குழந்தை…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 23, 2018
பார்வையிட்டோர்: 6,184 
 
 

ஐம்பது கிலோ மீட்டர் தொலைவு பயணத்திற்குப் பிறகு அந்த வீட்டு வாசலில் மனைவியுடன் நின்ற தனசேகரன் தன் கையிலுள்ள தினசரியை விரித்து விலாசத்தை சரி பார்த்தான் சரியாக இருந்தது. முகத்தில் மலர்ச்சி. திவ்வியாவிடமும் காட்டினான் திருப்தி.

இருவரும் வாசல் ஏறினார்கள். தனசேகரன் அழைப்பு மணியை அழுத்தினான். ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகு இருபது வயது பெண்ணொருத்தி கதவு திறந்து ஒருகளித்து இவர்களைப் பார்த்தாள்.

‘‘யார் நீங்க ?‘‘ கேட்டாள்.

தனசேகர் கையிலுள்ள பத்திரிக்கையை விரித்துஇ ‘‘இந்த விளம்பரம்….. ‘‘ இழுத்தான்.

அடுத்து அவள் பேசவில்லை. ‘‘உள்ளே வாங்க‘‘ கதவை நன்றாக திறந்து வரவேற்றாள்.

தனசேகர் – திவ்யா நுழைந்தார்கள். அவள் கதவை அடைத்து தாழிட்டுவிட்டு அவர்கள் முன் சென்றாள். பெரிய வீடு. மார்பிள் போட்டு அழகாய் இருந்தது. ஹாலில் சோபா, நாற்காலிகள் இருந்தது.

‘‘ஒரு நிமிசம் !‘‘ என்ற அவள் அடுத்துள்ள அறைக்குள் நுழைந்து யாரிடமோ சேதி சொல்லி ‘‘உள்ளே வாங்க ‘‘ அழைத்தாள்.

சென்றார்கள்.

அறைக்கட்டிலில் அழகான பெண். வயது 35 இல்லை 36. முதுகில் தலையணை வைத்து சாய்ந்து கால் நீட்டி அமர்ந்திருந்தாள். நைட்டி மேல் ஒரு துண்டு போர்த்தியிருந்தாள்.

‘நடமாட முடியாதவளோ ?!….‘ தனசேகரனுக்குள் ஐயம். ‘அப்படித்தானிருக்கவேண்டும்.! என்ன நோயோ…!?‘ – நினைக்கும் போதேஇ ‘‘உட்காருங்க.‘‘ அவள் எதிர் இருக்கையைக் காட்டினாள். குரல் இனிமையாய் இருந்தது.

அமர்ந்தார்கள். அழைத்து வந்தப் பெண் வேலையின் பொருட்டு அறையை விட்டு வெளியே சென்றாள்.

‘‘நான் மஞ்சுளா ! அந்தப் பெண். வைதேகி .‘‘என்று கட்டிலில் இருந்தவள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டவள்இ ‘‘நீங்க ?‘‘ ஏறிட்டாள்.

கணவனும் மனைவியும் தங்கள் பெயரைச் சொன்னார்கள். ஊர் திண்டுக்கல் என்றார்கள்.

கொஞ்சம் மௌனம்.

‘‘குழந்தை !‘‘ திவ்யா மெல்ல சொல்லி விசயத்திற்கு வந்தாள்.

‘‘வயித்துல இருக்கு……‘‘ மஞ்சுளா தன் வயிற்றைத் தடவினாள்.

அப்போதுதான் கணவன் மனைவிக்கு அவள் நிறைமாத கர்ப்பிணி புரிந்தது, அதே சமயம் குழந்தை வேண்டுவோர் உடன் வரவும் என்ற விளம்பரத்தைப் பார்த்து…. உடன் எடுத்துச் செல்லலாம் என்று நினைத்து வந்தவர்களுக்கு வயிற்றில் குழந்தையைக் காட்டியது அதிருப்தியாய் இருந்தது,

‘‘நான் விதவை ! . புருசன் செத்து அஞ்சு வருசம் ஆகுது.‘‘ மஞ்சுளா அடுத்து சொல்லி இடியை இறக்கினாள்.

கணவன் மனைவி அதிர்ச்சியாய்க் குழம்பினார்கள்

‘‘நான் சொல்றதெல்லாம் நூத்துக்கு நூறு உண்மை. மூடி மறைச்சு குழந்தையை ஒப்படைச்சா பின்னால எல்லாருக்கும் சங்கடம் எனக்கும் திருப்தி நிம்மதி இருக்காதுங்கிறதுனால சொல்றேன். இன்னும் கதை இருக்கு.‘‘ நிறுத்தி ஏறிட்டாள்.

தனசேகர்இ திவ்யாவிற்குள் படபடப்பு, பரிதவிப்பு அதிகரித்தது.

மஞ்சுளா தொடர்ந்தாள். ‘‘உங்களுக்கு குழந்தை இல்லியா ?‘‘ கேட்டாள்.

‘‘இல்லை. நாங்க தம்பதிகளாகி பத்து வருசமாவுது. எல்லா வகையிலும் முயற்சி செய்து பார்த்தாச்சு இல்லே. எதுக்கு…. உனக்கு நான் குழந்தை, எனக்கு நீ குழந்தைன்னு வெறுமையாய் வாழனும் ? அனாதை குழந்தை ஒன்னை எடுத்து வளர்த்தால் அதுக்கு வாழ்வு நமக்கும் திருப்திங்குற ஒரு எண்ணம். பச்சை மண்ணை எடுத்துப் போகலாம்ன்னு வந்தோம். ஆனா இங்கே வயித்துல இருக்கு…‘‘ என்றான் தனசேகர்.

லேசாக புன்னகைப்பூத்த மஞ்சுளா ‘‘பிரசவ தேதி இந்த வாரம். இன்னைக்கோ நாளைக்கோ தெரியலை. நீங்க நெனைச்சி வந்தாப் போல பச்சை மண்ணை என் கண்ணுல காட்டாம கூட எடுத்துப் போகலாம்.‘‘ என்றாள்.

கணவன் மனைவிக்கு என்ன பதில் சொல்வது தெரியவில்லை.

‘‘எனக்கு இப்போ முப்பத்தைஞ்சு வயசு. இருபத்தி அஞ்சுல திருமணம். குழந்தை கெடையாது. அவர்கிட்ட குறை. அதை மறைக்க அவர்கிட்ட எனக்கு நிறைய அடி உதை. வாழ்க்கையே வெறுத்துப் போன சமயம் அவர் விபத்துல பலி. புருசன் குடுத்த தொல்லை மறுமணம் செய்ய விருப்பமில்லே. வைதேகி நானுமாய் வாழ்ந்துடலாம்ன்னு நெனைச்சி இருக்கிறப்போ எனக்கு ஒரு நல்ல ஆண் ஒருத்தர் பழக்கமானார். ஜாக்கிரதையாய் இருந்தோம். ஆனாலும் குழந்தை உருவாகிடுச்சு. அழிச்சுடலாம்ங்குற நெனப்புல ஒரு சின்ன மாறுதல். ஏன் அழிக்கனும்ன்னு கேள்வி. நாட்டுல எது நடக்குலஇ. எது தவறு, நியாயம் ? ஒரு இடத்து தவறு. இன்னொரு இடத்துல நியாயம். கீழ் கோர்ட்டுல தண்டனை. மேல் கோர்ட்டுல விடுதலை. சிலதுகள் வெளிச்சத்துக்கு வருது, சில வராமப் போகுது. நான் விபச்சாரம் பண்ணலை. விருப்பப்பட்டவருடன் இருந்தேன். அதுக்குப் பழியாய் ஏன் ஒரு உயிரைக் கொல்லனும் கொலையாளியாகனும் ? வளர்க்க முடியலைன்னா இல்லாதவங்களுக்குக் கொடுக்கலாமே எண்ணம்‘‘. – நிறுத்தினாள்.

தம்பதிகள் அசந்திருந்தார்கள். அதேசமயம் அவர்கள் முகத்தில் நிறைய உணர்ச்சி மாற்றங்கள்.

மஞ்சுளா மேலும் தொடர்ந்தாள். ‘‘நான் வளர்க்கலாம். விருப்பமில்லே. காரணம்….. எனக்குத் துணையாய் இருக்கிற வைதேகி ஒரு அனாதை. என் வீட்டுல தோட்டவேலை செய்ஞ்ச தம்பதிகளோட பொண்ணு. அவுங்க கள்ள சாராயத்துல செத்துப் போயிட்டாங்க. நான் சுவீகாரமாய் எடுத்துக்கிட்டேன். வழி ? இல்லேன்னா இந்த பெண் அநாதையாய்ப் போகும். தாய் தகப்பன் என்கிட்ட வேலைசெய்ததுக்கான நன்றிக்கடன் இவள். இந்த குழந்தை எனக்குப் பிறகு அவளுக்கு சுமையாய் மாறிடக்கூடாதுன்னுதான் தத்து.‘‘. நிறுத்தினாள்.

‘எவ்வளவு பெரிய மனசு !‘ தனசேகர் திவ்யாவிற்குள் வியப்பு திகைப்பு.

கொஞ்சநேரம் மௌனமாய் இருந்த மஞ்சுளா ‘‘குழந்தை எடுத்துப் போறீங்களா ?‘‘ கேட்டாள்.

‘‘ஸ்கேன் பண்ணுணீங்களா ?‘‘ திவ்யா கேட்டாள்.

‘‘ஆணா பெண்ணா பார்க்க விருப்பமில்லே. ரெண்டும் எனக்கு ஒன்னு. உங்களுக்கு ?‘‘ ஏறிட்டாள்.

தம்பதிகள் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தார்கள்.

‘‘ஆண் குழந்தைதான் வேணும்ன்னா தயவு செய்து கிளம்பிப் போங்க. ஆண் உசத்தியும் கெடையாது பெண் மட்டமும் இல்லே. நம்ப பண்பாடு கலாச்சார கடைப்பிடிப்பின்படி நான் இந்த குழந்தையை அழிச்சிருக்கனும். ஏன்… நான் தவறி இருக்கவே கூடாது. ஆனா மீறி இருக்கேன். காரணம் பண்பாடு கலாச்சாரம் நாமளா ஏற்படுத்திக்கிட்ட பழக்க வழக்கம்.இ கட்டுப்பாடு. அது இடத்துக்கு இடம் நாட்டுக்கு நாடு மாறுபடுது,. உலகத்துல எது சரி எது தவறு புரியலே. ஆகையினால சரி தவறுங்கிறது நம்ம மனசைப் பொறுத்த விசயம்ங்குறது என் முடிவு. அதுக்காக கண்டதே காட்சி கொண்டதே கோலம் கட்சி நான் கெடையாது. கலாச்சாரம் பண்பாடு போர்வையில ஒருவனுக்கு ஒருத்தி போன்ற சில நல்ல பழக்க வழக்கங்களைக் கண்டிப்பாய் கடைபிடிக்கிறதுனால மத்த நாடுகள் நம்மை மதிப்பாய்ப் பார்க்குதுங்குறது. என் அபிப்பிராயம்.‘‘ நிறுத்தினாள்.

தனசேகர் திவ்யா ரொம்ப அமைதியாய் இருந்தார்கள்.

ஐந்து நிமிட இடைவெளிக்குப் பிறகுஇ ‘‘ முடிவு ?‘‘ மஞ்சுளா அவர்களைப் பார்த்தாள்.

‘‘எங்களுக்குக் குழந்தை வேணும்.!‘‘ குரலில் தெளிவு கோரசாய் சொன்னார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *