குருவிக் குஞ்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 15, 2021
பார்வையிட்டோர்: 1,833 
 

வெகு நாட்களுக்குப் பிறகு கதை எழுத உட்கார்ந்தேன். சிந்தனை திரளாமல் நழுவி ஓடிக்கொண் டிருந்தது, பதம் பெறாத பாகுபோல். வெப்பத்தின் கோரம் மன அமைதியைக் குலைத்துக் கற்பனையைச் சிதற அடித்துக்கொண் டிருந்தது. “அண்ணா, அண்ணா ! சீக்கிரம் ஓடி வா, குருவிக்குஞ்சு!” என்று கொல்லையி லிருந்து சீதா கத்திக்கொண்டு ஓடி வந்தாள். நான் அவளைப் பாதி வழியிலேயே சந்தித்தேன். இருவரும் அந்த இடத்திற்கு ஓடினோம். சீதா குறிப்பிட்ட இடத்தில் வெந்நீர்ப் பானைக்கு அடுத்தாற் போல் அடுப்போடு பதுங்கி ஒடுங்கிக் கிடந்தது அந்தக் குஞ்சு. அதன் பக்க இறக்கைகள் கூடப் பரவலாக வளர்ந்திருக்க வில்லை. உடலிலும் தலையிலும் சொட்டையான இடங்கள் அதன் செந்நிறத் தோலை வெளிக்குக் காட்டி நின்றன. வால் சிறகு இருக்கவேண்டிய இடத்தில் மொட்டையாக இருந்தது. முட்டையிலிருந்து வெடித்துக் கிளம்பிச் சில தினங்களே ஆகியிருக்கும்.

எப்படியோ கூட்டிலிருந்து வெளியேறி விட்டது. அந்தக் குஞ்சு – தாய்க் குருவியின் பாதுகாப்பிலிருந்து. குஞ்சுக்குச் சற்றுத் தூரத்தில் நின்று நான் பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைச் சுற்றிக் ‘கிரீச் கிரீச்’ என்று சப்தம் கேட்கவே சுற்று முற்றும் பார்த்தேன்.

பல குருவிகள் மரங்கள் மீதும், கொடிகள் மீதும், மண் சுவர்கள் மீதும், உட்கார்ந்து கிரீச்சிட்டுக் கொண் டிருந்தன இடைவிடாமல், வழி தவறிய குஞ்சை எடுத்துச் செல்லும் ஆசையுடன். அதற்குள் தான் நான் போய் விட்டேனே அதற்கு எமனாக!

“அண்ணா! எனக்கு அதைப் பிடித்துக் கொடேன்” என்று கெஞ்சிக் குழறிச் சீதா கேட்டாள். என் கதை ஞாபகம் எல்லாம் மறந்து போய்விட்டது. அந்தக் குஞ்சைப் பிடிப்பதில் முனைந்துவிட்டேன். பதுங்கிப் பதுங்கிச் சென்று கையை அதன் வாலோரம் கொண்டு போவேன். குஞ்சின் மின் மினிக் கண்களுக்கு நிழல் தட்டி விடும். மனித எமனிடமிருந்து தப்ப எண்ணி ஒரு விசை கொடுத்துத் தாவிப் பறக்க முயலும். பலஹீனமான அதன் இறக்கை சிறிது தூரத்துக்கு மேல் அதைத் தூக்கிச் செல்ல முடியாமல் ஓய்ந்து தாழ்ந்து விடக் குஞ்சு கீழே விழுந்து தடுமாறும்.

மறுபடியும் நான் கையைக் கிட்டக் கொண்டு போவேன். குஞ்சு மறுபடி சிறகு விரித்துப் பறக்க முயலும். இந்த வேடிக்கையைப் பார்த்துச் சீதா சிரிப்பாள், கை தட்டுவாள். “விட்டுடாதே, அண்ணா” என்று கோபிப்பாள். அதே சமயம் குருவிகளின் அலறல் அதிகமாகும்.

எவ்வளவு நேரந்தான் இறக்கை வளராத அந்தப் பேதைக் குஞ்சால் எனக்குப் போக்குக் காட்ட முடியும்? முடிவில் எனக்குத் தான் ஜயம். அதை நான் பிடித்து விட்டேன். கைப்பிடிக்குள் ‘கிரீச் கிரீச்’ எனக் கத்தியது அபலைக் குஞ்சு. தன் சிறு அலகுகளால் விரலில் கொத்தியும் நீண்டு ஒல்லியான விரல்களால் பிறாண்டியும் தப்பியோடப் பார்த்தது. சுதந்திரத்தை இழப்பதற்கு அதற்குக்கூட மனசில்லை!

குஞ்சை உள்ளே கொண்டுபோகும்போது குருவிகள் பலமாகக் கத்தின. இது எனக்கு விளையாட்டாக இருந்தது. கதவுக்கு உட்புறம் வரத் தைரியம் இல்லாமல் குருவிகள் மரத்துக்குத் திரும்பிப் போய்விட்டன. இரண்டே இரண்டு குருவிகள் மட்டும் கதவின் மேல் உட்காருவதும் பறந்து போவதுமாகக் கத்திக்கொண்டிருந்தன. ஒன்று ஆண்; மற்றொன்று பெண்.

சீதா ஓடிப்போய் ஒரு மெல்லிய பட்டு நூலைக் கொண்டு வந்தாள். குஞ்சின் கால் ஒன்றில் அதைச் சுருக்குப் போட்டுக் கட்டிக் கீழேவிட்டு, மற்றொரு நுனியைப் பிடித்துக்கொண்டேன். குஞ்சு சுற்றிச் சுற்றி, கயிறு இடம் கொடுக்கும் அளவு வரை பறந்து பார்க்கும். கயிற்றின் சுருக்கானது காலில் இறுகி இழுக்கவே தலை கீழாகக் கீழே வந்து விழும். குஞ்சின் சிறகடிப்பு, சீதாவுக்குப் பயமூட்டும். எட்டி நின்று கைதட்டி ஆர்ப்பரித்துக் கொண்டிருப்பாள். குஞ்சை அவள் பக்கம் பறக்கும்படி விடுவேன். அலறிப் புடைத்துக் கொண்டு சமையல் அறைப் பக்கம் ஓடி அம்மாவை கட்டிக் கொள்வாள்.

கொஞ்சங் கொஞ்சமாகச் சீதாவின் பீதி குறைந்து கொண்டு வந்தது. என் தைரிய வார்த்தைகளை நம்பி என் முதுகுக்குப் பின்னால் வந்து நின்று கயிற்று நுனியைத் தொட்டதும் தொடாததுமாகப் பிடித்துக் கொள்வாள். குருவியை என் கையில் பிடித்துக் கொள்ளச் சொல்லி மெதுவாக அதன் முதுகைத் தடவிக்கொடுத்துவிட்டு, கடித்து விடுமோ என்ற பயத்தில் சட்டென்று கையைப் பின் வாங்கி மார்பில் புதைத்துக் கொள்வாள்.

அடிக்கடி என் கண்கள் கொல்லைப் பக்கம் பார்த்துக் கொண்டே இருக்கும், பெரிய குருவிகள் என்ன என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை ஆராய.

நான் குஞ்சை என் தலைமீதும் தோள் மீதும் விட்டுக் காண்பித்து, “பார்த்தாயா, சீதா, என்னைக் கடிக்கவில்லை” என்பேன். தன் கையில் விடச் சொல்வாள் அவள். விடுவதற்கு முன் பயந்து பின் வாங்கிக் கொள்வாள். பிறகு பயம் தெளிந்து மெதுவாகக் குஞ்சைக் கையில் ஏந்துவாள். குஞ்சு அவள் கையை இறுகப் பிடித்துக் கொண்டு சிறகைப் படபடவென அடிக்க ஆரம்பிக்கும். அந்தக் குறுகுறுப்பு , சீதாவுக்குப் பீதியை உண்டாக்கும். “ஐயோ எடுத்துடேன்” என்று கத்த ஆரம்பிப்பாள். எங்களுக்குச் சிரிப்பு வரும். கொஞ்சம் பேசாமல் இருப்பேன். குஞ்சு அவள் கையில் நடந்து தோளுக்குப் போக ஆரம்பிக்கும்.

சீதா அலறிக்கொண்டே கையை உதறுவாள். குஞ்சு பிடியையும் விடாமல் நிற்கவும் முடியாமல் தவிக்கும். குஞ்சை இறுகப்பற்றி நான் எடுத்து விடுவேன். சீதாவின் அழுகை மறுபடி சிரிப்பாக மாறிவிடும். கிட்ட வந்து குஞ்சைத் தடவிக் கொடுப்பாள்.

கொஞ்ச நேரம் ஆனது. சீதாவின் தைரியத்தைக் கண்டு எல்லோருமே திகைத்துப் போனோம். குஞ்சைத் தானே கையில் தூக்க ஆரம்பித்து விட்டாள் ! அதன் மென்னியைச் சேர்த்து இறுக்கிவிட்டாள். குஞ்சு வீரிட்டுக் கத்தியது.

“ஐயையோ! செத்துப் போச்சு; அதை விட்டுடுடா, பாவத்தைக் கட்டிக்காதே!” என்று அம்மா சப்தம் போட்டாள்.

அதைப் பிடித்துவிட்ட சந்தோஷத்தில் சீதா கூச்ச லிடுவாள். சந்தோஷக் குரலில், “அம்மா பாரேன்” என்று ஓடுவாள். குருவியை அவள் கையினின்று சாவதானமாக வாங்கி மறுபடியும் கீழே விடுவேன். சின்னக் குஞ்சு தன் ‘இம்மணி’க் கண்களை மூடி மூடித் திறந்து குன்றிப்போய் நிற்கும். பயத்தில் அசையாமல் கண்ணை மூடிக்கொண்டு அயர்ந்திருக்கும். அதன் சிறு மனசு என்ன வேதனைப் பட்டதோ! பெரு வேதனைப் பட அதைக் கட்டிப்போட்டு விட்டேன், சுதந்திரத்தைப் பறித்து. சின்ன வேதனையான சீதாவின் பிடிப்பினின்று அதைத் தப்பவைக்க முயன்றேன் நான்!

திடீரென்று சீதா சமையலறைக்கு ஓடினாள். அம்மா கொடுத்த காப்பியைக் குடித்து விட்டு, “இன்னும் கொஞ்சம்” என்று கேட்டாள்.

“ஏதுக்கடி?” என்று அம்மாவின் கேள்வி.

“குருவிக் குஞ்சுக்கு!” என்று பதில்.

“குருவிக் குஞ்சுக்குக் காப்பிதான் குறைச்சல். போடி போ!”

அதற்கு மேல் சீதாவின் அழுகைக் குரல் கூடத்தில் கேட்டது. அம்மா வந்து புகார் சொன்னாள். “எல்லாம் நீ பண்ணுகிற கூத்தடா” என்று என்னைக் கண்டித்தாள். அடுத்த விநாடி மன்னி கொடுத்த காப்பியுடன் வந்து சீதா காப்பியை நீட்டினாள்.

ஒரு தட்டில் காப்பியை விட்டுக் குஞ்சின் அலகை அதன் சமீபம் கொண்டு போனேன். முதலில் வாயைப் பிடிவாதமாகத் திறக்க மறுத்துவிட்டது, அந்தக் குஞ்சு பிறகு மெதுவாக வாயை வைத்து எடுத்தது. இன்னும் கொஞ்ச நேரம் கழிந்ததும் பயம் தெளிந்து குடிக்கவும் ஆரம்பித்தது. குடித்துவிட்டு அலகை உதறும்போது காப்பித்துளிகள் பக்கங்களில் தெறிக்கும். “தூ, சனியன் !” என்று குஞ்சை வைவாள் சீதா! “குருவி, குடி! குருவி” என்று தன் பாஷையில் அதோடு பேசுவாள்.

வேதனைப்பட்ட குஞ்சின் போக்கைக் கண்டு சீதா சந்தோஷப்பட்டுக்கொண் டிருந்தாள். இரண்டும் சேர்ந்து எனக்குப் பொழுது போக்கு, வெயில் நேரத்திற்கு.

நேரம் ஆக ஆகச் சீதாவின் உற்சாகமும் என் விளையாட்டு ஆவலும் தணிந்தன. பலவிதம் சொல்லிச் சமாதானப்படுத்திய பிறகுதான் ஒருவாறாகக் குஞ்சை விட்டு விடச் சீதா சம்மதித்தாள். ”அது அம்மாகிட்டப் போகட்டும்” என்று இரக்கமாகச் சிபார்சு செய்து விட்டது அவள் குழந்தை மனசு. இவ்வளவு நேரம் குஞ்சை உபத்திரவப் படுத்தி விட்டோமே என்ற எண்ணம் என் மனத்தில் தோன்ற ஆரம்பித்தது, விளையாட்டு ஆவல் தணிந்ததும்.

பட்டுக் கயிற்றை அவிழ்த்துவிட்டுக் கையில் சஞ்சுடன் பின்பக்கம் போனேன். குருவிகள் எல்லாம் இன்னும் இடைவிடாமல் கத்திக்கொண்டிருந்தன. அந்த இரண்டு குருவிகள் மட்டும், ஓர் இடத்திலும் நிலையாக இல்லாமல், சுற்றிச் சுற்றிக் கதவு வரை வந்து கத்திவிட்டுத் திரும்பும், உள்ளேவரத் தைரியம் இல்லாமல் . அவைகளின் குஞ்சுதானே என் கையில் இருந்தது. அவைகள் கத்தியது அலறியது போல் இருந்தது.

திரும்பக் குஞ்சைப் பார்த்ததும் குருவிகளின் அலறல் அதிகமாயிற்று. சுற்றிச் சுற்றிப் பறந்து இடம் மாறி மாறி உட்கார்ந்தன. நான் நெருங்கிப் போனால் தள்ளிப் பறந்து கத்தும். இந்த இரண்டு மட்டும் என் தலைக்கு மேலாகப் பறந்து கத்திக்கொண்டே இருந்தன.

இவ்வளவு நேர விளையாட்டும் எனக்கு அப்போது கசக்க ஆரம்பித்தது. குருவிகளின் பலத்த அலறல் என் ஹிருதயத்தைத் தாக்கிப் புண்படுத்தியது. என்ன அற்பமான விளையாட்டு இது என்று மனசு ஏசிக் கொண்டது. விளையாட்டின் உற்சாகத்தில் அப்போது ஒன்றும் தோன்றவில்லை. நிதானத்தில் எழுந்தது இந்தச் சிந்தனை.

குஞ்சைக் கூட்டில் விடுவதற்காக அந்த இடம் முழுதும் தேடிப் பார்த்தேன். கண்டுபிடிக்க முடிய வில்லை. பெரிய குருவிகளின் அலறல் தான் காதைத் துளைத்தது. பாவி, இப்போதாவது குஞ்சை நம்மிடம் விடமாட்டானா என்று அவை சாபமிட்டன போலும்!

ஒரு வழி செய்தேன். பெரிய குருவிகள் இரண்டின் கண்ணிலும் படும்படி காட்டிச் சென்று கூரை மூடிய சுவரின் மீது கொண்டு போய்க் குஞ்சை வைத்துவிட்டு அப்புறம் போய்விட்டேன். வெளியே வைப்பதற்குப் பயம்! காக்கை கழுகு ஏதாவது தூக்கிப் போய் விட்டால்?

குஞ்சைப் பத்திரமாக வைத்த பிறகு சீதா வேறு விளையாட்டு விளையாடப் போய்விட்டாள். குஞ்சுடன் அவள் விளையாட்டு முடிந்தது. சீதாவின் விளையாட்டு முடிந்த இடத்தில் என் கவலை ஆரம்பித்தது. குருவிகள் குஞ்சிடம் போகின்றனவா என்பதை ஒளிந்து பார்க்க ஆரம்பித்தேன். குஞ்சை அதன் தாயிடம் சேர்த்துவிட வேண்டும் என்று மனசு எவ்வளவு ஆத்திரப்பட்டது! சில நிமிஷங்கள் சென்றன. என் மனசு ஏமாற்றந்தான் அடைந்தது. குருவிகள் கூரைக்கு வெளியில் சுற்றிச் சுற்றிப் பறந்து கொண் டிருந்தனவே யொழிய உள்ளே நுழைய முயலவேயில்லை. எங்கே தங்களையும் பிடிக்கச் சூழ்ச்சி செய்யப்பட் டிருக்கிறதோ என்று பயந்தனவோ என்னவோ!

குஞ்சின் சப்தமும் கேட்கவில்லை. எனக்குச் சந்தேகம் ஏற்பட்டது. போய்ப் பார்த்தேன். குஞ்சு நான் வைத்த இடத்திலேயே அசையாமல் இருந்தது. மனசுக்குக் கொஞ்சம் ஆறுதல் ஏற்பட்டது. குருவி கத்துவது போல் மெதுவாகக் கிரீச்சிட்டேன். குஞ்சு தலை தூக்கிச் சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு அமைதியாயிற்று. பதிலுக்குக் கத்தவேயில்லை. கத்தினால் குரலைக் கேட்டுக் குருவிகள் அங்கு ஓடிவருமென்பது என் நினைப்பு. மறுபடியும் என் ‘ஒளிவிடத்துக்குச் சென்று கவனித்துக்கொண்டிருந்தேன்.

வெளியே பறந்து கொண்டிருந்த குருவிகள் இரண்டும் இப்போது கூரைமீது வந்து உட்கார்ந்தன, கொஞ்சம் தைரியத்துடன். பக்ஷிகளுள் குருவிகளுக்குத் தான் என்ன பயந்த ஸ்வபாவம்!

குருவிகள் பறந்து போகும்; வந்து உட்காரும்; மறுபடி பறந்து போய்விடும். இப்படியே கழிந்தது. அவை குஞ்சை நெருங்கவேயில்லை. என் மனத்தின் வேதனைப்பாரமும் குறையவில்லை; அதிகரிக்கத்தான் செய்தது. மறுபடியும் குஞ்சு அங்கேயே பத்திரமாக இருக்கிறதா, இல்லை செத்து விட்டதா என்று பார்க்கப் போனேன். நல்ல வேளை, அதே இடத்தில் தான் இருந்தது. கிரீச்சல் சப்தம் செய்து அதன் கவனத்தை இழுத்தேன். குஞ்சும் வாய் திறந்து பதிலுக்குக் கிரீச்சிட்டது, இரண்டு மூன்று தரம். எனக்கும் நம் பிக்கை ஏற்பட்டது. என் ஒளிவிடத்துக்குச் சென்று விட்டேன். குஞ்சின் சப்தத்தைக் கேட்டுக் குருவிகள் சுவரோரமாய் – கூரைக்குச் சமீபமாக நெருங்கிப் பறந்தன.

குருவிப் பிரச்னையின் முடிவை அறியாமல் அந்த இடத்தை விட்டு நகருவதில்லை என்று நான் அங்கேயே பழி கிடந்தேன். கூடத்தில் மற்றவர்கள் கேலி செய்த தையும் பொருட்படுத்தவில்லை.

கூரையின் கழை ஒன்றில் தாய்க் குருவி உட்காரப் போகும் சமயம். எங்கிருந்தோ வந்துவிட்டது அந்த ராக்ஷஸ ஜந்து கா, கா’ என்று கத்திக்கொண்டு. ஒரு “விஸ்ஸ்’ சப்தத்துடன் கூரைமீது வந்து உட்கார்ந்தது. என் வயிற்றில் பகீர் என்றது. அந்தக் குருவிகளுக்கும் அப்படித்தானே இருக்கும்! குருவிகள் அலறிக்கொண்டு சுற்றிச் சுற்றிப் பறந்தன. அதே சமயம் உள்ளே இருந்த குஞ்சும் வாய்விட்டுச் சேர்ந்தாற்போல் கத்தியது, ராக்ஷஸ ஜந்துவுக்குத் தன் இருப்பிடத்தைத் தெரி விப்பது போல். என்ன பயங்கர சோதனை ! ஒரு கண்டம் என் கையில் ஒருவாறு தப்பிவிட்டது. இப்போது இன்னும் ஒரு கண்டம். இதற்கும் நான் தானே காரணம்!

தாமதிக்கவில்லை. ஒரே பாய்ச்சலில் கல்லெறிந்து அதை விரட்டி விட்டேன் . பாவம்! அதோடு அந்தக் குருவிகளும் பறந்து போய்விட்டன, தங்களையும் விரட்டு வதாக எண்ணி. ‘அட கஷ்டமே!’ என்று என் வாய் முணுமுணுத்து ஏமாற்றத்தை வெளிக் காட்டியது. காகத்தைத்தான் நான் விரட்டினேன் என்பது பேதைக் குருவிகளுக்கு எப்படித் தெரியும்?

காகத்தைக் கண்ணுக்குத் தெரியாமல் விரட்டி விட்டு என் இடத்தில் இருந்தேன். அமைதி கலைந்து குழம்பி இருந்த நிலைமை. குருவிகளும் பீதி கலைந்து அந்த இடத்தில் திரும்பக் கூடச் சிறிது நேரம் பிடித்தது. என் கண்கள் குருவிகளைப் பார்ப்பதைவிட வான வெளியைப் பார்ப்பதிலேயே அதிகக் கவனம் செலுத்தின. திடீர் திடீரெனக் காகாசுரனின் சப்தம் கேட்கும் போது உஷாராகி அவ்வரக்கனை விரட்டுவதில் ஈடுபட்டிருப்பேன்

இப்படி எத்தனை தரம்!

காகத்தின் வாயில் குஞ்சு கதறும் காட்சியைக் கற்பனை செய்து பார்த்தபோது மயிர்க்கூச் செறிந்தது. அதன் சாவுக்கு நான் காரணமாக இருப்பேனோ என்ற பயத்தில் என் பொறுப்பு அதிகரித்துவிட்டது. குஞ்சு தாயிடம் உயிரோடு சேரும் வரை சத்துரு ஜந்து விடம் அகப்படாமல் காப்பாற்ற வேண்டியது என் கடமை எனப் பட்டது. சற்று முன் குஞ்சை வைத்து விளையாடும் போது இருந்த என் மன நிலை என்ன? இப்போது படும் வேதனை என்ன?

‘குஞ்சின் வழிக்கு நீ போயிருக்கக்கூடாது’ என்று ஒருபுறம் இடித்துக் காட்டியது மனசு. மறுபுறம், ‘ஒரு சின்னக் குஞ்சுக்காக எந்த முட்டாளாவது இவ்வளவு வேதனைப்படுவானா? உன்னைப்போல் பைத்தியம் ஒருவரும் இல்லை’ என்று கேலி செய்தது.

எது முட்டாள் தனம்? நான் குஞ்சைப் பிடித்ததா அல்லது குஞ்சுக்காக இப்போது கவலைப்படுவதா? அல்லது இரண்டுந்தானா? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

மறுபடியும் தாய்க் குருவி கிளையில் போய் உட்கார்ந்தது. குஞ்சுக்கும் அதற்கும் இடையே கீற்று மறைவு தான். குருவிகள் அந்த இடத்தை விட்டு நகராத தால் குஞ்சின் இடத்தைக் குறிப்பாகக் கண்டு விட்டன என்று தீர்மானமாகத் தெரிந்தது. என் மனக் கிளர்ச்சி அதிகரித்தது. இன்னும் இரண்டு தத்துக்கள் கீற்று இடுக்குகள் வழியே வாய்க் குருவி தத்திவிட்டால் குஞ்சைத் தொட்டு விடும். என் பாரமும் நீங்கிவிடும். அதன் சாவுக்கு நான் காரணமாக இருக்கமாட்டேன்.

ஆனால் தாய்க் குருவி உடனே உள்ளே போகவில்லை. தயங்கி அமைதியாக வெளியே இருந்து மெதுவாகக் கிரீச்சிட்டது. ஆண் குருவியும் வந்து சேர்ந்து கொண்டது. இரண்டும் கிரீச்சிட்டன. கண் கொட்டாமல் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருந்தேன். அதே சமயம் உள்ளிருந்து குஞ்சும் கிரீச்சிட்டது பதிலுக்கு.

மறு விநாடி இரண்டு குருவிகளும் உள்ளே தத்திப் போய்விட்டன. கவலை விட்டது என்று நான் நினைக்கும் போதே திடீரென இரண்டும் மறுபடியும் வெளியே வந்துவிட்டன. எனக்குத் திடுக்கென்றது. ஆனாலும் இனிப் பயமில்லை என்ற திருப்தி. இப்படி இரண்டு மூன்று தரம். இனி என்ன செய்வதென யோசித்தன போலும்!

கூரைக்கு உட்புறத்திலே மறுபடியும் குருவிகள் போனதும் கிரீச் சப்தம் பலமாகக் கேட்டது. குஞ்சு உயிர் தப்பிய சந்தோஷத்தைத் தன் பாஷையில் காட்டிக் கொண்டதோ என்னவோ! வியப்புடன் கூர்ந்து பார்த்தேன். பெரிய குருவிகள் இரண்டும், குஞ்சின் சிறு சிறகுகளை மூக்கால் கொத்தி, கூரை இடுக்கு ஒன்றினுள்ளே இழுத்துப் போய்க் கொண்டிருந்தன. வெகு நேரமாக மூச்சு விடாதது போல், ஒரு நீண்ட பெருமூச்சு என் ஹிருதயத்திலிருந்து கிளம்பியது.

– ஸரஸாவின் பொம்மை (கதைகள்), முதற் பதிப்பு: 1942, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *