கதையாசிரியர்:
தின/வார இதழ்: பாக்யா
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 16, 2018
பார்வையிட்டோர்: 8,437 
 
 

‘ஆற்றங்கரை மேட்டினிலே….அசைந்து நிற்கும் நாணலது காற்றடித்தால் சாய்வதில்லை’…காரைக்கால் பண்பலையில் டி.எம்.எஸ் குரல் கசிய…தானும் சேர்ந்து பாடியபடியே சமையலில் ஈடுபட்டிருந்தாள் சரசு.

பாதியிலேயே பாடலை நிறுத்தி விட்டு அறிவிப்பாளர் “நேயர்களே..ஒரு முக்கிய அறிவிப்பு…நாகப்பட்டினத்துக்கு வடகிழக்கே இருநூற்றைம்பது கிலோமீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை மேற்கு நோக்கி நகர்ந்து கடலூருக்கும் நாகைக்குமிடையே இன்றிரவு கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..பொதுமக்கள் தங்களது உடமைகளோடு பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்’என்றார்.

தொடர்ந்த பாடலில் ஏனோ மனம் ஒட்டாமல் குடிசையை அன்னார்ந்து பார்த்தாள்.ஆயிரத்தெட்டு பொத்தல்கள் வழியே வானம் ஒழுகிக்கொண்டிருந்தது.
சோற்றுப்பானையை தவிர எல்லாப் பாத்திரங்களும் அங்கங்கே மழைநீரை சேகரித்துக் கொண்டிருந்தன.

“ம்…இந்த குடிசையை மாற்றிவிட்டு சிமெண்ட் அட்டையை போட்டாவது கொஞ்சம் நல்ல வீடாக கட்டலாம்னு பார்த்தா ஒண்டிக்கட்ட சம்பாத்தியம் வாய்க்கும் கைக்குமே சரியாயிருக்கு…மூனு வருசம் கைவைக்க வேணாம்னு கீத்து கட்டின கொத்தன் சொல்லி வருசம் ஒன்னு ஆகல..இப்ப ஒழுகாத இடம் பாக்கியில்ல..ஒரு கீத்து அஞ்சு ரூவா…அதுக்கு கட்டுக்கூலி ஏழுரூவா..இந்த கூத்துல புளிய மரம் வளர்க்கறாளாம் புள்ளீளீளீளீயயயய…மரம்..வர்றேன்டி”கோபாவேசத்தோடு கத்தியபடியே வீதிக்கு வந்தால் சரசு.

“ஏய்ய்ய்…மச்சு வீட்டுல இருக்குறவளே…உன் மவுசி ஓடைய..உதவாக்கரை புருசனையும்..ஒன்னும் அறியாத புள்ளைகளையும் வச்சிகிட்டு,ஒண்டிக்கட்டையா அல்லாடறேன்…நாயா,பேயா அலஞ்சி பொழச்சு கஞ்சி குடிக்கறேன்…உன் புளிய மரத்து செத்தை குப்பையெல்லாம் எங்கூரை மேல உழுந்து கீத்து மக்கி,பேயுற மழைத்தண்ணீயெல்லாம் …ஏ…வூட்டு அடுப்புல ஊத்துதுடீ…பத்தாயிரம் கொடுத்து கீத்து மாத்துனேன்..வந்து பாருடி..பாய்போட்டு படுக்க ரவ இடமில்ல…பாதகத்தி நீ மரம் வளத்து மகாராணியா வாழ நாங்க மண்ணா போகனுமா..?”பெருங்குரலில் இறைந்தாள் சரசு.

“சத்தம் போடாதக்கா…உன் கோவம் நியாயந்தான்…ராவு ஒரு பொழுது பொறுத்துக்க..விடிஞ்சதும்.முதல்வேலையா உன் வீட்டுக்கூரையை பழுது பார்த்து கொடுத்துடறேன்..பிஞ்சும் பூவுமா இருக்குற மரத்தை மட்டும் வெட்டுன்னு உன் வாயால சொல்லாதக்கா…”என்றாள் பக்கத்து வீட்டு தாயம்மா.

“என்னாத்தடி சொல்ல வேணாங்கற..இதோ வரப்போகுதேடி…தொடச்சி பறிச்சிகிட்டு போக பொயல் காத்தும்..பெருமழையும்…புள்ளைகளை தூக்குவனா…பொணத்துக்கு ரெண்டாவதா கிடக்குற புருசங்காரனை தூக்குவனா…இல்ல சட்டி, புட்டி..சாமான்களை தூக்குவனா…உனக்கென்னடி வீட்டுக்குள்ள அடைக்கோழியாட்டம் அடைஞ்சிடுவே…இப்ப என்ன செய்வியோ..எம்வீட்டுக்கு மேல வாற மரத்தை இப்பவே வெட்டியாகனும்”கறாராக சொன்னாள் சரசு.

“எப்புடிக்கா முடியும்…பிஞ்சும் பூவுமா நிறை சூலியா நிக்குதே…நாமளும் புள்ள குட்டி பெத்துருக்கோம்..வச்சிருக்கோம்ல…ராத்திரி ஒரு பொழுது நம்ம வீட்டுக்கு புள்ளைங்கள அழைச்சிகிட்டு வந்து இருக்கா…காலையில உம்வீட்டை சரிபண்ணி தர்றேன்”

“அடியே..செத்தாலும் எம் வீட்டுல சாவறேன்..சங்க கெட்டத்தனமா அடுத்த வீட்டுல நக்கறதுக்கு நான் என்ன நாய் பொறப்பா.?”நறுக்கென்று கேட்டுவிட்டு நகர்ந்தாள் சரசு.

இரவு மழையும் காற்றும் வலுப்பெற்றது.குடிசை கீற்றுகளை புரட்டி பிடித்து தூக்கி….மழைநீரை அள்ளி வந்துவீட்டுக்குள் ஊற்றியது பெருங்காற்று.இரவு முழுவதும் நடுங்கியபடியே உட்கார்ந்திருந்தாள் சரசு.

விடிந்ததும் ஊர் பெரியவர்களை அழைத்து வந்து புளியமரத்தை வெட்டித்தள்ள வைத்துவிட்டே மறுவேலை பார்ப்பது என்ற தீர்மானம் சரசுவின் மனதில் வலுவாகிக்கொண்டிருந்தது.

பொழுது விடிந்தது.காற்றும் மழையும் சற்றே மட்டுப்பட்டிருந்தன.குடிசையை விட்டு வெளியில் வந்த சரசுவுக்கு பகீரென்றிருந்தது.தன் வீட்டைத்தவிர இதர குடிசைகள் கூரையை இழந்து மண்சுவர்களாக நின்றன.வைக்கோல் போர்,மரங்கள் எல்லாம் நிலை குலைந்து சிதறிக்கிடந்தன.மக்கள் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர்.

பால்கட்டிய சோளக்கொல்லையில் புகுந்த யானைக்கூட்டமாக கண்ணுக்கெட்டிய தூரம் வரை நின்ற அனைத்தையும் வெறியாட்டத்தால் வீழ்த்தியபடியே வெளியேறியிருந்தது புயல்.

தன் குடிசை மட்டும் தப்பிப்பிழைத்த மாயமென்ன என்ற யோசனையோடு நின்றவளை பக்கத்து வீட்டு தாயம்மாவின் குரல் நிதானத்துக்கு அழைத்து வந்தது.

“பார்த்தியாக்கா..இயற்கையோட கணக்க…ஒன்னை நம்பித்தான் இன்னொன்னு வாழ்ந்தாகனும் இங்க..எந்த மரம் உன் குடிசையை பாழ் பண்ணிச்சின்னு நீ நெனச்சியோ அதே மரம் இப்ப உன் குடிசையை காப்பாத்திடுச்சு..காத்தோட ‘வேக’த்தை தன்னோட ‘ரேக’த்துல தாங்கி தடுத்து உன் வீட்டை காவந்து பண்ணியிருக்கு..இருந்தாலும் இனிமேல் இந்த மரத்தை வச்சிப்பார்க்கறதா இல்ல…ஒருநேரம் போல மறு நேரம் வருமா..இந்த மரமே சாஞ்சி உன்வீடு பாழ்பட்டிருந்தா பழி என் தல மேல தான வுழுவும்”என்றாள் தாயம்மா.

“வேணாம் இது மரமில்லை…என் குடும்பத்தை காத்த குலசாமி …இதை வெட்ட விடமாட்டேன்”கண்ணீர் மல்க மரத்தை கட்டிக்கொண்டு வாஞ்சையுடன் வருடிக்கொடுத்தாள் சரசு.

– ஜூன்28-ஜூலை4 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *