கூன் பாண்டியன்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கலைமகள்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 25, 2022
பார்வையிட்டோர்: 2,903 
 
 

(1947ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கழுத்தில் ருத்திராட்ச மாலையும் நெற்றியில் விளக்கமான திருநீறும் அணிந்து கொண்டு தூய்மையான ஆடைகளுடன் அமர்ந்து வைத்தியநாத முதலியார் தேவார பாராயணம் செய்து கொண்டிருந்தார். ஒவ்வொரு நாளும் அதிகாலையிலே நீராடிவிட்டுப் பூஜை செய்து தேவார பாராயணம் செய்வது முதலியார் வழக்கம். பரம்பரைச் சைவராகிய அவருக்குச் சைவத்தில் அழுத்தமான பற்று. தேவார பாராயணம் புண்ணும் போது அதில் மனம் அழுந்தி ஈடுபடுவார். சில சமயங்களில் உள்ளம் உருகிக் கண்ணீர் விடுவார்.

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா
நின்னடி என்மனத்தே
வழுவா திருக்க வரந்தர வேண்டும்”

என்று மெல்ல ராகம் போட்டுப் படிக்கும் போது அவருடைய தொண்டை யில் களகள் சப்தம் உண்டாகும். வார்த்தை தடுமாறும். கண்ணில் குபுக்கென்று நீர் கொப்புளிக்கும். மேலே பாட முடியாமல் தத்தளிப்பார். உண்மையாகவே தெய்வத் திருவருளில் நம்பிக்கையும் தேவார திருவாச கத்தில் பெருமதிப்பும் உடையவர்; இளகிய உள்ளம் உடையவர். ஆதலால் தேவாரத்தில் இப்படிச் சில இடங்கள் வரும் போது அவர் உருகுவார்.

இன்று இப்போது தான் பாராயணம் செய்ய ஆரம்பித்திருக்கிறார். கண் தேவார புத்தகத்தில் சென்றாலும், வாய் பழக்கத்தால் ராகம் போட்டுப் படித்தாலும், அவர் கருத்து எப்போதும் போல அந்தப் பாட் டின் பொருளிலே அழுந்துவதாகத் தெரியவில்லை. புத்தகத்தையே கூர்ந்து நோக்கிப் பாராயணஞ் செய்யும்போது, பழக்கத்தினால் உருவான இடங்கள் வந்தால் கண்ணை மூடிக்கொண்டு பாட்டைச் சொல்வார். அப் போது தான் அவருக்கு அதிக உருக்கம் உண்டாகும். ஆனால் இன்றோ அவர் கண் புத்தகத்தைப் பார்ப்பதோடு நில்லாமல் இடையிடையே, எதிரே கூடத்தின் மற்றோர் ஓரத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குழந்தையின் மேல் பாய்ந்து கொண்டிருந்தது.

நெடுங்காலம் பழக்கமாக இருந்த ஒரு நெறி இப்போது சற்றுத் திறம்புகிறது. அதாவது என்ன வேடிக்கையானாலும் ஒரே நினைவோடு தேவார பாராயணம் செய்யும் அவர், வாய் தேவாரத்தைச் சொல்லிக் கொண்டிருக்க இடையிடையே கண்ணைக் குழந்தையிடத்திலே போக்கி னார். அதற்குக் காரணம் அவர் உள்ளம் இப்போது தேவாரத்திற் புதிய வில்லை. எங்கெங்கோ சுற்றி வட்டமிட்டுக்கொண் டிருக்கிறது. மின்சாரத் தின் மூல விசையை முடுக்கிவிட்டால் பல்பல விதமான பொறிகளும் இயங்குகின்றன; விசிறி சுழல்கிறது; விளக்கு எரிகிறது. இப்படித்தான் அந்தக் குழந்தையின் மேல் பார்வை விழுந்தவுடன் அவர் சிந்தனை பெரு வேகத்தோடு எங்கெங்கோ செல்கிறது. பல வருஷங்கள் பின்னுக்கு இழுத்துச் செல்கிறது. பல பல இடங்களுக்கு அழைத்துப் போகிறது.


இதேமாதிரி ஒரு குழந்தையை அவர் சிந்தனை பற்றுகிறது : முப்பது வருஷத்துக்கு முன்னே பார்க்கிறது. இதே வயசு; மூன்று பிராயம். தளதளவென்று பொலிவு பெற்ற முகமும் பின்னி உச்சிப் பூச் சூட்டிய தலையும் கழுத்தில் சிறிய ருத்திராட்சமும் தங்கச் சங்கிலியும் நெற்றியில் திரு நீறுமாகக் குழந்தை சிரிக்கிறது. பெரிய புராணத்தில் மனத்தைச் சிக்கவிட்ட அவருக்கு, ‘திருஞானசம்பந்தர் இப்படித்தான் இருந்தாரோ!’ என்ற எண்ணம் உண்டாகிறது. இறைவன் இந்த அழகிய குழந்தையைத் தமக்கு அருள் செய்தாரே என்று நினைந்து உள்ளம் பூரிக் கிறார். சம்பந்தப் பெருமான் யார்? என்றும் இளைய பிரானாகிய முருக னுடைய திருவவதாரம் அல்லவா? வைத்தீசுவரன் கோவில் அவருடைய குல தெய்வ ஸ்தலம். தலைமுறை தலைமுறையாகக் குழந்தைகளுக்கு முடி வாங்கும் இடம். அங்கே உள்ள முருகனுக்கு முத்துக் குமாரசாமி என் பது பெயர். அதே பெயரை அந்தக் குழந்தைக்கு வைத்தார். முத்துக் குமாரசாமி என்று வாய் நிறையக் கூப்பிட வேண்டுமென்று அவருக்கு ஆசை. சோம்பேறி உலகத்தில் அது நடக்கிற காரியமா? பெயரைச் சிதைப்பது தானே மனிதன் இயல்பு? நல்ல வேளையாகக் குழந்தையின் பெயர் அவலட்சணமாகச் சிதையாமல் முத்து என்று நின்றது.

முத்துக்குமாரசாமி வைத்தியநாத முதலியாருடைய ஒரே – மகன் என்பது அப்போது முதலியாருக்குத் தெரியாத சமாசாரம். அவன் முதல் மகன்; ஒரே மகன் என்ற உண்மை பிறகுதான் தெரிந்தது. இப் போது நிச்சயமாகத் தெரிந்த விஷயம்…


எதிரே உட்கார்ந்து விளையாடிக்கொண் டிருந்த குழந்தை பொம்மை மோட்டாரைத் திருக முயல்கிறது; முடியவில்லை. ”அம்மா” என்று கத்துகிறது. முதலியார் சிந்தனை உலகத்திலிருந்து நிகழ்கால உலகத்திற்கு வந்தார். தேவாரம் திறந்தபடியே இருக்கிறது. அவர் வாய் பாடவில்லை. சிந்தனை அவரை ஆட்கொண்டிருந்தது. சுவாரஸ்ய மாக வாசித்துக் கொண் டிருந்த போது திடீரென்று பிடிலின் தந்தி அறுந்து போவது போல முப்பது வருஷங்களுக்கு முன் பின்னோக்கிச் சென்று கொண் டிருந்த நினைவு பட்டென்று அறுந்துவிட்டது. ”ஏய்!” என்று அவர் கூப்பிட்டார்.

‘இதோ வந்துவிட்டேன்” என்று ஒரு பெண் குரல் எதிர் பேசியது.

“குழந்தை எதையோ திருகுகிறான். கையிலே காயம் பட்டுவிடப் போகிறது. இங்கே பார்.”

“இதோ வந்தேன்” என்று சொல்லிக்கொண்டு அந்தக் குரலுக்குச் சொந்தக்காரியான 45 வயசுக்கு மேற்பட்ட அம்மாள் ஒருத்தி பிரசன்ன மானாள். வந்து குழந்தையை அணைத்துக் கொண்டு, ”போக்கிரி, கையைப் பொத்துக்கொள்ளாதே” என்று சொல்லித் தானே அந்த விசையை முடுக்கிக் கீழே மோட்டாரை ஓடவிட்டாள். அது கிர்ரென்று வட்ட மாகச் சுழித்து ஓடியது. ‘பாத்தி, மோத்தார்; தாத்தா மோத்தார்” என்று தன் மழலை மொழியால் பேசிக் குதூகலமடைந்தது குழந்தை.

தாத்தா என்ற சொல் முதலியார் காதில் விழுந்தது; அந்த ஒலி மற்றொரு முறை சிந்தனை உலகத்தின் வாசலைத் திறந்துவிட்டது. தேவாரம் திறந்திருந்தும் அதை உள்ளத்திலே மூடிவிட்டு அந்த உலகத் திலே மறுபடியும் புகுந்தார் அவர்.

தாத்தா என்று மழலை மொழியிலே அழைக்கும் இந்த இனிய சொல் லுக்கு முதலியார் தம்மை விஷயமாக வைத்துக்கொள்ள முடியவில்லையே! அப்பா என்று முப்பது வருஷத்துக்குமுன் அழைத்த குழந்தையின் ஞாபகந்தான் அவருக்கு வந்தது. கிரமமாக இருந்தால் தாத்தா என்று உரிமையோடு உழைக்கும் குழந்தை அவர் வீட்டிலே இருக்க வேண்டும். இதோ முன்னாலே, பழக்கத்தாலே தாத்தா என்று அழைக்கும் குழந்தை இருக்கிறதே என்றால், இது கொண்டாடும் இடத்தில் வந்து பழகும் குழந்தை; அவ்வளவு தான்.

வைத்தியநாத முதலியார் அகக் கண்ணில் முத்து தோன்றினான். எத்தனை ஆசையாக வளர்த்தார்! வளர்ந்த குழந்தைக்கு ஏதாவது குறை இருந்ததா? அப்பொழுதெல்லாம் அவருடைய ஜவுளிக்கடைக்கு மகோன் னத காலம். லக்ஷ்மி தாண்டவமாடிக்கொண் டிருந்தாள். குழந்தைக்கு எதில் குறை . வைத்தார்? குழந்தை வளர்ந்து வரவர அதற்குக் கல்வி புகட்டின மாதிரியில் தான் ஏதாவது குற்றம் உண்டா ? ஐந்து வயசில் “தோடு கூற்றுப் பித்தா’ மூன்றும் குழந்தைக்குச் சொல்லி வைத்தார். அந்த மூன்று தேவாரப் பதிகங்களின் முதல் பாட்டுக்களை முத்து பாடும் போது முதலியார் சாக்ஷாத் சிவலோகத்தில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வார். குழந்தையின் எழிலும் அறிவும் வளர்ந்து கொண்டு வந்தன.

இப்போது நினைக்கிறார்: எதற்காகப் பாழும் கோணல் எழுத்தைச் சொல்லிக் கொடுக்கச் செய்தோம் என்று. எதையும் விடாமற் பற்றிக் கொள்ளும் அறிவுடைய முத்துவுக்கு வீட்டிலேயே வந்து வர்த்தியார் சொல்லித் தந்தார். பிறகு பள்ளிக்கூடம் போனான். கல்வி அவனுக்கு விளையாட்டாகத்தான் இருந்தது. ஹை ஸ்கூலுக்குப் போனான்; படித் தான். தேர்ச்சி பெற்றான். அந்த மட்டிலாவது நிறுத்தியிருக்கக் கூடாதா? காலேஜ் படிப்புப் படிக்க வேண்டுமென்று முதலியாருக்கே ஆசை தோன்றிற்று. இவ்வளவு இளமையில் விறுவிறென்று கல்வியில் ஏறி வரும் அவனைத் திடீரென்று நிறுத்துவது பாவம் என்று நினைத்தார். ‘படித்து என்ன செய்யப் போகிறான்?’ என்ற நினைப்பு ஒவ்வொரு சமயம் எழும். இப்போதே கடையில் உட்கார்த்தினால் நல்லதல்ல என்ற நினைப்பே வெல்லும். ”எத்தனையோ பேர்கள் பிள்ளை படிக்கவில்லையே என்று அங்கலாய்க்க, படிப்பதில் தீவிரமாக இருக்கும் இவனுக்குப் படிக் கும் விஷயத்தில் என்ன குறை? பணத்தில் குறைவா, அறிவில் குறைவா? ஒன்றும் இல்லை, அப்படி இருக்கப் படிக்கவொட்டாமல் செய்வது முட்டாள் தனம்” என்ற நண்பர்கள் பேச்சும் அவருக்கு ஊக்கத்தை அளித்தது.

சென்னைக்கு அனுப்பினார். இன்டர் பரீட்சை தேறி முடிந்தபோது பையன் கிராப்பு வைத்துக்கொண்டான். அப்பொழுதே முதலியாருக்குச் சொரேரென்றது. ”எல்லோரும் அப்படி இருக்கும்போது இவன் மாத் திரம் குடுமியோடு இருந்தால் இவனைக் கண்டு எல்லோரும் சிரிக்கமாட் டார்களா?” என்று அவர் மனைவி, குமாரன் பங்கில் வாதித்தாள். ஒருவித மாகச் சமாதானம் செய்து கொண்டார்.

இன்டர் பரீட்சையில் முதலில் தேர்ச்சி பெற்றுப் பரிசுகள் வாங்கி னான். முதலியாருக்கு உண்டான பெருமிதத்துக்கு எல்லை எல்லை. அந்தச் சந்தோஷத்தில் கிராப்பு நினைவெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது. சந்திப்பவர்களெல்லாம் முத்துவுக்குப் பரிசு கிடைத் ததைப் பற்றியல்லவா இப்போது விசாரிக்கிறார்கள்? அவருக்கு எத்தனை கௌரவம்! அது மட்டும் அல்ல. ஒரு புதிய வகையில் பலருடைய சிநேகம் ஏற்படத் தொடங்கியது. அவனுக்குத் தங்கள் பெண்களைக் கொடுப்பதற்குப் பலர் அடிபோட்டார்கள். உத்தியோகம் செய்பவர், பணக்காரர். மிராசுதார், மில் முதலாளி, கடைக்காரர் – இப்படியாகச் சமுதாயத்தின் மேல் தளத்திலே உலவுகிறவர்கள் பலர் தூதுவிடத் தொடங்கினர். “இப்போது என்ன அவசரம்?” என்று சுருக்கமாக விடை அளித்துவந்தாலும் முதலியாருக்கு உள்ளூற ஆசை ஒன்று இருந்தது. நல்ல குலமாகச் சைவப் பற்றுள்ள குடும்பத்தில் பெண் கொள்ள வேண்டுமென்பது அவர் கருத்து. அதுவும் நல்ல ஸ்தலமாக – திருவாரூரைப் போலச் சிறந்த ஸ்தல மாக இருக்கவேண்டும். ‘அவனுக்குக் கல்யாணமாகிவிட்டால் பிறகு குடும்பப் பொறுப்பு அவனுக்கு வந்துவிடும். கடையையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு, வருஷத்தில் சில மாதங்கள் அந்த ஸ்தலத்துக்குப் போய்த் தங்கியிருக்கலாம் அல்லவா? சம்பந்தியின் ஆதரவில் அல்ல. ஒரு வீடு பேசித் தனியே இருப்பதாகத்தான் ஞாபகம். என்றாலும் அண்டை அயலில் உறவினர் இருக்கும் இடத்தில் வசிப்பதைப்போல, முகமறியாத. மூன்றாவது மனிதர் இருக்குமிடம் வருமா?

உலக வாழ்வில் குடும்பத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை மெல்ல முத்துவின் கையில் நழுவவிட்டுத் தாம் பூஜை, தேவார பாராயணம், ஸ்தல யாத்திரை இவைகளோடு நின்று இன்புறலாம் என்று ஒவ்வொரு கணமும் அவர் திட்டம் போட்டுவந்தார். அந்தத் திட்டம் அவ்வளவுக் கும் அஸ்திவாரமாக, நல்ல குடும்பத்தில் சம்பந்தம் செய்து கொள்வது என்ற காரியம் இருந்தது. பல பல பெண்களின் ஜாதகங்கள் வந்தன. நேர்முகமாகவும் சிபாரிசு மூலமாகவும் அகஸ்மாத்தாகவும் கல்யாணத் துக்கு இருக்கும் பெண்கள் உள்ள சைவக் குடும்பத்தைப்பற்றி அவர் அறிந்து கொண்டார்.

இறைவன் திருவருளால் நல்ல இடத்திலிருந்து தம் வீட்டுக்கு அலங்காரமாக ஒரு பெண் வருவாளென்றும், அவள் கையிலே வீட்டுப் பொறுப்பை ஒப்பித்துவிட்டுத் தம் மனைவியும் ஓய்வு பெறலாம் என்றும் அவர் எண்ணினார். தலயாத்திரை முதலிய காரியங்களுக்கு மனைவியில்லாமல் முடியுமா?

2

பி. ஏ. வகுப்பில் முத்து படித்துக்கொண் டிருந்தான். அவ னுடைய படிப்பின் முன்னேற்றத்தைப் பற்றிய செய்தி முதலியார் காதில் விழும்போதெல்லாம் அவருக்குச் சந்தோஷம் உண்டாகி வந்தது. ஆனால் ஒரு நாள் யாரோ சென்னையிலிருந்து வந்த நண்பர் ஒருவர் அவர் சந்தோஷத்திற்கிடையே சிறிது நஞ்சைக் கலந்துவிட்டார்.

“என்ன போங்கள், உலகம் போகிற போக்கை. ஆசாரமாவது, ஜாதியாவது! எல்லாம் அடியோடு தொலைந்து போகப் போகிறது! நானும் நீங்களும் பூஜைப் பெட்டியையும் தேவாரத்தையும் கட்டிக் கொண்டு அழுகிறோம். நம்முடைய பிள்ளைகளோ காலேஜில் படிக்கிறோமென்ற பெயரை வைத்துக்கொண்டு யார் யாரையோ கட்டிக் கொண்டு அழுகிறார்கள்” என்றார் வந்தவர். அவர் பழைய நாள் பேர்வழி.

வைத்தியநாத முதலியார் காதில் இந்த வார்த்தை விழுந்தவுடன் அவருடைய நினைப்பு முத்துவினிடம் சென்றது.

“என்ன அப்படிச் சொல்கிறீர்கள்? எல்லோரும் அப்படிப் போய் விடுகிறார்களா? ஏதோ புதுப் பணம் படைத்த குடும்பங்களில் அப்படி நடக்கும். பரம்பரையாகச் சைவமாக இருக்கும் குடும்பங்களிலே பிறந்த பிள்ளைகள் அப்படி இருப்பார்களா? தாயார் தகப்பனார் எப்படி இருக்கிறார்களோ, அதைப் பொறுத்தது பிள்ளைகளின் நடத்தையும்” என்று அவர் பொதுவாகவே பேசினார். உள்ளுக்குள் மாத்திரம் முத்து வின் கிராப்புத் தலை அவர் கண்ணை உறுத்தியது.

“நாம் என்னவோ அப்படித்தான் எண்ணிக்கொண்டு அப்பாவியாக இருக்கிறோம். நீங்கள் இங்கே திருச்சியில் இருந்து கொண்டு காவிரி ஸ்நானமும் தாயுமானவர் தரிசனமுமே கதியென்று ஒரு நாளைப் போலவே ரெயில் தண்டவாளத்தில் போகிறமாதிரி நடந்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சேர்ந்தவர்களெல்லாம் அப்படியே இருப்பார் கள் என்பது என்ன உறுதி?”

அவர் எதையோ மனசில் வைத்துக்கொண்டு பேசுகிறாரென்பது’ தெளிவாகத் தெரிந்தது. அந்தத் தொனியிலே இருந்த ஏளனக் குறிப்பு வைத்திய நாத முதலியாரின் உள்ளத்தை அறுத்தது.

“அது கிடக்கிறது. ஊரில் எல்லோரும் க்ஷேமந்தானே? நம் பையனை எப்போதாவது பார்க்கிறதுண்டா?” என்று பேச்சை வேறு பக்கத்தில் திருப்புபவரைப் போல முதலியார் கேட்டார். வந்தவரோ அதைத் தானே எண்ணிப் பேசிக்கொண் டிருக்கிறார்? “உங்கள் பையனா? அவன் எதற்கு என் கண்ணில் தென்படுகிறான்? காலேஜில் படிக்கப் போய்விட்டால் அப்புறம் அவர்களெல்லாம் கந்தருவ ஜாதியோடு சேர்த்தி. ஒட்டு உறவென்பதெல்லாம் அவர்களுக்கு இல்லை. அப்படி இருந்தாலும் அதற்கு நேரமேது? படிப்பைத் தவிர்த்து மற்ற விஷயங்கள் எத்தனையோ இருக்கின்றன. போதாக்குறைக்குக் காலேஜில் வயசுவந்த பெண்களும் சேர்ந்து படிக்கிறார்கள். அவர்கள் மனசுக்கும் அறிவுக்கும் வேலை எவ்வளவு அதிகமாக இருக்கும், பார்த்துக்கொள்ளுங்கள்.”

“அது கிடக்கிறது, விடுங்கள். உலகம் நாசமாய்ப் போகட்டும். முத்து எப்போதாவது உங்களைச் சந்திப்பதுண்டா? அதைச் சொல்லுங்கள்.” அப்பாவி முதலியார் அவர் பேசுவதற்கும் தாம் கேட்பதற்கும் சம்பந்தமே இல்லை என்று நினைத்தார்!

‘முத்துவும் அந்தக் காலேஜில் தானே படிக்கிறான்? அவனுக்கு மாத்திரம் தனிப் போக்கு ஒன்று ஏற்படுமா? அப்படி ஏற்பட்டாலும் மற்றப் பிள்ளைகள் சும்மா விட்டுவிடுவார்களா?”

“அவன் நன்றாகப் படிக்கிறானென்று தானே கேள்விப்படுகிறேன்? பரீட்சையில் நல்ல மார்க்கு வாங்கியிருக்கிறான்.”

“நானுந்தான் எவ்வளவோ கேள்விப்படுகிறேன். பரீட்சை மார்க் கைப்பற்றி எனக்குத் தெரியாது. பையன் நீங்கள் நினைக்கிறபடி இல்லை. குலம் கோத்திரம் தெரிந்து சீக்கிரம் அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வையுங்கள்.”

“அவனைப்பற்றி என்ன கேள்விப்பட்டீர்கள்? சொல்லுங்களேன்.”

“சொல்லுவது என்ன இருக்கிறது? இவனோடு ஒருத்தி படிக்கி றாளாம். என்ன ஜாதியோ, ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம். அந்தப் பெண்ணுக்கும் இவனுக்கும் ..”

“ஹா!” என்று திடுக்கிட்டார் முதலியார்.

உண்மையும் அது தான். முத்துக்குமாரசாமி இப்போது காதலுல கத்தில் பிரவேசித்துக்கொண் டிருந்தான். தன்னுடன் படிக்கும் கல்யாணியின் மேல் அவனுக்கு ஒரு கண் விழுந்தது. அவளுக்கோ இவன்மேல் இரண்டு கண்களும் விழுந்தன. மாதக்கணக்காகப் பழகுவ தனால் ஒருவரை ஒருவர் நன்றாகத் – தெரிந்துகொண்டார்கள். கல்யாணி சென்னையில் இருந்த ஒரு வியாபாரியின் பெண். யதிராச பிள்ளைக்கு அவள் நன்றாகப் படிக்க வேண்டுமென்று ஆசை. அவளும் நன்றாகப் படித்துவந்தாள். அறிவு அறிவை வியப்பது இயல்பு. கல்வியில் சிறந்த அவள் முத்துவின் அறிவுத் திறமையிலே ஈடுபட்டாள். முறை தவறி நடக்கும் குணம் அவளிடம் இல்லை. அவனுடைய திறமையை யும் குணத்தையும் தன் தகப்பனாருக்கு எடுத்துரைத்து அவனைத் தன் குடும்பத் தோழனாகச் செய்தாள். ஆகவே முத்து அடிக்கடி யதிராச பிள்ளை வீட்டுக்கு வந்து பழகத் தொடங்கினான். நெருங்கிய உறவினர் வீட்டில் பழகுவதைப் போலப் பழகினான். சில விசேஷ நாட் களில் அவ்வீட்டில் விருந்துண்டான்.

பரம சைவராகிய முதலியாருக்கு இந்த விஷயமெல்லாம் தெரி யாது. முத்துவும் எழுதவில்லை. கல்யாணியினிடம் அவன் மனம் சென் றது, இயற்கையாகவும் நியாயமாகவும் அவனுக்குப் பட்டது . ஜாதியோ சமயமோ அவன் கண்ணுக்கு முன் தடையாக நிற்கவில்லை. இன்னும் ஒரு வருஷம் படித்த பிறகு இருவரும் பி. ஏ. பரீட்சையில் தேர்ச்சி பெறுவார்கள். பிறகு இருவரும் பிரியப்போகிறார்களா? இல்லை, இல்லை. வாழ்க்கைப் பள்ளியில் ஒன்றாய்ப் புகுவார்கள். இதுவே முத்துவின் -கனவு. கல்யாணியும் அப்படித்தான் கனவு கண்டிருக்க வேண்டும். அவள் சுதந்தரத்தைக் கட்டுப்படுத்துவார் ஒருவரும் இல்லை. அப்படி இருந்தால் முதலில் அவளைப் படிக்கவே வைத்திருக்க மாட்டார்களே.

அடுத்த வருஷம் கிறிஸ்துமஸ் லீவுக்கு முத்து திரிசிரபுரம் வரவில்லை. மார்ச்சுப் பரீட்சைக்கு இப்போதிருந்தே படிக்க வேண்டி யிருப்பதால் தங்கிவிட்டதாகக் கடிதம் எழுதினான். அவன் ஹாஸ்டலில் சேர்ந்து படிக்கவில்லை. தனியே ‘ ரூம்’ வைத்துக்கொண்டு ஹோட்டலில் சாப்பிட்டு வந்தான். ஹாஸ்டலில் நடக்கும் சமபந்தி போஜனம் வைத்தியநாத முதலியாருக்குச் சம்மதம் இல்லை. இப்போது விடுமுறைக்கு ஹாஸ்டல் கிடையாது. தனியே ஹோட்டலில் இருந்த முத்துவுக்கு அநுகூலமாகப் போயிற்று.

சென்னையிலிருந்து வந்த மனிதர் சொன்னவற்றிலிருந்து வைத்திய நாத முதலியாருக்குக் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. லீவுக்கு முத்து வராததும் சேர்ந்து கொண்டது. எப்படியாவது அவனுக்குப் பரீட்சை முடிந்தவுடன் கல்யாணத்தைச் செய்து வைத்துவிடவேண்டுமென்று தீர்மானம் செய்து கொண்டார். ”இங்கே அவசரமாக ஒரு வேலை இருக்கிறது. உன் கல்யாண விஷயமாக ஏற்பாடு செய்யவேண்டும். இரண்டு நாள் வந்து இருந்துவிட்டு உடனே போய்விடலாம்” என்று கடிதம் எழுதினார். கல்யாணமா! படிப்பே முடிந்தபாடில்லை. பி. ஏ. முடிந்தவுடன் மேலே சில ஆராய்ச்சிப் படிப்புக்குத் திட்டம் போட்டுக்கொண் டிருக்கிறேன். கல்யாணத்தைப்பற்றி ஒரு முயற்சியும் வேண்டாம்!” என்று எழுதிவிட்டான் பிள்ளையாண்டான்.

‘இப்போது இதை வற்புறுத்த வேண்டாம்; பரீட்சை முடியட்டும்., அப்புறம் கையோடே சுப காரியத்தை முடித்துவிடலாம். இன்னும் மூன்று மாசந்தானே?’ என்று எண்ணியதோடு தீவிரமாகப் பெண்க ளுடைய ஜாதகங்களைப் புரட்டத் தொடங்கினார். ஆனால் அதற்குள் காரியம் மிஞ்சிப் போய்விட்டது. முத்துவுக்கும் கல்யாணிக்கும் கல் யாணம் நடத்தும் விஷயம் சென்னையிலேயே தீர்மானமாகிவிட்டது. யதிராசபிள்ளைக்கு முத்து உள்ளதைச் சொல்லிவிட்டான். தன் தகப்பனார் இந்தக் கல்யாணத்துக்கு இணங்குவது நடக்காத காரியம் என்றும், தன்னை நம்பிக் கல்யாணம் செய்து கொடுப்பதையன்றி வேறு வழியில்லையென்றும் தீர்மானமாகச் சொல்லிவிட்டான். அவர் தர்ம சங்கடத்தில் மாட்டிக்கொண்டார். முற்போக்கு எண்ணமுடையவரானாலும் முத்துவை அவனுடைய குடும்பத்திலிருந்து பிரிப்பது போலாகி விடுகிறதே என்று வருந்தினார். தாய் தகப்பனைப் பிரிப்பது நல்லதா, காதலர்களைப் பிரிப்பது நல்லதா?

பெண்விடுதலை , காதல் மணம் முதலிய விஷயங்களில் திட்டமான கருத்தையுடைய அவருக்குக் காதலரை உலகமே எதிர்த்தாலும் ஒன்று படச் செய்வதுதான் நியாயம் என்று பட்டது.

எதற்கும் தன் தீர்மானத்தைத் தகப்பனாருக்கு எழுதிவிடுவதென்று முத்து நினைத்து நீண்ட கடிதம் வரைந்தான். கல்யாணியின் உயர்ந்த குணங்களையும், படிப்புத் திறமையையும், அவள் தகப்பனாருடைய கௌரவத்தையும் எழுதினான். தங்கள் ஜாதி அல்ல என்ற ஒன்றைத் தவிர ‘எல்லாவற்றிலும் உயர்ந்த சம்பந்தம் என்பதை விளக்கினான். ந்தரர்க்குப் பரவை வாய்த்ததுபோல எனக்குக் கல்யாணி வாய்த் தாள். இது புண்ணியத்தின் புண்ணியமென்றும் சிவனருளென்றுமே நான் கருதுகிறேன்’ என்று முடித்திருந்தான்.

வைத்திய நாத முதலியாருக்கு வந்த கோபம் கட்டுக்கு அடங்க வில்லை. ‘மகாபாவி! பெரிய புராணத்தை மேற்கோள் காட்டுகிறான். சுந்தரராம்! பரவையாம்! இவன் கண்டானாம்!” என்று ஆரவாரித்துச் சீறி எழுந்தார்.

‘இந்தக் கல்யாணத்தை நடத்த நான் சம்மதிக்க மாட்டேன். மீறி நடந்தால் எனக்கும் உனக்கும் சம்பந்தமே இராது. நீ செத்துப் போய்விட்டாயென்று நினைத்துக் கொள்கிறேன்” என்று சுருக்கமாக எழுதியனுப்பி விட்டார்.

பையன் வழிக்கு வருவானென்று எண்ணினார்; வரவில்லை.. விவாக முகூர்த்தம் நடக்கிற தேதியில் அவருக்குப் பத்திரிகை வந்தது. தடுக்க அவருக்குச் சந்தர்ப்பம் இல்லை. பல்லைக் கடித்துக்கொண்டு பத்திரிகை யைச் சுக்கு நூறாகக் கிழித்துவிட்டு உள்ளே போய்க் குப்புறப் படுத் துக்கொண்டு விம்மினார். அவர் மனைவியும் புலம்பினாள். இனிமேல் என்ன செய்வது!

பரீட்சையில் முத்து முதல் வனாக நின்றான். கல்யாணியும் தேர்ச்சி பெற்றாள். . காதல் மணம் செய்து கொண்ட பிறகு முத்து தன் முயற்சி யினாலேயே தான் வாழவேண்டுமென்று உறுதி பூண்டான். தகப்பனா ருடைய ஆதரவை அவன் இழந்தான்; மாமனார் ஆதரவில் வாழ்வது மதிப்பன்று என்றெண்ணி அதையும் இழக்கத் துணிந்தான். சிறப்பாகத் தேர்ச்சி பெற்றதால் ஏதோ ஒரு பாங்கியில் வேலை கிடைத்தது. இப் போதைக்கு இருக்கட்டுமென்று ஏற்றுக்கொண்டு, தன் மனைவியோடு தனியே வாழத் தொடங்கினான்.

மனசு முறிந்து போன வைத்தியநாத முதலியார் ‘ உள்ளது போதும்’ என்று சொல்லி இரண்டு வருஷங்களில் ஜவுளிக் கடையை ஒரு நண்பருக் குக் கொடுத்துவிட்டார். சேர்த்த பணத்தை வாங்கிக்கொள்ளக் கூடிய வன் த்மக்கு உதவாமற் போனபோது, மேலும் மேலும் யாருக்காகப் பணம் சம்பாதிக்க வேண்டும்? உள்ளத்துக்குள்ளே வருத்தம் நெருப் புத் தணலைப்போல அடங்காமல் இருக்க, அவர் சிவ பூஜையினாலும் தேவார பாராயணத்தினாலும்’ தல தரிசனத்தினாலும் அதை அவிக்கப் பார்த்தார். உலகத்தில் என்ன நடக்கிறதென்பதைப்பற்றி அவருக்குக் கவலையே இல்லை. ஊரில் நடப்பதைப்பற்றி அவர் சிறிதும் காதில் போட்டுக்கொள்வதில்லை. ஒரு விதத்தில் பற்றற்ற துறவியைப்போல வாழ்ந்து வந்தார். “பாவம், நல்ல மனுஷன்! மனம் முறிஞ்சு போச்சு! ஒரு விஷயத்துக்கும் வரவில்லை” என்று ஊரார் பேசிக்கொள்வார்கள்.

அவருடைய மனைவி, என்ன இருந்தாலும் பெற்ற தாயல்லவா? எப்படியாவது பிள்ளைக்கும் தகப்பனாருக்கும் சமாதானம் உண்டாக்க வேண்டுமென்று முயற்சி பண்ணினாள். “அவனை நீங்கள் பிள்ளையாக ஏற்றுக்கொள்ள வேண்டாம். விரோதியாகப் பாவிக்காமல் இருங்களேன். உங்கள் மனசுதான் கல். என் மனசு கிடந்து தவிக்கிறதே! அவன் முகத்தையாவது பார்த்து ஆறுதல் பெறுவேனே!” என்று அழாக் குறை யாகக் கெஞ்சுவாள்.

“அதெல்லாம் என் காதில் போடாதே. நீ வேண்டுமானால் உன் அருமைப் பிள்ளையோடே போய் இருந்துவிடு. நான் நல்ல தாய்ப் போயிற் றென்று எங்கேயாவது மடத்துக்குப் போய்க் காஷாயம் – வாங்கிக்கொள்கிறேன்” என்று முதலியார் சொல்வார். அவர் வார்த்தை பயமுறுத்து வதற்காகச் சொன்னதல்ல; அவர் அப்படியே செய்யக்கூடியவர்.

“ஒரு தடவை நீங்கள் பட்டணத்துக்குப் போய் அவனை நேரே பார்த்து ஒரு வார்த்தை கேட்டுவிட்டு வாருங்கள்” என்பாள்.

“என்னத்தைக் கேட்பது? ஆற்றிலே கரைத்த புளியை உருட்டித் திரட்ட முடியுமா? போடி பைத்தியக்காரி. அதெல்லாம் மறந்துவிடு. ‘உற்றார் ஆருளரோ?’ என்று தெரியாமலா அப்பர் சுவாமிகள் பாடினார்?”‘ என்று பதில் வரும்.

“நானாவது போய் வேறு ஒருவர் வீட்டில் இருந்து, பார்த்துவிட்டு வருகிறேன்” என்று கெஞ்சுவாள்.

“பார்த்துவிட்டு வரவேண்டியதில்லை. அங்கேயே தங்கிவிடலாம்” என்று கொதிப்போடு பதில் சொல்வார். அதற்கு மேலே பேச வகை இராது.

3

சில காலமாக – சில மாசங்களாக – முதலியாருடைய மனைவி தன் பிள்ளையைப்பற்றி அவரிடம் பேசுவதே இல்லை. காரணம் அவள் இப் போது ஒரு குழந்தையிடம் தன் அன்பு முழுவதையும் வைக்க ஆரம்பித் தாள். அது முதலியாருக்கு ஒரு வகையில் ஆறுதல் தந்தது.

ஒரு நாள் முதலியாருடைய மனைவி கோயிலுக்குப் போய்விட்டு வரும்போது ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு வந்தாள். குழந்தை – யின் எழிலும் சுறுசுறுப்பும் முதலியாரின் உள்ளத்தைக் கவர்ந்தன.

“எங்கே இந்தச் சிநேகம் பிடித்தாய்?” என்று கேட்டார் முதலியார்.

அவர் மனைவி அவருக்குப் பதில் சொல்லாமலே, “மங்கையர்க்கரசி'” என்று கூப்பிட்டாள். நேரே உள்ளே சென்ற ஒரு பெண் வந்து முதலி யாரை நமஸ்காரம் செய்தாள். குழந்தையின் தாய் அவள். முதலியார் மனைவி, ” கோவிலுக்குப் பக்கத்தில் குடியிருக்கிறார்கள். நான் அடிக்கடி கோவிலில் சந்திக்கிறதுண்டு. நல்ல பெண். தேவாரம் வெகு அழகாகப் பாடுகிறாள். இந்தக் குழந்தையைப் பாருங்கள். என்ன அழகாக இருக். கிறது!” என்று சொல்லிக் குழந்தையை முதலியார் அருகில் விட்டாள்.

முதலியார் குழந்தையை ஏற இறங்கப் பார்த்தார். மெல்ல எடுத்துக்கொண்டார். குழந்தை அழவில்லை; ”வேற்று முகம் இல்லை போல இருக்கிறது” என்று சொல்லித் தம் மனைவியைப் பார்த்தார். அதற்குள் அந்தப் பெண், “உங்களைக் கண்டால் இந்தப் போக்கிரிக்குப் பிடித்திருக்கிறது” என்றாள்.

“என்னையும் போக்கிரி யென்றா சொல்கிறாய்?” என்று முதலியார் கேட்டார்.

எல்லாரும் கொல்லென்று சிரித்தார்கள். இந்தக் காட்சி அந்த வீட்டிற்குப் புதியது.

“உன் பெயர் மங்கையர்க்கரசியா? நல்ல பேர். குழந்தைக்கு என்ன பேர் வைத்திருக்கிறீர்கள்?” என்றார் முதலியார்.

“ஞான சம்பந்தம்” என்று அந்தப் பெண் கூறினாள்.

‘பேஷ்! அருமையான பேர். உன் புருஷர் என்ன வேலை பார்க் கிறார்?”

“குமாஸ்தா வேலை பார்க்கிறார்”

“சைவர்கள் தானே?”

“ஆமாம்!” என்று முதலியார் மனைவி பதில் சொன்னாள்.

அது முதல் மங்கையர்க்கரசியும் குழந்தையும் அடிக்கடி முதலியார் வீட்டுக்கு வருவதும் போவதுமாக இருந்தார்கள். “ஒரு நாள் உன் புருஷரையும் கூட்டிக்கொண்டு வாயேன்” என்று முதலியார் சொன்னார். “இரவும் பகலும் வேலை. அவசியம் உங்களைப் பார்க்க வேண்டுமென்று அவர் சொல்லிக்கொண்டிருக்கிறார்.. வேளை வரவில்லை. நான் சொன் னேன் உங்களைப்பற்றி. அவர் ஏதாவது கோபித்துக்கொண்டால் நான் இந்த வீட்டுக்கு வந்துவிடுவேனென்றுகூடச் சொல்லியிருக்கிறேன். என்னை அந்தரத்தில் விட்டுவிட்டுப் போய்விடாதே என்று அவர் வேடிக்கையாகச் சொன்னார். நீங்களும் அங்கே வந்து உறவு கொண் டாடினால் சரியாகிவிடுகிறது என்றேன். ஏன், நான் சொன்னது என்ன, சரிதானே?” என்று முதலியார் மனைவியைப் பார்த்து மங்கையர்க்கரசி கேட்டாள்.

“சரியான பேச்சு!” என்று முதலியார் பதில் சொன்னார்.

மங்கையர்க்கரசி, ஞானசம்பந்தன் என்ற பெயர்களே முதலியா ரைக் கவர்ந்தன. மங்கையர்க்கரசி இனிமையாகத் தேவாரம் பாடுவாள்: அதைக் கேட்டு முதலியார் மிகவும் ஈடுபட்டார். வறண்ட பாலைவனம் போல இருந்த அவர் உள்ளத்தில் அன்பு சுரந்தது. குழந்தை நாளுக்கு நாள் அவர் உள்ளத்தில் இடங்கொண்டான்.

மங்கையர்க்கரசி தேவாரம் பாடும்போது அவர் உருகிப் போவார். ஒரு நாள் அவள், “ஈன்றாளுமாய் எனக் கெந்தையுமாய் உடன் தோன் றினராய்” என்ற பாட்டை அருமையாகப் பாடினாள். முதலியார் உருகிக் கண்ணீர் விட்டார். விம்மினார். பாட்டை நிறுத்தியவுடன் மங்கையர்க் கரசியை மேலும் கீழும் பார்த்தார். பெருமூச்சு விட்டார்.

“என்ன, அப்படிப் பார்க்கிறீர்களே’ என்று சிரித்துக்கொண்டே கேட்டாள் மங்கையர்க்கரசி.

“ஒன்றும் இல்லை. ஏதோ பழைய ஞாபகம் வந்தது” என்றார்.

“அதைத்தான் அவளுக்குச் சொல்லுங்களேன். நம்முடைய பெண்ணைப்போல ஆகிவிட்ட பிறகு அவளுக்குத் தெரிவதிலே என்ன தோஷம்?” என்று எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவி. சொன்னாள்.

“ஒன்றும் இல்லை. உன்னைப்போல ஒரு பெண் இந்த வீட்டில் இருந்து வாழ வேண்டியவள். நான் அதற்குக் கொடுத்து வைக்கவில்லை.’ நடக்க வேண்டியபடி நடந்திருந்தால் உன்னைப்போல ஒரு பெண் இங்கே எனக்கு மருமகளாய் வந்து வாழ வேண்டும்…” என்று மேலே சொல்ல முடியாமல் தத்தளித்தார்.

“ஆமாம்; அம்மா கூடச் சொன்னார்கள். உங்கள் பிள்ளை உங்களை விட்டுவிட்டுத் தனியே இருக்கிறாராம்”

“பிள்ளையாவது, மண்ணாவது! காலம் கெட்டுப் போயிற்று. அவன் எவளையோ கட்டிக்கொண்டு விட்டான். அவள் அவனை எப்படி எப்படி இழுத்துக் கூத்தடிக்கிறாளோ! ஹூம்! பிராப்தம் அவ்வளவுதான். நான் எத்தனை எண்ணியிருந்தேன்! உன் மாதிரி ஒரு நல்ல பெண்ணைக் கல்யாணம் செய்து வைத்திருந்தால்-“

அவர் மனைவி இடையிலே பேசினாள்: “உன்னைப்போல ஒரு மரு மகள் வேண்டுமென்று தான் அவர் திட்டம் போட்டிருந்தார். ஆனால் கடவுள்-“

“கடவுள் என்ன செய்வார் அம்மா? அவருடைய திருவருள் இல்லா விட்டால் உலகம் நடக்காது. அவர் செய்வதெல்லாம் நல்லதென்றே ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்று மங்கையர்க்கரசி சொன்னாள். .

“இவ்வளவு அறிவாளியாக இருக்கிறாளே, இந்தப் பெண்!’ என்று ஆச்சரியப்பட்டார் முதலியார். இவளைப்போல ஒருத்தி அவனுக்குக் கிடைக்காமற் போனாளே!” என்று ஏங்கினார்.

4

அந்தக் குழந்தைதான் எதிரே உட்கார்ந்திருக்கிறது. அதன் பால்வடியும் முகத்திலே சொக்கிப்போன முதலியார் பாராயணத்தை மறந்து சிந்தனையில் ஈடுபட்டிருந்தார். ‘மங்கையர்க்கரசி: என்ன அழகான பெயர்! அந்தப் பெயருக்கேற்ற பெண். அவளுக்கேற்ற குழந்தை. இருக்கிறபடி இருந்திருந்தால், முத்துவுக்கும் ஒரு மங்கையர்க்கரசி கிடைத் திருப்பாளே! அவர்களுக்குக் குழந்தை பிறந்தால் ஞானசம்பந்தன் என்று தானே பெயர் வைத்திருப்போம்!’.. முன்னாலே விளையாடிக்கொண் டிருந்த குழந்தையை மறுபடியும் பார்த்தார். ‘இவனுக்கும் எனக்கும் என்ன உறவு? என் மனசைக் கரைக்கும் இந்தக் குழந்தையைப்போலத் தானே அவன் குழந்தையும் இருக்கும்!’ இப்படிச் சென்ற சிந்தையை மீட்டுக்கொண்டார். “சம்பந்தம், இங்கே வா” என்று குழந்தையை அழைத்தார். அது மெல்லத் தளர் நடையிட்டு வந்து முதலியாரின் முதுகின் மேல் சாய்ந்துகொண்டது. அதில் தான் எத்தனை இன்பம்! ஏதோ நினைவு வந்தது முதலியாருக்கு. “மங்கையர்க்கரசி!” என்று கூப்பிட் டார். உள்ளேயிருந்து குழந்தையின் தாய் வந்தாள். “உன் புருஷர் எப்போது ஊரிலிருந்து வருகிறார்?” என்று கேட்டார்.

“ஏன், நான் இரண்டு நாள் இங்கே இருந்தது உங்களுக்குப் பொறுக்கவில்லையா? இப்போதே எங்கள் வீட்டுக்குப் போய்விடுகிறேன்” என்று பொய்க் கோபத்தோடு கேட்டாள் மங்கையர்க்கரசி.

“என்ன, இப்படிப் பேச்சிலே பிடித்துக்கொள்கிறாயே; நான் அப்ப டிச் சொல்வேனா? இன்னும் நான் அவரைப் பார்க்கவில்லையே; வந்தால் இங்கே அழைத்துக்கொண்டு வா. அல்லது நான் தான் உங்கள் வீட்டுக்கு வருகிறேனே!”

உங்கள் வீடு எங்கே? எங்கள் குடிசை எங்கே? அங்கே வந்தால் என்னைப்பற்றிய நல்ல அபிப்பிராயமெல்லாம் உங்களுக்குப் போய்விடும். எங்கள் வீடு சேரிபோல இருக்கும்.”

“நீ படித்த பெண். இங்கிலீஷ்கூடக் கொஞ்சம் தெரியும் என்கிறாய். நீ எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பாயென்று எனக்குத் தெரி யாதா? இங்கே நீ பண்ணும் காரியத்தைக்கொண்டு அதை ஊகிக்கத் தெரி யாத முட்டாள் என்று வைத்துவிட்டாயோ?”– முதலியார் சகஜமாகப் பேசினார். அந்த நிலைக்கு அவரைக் குழந்தையும் தாயும் கொண்டுவந்து விட்டார்கள்.

“உங்களுக்குத்தான் இங்கிலீஷ் என்றாலே ஆகாது. அதிலும் படித்த பெண் என்றால் அடியோடு பிடிக்காது. ஏதோ போனால் போகிறதென்று என்னைக் கண்டால் வெறுப்பதில்லை. நானும் ஒரு பி. ஏ. யாக இருந்தால் என் முகத்தில் கூட விழிக்கமாட்டீர்களே!’

“என்ன அப்படிப் பேசுகிறாய்? உன்னைப்பற்றிக் குறைத்துப் பேசி னால் என் மனசு கஷ்டப்படுகிறது. நீ பி. ஏ. படித்தால் மிகவும் நல்லது. உன்னோடு சேர்ந்து அது நல்லதாகிவிடும். நான் என்ன, கல்வியறிவையே வெறுக்கிறவனா?”

“பின்னே அடிக்கடி இங்கிலீஷ் படிப்பென்று கரிக்கிறீர்களே?”

“நான் சுட்டுக்கொண்டவன் அம்மா, சுட்டுக்கொண்டவன். அந்த வேதனையைத் தாங்காமல் அப்படிச் சொல்கிறேன்.”

“என்னிடமும் அதே படிப்பு இருக்கிறதென்றால் உங்கள் மனசு வேதனைப்படாதா?”

“அது வேறு விஷயம். படிப்பினால் கெட்டுப் போகாத நிலை உனக்கு. இருக்கிறது.”

“படிப்பினால் மனிதர்கள் கெட்டுப் போகிறார்களென்று நீங்கள் சொல்லத்தான் கேட்கிறேன். நல்ல வேளை; நான் உங்களிடம் நல்ல பேர் எடுத்துவிட்டேன். இனிமேல் உண்மையைச் சொல்லலாம். நானும் பி. ஏ. படித்தவள் தான். எங்கள் தகப்பனார் படிப்பினால் அறிவு விரிவ மென்று நம்புகிறவர். என்னைப் படிக்க வைத்தார்.”

“உன்னைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லையே! தேவாரம் பாடு கிறாயே! முகத்தில் பளிச்சென்று திருநீறும் குங்குமமும் இட்டுக்கொள் கிறாயே!”

“ஐயோ பாவம்! உங்களுக்கு யாரோ சரியானபடி போதித்திருக்கி றார்கள். இங்கிலீஷ் படிப்பில் திருநீறு பூசவேண்டாம், குங்குமம் இட்டுக் கொள்ளவேண்டாம், கடவுளை நம்பவேண்டாம் என்றுதான் இருக்கிற தென்று யாரோ உங்கள் அறிவில் ஏற்றிவிட்டார்கள். நான் சொல் கிறேன், கேளுங்கள். நல்லவன் கையில் பணம் கொடுத்தால் அவன் நல்லதற்கு உபயோகப் படுத்திக் கொள்வான். தீயவன் கையில் கொடுத்தால் அவன் தீய வழியில் செலவழிப்பான். கெட்டுப்போகிற பெண்களெல் லாம் இங்கிலீஷ் படித்துத்தான் கெட்டுப்போகிறார்களா? அப்படியானால் ஆடவர்களை அது கெடச் செய்யாதா? எத்தனை ஆங்கிலம் படித்த ஆடவர்கள் இந்திய நாட்டுக்கு அணிகலமாக விளங்குகிறார்கள்? எத்தனை பேர் சிறந்த தலைவர்களாக இருக்கிறார்கள்?”

“சரி, சரி, உன்னைப் பேசவிட்டால் பெரிய பிரசங்கமே பண்ணி விடுவாய் போலிருக்கிறது. நீ எம். ஏ. படித்தவளென்று சொல்லிக் கொள்; எனக்கு ஆட்சேபம் இல்லை. உன் புருஷர் எப்படிப்பட்டவரோ? இன்னும் தெரிந்து கொள்ளவில்லை. ஒருகால்-“

“நீங்கள் பெரிய சந்தேகப் பேர்வழியாக இருக்கிறீர்களே. அவர் என்னைக் காட்டிலும் அழகாகத் தேவாரம் பாடுவார். அவரே எனக்குத் தேவாரம் கற்றுக் கொடுத்தார். பிரசங்கங்கூடப் பண்ணுவார்.”

“அடேடே! அப்படியிருந்துமா, என் கண்ணிலே காட்டாமல் வைத்திருக்கிறாய்?”

“அவரைக் காட்டிவிட்டால் பிறகு என்னை மறந்துவிடுவீர்களே! நானும், இங்கே தேவாரம் பாடாவிட்டால் வேறு எங்கே போய்ப் பாடு வேன்? நீங்கள் என்னை மறக்க, நான் தேவாரத்தை மறக்க வேண்டியதுதான்!

கேட்டுக்கொண்டே இருந்த முதலியார் திடீரென்று, “ஏய், இங்கே வா” என்றார். தம் மனைவியை அவர் அழைக்கும் பாணி அது. அவள் வந்தாள். “மங்கையர்க்கரசி எவ்வளவு சாமர்த்தியமாகப் பேசு கிறாள் பார்த்தாயா? இவ்வளவு பேசுவாளென்று நான் நினைக்க வில்லையே!” என்று புன்னகையோடு சொன்னார்.

“உங்கள் வார்த்தை நிமிஷத்துக்கு ஒரு தடவை மாறுகிறது. சிறிது நாழிகைக்குமுன் என்னைப் புகழ்ந்தீர்கள்; இப்போது வாயாடி, சண்டைக்காரி என்று வையாமல் வைகிறீர்கள்” என்று வேடிக்கையாகக் கூறினாள், மங்கையர்க்கரசி.

முதலியார் முகம் சுருங்கியது. சற்றே வேதனை அடைந்தவர் போல, “என்ன அம்மா அப்படிச் சொல்கிறாய்? உன்னைத் தவறு சொன் னால் எனக்கு வாய் வெந்துபோகும். நீ சாக்ஷாத் மங்கையர்க்கரசிதான்” என்று குரல் தழுதழுக்க, மன்னிப்புக் கேட்டுக்கொள்ளும் பாவனையில் சொன்னார்.

“நான் மங்கையர்க்கரசி; அப்படியானால் என் கணவர் கூன்பாண் டியராக்கும்! அவர் காதில் பட்டால் என்ன சொல்வார்?” என்று வேடிக்கையைத் தளர்த்தாமற் பேசினாள் அவள்.

முதலியார் பெரிய புராணத்தில் பெருமதிப்புடையவர். “கூன் பாண்டியரல்ல; கூன் நிமிர்ந்த நெடுமாறர்” என்று உடனே பதில் சொன்னார்.

“முன்னாலே ஏதோ தப்புப் பண்ணித் திருந்தினவர் என்று சொல்கிறீர்களா?” என்று மடக்கினாள்.

“இப்படி இழுத்துக்கொண்டே போனால் பேச்சிலே நான் சிக்கிக் கொள்வேன். தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். மறுபடியும் கேட்கிறேன்: உன் புருஷரை என் கண்ணிலே காட்டப்போகிறாயா இல்லையா?”

“கேள்வியைப் பார்த்தால் உங்களுக்கு ஏதோ உரிமை இருப்பது போலவும், அதை ஸ்தாபித்துக் கொள்பவர் போலவும் இருக்கிறதே!”

“ஏய்; இங்கே வா. மங்கையர்க்கரசி ‘லா பாயின்ட்’ பேசுகிறாள் பார்த்தாயா? நீ வந்துதான் சமாதானம் பண்ணவேண்டும்.”

முதலியார் மனைவி வந்தாள்: “என்ன சொல்லுகிறீர்கள்?” என்றாள்.

“இவள் புருஷரை அழைத்து வா என்று சொல்கிறேன். பிடி கொடுத்தே பேசமாட்டேன் என்கிறாள்.”

“நீங்களே சொல்லுங்கள் அம்மா: மங்கையர்க்கரசி என்று என்னைப் பாராட்டினால், என் கணவர் கூன் பாண்டியரென்றுதானே அவர் நினைக்கிறார்?”

“நான் அப்படிச் சொல்லவில்லையே! கூன் நீங்கிய பாண்டியரென்றல்லவா சொன்னேன்?”

“சரி, அப்படியே வைத்துக் கொள்வோம். அப்படியானால், அவருக்கு ஏதோ கூன் இருந்தது போலவும், அது நீங்கிவிட்டது போலவும் அல்லவா ஏற்படுகிறது? அங்கே ஞானசம்பந்தர் கூன் நீக்கினாரே; இங்கே யார் அப்படி?” என்றாள் மங்கையர்க்கரசி.

“இதோ இருக்கிறானே!” என்று முதலியாரின் மனைவி அங்கிருந்த குழந்தையைச் சுட்டிக் காட்டினாள்.

முதலியார் ஆசையோடு குழந்தையைத் தழுவிக்கொண்டார். “ஞானசம்பந்தன், என் கண் ஞானசம்பந்தன்!” என்று உருகிக் கண்ணீர் விட்டார்.

“ஆஹா! என்ன பொருத்தம்!” என்று மங்கையர்க்கரசி சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ஊரிலிருந்து வந்தவுடன் அவரை அழைத்துக்கொண்டு வருகிறாயா?”

“வருகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. அவரைக் கண்டபிறகு என் மேல் அன்பு குறையக் கூடாது. இந்த ஞானசம்பந்தனையும் மறக்கக் கூடாது.”

“உங்களால் தானே அவர் உறவு எனக்கு?”

“இப்போது அப்படிச் சொல்வீர்கள். அவரைக் கண்டபிறகு சந்தித்தால் அவரும் உங்களை விடமாட்டார்; நீங்களும் விடமாட்டீர்கள்”.

“நல்லது தானே? நமக்கு ஒரு மகளும் மகனும் கிடைத்ததாக எண்ணிக்கொள்கிறேன்.”

“பேரன்?”

“இவனை விடுவேனா? என் கண் அல்லவா?”

“அப்படியானால் சரி.”

5

முதலியார் தேவார பாராயணம் செய்து கொண் டிருந்தார். இரண்டு நாட்களாக மங்கையர்க்கரசி வரவில்லை. அவளைக் காணாதது அவருக்கு ஏதோ மாதிரி இருந்தது. அவள் குழந்தையைக் காணாததனால் அவருக்கு இருப்பே கொள்ளவில்லை. தம் மனைவியைக் கேட்டார்.

“ஏதோ வீட்டில் வேலையாம். அவள் புருஷர் இன்றோ நாளைக்கோ வருகிறாராம்” என்று சொன்னாள்.

பேசிக்கொண்டிருக்கும் போதே வாசலில் “தாத்தா!” என்ற சத்தம் கேட்டது. குடுகுடுவென்று குழந்தை ஞானசம்பந்தன் ஓடி வந்தான். இரண்டு நாளாகக் காணாத ஆவல் அவனுக்கு இருக்கும் அல்லவா? குழந்தைக்கு என்றும் இல்லாதபடி அலங்காரம் செய்திருந்தார்கள். முதலியார் எல்லாவற்றையும் மறந்து எழுந்து ஆவலோடு குழந்தையை வாரி எடுத்தார். அடுத்தபடி மங்கையர்க்கரசி மெல்ல வந்தாள். “எங்கேயம் மா, இரண்டு நாளாகக் காணவில்லை?” என்றார் முதலியார்.

“கூன்பாண்டியரை அழைத்து வந்திருக்கிறேன்.”

“என்ன விளையாடுகிறாயே!”

“இல்லை, இல்லை; கூன் பாண்டியரை நெடுமாறராக்க வேண்டும். இந்த ஞானசம்பந்தன் பாதி ஆக்கியிருக்கிறான். மற்றப் பாதியைச் சிவ. பெருமானைப் போல, வைத்தீசுவரரைப் போல நீங்கள் தான் ஆக்க வேண்டும்!” என்று சொல்லி வாசற்பக்கம் போனாள். ஒரு நிமிஷத்தில் அவள் கணவரை உள்ளே அழைத்து வந்தாள். கண்மூடிக் கண் திறக்கும் நேரத்தில் இருவரும் முதலியார் காலடியில் விழுந்து எழுந்தார்கள்.

முதலியார் கண்ணை முன்னே ஓட்டினார். “என்ன, முத்துவா!” அவர் ஸ்தம்பித்துப் போய்விட்டார்.

“அப்பா!” என்றான் முத்து.

மங்கையர்க்கரசி குழந்தையை மெல்ல வாங்கிக் கொண்டாள். முதலியார் கண்ணில் நீர் சொரிந்தபடியே வேகமாகச் சென்று முத்துவைக் கட்டிக்கொண்டார்.

இந்த அரிய காட்சியை அருகில் இருந்தபடியே, முதலியார் மனைவி பார்த்துக் குதூகலம் அடைந்தாள். அவளுக்கல்லவா தெரியும், இதற்காக எவ்வளவு நாடகம் நடத்த வேண்டியிருந்தது என்று?

அன்று முதல் கல்யாணி மங்கையர்க்கரசி யாகிவிட்டாள்.

– ஏப்ரல், 1947

– கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

– பவள மல்லிகை (சிறு கதைகள்), முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, அமுத நிலையம் லிமிடெட், சென்னை.

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *