கை காட்டி மரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 22, 2014
பார்வையிட்டோர்: 12,719 
 
 

“என்ரை பந்தைத் தாடா விது”

“இந்தப் பந்து எனக்கு வேணும். நான் தர மாட்டன்” என்று சொல்லிக் கொண்டு ஒரு பந்தைத் தன் மார்போடு அணைத்து இறுகப் பிடித்தபடி கேற்றை நோக்கி ஓடினான் விதுஷன். அவனை துரத்திச் சென்ற மதுஷன் கேற்றின் அருகே விதுஷனைக் கீழே விழுத்திப் பந்தை அவனிடமிருந்து, பிடுங்கி எடுக்க அவன் கோபத்துடன் மதுஷனின் கையைத் தன் பற்களால் கடித்து[ப் பந்தைப் பறிக்க முயல, மதுஷன் விதுஷனின் தொடையில் தன் நகங்களால் ஊன்றிக் கிள்ளினான்.

இருவரும் வலி தாங்காது பந்தைக் கைவிட்டு ஓவென்று கதறினார்கள்.

“அம்மா! ஏன் அழுகிறாங்களெண்டு போய்ப் பாருங்கோ. நான் எல்லா வேலையும் செய்வன். நீங்கள் கொஞ்ச நேரம் பிள்ளையளைக்கவனிச்சால் போதும்.”

மதுஷன் விதுஷன் ஆகியோரின் தாயான கோமதி, காய் கறி நறுக்கிக் கொண்டிருந்த கண்மணியிடமிருந்து கத்தியை இழுக்கக் கத்தியின் முனை கண்மணியின் விரலைக் காயப்படுத்தியதை மகளுக்குத் தெரியாமல் மறைத்துக் கொண்டு கேற் பக்கம் விரைந்தாள்.

நான்கு வயது நிரம்பிய மதுஷனும், மூன்றே வயதான விதுஷனும் கண்ணீர் வடிய அழுது கொண்டிருந்தனர்.”அம்மம்மா விதுஷன் கடிச்சுப் போட்டான்” என்று சிவந்து போன தன் கையை மதுஷன் காட்ட,” அம்மம்மா அண்ணா கிள்ளிப் போfட்டான்” என்று விதுஷன் இரத்தம் கசியும் தொடையைக் காட்ட கண்மணிக்கு மிகவும் கவலையாகி விட்டது.

சிறிது நேரத்திற்கு முன்பு தான் கோமதி தன் இரு பிள்ளைகளையும் முன்பள்ளியிலிருந்து கூட்டிக் கொண்டு வந்து” அம்மா! நான் சமையல் செய்யப் போறன்.இவங்களைக் கவனிச்சுக் கொள்ளுறது இனி உங்கடை பொறுப்பு கவனிக்காமல் விட்டால் ரண்டு பேரும் அடிபட்டுக் கொண்டு வந்து நிப்பாங்கள் .இவங்களைப் பாத்துக் கொள்ளுங்கோ” என்று தாய் கண்மணியிடம் ஒப்படைத்தாள்.

கண்மணி பேரப்பிள்ளைகள் இருவருக்கும் உடை மாற்றி விட்டு, முன்பள்ளியிலிருந்து அவர்கள் கொண்டு வந்த கொப்பிகளை விரித்துப் பார்த்தாள்.

“மதுஷனுக்கு நாலு வயது. விதுஷனுக்கு மூன்று வயது.ரண்டு பேருமே நல்லாய் எழுதிப் படிக்கிறாங்கள். ஆனால் குழப்படிதான் கூடிப் போச்சு” என்றவாறு பேரப்பிள்ளைகளை கவனித்தாள். அவர்கள் தனித் தனியே விளையாடிக் கொண்டிருந்தனர்.” நீங்கள். விளையாடுங்கோ. நான் காய் கறி வெட்டிக் குடுத்திட்டு வாறன். இப்ப தானே அம்மா உலை வைச்சு அரிசி போடுறா கண்மணி ஒரு கத்தரிக்காய்” வெட்டி முடிப்பதற்குள் அவர்களுடைய அழுகுரல் கேட்டது. தனித் தனியே பந்தெடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று விதுஷனுக்கு அண்ணனின் பந்து மீது ஆசை வந்து விட்டது. மதுஷன் பந்தைக் கீழே உருட்டிய போது அதை எடுத்துக் கொண்டு ஓடினான் விதுஷன் அந்தப் பந்துக்காக இருவரும் விட்டுக் கொடுக்காமல் காயப்பட்டு அழுது கொண்டிருப்பதைப் பார்த்து கண்மணி மிகவும் கவலைப் பட்டாள்.

“இண்டைக்கு மட்டுமே ஒவ்வொரு நாளும் இப்பிடித்தானே நேற்றைக்கு விதுஷன்ரை பொம்மையை மதுஷன் எடுக்க அதாலை சண்டை. முந்தநாள் தொப்பிக்காக அடிபட்டியள் இண்டைக்குப் பந்துக்குச் சண்Bடை உங்களை ஏப்படித் திருத்திறதெண்டு எனக்குப் புரியேலை கொம்மாவிட்டை சொன்னால் நான் இதுக்கு என்னம்மா செய்யிறதெண்டு என்னை கேட்டிட்டு, தன்ரை வேலையைப் பார்க்கிறாள். எனக்கெண்டா என்ன செய்யிறதெண்டு தெரியேலை உங்களைப் பற்றி நினைக்கப் பெரிய கவலையாய்க் கிடக்கு”

கண்மணி பெருமூச்சுவிட்டவாறே பேரப்பிள்ளைகளை “அழாதயுங்கோ” என்று சொல்லி அணைத்துக் கொண்டாள். இருவரும் அழுவதை நிறுத்தவில்லை.

“நான் உங்களுக்கு கதை சொல்லுறன் அழாதையுங்கோ” என்று சொல்லி விட்டு அந்த இடத்திலேயே உட்கார்ந்து மதுஷனையும் விதுஷனையும் இருபுறமும் இருத்திவிட்டு கேற்ரிலை சாய்ந்து கொண்டாள்
மதுஷன் அழுவதை நிறுத்தி விட்டு{“ அம்மம்மா இராசா மந்திரியின்ரை கதை சொல்லுங்கோ “ என்றான்.

“வேண்டாம் கண்ணன்ரை கதை சொல்லுங்கோ“ என்று அடம் பிடித்தான் விதுஷன்.

“இதுக்கும் சண்டை போடப் போறியளே? உங்களுக்கு நான் ஒற்றுமையைப்பற்றி அன்பைப் பற்றி பொறுமையைப் பற்றி எத்தினை கதை சொல்லிப் போட்டன். சொல்லி என்ன பயன்?. இன்னும் குழப்படிகாரராய் அடிச்சுக் கிள்ளிச் சண்டை போட்டுக் கொண்டுதானே இருக்கிறியள்”கண்மணி சலித்துக் கொண்டாள்.

“அம்மம்மா!~ கதையைச் சொல்லுங்கோ”

“நீங்கள் அமைதியாய் இருந்தால்தான் நான் யோசிச்சு நல்ல கதையாய்ச் சொல்லுவன்”

கண்மணி புருவத்தைச் சுருக்கி என்ன கதை சொல்லலாமென்று யோசித்துக் கொண்டிருந்த போது , பக்கத்து வீட்டுக் கமலா கயிற்றிலே கட்டிய தனது ஆட்டினைக் கொண்டு கண்மணி அருகே வந்தாள்.

“பேரப்பிள்ளைகளைப் பிராக்காட்டிறியளோ கண்மணி அக்கா”

“ ஓம் நீ ஆட்டை இழுத்துக் கொண்டு எங்கை போறாய்?”

“’றெயில் பாதையிலை நல்ல புல்லு முளைச்சுக் கிடக்கு. அதிலை ஆட்டைக் கட்டி விட்டால் மேயும்? என்று சொல்லிக் கொண்டே முன் பக்கமிருந்த புல் மேட்டிலே ஆட்டைக் கட்டி மேயவிட்டாள் கமலா”

“அம்மம்மா“ மதுஷனும் விதுஷனும் ஒரே நேரத்தில் அழைத்தனர்.

“என்னடா?”

: “கமலாமாமி அந்த இடத்தை ஏன் றெயில் பாதை எண்டு சொல்லுறா?”

“ஓகோ உங்களுக்கு அதைப் பற்றி இவ்வளவு நாளாய்த் தெரியாமல் போச்சே”

கண்மணி அந்த இடத்தை நோக்கினாள். கேற்றுக்கு முன்னாலிருந்த சிறிய வீதிக்குச் சமாந்தரமாக மேடான பாதையொன்று புல்லும் புதரும் மண்டியதாக, நீளமாகக் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தெரிந்தது.

“அதென்னெண்டு சொல்லுங்கோ அம்மம்மா” ஆவலோடு அவளைக் கேட்டனர்
பேரப்பிள்ளைகள்.

“அந்த இடத்திலைஇரண்டு பக்கமும் நீளமாய் இரும்பு வைச்சு நடுவிலை பலகை அடுக்கின மாதிரித் தண்டவாளம் இருந்தது .அதிலை லொட லொடபடபடவெண்டு பெரிய சத்தத்தோடை புகை விட்டுக் கொண்டு புகை வண்டி ஓடினது”

“புகை வண்டியோ? அது என்ன மாதிரி இருக்கும் அம்மம்மா” ஏதோ அதிசயச் செய்தியைக் கேட்ட மாதிரிக் கைகளால் வாயைப் பொத்தினாள் கண்மணி
“சொல்லுங்கோ” என்று அவளது கையை இழுத்தான் மதுஷன்.

“கம்பியூட்டரையும் செல்போனையும் பற்றித் தெரிஞ்ச உங்களுக்குப் புகை வண்டியைத் தெரியாமல் போனதை நினைக்க எனக்குப் பெரிய கவலையாய்க் கிடக்கு. இண்டைக்கு நான் அதைப் பற்றித்தான் சொல்லப் போறன்.. புகை வண்டியெண்டா பெட்டி பெட்டியாய் நீளமாய் இருக்கும்.”

கண்மணி சொல்லிக் கொண்டிருக்கும்போது வான் ஒன்று அந்த வழியால் போனது. புகை வண்டியின் தோற்றத்தை இன்னும் தன் மனக் கண்ணில் கொண்டு வர இயலாத விதுஷன் “அம்மம்மா புகை வண்டி இந்த வானைப் போலை இருக்குமா?” என்றான்.

“இல்லையடா.இப்பிடி அம்பது வான்களை அடுக்கி விட்ட மாதிரி நீளமாய் இருக்கும்.”

கண்கள் விரிய அதனைக் கற்பனை செய்து பார்த்த மதுஷன் கேட்டான்.

“அம்மம்மா நீங்கள் புகை வண்டியிலை ஏறிப் போயிருக்கிறியளே?
“ஓமடா எத்தனை தரம் போயிருக்கிறன். என்ரை தகப்பனாருக்கு வாரண்ட் இருந்தது அதாலை காசு குடுக்காமலே புகை வண்டியிலை போனம். காங்கேசந்துறையிலிருந்து மெயில் றெயின் யாழ்தேவி எண்ட பேரோடையெல்லாம் புகை வண்டி வரும் . யாழ்தேவியிலை மத்தியானம் ஒரு மணிக்கு ஏறினால் இராப் பத்து மணிக்குக் கொழும்புக்குப் போய்ச் சேருமட்டும் எத்தினை புதினங்களெல்லாம் பார்த்துக் கொண்டு போவம்.வழி வழியே ஒவ்வொரு ஸ்ரேசனிலையும் கோப்பி சோடா எண்டு பெரிய கலகலப்பாயிருக்கும் மெயில்றெயினெண்டா இரவு முழுக்கப் புகை வண்டியிலை போகப் பெரிய சந்தோஷமாக இருக்கும்”

மதுஷனும் விதுஷனும் தங்களிலும் பார்க்க அம்மம்மா அதிஷ்டசாலி நினைப்பது போல், கண்மணியை வியப்போடு பார்த்தார்கள். பின்னர் விதுஷன் ஒரு கேள்வி கேட்டான்.

“அம்மம்மா! இந்த இடத்திலை புகைவண்டி நிற்குமா?. நீங்கள் இதிலை நிண்டா புகை வண்டியிலை ஏறுவீங்கள்”

பேரனுடைய அறியாத்தனத்தை எண்ணிச் சிரித்தாள் கண்மணி.

“புகை வண்டி ஸ்ரேசனிலைதான் நிக்கும். நாங்கள் ஸ்ரேசனுக்குப் போய் ரிக்கற் எடுத்து பிளாற்போமிலை, நிண்டுதான் புகை வண்டியிலை ஏறலாம்.. அங்கை கைகாட்டி மரம் இருக்கும் , காட் நிண்டு பச்சைக் கொடி காட்டுவார்.எத்தினை புதினம் பார்க்கலாம்.
.
“சீ! இதையெல்லாம் எங்களாலை பார்க்க முடியாமல் போச்சே” என்ற தவிப்புடன் மதுஷன் கேட்டான்”அம்மம்மா ஸ்ரேசன் எங்கை இருக்கு? தூரத்திலையா? நீங்கள் எப்பிடி அங்கை போவியள்?”

“உதிலை கிட்டத்தானே இருக்குது. நாங்கள் சாமான் வாங்குகிற கடைக்குப் பின் பக்கமாய் பற்றையும் புதருமாய்க் கிடக்கு”

“அம்மம்மா! போய்ப் பாத்திட்டு வருவமே?”

பேரப்பிள்ளகள் மாறி மாறி வற்புறுத்த கண்மணி சம்மதித்தாள் சுட்டெரிப்பதுப் போல் வெளியில் வெய்யில் எறித்தது. அவர்களுக்குத் தொப்பிகளைப் போட்டுக் காலில் செருப்பும் கையில் விரித்த குடையுமாக கடையடிக்குக் கூட்டிக் கொண்டு வந்தாள்.

“வெய்யிலுக்கை வந்திட்டியள். என்ன சாமான் வேணும்“ என்று கேட்ட கடைக்காரருக்கு” பேரப்பிள்ளைகளுக்கு இண்டைக்குத்தான் ரயிலைப் பற்றித் தெரிய வந்தது. ஸ்ரேசனைக் காட்டலாமென்று கூட்டிக் கொண்டு வந்தனான்.” என்று சொல்லிக் கொண்டே பின்புறமாகப் போனாள்.

“உதிலை நிண்டு பாருங்கோ. பத்தேக்கை மிதிவெடி இருந்தாலும் இருக்கும்”

என்று கடைக்காரர் எச்சரிக்க அவர்கள் கடையின் பின் சுவரில் சாய்ந்து நின்று செயலற்ற நிலையிலிருக்கும் புகை வண்டி நிலையத்தைப் பார்வையிட்டனர்.

“அங்கை பாருங்கோ ஒரு கட்டிடம் தெரியுது அதுக்குள்ளைதான் நாங்கள் ரிக்கற் வாங்குவோம். வெளியிலை மேடை மாதிரித் தெரியுது பிளாற்போம் . அதிலை நிப்பம் ரயில் கூ…………….என்று கூவிக் கொண்டு வரும். தாவி ஏறுவம் அதிலை பயணம் செய்யேக்கை படு குஷியாய் இருக்கும்.”

கண்மணி ஒரு நிமிடம் பழைய நினைவுகளில் மூழ்கி விட்ட போதும், கண் முன்னால் காட்சி தரும் யதார்த்தம் அவளை அதிலிருந்து மீட்டுப் பெருமூச்சுவிட வைத்தது. இருபது வருட இடை வெளியில் புகை வண்டி நிலையக் கட்டிடம் கூரையில்லாமலும் மேடை குண்டும் குழியுமாகவும், பாதை புல்லும் புதருமாகவும் சுவடே தெரியாமல் காட்சி தந்தன.

“அம்மம்மா! உங்களைப்போலை எங்கடை அம்மாவும், புகை வண்டியிலை ஏறிப் போயிருக்கிறாவே?”

“உங்களைப் போலை சின்னப் பிள்ளையாய் இருக்கேக்கை எத்தனையோ தரம் கொம்மாவை றயிலிலை கூட்டிக் கொண்டு போயிருக்கிறன். ரண்டு மூண்டு தரம் எல்லோருமாய் றயிலிலை கதிர்காமம் போனனாங்கள்.”

ஒரு சாதாரண செய்தியாகத் தான் கண்மணி அதனைக் கூறினாள். ஆனால் அச் சிறுவர்களுக்கு அது ஓர் ஏக்க உணர்வை ஏற்படுத்தியது.
“அம்மம்மாவுக்கும் அம்மாவுக்கும் கிடைத்த அந்தக் குஷி எங்களுக்கு இல்லாமல் போய் விட்டதே “ என்ற ஏக்கம் கொஞ்சம் தொனிக்க மதுஷன் கேட்டான்.

“ஏன் அம்மம்மா இப்ப புகை வண்டி வாறேலை?”

இதே கேள்வியை விதுஷனும் கேட்டான் கண்மணி தயக்கமின்றிப் பதில் சொன்னாள்.

“சண்டை தான் காரணம்.ஓமடா! சண்டை தான் காரணம்”

புரிந்து கொள்ளமுடியாமல் நின்ற சிறுவர்களுக்குப் புரிந்து கொள்ளும்படியாக அவள் விளக்கினாள்.

“வீட்டிலை நீங்கள் சின்னச் சின்னச் சண்டை போடுறியளே. அது மாதிரி நாட்டிலையும் பெரிய சண்டை வந்தது.. இண்டைக்கு நீகள் இரண்டு பேரும் பந்துக்காகச் சண்டை போட்டு ஏற்பட்ட விளைவுகளைப் பாருங்கோ இஞ்சை மதுஷன்ரை கையிலைபல்லாலை கடிச்ச காயம். விதுஷன்ரை துடையிலை நிகத்தாலை கிள்ளின காயம்.. நீங்க சண்டை போட்டு அழுததைக் கேட்டுக் கோமதி கத்தியை இழுக்க என்ரை விரலிலை கத்தி கீறி இரத்தம் வந்து கிடக்கு பாருங்கோ” என்று தன் விரலைக் காட்டி விட்டுத் தொடர்ந்தாள்” உது மாதிரித் தான் நாட்டிலை சண்டை நடந்ததாலையும் பெரிய பெரிய காயங்கள் இழப்புக்கள் மரணங்கள். அந்தச் சண்டையாலை தான் ரயிலும் ஓட முடியாத நிலை வந்தது.

“பேரப்பிள்ளையளுக்குப் பெரிய லெக்சர் அடிக்கிறியள் அக்கா”

கடையில் நின்ற ஒருவர் எட்டிப் பார்த்துப் பகிடி விட்டார்.

“நாட்டில் ஏன் சண்டை வந்தது? சண்டைக்கும் ரயில் ஓடாததற்கும் என்ன சம்பந்தம்? அவர்களுக்கு அது புரியவில்லை ஆனால் சண்டையால் ஏற்படும் விளைவுகள் கூடாதவை என்பது புரிந்தது, மதுஷன் ஏதோ தீர்மானத்துக்கு வந்து விட்டவன் போல்” அம்மம்மா “என்று அழைத்தான்.

“என்ன சொல்லு”
“நான் இனித் தம்பியோடை சண்டை பிடிக்க மாட்டன்”

“நானும் சண்டை பிடிக்க மாட்டன்” விதுஷனும் தாமதிக்காமல் கூறினான்.

“சரி பாப்பம். நீங்கள் சண்டை போடாட்டில் வீட்டிலை எவ்வளவு நிம்மதி கிடைக்கும்” என்றவாறே வானத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

“சூரியன் உச்சிக்குப் போட்டுது வெய்யில் சுடப் போகுது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது ஒரு காட்சி அவளுக்குத் தென்பட்டது.

“அடடே இதை உங்களுக்குக் காட்டாமல் விட்டிட்டன் . அங்கை பாருங்கோ” கண்மணி காட்டிய இடத்தில் சிறுவர்கள் ஆவலோடு பார்த்தார்கள்.

ஒற்றைக் காலில் நின்று அர்ச்சுனன் தவம் செய்வது போல ஒற்றைக் கையை நீட்டித் தவம் செய்வது போன்று கைகாட்டி மரம் காட்சி தந்தது..

“அது என்ன அம்மம்மா?” அது தான் சிக்னல் றயில் ஸ்ரேசனுக்குக் கிட்ட வரேக்கை சிக்னல் விழும் சிக்னல் விழுந்தால் தான் றயில் ஸ்ரேசனுக்கை போகும். இப்ப றயிலும் வாறேலை கைகாட்டியும் கையை நீட்டிப் பிடிச்சுக் கொண்டு தவம் செய்யிற மாதிரி நிக்குது,”

கண்மணியின் விளக்கத்தைப் புரிந்து கொண்ட மாதிரி மதுஷன் கேட்டான்.

“இனிமேல் சிக்னல் விழாதா அம்மம்மா?”

“காலம் தான் அதுக்குப் பதில் சொல்ல வேணும் .உங்கடை மனதிலை ஒரு தெளிவு ஏற்பட்டிருக்கிற மாதிரி நாட்டிலையும் தெளிவு ஏற்பட்டால் அது நடக்கும்” நம்பிக்கையோடு நடந்தார்கள் அச்சிறுவர்கள்.

– வெள்ளி மலை இதழ் சித்திரை 2009

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *