கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 4, 2013
பார்வையிட்டோர்: 11,506 
 

ஏனப்பா பக்கீர் சந்தூக்கு போயிருச்சா?

ஜாஹிர் அது அப்பவே எடுத்துட்டு போயிட்டாங்கம்பா!

ஓஹ், சரி குழி வெட்றதெல்லாம் சரியா, ஒழுங்கா இருக்கானு பார்த்துக்கனும் சரியா!
சரிம்பா, நான் நின்னு பார்த்துக்கறேன்.

எப்பேர்பட்ட ஆளு மைய்யத்து, நீதான் அனுபவமான மோதி அதான் உன்கிட்ட இவ்வளவு படிப்படியா சொல்லிட்டு போறேன்.

என்று கூறிய மசூதியின் தலைமை பொறுப்பாளர் நேரே கோட்டை வீடு நோக்கி பயணமானார்.

மண் வீதிகள் மிகைத்து காணப்படும், வயல் பரப்புகளும், நீர் நிலையங்களும் குவிந்து காணப்படும் கீரனூர் கிராமத்தின், வட-தெற்கில் முகங்களை காட்டியவாறு அமிந்திருக்கும் பெரும் பெரும் மினராக்களை கொண்டு மிளிரும் மசூதியிலிருந்து, ஒற்றை அடி பாதையாக வளைந்து, வளைந்து சொல்லும் பாதையின் கடைசியில் உள்ளது அந்த கோட்டை வீடு.

சரியாக இவ்வளவு பரப்புகள் என்று வரையறுத்து கூற முடியவில்லை. செங்கற்கள், செம்மண் கலவை கொண்டு, ஒரு ஐந்து பெரிய குடும்பங்கள் வசிக்கும் அளவிலாக, நிலத்தடியிலிருந்து அரை ஆள் உயரத்தில் வளர்ந்து நிற்க்கும் அந்த கோட்டை வீடு. ஊரார் இதனை இப்படி அழைப்பதுவே பழக்கம்.

அப்பேற்ப்பட்ட கோட்டை வீட்டைச் சுற்றியும் கூட்டம் மொய்த்தது. வீட்டின் மைத்தில் பெரிய பெரிய வியாபார வல்லுநர்களும், கொஞ்சம் வெளியேறி செல்ல செல்ல பொருளாதார அடிப்படையில் குறை கொண்டவர்களாக சுருங்கிக் கொண்டே போய், இறுதியில் தெருக்களில் நின்றும் குத்த வைத்தும் அமர்ந்திருந்த பணியாட்கள், பண்டாரர்கள், அன்றாடம் காட்சிகள் என் நீண்டு இருந்தது அந்தக் கூட்டம்.
மசூதியின் ஒலிப் பெருக்கியில், ‘தலைப்பாக்கட்டுக்காரர்.சேக் முகம்மது இராவுத்தர் அவர்களின் ஜனஸாவை குளிப்பாட்டிக் கொண்டுள்ளனர்’ எனும் அறிவிப்பு வெளிப்பட்டவுடன், அவ்வூரில் உள்ள மிச்ச,சொச்ச ஆண்களும் கோட்டை வீடு நோக்கி திரண்டனர்.

“அஷ்ஹது அன் இலாயிலாஹா இல்லல்லாஹீ, என்ற பெரும் திரள் சப்தங்கள் ஓங்க கோட்டை வீட்டின் பெரிய வாயில் கேட்டை தாண்டி வெளிப்பட்டது, முற்றிலும் பச்சை வர்ண, அரபு எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட போர்வை போர்த்தி, மல்லிகை மலர் குவியலாய் போடப்பட்டிருந்த அந்த சந்தூக்குப் பெட்டி. கோட்டை வீட்டிலிருந்து ஐந்து நிமிட நடையில் இருக்கும் மசூதி வரையிலும், கலிமா சஹாதத் என்று கூறிக் கொண்டே அந்த நூற்றுக் கணக்கான கூட்டங்கள் சந்தூக்கை சுமந்து செல்லும் நபர்களை பின் தொடர்ந்து சென்றனர்.

மசூதிக்குள் கூட்டம் நிரம்பி வழிந்தது. தூக்கி வரப்பட்ட சந்தூக்கு மசூதியினுல் வைக்கப்பட, அதனை முன்பாகக் கொண்டு எல்லோரும் பின்னால் வரிசை வரிசையாக நிற்க்க, இசுலாமிய முறையிலான இறுதி தொழுகைப் பிரார்த்தனையினை நிறைவு செய்தார், இப்ராஹிம் ஹஜ்ரத்.

மரப்பாய் விரிக்கப்பட்டு, அதன் மேல் நல்ல வாசனை கட்டைகளும், விறகுக் கட்டைகளும் வைத்து அமுக்கியிருந்தனர் அந்த அகல, நீண்ட குழிக்குள். சேக்முகம்மது இராவுத்தரின் உடல், வெள்ளை துணியால் முழுவதுமாக சுற்றிக் கட்டப்பட்டு அந்த குழிக்குள் இறக்கப்பட்டது. பின் மெல்ல குழிக்குள் வைக்கப்பட்ட அந்த மனிதரின் முக மறைப்பை மட்டும் விலக்கி, யாரேனும் தீதார் பார்க்காதவங்க இருந்தா பார்த்துக்கோங்கம்பா என்று சப்தமாக கூறினார் மசூதியின் தலைமை ஊழியர் பக்கீர். பின்னர் ஒவ்வொருவரும் குழி வெட்டப்பட்ட மண்ணை சிறுபிடி கையிலெடுத்து வைக்க, அதனை நேர்த்தியாக ஒரு வட்டியில் வாங்கினார், பாஷா..

வட்டியில் உள்ள மண்ணை குழிக்குள் கொட்டிய உடம், மரப்பாயால் இராவுத்தரின் உடலை மறைத்தனர் சுற்றத்தார். அதன்பின்னர், குமிக்கப்பட்டிருந்த மண்ணை மண்வெட்டிகளாலும், கரங்களாலும் அள்ளியும் தள்ளியும் குழியினை மூடி, பின்னர் அதனை கூம்பாக வடிவமைத்து. அதன் இரு முனைகளிலும் மரக் கன்றுகள் நடப்பட்டு, மல்லிகைப் பூச் சரம் குறுக்கு நெடுக்காக போடப்பட்டது. இதனையடுத்து பாங்கு கூறும் ஹஜ்ரத், தண்ணீர் நிரம்பிய ஒரு கரு மண் சட்டியினை கையிலெடுத்து, அந்த சமாதியினைச் சுற்றிலும், அரபியில் ஏதோ ஜெபித்துக் கொண்டே ஊற்றினார். பிறகு, அனைவரும் அச்சமாதி சுற்றி அமர, சேக்முகம்மது இராவுத்தருக்காக இறைவனிடத்தில், அவரது அடுத்த உலக வாழ்வு சிறக்க, அனைவரும் கையேந்தி துவாக் கேட்டு பிரார்த்தினர்.

சாரை சாரையாக கூட்டம் மசூதியிலிருந்து கலைந்து வெளியேறியது. வெளிவரும் மக்களிடத்தில், மோதி நூரம்பா சர்க்கரையினை பெரிய தட்டில் வைத்து ஏந்தி எடுத்துக் கொள்ளுமாறு பணிந்து கொண்டே நின்றிருந்தார். கூட்டம் கோட்டை வீட்டை நோக்க்கி சென்றது. அடக்கம் முடித்து வந்த ஆண்களிக்கெல்லாம் டீ கொடுக்கப்பட்டது முறையாக, வீட்டுப் பெண்களாலும், ஊழியர்களாலும்.

இப்படியாக, ஒருவழியாக தலைப்பாக்கடுக்காரர் எனும் கம்பீர தோற்றமுடைய, கெளவரம் செறிந்த, வசதிகள் பல படைத்த, வள்ளல் குணம் கொண்ட சேக் முகம்மது இராவுத்தர் எனும் ஒரு மனிதரின் உடல் அன்றைய தினம் மண்ணுக்குள் குடியேற்றப்பட்டது.

*********************************************************

என்னங்கடா கல்யாண வீடா? இல்லை மெளத் வீடா? இங்கேயும் வந்து குழம்பும் சோறு போடறீங்க. பிசுனாறிப் பயலுக. கல்யாண வீட்டுல பிரியாணி போட்றதுக்கு என்னவாம் உம்ம்ம்….

பாபுண்ணே, எல்லோரும் பார்க்கராங்க. கம்முனு கிடைச்சத சாப்பிட்டு சத்தம் இல்லாம போங்க.

நீ மூடிக்கிட்டு திண்ணுடா ஜாஹிரு திண்ணு. உன்னை மாதிரி நக்கித் திங்கறவனாடா நாணு நாயே.

அட கோபப் படாத பாபு, சாப்புடு, சாப்புடு.

போட வக்கத்தவனே. இங்கெயெல்லாம் சாப்பட வந்ததுக்கு சாகலாம். ஏய் எல்லோரும் இழைய சுருட்டிட்டு போங்கடா…. போங்க….

என்று தான் மட்டுமே புலம்பியவனாகவும், கடுமையாக திட்டியவனாகவும் திருமண மண்டபத்தையும் விட்டு வெளியேறினான் பாபு.

இவனெல்லாம் யார் உள்ள விட்டது, பரதேசி போட்றது திண்ணிட்டு போறத விட்டுப்போட்டு, இவனுக்கெல்லாம் இவ்ளோ கொழுப்பு வேண்டி கிடக்குதா?
சதக்கப்பா, பேசாம சாப்புடு, அவனப் பத்திதான் தெரியும்ல, அப்பறமென்ன சாப்புடுப்பா, என்றபடி தன் எழுந்து சென்றார், ஜாஹிர்.

****************

சின்னபண்ணே, ஏதாவது கொடுத்திட்டு போங்க.

அட போன தடவை வந்தப்போதான பாபு கொடுத்தேன்.

சின்னப்பா, அது எப்போ வந்தது நீ.

ஊர்ல ஒரு கல்யாணம், மெளத் வந்தரக் கூடாதே உனக்கு, ஒருத்தர விட மாட்டேங்கற. காசுலாம் இல்லைப்பா, பேசாம வம்பு பண்ணாம போ போ…

ஊர்ல ஏதாவது ஒன்னுனாதான், எல்லோரும் வர்றீங்க. ஏதாவது கொடுத்திட்டு போ சின்னப்பா.

இந்த புடிச்சுக்கோ, ஆள விடு.

என்னது இது இந்த பிச்சைக் காசு பத்து ரூபாய வச்சு என்னத்தப் பண்றது?

அட அவ்ளோதான் எங்கிட்ட இருக்கு, நீ நகருப்பா.

போ…போ… பொடி நாயி….

காஜா, ஒரு டீ போடு. காசு இல்லைங்கறது நாயிக. அப்போ வந்தானுக நக்கி நக்கித் திங்கறதுக்கு, பண்டார பயலுக.

பாபு, சத்தம் போடாதப்பா, இந்தா டீ அமைதியா குடிச்சிட்டுப் போ.

பிச்சையா போட்ற, போடா. காசு கேட்டா இவனுகளுக்கு கேடு வந்திருது.
யார இப்போ இப்புடி திட்டிக்கிட்டு இருக்கற நீ?

அந்த ஊட்டிக்காரன் சின்னாப்பா பரதேசியைதான்.

ஏய், ஏன்பா நீ, ஊர்ல பெரிய மனுஷனுகள இப்படி, கண்டபடி பேசிக்கிட்டு இருக்கற.
என்னத்த பெரிய அவனெல்லாம் பெரிய புடுங்கி, எங்க வீட்ல நக்கித் திண்ண பண்டார
நாயி அவன், பொடித் திருடன்…

அடவிடுப்பா, விடு.

கணக்குல எழுதிக்கோ.

உம் சரிப்பா, நீ சத்தம் போடாம போ.

பாபு தொல்லை தாங்க முடியறது இல்லைப்பா காஜா.

பாவம், அவன் என்னத்த செய்வான் உசேனு.

பாவமாத்தான் இருக்கு, அதுக்குனு ஒவ்வொருத்தரையும் போட்டு வாய்க்கு வந்தபடி ஏசறப்போ, ஓங்கி செவுனி சேர்த்து ஒன்னு விடலாம் போல இருக்குப்பா.

அட நீ வேற. அவன் திட்றதுலயும் என்ன தப்பு. அவங்க அத்தா தலைப்பாக்கடுக்கார்கிட்ட பொறுக்கித் தின்னவனுகதான, இன்னைக்கு ஊர்ல பணக்காரனுக பல பேரு. ஏதோ ஐஞ்சு, பத்துனு கொடுத்திட்டு போக வேண்டியதுதான.

அதுமென்னமோ சரிதான் காஜா.

*************

கமரப்பா, சீக்கரம் போ புள்ள, உன்னைக் கேட்டுகிட்டே இருக்கறாங்க, கோட்டை வீட்ல.
அட இந்தாக்கா, அங்கதான் கிளம்பி போயிட்டு இருக்கேன்.

தம்பி போலாம்ங்களா?

பொறு இராசப்பா, அத்தாகிட்ட சொல்லிட்டு வந்தறேன்.

நான் கிளம்பறேங்க.

உம், சாப்டாச்சப்பா?

ஹா, சாப்டேங்க.

சரி, பார்த்து போயிட்டு வாப்பா.

இராசப்பா, எல்லாம் ரெடி பண்ணி வச்சுட்டியா?

சாமி, எல்லாம் ஆயிடுச்சுங்க.

பார்த்து தம்பிய கூட்டிட்டுப் போயிட்டு, கூட்டிட்டு வரனும். எங்க அந்த கமரப்பா?
அந்தப் புள்ள, இப்போதான் வந்திட்டு, பானும்மா ஏதோ சொன்னாங்கனு கடை வீதிக்குப் போயிருக்குங்க. வந்ததும், பள்ளிக்கூடத்துக்கு வந்திடும்ங்க.

சரி, சரி கிளம்பு.

பார்த்து ஏறுங்க தம்பி, பக்குவமா…

வர்ரேங்க அத்தா.

உம் சரிப்பா….

சலங்கை சத்தம் கேட்குது, தம்பி கிளம்பி வந்திடாப்புல. இந்தா குலாமண்ணே சட்டுனு கொடுங்க. கோட்டை வீட்ல திட்டு வாங்கனும்.

அட பொறு கமரப்பா.

உம் பொறுக்க வேண்டிதான். அங்க கேட்டாங்கனா, குலாம்தான் இழுத்தடிச்சுட்டாருன்னு சொல்லிட்றேன்.

ஆமால, இந்தா நீ கிளம்பு. தலைப்பாக்கட்டுக்காரர்கிட்ட ஏதும் சொல்லி தொலைக்காதல, அவுக அப்பறம் தப்பா நினைச்சுக்குவாக.

தெரிதுல, அப்புடி சட்டுனு கொடுக்கறது.

**********************************

சலங்கை ஒலி எழுப்ப, ஒட்டகப் பல்லக்கில் கடைவீதி கடந்து, குளத்துப் பள்ளிக்கூடத்திற்கு பாபு எனும் பகதூர் செல்லும் போது, சுற்றி இருக்கும் அனைவருக்கும் ஒரே வேடிக்கைதான். ஒட்டகத்தினை கவனமாக வழிநடத்தி செல்பவர்தான் இராசப்பா. பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு மணிநேரத்திற்க்கும் இடையில் பாபுவிற்கு, பாலும் இன்னபிற திண்பண்டங்களும் கொடுத்து பக்குவமாக பார்த்துக் கொள்ள வேண்டியது கமரம்மாவின் வேலை.

காலு கூட தரையில பட விடாம பார்த்துகறாக பாரு.

உம் கோட்டை வீட்டு புள்ளைனா அப்படித்தான்ல ஜோராப்பா.

ஆமாக்கா, அங்கேலாம் பொறக்கறதுக்கு கொடுத்து வச்சிருக்கனும். நமக்கும் வாச்சிருக்கே வாழ்க்கை என்ன கமரக்கா உம்ம்ம்!

ரொம்ப அழுத்துக்காதல. அம்மா இல்லாத புள்ளைகனு போட்டு, அவரு அவ்வளவு பொறுப்பா, நல்லா பார்த்துக்கறாரு. இந்தக் காலத்துல இவுக மாதிரி யாருடி. இம்புட்டு வசதி வச்சுக்கிட்டும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்காம, இந்த புள்ளைகள பார்த்துக்கறாரு. அதுலயும் பாபு கடைசிப் பையங்கறதால, மத்த ரெண்டு பேத்தக் காட்டுலும், ரொம்ப பாசம்டி அவருக்கு.

ஆமாக்கா இருக்காதா, பின்ன.

சரி சரி, தம்பிக்கு என்ன வேணும், ஏதுன்னு கேட்க்கனும் நான் பள்ளிக் கூடத்துக்குள்ள போறேன்டி.

சரிக்கா.

பாபு, தற்சமயம் குள்ளத்துப் பள்ளிக்கூத்தில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டுள்ளான். அவன் பள்ளிக்கூடம் சென்று வருவதற்க்கும், வெளியில் எங்கேனும் செல்வதற்க்காகவே, அவனுக்கென இரண்டு ஒட்டகங்களும், இரண்டு குதிரைகளையும் வாங்கி வைத்துள்ளார், சேக்முகம்மது இராவுத்தர். இதுபோக அவரின் பயன்பாட்டிற்கும், அவரது ஏனைய பிள்ளைகளான பானு எனும் கதீமா பானுவிற்கும், பாஷா எனும் காதர் பாஷாவிற்குமாக மொத்தம் மூன்று அம்பாஸிட்டர் கார்களும், ஐந்து குதிரை வண்டிகளும், நான்கு ஒட்டகங்களும் வைத்திருந்தார் தலைப்பாக்கட்டுக்காரர்.

***************************

ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும், சிறப்புத் தொழுகை மசூதியில் நடக்கும். அப்போது, கீரனூரை சுற்றியிலும் உள்ள ஊர்களிலுள்ள வறியவர்கள் கீரனூரில் குவிந்து விடுவர். இதுபோக வெகு தூரத்திலிருந்தும் வறியவர்கள் வருவதுண்டு.
ஏய் கமரப்பா இன்னைக்கு என்ன விஷேசம் கோட்டை வீட்ல?

பானும்மா எங்கயோ படிக்கறதுக்கு வெளியூர் போகுதாம்மா, அதான் மெட்ராஸ்ல இருந்து அவங்க மாமா, வெள்ளையப்பா இராவுத்தர் வந்திருக்கறாகல ஜோராப்பா.
ஓஹ், அப்படியா செய்தி. அப்டீண்ணா வழக்கதைவிட இன்னைக்கு பெரியவர்கிட்ட இருந்து நிறைய கிடைக்கும்ல?

உம் நாளைக்கு ஊர் விருந்து இருக்குடி கிறுக்கி. ஐயா பேசிக்கிட்டு இருந்தாங்க.
இருக்கப்பட்டவக உம்ம்ம்…

ரொம்ப இழுக்காதடி, இருக்கப்பட்டவகதான். அதுக்கென்ன இப்போ உம்ம்.. தன் குடும்பத்துக்கு செய்றதுல கால் பங்கு இந்த ஊருக்கும் செய்றாகல.

அட நானென்ன குத்தமாவா சொல்லிப்புட்டேன், பொதுவாத்தான பேசனேன். அதுக்கேன் நீங்க முகதை சுழிக்கறீங்க.

போடி பொளப்ப பாருடி ஜோராப்பா.

என்ன சின்னப்பா, மூட்டைகளெல்லாம் ஏத்திவிட்டியா?

அண்ணே அதெல்லாம் ஏத்திட்டேனுங்க. பாபு தம்பிக்கு வெல்லம் வேணும்னு கேட்டாங்கனு பானும்மா காலைல சொன்னாங்களா அதானுங்க ஒரு மூட்டை இங்க கொண்டு வந்தேனுங்க.

சரி சரி, உள்ள சொல்லி வச்சிட்டு. சிக்கந்தர்கிட்ட கணக்கு கொடுத்திட்டு, உனக்கு போக கூலி ஆளுகளுக்கு எவ்வளோனு கேட்டு வாங்கிட்டு போ, சீக்கரம், இன்னைக்கு வெள்ளிக் கிழமைல சீக்கிரம் குளிச்சிட்டு பள்ளிவாசலுக்கு வா, போ..போ…

சரிங்கண்ணே.

மாரியப்பா, இன்னைக்கு சாயங்காலம், வாழைத்தண்டும், செவ்வெளநி ஒரு பத்து காயும் கொண்டு வந்து போட்டிருப்பா.

சரிங்க சாமி.

பானும்மா, பாபும், பாஷாவும் குளிச்சு ரெடியானதும் பள்ளிவாசலுக்கு நேரத்திலயே வரச் சொல்லுமா.

சரிங்கத்தா.

நானும் மாமாவும், வெளில கிளம்பறோம். இங்க யாராவது முஷாபர்க வந்தா, ஜீலையப்பாட்ட சொல்லி, ஜீம்மாக்கு பள்ளிவாசலுக்கு வர சொல்லிடும்மா.

சரிங்கத்தா, எல்லாம் வழக்கம் போலத்தான, நான் பாத்துக்கறேன்.

சரிம்மா, நீ இருக்க பொறுப்பா எல்லாதையும் பார்த்துக்கற. நாளைக்கு நீயும் கிளம்பி போயிறுவ.

படிக்கறதுக்குத்தானத்த போறேன், நாலு வருஷத்துல வந்திட போறேன்.

சரிம்மா, சூதானம். தங்கப்பா எல்லாம் ரெடியாப்பா?

அண்ணே, வண்டி ரெடிங்க, காசுத் தட்டு ரெடியா எடுத்து வச்சுட்டேங்க.

பரபரப்பாக நகர்ந்தது, வெள்ளிக்கிழமை. சிறப்பு ஜீம்மா தொழுகையும் சிறப்பாக முடிந்தது. மசூதியின் முற்றத்தில் உள்ள உயர வாயிற்படிகளில் வறியவர்கள், யாசகர்கள் கூட்டம்.

பாஷா, காசு தட்டு கொண்டு வாப்பா.

இந்தாங்கத்தா.

எங்கிட்ட வேணாம்பா, மாமா கிட்ட கொடு.

இந்தாங்க மாமா.

தட்டில் மேலாக மூடியிருந்த வெள்ளைத் துணியினை, இறைவனை வேண்டியவராக திறந்துவிட்டார் சேக்முகம்மது இராவுத்தர்.

தம்பி பாபும்மா, எடுத்துக் கொடும்மா.

சரிங்கத்தா என்று கூறிய பாபு, தன் கை நிறைய காசுகளை அள்ளி அள்ளி வரிசையாக வருபவர்களிடம் கொடுத்துக் கொண்டே இருந்தான். சரியாக முப்பது நிமிடங்களில் எல்லாம் முடிந்தது. ஆனாலும் ஒரு சொற்பக் கூட்டம், தலைப்பாக்கட்டுக்காரரின் முகங்களை பார்த்துக் கொண்டே இருந்தனர்.

மகளுக்கு கல்யாணம்ங்க, வீட்டுக்காரர் நோய்வாய்ப்பட்டு கிடக்கறாருங்க, பையனுக்கு கண்ணுக்கு, ரொம்ப தூரத்துல இருந்து வந்திருக்கேனுங்க… என்றவாறு பல புலம்பல்கள் ஒலித்தன.

ஏம்பா, சிக்கந்தர் எல்லோருக்கும் பார்த்து ஆகறது கொடுத்து விடுப்பா சரியா. எல்லோரும் ஒரு மூனு மணிக்கு மேல கோட்டை வீட்டுக்கு வாங்க, கணக்குப் பிள்ளைகிட்ட சொல்லியிருக்கேன் தருவாப்புல.

சரிங்க முதலாளி… என்ற ஒரு கும்பல் சப்தம் உருவாகி அடங்கியது.

மீரான் பாய், பொண்ணு கிளம்பறதுக்கு தேவையானதெல்லாம் கரெக்ட்டா பார்த்து எடுத்து வச்சிருங்க வண்டியில, மறந்திடாதிங்க.

அதெல்லாம் தயாரா வச்சுபுட்டேங்க.

சனிக்கிழமை மதிய வேளை, கோட்டை வீட்டினைச் சுற்றிலும் பந்தல்கள் போடப்பட்டு ஊர் விருந்து நடந்து கொண்டிருந்தது.

மகள் மெட்ராஸ் செல்கிறாள் என்ற கவலையுடன் இராவுத்தரும், அக்காளை பிரியும் சோகத்தில் பாபுவும், பாஷாவும் இருந்தனர். இவர்களுக்கு சமாதானம் கூறிக் கொண்டிருந்தனர், இராவுத்தரின் மச்சண்ணனும், அவரது மனைவியும். அதாவது, பாபுவின் மாமாவும், மாமியும்.

ஊர் விருந்து நடந்து ஓய்ந்தது. மணி மாலை ஐந்தாகிவிட்டது. கார்கள் தயார் நிலையில் கேட்டிலிருந்து வெளியேறி நின்றது.

ஆறு மணிக்குள்ளாக, பானு மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் மேற்படிப்பு படிக்க கிளம்பிவிட்டிருந்தாள்.

கோட்டை வீட்டில், இரவு மாடத்து விளக்குகள் ஒளி வீச, அமைதி நிலவியது.

***********************************

பானு கீரனூர் விட்டு கடந்து ஆறு வருடம் கழிந்த காலமது.

கோட்டை வீடு முழுக்க மட்டுமல்ல, கீரனூரே பந்தலும் தோரணங்களும் அலங்கரித்தன. பானு, திருச்சி காப்பிக் கம்பெனிக்காரர் ஜியாவுதீன் வீட்டை புகுந்த வீடாக ஏற்றுக் கொள்ளுவதற்க்கான திருவிழாக் கோலமது.

ஊரின் பெரிய வீட்டுக் கல்யாணம்னா சொல்லவா வேண்டும். மணமகன் குடும்பமும், திருச்சி நகரில் வியாபார செல்வந்தர்கள். மணமகன் கைசரும், மேற்படிப்பு படித்தவன்தான்.

பானு-கைசர் திருமணம் அவ்வளவு விமர்சியாக நடந்தது ஒரு வாரமாக. பக்கத்து ஊரில் உள்ள பல மக்களும் இங்கு தஞ்சம் அடைந்திருந்தனர் ஒரு வாரத்திற்கு. அப்படி இருந்தது விருந்து. ஊரை சுற்றிலும் கார்கள் மிகைத்திருந்தன. பணச் சுவான்தார்கள் பலரும் வந்திரங்கியிருந்தனர்.

ஒருவார திருவிழாவின் நிறைவு நாள்.

சின்னப்பா….
சொல்லுங்கண்ணே

நீயும், மீரான் பாயும் போயி சாமான் செட்டு, சீர்வரிசைகளெல்லாம் பார்த்து கரெக்ட்டா வண்டில ஏத்திவிடுங்க. ஆளுக வேணும்னா, தோப்பாளுகள கூப்பிட்டுக்கோங்க சரியா.
உம், ஆகட்டும்ணே.

சுற்றிலும் ரோஜா மலர்களால் ஜோடிக்கப்பட்ட காரின் ஜன்னல் வழியாக கழுத்தும், கையும் நீட்டியபடியே, அழுகையோடு தனது தகப்பனாரிடமும், தம்பிமார்களிடமும், மாறி மாறி பானு பேசிக் கொண்டிருக்க, பேசிக் கொண்டிருக்க, கார் நகர்ந்து கொண்டே போனது.

பானு கோட்டை வீட்டை நிரந்தரமாய் விட்டும் பிரிந்து, திருச்சி காபிக் கம்பெனிக்காரர் வீட்டில், கைசரின் மனைவியாய் குடியேறிய, மூன்று வருடங்களில், சேக்முகம்மது இராவுத்தரும், மண்னுக்குள் குடியேறிவிட்டார்.

****************************

தந்தையின் பிரிவால் வதங்கிப் போன செல்லப் பிள்ளை பாபு, மிகவும் உடல் நலிந்து நோய் பீடிக்கப்பட்டு படுக்கையாய் இருந்தான்.

இராவுத்தரின் மரணத்திற்குப் பிறகு, வியாபாரங்களை கவனிக்கும் பொறுப்புகளில், பாஷா ஏற்றதால், தனது மேல்படிப்பினை இடையில் விட்டுவிட்டு வியாபாரங்களை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். எனவே அவரால், தம்பியை சரிவர கவனிக்க இயலவில்லை. ஆகையால் தனது அக்கா பானுவை, அழைத்து வந்து கோட்டை வீட்டில் தங்க வைத்துவிட்டு, பாஷா வெளியூர் செல்வதும், வருவதுமாக இருந்தார்.
என்னப்பா செய்யுது? மெல்ல சாஞ்சு படுத்துக்கோ.

எப்போக்கா இந்த ஆஸ்பத்திரி விட்டு, நம்ம வீட்டுக்கு போறது?

உம் போயிடலாம்பா, சீக்கிரத்துல.

பாபுவின் உடல் மிகவும் மோசமான நிலையில், அவனை பழனியிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர். அவனோடு பானுவும், கமரக்காவும்தான் அதிக நேரம் இருந்தனர்.

ஒருவழியாக இரண்டு வாரங்களுக்குப் பின்னர் பாபு கோட்டை வீடு திரும்பினான். அவன் மருத்துவமனையில் இருந்த நாட்களில், தனது அக்காவின் கவனிப்புகளை அவ்வளவு எளிதாக விளக்கிவிட இயலாது. ஒரு தாயை விடவும் அதிகமாக பார்த்துக் கொண்டால்.
பின்னர் இரண்டு வருடங்கள் கழிந்தன…

பாஷாவிற்கு அவரது மாமா தலைமையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பாஷா, வியாபார நிமித்தமாக மெட்ராஸ் பக்கமே சென்றுவிட்டார் தனது மனைவியுடன்.
கோட்டை வீட்டையும், வயல்களையும், மண்டிகளையும் பாபுதான் பார்த்துக்கொண்டு வந்தான். இராவுத்தரின் பாசத்திற்க்குரிய மகன் என்பதால் கீரனூரில் உள்ள பெரும்பாலான சொத்துக்களையும், கோட்டை வீட்டையும், பாபுவின் பெயரிலயே எழுதி பாத்தியப்படுத்திவிட்டிருந்தார் அவர்.

தினமும், கீரனூர் சொத்துக்களையும், வீட்டையும் பொறுப்போடு பார்த்துக் கொண்டே பாபுவின் வாழ்நாள் இருபத்தி மூன்று வருடங்களை தொட்டுவிட்டது. அந்நிலையில் ஒருநாள்…

பாபுவின் மச்சான், அதாவது பானுவின் கணவர் பம்பாயில் தொழில் தொடங்குவதற்க்காக போதிய பணம் இல்லையென்ற காரணத்தால், கீரனூரில் உள்ள வயல்களை விற்பதற்க்காக, சில நபர்களை கூட்டி வந்து காட்டினார்.
ஊருக்கு மச்சான் வருவது தெரிந்த பாபு, கோட்டை வீட்டில் விருந்து வைத்து காத்திருந்தான். வந்தவர் நேரே சென்று வயல்களை விலை பேசுவதை அறிந்த பாபு திகைத்துப் போனான்.

சிக்கந்தர் கணக்கரிடம் சென்று, அதெப்படி மச்சான் நம்ம நிலத்தை அவரே விற்க்க முடியும்ணே?

ரொம்பவும் சங்கடத்துடன் சிக்கந்தர் வாய் திறந்தார், தம்பி உங்க பேர்ல இருக்கற எல்லாத்தையும்தான நீங்க உங்க அக்கா பேர்ல எழுதி கொடுத்திட்டீங்க, அதாங்க இப்புடி…..

அண்ணே நானெப்போ அப்படி எழுதிக் கொடுத்தேன்?

இராவுத்தர் போனதுக்கப்புறம், உங்களுக்கு உடம்பு முடியாம இருந்தீங்க. அப்போ உங்க அக்காவும், மச்சானும் உங்க பாண்ட் பேப்பர் ரெடி பண்ணிட்டு வந்து எங்கிட்ட சொத்து கணக்கு கேட்டாங்க, நானும் எல்லாம் சொன்னேன். அப்பறம் ரெண்டு வாரம் இருக்கும், உங்க கையெழுத்து போட்ட பேப்பர்களோட, நம்ம குட்டிலெவை பத்திரக் கடையில போயி எல்லாம் பண்னிட்டு போயிருக்காங்க. லெவைதான் எல்லாம் சொன்னாரு.
இது பாஷா தம்பிக்கு தெரிஞ்சதும், அவர்தான் இதையெல்லாம் தம்பிகிட்ட சொல்லிட்டு இருக்காதிங்க, உடம்பு சரியில்லாதவன், பார்த்து பக்குவமா கவனிச்சுக்கோங்கனு சொல்லிட்டு போனாருங்க.

இதையெல்லாம் கவனமா கேட்ட பாபு, என்னங்கண்ணே கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேன்ல. பானுக்காவ இப்படி பண்ணுனது, நம்ப முடியலையேண்ணே என்று புலம்பிக் கொண்டே நகர்ந்துவிட்டான்.

பாபுவிற்கு உடல் சரியில்லாத போது, வியாபாரம் தொடர்பாக பாஷா உன்னிடம் இந்த பேப்பர்லலாம் கையெழுத்து போடச் சொன்னான் என, அவ்வப்போது பாபுவிடம் கையெழுத்துகளை வாங்கி, முழுவதுமாக சொத்துக்களை சுருட்டிவிட்டாள் பானு.
பாஷாவோ, பாபுவை சந்திப்பது அரிது. ஆகையால் பாபுவும், தன்னுடைய பங்கு வியாபாரத்தில் இருப்பதால், ஏற்றுமதிக்கு நமது கையெழுத்து தேவையாக இருக்குமென்று நினைத்தும், அண்ணனால் நம்மை காண நேரம் கிடைக்காததால் அக்காவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார் போல என்று நினைத்தும், பாபு ஒவ்வொரு முறையும், மயங்கிய படுக்கை நிலையிலயே கைழுத்து போட்டிவிட்டான். பாபு கல்வியற்றவனல்ல. அவன் மேல்நிலை கல்வி பயின்றவன். ஆங்கிலத்தில் பாண்டியத்தியம் பெற்றவன்.

தனது சொத்துக்களை அக்கா ஏமாற்றி கைப்பற்றியதனை எண்ணி, எண்ணி பாபு மன உளைச்சலுக்கு ஆளாகினான். காலப்போக்கில் அவனைச் சுற்றியிருந்த பகரும் மாயமாகினர். கணக்கர் சிக்கந்தர் இறந்து போயிடவே, பாபு தனியாக வாழ்ந்து கொண்டிருந்தான்.

இவனின் நிலை கருதி பாஷா அடிக்கடி வந்து, வெளியூர் கூப்பிடுவான், ஆனால் பாபுவோ திட்டமாக மறுத்து, கோட்டை வீட்டிக்குள்ளே அடைந்து கொண்டான். காலங்கள் பல சென்றது கோட்டை வீடு பாழடைந்த வீடாக இன்றும் உள்ளது, இடிந்த நிலையில்.
வீட்டின் உரிமை சாசனத்தைப் பொறுத்த வரையில், அதன் ஒரு பங்கு பாஷாவிற்கும் இருப்பதால், பாபுவின் மச்சான் கைசரால் அதனை விற்க முடியவில்லை.
பானு தனது கணவரோடு மும்பையில் குடியேறிவிட்டாள். பாஷா சென்னையில் வியாபாரத்தில் மூழ்கியமையால், வருடம் வருடம், ரம்ஜான் நோன்பின் பொழுது கீரனூர் வந்து பாபுவைப் பார்த்துச் செல்வதும், அவனின் உடலை தூய்மைப்படுத்தி விட்டுச் செல்வதும் வழக்கமாகிப் போனது.

பாபுவின் கால்கள் எங்கெங்கோ சுற்றி அலைந்தாலும், கீரனூரின் எல்லையை தாண்டிச் சென்றதில்லை. தனது அத்தாவிடம் கைகட்டி வேலை பார்த்த பலரிடமும், காசு கேட்டு வாங்கி வைத்துக் கொள்வான். அதில் சிலரைத் தவிர பலர் தருவதென்பதே கிடையாது.
பீடியும், டீயும் அவனது உயிர் ஆகரங்களாக ஆகிப் போனது. வருடம் பாஷா தரும் உடைகளையும், பொருள்களையும், பணங்களையும் பத்திரமாக கொடியிழந்த கோட்டை வீட்டிற்க்குள் முளைத்திற்க்கும் முற்செடிகளின் இடுக்குகளில் பாதுகாத்து வைத்துக் கொள்வான். அவனோடு அந்த வீட்டில் நாய்களும், பூனைகளும் சேர்ந்து கொண்டு வாழுகின்றன.

ஊரின் எல்லை வரை சென்று திரும்பிய பாபுவின் கால்கள், மெல்ல மெல்ல குறைந்து தெற்க்குத் தெருவிற்க்குள்ளயே சுருங்கிக் கொண்டது. அவனது இருப்பிடங்களாக இடிந்த கோட்டை வீடும், ஊரில் தற்போது செல்வாக்கு மிகுந்த ஒரு வீட்டின் வாசல் படியும், தனது அத்தா அமர்ந்து கட்டப்பஞ்சாயத்து செய்த சத்திரமுகாக ஆகிப்போனது. அவ்வப்போது ஊருக்கு வரும் நபர்களிடம் காசு கேட்பதனையும், சாப்பாட்டிற்க்காக விஷேச இடங்களுக்கும், வீடுகளுக்கும் செல்வதையும் முற்றிலுமாக தவிர்த்து, தனது எழுபத்தி நான்கு வயதிலும், ஏதோ ஒரு நம்பிக்கையில் உலவிக் கொண்டுள்ளான்.
பாஷா கீரனூர் வந்து வருடங்கள் ஐந்தாகிவிட்டது. அவரின் நிலை குறித்து யாருக்கும் ஏதும் தெரியாது. பாபுவிற்கும் அதுபற்றி கவலைகள் இல்லாது போலத்தான் தெரிகின்றது.

*******************************

தார் சாலைகளும், வணிகக் கட்டிடங்களும், அரசு அலுவலகங்களும், வங்கிகளுமாக மாறிப்போனது கீரனூர்.

ஏய் அம்சும்மா, ஊட்டிக்கார் வந்திருக்காப்புல போலடி.

ஆமாக்கா, நமக்கு முன்னாடி அந்த சுலைம்மாவும், மீராவும் போயிருப்பளுகக்கா.
உம் அவக போறதுக்குள்ள, உம் புள்ள கல்யாண விசயத்தை சொல்லி வச்சுடு புள்ள, அப்போத்தான் வீட்ல பொம்பளைங்ககிட்ட சொல்லி வச்சிட்டு போவாரு பணத்துக்கு.
உம் சரிக்கா இன்னைக்கு சாயங்காலம் போயிட்றேன்.

ஊட்டிக்காருக்குத்தான் இப்போது கீரனூரில் செல்வாகு அதிகம்.
அவர் சாலையை கடக்கும் போதும், நடக்கும் போதும் அவ்வளவு மரியாதை.
ஊரின் மிகபெரும் வீடும் இவருடையதுதான்.

ஊரின் ஒவ்வொரு திருமணங்களிலும் இவரே தலைமை வகிப்பவராக திகழ்ந்து வருகிறார், நவீனக் கீரனூரில்.

ஊட்டிக்கார இராவுத்தர், தன்து வீட்டிற்க்கு செல்லும் போது, தனது வீட்டின் வடக்கு நோக்கி நுழைவுக் கதவில் அமர்ந்திருக்கும் பாபுவை ஏளனமாகப் பார்த்துக் கொண்டே கடப்பார். அவர் வீட்டின் முக்கிய நுழைவாயில் மேற்க்கு நோக்கி அமைந்துள்ள இரண்டாம் கதவே ஆகும்.

இவர் தன்னை ஏளனமாக பார்த்து கடந்து செல்லும் ஒவ்வொரு முறையும் பாபு அவரை ஏமாளியாகப் பார்த்துக் கொண்டே, ஒரு மெளனப் புன்னகையில் பாடம் சொல்லுவான், ‘நேற்றைய பெரிய வீட்டுக்காரன் இன்றைய பெரிய வீட்டுக்காரன் வீட்டு வாசல் படியில். இதேதான் இன்றைய பெரிய வீட்டுக்காரனுக்கும்’ என்றாவாது மனதிற்க்குள் முனுமுனுத்தவாறே.!

———————————————————

இச்சிறுகதைக்கான கலைச்சொற்கள்:

 • சந்தூக்கு – மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்க்காக எடுத்துச் செல்ல பயன்படும் பெட்டி
 • மைய்யித்து, ஜனஸா, – இறந்த உடலை குறிப்பது.
 • அஷ்ஹது அன் இலாயிலாஹா இல்லல்லாஹீ, கலிமா சஹாதத் – இசுலாத்தின் இறை நம்பிக்கைக்கான இரண்டாவது உறுதிமொழி. இறந்தவர்கள் உடலை தூக்கி செல்லும் போது இதனை கூறுவார்கள்.
 • ஹஜ்ரத் – இசுலாமிய மதகுரு.
 • தீதார் – இரந்தவர்களின் உடலை இறுதியாய் பார்ப்பது.
 • பாங்கு – தொழுகைக்கான அழைப்பு.
 • மோதி – மசூதி ஊழியர்.
 • மெளத் – இறப்பு

 

Print Friendly, PDF & Email

2 thoughts on “கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்

 1. நல்ல படைப்பு தலைவா. தலைப்புக்கேற்ற கதை.
  மீண்டு இது போல பல படைப்புகளை எதிர்பார்க்கிறேன் உங்களிடம்.

 2. “கோட்டை வீடும், கொடியிழந்த பாபுவும்” எனும் இச்சிறுகதைக்கான கலைச்சொற்கள்:
   சந்தூக்கு – மரணித்தவர்களை அடக்கம் செய்வதற்க்காக எடுத்துச் செல்ல பயன்படும் பெட்டி
   மைய்யித்து, ஜனஸா, – இறந்த உடலை குறிப்பது.
   அஷ்ஹது அன் இலாயிலாஹா இல்லல்லாஹீ, கலிமா சஹாதத் – இசுலாத்தின் இறை நம்பிக்கைக்கான இரண்டாவது உறுதிமொழி. இறந்தவர்கள் உடலை தூக்கி செல்லும் போது இதனை கூறுவார்கள்.
   ஹஜ்ரத் – இசுலாமிய மதகுரு.
   தீதார் – இரந்தவர்களின் உடலை இறுதியாய் பார்ப்பது.
   பாங்கு – தொழுகைக்கான அழைப்பு.
   மோதி – மசூதி ஊழியர்.
   மெளத் – இறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *