கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 28, 2021
பார்வையிட்டோர்: 3,207 
 

பெரியவர் கால்களைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார்.. முன்புறம் சதுரமாக மண் தரை.. சாணி போட்டு லேசான தூசியுடன் ஒரு ஒரமாக தண்ணீர் பாத்திரத்துடன் இருந்தது.. சுற்றிலும் நான்கைந்து வீடுகள்.. பழைய நாட்டு ஓடு.. வெளியே வீடுகளுக்கு முன்பு கொஞ்சம் இடம் விட்டு தூண்களுடன் இருந்தது.. இடதுபுறம் முதல் வீட்டில் இருந்தவள் காமாட்சி.. எல்லோருக்கும் பெரியவள்.. தனியாக இருப்பவள்.. உள்ளே நுழைந்தால் முன்புறம் சமையலறை.. பின்புறம் ஒரு படுக்கையறை.. ஒன்றிரண்டு மூட்டைகள்.. தொங்கிக்கொண்டிருக்கும் கயிறில் பழைய துணிகள்.. ஆணிகளில் மஞ்சள் பைகள்.. வெள்ளை கருப்பில் புகைப்படங்கள்.. கணவனுடன்.. குழந்தைகளுடன்.. இப்போது கலரில் பையனின் திருமண கோலத்தில்..

அடுப்பில் விறகு உலர்ந்து சாம்பலுடன் இருந்தது.. பழைய சட்டிகள்.. நேற்று செய்த களி பாத்திரத்தில்.. பழைய கருவாட்டுக் குழம்பு இன்னொரு அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது.. ஒரு ஓரமாக விறகுகள்.. சுவரில் கருப்பாக படிந்திருந்தது.. சிமெண்ட் தரை.. தண்ணீர் பானை.. திறந்து வைத்திருந்த பாத்திரத்தில் பழுத்திருந்த பெங்களூரா பழங்கள்..

பெரியவர் “தங்கச்சி.. தங்கச்சி..” என்றார்.. பதிலில்லை.. “எங்காவது போயிருக்குமோ..?” முனகிக்கொண்டார்..

இரண்டு வீடுகள் மூடியிருந்தது.. இன்னெரு வீடு பழுதடைந்து ஓடுகள் கீழிறங்கி வாசலில் ஒன்றிரண்டு விழுந்திருந்தது.. நடுவீடு இவருடையது.. அம்மி எட்டிப்பார்த்து ஏதோ சிக்னல் செய்தாள்.. திட்டுகிறாள்.. இவர் சிரித்துக்கொண்டு “தங்கச்சி.. தங்கச்சி..” என்றார் மறுபடியும்..

அப்பாவின் மூத்த தாரத்து பெண் என்றாலும் அவளை வித்தியாசம் பாத்ததில்லை.. அவளும்தான்..என்னவோ காமாட்சி என்றால் பிரியம்.. அவளுக்கு இவர் என்றால் பிரியம்.. இவருடன் பிறந்த சின்னக்கா முகத்தைக் கோணிக்கொண்டு புறம் பேசுவது இரண்டு பேருக்குமே தெரியும்.. “காமாட்சி…” என்று கூப்பிட்டதில்லை.. தங்கச்சிதான்..

“தங்கச்சி.. தங்கச்சி.. “

அம்மு என்கிற அம்மி மீண்டும் சைகை செய்து உதடுகளை திருப்பிக்கொண்டு இவரை முறைத்தாள்., இவர் கண்டுக்கொள்ளாமல் உள்ளே நுழைந்தார்.. காமாட்சி அடுப்பிலிருந்து சற்று தள்ளி கைகளை விரித்து படுத்திருந்தாள்.. கண்கள் கதவை பார்த்து செருகியிருந்தது.. சுண்ணாம்பு டப்பியும் வெத்தலை பையும் ஒரு பக்கம்.. விரைத்திருந்த கை விரல்கள்.. எரிந்துக்கொண்டிருந்த விறகு புகை கக்கி சாம்பலில் கருகல் வாசனை வந்தது..

“தங்கச்சி.. தங்கச்சி.. “ அவர் காமாட்சியின் மூக்கில் விரலை வைத்துப் பார்த்தார்.. வெறுமையாக இருந்தது..

***

நல்ல அகலமான தெரு அது.. பெரியவர் வீட்டு முன்பு துணிப்பந்தல் போட்டிருந்தார்கள்.. முன்புறம் இரண்டு.. மூன்று கட்டைகள் எரிந்து புகைந்துக்கொண்டிருந்தது.. பலகை சத்தம் இன்னொரு பக்கம்..

டனக்க.. டனக்க.. டன்டனக்க்.. டன்டனக்க..

இரண்டு பேர் சுற்றி வளைத்து ஆடினார்கள்.. ஒருத்தர் பலகையை தட்டிக்கொண்டே போய் கைகளை நீட்டிக்கொண்டிருந்தார்.. பெண்கள் எதிர் வீட்டு திண்ணையை அடைத்துக்கொண்டிருக்க ஆண்கள் ஆங்காங்கு நின்றுக்கொண்டும்.. உட்கார்ந்துக்கொண்டும் வார்த்தைகளை விட்டுக்கொண்டிருந்தார்கள்..

ட்ன்.. டனக்கு.. டன்.. டனக்கு.. டனக்கு.. டனக்கு..

ஜடங்.. ஜடங்.. ஜன்ஜடங்..

ஊதுபத்தி வாசனை.. ஒரு கிழவி வுட்டுட்டு போய்…….ய்….ட்….டி….யேடி …. என் செல்லல்லல்ல…..ல…..க் கண்……ணு…..” என்று இழுக்க பத்து பதினைந்து காகங்கள் அருகில் புளியமரத்தின் உச்சியில் கத்திக்கொண்டிருந்தது..

“டேய்.. போங்க.. போங்க.. “ பெரியவர் வெளியே முட்டிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்களை துரத்தினார்.. துண்டை இழுத்து நெற்றியை துடைத்துக்கொண்டார்.. இன்னும் இரண்டு வீட்டுக்காரர்களும் வரவில்லை.. ஒன்று தங்கையின் மகன் .. இன்னொன்று நடு அக்கா..இவரோடு பிறந்தவள்.. சென்னை வாசம்.. காமாட்சியின் மகன் ஓசூரில்… வருடத்துக்கு இரண்டு முறை வருவார்கள். ஒரே மகனுக்கு நிறையவே செய்துவிட்டாள்.. புது வீடு.. இரண்டு ஏக்கர் நிலம்.. மலையோரம் இருபது தென்னைமர தோப்பு.. அடுத்த தெருவில் காலியிடம் ஒன்று.. போதாத குறைக்கு அவள் இருந்த வீட்டையும் பையன் பேரில் எழுதிவிட்டாள்..

“என்னோட வந்திடும்மா.. “ என்றான்..

அவளுக்கு பிடிபடவில்லை.. “சொந்த ஊர்ல சம்பாதிக்க முடியாதா..?” என்றாள்..

“பத்தாது.. ஓசூர்ல நான் வேல செய்யற கம்பெனியில இருபதாயிரம் தர்றாங்க.. நாலஞ்சு வருஷத்துல நிரந்தரம் பண்ணிடுவாங்க.. நாப்பதாயிரம் கெடைக்கும்.. ஏழு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ்.. குடும்பம் ஆயிடுச்சு.. பையன் இருக்கான்.. அங்க படிக்க வைக்க நல்லாயிருக்கும்.. என்னோட வந்திடும்மா.. “

“நான் இங்கேயே இருந்துக்கறேன்.. வரலை..” என்று சொல்லிவிட்டாள்..

இரண்டு மணி நேரத்தில் வந்துவிடலாம்.. கிருஷ்ணகிரிக்கு ஐம்பது கிமீ.. அங்கிருந்து போச்சம்பள்ளிக்கு இருபது கிமீ.. கிராமத்துக்கு வர இன்னொரு பஸ் பிடிக்க வேண்டும்.. “ஆள் அனுப்பறேன்.. வண்டியோட.. போன் பண்ணு.. “ என்று சொல்லியிருந்தார்.. “இதோ.. இதோ.. “ என்று ஒரு இரவு ஓடிவிட்டது.. அக்காவும் வந்துவிட்டால் முடிந்துவிட்டது.. அவள் சென்னையிலிருந்து வரவேண்டும்.. “கெளம்பிட்டேன்டா.. “ என்று கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் தகவல் சொன்னாள்…

இவர் தெருவின் எதிர்புறம் சிறிய இடுக்கில் நுழைந்து ஒரு மாட்டுப்பட்டியின் இடதுபுறம் வளைந்து அடுத்த வேப்பமரத்தின் எதிர்புறம் நான்கைந்து மரங்களை கடந்து மீண்டும் இன்னொரு மாட்டுப்பட்டியை கடக்கும்போது அங்கேயே நின்று பட்டிக்குள் நுழைந்துக்கொண்டார்.. சாணி வாசனை.. கோமியம் ஆங்காங்கே தேங்கி ஈக்கள் பறந்துக்கொண்டிருந்தது.. ஒரு மூலையில் உட்கார்ந்தார்.. உடல் சோர்வு தெரிந்தது.. கால்களில் ஈரம்.. எங்கோ சாணியை மிதித்திருக்கிறார்..

“சாப்புட்டியா தங்கச்சி..?”

“இல்லடா கண்ணு..”

“சாப்புடு.. சாப்புடு.. “

நேற்று கடைசியாக பேசினது..

ஜடுக்… ஜடுக்… ஜடுக்.. ஜஜ்ஜடுக்… ஜஜ்ஜடுக்…

அப்படியே கால்களை மடக்கி தலையை கவிழ்த்துக்கொண்டார்.. கூரையிலிருந்து வெயில் பிரிந்து அவரது தலையில் விழுந்தது..

“நான் போயிட்டா எம்பையன நல்லா பாத்துக்கப்பா.. “

“அப்படியெல்லாம் சொல்லாத தங்கச்சி..”

“உனக்கு முன்னாடியே நான் போயிடனும்,,அடுத்த ஜென்மம்னு நம்பிக்கை இருக்கா உனக்கு?”

“இல்லைக்கா.. “

“எனக்கும்தான்..”“

ஜடுக்… ஜடுக்… டக்கற.. டக்கற…. ற்ற……. ஜடுக்.. ஜடுக்..

ஊதுபத்தி வாசனை.. மாலை வாசனை.. எரிந்து புகையும் விறகுகள்.. வெயில்.. வியர்வை.. காமாட்சியின் வெறித்த கண்கள்.. சாணி. கோமியம்.. புழுக்கம்..

“நல்ல சாவுப்பா உன் தங்கச்சிக்கு.. யாருக்கும் தொந்தரவு தராம..”

தேம்பி.. தேம்பி அழ ஆரம்பித்தார்..

***

“அம்மி.. ஏதாவது போன் வந்ததா..?”

“இல்லீங்க.. இப்புடி வாங்க.. “ உடலை சுற்றி உட்கார்ந்திருந்தவர்கள் குறைந்திருந்தார்கள்.. இரண்டு கிழவிகள்.. நான்கு ஆண்கள்.. சற்று ஒதுக்குபுறமாக தரையை பார்த்துக் கொண்டிருந்தார்கள்

காமாட்சியின் கண்கள் இறுகியிருத்தது.. கால்களில் புடவை ஒரு பக்கம் நழுவியிருந்தது.. உச்சியிலிருந்து வெயிலின் தாக்கம் முகத்தில்.. கைகளில் தெரிந்தது.. ஊதுபத்தி புகை கால்மாட்டில் வட்டமடித்தது.. வெளியிலிருந்து “என்னைய வுட்டுட்டு போயிட்டியே… என் செல்லம்.. “

“என்னா அம்மி.. ?

“ஊர்ல யாறாவது பேசினாங்களா.. ?”

“இல்லையே.. ஏன்..?

“அவளுக்கு அந்த வியாதியாமே.. “

“எந்த வியாதி..?”

“அதாங்க கொரானா..”

“அடக்கடவுளே.. “ என்பதற்குள் இரண்டு பேர் நெருங்கினார்கள்.. புலம்பல் நின்று சந்தடி கேட்டது.. திண்ணைகளில் இருந்த பெண்கள் இறங்கி தெருவில் நடந்தார்கள்.. ஆண்கள் “போங்க.. போங்க.. “

“என்னா சாமி..”

அவர்கள் “அக்காவுக்கு கொரானாவாமே.. நம்மூர்ல இது மூணாவது டெத்து..”

“யோவ்.. திடீர் சாவுய்யா.. மாரடைப்போ என்னவோ.. காய்ச்சல் இல்லை.. ஒண்ணும் இல்லை.. கதைய மாத்தாதீங்க.. “

“அதென்னவோ.. மொதல்ல ரண்டுப் பேரையும் ஊருக்குள்ள சேத்தலை..சுடுகாட்லயும் சேத்தலை.. வெளிய எரிக்க வச்சு சாம்பலை மட்டும்தான் கொண்டாந்தாங்க.. அதுக்கே பெரிய பிரச்சனை ஆயிடுச்சு.. உங்களுக்கு தெரியாதது என்னா.. ஊருக்குள்ள பரவிடுச்சுன்னா வம்பு..”

“யோவ்.. மொத ரண்டு கேசும் அந்த வியாதி இருந்து ஆஸ்பத்திரிக்கு போனவங்க.. காப்பாத்த முடியல.. என் தங்கச்சி நல்லா இருந்தவங்கய்யா..”

“அதெல்லாம் தெரியாது பெரிசு.. “கிசுகிசுப்பாக..”சொல்றத கேளுங்க.. சாம்பலு வந்தா குழியில போட்டு மூடிருவோம்.. ஊர்ல பிரச்சனை வேணாம்.. ஆஸ்பிட்டலுக்கு சொல்லியிருக்குது.. அவங்களே வருவாங்க.. எப்புடிப்பா.. “ இன்னொரு ஆள் தலையாட்டி “ஆமாங்க.. நாங்க கூட இருந்து உதவறோம்.. ஏம்பா.. எல்லாரையும் மூஞ்சிக்கு துணிய சுத்தச் சொல்லுங்க,.”

பெண்கள் தெரு முனையில் போய் நின்றிருந்தார்கள்.. “ஆண்கள் அவர்களை “போங்க.. போங்க..” என்று தொடர்ந்துக் கொண்டிருந்தார்கள்.. இவருடைய இரண்டு பையன்கள்.. பாடிக்கொண்டிருந்த கிழவி.. பலகைக்காரர்கள் யாருமில்லை.. நான்கு வீடுகள் தள்ளி தூணை பிடித்துக்கொண்டு ஊர் பைத்தியம் இங்கேயே பார்த்துக்கொண்டிருந்தது..

அம்மு..”மொதல்ல அவளை அனுப்பறத பாருங்க..”

“எல்லாம் எனக்கு தெரியும்.. கம்முனு கெட..”

“என்னா செய்ய போறீங்க..?”

“என் தங்கச்சிக்கு கொரானா இல்ல.. சுடுகாட்லதான் பொதைப்பேன்.. எடம் தரலைன்னா என் நெலத்துல பொதைப்பேன்..”

“பொதைப்பீங்க.. பொதைப்பீங்க.. நானு விடமாட்டேன்..” அம்மி கோவமாக திரும்பிப் போனாள்.. அந்த இரண்டுப் பேரும் இவரை உறுத்தலாக பார்த்தார்கள்.. “அவங்க பையனே சொல்லிட்டான்.. எரிச்சுடலாமுன்னு.. இல்லன்னா இன்னும் வராம இருப்பானா.. ஊருக்கு வெளியில இருக்கான்.. நீங்க யாரு இங்க புதைக்கிறேன்னு சொல்லறதுக்கு..>“

“நீ யாரு இங்க பொதைக்க கூடாதுன்னு சொல்லறதுக்கு..?” அவர் வேட்டியை தூக்கி மடக்கிக்கொண்டு “திரும்பிப் போயிடுங்க.. “ என்றார்..

அந்த இரண்டு நபர்களில் பரட்டைத் தலை ஆள் ஊர் பெரிய மனிதராக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்.. தனக்கு மரியாதை தரவில்லை என்பதைப் போல உணர்ந்தார்.. சுற்று முற்றிலும் பார்த்தார்.. தூரத்தில் பெண்கள் இல்லாமல் ஆண்கள் மட்டும் நான்கைந்து நபர்கள் தெரிந்தார்கள்.. “ஏம்பா.. அப்பறம் பேசிப்போம்.. பாவம்.. எழவு வூடு.. அப்படித்தான் இருக்கும்.. கெளம்பு..”

அவர்கள் தங்களை தள்ளிக்கொண்டு போனார்கள்.. அம்மியை காணோம்.. தெரு முனையில் இரண்டு ஆண்கள் மட்டும் பீடி ஊதிக்கொண்டிருந்தார்கள்.. இவர் நடந்து உள்ளே நுழைந்து காமாட்சி அருகில் போனார்.. பக்கத்தில் யாருமில்லை.. கால்களில் நழுவியிருந்த புடவையை சரி செய்தார்.. எதிர்புறம் கூரைக்குக் கீழே செருகியிருந்த அருவாளை உருவிக்கொண்டார்.. வெளியே வந்து தெருவில் இறங்கி அருவாளை அருகிலிருந்த கல்லில் தீட்டினார்.. திண்ணையில் அதனை ஒரு ஒரமாக நிற்க வைத்தார்..

உள்ளே நுழைய முயன்றபோது மருத்துவமனை வண்டி சத்தம் தெரு முனையில் கேட்டது..

***

“எங்க.. காமாச்சி புள்ள..?”

“இதாங்க .. இங்க இருக்காரு.. “

ஒரு கடைக்கு வெளியே குடுப்பத்தோடு இருந்த அவனை பரட்டைத் தலை அணுகியது.. அவனுடைய பையன் வாழைப்பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.. பரட்டையை சுற்றி பெரும்பாலும் பையன்கள் இருந்தார்கள்.. கடைக்காரர் ஒரு ஓரமாக இருந்த டீக்கடை முன்பு நின்றுக்கொண்டார்.. மருத்துவமனை வண்டி கொண்டு வந்தவன்.. “நெலம ஒண்ணும் சரியில்ல போலிருக்கே.. “ என்றான்..

“நில்லுத் தம்பி .. ஊர் கட்டுப்பாட்டை யாரும் மீற முடியாது.. அப்புறம் இங்க எப்படி பொழைக்கமுடியும்.. ?”

“அந்தம்மாவுக்கு காய்ச்சல் ஏதாவது இருந்ததா.. ?”

“நீ டாக்டரா.. அவரு எங்க?”

“நான் இதுவரைக்கும் பத்து.. பதினஞ்சு பாடி ஏத்தியிருக்கேன்.. கொரானா பாடிங்கதான் எல்லாம்.. உயிர் போயி உயிரு வரும்.. “

“அது சரிப்பா.. டாக்டரு எங்க..?”

“அவரு எதுக்கு?”

“அவரு வந்து சொன்னாதான் அந்தாளு பாடிய உடுவான்.. தங்கச்சி.. தங்கச்சின்னு.. எங்கப்பா அந்தப் பையன் அம்பலம்..?”

“இங்கதாங்க இருக்கேன்.. “ மனைவியோடு உள்ளே நுழைய முயன்றான்.. பரட்டை “நீ மட்டும் தனியா வாப்பா..”

அவன் மனைவி..” நான் இருக்கும்போதே பேசுங்க..”

“பாரும்மா.. உங்க மாமியாருத்து பிரச்சனையா இருக்குது.. தம்பிதான் முடிவெடுக்கனும்.. வண்டி இருக்குது.. செலவு நாங்க கூட பண்ணறோம்.. இந்த தம்பி சொல்லறதுதான் முடிவு..”

“அவரு என்னாங்க சொல்லறது.. அம்மாவை கூட இருந்து அடக்கம் பண்ணனும்னுதான் வந்தாரு.. கொரானாவாமே.. வேணாங்க.. ஒரு குழந்தை இருக்குது.. “

“நாங்களும் அதைத்தான் சொல்லறோம்.. ஏம்பா.. அம்பலம்.. நீ சொல்லு..”

“ஊர் முடிவேதாங்க எங்களுக்கும்..”

“அம்மாவை போய் பாத்துட்டியா..?”

“இல்லீங்க.. குடும்பஸ்தன்..”

இரண்டுப் பேர் “நாம சொல்லறத கேக்கலைன்னா ஆள சாத்திப்போடுவோம்.. சாத்தி.. “

ஒரு பையன் “தள்ளுங்கடா.. “ என்று வெளியே ஓடினான்.. அம்பலம் குழந்தையை வாங்கிக்கொண்டு டீக்கடை பக்கம் போய்.. “கொழந்தைக்கு பன்னு கொடுங்க..”

பரட்டை “அந்த ஓடுன பையன பாத்தா அம்மி பையன் மாதிரி தெரியுது..”

“ஆமாங்க.. அவனும் நம்மளோடதான் இருக்கான்..”

“எதுக்கோ ஓடறானே..”

“தெரியலைங்க.. அப்புறம் அவங்கக்கா சென்னைக்காரம்மா போன் பண்ணுச்சு..”

“என்னவாம்..?”

வேலூர்லேயே குடும்பத்தோட எறங்கிட்டாங்களாம்.. நான் வந்து என்ன செய்ய.. ஊர்ல முடிவு பண்ணா சரின்னுட்டாங்க.. “

“அது சரி.. “பரட்டை கன்னத்தை கீறிக்கொண்டு “ஒரு டீய போடச்சொல்லு அந்தாளை.. “ டிரைவரிடம் “டாக்டரு வர்றேன்னு சொன்னாரே..?”

“அவரு மீட்டிங்குன்னு கிருஷ்ணகிரிக்கு போய்ட்டாரு.. நீங்க வேணா போன் பண்ணுங்க..”

அவருக்கு டீ வந்தது.. பசங்கள் சற்று பிரிந்து ஓரமாக போனார்கள்.. டிரைவர் “எனக்கு ஒரு டீ சொல்லுங்க.. “ என்றான்..

அவர் “இன்னொரு டீ கொடுப்பா..” என்று அடுத்த கையால் மொபைலை நோண்டினார்.. அம்பலத்தின் மனைவி அவனிடம் கைகளை ஆட்டி பேசிக்கொண்டிருந்தாள்.. பரட்டை அவன் அருகே சென்று..”அம்மாவ பாத்துட்டு வந்துருப்பா ஒருமுறை..”

“அதெல்லாம் ஆகாதுங்க.. “என்றாள் அவன் மனைவி

“எதிர்புறம் நான்கைந்து பேர் ஓடிவந்தார்கள்..

“அந்தாளு பொணத்தோட கெளம்பிட்டான்.. கைல அறுவா வச்சிருக்கான்..”

***

அவர் அறுவாவை ஒரு பக்கமாக தூக்கி வீசினார்.. தூணை பிடித்திருந்த பைத்தியம் அதே திண்ணையில் தூங்கிக்கொண்டிருந்தது.. அருகில் ஆளரவம் கேட்டது.. பெரியப் பையன்.. அவருடைய இரண்டு கைகளிலும் குழந்தையை போல காமாட்சி.. ஊருக்குள் நுழைந்து இடதுபுறம் திரும்பி மீண்டும் வலது பக்கம் திரும்பி ஆத்துக்காவாயை கடந்தால் அவருடைய நிலம்.. இருபது நிமிடம் ஆகலாம்.. ஒரு ஓரமாக நின்றிருந்த அந்த மருத்துவமனை வண்டி அனாதையாக இருந்தது..

பெரிய மகன் “அப்பா.. நானும்..” என்றான்..

அவர் ஒரு கையிலிருந்த தீச்சட்டியை பையனிடம் கொடுத்தார்.. பையன் வாங்கிக்கொண்டு “அப்பா.. அறுவா…?”

“அது வேணாம்.. “

“எல்லாம் கோவமா இருக்காங்க..”

“அந்த அம்பலம்..?”

“வந்திட்டு ஓரமா இருக்கான் டீக்கடைக்கிட்ட.. பெரியப்பா வேலூர்லேயே இறங்கிட்டாராம்.. டாக்டரு வரலைன்னு இங்க காத்திருக்காங்க.. “

அவர் தெரு முனையில் திரும்பினார்.. யாருமில்லை.. சன்னல்கள் மூடிக்கொண்டது.. கதவுகளும்.. இன்னொரு திருப்பத்தில் அந்த டீக்கடை.. பரட்டை .. அம்பலம்.. டிரைவர்.. “பாத்தியாய்யா.. போலிசுக்கு போனா என்ன..?”

அம்பலம் இறுக்கமான முகத்துடன் திரும்பிக்கொண்டான்.. கடைக்குள் நுழைந்துக்கொண்டு தன்னுடைய தலையில் அடித்துக்கொண்டான்.. பெரியவரை நோக்கி இரண்டு கற்கள் வந்தது.. ஒன்று காமாட்சியின் மீது விழுந்தது.. தொடர்ந்து நடந்தார்.. வியர்வை முகத்திலிருந்து வழிந்து உடம்பில் இறங்கியது.. கண்களில் நீர் தேங்கி நின்றது.. பையன் தொடர்வது தெரிந்தது.. மீண்டும் வெறுமையான தெரு.. இரண்டுப் பக்கமும் இறுக்கமாக அடைக்கப்பட்ட வீடுகள்.. இரண்டு நாய்கள் குறுக்கே போனது.. மறுபடியும் கற்கள் நான்கைந்து இவர்களை நோக்கி வந்தது.. ஒன்று தலை மீது விழுந்து தரையில் மோதியது..

“அப்பா.. பின்னாடியிருந்து அடிக்கிறாங்க..”

அவர் லாவகமாக காமாட்சியை பிடித்துக்கொண்டார்.. வெயிலில் அவளின் உதடுகள் உலர்ந்து பிரிந்திருந்தது.. இடது புறம் காதோரம் வலி..

“ரத்தம்பா.. “ என்றான் பையன்..

ஆத்துக்காவாயை தாண்டியபோது அம்மி அங்க நின்றிருந்தாள்.. மண்ணை அள்ளி இவரை நோக்கி வீசினாள்.. “போ.. போ.. போயிடுங்க..இங்க வேணாம்..”

அவர் தொடர்ந்து நடந்தார்.. அவள் திரும்பி கைகளால் சாபமிட்டவாறு ஓடினாள்.. மாந்தோப்பு அடர்ந்த அந்த நிலத்தில் வழிப்பாதையில் நடந்தார்கள்.. ஊர்த் தடயம் மறைந்து பறவைகளின் சத்தம் கேட்டது.. மழை இல்லாத நிலத்தில் புற்கள் காய்ந்து மண் சூடாகி நடக்கும்போது வெப்பமூட்டியது.. சரியாக அந்த ஓலைக்குடிலை தாண்டி வலதுப்பக்கம் ஒரு பூவரச மரம் இருந்த இடத்தில் நிழலில் காமாட்சியை கிடத்தினார்..

“குடிசைக்குள்ள கடப்பார.. சனிக்கி இருக்கும்.. எட்றா..”

“அப்பா.. ரத்தம் அதிகமா வருது..”

“வந்திட்டுப் போட்டும்.. கடப்பாரைய எடு..”

அவன் கடப்பாரையையும் மண்வெட்டியையும் எடுத்து வந்தான்.. தீச்சட்டி புகையை உமிழ்ந்தது.. “இந்த சட்டிய அந்தப்பக்கமா போய் போட்டிட்டு வந்திடு.. “

“ஏம்பா..?”

“வேணாம்.. போ.. “

அவன் எடுத்துக்கொண்டு போவதற்கு முன் “அப்பா..ரத்தம் ரொம்ப வருது.. துடைச்சுக்க..”

“வேணாம் .. போ..”

“அப்பா.. அத்தைக்கு உண்மையிலேயே கொரானாவாப்பா..?”

“இருக்கலாம்.. எனக்கென்ன அதப்பத்தி.. என் தங்கச்சிய என் கையால பொதைக்கறதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கனும்”

கடப்பாரை தரையில் வேகமாக இறங்கியது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *