கோமதியிடம் சத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 31, 2019
பார்வையிட்டோர்: 6,099 
 
 

(இதற்கு முந்தைய ‘மச்சான்களின் எச்சரிக்கை’ கதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

கோமதிக்கு புத்தி ஒரேயடியா மாறிப் போயிடலை. ஆனா ‘இந்த மனுசனுக்கு தன் அண்ணன் தம்பிகளிடம் இப்படியொரு பேச்சு தேவையான்’னு ஆகிவிட்டது! இதுவே பெரிசுதானே..!

இலஞ்சிகாரன்களுக்கு இசக்கி அண்ணாச்சி மட்டும் சளைத்தவரா என்ன?

“அப்ப என்னை இன்னொரு கல்யாணம் பண்ணிக்கச் சொல்றீங்க.” என்றார்.

“ஒங்க சொத்துலேயும் பணத்திலேயும் சரி பாதியை எங்க தங்கச்சிக்கு எடுத்து வச்சிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குங்க… வேணும்னா இன்னும் ஏழெட்டு கல்யாணம் வேணும்னாலும் பண்ணிக்குங்க.”

“இன்னொருக்க சொல்லுங்க. சொத்துலேயும் பணத்திலேயும் சரிபாதியை எடுத்து வச்சிரவா? என்னத்துக்கு! நானென்ன கோமதியை வீட்டை விட்டா அடிச்சி வெரட்டிப்பிட்டேன், இல்லே தள்ளி வெச்சிட்டேனா, நீங்க கேக்கற சீவனாம்சம் மாதிரி கொடுக்கிறதுக்கு? அவளை நா எதுவுமே சொல்லலை. ஒரு இம்மிகூட வெறுக்கலை. இன்னிக்கி வரைக்கும் அவகேட்டு ஒரு பொருளை நா வாங்கித்தராம இருந்ததே கிடையாது. இந்த இருபத்தேழு வருசத்ல அவ என்ன கேட்டாலும் வாங்கிக் குடுத்திருக்கேன். எந்த ஊரு பாக்கணும்னு சொன்னாலும் உடனே கூட்டிட்டுப்போய் காட்டியிருக்கேன். ஒரு நா அவ மனசு நோகுற மாதிரி ஏதாவது சொல்லி வைத்திருக்கேனான்னு சொல்லச் சொல்லுங்க பாப்பம். எங்க அம்மாவுக்கு மேலதேன் அவளை வச்சி இத்தனை வருசமும் காப்பாத்தியிருக்கேன். சும்மா இல்லை! அதே மாதிரி கோமதியும் என்னை எங்க அம்மாவுக்கு ஈடாத்தான் பாத்துப் பாத்து பராமரிச்சிருக்கா.. அதையும் இல்லேன்னு சொல்லலை நா…!

“அவளுக்குப் பிடிக்காத எந்த ஒரு காரியத்தையும் இது வரைக்கும் நா செஞ்சதே கிடையாது. கோமதி போட்ட கோட்டைத் தாண்டினதில்லை மச்சான் நா. என்னமோ விருவிருன்னு வந்து சொத்துல பாதியைக் குடு; பணத்துல பாதியை எடுத்து வச்சிருன்னு ஒரேயடியா தாண்டித் தாண்டி குதிக்கிறீங்களே! நா நெனச்சிருந்தா கோமதிகிட்டக் கூட சொல்லாமே, எவனுக்கும் தெரியாமலேகூட இன்னொரு கல்யாணத்தை பண்ணியிருக்க முடியும்! எத்தனை தடிப்பய அந்தமாதிரி பண்ணி ஊரையும், பெண்ணாட்டியையும் ஏமாத்திக்கிட்டு இருக்கான். அந்த மாதிரி நா இவளை எமாத்தியிருந்தா, பிராடுத்தனம் பண்ணியிருந்தா அப்ப நீங்க கேக்கலாம் சொத்தை எழுதித் தாடான்னு! அப்படி ஏதாவது அக்ரமம் பண்ணியிருக்கேனா? எதுவும் இல்லை. ஏதோவொரு சோசியக்காரன் அவ்வளவு நிச்சயமா சொன்னான்னதும் எனக்கும் ஒரு வாரிசுன்னு இருந்தா தேவலையேன்னு தோணிச்சி. அது தப்பா?”

“நானும் ஒங்க எல்லாரையும் போல ஒரு சாதாரண மனுசன்தான் மச்சான்! எனக்கு மட்டும் அந்த ஆசை வரக்கூடாதா? ஆனா நீங்களும் கோமதியும் நெனைக்கிறதையும் சொல்றதையும் பார்த்தா எனக்கு அந்த ஆசை வரக்கூடாது போலிருக்கு! அவ்வளவுதான? சரி. அந்த ஆசையை நான் விட்டுடறேன். இவ்வளவு நாள் வாரிசு இல்லாமலே பொழுதை ஓட்டியாச்சி! மிச்சப் பொழுதையும் அப்படியே ஓட்டிப்பிட வேண்டியதுதான். வாரிசு இல்லேன்னா குடியா முழுகிப் போயிடப்போவுது? சரிம்மா கோமதி, ஒன் விருப்பத்துக்கு விரோதமா இன்னொரு கல்யாணம் நா செஞ்சுக்கறதா இல்லை. ஏதோ என்னோட போதாத நேரம்! கொஞ்ச நாள் ஏதேதோ கிறுக்குத்தனமா பேசி, கிறுக்குத்தனமான காரியமெல்லாம் செய்யப் பார்த்தேன்! அதயெல்லாம் மறந்துரு. இப்பவும் நீ போட்ட கோட்டை நான் தாண்டறதா இல்லை.”

இவ்வளவு பேசியதில் இசக்கிக்கு உடம்பெல்லாம் வேர்வை ஊறிப் போயிருந்தது. உள்ளே போய் ரெண்டு சொம்பு தண்ணியைக் குடித்துவிட்டு, மச்சான்களை திரும்பிக்கூட பார்க்காமல், செருப்பை மாட்டிக்கொண்டு வேகமாக தெருவில் இறங்கி, கடையை நோக்கி நடந்து விட்டார். அவர் நடந்த நடையேகூட ‘இப்ப என்னடா பண்ணுவீங்க’ன்னு கேட்பது போலிருந்தது!

நிசம்தான் அது. இலஞ்சிகாரன்களுக்கு இப்ப என்னடா பண்ணுவது என்கிற மாதிரிதான் இருந்தது. பனங்காட்டு நரி சலசலப்புக்கெல்லாம் பயப்படாமல் மேலே விழுந்து பிடுங்கும்; அதன் வாலை ஓட்ட வெட்டி விட்டுத்தான் போகணும் என்ற நினைப்பில் வந்தவர்கள் ‘நரி வாலைச் சுருட்டிக்கிட்டு அடங்கி ஒடுங்கி ஓடிப் போய்விட்டது’ என்ற சந்தோஷத்துடன் ஊர்போய்ச் சேர்ந்தார்கள்.

பாவம், என்னைக்கும் நரி நரிதான் என்கிற உண்மை தெரியவில்லை அவர்களுக்கு!

ரொம்ப நாள் கழித்து புருசனும் பொண்டாட்டியும் பக்கத்தில் பக்கத்தில் படுத்திருந்தார்கள். இரவு விளக்கின் சன்னமான வெளிச்சம் ரெண்டு பேரின் கண்களிலும் மிதந்து கொண்டிருந்தது. அவர்களுக்கு பேச்சு வரவில்லை. ரொம்ப நேரத்துக்கு மெளனமாகவே படுத்திருந்தார்கள்.

“இன்னைக்கு கறி வத்தலை நல்லாவே சாப்பிடலையே நீங்க?” கோமதி நிமிர்ந்து படுத்திருந்தபடியே கேட்டாள்.

“சாப்பிட்டேனே…”

“இல்லை. சாப்பிடவே இல்லை. நா பாத்துக்கிட்டுதான் இருந்தேன்.”

“நல்லா சாப்பிட்டதாத்தேன் நா நெனைக்கிறேன்.”

“இன்னும் எம்மேலே கோவமா இருக்கீங்க.”

நரி பேசாமல் இருந்தது.

“நா போயி என் அண்ணன் தம்பிகளை கூட்டியாந்திருக்கக்கூடாது!”

நரி அக்கறையாய் பல் குத்திக் கொண்டிருந்தது.

“வாரிசு இல்லாமப் போச்சேங்கிற வருத்தம் யாருக்கும் வரத்தான் செய்யும்.”

“என்னமோ அடியாளுங்க மாதிரி வந்து மெரட்டினானுங்க, அதேன் கோபம் எனக்கு…”

“என் வாழ்க்கை எப்படிப் போயிருமோன்னு கவலை அவுகளுக்கு.”

“அப்ப எனக்கு மாத்திரம் ஒன் வாழ்க்கையைப் பத்தி கவலை கெடையாதா?”

“நா சொன்னனா அந்த மாதிரி?”

“உண்மையைச் சொன்னா ஒனக்காகத்தேன் பணிஞ்சி போனேன்.”

நிமிர்ந்து படுத்திருந்த இசக்கி, கோமதியின் பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்தார்.

“எனக்கு ஒரு பக்கம் ஒங்களோட ஆசைக்கு குறுக்கே நிக்கக்கூடாதுன்னுதேன் இருக்கு! ஆனாலும் என்னமோ பயமாயிருக்கு.”

வளைக்குள் நண்டு சஞ்சரிப்பது நரிக்குத் தெரிந்தது…!

“இதுல பயப்படறதுக்கு என்ன இருக்குன்னுதேன் தெரியல!”

“என்னை மறந்திட்டீங்கன்னா?”

“இது எல்லாப் பொம்ளைங்களுக்குமே இருக்கிற புத்தி!”

“நீங்க ஆம்பளைங்க அப்படித்தேன் பேசுவீங்க.”

“அந்தக் காவலூர் சோசியக்காரனைப் போய் நாளைக்கிப் பாக்கணும்.”

“என்னத்துக்கு?”

“எனக்கு இன்னொரு தாரம் வரும். அவ மூலமா வாரிசு வரும்னு சொல்லி எங்கூட பந்தயம் கட்டியிருக்கானே! போயி அந்தப் பந்தயத் துட்டைக் குடுரான்னு கேட்டு வாங்கி வந்திரலாமா? துட்டை என்னத்துக்கு அநியாயமா வுடணும்?”

கோமதியும் புருசன் பக்கம் திரும்பி ஒருக்களித்துப் படுத்தாள். அவளுக்குப் புருசன் மேல் ரொம்ப இரக்கம் வந்தது. ‘பாவம் மனுசன் வாரிசு வாரிசுன்னு மனசுக்குள் கெடந்து சாகிறார்’ என்ற அனுதாபம் ஏற்பட்டது.

மங்கின வெளிச்சத்தில் ஒளிக் கோடாகவும், இருட்டின் திரட்சியாகவும் தெரிகிற புருசனின் முகத்தையே பார்த்தாள். அந்த நெத்தி, கண், மூக்கு, கம்பீரக் குஞ்சு இவற்றுடன் ஒரு வாரிசு பிறந்தால் எப்படியிருக்குன்னு யோசித்தாள்! கொடுத்து வைக்காத மனுசன்!

‘என்னைக் கட்டினதாலதானே அப்படி ஆகிவிட்டது. எனக்குப் பதிலா அந்தக் காலத்திலேயே வேற எவளையாவது கட்டியிருந்தா மனுசர் பேரன் பேத்தி எடுத்திருப்பார்!’ அவரை அனுதாபத்துடன் பார்த்தாள்.

“என்ன அப்படிப் பாக்கிற?”

இசக்கி ரொம்பத் தாழ்ந்த குரலில் கேட்டார். வேற எதற்கோ தயாராகிவிட்ட குரல் இது!

“ஒங்களைப் போலவே ஒங்களுக்கு ஒரு பயல் இருந்தா எப்படி இருப்பான்னு நெனச்சிப் பாத்தேன்.”

“நானே நெனைக்கிறதில்லை! நீ போட்டு நெனைக்கிறியாக்கும் அப்படியெல்லாம்!”

கோமதி ரொம்பவும் நெருங்கி வந்து புருசனைக் கட்டிப் பிடித்துப் படுத்துக்கொண்டாள். அவளின் மனசு திடீரென்று ரொம்பவும் பொருமியது. எப்பேர்ப்பட்ட புருசன்! உச்சாணிக்கொம்பில் தூக்கி வச்சிருக்கும் புருசன்..!

அவள் போடுகிற கோட்டைத் தாண்டக்கூட செய்யாத ரொம்ப உசந்த புருசன்!

அழுகை பொங்க கோமதி புருசனை இறுக்கிக்கொண்டாள்.

“இப்ப என்னத்துக்கு திடீர்னு இந்த அழுகை?”

இசக்கி படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்து கேட்டார். மனைவியை அள்ளி மடியில் போட்டுக்கொண்டார்.

கோமதியின் கன்னங்களில் நீர் தாரை தாரையாகப் போய்க் கொண்டிருந்தது.

“இப்படியே நா போய்ச் சேந்துட்டாக்கூடத் தேவலை.” விசித்து அழுதாள்.

“இப்படியெல்லாம் பேசினா நா மாடிக்கு எந்திரிச்சிப் போயிருவேன்.”

“எனக்கு நீங்க ஒரு சத்தியம் செஞ்சி தருவீங்களா?”

“ஒனக்கு இல்லாத சத்தியமா கோமு?”

“என்னைக்கு எனக்கு சாவு வருதோ, அதுவரைக்கும் நாம இப்படியே இருக்கணும்.”

“கண்டிப்பா நாம இப்படியேத்தான் இருப்போம் கோமு.”

“எந்தச் சமயத்திலும் என்னை மறந்திரக்கூடாது… தள்ளி வச்சிரக்கூடாது, லச்சியம் பண்ணாம இருந்திரக்கூடாது. இந்த வீட்டுக்கு நாந்தேன் எசமானியா என் உசிரு இருக்கிற வரைக்கும் இருக்கணும். எனக்கு அப்படி ஒரு சத்தியம் பண்ணித் தருவீங்களா?”.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *