குருதட்சணை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 30, 2016
பார்வையிட்டோர்: 6,480 
 
 

“அப்பா, எனக்கு இப்போ கல்யாணம் செய்து கொள்ள விருப்பமில்லை. என்னை ஒரு பரிட்சைக்கு தயார் படுத்திக் கொண்டிருக்கிறேன். அந்தப் பரிட்சையில் கிடைக்கும் முடிவுதான் என் மணவாழ்வு பற்றி முடிவெடுக்கும்” என்று மிகத் தெளிவாக ஆகாஷ் பேசியதும் அதிர்ந்து போனார் சிவசாமி.

“என்னப்பா, ஒன்றுமே புரியவில்லை. இப்ப வரன் பார்க்க ஆரம்பித்தால்தான் நல்ல வரன் கூடி வர எப்படியும் குறைந்தது ஆறு மாதமாவது ஆகும். அப்புறம் சத்திரம் கிடைத்து பொண்ணு வீட்டுச் சௌகரியம் எல்லாம் பார்த்து கல்யாணம் முடிய இன்னும் ஒரு ஆறு மாசம். ஆகக் கூடி எப்படிப் பார்த்தாலும் ஒரு வருஷத்திற்குக் குறையாமல் ஆகிவிடும். அதற்குள் நீ சொல்கிற பரிட்சை எழுதி முடிவும் தெரிஞ்சிடும் ஆகாஷ். அதால நா இந்த மாதம் நல்ல நாள் நிறைஞ்ச அமாவாசையில் பார்க்க ஆரம்பிக்கிறேனே. என்ன காமாட்சி நீ என்ன சொல்ற”, என்றார் சிவசாமி.

“மன்னிச்சிக்குங்க அப்பா, இது நீங்க நினைக்கிற மாதிரி ஒரு வருடத்தில் எழுதி பாஸ் பண்ணற பரிட்சை எல்லாம் இல்லைப்பா அதை விட நிறைய காலம் பிடிக்கலாம். மேலும் நான் இன்னமும் அதற்கு தயாராகும் ஆரம்ப நிலையில் தான் இருக்கிறேன். தயவு செய்து புரிஞ்சிக்கிங்கப்பா” என்றான் ஆகாஷ்.

“காமாட்சி, நம்ம பிள்ளை ஏதோ காதல், கத்திரிக்காய் என்கிறாங்களே, அதில எதாவது மாட்டிக்கிட்டான் போலிருக்கு. எல்லாம் இந்த டெலிவிசன் வந்தாலும் வந்தது பசங்க எல்லாம் ரொம்பவே கெட்டுப்போச்சு.”

“சரி. விட்டுச் சொல்லுடா, உனக்கு பிடிச்சிருந்தா அது யாரா இருந்தாலும் நான் வெக்கத்த விட்டு, அவங்க வீட்டுப் படியேறிப் போய் பொண்ணு கேட்கிறேன். சும்மா பரிட்சை அது, இதுன்னு சொல்லிட்டு திடீர்னு ஒருநாளைக்கி மாலையும் கழுத்துமா ஒருத்திய கூட்டிட்டு வந்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பண்ணச் சொல்லி மானத்தை வாங்காதே”.

“ஏம்பா உங்க தலைமுறையில் எல்லாருக்குமே கல்யாணம் இப்ப வேண்டாம் என்றால் காதல் தான் கண்ணில வந்து நிற்குது. வேற காரணம் இருக்காதா இல்லை இருக்கத்தான் கூடாதா? நீங்க நினைக்கிறது மாதிரி இது பேப்பரில் பேனாவால் எழுதற பரிட்சை இல்லைப்பா”

“ஓ, அப்படி என்னடா பெரிய பரிட்சை”?

“ஆங்.அதெல்லாம் உனக்கு புரியாதப்பா. நீங்க ஆன்ம தேடல் பற்றிக் கேள்விப்பட்டிருக்கீங்களாப்பா?

“கலெக்டர் ஆபீஸில் ஜூனியர் அசிஸ்டெண்ட்க்கு இருட்டு ரெக்கார்ட் ரூமில் பைலைத் தேடவே நேரம் இல்லை. இதில் ஆன்ம தேடலா? ஆமா அப்படின்னா என்னடா? கொஞ்சம் விவரமாதான் சொல்லேன்”.

“ அதுப்பா, நாம நம்மையே அறிய தேடற முயற்சிப்பா. ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தோண்டிப் பார்க்கணும். ஞானம் ஊற்றெடுக்கும் வரை தோண்டணும். அப்படி ஞானம் வந்திட்டா வேற இல்லற சுகங்கள் உடம்புக்கு தேவைப்படாது. புரிஞ்சுதாப்பா?

“என்னவோபா, இதுக்கு காதல் கத்திரிக்காயே தேவலை போலிருக்கே.

சரி. நீ கடைசியா என்னதான் சொல்லப் போறே”?

“ஒன்றும் பிரச்சனை இல்லைப்பா. இந்த தேடலுக்கு வழிகாட்டி வேண்டும். அதாவது நல்ல குரு வேண்டும். சில வருடங்களாகத் தேடி அவரையும் கண்டு பிடித்து விட்டேன். கோவர்த்தனகிரியில் உள்ள சுவாமி ஜோதி தீட்சானந்தா ஆசிரமத்திற்கு இந்த வாரம் சனிக்கிழமை போகிறேன். அங்கே ஒரு மாதம் தங்கிப் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் ஞான தீட்சை பெற்றுக் கொண்டு குரு காட்டும் வழியில் என்னையே நான் அறிய முயலப் போகிறேன். அதில் ஒருவேளை தோல்வி கண்டால் நீங்கள் சொல்லும் இல்லற வாழ்வு முறைக்கு கண்டிப்பாக வந்து விடுவேன். வேறு எதுவும் சொல்ல இப்போது எனக்குத் தெரியவில்லை. அவ்வளவுதான்”.

சிவசாமியின் மனதின் கொஞ்சம் மகிழ்ச்சியும், நிறைய கவலையும் ஆக அடைத்துக் கொண்டது.

எங்கே தன்னோடு பணிசெய்த தசரதன் பையன் வேற்று மதப் பெண்ணை காதலித்து ரகசியமாக பதிவுத்திருமணம் செய்து கொண்டு வந்து தர்ம சங்கடத்தில் தசரதனை ஆளாக்கியது மாதிரி ஆகாஷ் தன்னைச் சங்கடத்தில் ஆழ்த்தவில்லை என்ற மகிழ்ச்சி இருந்தாலும், காமாட்சி,” ஏங்க, நம்ம புள்ளை சாமியாரா காவி கட்டிட்டு போயிடுமாங்க. பயமா இருக்குங்க” என்றபோது வெளியில் “அதெல்லாம் ஒண்ணியும் ஆவாது” என்று தைரியம் சொன்னால் கூட அடிமனத்தில் அப்படி ஒரு பயம் தொற்றிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது.

கலெக்டர் ஆபீஸ் கேண்டீனில் கண்ணில் பட்ட நெருக்கமான நண்பர்களிடம் எல்லாம் சுவாமி ஜோதி தீட்சானந்தா பற்றி விசாரிக்கவும், அவர்கள் இரு வேறு விதமாக கருத்துச் சொல்லவும் மனசில் குழப்பம் அதிகரித்தது. மேலும் வேறு நண்பர்களை விசாரிக்கலாம் என்றால், சர்வே டிபார்ட்மெண்ட் குப்புராஜ், “ என்னண்ணே, சுவாமி ஜோதி தீட்சானந்தா சிஷ்யரா மாற்றிட்டாப்ல என்று பேசிகிறாங்களே” என்று குறும்பாகக் கேட்கவும் அவசரமாக மறுத்து, “ அதெல்லாம் ஒண்ணும் இல்ல. நேத்து பொழுதுபோகாம டீவி பார்த்த போது அவரது சொற்பொழிவு கேட்டேன். நல்லா இருந்துச்சு அதான் விசாரிச்சேன்”.

“அப்படியா நம்ம கலெக்டர் ஆபீசில் பேசறவங்க, நீங்க சுவாமிஜி கூட சம்பந்தம் பண்ணப் போற லெவல்ல விசாரிச்சதா பேசிக்கிட்டாங்க” என்றவனின் நக்கல் பேச்சிற்குப் பின்னர் அவர் அலுவலகத்தில் விசாரிப்பது இல்லை என்ற தீர்மானத்திற்கு வந்து விட்டார்.

ஆகாஷ் சனிக்கிழமைதானே ஆசிரமத்திற்குப் போவதாகச் சொன்னான். அவனுடன் தானும் காமாட்சியை கூட்டிக் கொண்டு செல்வது ஒரு மாதம் மூவருமாக தங்குவது என்று முடிவு செய்து விட்டார்.

சூப்பிரண்டெண்ட் ஒரு சிடு மூஞ்சி என்றால் அப்படி ஒரு சிடுமூஞ்சி. ஒரு விதமா ஆபிஸ் அசிஸ்டெண்ட் பாலையாவிடம் நூற்றைம்பது ரூபாய் கொடுத்தனுப்பி மறுநாள் முதல் மெடிக்கல் சர்டிபிக்கேட் மஞ்சக் காமாலை என்று பொய்யாக வாங்கியாச்சு. பாலையாவுக்கு தனியாக ஒரு நூறு வெட்டியாச்சு. இல்லையென்றால் கிராதகன் ஆபிஸ் முழுதும் கலெக்டர் வரை எல்லாருக்கும் போஸ்டர் அடித்து ஒட்டாத குறையாக திருட்டு மெடிக்கல் லீவு போட்டதை கரும சிரத்தையாக சொல்லி விடுவான். அடுத்தது சூப்பிரண்டெண்ட கவனிக்கனும். கவரிங் லெட்டரும் மெடிக்கல் லீவு விண்ணப்பம், டாக்டர் சர்டிபிக்கேட் மற்றும் முக்கியமான பேப்பர்கள் எல்லாவற்றையும் கொடுத்து பவ்யமாக நின்றார்.

“என்னது மஞ்சக் காமாலையா? காண்டீனில் முருகலா நெய் ரவா தோசை சாப்பிட்டதை பார்த்தேனே” என்றவர், முக்கியமான பேப்பரைப் பார்த்ததும் “சரி சரி. நாளைக்கு ஒரு நாள் அன் அபீஷியலா வந்து பெண்டிங் ஒர்க் எல்லாம் முடிச்சிடுங்க. அடிக்கடி லீவு எடுக்காதீங்க. உடம்பை பார்த்துக்குங்க” என்றார். பத்து முறை தேங்கியூ சார் சொல்லி சீட்டிற்கு வந்து உட்காரும் போது மனசு கொஞ்சம் ஆசுவாசப்பட்டது.

அடுத்தது ஆகாஷிடம் எப்படி நாங்களும் கூட வருகிறோம் என்பதை சொல்வது? கண்டிப்பாக அதை ஏற்றுக் கொள்ள மாட்டான். எப்படியாவது ஆசிரமத்திற்குப் போய் விட்டால் சாமியாரிடம் சொல்லி, கெஞ்சிக் கூத்தாடி பையனை மீட்டு வந்து விடலாம். சாமியாரே ஆகாஷை இல்லறத்திற்கு போகச் சொல்லி உத்தரவிடும் பட்சத்தில் அதிகம் பிரச்சனை இல்லாமல் சம்பந்தம் பண்ண துடித்துக் கொண்டிருக்கும் தன் தங்கச்சியிடம் பேசி வர தையில் அதிக ஆடம்பரமில்லாமல் திருமணத்தை முடித்து விடலாம். பார்ப்போம். கொஞ்சம் கொஞ்சமாக மனதில் நம்பிக்கை வேர் விட ஆரம்பித்தது.

சாயங்காலம் ஆபீஸ் முடிந்து வீட்டிற்கு வந்தவருக்கு காபி கொடுத்த காமாட்சி, “ என்னங்க, என்ன செய்யப்போறீங்க. என் பிள்ளையை சாமியாராக விடமாட்டேன். அதுக்கு நான் என்ன வேணாலும் செய்யறேங்க” என்றாள்.

“அம்மாடி நீ எதுவும் செய்ய வேண்டாம். எல்லாம் நல்லபடி நடக்கும். நீ எதாவது செய்து என் திட்டத்தை கெடுத்திடாதே. அது போதும்” என்றார்.

ஆகாஷ் வந்ததும், ஆபீசில் சுவாமிஜி பற்றிக் கேட்டதையும் தனக்கே அவரைப் பார்த்து அருளாசி வாங்க ஆசையாக இருப்பதையும் சொன்னதும் மகிழ்ச்சியுடன், “வாங்கப்பா. பார்த்தீங்களா, ஸ்வாமிஜி இப்படித்தான் எல்லார் மனசிலும் புகுந்து குடிகொண்டு விடுவார்” என்று அரைமணி நேரம் மூச்சு விடாமல் லெக்ச்சர் அடித்து ஓய்ந்தான்.

அப்புறம் காரியங்கள் கடகட என்று நடக்க ஆரம்பித்தது. ஆகாஷே அவருக்கு, காமாட்சிக்கு, அவனுக்கு கோவர்த்தனகிரி எக்ஸ்பிரசில் மூன்றாம் வகுப்பு ஏர்கண்டிசன் டிக்கெட் எடுத்தான். சனிக்கிழமை ரயிலேறி ஞாயிறு காலை கோவர்த்தனகிரி வந்து சேர்ந்தாகிவிட்டது. ஆகாஷ் தியானம் பண்ண இடைஞ்சலாக இருக்கும் என்பதால் தனி அறையும் , சிவசாமிக்கும், காமாட்சிக்கு இரட்டைப் படுக்கை அறையும் எடுத்துக் கொண்டான். உணவு, தங்குவது மற்றும் இதர பயன்பாடுகளுக்கு மொத்தமாக முன்பணம் பத்தாயிரம் ரொக்கமாக ஆகாஷ் கட்டியதைப் பார்த்த சிவசாமிக்கு மயக்கமே வந்து விட்டது.

ஆசிரமத்தில் எல்லாம் ஒரு ஒழுங்கு, கட்டுப்பாடோடு நடந்தது. எல்லா வேலைகளையும் தன்னார்வத்தொண்டர்கள் செய்தனர். விருந்தினர்களை மிக மரியாதையாக நடத்தினர். எல்லாவற்றிற்கும் மேலாக எப்போதும் எதாவது நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டே இருந்ததால் சிவசாமிக்கும், அதிகம் வெளியுலகப் புழக்கம் இல்லாத காமாட்சிக்கும் நன்கு பொழுது போனது. அடிக்கடி, “நா பெத்து வளர்த்த புள்ளங்க, அவன் நல்ல வழிக்குத்தான் போவான். கெட்ட வழி அவனுக்கு சுட்டுப்போட்டாலும் வராது” என்று சிவசாமியிடம் சொல்ல, அவர் “ஆமா” என்று அழுத்திச் சொல்லி ஒற்றை வார்த்தையில் முற்றுப் புள்ளி வைத்தார்.

கோவர்த்தனகிரி வந்த பதினைந்தாம் நாள் சுவாமிஜி, சிவசாமியைப் பார்க்க அழைத்தாக சுவாமிஜியின் செயலாளர் கூட்டிச் சென்றார். சுவாமிஜி அறையில் அனுமதிக்கு முன் பல விசாரணைகள், சோதிப்புகள். இறுதியாக அறைக்குள் போன சிவசாமி தம்பதியினரிடம் ஆகாஷுக்கு தீட்சை வழங்கி, ஞானோபதேசம் செய்வதில் அவர்களுக்கு ஆட்சேபணை இருந்தால் சொல்லும்படி கேட்டதும், காமாட்சி தன் பிள்ளை சாமியாராகப் போவதை விரும்பவில்லை என்றாள். சிவசாமியும் அதை பிரதிபலித்து, “ நீங்க சொல்ற எந்த வகையான சேவையும் செய்ய அவனை அனுப்பி வைக்கத் தயார். ஆனால் சன்னியாசி ஆவது வேண்டாம். அவன் மனதை மாற்றுவது அவர் கையில் தான் உள்ளது என்று கண்ணீர் மல்க வேண்ட சுவாமிஜி சிரித்தார். இருபத்தோரு வயதுக்கு மேல் அவன் மேஜர். அவன் எடுக்கும் முடிவை கட்டுப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை என்று சட்டம் சொன்னார். கொஞ்ச நேரம் மௌனமாக யோசித்தவர்,

“ஆகாஷ் என்ன படித்திருக்கிறான்” என்றார்.

“பல் மருத்துவம் சுவாமி, ஆனால் பெரிதாக பிராக்டீஸ் இல்லை”.

“ஓ. அப்படியா, இவன் உங்களுக்கு ஒரே மகனா”?

“ ஆமாம்”

அருகில் வாய் பொத்தி பவ்யம் காட்டிய செயலாளரை பார்த்து ஆகாஷை அழைத்து வரச் சொன்னார்.

ஆகாஷிடம், “குழந்தாய், ஞானம் என்பது வெறும் இருபது நாள் பயிற்சியில் வந்து விடுவது இல்லை. உன் மனம் இன்னும் பக்குவப்பட வேண்டும். உன் பெற்றோருடன் பேசியதில் உன்னைத்தவிர அவர்களுக்கு வேறு பிடிப்பும் இல்லை. உன் தொழிலில் உனக்கு சேவை புரியவும் புகழ் பெறவும் ஒரு வழி காட்டுகிறேன். அந்த வழியில் நடந்து உன்னை உணர்ந்து கொள். சம்மதமா”? என்றார்.

“ ஆன்மீக குருவே, அப்படியே செய்கிறேன். எல்லாம் உங்கள் சித்தம்” என்றான் ஆகாஷ்.

அதன்படி ஆகாஷ் சென்னையில் உள்ள சுவாமி ஜோதி தீட்சானந்தா சேவை மையத்தில் பல் மருத்துவராக சேவை புரிய இடம் தரப்படும். ஆசிரமம் சொல்லும் கட்டணத்தில் ஏழைகளுக்குப் பல் மருத்துவம் செய்யட்டும். ஆசிரமம் ஆகாஷின் சேவைக்கு மாதம் சன்மானம் தரும். ஆசிரமம் எளிய அமைப்பு என்பதால் கருவிகள் வாங்குவது, நிறுவுவது எல்லாம் ஆகாஷின் செலவு. ஒரு வருடம் கடந்தபின் ஆகாஷ் விரும்பினால் சேவையைத் தொடர்ந்து ஆசிரமத்தின் மையத்தில் தொடரலாம். விரும்பினால் தனியே சொந்தமாகத் தொழில் செய்யலாம். தனியே தொழில் தொடங்கினால் இப்போது அதிகம் பேர் வர வாய்ப்பில்லை. ஆசிரமத்தின் நிழலில் தொழில் செய்தால் பாதுகாப்பு, பெயர், புகழ் மற்றும் நிறைய வாடிக்கையாளர்களைப் பெற முடியும் என்று எடுத்துச் சொல்லப்பட்டது.

இந்த ஏற்பாடு மூவருக்கும் பிடித்திருக்கவே, சட்டப்படி ஒப்பந்தம் ஆசிரமம் தயாரித்தது. ஞான தீட்சை பெறும் நாளில் கையெழுத்தானது. அளவிலா மகிழ்ச்சியுடன் மூவரும் சென்னைக்கு வந்தனர். லீவு முடிந்து சிவச்சாமி பணியில் சேர்ந்தார். மறு நாளே பிராவிடண்ட் பண்டில் லோன் போட்டார். கொஞ்சம் காமாட்சியின் நகைகளை வங்கியில் விவசாயக் கடன் என்ரு சொல்லி அடகு வைத்தார். அங்கே, இங்கே என்று சிறிது கடன் வாங்கி பதினைந்து லகரங்கள் தேற்றிவிட்டார். ஆகாஷ் போய் ஆசிரம சேவை மையத்தின் கிளை மேலாளரிடம் பேசி விட்டு வந்தான். அவர்களும் அறை ஒதுக்கிக் கொடுத்தனர். கருவிகள் பன்னிரெண்டு லட்சம், இதர வேலைகளுக்கு ஒரு லட்சம் செலவு செய்தான். திறப்பு விழாவிற்கு சுவாமிஜியே நேரில் வந்திருந்தார்.

ஆகாஷுக்கு மனம் நிறைந்தது இருந்தது. எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. நான்கு மாதம் கழித்து ஒருநாள் காலையில் மையத்தில் தன் அறையைத் திறக்கப் போனவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவன் அறையில் வேறு ஒரு பல் மருத்துவர் அவன் இடத்தில் உட்கார்ந்திருந்தார். பதறிப்போய் மைய மேலாளரைத் தொடர்பு கொண்டால் அவர் ஆசிரமம் அவனுக்கு வழங்கிய பணி நீக்க ஆணையை மௌனமாகத்தந்தார்.

அதில் சரியாகப் பணிக்கு வராமல் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் அடிப்படையில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. சரி. கருவிகளை எடுத்துக் கொள்ளப் போனால், ஒப்பந்தத்தில் கருவிகள் ஆசிரமத்தின் சொத்தாக கருதப்படும் என்ற ஷரத்து பல்லிளித்தது. ஆசிரமத்தின் சேவை மையத்தில் இவன் தகராறு செய்யலாம் என்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அடுத்த அரை மணி நேரத்தில் ஆகாஷை சாப்பிட்டுப்போட்ட எச்சில் இலையாக தெருவில் தூக்கிப் போட்டது ஆசிரமம்.

தான் நன்றாக ஏமாற்றப்பட்டதை சிவசாமிக்கு போன் செய்து சொன்னதும் அதிர்ந்து போனார். கடனை நினைத்து கண்ணீர் வந்தது. அவர் சொன்ன கதையை யாருமே நம்பத் தயாராக இல்லை.

கடைசியில் நகரத்தின் பெரும் புள்ளி ஒருவர் சிவசாமியின் கடன்களை அடைத்து பார்வைக்கு மிகச் சுமாராகவும், அதிகம் படிக்காத தன் மகளை ஆகாஷுக்கு திருமணம் செய்து கொடுத்து, தனியாக ஒரு கிளினிக்கும் வைத்துக் கொடுத்தது தனிக்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *