சுகவனம் உள்ளே வந்து சோபாவில் உட்கார்ந்தார். அந்த நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் தளர்ந்து போயிருந்தார். சார் ! அந்த சிவராஜ் உங்களுக்கு செஞ்ச துரோகத்திற்குப் பிறகாவது நான் சுதாரிச்சிருக்கனும் ! இப்படி ஆயிடுச்சே ! என்று புலம்பினார்.
நான்கு வருடம் முன்பு நானும் சிவராஜும் பிசினஸ் பார்ட்னர்ஸ். ஆனால் திடீரென்று ஒரு நாள் பவர் ஆப் அட்டர்னி கொடுத்திருந்ததை பயன்படுத்தி 20 லட்சத்துடன் தனியாகச் சென்றுவிட்டான். கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்வதைத் தவிர என்னால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அந்த இழப்பிலிருந்து மீண்டு வர இரண்டு வருடம் ஆனது. இப்போது அதே போல் சுகவனத்தை ஏமாற்றி விட்டான். சுகவனம் சொன்னார். சார் ! நான் அவனை சும்மா விடப் போவதில்லை. உங்கள் வழக்கு விவரங்களின் நகலை எனக்கு கொடுங்கள். நானே இரண்டு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்க வழி செய்கிறேன். நான் பெரிய பெரிய வக்கீல்களிடம் கேட்டு விட்டேன். சேர்த்து விசாரிக்கும் பட்சத்தில் அவன் தப்பிக்கவே முடியாது என்றார். டாக்குமென்ட்ஸ் வீட்டில் இருப்பதால் நாளை தருவதாகச் சொல்லி அனுப்பினேன்.
இரவு சாப்பாட்டின் போது மனைவியிடம் “நமக்கு கெடுதல் நெனச்ச அவனுக்கு கெட்ட நேரம் ஆரம்பம் ஆயிடுச்சு பார்” என்றேன். அவளும் அந்த தன் நகைகளை எல்லாம் இழந்து பணக்கஷ்டங்களையும் மனக் கஷ்டங்களையும் என்னோடு சேர்ந்து சுமந்தவளாச்சே !.
“ஆமாங்க ! நீங்க சொல்றது சரிதான். எல்லாம் கெட்ட நேரந்தாங்க ! சிவராஜ் அண்ணே நம்ம கூட இருந்த வரைக்கும் எவ்வளவு நல்லா இருந்தாங்க. நம்ம குழந்தைகிட்ட எவ்வளவு பாசமா இருப்பாங்க. ஒரு நாள் நம்ம பொண்ணு கார்லே அடிபட்டு ரோட்டுல கிடந்தப்ப தன் கையாலேயே தூக்கிட்டு போயி ஆஸ்பத்திரியில் சேர்த்து, நாம அடிச்சு புடிச்சு போறதுக்குள்ளேயே நான்தான் தாய் மாமன்னு சொல்லி ஆபரேஷனுக்கு கூட ரெடி பண்ணியிருந்தாரே ? அவரு கெட்ட நேரம் பணம் பணம்னு அலையிற பொண்டாட்டி ….. கூடாத சகவாசம் ! …… இப்படி ஆயிட்டாரு ! எல்லாம் கெட்ட நேரந்தாங்க” என்று உள்ளே போய் விட்டாள். மனைவியின் வார்த்தைகள் யோசிக்க வைத்தன.
மறு நாள் காலை சுகவனத்திடம் ” என் கஷ்டம் என்னோடவே போகட்டுங்க ! எல்லாத்தையும் இப்பத்தான் மறந்திருக்கேன் இதுக்கு மேல வேற எதுவும் நான் பண்ணுறதா இல்லங்க ! நீங்க தனியாகவே பார்த்துக்கங்க ! ” என்று முடிவாகச் சொல்லி விட்டேன்.
இதைத்தான் திருவள்ளுவர் 109 வது குறளில் இப்படி சொல்லியிருக்கிறார்.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்று நன்று உள்ளக் கெடும் ( 109 )
பொருள்: ஒருவர் கொல்வது போன்ற தீமை செய்தாலும் கூட முன்னர் அவர் செய்த ஒரு நல்ல செயலை நினைத்துப் பார்த்தால் அந்தத் தீமை நம் உள்ளத்தில் இருந்து மறைந்துவிடும்