் போய் புலம்பினான். “தோசை சுடத் தெரியாத சனியனை என் தலையில கட்டி வெச்சிட்டியேம்மா…”
அவன் புலம்பலை கேட்டு எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆக கடைசியில் சனியனுக்கும் தோசை சுடத்தெரியாது.
சிரிப்பது இருக்கட்டும். தனியரையில் உட்கார்ந்து நன்றாக யோசிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். ஆணுக்கும் பெண்ணுக்கும் இலக்கணம் இருப்பதாய் சிலர் உளரிக்கொண்டிருக்கிறார்களே. பெண் இன்னும் பெற்றுக்கொண்டு, முகம் தாழ்த்தி வெட்கப்பட்டுக்கொண்டு, சமைத்து பரிமாறிக்கொண்டு இருக்கிறாள். அது தானே இன்றுவரை இலக்கணம். ஆனால் ஆண் வில் வளைத்து அம்புவிடுவதில் இருந்து காளைமாட்டை அடக்குவதில் இருந்து மாப்பிள்ளைக் கல் சுமப்பதில் இருந்து தப்பிவிட்டானே எப்படி? இந்த தர்க்கம் என் புருசனின் வஸ்த்திரத்தை நடுத்தெருவில் அவிழ்த்துவிட்டது. அவமானப்பட்டு இரவில் திரும்பிப் படுத்தான். ஆனாலும் எட்டாம் நாள் மோகமற்றுப்போக அவன் முனிவனில்லை. இரவில் சமாதானம்.
மறுநாள் நான் அவனிடம் கேட்டேன். “உனக்காவது தோசை சுடத் தெரியுமா? தெரியாதா?”
“ஆம்பளைங்க எங்கியாவது தோசை சுடுவாங்களா? அதனால என்ன எனக்கு தெரியும். தோசை சுடுவது பிரம்ம வித்தை இல்லை” என்று சொல்லி சமயற்கட்டுக்கு அவன் விஜயம் செய்தான். பெரிய வித்தைக்காரனைப் போல சூடான தோசைச் சட்டியில் வெள்ளை மாவைக் கொட்டி வேகமாக வட்டம் போட ஆரம்பித்தான். அந்த வெள்ளை மாவு கரண்டியோடு சேர்ந்துகொண்டு, மிருகத்தின் பின் செல்லும் பால் குட்டிகளைப் போல உருண்டு திரண்டு கூடவே வந்தது. உருண்டு திரண்ட மாவை தட்டையாக்கும் முயற்சியில் சிறுகரண்டி, பெருங்கரண்டி, முள்கரண்டி, கத்தி, ஊசி என்று என்னென்னவோ உபகரண தொழில் நுட்பங்களையெல்லாம் செய்துபார்த்தும் அந்த தோசையுருண்டை வட்டமாகவோ தட்டையாகவோ இல்லாமல் தவறி விழுந்த சுண்ணாம்புச் சட்டியின் கோரச் சிதிலம் போல அருவருப்பாக சட்டிக்கு நடுவே மல்லாந்து கிடந்தது.
அவன் என் முகத்தை ஏமாற்றத்தோடு பார்த்தான். மறுநிமிஷம் சுதாரித்துக்கொண்டான். சட்டியில் கொஞ்சம் எண்ணை விட்டு உருண்டு திரண்ட மாவை கிளறி வறுத்தெடுத்து தட்டில் கொட்டினான். பிறகு மார் நிமிர்த்தி சொன்னான்,“உலகத்திலேயே தோசைச் சட்டியில் உப்புமா கிளறிய முதல் ஆண் நான்தான்”
நான் அவன் முகம் பார்த்து சிரித்தேன். உண்மையில் ஆண் பெண் பேதா பேதமற்று எவராக இருந்தாலும் சுடத்தெரியாத பட்சத்தில் எல்லோருமே தோசைச் சட்டியில் உப்புமா கிளறும் உலக சாதனை செய்பவர்கள்தான். அவனும் நானும் சேர்ந்து சிரித்தோம். சிரிப்பில் சிலபோழுது சிலதை மறைக்கத் தெரியாமல் போகிறது சில பேருக்கு. நான் சந்தோசமாய் இருக்கிற அந்த கணத்தில்தான் என் பாட்டி எனக்குச் சொன்ன அந்த கொழுவன் கதையை என் புருசனுக்குச் சொல்லித் தொலைத்தேன். என்னிடம் ஆயிரம் திறமை இருந்தும் தோசைச் சுடத் தெரியாததுதான் குற்றம் என்று சொல்கிற அவனும் கொழுவன்தான் என்றேன்.
கதையை முழுசாக கேட்ட என் புருசன் முகம் கருத்து விகாரமாயிற்று. “நான் என்ன பன்றியா?” என்று கேட்டான். என்ன சமாதானம் செய்தும் எடுபடவில்லை. இரவுப் படுக்கையில் திரும்பிப்படுத்தவன் வெகுகாலம் என் பக்கம் திரும்பவேயில்லை.
சில நாட்களில் மனிதனுக்கு பெண்ணிடம் காமம் மறைகிறது. ரௌத்திரம் எழுகிறது. காமத்தைத் தவிரவும் ஆணுக்கு வேண்டியது பெண்ணிடம் இருக்கிறது. துணி துவைக்க, பிள்ளை வளர்க்க, உணவு சமைக்க, சுத்தம் செய்ய, சுகமாய் திட்டிட, கழுதை சவாரி செய்ய, காலில் உதைக்க, அசிங்கம் பூச இப்படி பலது பல அவசியங்கள் இருக்கிறது. ஆணுக்கு பெண்ணிடம் ஆகவேண்டியது காமம் மட்டுமல்ல. ஒரே ஒரு நாள் ஒருசில தோசையின் கருகலில் என் புருசனின் பன்றி முகக் கொழுவன் வெளி வந்துவிட்டான்.
இத்தனை நாள் என் அம்மா சமைத்துப்போட்ட அலங்கோலமான உணவைத் தின்ற என் அப்பா ஒரு வார்த்தை முகம் சுழித்து சொன்னதில்லை, அது எப்படி? அதிசயமாய் கேட்டால் அப்பா அநாயசமாய் சொல்கிறார். “மனுசன் உயிர் வாழறதுக்காக சாப்பிடணும். சாப்பிடறதுக்காகவே உயிர் வாழக்கூடாது.”
இந்த மகா தத்துவத்தை என் புருசனும் நானுமாய் மாமியார் சமைத்த உணவை ருசியாய் உண்டு கொண்டிருக்கும் போது ஒருமுறை சொல்லிவைத்தேன். என் புருசனின் முகத்தில் கோபத்தின் ரத்தம் பீறிட்டோடியது. “எந்தக் கெரகம் கெடைச்சாலும் பரவாயில்ல வயிறு வளந்தா சரின்னு கொட்டிக்க வயிறு என்ன கக்கூஸா…? வாயில வெக்க லாயக்கத்தத திண்ணுதான் உயிர் வாழணுங்கற அவசியமில்ல. சாப்பாடு நமக்காகத்தான் இருக்கணும். சாப்பாட்டுக்காக நாம இருக்கக்கூடாது” என்றான். உண்டு செரிக்கும் வயிற்றை அவன் உண்ணும் பொழுதே கக்கூஸ் என்றதால் எனக்கு சாப்பாட்டுத் தட்டில் கழிப்பறை வாசம் வீசியது. பாதி சாப்பாட்டில் ஓடிப்போய் ஓங்கரித்து வாந்தி எடுத்தேன்.
அன்றிரவெல்லாம் தூக்கம் வராமல் தவித்தேன். ஆதியில் சமைக்க கற்றவனை, நெருப்பின் உபயோகம் அறிந்தவனை, பண்டங்களின் ருசி சூட்சுமம் அறிந்தவனை எல்லாம் சபித்தேன். மொத்தம் முதலாய் பெண் படைத்த பிரமனுக்கு, பெண்ணைப் படைப்பதற்கு முன்புபாகவே தோசை வார்த்துத் தந்த அந்த அடிமைப் பிசாசு எதுவென்று ஏளனமாய் சிந்தித்தேன். மனிதனாகும் முன் இருந்த குரங்காகிற்கும், தொன்மப் பையனுக்கும் கறியுருண்டை உருட்டியது அவனேவா? இல்லை வேறு எவளோவா என்று பித்தேறி பிதற்றினேன். பெண்ணுக்கு சமைக்கும் வேலையை இயற்கையே வைத்திருக்கிறது என்றால் குழந்தைக்கு உணவூட்ட முலையிரண்டு இயற்கையிலேயே இருப்பதுபோல் கையிரண்டிற்கு பதில் அகப்பையொன்றும், பாத்திரமொன்றுமாய் பெண் பிறந்திருக்க மாட்டாளா என்று தர்கத்தில் தலைசுற்றி நடுவீட்டில் உடையவிழ்ந்து தொடைதெரிய விழுந்து கிடந்தேன்.
நான் படித்தவள்தான். பெண்ணின் படிப்பு அவள் தலைமயிர் அளவைக் குறைப்பதற்கு அல்லாமல், காசுள்ள கைப்பையை தோளில் தொங்கவிட்டு திரிவதற்கல்லாமல், அந்நிய புருசனுக்கு பயமின்று முரட்டுக் கரங்களை குலுக்குவதற்கு அல்லாமல் வேறு ஒன்றுக்காகவும் கிடையாது என்று சொல்லவில்லை. உரக்கச் சிரிப்பதும், இருளுக்குப் பிறகு வீடு திரும்வுவதும் சுதந்திரமாய் நான் நினைக்கவில்லை. சுவற்றுக்கு நடுவில் பாதுகாப்பாய் புரண்டு ஒருத்தனுக்கு சந்ததிப் பிண்டத்தை உருட்டித்தரும் வேலையை உவந்து ஒரு பெண் ஏற்றுக்கொண்டாள் படிப்பும், பவிசும், உத்தியோகமும், ஊர்சுற்றுவதும் சும்மா வெளிவேசத்தின் சிகப்புச் சாயங்களாய் இருந்துவிட்டுப் போகப்போகிறது. என் இத்தனை நாள் மொத்த சிருஷ்டியும், என் அறிவும், என் கூர்மதியும் எச்சில் துப்பும் குப்பைத்தொட்டியில் சுருண்டு கிடக்கும் பூனைகுட்டிபோல் பதுங்கிக்கிடக்கிறது. எட்டிப்பார்த்தால் நாய் உறுமிக்கொண்டிருக்க எவன் துப்பினால் என்னவென்று பயந்து மயிர் நட்டுக்கொண்ட பூனையாகவே நாறும் எச்சில் முகமெல்லாம் வழிய சுருண்டு இருக்கிறது என் பெண்மை.
எனக்கும் அவனுக்கும் நடுவில் பெரும் விரிசல் கண்ணுக்கு தெரியாமல் இருந்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தானாம். நான் திருந்துகிறதாய்த் தெரியவில்லையாம். “ஒழுக்கமா தோசை சுடக் கத்துகிட்டு வா. பிறகு குடும்பம் நடத்துற வழிய பாக்கலாம்” என்று இன்முகத்தோடு சொன்ன என் புருசன் வழித் துணையாக பேருந்து நிலையம் வரை வந்து பேருந்து ஏற்றிவிட்டுத்தான் போனான். என் மூன்றுமாத தாம்பத்தியத்தின் தகிப்பு அடங்காமலேயே உஷ்ணத்தோடு நான் தாய்வீடு திரும்பினேன்.
வீட்டில் பாட்டியும் அம்மாவும் கையில் கன்னத்தை பிடித்துக்கொண்டு அதிசயப்பட்டார்கள். நான் எத்தனை பெரிய ஆளுயர சாமி சிலையின் தலை மீது அடித்து சத்தியம் செய்தாலும் என் பாட்டியோ, இல்லை என் அம்மாவோ நான் சொன்னதை நம்பவில்லை. தோசை சுடத்தெரியாத காரணத்திற்காக புருசன் பொண்டாட்டி பிரிந்தது எந்தக் காலத்திலும் நடந்ததில்லை என்றார்கள். வேறு கிறுக்குத்தனமான காரணத்தால் நான் புருசனை வம்புக்கிழுத்து வீடு திரும்பியிருப்பேன் என்று பேசிக்கொண்டார்கள். பாட்டியும், அம்மாவும் இப்படி என்றால் ஊர் வாயைப் பற்றி கேட்கவே வேண்டாம்.
ஊருக்கு இருந்த ஒரே சந்தேகம் எனக்கு அவசியமற்ற இடத்தில் கொழுப்பெடுத்து அடங்காமல் இருந்திருப்பேன், அல்லது தீராத நோய் எதுவும் இருந்திருக்கும், அல்லது புருசன் தலை மேல் கால் போட்டு மகாராணிஅவதாரம் போல பேசியிருப்பேன் என்று அவரவர் திறமைக்கு தக்க கற்பனையில் பேசினார்கள். ஒருத்திக்கு தோசை சுடத் தெரியாததற்காக வாழ்க்கை சூன்யமானதை யாரும் நம்பவில்லை.
நான் பிரிந்திருக்கிறேன். நாட்கள் நொண்டியது. மாதங்கள் தள்ளாடின. சின்ன தமாசு சண்டைதானே என் புருசன் வருவான் என்று நம்பிக்கொண்டிருந்த எனக்கு பெரிய அதிர்ச்சியாக இருந்தது. நிஜமாகவே தோசை என்னை சுட்டுவிட்டதா? அவன் சமாதானத்திற்கு வரவேயில்லை. நானும் இங்கே வட்ட தோசையை சுட்டுத் தெரிந்து கொள்ளும் மனோபாவத்தில் இல்லை. அம்மாவின் பரிதாபப் பார்வை, ஊரின் இளக்காரச் சிரிப்பு அப்பாவின் எதிர்கால அச்சம் நிரந்தரமாய் என்மீது தங்கிவிட்டது.
வெகுநாள் பொறுத்திருந்த பாட்டி என்னிடம் மெதுவாக கேட்டாள், “பாப்பா, இப்படியே இருந்தா எப்படி. நீ என்னதான் முடிவெடுத்திருக்கே சொல்லு”
“இனி தோசை சாப்பிடறதில்லேன்னு முடிவெடுத்திருக்கிறேன், பாட்டி” என்று நான் சொன்னேன். பாட்டியின் உள்ளீடற்ற தோசை தேய்மானமுள்ள பற்களோடு பாவென திறந்து வெகுநேரம் மூடாமல் இருந்தது.
குளித்து முடித்து மொட்டை மாடியின்மீது கூந்தல் உலர்த்திக்கொண்டிருந்த என்னிடம் அம்மா கேட்டாள். “புருசனை பிரிஞ்ச துக்கமே இல்லையாடி உனக்கு?”
நான் மௌனமாக மயிர் உலர்த்தினேன். எனக்கு எப்படி துக்கம் வரும்? என்னை என் புருசன் விஞ்ஞானம் படிப்பிப்பதற்காக வெளிநாடு அனுப்பியிருந்தால் அவனின் பிரிவுத் துயரில் நான் துடித்திருப்பேன். கேவலம் அவன் என்னை தனிமைப் படுத்pயதற்கு காரணம் ஒரு தோசைதானே. எப்படி துயரம் வரும்?
அம்மா முகத்தை இன்னும் விசனமாக வைத்துக்கொண்டு, “உன்னோட வாழ்க்கை என்னதாண்டி ஆகும்? எனக்கு பயமா இருக்குடி.” என்றாள்.
“அம்மா இப்ப நான் குளிச்சிட்டேன். இந்த முடியை நான் உலர வெச்சாகணும். வெயில் இருக்கிறதுனால வெயில்ல முடி உலத்தறேன். வெயில் இல்லாட்டியும் தானே முடி உலர்ந்துதான் போகும். அதுக்காக நான் முடிய அவுத்துப் போட்டுகிட்டு வெயிலு வெயிலுன்னு நடு வீதியில நிக்க முடியது.”என்றேன்.
என் பரிபாஷைகள் புரிந்துகொள்ளுமளவுக்கு அம்;மா துப்புள்ளவள் கிடையாது. மௌனமாய் போனாள். தனிமையில் அவள் அழத்தான் செய்தாள். “நல்லா படிச்ச புள்ளைக்கு புருசன் பிரிஞ்சதால பித்து கொஞ்சம் பிடிச்சிருக்கு. அவ என்னென்னமோ பேசறா” என்று அவள் பாட்டியிடம் சொன்னாள்.
அப்பா என்னுடைய திறமையை மதிப்பவர். என் முடிவுகளை ஒப்புக்கொள்பவர். அவருக்கும் என் நிலைமை புதிராக இருந்தது. அவர் என்னிடம் வந்து, “டே கண்ணு, என்னோட காலம் வரை உனக்கு சாப்பாடு போட்டு நான் பாத்துப்பேன் எனக்கு பின்னாடி உன் நிலமை என்ன. யோசிச்சியா? பலபேரை நான் சமாதானத்துக்கு அனுப்பிட்டேன். மாப்பிள்ளை வருவாருங்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. உன்னோட எதிர்காலம் என்னாகும்?”
அப்பாவுக்கு மிக்க நம்பிக்கையாக நான் பதில் தந்தேன். “அப்பா இரவு வருதேன்னு பயந்துகிட்டு பகலெல்லாம் யாராவது தீப்பந்தம் பிடிப்பாங்களா? இரவு வரும்போது வரட்டும். உங்களுக்கு பிறகு என்னாகும் என் வாழ்க்கைன்றது உங்களுக்கு பிறகே முடிவாகட்டும்.” என்று நான் சொன்னேன்.
தைரியமானவள் போல நான் அப்பாவிடம் பேசினாலும் அன்று இரவு எனக்குள் பெரும் போராட்டமும் விடையற்ற கேள்விகளும் வந்துவிட்டது. அப்பாவிற்கு பிறகு எனக்கான சாப்பாடு, எனக்கான உடை, எனக்கான பாதுகாப்பு யாரிடமிருந்து கிடைக்கும்? நான் நீருக்குள் வீழுந்துவிட்ட மண் புழுவா? மீன்கள் என்னை சூறையாடப்போகிறதா? நித்திரையற்ற இரவில் பயத்தோடு ஆகாயம் பார்த்தேன். ஆகாயமெல்லாம் சின்னதும் பெரிதுமான தோசைகள் தெரிந்தது. பயந்து போர்வைக்குள் ஒண்டினேன் போர்வையெல்லாம் தோசைகள். கண்களும், காதும், வீடும், அண்ட சராட்சரங்கள் எல்லாம் எனக்கு தோசையாகத் தெரிந்தது. வட்ட தோசை பேய்போலும் வந்து என்னை பயமுறுத்தியது.
விழித்திருந்து இரவு முழுதும் நான் யோசித்தேன். அப்பாவோடு என்னுடைய வாழ்வும் முடிந்து போவதில் எனக்கு உடன்பாடில்லை. நான் படித்தவள். எனக்கென்ன பயம். நேராக அப்பாவிடம் போனேன். “அப்பா நீங்க சொன்னத நான் யோசிச்சேன்ப்பா. அதனால நான் ஒரு முடிவு எடுத்தேன்.”
“என்னம்மா? நீயே மாப்பிள்ளை வீட்டுக்கு போய் சமாதானமாயிடப் போறீயா?”
“அப்பா! சொல்லறதை கேளுங்க. நான் ஒரு ஓட்டல் கடை வெக்கலான்னு இருக்கேன். அதுவும் தோசை விக்கிற ஓட்டல் கடை. அது எனக்கு சம்பாத்தியத்தை தரும்.”
அப்பாவின் பார்வையில், அம்மா சொன்னது போல எனக்கு கொஞ்சம் பித்து பிடித்திருக்குமோ என்ற சந்தேகம் தெரிந்தது. நான் அவரிடம் தீர்க்கமாக சொன்னேன், “நிஜமாப்பா. நான் ஒரு தோசை ஓட்டல் நடத்தப்போறேன். நீங்கதான் எனக்கு அதை வெச்சித் தரணும்.” என்றேன்.
அப்பா அம்மாவை கூப்பிட்டார். “உனக்கு தோசை ஓட்டல் வெச்சி நடத்தத் தெரியுமா?” என்று கேட்டார்.
அம்மா நெஞ்சை பிடித்துக்கொண்டு “எனக்கென்ன தெரியும்” என்றாள். பாவம் அவள் சின்ன சட்டியில் குட்டி குட்டியாய் அமீபா தோசை சுடுபவள். நான் நினைப்பது பிரும்மாண்டமான தோசைகள் விற்பனை செய்யும் பெரிய தோசைக் கடையை. அப்பா இதெல்லாம் நடக்காது, நம் பரம்பரையில் யாருக்கும் ஓட்டல் வைத்த பழக்கம் கிடையாது, பெண் உன்னால் ஓட்டல் எல்லாம் நடத்தமுடியாது, வேறு நல்ல வேலை உனக்கு வாங்கித் தருகிறேன் பிழைத்துக்கொள் என்று என்னென்னவோ சொன்னார். ஆனால் நான் தீர்மானமாக இருந்தேன். வைத்தால் தோசைக்கடை வைப்பேன் இல்லையென்றால் ஆப்பக்கார பாட்டிக்கு தத்து பேத்தியாக போய்விடுவேன் என்று மிரட்டினேன்.
வேறு வழி இல்லாமல் என் தாய்மாமனை அப்பா கடிதம் போட்டு வரவைத்தார். என் அம்மாவின் அண்ணன் அந்த தாய்மாமன். அவர் பெயர் தெரியாத எதோ ஒரு ஊரில் ஆயிரக்கணக்கான தோசைகளை சுட்டுத் தந்து நல்ல தோசை மாஸ்டராக வேலை செய்துகொண்டிருந்தார். அவரை வரவைப்பதில் இரண்டு சிக்கல் இருந்தது. ஒன்று தாய்மாமன் பட்ட கடன் அத்தனையையும் அடைக்க வேண்டும். இரண்டாவது குழந்தை இல்லாத தாய்மாமனின் மனைவியை ஒரு வீட்டில் வைத்து பராமரிக்க வேண்டும். இரண்டையும் செய்து அவரை வரவழைத்தார் அப்பா. வெள்ளை ரோமத்தோடும், நெடிய உருவத்தோடும் முகம் முழுக்க சிரிப்போடும் வந்து சேர்ந்தார் மாமா.
ஓட்டல் ஆரம்பித்தாயிற்று. கடையின் பெயர் ‘தோசைக் கடை’ அவ்வளவுதான். நான் பெரிய நம்பிக்கையோடு ஆரம்பித்த அந்த ஓட்டலில் முதல் நாள் சுடப்பட்ட தோசைகளின் எண்ணிக்கை மொத்தம் இருபது. அதில் பத்து தோசையை நானும் மாமாவுமே சாப்பிட்டோம். மீதியை சர்வர் பையன் சாப்பிட்டான். என் அம்மா அன்றைக்கு இரவுகூட புத்திமதி சொன்னாள். “வேணாண்டி, ஆன நஷ்டம் ஆச்சி. இத்தோட விட்டுடுவோம்” என்று. நான் விடவில்லை.
அடுத்து வந்த நாட்கள்; மிக மோசமானவை. கடை ஏறி பசியோடு உண்பவர்கள் வருகிறார்கள். டேபிள் நிறைய உட்கார்கிறார்கள். “இட்டிலி இருக்கிறதா?” என்று கேட்கிறார்கள். இல்லை என்று சொன்னதும் அதை ஒரு செருப்புக்கடை என்று நினைத்துக் கொள்வார்களோ என்னவோ கும்பலாக எழுந்து போய்விடுகிறார்கள். தோசை மட்டும் சுட்டு விற்பதால் இந்த ஓட்டல் உயிர் வாழும் என்ற நம்பிக்கை எனக்கு போய்விட்டது.
இருபது என்ற இலக்கத்தில் ஆரம்பித்த தோசைகளின் எண்ணிக்கை படிப்படியாக வளர்ந்து ஆறு தோசையில் நின்றது. (எனக்கு இரண்டு மாமாவுக்கு நாலு. சர்வர் பையன்கள் வருவதில்லை) ஒரே ஒரு நாள் மட்டும் அதிகபட்சமாக இருபத்தி ஒரு தோசை சுட்டிருக்கிறோம். ஒரு தோசை கீழே விழுந்ததால் எண்ணிக்கை கூடியது. என் தோல்வியை ஒப்புக்கொண்டு நான் ஓட்டலை மூடிவிட உத்தேசித்தேன்.
அப்பொழுதுதான் ஓட்டலின் தோசைக் கல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. மாமாவின் கை வாகும், அவர் செய்கிற சட்னி, சாம்பாரின் சுவையும் அப்படி. கூட்டம் மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. ஓட்டலின் மாவரைக்கும் உரல் ஓயாமல் சுற்ற ஆரம்பித்தது. முப்பத்தி மூணு வகை தோசை, ஆறுவித சட்னி, மணக்க சாம்பார் என்று தோசை சாம்ராஜ்யம் வளர்ந்தது. முறுவலான, மெதுமெதுப்பான, சாதா, ஸ்பெசல் சாதா, மசால் ரோஸ்ட், டபுள் ரோஸ்ட,; ஆனியன், ரவா, நெய், காளான், கம்பு, ராகி, பூண்டு, எலுமிச்சை, பருப்பு, என்று வகைக்கு ஒன்றான தோசைகள்.
சிறியவர், பெரியவர், ஆண், பெண் என்று அனைவரும் குடும்பமாய் வந்து தின்று போனார்கள். இருபத்தி எட்டுபேர் கடையில் வேலை செய்கிறார்கள், ஆயிரக்கணக்கான தோசைகள் வார்க்கப்படுகிறது. நான் கன கம்பீரமாக கல்லாவில் உட்கார்ந்து காசை எண்ணி எண்ணி அடுக்க ஆரம்பித்தேன். அன்று தோசையில் தோற்றேன். இன்று தோசையால் ஜெயித்தேன்.
ஆ…! கிரிகிரி வேலையாய் இருக்கிறது. ஒரே பாட்டில் கோட்டீஸ்வர பெண்ணா? கேட்கலாம். ஆனால் இது ஒற்றைத் திரைப்படப் படாலில் கிட்டிய வெற்றியல்ல. இன்றைக்கு நகரத்தின் புகழ்பெற்ற பெரிய தோசைக்கடைக்கு முதலாளியாக உட்கார்ந்திருக்கிற நான் இந்த நிலைமைக்கு வர பட்டபாடு கொஞ்சமல்ல. மூன்று வருடம் இரவு பகல் எந்நேரத்திலும் நரகம் சந்தித்தேன். தினத்திற்கும் வருகிற விதவிதமான நல்லவர்களையும், கெட்டவர்களையும், படித்தவர்களையும், குடித்தவர்களையும், பெண்களையும், குழந்தைகளையும் சமாளிக்க வேண்டியிருந்தது.
“இதெல்லா…ம் ஒ..ழு தோழ்சையா?” என்று கேட்கும் குடிகாரனையும், “இதென்ன உன் முகம் மாதிரி தீஞ்சி போயிருக்கு” என்று சொல்லும் வக்கிரனையும், “தோசை சொல்லி எத்தனை நாள் ஆச்சி, தோசை வருமா இல்ல நான் உள்ள வரட்டுமா?” என்று கேட்கும் முரடனையும் சமாளித்து வளர்ந்ததுதான் இந்த ஒட்டல். ஆரம்பத்தில் நான் தடுமாறிப் போனேன். குடும்பத்தில் இருப்பவளுக்கு தாலிகட்டியவன் மட்டும்தான் புருஷன். விலகி வந்தவளுக்கு வருகிற போகிறவனெல்லாம் புருசனாகி மிரட்டுவார்கள்.
ஓட்டலே என் வாழ்க்கை ஆனது. புருசன் மறந்து போன ஒரு நாளில் ஓட்டலுக்கு அவன் வந்தான். ஓட்டலில் சாப்பிட வந்திருக்கிறானா இல்லை என்னைப் பார்க்கவா? என் முன்னால் வந்து நின்றான். இப்பொழுது அவனுக்கு நான் மனைவியா இல்லை தோசைக் கடக்காரியா? என்னைப் பார்த்து சிரித்தான். மூன்று மாதம் மட்டுமே வாய்த்த அந்த கதகதப்பு என்னை உலுக்கியது. நான் வெட்கப்படவில்லை. மூன்று வருச பிரிவிற்குப்பின்னும் அவன் என் புருசன்தான்.
“எனக்கு பேப்பர் ரோஸ்ட் ஒண்ணு வேணும்” என்றான். அடப் பாவி மகனே. மூன்று வருடம் பிரிந்திருக்கிறோம். இப்பொழுதும் உனக்கு பேப்பர் ரோஸ்ட் தான் வேண்டுமா? பேப்பர் ரோஸ்ட்டோடு குடும்பம் நடத்தி குட்டி ரோஸ்ட் பெற்றுக்கொள்வாயா? துன்பம் முற்றியது. “டேபிள்ல உட்காருங்க சார்.” என்று சொல்லிவிட்டு சர்வர் பையனிடம், “சாருக்கு ஒரு டபுள் ரோஸ்ட்” என்றேன்.
உட்கார்ந்து கடையை, அங்கிருந்த கூட்டத்தை வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தான். சர்வர் பையன் கொண்டுவந்த ராட்சச தோசையை பார்த்து அவன் வாய் பிளந்துகொண்டது. இதுபோன்ற மஹா பெரிய தோசையை அவனுடைய அம்மாவோ, பாட்டியோ, அவனுடைய முதாதைகள்; யாருமோ அவனுக்கு சுட்டுத் தந்திருக்க மாட்டார்கள். முழுதுமாய் தின்று முடித்து, கை கழுவிக்கொண்டு வந்து காசும் கொடுத்தான். நானும் வாங்கிப் போட்டுக்கொண்டேன்.
“தோசை நல்லா இருந்துச்சி.”
“நன்றி.”
“வீட்டுக்கு போகலாம் வா” என்றான்.
எனக்கு புரியவில்லை. என்னையா கூப்பிடுகிறான்? விருந்தாளியாக அழைக்கிறானா இல்லை மனைவியாகவா? கோயிலில் விட்டுவிட்டு பூ வாங்கப் போன புருசன் பூ வாங்கிக்கொண்டு மனைவியை கூப்பிடுவது போல எத்தனை எளிமையாக கூப்பிடுகிறான். மூன்று வருடம் பிரிந்த ரணம் எனக்குள் இருக்கிறதே.
நான் அவனை மவுனமாகப் பார்த்தேன்.
“நீ இப்ப ஆயிரக்கணக்கில சம்பாதிக்கற… அதை மனசில வெச்சி நான் கூப்பிடறதா நினைக்க வேணாம். என்னவோ கோவம். மடத்தனம். பிரிவு தவிற்க முடியாம போச்சி. அதுவும் நல்லதுக்குத்தான். நீ இப்ப தோசை சுடற வித்தை கத்துகிட்ட பாரு.”
“என்னால வரமுடியாது?”
“நீ கோபத்தில பேசறீயா? நான் செஞ்சது தப்புத்தான் ஒப்புக்கிறேன்.” அவன் பொய்யாய் கன்னத்தில் தட்டிக்கொண்டான்.
“அதுக்காக இல்ல. இது இப்ப தோசைக் கடை இல்ல. இது பலபேருக்கு நிழல் தர்ற வீடு. நான் இதை விட்டுட்டு உன்னோட வந்தா இதன் கூரை இடிஞ்சி போயிடும். பிறகு இதை நம்பியிருக்கிற இருபத்தி எட்டு குடும்பம் தத்தளிச்சிப் போயிடும்.”
நான் அவனுக்கு ஓட்டல் முழுவதையும் சுற்றிக்காட்டினேன். அகல அகல மாவாட்டும் உரல்கள் ஓவென்ற இறைச்சலோடு மாவாட்டிக் கொண்டிருந்தன. மாவை முதியவர் இருவர் அள்ளிக்கொண்டிருந்தார்கள். பட்டை தோசைச் சட்டியில் பெரிது பெரிதான தோசையை வெண்புகைக்கு நடுவே நான்கு ஆண்கள் சுட்டுக்கொண்டிருந்தார்கள். காய் அறிந்துகொண்டும், சாம்பார் வைத்துக்கொண்டும், சப்ளை செய்துகொண்டும் இருந்த அவர்களுக்கு கல்யாணம் ஆகி மனைவி இருக்கிறார்கள். குழந்தை இருக்கிறார்கள். இந்தக் கடை வருமானத்தை நம்பிதான் அவர்கள் இருக்கிறார்கள்.
“இவங்க நல்லதுக்காக உன் வாழ்வு பாழாகணுமா?” கேட்கிறான். இது யாரு என்று கேட்டுக்கொண்டு மாமா வந்தார். அவனைப் பார்த்ததில்லை அவர். எனக்கு சொல்ல விருப்பமில்லை. மௌனமாக இருந்தேன். புருசனே தன்னை புருசன் என்று சொல்லிக்கொண்டான். நான் ஒப்புக்கொள்கிறேனா இல்லையா என்பது அவனுக்கு இன்னும் தெரியாது.
மாமா கண்ணில் கரகரவென்று அழுதார். “நல்ல பொண்ணை இப்படி நட்டாத்துல தள்ளிட்டியே மவராசா” என்று முறையிட்டார். அவன் மாமாவிடம் வெகு நேரம் தனிமையில் பேசினான். பிறகு மாமா வந்தார். “நீ நல்லா இருப்பே, பாப்பா. அவன் கூப்பிடறான் நீ கிளம்பு. இந்த ஓட்டல் இல்லாட்டி வேற ஓட்டல்ல நாங்க சேந்துப்போம்.” வீட்டுக்கு ஆள் அனுப்பி அப்பாவையும் அம்மாவையம் வரவைத்தார். என் பாட்டி வேறு வந்துவிட்டாள். எனக்கு தலை முடி மொத்தமும் அறுந்து தோங்கும் அளவுக்கு அறிவு சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் நான் புருசனோடு போக சம்மதம் சொன்னேன்.
ஆதரவற்ற, குழந்தையற்ற மாமாவுக்கு அந்த ஓட்டலை நான் முற்றிலும் முழுசுமாக கொடுத்தேன். அந்த அளவுக்கு என் வாழ்க்கையில் ஒரு அர்த்தம் இருக்கிறது. நான் போகும்போது மாமா ஓட்டல் வாசலில் நின்று கண்ணீர் விட்டார்.
நான் அவர் அருகில் போய் “கிழவா… எனக்கும் கஷ்டமாதான் இருக்கு. இந்த மூணு வருஷம் நீ எனக்கு குரு, நீ எனக்கு நிழல், நீ எனக்கு நம்பிக்கை.”
எனக்கும் கண்ணில் நீர் வந்தது. “ஆனா கிழவா, நான் வாழப் போறேன். நீ சந்தோசமா என்னை அனுப்பி வெக்கணும். ஒண்ணு சொல்லுவேன் கேட்டுக்கோ கிழவா… எனக்கு மட்டும்; ஒரு குழந்தை பிறந்தா உன் நினைவை மறக்காம அதுக்கு ஆனியன் தோசைன்னு பேர் வைப்பேன். பெண் குழந்தை பிறந்தா மசால் தோசைன்னு பேர் வைப்பேன்.” என்றேன்.
கிழவன் சிரித்தான். சிரிக்கிற கண்ணின் நீர் வைரங்களாகிறது. குறும்புக்கார கிழ மாமன் என்னிடம் கேட்டாhர், “நீ பறந்தடிச்சிகிட்டு புருசனோட போறதை பாத்தா ரெட்டை பிள்ளை பிறக்கும் போல இருக்கே அப்போ என்ன பேர் வெப்பே…”
எனக்கு வெட்கமாகி, “போ கிழவா” என்றேன்.
புருசன் பின்னால் நான் நடையைக் கட்டினேன். எனக்கு புருசன் மேல் இப்பொழுது கோபம் கிடையாது. சாந்தமாக அவன் கை பிடித்துக்கொண்டு நடந்தேன். (சொரணையற்றவள் என்று பாட்டி நான் கிழம்பும்போது சிரித்துக்கொண்டே சொன்னாள்.)
அன்றைக்கு என்ன விசேச நாளோ தெரியாது வழியெல்லாம் பெண்கள் அழகழகாய் கோலம் போட்டிருந்தார்கள்.
“எப்படியோ கடைசியில நீ தோசை சுட கத்துகிட்டே…” என்று அவன் என்ன பேசுவது என்று தெரியாத குழப்பத்தில் பேசினான்.
நான் திகைத்து நின்று அவனிடம் சொன்னேன், “இப்பவும் சொல்றேன். என் ஒட்டல்ல சுட்ட அத்தனை தோசையும் ஆம்பளைங்க சுட்டது. எனக்கு ஒரு தோசையும் சுடத்தெரியாது. நான் உன்னோடு வரவா இல்ல திரும்பிப் போகவா?” என்று கேட்டேன்.
“தாயி, நான் தோசை சாப்பிடறதை விட்டுடறேன். திரும்பிப் போயிடாதே” என்று அவன் கும்பிட்டான். நான் சிரித்துக்கொண்டு அவனோடு நடந்தேன்.
வழிமுழுதும் இருந்த அழகழகான கோலத்தைப் பார்த்துக்கொண்டே வந்த அவன், “ஆமா உனக்கு கோலம் போடத் தெரியுமா?” என்று கேட்டான்.
தெரிந்து கேட்கிறானா? தெரியாமல் கேட்கிறானா? எனக்கு கோலம் போடத் தெரியாதே. தெரியும் என்று சொல்லவதா, தெரியாது என்று சொல்வதா? தெரியாது என்று சொன்னால் திரும்ப பிரிவு வருமா? புருசனிடம் பிரிந்துபோய் தனிமையில் வாழ்ந்து, கோலப் புத்தகத்தை அச்சடித்து விற்று கோட்டீஸ்வரி ஆகும் இன்னொரு சரித்திரம் படைக்கும் விதி எனக்கு இருக்கிறதா? எனக்கு புரியவில்லை. நான் எதுவும் பேசாமல் கோரைக் கிழங்கை பெரும் வனமெங்கும் தோண்டி தேடிக்கொண்டிருக்கும் கொழுவன் பின்னால் மெல்ல நடந்தேன். நான் முன்னோக்கி நடக்கிறேனா இல்லை பின்னோக்கி நடக்கிறேனா என்பது அறியாமல் பாதம் இயங்கிக்கொண்டே இருந்தது.
மிக நேர்த்தியான புனைவு – சுவை நிறைந்த பணியாரம் போலெ !.