குண்டலகேசி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2024
பார்வையிட்டோர்: 394 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அன்புள்ள ஸரஸாவுக்கு, 

சூரியோதயம் வந்தே தீரும் என்ற முழு நம்பிக்கையோடு இருண்டிருக்கும் இரவு போல, “உன்னுடைய கடிதம் இன்று எப்படியும் வந்தே தீரும் ” என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். 

“தபால் ஸார்!” என்ற குரல் கேட்டது. 

பணியாள் தபால் குவியலை என் முன் கொண்டு வந்து வைத்தான். பரபரப்புடன் உன் கடி தத்தைத் தேடினேன். உன்னுடைய நீலநீறக் கவர் கிடைத்தது. 

ஆனந்தத்தினால் மனிதன் இளைஞனாகிறான்’ என்று சொல்லுகிறார்கள். ஏற்கெனவே நான் இளைஞனானபடியால், உன் கடிதத்தைப் படித்த ஆனந்தத்தில், நான் பாப்பாவாகி விட்டேன்! 

“அந்தப் பூர்வயினுடைய கதையை எழுதமாட் டீர்களா?” என்று இத்துடன் நூறு தடவை கேட்டுவிட்டாய். நீ நேரில் கேட்டபோதெல் லாம் கூட அந்தத் துயரக் கதையை உன்னிடம் சொல்லவேண்டாம் என்று மழுப்பியே வந்தேன். ஆனால் நீயோ விடேன் தொடேன்’ என்று கடிதத்திற்குக் கடிதம் “பூவாயியின் கதையை எழுதமாட்டீர்களா ?” ” எழுதமாட்டீர்களா?” என்று எழுதிக்கொண்டே யிருக்கிறாய். 

டாக்டரிடம் வெட்கப் பட்டால் முடியுமா? அதேபோல் உன்னிடம் இன்றைக்கோ நாளைக்கோ எல்லா விஷயத்தையும் சொல்லத் தானே வேண்டும் ? 

*** 

பூவாயியின் தகப்பன் முருகன், தாய் நாச்சம்மை இருவரும் நமது வீட்டில் நான் பிறக்கு முன்பே குடியிருந்து வந்தவர்கள். முருகன் தோட்ட வேலை, வண்டி ஓட்டுகிற வேலை முதலியவற்றைச் செய்து வந்தான். நாச்சம்மை வீட்டு வேலைகளுக்கு என் தாயுடன் ஒத்தாசையாக இருந்து வந்தாள். என்னைத் தூக்கிக்கொண்டு விளையாடுவதில் முருகனுக்கு ஒரு தனி ஆனந்தம். பார்க்கப்போனால் என்னை வளர்த்தவர்களே முருகனும் நாச்சம்மையும்தான்!  

எனக்கு வயது ஐந்தானபோது நாச்சம்மைக்கும் முருகனுக்கும் பூவாயி பிறந்தாள். “கொஞ்ச நேரம் முந்திப் பிறந்திருந்தால் ராஜா வீட்டில் பிறந்திருப்பாள் இந்தக் குட்டி” என்று பூவாயி யைப் பார்த்தவர்கள் சொல்லிக் கொண்டார்களாம். அவளுக்கு ஒரு வருஷம் பூர்த்தியா யிற்று. மஞ்சு விரட்டில் மாடு பிடிக்கப் போன முருகனை ஒரு மாடு குத்தியதால், அவன் படுத்த படுக்கையாகச் சில நாட்கள் கிடந்து இறந்து விட்டான். நாச்சம்மையும், பூவாயியும் எங்கள் ஆதரவில் வசித்து வந்தனர். 

யுத்தத்தின் போது சிங்கப்பூர் சென்ற என் தகப் பனார் திரும்பி வரமுடியாமல் அங்கேயே தங்கி விட்ட விவரம் உனக்கு ஏ ற்கெனவே தெரியும். எங்கள் சொத்தெல்லாம் சிங்கப்பூரில் தான் இருக்கிறது. 

நான் சிறுவயது முதல் ஒவ்வொரு நிமிஷத் தையும் பூவாயியுடனேயே கழித்திருக்கிறேன். 

பொழுது போவதே தெரியாமல் நாங்கள் தோட் டத்தில் எத்தனையோ முறை விளையாடி யிருக் கிறோம். அவள் வளர்ச்சியை நிமிஷத்திற்கு நிமிஷம் நான் அறிவேன். வயது ஆக ஆக அவளுடைய வளர்ச்சி வளர் பிறைச் சந்திரன் போல ரம்யமாக இருந்தது. 

காற்று உள்ளே புகக் கூடாதென்று நாம் ஜன்னல்கள், கதவுகள் முதலியவற்றை இறுக்கி மூடி விட்டாலும் எப்படியோ காற்று நம் அறைக்குள் புகுந்து விடுகிறது. அதைப் போலவே எவ்வளவு உறுதியுள்ள நெஞ்சமாக இருந்தாலும் பலஹீனமான எண்ணங்கள் நம் உள்ளத்துக்குள்ளே புகுந்துவிடுகின்றன. 

நான் இதற்கு விலக்கானவன் அல்ல. மனதிலும் பூவாயியைப் பற்றிப் பலஹீனமான எண்ணங்கள் புகுந்து விட்டன. நாச்சம்மைக்கு வயதாகி விட்டதால் அவள் என் வயதான தாயாருடன் எப்பொழுதும் பேசிக் கொண்டி ருப்பாள். வயதான இருவர் கூடினால் என்ன பேச்சு நடக்கும்? கேட்பானேன்? மோட்ச லோக சாம்ராஜ்யத்தைப் பற்றிய தொண தொணப்புத்தான்! 

பூவாயிதான் எங்கள் வீட்டு வேலைகளைச் செய் வாள். நான் குளிப்பதற்கு வேண்டிய வசதி செய்வது, காப்பி தருவது, சாதம் போடுவது, படுக்கை விரிப்பது முதலிய சகல வேலைகளையும் அவள் தான் செய்வது வழக்கம். 

“அண்ணா, அண்ணா!” என்று அவள் என்னை அன்புடன் அழைக்கும்போது, எனக்கு என் னமோ மாதிரி யிருக்கும். ஏனெனில், நான் அவளை என் தங்கையாகப் பாவிக்கத் தயாராக இல்லை. அதற்குப் பதிலாக, நான் அவளை என் விஷமக் கண்களால், ஆசை இதயத்தால் பார்ப்பேன்! 

ஒருநாள் பூவாயியிடம் என் இலக்கிய மேதை யைக் காட்டும் பொருட்டு, “பூவாயி, ஒரு மலரை மலர்விக்க சூரியனின் கிரணங்கள் அவசியமல்லவா ? அந்த மாதிரியே ஒரு பெண்ணின் இருதயம் பூரண மலர்ச்சியுடன் பொலி வுற்றுத் திகழ வேண்டுமானால் அதற்கு ஒரு ஆதரவு வேண்டாமா?” என்றேன். 

அவள் தன் கண்களை அகல விழித்து, “என்ன அண்ணா! நீ சொல்லுவது எனக்கு ஒண்ணும் தெரியலையே !” என்று சொல்லிக் கொண்டே ஓடிவிட்டாள். 

‘ஏழைக்கு அழகும், நோயாளிக்கு நெய்யும் விஷம் என்று சொல்லுவது எவ்வளவு உண்மை! 

என் இதயம் பூவாயியைப் பார்ப்பதில் பூரிப் படைந்திருந்தாலும், ‘கௌரவமாகக் குடும் பத்தை நடத்துவதற்குப் பணம் வேண்டுமே’ என்ற கவலையிலும் ஆழ்ந்திருந்தது. 


ஒரு நாள் நான் கடற்கரைக்குச் சென்றிருந் தேன். “பணமே! உன்னால் என்ன குணமே என்று வானொலியில் யாரோ ஒருவர் அட்டகாச மாகப்பாடிக் கொண்டிருந்தார். அவர் பாடு வதும் அந்தப் பணத்திற்காகத்தானே? விளக் கைச் சுற்றி வட்டமிடும் விட்டில் பூச்சியைப் போல, என் மனதில் பணத்திற்கு என்ன செய்வது?’ என்ற கேள்வி வட்டமிடலாயிற்று. 

பரீட்சையில் விழிக்கும் பையனைப் போல் மேற் படி கேள்விக்குப் பதில் ஒன்றும் தோன்றாமல் மணலைக் கிளறிக் கொண்டேயிருந்தேன். மணலைக் கிளறக் கிளற உள்ளே யிருந்து பல விதமான கிளிஞ்சல்கள், சிப்பிகள் வெளியே வந்தன. வளைந்தவை வட்டமானவை, நீண்டவை, அகலமானவை இன்னும் எத்தனையோ விதக் கோணல்கள். அவைகளில் அழகான சில வற்றைப் பொறுக்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொண்டு சூன்ய மனதுடன் வீடு வந்து சேர்ந்தேன். பூவாயி சமைத்து வைத்திருந்தாள். 

என் தாயார், “ஏண்டாப்பா ! இவ்வளவு நேரம் கழித்து வந்தால் உடம்பு என்னத்திற்கு ஆகும்? இந்த வயதில் உனக்குப் பெருங்கவலையைக் கொடுத்து விட்டு உன் அப்பா சிங்கப்பூரில் சிக்கிக் கொண்டு விட்டார். எல்லாம் இந்தப் பாழாய்ப் போன யுத்தத்தால் வந்தது!” என் றெல்லாம் யுத்தத்திற்குச் சரம கவி பாடினாள். 

சாப்பிட்டு விட்டு நான் மாடியில் போய்ப் படுத் தேன். வழக்கப்படி பூவாயி மாடிக்குப் பால் கொண்டு வந்து கொடுத்தாள். 

“பூவாயி,உனக்காகச் சில சாமான்கள் கொண்டு வந்திருக்கிறேன், இங்கே வா!” என்றேன். 

அவள் ”எனக்கா!” என்று நெஞ்சில் கையை வைத்துக்கொண்டே என் அருகில் வந்தாள். 

அவளுடைய கையில் நான் பொறுக்கி வந்த கிளிஞ்சல்- சிப்பிகளை வைத்து மூடினேன். அவள் ‘கலீர்’ என்று சிரித்துக் கொண்டே சிட் டாகப் பறந்து விட்டாள். அந்தக் கையின் ஸ்பரிசத்தை நினைத்து நினைத்து இன்புறுவதற் காக, நான் அன்று இரவு முழுவதும் நித்திரா தேவியுடன் ‘டூ’ விட்டு விட்டேன். 


மறுநாள் காலையில் எதிர் வீட்டிலிருந்த ரேடியோ ‘மாலைப் பொழுதினிலே’ என்று பாட ஆரம் பித்து விட்டது. அந்த நாத வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தேன். 

அண்ணா!” என்று கூப்பிட்டுக் கொண்டே பூவாயி ஓடிவந்தாள். 

“என்ன பூவாயி ?” என்றேன். 

“என் காதைப் பார்த்தீர்களா?” என்று சொல்லிக் கொண்டே அருகில் வந்தாள். 

அவளுடைய காதில் குண்டலம் தொங்கிக் கொண்டிருந்தது. நான் அதற்கு முதல் நாள் இரவு கொண்டுவந்த கிளிஞ்சல் சிப்பிகளில் ஒரு ஜோடியை எடுத்து நன்றாகத் தேய்த்து அதில் துவாரம் போட்டுக் கயிற்றைக் கட்டிக் காதில் மாட்டிக் கொண்டிருந்தாள். அப்படி யிப்படி அசையாமல் அவள் என் அதிசயப் பார்வையைக் கவனித்துக் கொண்டிருந்தாள். 

திடீரென்று தேள் கொட்டினால் மனிதன் எப்படித் தன் காலை உதறிக் கொண்டு குதிப் பானோ, அப்படியே நானும் திடீரென்று “பூவாயி!” என்று சொல்லிக் குதித்தேன். அவள் மிரண்டு போனாள். 

‘விறு விறு’ என்று என் மூளை வேலை செய்ய ஆரம்பித்தது. 

என் முகத்தையும்,மௌனத்தையும் பார்த்துப் பயந்த பூவாயி, “என்ன, அண்ணா! உடம்பு சரி யில்லையா?” என்று கேட்டாள். 

“பூவாயி, நீ தெய்வம்தான்!” என்றேன். எனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்று நினைப்பது போல அவள் என்னைப் பார்த்தாள். 

பூவாயி, நிஜமாச் சொல்றேன்; எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. நீ காதிலே போட் டிருக்கிறாயே,அந்த மாதிரி எத்தனை ஆயிரம் கிளிஞ்சல் சிப்பி வேணுமானாலும் சமுத்திரக் கரையிலே கிடைக்கும். அதையெல்லாம் பொறுக்கி வந்து, நன்றாகத் தேய்த்து, குண்டலமாகச் செய்து விற்றால் என்ன ? இது ஒரு நல்ல வியாபாரமில்லையா?” என்றேன். 

அவள் ஆச்சரியத்தால் புருவத்தை உயர்த்தி இரத்தினக் குவியல் கிடைத்த ஏழை போல பேச வாயில்லாமல் கல்லாய்ச் சமைந்து விட்டாள். 

இந்தச் சமயத்தில், “பூவாயி!” என்று என் தாயார் கூப்பிட்ட குரல், எங்கள் சிந்தனையைக் கலைத்தது. அவள் கீழே போய் விட்டாள். 

என் மனம் திட்டம் போட ஆரம்பித்து விட்டது. புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள இரண்டு விதிகள் அவசியம். ஒன்று செயலில் இறங்கு முன் ‘சிந்தனை.’ மற்றது, செயலில் இறங்கிய பின் ‘அடக்கம்.’ 

குண்டலம் செய்து விற்பது நல்ல வியாபாரம் தான். எதுதான் நல்ல வியாபாரமில்லை? செய் கிறவன் ஒழுங்காகச் செய்தால் எல்லாம் நன்றாக நடக்கும். இப்பொழுது குண்டலத்திற்கு நல்ல கிராக்கி, அதிலும் தினுசு தினுசாக, அழகாகச் செய்து விட்டால்-விலையும் மலிவாக இருந்து விட்டால் – அப்புறம் கேட்பானேன்? என்று எண்ண ஆரம்பித்தேன். 

சிந்தனை முடிந்து விட்டது. செயலில் இறங்க வேண்டியது தானே ? 

சென்னையில் மௌண்ட்ரோட்டில் ஒரு கடை கிடைப்பது பகீரதப் பிரயத்தன மாகப்போய் விட்டது. இக் 

இக் காலத்தில் அறம், பொருள், இன்பம் வேண்டுமானாலும் கிடைக்கும் ; வீடு கிடைப்பதுதான் கஷ்டம். ஆனாலும் சிபார்சினால் ஆகாத காரியம் உலகில் ஒன்றுமில்லை யல்லவா? எனக்கு ஒரு நண்பரின் சிபார்சினால் இடம் கிடைத்துவிட்டது. 

ஒரு நல்ல நாள் பார்த்து ‘குண்டலகேசி அண்டு கோ’ என்ற பெயருடன் கடையைத் திறந்தேன். கிளிஞ்சல் சிப்பிகளைப் பொறுக்கி வர நான்கு வேலையாட்களை நியமித்தேன். என் தாயாரிடம் அனைத்தையும் கூறி, அவள் சம்மதமும் பெற்றுக் கிளிஞ்சல் சிப்பிகளை அழகாகத் தேய்ப்பதற் காகப் பூவாயியையும் கூட்டிக் கொண்டேன். 

தேய்த்த கிளிஞ்சல்களில் புதுப் புது மாதிரியான வர்ணச் சித்திரம் தீட்ட இரு சித்திரக்காரர் களையும் நியமித்தேன். 

வேலை ‘விறு விறு வென் று நடக்க ஆரம் பித்தது. ஆயிரக் கணக்கான குண்டலங்கள் ‘ஷோரூமிற்கு வந்து விட்டன. 

எல்லாப் பத்திரிகைகளிலும் ‘குண்டலகேசி அண்டு கோ’ விளம்பரம் பூவாயியின் படத் துடன் தொடர்ச்சியாக வெளிவர ஆரம்பித்தது. “மண்டலமெங்கும் மங்கையர் விரும்புவது குண்டலமே என்ற விளம்பர வாசகங்கள் பத்திரிகைகளை அலங்கரித்தன. 

ஒரு ஜோடி குண்டலத்தின் விலை அணா எட்டுத்தான். “எவ்வளவு மலிவு!” என்று உலகத்தின் பல பாகங்களிலிருந்து ஆடர்கள் வந்து மலை மலையாகக் குவிந்தன. 

சில தினங்களுக்குப் பிறகு பூவாயி கடைக்குப் போவதை நானே தடுத்து விட்டேன். அவளால் தானே இவ்வளவு லாபமும், இனி அவள் ஏன் கடையில் வேலை செய்ய வேண்டும். 

ஆனால் அவள் மட்டும் எப்பொழுதும் எனக்குப் பணிப் பெண்ணாகவே இருந்தாள் ! 

பணம் பெருகியதால் என் தாயார் எனக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமென்று துடித்தாள். நான், 66 அப்பா வரட்டும், பார்த்துக் கொள்ளலாம்” என்று தட்டிக் கழித்து வந்தேன். 


ஒரு நாள் இரவு பூவாயி எனக்கு வழக்கம்போல் சாதம் பறிமாறினாள். என் தாயாரும் அவள் தாயாரும் ஹாலில் ஏதோ முணு முணுத்துக் கொண்டிருந்தார்கள். நான் சாப்பிடாமல் பூவாயியையே பார்த்துக் கொண்டிருந்தேன். 

“என்ன, அண்ணா! என்னை விழுங்கிவிடற மாதிரி பார்க்கிறாயே!” என்று கூறிச்சிரித்தாள். 

“ஆமாம் பூவாயி! உன்னை விழுங்கி விட வேண்டு மென்றுதான் பார்க்கிறேன்!” 

“சோத்தை விழுங்கினாலும் பிரயோஜனம் உண்டு ; என்னை விழுங்கினா என்ன பிரயோஜனம்?” 

“இத்தனை நாளும் சோற்றை விழுங்கி விழுங்கி என்ன சுகத்தைக் கண்டேன் ? ஊன் தான் பெருத்தது; உள்ளம் பெருக்கவில்லை….” 

“பின்னே என்னை விழுங்குவது தானே அண்ணா?” என்று அவள் என் அருகில் வந்து உட்கார்ந்தாள். என்னுடைய ஆசை வெள்ளம் கரை புரண்டது. 

அருகிலிருந்த அவளைச் சாதம் பிசைந்து கொண் டிருந்த கையுடன் அணைக்கச் சென்றேன். அவள், ஐயோ ! அண்ணா! இதென்ன?” என்று விலகி நின்றாள். 

நான் அருகில் சென்று, “கோபமா?” எனறு கேட்டேன். அவள் கண்ணீர் விட்டுக்கொண்டே 

“அண்ணா! என்னை வளர்த்த நீங்க, எனக்குப் புருசனாவதைவிட அண்ணாவாகவே இருந்தால் அவ்வளவு நல்லாயிருக்கும்?” என்றாள். இந்தச் சமயத்தில் எங்களுக்குப் பின்னால் யாரோ வரும் சத்தம் கேட்டது. இருவரும் பிரிந்து விட்டோம். இரவு முழுவதும் எனக்குத் தூக்கமில்லை. மறு நாள் வழக்கம்போல் அண்ணா!” என்று கூப் பிட்டுக் கொண்டே மாடிக்கு வரும் பூவாயி அன்று வரவில்லை. நான் அவள் குடிசைக்குச் சென்றேன். அவளுக்கு நல்ல ஜுரம் அடித்துக் கொண்டிருந்தது. 

“பூவாயி!” 

அவள் என்னைத் திரும்பிப் பார்த்தாள். 

“உடம்பை என்ன செய்கிறது, பூவாயி?”

“ஏதோ தெரியலை, அண்ணா!” என்று அவள் நடுங்கிக் கொண்டே பதில் சொன்னாள். 

அதற்குமேல் நான் அவளை ஒன்றும் கேட்க வில்லை. பரபரப்புடன் சென்று டாக்டரை அழைத்து வந்தேன். 

ஏதோ மன அதிர்ச்சியால் உண்டான கோளாறு!” என்று சொல்லி டாக்டர் மருந்து கொடுத்தார். 

அன்று முழுவதும் நான் பூவாயிக்குத் தேறுதல் சொல்லிக் கொண்டிருந்தேன். 

“இரண்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு, “இப்பொழுது எப்படி இருக்கிறது, பூவாயி ?” என்று நான் அவளை விசாரித்தேன். 

“நான் சாகப் போகிறேன், அண்ணா!” என்றாள் அவள். 

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது “பேசாமலிரு பூவாயி!” என்றேன். 

“நான் பிழைத்து விட்டால் என்னை நீங்கள் கலியாணம் செய்து கொண்டு விடுவீர்கள் அல்லவா? அதனால்தான் செத்துப் போகலாம்னு பார்க்கிறேன். 

நானோ ஏழை; கீழ் ஜாதி; என்னைக் கல்யாணம் செய்து கொண்டால் உங்களுக்கு எப்பவும் கஷ்டம்தான். அதைவிட நீங்கள் எப்போதும் என் அண்ணாவாகவே இருப்பதுதான் நல்லது. இன்னும் கொஞ்ச நாளைக்கு நான் ஜீவித் திருக்கணும்னா நீங்க எனக்கு அண்ணாவா யிருந் தால்தான் முடியும்?” என்று சொல்லி அவள் கண்ணீர் பெருக்கினாள். 

என் மனம் இளகி விட்டது. அதற்கென்ன, பூவாயி ! நான் உனக்கு அண்ணாவாகவே இருக் கிறேன் !” என்றேன். 


நான் தங்கையாகப் பாவிக்க ஆரம்பித்தவுடன் அவள் உடல் நிலை தேற ஆரம்பித்து விட்டது. 

இந்நிலையில் அவள் என் கல்யாணத்தைப்பற்றி விசேஷ சிரத்தை எடுத்துக் கொண்டாள். நீ அப்பொழுது கலைமகள் வித்தியாசாலையில் படித்துக் கொண்டிருந்தாய். எங்கள் வீட்டின் வழியாகத்தானே நீ பள்ளிக்கூடத்திற்குப் போவது வ ழ க் கம்? அப்பொழுதெல்லாம் பூவாயி உன்னைக் கவனித்திருக்கிறாள். அவள் மனதிற்கு நீ பிடித்து விட்டாய். உடனே உன்னைக் கலியாணம் செய்து கொள்ளும்படி என்னை வற்புறுத்த ஆரபித்து விட்டாள். உன்னுடைய அருமை பெருமைகளை அவள் என் னிடம் அடிக்கடி எடுத்துச் சொல்லுவாள். ஒரு நாள் நீ பள்ளிக்கூடம் போகும் போது பூவாயி ஓடோடியும் வந்து என்னைக் கூப்பிட்டு உன்னைப் பார்க்கும்படிச் சொன்னாள். நானும் பார்த் தேன். எனக்கு உன்னைப் பிடித்திருப்பதாக அவளிடம் சொன்னேன். 

கலியாணம் நிச்சயமாகிவிட்டது. பலஹீனமான உடல் நிலையுடன் பூவாயி ஓடி ஆடித் திரிந்தாள். மறு நாள் விடிந்தால் முகூர்த்தம். முதல் நாள் இரவு திடீரென்று பூவாயிக்கு மயக்கம் வந்தது. அவளை வற்புறுத்திப் படுக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது. என் தாயாரையும் அவள் தாயாரையும் பூவாயிக்கு துணையாகப் படுக்கச் சொல்லிவிட்டு நான் மாடிக்குப் படுக்கப் போனேன். 

நடு ஜமாத்தில் “அண்ணா!” என்ற பூவாயியின் அலறல் கேட்டுத் திடுக்கிட்டு எழுந்தேன். 

எங்கும் இருட்டு; ஒன்றும் தெரியவில்லை. என் மாடி அறையை ஒட்டினாற்போல் படிகள் இருந்தன. நான் ஓடிவந்த வேகத்தில் பூவாயி யைக் கவனிக்கவில்லை. அவள் மீது மோதிக் கொண்டுவிட்டேன். அவ்வளவுதான்; அவள் அடுத்த கணம் மாடிப்படியில் உருண்டு சென்று கொண்டிருந்தாள் ! வீட்டிலிருந்தவர்கள் எல் லோரும் ‘ திருடன் தான் வந்துவிட்டானாக்கும்” என்று நினைத்துக் கூக்குரல் போட்டனர். எனக்கு ஒன்றும் புரியவில்லை. வேலைக்காரர்கள் மின்சார விளக்குகளைத் தட்டி விட்டனர். 

பூவாயி இரத்த வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தாள். 

டாக்டருக்கு ஆள் ஓடிற்று; அவரும் வந்தார். 

“என்ன, டாக்டர்! விடிந்தால் கலியாணம்; எப்படி இருக்கிறது, நிலைமை?” என்று நான் தழ தழத்த குரலுடன் கேட்டேன். 

“எல்லாம் சௌகரியமாய்ப் போய்விடும், ஸார்! ஆனால் கொஞ்ச நாளாகும்! என்றார் அவர். கெட்டிக்கார டாக்டர்களே இப்படித்தான் நோயாளியையும் சாகவிட மாட்டார்கள் நோயையும் சாகவிடமாட்டார்கள். 

பின்னர், டாக்டர் சொல்லியபடி பூவாயியை வேறு வீட்டிற்குத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்க வைத்தோம். 

விடிந்தது. சூரியனின் உதயம் என் நிலைமை யைக்கண்டு பரிகசிப்பது போலிருந்தது ! கடைசி யில் என்ன? கொட்டு மேளத்துடன் எனக்கும் உனக்கும் திருமணம் நடந்தேறியது. 

மாலையில் பூவாயிக்கு ‘அதிக மாக இருப்ப தாகச் சொன்னார்கள். அவள் இருந்த இடத் திற்கு நான் மணக்கோலத்துடன் ஓடினேன்.. அவளுடைய கடைசி மூச்சு என்னிடம் விடை பெற்றுக் கொண்டது. 

இதுதான் பூவாயியின் கதை. இதை நீ அறி யாமல் இருந்தால் நலமென்று இத்தனை நாளும் கருதினேன். ஆனால், பந்தை என்னதான் தண்ணீரில் அமுக்கினாலும் அது எப்படியும் மேலே மேலே வந்துதான் ஆகவேண்டுமல்லவா? அதைப் போல இந்தச் சம்பவமும் உனக்கு ஒரு நாள் தெரிய வேண்டியதுதானே ! 

கடிதம் அனுமார் வால்போல் ரொம்ப ரொம்ப நீண்டு விட்டது. இதோ, அதைச் சுருட்டிக். கொண்டு விடுகிறேன். 

என்றும் உன்னுடைய
………..

– சீனத்துச் சிங்காரி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 1950, தமிழ்ப் பண்ணை லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *