கோட்டாமி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 6,951 
 
 

அவரு பேரு கோட்டசாமியோ இல்லை கோபால்சாமியோ… அது யாருக்குமே தெரியாது. எல்லாருக்கும் அவரை கோட்டாமியாத்தான் தெரியும். அவருக்கு எப்படியும் ஐம்பது வயசுக்கு மேலதான் இருக்கும். இந்த ஊருக்கு வந்து நாலஞ்சு வருசமாச்சு. வரும்போது ஒரு மஞ்சப்பை மூட்டையோடும் அழுக்கு சட்டையுடனும்தான் வந்தார். பிச்சைக்காரராய் இருக்குமோ என்று நினைத்து யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை… ஆனால் அவர் பிச்சை எதுவும் எடுக்கவில்லை… கோவில் அருகில் பயனில்லாமல் கிடந்த ஒரு வீட்டு திண்ணையில் படுத்துக் கொண்டு கோயில் பிரசாதங்களை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.

இப்பதான் வடநாட்டுக் காரனும் நம்மூரானும் ராமேஸ்வரம் போறப்போ மனநலமில்லாதவங்களை தேவகோட்டையில் இறக்கிவிட்டு போயிடறாங்களே… அப்படி விடப்படுறவங்க பிச்சை எடுத்துக்கிட்டும்… தெருவுல கிடந்துக்கிட்டும் அவதிப்படுறாங்க… சிலர் வாகனங்கள்ல அடிபட்டு சாகுறாங்க… அவங்கள்ல ஒருத்தரா இருக்குமோன்னு நினைச்சு யாரும் அவர்கிட்ட போகலை. அவரைப் பத்தி யோசிக்கக்கூட யாருக்கும் நேரமில்லை… யாருக்கும் அவர் தொந்தரவு கொடுக்கலைங்கிறதால பத்தோட பதினொன்னுன்னு நினச்சுக்கிட்டாங்க.

கொஞ்ச நாளாக கோவிலுக்கு வர்றவங்களைச் சினேகமா பாக்க ஆரம்பிச்சாரு… கோயில் வாசல்ல இருக்க செடிகளைப் பிடிங்கி சுத்தமாக்கி வைக்க ஆரம்பிச்சாரு. அப்புறம் கோயிலுக்குள்ள சின்ன சின்ன வேலை பாக்க ஆரம்பிச்சாரு. எல்லாருக்கும் அவருகிட்ட இருந்த பயம் மெல்ல விலக ஆரம்பிச்சுருச்சு. அவருக்கு யாராவது காசு கொடுத்தா வாங்க மாட்டேன்னு தலையாட்டி மறுத்துட்டு போயிடுவாரு. ஆனா வேட்டி, சட்டை கொடுத்தா மறுக்க மாட்டாரு. அடுத்த நாள் அந்த உடுப்ப போட்டுக்கிட்டு வலம் வருவாரு. யார்கிட்டயும் வாய் திறந்து பேசமாட்டாரு. எல்லாத்துக்கும் சிறு புன்னகையை பதிலாக் கொடுத்துட்டுப் போயிடுவாரு.

கோவில் குருக்கள்கிட்ட மட்டும் ரொம்ப நெருக்கமா இருப்பாரு. அவருக்கு வீட்டு வேலையெல்லாம் பாத்துக் கொடுத்துட்டு மாமி போடுற சாப்பாட்டை சாப்பிட்டு அவரு வாசம் செய்யிற திண்ணையில வந்து படுத்துப்பாரு.

அவருகிட்ட குருக்கள் உங்க பேரு என்னன்னு கேட்டப்போ கோட்டாமின்னு சொன்னாராம். அவருக்கு பேரு விளங்காம திரும்பத் திரும்ப கேட்டப்போ கோட்டாமிதான்னு சொன்னாராம். அதை குருக்கள் சொன்னதுக்கு அப்புறம் இப்ப எல்லாருக்கும் கோட்டாமியாயிட்டாரு.

கோட்டாமிக்கு எந்த ஊரு… சொந்த பந்தமெல்லாம் இருக்கா… இல்லையா… என்று விசாரித்தால் சிரிப்பை உதிர்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து விடுவார். யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. யாருக்கும் தொந்தரவில்லை என்றாலும் இத்தனை வருடமா இங்க இருக்கிற அவரை தேடி இதுவரை யாரும் வரவில்லை என்பதும் அவரும் யாரையும் தேடி போகவில்லை என்பது எல்லாருக்கும் உறுத்தலாகவே இருந்தது.

போனவார நிகழ்வுக்குப் பிறகு அவர் முகத்தில் புன்னகை பூக்கவில்லை… மாறாக வெள்ளைத்தாடி வளர்ந்திருந்தது. நீண்ட நேரம் திண்ணையில் அமர்ந்து இருந்தார். சாப்பிட யாராவது கொடுத்தால் மட்டும் சாப்பிட்டார். யாரிடமும் கேட்கவுமில்லை… கோவில் பிரசாதத்தையும் தேடிப் போகவுமில்லை.

குருக்கள் மரணம்தான் அந்த நிகழ்வு.

அந்த நிகழ்வில் இருந்து அவரது குடும்பம் மீண்டு வந்தபோதும் கோட்டாமி மட்டும் மீளவில்லை என்பது அவரது முகத்தில் தெரிந்தது.

மாணிக்கம் பிள்ளை டீக்கடை பெஞ்சில் அமர்ந்திருந்த கோட்டாமிக்கு அருகில் வந்து அமர்ந்த பூவநாதன், என்ன கோட்டாமி தாடியெல்லாம் வச்சிக்கிட்டு…. ஒரு வாரமா ஆளு டல்லா இருக்கேன்னு கேக்க, ஒரு வெற்றுப் புன்னகையை பதிலாக்கினார். ஏம்பு அவருகிட்ட பேசி என்னாகப் போகுது? யாரு என்ன கேட்டாலும் சிரிப்பாரு… இங்க வந்ததுல இருந்து வாய் தொறந்து எதாவது பேசியிருப்பாரா? ஆனா என்ன சொன்னாலும் செய்வாரு… காசா கொடுத்தா வாங்க மாட்டாரு… சாப்பாடாப் போடணும்… இல்ல துணி மணியாக் கொடுக்கணும் என்ற மாணிக்கம் பிள்ளை, சரசு வீட்டு பிரச்சினை என்னாச்சி என்று கேட்டதும் சரசுவின் பிரச்சினையை பூவநாதன் விளக்க, அங்கிருந்து கோட்டாமி கிளம்பினார்.

நானும் வந்ததில இருந்து பாக்குறேன்… சும்மாதான் படுத்திருப்பாரு… ஆனா இப்ப ஏதோ எழுதுறாரு… தினமும் இல்லாட்டியும் ஒரு சில நாள் ராத்திரி தெருவிளக்கு வெளிச்சத்துல உக்காந்து எழுதி குருக்கள் கொடுத்த டிரங்குப் பெட்டிக்குள்ள வச்சு பூட்டி வச்சிடுவாரு… அந்த பெட்டிக்குள்ள அப்படி என்ன பொக்கிஷம் இருக்குன்னு தெரியலை. காசு பணம் வாங்க மாட்டேங்கிறாரு… கொடுக்கிற துணிகளையும் அப்பவே உடுத்திடுறாரு… பேப்பரத்தான் சேத்து வச்சிருக்கப் போறாருன்னு ஒரு நாள் ராமசாமி அண்ணன் அப்பாகிட்ட சொல்லிக்கிட்டு இருந்தாரு.

அப்ப அப்பா, அட அவரு கொஞ்சம் மனநிலை சரியில்லாத ஆளுப்பா… நமக்கெல்லாம் வேலை பாத்துக் கொடுக்கிறாரு… நல்ல மனுசனுக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்னத்தையோ வச்சிட்டுப் போகட்டும்… அதை எதுக்கு நீ ஆராயிறே… யாருமே இல்லாத அந்த மனுசன் நமக்கு முன்னால போனா நல்லபடியா அடக்கம் பண்ணுவோம். இல்ல நாம முந்திக்கிட்டா இருக்கவங்க அவரை நல்லா பாத்து அனுப்பட்டும். இதுதான் நாம அவருக்கு செய்யிற நன்றிக்கடன்னு சொன்னார். சின்ன வயசுல சாவுக்கு பயப்படுற மனசு ஒரு நிலையை எட்டியபோது அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறது என்பது அப்பாவின் பேச்சில் தெரிந்தது.

சரசக்கா வீட்டைப் பத்தி எல்லாரும் தப்புத்தப்பாப் பேசினாங்க. அவங்க வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்கதால இவங்க இங்க யாரு கூடவோ தொடுப்புன்னு கூட சொன்னாங்க. எல்லாரும் அவங்ககிட்ட பேச்ச நிப்பாட்டிட்டாலும் கோட்டாமி மட்டும் தினமும் அவங்க வீட்டுக்கு போயி சின்ன சின்ன வேலை பாத்துக் கொடுத்துட்டு வருவாரு. ஒரு நா அப்படி வரும்போது மாணிக்கம்பிள்ளை என்ன கோட்டாமி அந்த வீட்டம்மாவோட தொடுப்பு யாருன்னு கேட்டப்போ வழக்கத்துக்கு மாறாக அவர் முகத்தில் கோபம் தெரிந்தது. அது எங்க எல்லாருக்குமே புதுசு. ஆனா ஒண்ணும் பேசாம திண்ணைக்கு போயி உக்காந்துட்டாரு.

ஒரு நா எங்க வீட்டுல வேலை பார்த்துட்டு கோட்டாமி சாப்பிட்டுகிட்டு இருந்தப்ப எதுக்கு அவ வீட்டுக்குப் போறே… எல்லாரும் தப்பா பேசுறாங்க, நாளைக்கு உன்னைய இணைச்சுப் பேசினாலும் பேசுவாங்க… இனி போகாதேன்னு அம்மா சொன்னப்போ சிரிச்சுக்கிட்டே சாப்பாட்டை பாதியில வச்சிட்டு எந்திரிச்சுப் பொயிட்டாரு… அதுக்கப்புறம் எங்க வீட்டுப் பக்கம் அதிகமா வாறதில்லை. எனக்கு அவருக்கும் சரசக்காவுக்கும் தொடர்பா இருக்குமோ அதான் கோவம் வருதுன்னு கூட தோணுச்சு.

ஒரு நாள் கார்ல ஒரு ரெண்டு மூணு பேர் வந்து இறங்கினாங்க… அவங்களைப் பாத்ததும் அவரு முகமெல்லாம் இருண்டு வேர்க்க ஆரம்பிச்சிருச்சு… ஓடப்பாத்தவரை வந்தவங்க வெரட்டிப் புடிச்சு… பொடலியில ரெண்டு அடிவிட்டாங்க. ஆத்தா… ஆத்தான்னு கத்துனாரு… நாங்கல்லாம் தடுத்துப் பாத்தோம் ஆனா முடியலை… அவரோட பசங்கன்னு சொல்லி அவரை இழுத்துக் காருல ஏத்துனாங்க…

இவ்வளவு வருசம் வராத பசங்க இப்ப எப்படி வந்தாங்கன்னு எங்களுக்கு தெரியலை… அவரு ஆத்தா… ஆத்தான்னு கத்தக் கத்த அவரை கார்ல ஏத்தப்போனங்க… திமிறிக்கிட்டு பொட்டி… பொட்டின்னு டிரங்குப் பெட்டிக்கு ஓட, ஆமா சொத்து வச்சிருக்காரு பாருன்னு ஒருத்தன் தூக்கி ரோட்டுல வீச, அதுல இருந்து சில போட்டோக்கள், சில சில்லறைக் காசுகள், ஒரு சேலை, சில வேட்டிகள் என சிதறி ஓடுச்சு… ஒரு டைரியும் சாக்கடைக்குப் பக்கத்துல போயி விழுந்துச்சு. அவங்க அவரை குண்டுக்கட்டா தூக்கி கார்ல ஏத்திக்கிட்டு பொயிட்டாங்க.

அவங்க போனதும் எல்லாரும் அவரைப் பத்தியே பேசிக்கிட்டு இருந்தாங்க… அப்புறம் அவங்க அவங்க வேலையப் பாக்க பொயிட்டாங்க… எல்லாருக்கும் சோகமுன்னாலும் சரசக்கா மட்டும் அழுத மாதிரி தெரிந்தது. அது ஏன் அழணும்..?

ஊர் சொல்ற மாதிரி அந்த தொடுப்புக்காரன் கோட்டாமியா இருக்குமோ என மனசுக்குள் கேள்வி எழுந்தது. எல்லாரும் போனதும் ராமசாமி அண்ணன் சொன்னது ஞாபகத்துக்கு வர, சாக்கடைக்குப் பக்கத்தில் கிடந்த டைரியை எடுத்து பிரித்தேன். அதில் அழகான கையெழுத்தில் எழுதியிருந்தார்.

அதை வாசித்த போது…

‘…குருக்கள் ஐயா மரணம் என்னை நிறைய யோசிக்க வைத்து விட்டது. அநாதையாய் வந்த எனக்கு ஆலமரமாய் அடைக்கலம் தந்தவர்… எதுவுமே பேசாத என்னிடம் பேரை மட்டுமே கேட்ட அவர் வேறெதையும் கேட்கவில்லை… ஆனால் ஒருநாள் எல்லாத்தையும் அவரிடம் சொல்லியழ ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஒருநாள் வருமுன்னே என்னை அழவைத்துச் சென்றுவிட்டார். என்ன செய்ய… அவருக்கு காரியம் பண்ண உறவு இருந்தது… எனக்கு உறவாய் அவர் மட்டுமே இருந்தார்…’

மேலும் படித்துக் கொண்டே வர, சரசக்கா பத்தியும் எழுதியிருந்தார். ‘…எல்லாரும் சரசை கொச்சைப் படுத்துகிறார்கள். பாவம் அவள்… அவளும் மனுசிதான்… அவளுக்குள்ளும் ஆசாபாசாங்கள் இருக்கத்தான் செய்யும் என்பது வெள்ளுடை உடுத்திய மனித மிருகங்களுக்குத் தெரியவில்லை. வெளி நாட்டில் அவள் கணவன் இன்னொருத்தியுடன் வாழ்வதை மறைக்கப் பாடுபடும் அந்த அபலை, சில புல்லுறுவிகளின் ஆசைக்கு இணங்காதலால் இப்படி ஒரு அவப்பெயர்… இது போன்ற நிலை இன்னும் எத்தனை பெண்களுக்கு… அவள் வீட்டுக்கு நான் போவதால் என்னையும் அவளையும் இணைத்து பார்க்கிறது சில இருண்ட மனசுகள்… அவர்களுக்குப் எப்படி தெரியும் நான் இழந்த என் மகள் மீண்டும் கிடைத்தது போல் உணர்கிறேன் இந்த அபலையின் அன்பில் என்பது…’

இப்படி நிறைய…. சில படிக்க முடியாமல் மனசை அழுத்தின… என்னையும் அறியாமல் கண்கள் நனைந்த போது கோட்டாமி கோவில்சாமியாகத் தெரிந்தார்.

– பெப்ரவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *