கதையாசிரியர்:
தின/வார இதழ்: மல்லிகை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 2, 2021
பார்வையிட்டோர்: 2,979 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஆமித் – அன்று வழக்கம் போல் இஷாத் தொழுகை முடிந்ததும் மீண்டும் வந்து அன்றைய ஆங்கிலப் பத்திரிகையில் மூழ்கினார்.

அலுப்புத் தட்டியது.

டீ.வி.யில் உலக சஞ்சாரம் செய்து கொண்டிருந்தார்.

இரவு பத்து முப்பது.

குட்டிம்மா கிளாசில் பால் கொண்டு வந்து நீட்டினாள்.

பாலை அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்ல ஆயத்தமானார்.

வெளிவாசல் கேட்டில் சில் சில்லென்று தட்டும் ஓசை பயங்கரமாக இருந்தது.

அந்தச் சத்தத்திலே ஒரு வித்தியாசமான முரட்டுத் தன்மையும் தெரிந்தது.

இந்த அகால நேரத்தில் இது யார்?

நிச்சயமாக நண்பர்களோ தெரிந்தவர்களோ அல்ல. அவர்கள் தட்டியிருந்தால் அதில் ஒரு இங்கிதமும், மரியாதையும் இழையோடும்.

ஒருவேளை மலையகத்திலிருந்து உறவினர்கள் யாராவது ஸ்டேஷனுக்குச் சுணங்கி வந்து…..! இருக்காது அடிக்கடி ஊரடங்கு அமுலுக்கு வருவதால், இரவில் வந்து இறங்கும் பயணங்களை அவர்கள் தவிர்த்து விட்டார்கள். நடுநிசியில் வந்திறங்கிப் பட்ட அவலங்கள் போதுமான தண்டனை!

இது கொள்ளையர் அல்லது பொலிஸ்! இல்லாவிட்டால் இராணுவம்! இப்படியான பட்டறிவை உமிழும். எழுபத்தொரு வயது நிரம்பிய ஆமித் அவர்களுக்குப் புரிந்து விட்டது.

அவரும் ஒரு காலத்தில் காக்கிச் சட்டைபோட்டு மேடுபள்ளங்களில் ஏறி இறங்கி அதிகாரம் பண்ணியவர் தான். ஆனால் அந்த அதிகாரத்தில் கடமையுணர்வும், வெளியில் அலட்டிக் கொள்ளாத மானுட நேயமும் பிணைந்திருந்தது…இன்னும் அவரைப் பற்றி ஆழமாகத் துருவிப் பார்த்தால் அவரது பரம்பரையும் பொலிஸ் உத்தியோகம் தான்.

ஆனால் இப்படி அசிங்கமாகக் கதவைத் தட்டியிருக்கமாட்டார்கள் அவரது முன்னோடிகள் என்பது நிச்சயம்.

மெல்ல எழுந்து சென்று ஜன்னல் திரைச் சீலையை இலேசாக அகற்றி வாசலைப் பார்த்தார். எவரும் இல்லை . எதற்கும் ஒரு பத்து நிமிடங்களுக்கு முகப்பு மின் விளக்கை எரியவிட்டு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டார்,

‘நாங்கள் விழிப்படைந்து விட்டோம். உங்களை வரவேற்கக் காத்திருக்கிறோம்….’ என்ற சமிக்ஞை தான் அது!

இது ஒரு சோதனை மிகுந்த காலகட்டம். மனிதன் மனிதனாகவே வாழ முடியாது. அச்சுறுத்தல்கள் நிரம்பிய ஒரு சூழலில், நேர்க்கோட்டில் நடக்கும் ஒவ்வொரு நல்ல மனிதனும் தனது மானுடத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி. அவன் சுழியோட வேண்டிய நிர்ப்பந்தத்தினால் தட்டுத் தடுமாறிப் போகிறான்.

பதட்டம் அடைந்த ஆமித்தும், செல்வி குட்டிம்மாவும் முன்னறைக்கு வந்து பவ்வியமாக எட்டிப் பார்த்தார்கள்.

‘கேட்ல ஒருவரும் இல்லை…நீங்கள் படுத்துக் கொள்ளுங்கள்.. நான் இன்னும் கொஞ்ச நேரத்தில லைற் ஓப் பண்ணி உறங்கப் போவேன்…’ அவர் ‘டென்ஷன்’ அடையவில்லை.

அவருடைய குரலில் அந்தப் பழைய இளமையும், அச்சமின்மையும், கம்பீரமும் தொனித்தது.

அவர்கள் அவ்விடத்தைவிட்டு மறைந்தனர். சோபாவில் அமர்ந்த ஆமித் பக்கத்தில் சிறு மேசை மீதிருந்த போட்டோ அல்பத்தைப் புரட்டிப் பார்த்தார்.

வண்ணப் புகைப் படங்கள் மூலம் சிறை வைக்கப் பட்டிருந்த மலைக் காட்சிகள் உயிர்பெற்று அவர் உள்ளத்தை சிலிர்க்கவைத்து விட்டன.

மாலை நேரங்களில் பனி மூட்டங்கள் இல்லாத சாயங்காலங்கள். வானம் மப்பும் மந்தாரமும் இல்லாத பிரகாசமான காட்சிகள். கழுத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தொலை நோக்குக் கருவியைக் கண்களோடு ஒட்டவைத்துக் கொண்டு இயற்கையை அவர் ரசிக்கும் காட்சி.

அப்புறம்

ஒரு பக்கம் ராகலை மலைகள். மறுபக்கம் நமுனகுல மலைத் தொடர். நடுவிலே உலகப் புகழ் பெற்ற அழகிய துங்கிந்தை நீர்வீழ்ச்சி.

இன்னும்

மாணிக்கம் சிறுவயதில் குட்டிம்மாவைத் தூக்கி வைத்துக்கொண்டு ஒரு படம் :

ஆமித்துக்கும் ஜினான் ஆமித்துக்கும் நடுவே குட்டிம்மா….

இப்படி எத்தனை எத்தனையோ…கெமராவுக்குள் கிளிக் கிளிக் என்று அடிப்பது அந்தக் காலத்தில் அவரது பொழுது போக்கு….

ஆமித் அவர்களுக்கு மீண்டும் மடுல் சீமைக்குப் போக வேண்டும் போலிருந்தது.

அந்த எண்ணத்தில் மண் சரிவு ஏற்பட்டு விட்டது போல் மீண்டும் வாசல் கேட்டில் முரட்டுச் சத்தம்.

அதற்காகவே எதிர்பார்த்திருந்த ஆமித் எழுந்து சென்று கதவைத் திறந்தார்.

அவர் எதிர்பார்த்தது சரி. பொலிஸ் அதிகாரிகள். ‘எக்ஸ்கியூஸ் அஸ்…தொழுகை அறையில் இருந்தோம் இப்படி சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்த ஆமித்…ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் தமிழிலும் பாஷாபிமானத்தோடு அவர்களை வரவேற்றார்.

“பிளீஸ் டேக் யுவர் சீட்…”

ஒரு பெண் பொலிசும் இரண்டு அதிகாரிகளும் நுழைந்தனர்.

‘வீடும் எஸ்டேட் பங்களாவைப் போல் இருக்கிறதே’ என்று கூறிய அவர்களது கண்கள் அறைகளைத் துழாவின.

‘நாங்கள் உட்கார வரவில்லை…’

‘பரவாயில்லை…எதுவாயிருந்தாலும் இருந்து பேசிக் கொள்ளலாந்தானே…வரவேற்பது எங்கட கடமை…’ ஆமித் சிங்கள மொழியில் மிக அற்புதமாகக் கூறியதன் மூலம் அவரின் நற்பண்புகள் வெளிப்பட்டன.

‘சரி…வீட்டில் எத்தனை பேர்…? ஐடென்டி கார்ட்களைக் கொண்டு வாங்க…’ பொலிஸார் விசாரணைகளை நேரடியாகவே ஆரம்பித்தனர்.

ஆமித் உள்ளே அலுவலக அறைக்குள் நழுவி, சில நிமிடங்களில் காட்டுக்களுடன் வந்தார்.

ஜினான் ஆமித்தும், குட்டிம்மாவும் கதவோரம் வந்து நின்றனர். ஜனாபா ஜினான் ஆமித் முந்தானையை இழுத்து தலையையும் உடம்பையும் போர்த்திக் கொண்டாள்.

அதிகாரிகள் தேசிய அடையாள அட்டைகளை மிகக் கவனமாகப் பரிசீலித்தனர்.

‘துவான் ஆமித்…ரிடயர்ட் பீல்ட் ஒபிசர்….அது சரி நீங்கள் எங்க தொழில் செய்தீங்க…இவ்வளவு பேர்தானா ஒங்கட குடும்பத்தில்…?’

‘வீ…ஆ….ஸ்ரீலங்கன்ஸ் பை டீசண்ட்’ என்று சற்று அழுத்தமாகக் குரல் கொடுத்த ஆமித் தொடர்ந்தார்.

‘நான் பதுளை மடுல் சீமை குருப்பில் மூன்று தஸாப்தங்களுக்கு மேலாக பீல்ட் ஒபிசராக சேவை செய்திருக்கிறேன். இங்கு வந்து ஏழு வருடங்களாகின்றன. முதலில் வாடகைக்கு எடுத்த இந்த வீட்டை இப்பொழுது சொந்தமாக வாங்கித் திருத்தியிருக்கிறோம். நாங்கள் இலங்கையர்கள்’

எனக்கு இரண்டு ஆண்பிள்ளைகள் மூத்தவன் புருனாய் நாட்டில் உயர் உத்தியோகம். அங்கு குடும்பமாக வசிக்கிறார். இரண்டாவது மகன் சிங்கப்பூரில் இன்ஜினியர். அவரும் திருமணத்திற்குப் பிறகு குடும்பம் அங்கே…

ஆமித் அவர்கள் சட்டென்று எழுந்து சென்று மகன்மார் அனுப்பிய போட்டோ அல்பங்களைக் கொண்டுவந்து காட்டி மகன்மாரின் குடும்பங்களையும் பேரப்பிள்ளைகளையும் அறிமுகம் செய்து வைத்தார்…

ஜினான் ஆமித் அவர்களின் அடையாள அட்டையைப் பரிசீலனை செய்த அதிகாரிகள் சற்றுப் பரபரப்படைந்து மிகுந்த ஆவலுடன் குட்டிம்மாவை எதிர்பார்த்தனர்.

பதினாறாவது வயதில் ஒரு பருவப் பெண்ணின் பொலிவுடன் வந்து நின்றாள் குட்டிம்மா.

வசீகரமான முகத்தோற்றத்தில் எந்தவிதமான கலவரமும் இல்லாமல் ‘பாய் சூட் – ஹிஜாப்’ அணிகலன்களுடன் அவளது அழகிய தோற்றத்தைப் பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ந்து போய்விட்டனர்.

சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்ற சட்டத்தைப் பிரயோகித்து, ஒரு நாளைக்காவது ரிமாண்டில் வைத்து வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்ற நோக்கம் பிழைத்துவிட்டதோ!

‘இவள்தான் குட்டிம்மா’ என்று ஆமித் அறிமுகப்படுத்தியதை அவர்கள் நிராகரித்தனர்.

அவளையும் அடையாள அட்டையில் ஒட்டப் பட்டிருக்கும் புகைப்படத்தையும் மாறி மாறிப் பார்த்து, ‘ஒரு சின்ன வித்தியாசத்தையாவது காண வில்லையே…!’ என்று மனம் புழுங்கினர்.

இந்திய வம்சாவழியினருக்கு வேறு என்னமோ ஒரு பொருத்தமில்லாத ஒரு ‘தோணி’யை இணைத்து உதிர்த்த வசனம் அநாகரிகமாக இருந்தது.

ஒரு தோட்டக்காட்டுத் தொழிலாளியின் மகள் இங்கு வேலைக்காரச் சிறுமியாக இருக்கிறாள் என்றுதானே எங்களுக்கு முறைப்பாடு வந்திருக்கு.

அவர்களது உள்ளங்கள் மானாக் காட்டுத் தீயாய் எரிந்தன. குழம்பித் தவித்தார்கள்.

தேயிலைத் தோட்டங்களில் கொழுந்து ஆயும் பெண்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியும். ‘லயக் காட்டில்’ ஓடித் திரியும் சிறுமிகளை அவர்கள் கண்டிருக்கிறார்கள். இவள் சிவப்பு நிறம். மொங்கோலிய முகலாவண்யம் இல்லை. கறுப்புத் தோற்றத்தில் கந்தல் அணிந்த ஒரு சிறுமியைத் தான் அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

குட்டிம்மாவிடம் சில கேள்விகளைக் கேட்டு மடக்கிவிட முடியுமா? என்று ஒரு முயற்சி.

‘உன் பெயர்…?’

‘குட்டிம்மா…’

‘வேறு பெயர்கள்…?’

‘செல்வின்னும் ஒரு பெயர் இருக்கு.’ மென்மையான உணர்வுகளுடன் அவள் மிகவும் நிதானமாகப் பதில் சொன்னாள்.

ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் சில கேள்விகள்.

அவளுக்கு ஆங்கிலம், தமிழ், சிங்களம், மலாய் மொழிகளில் சரளமாகப் பேச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டினாள்.

பொலிஸ்காரர்களுக்கு பெரிய தலையிடி.

‘இவளை எந்த இனத்தில் சேர்க்கிறது…?’

‘நீ…. எந்த ரிலிஜன்….?’

‘இஸ்லாம்…’

‘குர் ஆன் ஓத முடியுமா…?’

‘முடியும்…’

அதிகாரிகள் உள்ளூர வியந்தாலும், எதையும் காட்டிக் கொள்ள விரும்பாமல் நாங்கள் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் தான்…என்று நியாயம் பேசிக் கொண்டிருந்தார்கள்.

‘மிஸ்டர் அமித், மலை நாட்டிலிருந்து ஒரு வேலைக்காரப் பிள்ளையக் கூட்டிக் கொண்டு வந்து மிக அற்புதமான பயிற்சியளித்து வைத்திருக்கிறீர்கள். பொலிசில் ஏன் பதிவு செய்யல்ல?’

‘சேர் நீங்கள் தான் வேலைக்கார பிள்ள, வேலைக்கார பிள்ள என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அவ எங்களுக்கு மகள் குட்டிம்மா ஒன்பது வயதாக இருக்கும் போதே நாங்கள் பென்சனாகி கொழும்புக்கு குடியேறினோம். அப்போது பதிவு செய்ய வேணும்னு எனக்கு தோணல்ல…’

‘குட்டிம்மா ஒனக்கு இங்க வேல கஷ்டம் மடுல் சீமைக்குப் போறதா…?’

பெண் பொலிஸ் இங்கிதமாகக் கேட்டாள்.

‘மெடம், நான் பொறந்த ஒடனே எங்க அம்மா செத்துப் போய்ட்டா. சின்ன வயசிலிருந்தே மடுல் சீமை ஐயா பங்களாவில் தான் ஓடி விளையாடினேன்…தாயின் முகத்தைக் கூடப் பாக்காத எனக்கு ஆமித்தம்மா தான் எல்லாமே…! ஒன்பது வயசில ஐயாவங்களோட கொழும்புக்கு வளர்ப்பு மகளாகவே வந்துட்டேன்..மடுல் சீமைக்கு நா ஏன் போகணும்? அது எனக்கு இப்ப தலைகீழாகத்தான் தெரீது…’

‘எதற்கும் நீங்க நாளக்கி ஸ்டேஷனுக்கு வந்து பதிவு செய்து வைங்க….இல்லாட்டா ஒவ்வொரு முறையும் பிரச்சினதான்.. இண்டக்கி நாங்க வந்தோம்…நாளக்கி வேறு யாரும் வருவாங்க…அதுக்குப் பெறகு…? பாவம் குட்டிம்மாதான் கஷ்டப்பட போறா…கடைசியில யாராவது ஒருவன் வந்து புள்ளய ரிமான்ட் பண்ணி உரிய எஸ்டேட்டுக்கு அனுப்பவும் கூடும்.”

அதிகாரிகள் மிகுந்த அதிருப்தியுடன் திரும்பினர்.

என்னடா இது, பாசம் பனிக்கட்டி போல் உருகி வழியுதே…! நாளக்கி பொலிசுக்கு வந்து ஸ்டேட்மன்ட் கொடுக்கட்டாம். நாளக்கி என்ன இப்பவும் ரெடிதான். எப்ப வந்தாலும் எங்கு வந்தாலும், உண்மைக்கு கைவசம் ஸ்டேட்மன்ட் இருக்கு. அத உரிய இடத்துக்க காட்ட நாங்க தயார். அத விட்டுட்டு இப்ப குட்டிம்மாவை கூட்டிக்கொண்டு போய் ரிமான்ட்ல வைச்சு, வாக்குமூலம் எழுதி நாளக்கி விடுறது…இது ஏலாது. ஒரு பதினாலு வயது பொம்பில் புள்ளக்கி அது பொருத்தமில்ல…வாழ வேண்டிய குமரிப்பிள்ளையின் வாழ்க்கையில் ஒரு கரும்புள்ளி வேண்டாம் ஆமித்தின் கோபம் அடங்குவதற்கு நீண்ட நிமிடங்கள் கரைந்தன.

அந்த இரவிலும், அலுமாரியைத் திறந்து பைல்களைக் கிளறி உரிய பத்திரங்களைத் தேடி ஒழுங்கு படுத்தினார்.

அவருக்கு ஒன்று ஞாபகம் வந்தது.

வாழ்க்கையில் அந்தப் பசுமையான காலத்தில் ஒரு நாள் அந்தி சாயும் வேளை. அவரது மலை பங்களாவின் விறாந்தையின் ஜன்னலூடாக, தொலை நோக்குக் கருவியில் பார்வையை நாற்திசைகளுக்கும் செலுத்திக் கொண்டிருந்த நேரம் அது.

தொழிலாளி மாணிக்கம் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தான்.

அவன் தனது பங்களாவுக்கு வர பத்து நிமிடங்களாவது எடுக்கும்.

‘சரி வரட்டும் என்ன அவசரமோ….!

ஆமித் விறாந்தைச் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தார்.

அவன் வந்து கதவைத் தட்டினான். எவ்வளவு ரம்மியமாக இருந்தது அந்தத் தட்டல். இந்த நாகரீகத்தை அவன் எங்கிருந்து கற்றுக் கொண்டான்.

அவரைப் பொறுத்தவரையில், இந்த நாகரீகம், பண்பாடு, கலாசாரம் எல்லாம் இரத்தத்தில் ஊறி வெளிப்பட வேண்டியவை.

‘ஐயா…’

‘வா மாணிக்கம் என்ன விசயம்…’

‘சம்சாரத்துக்குப் பிரசவ வலிங்க… பெரியாஸ்பத்திரிக்கு கொண்டு போகணும்னு டாக்டரையா சொல்லிட்டாருங்க…’

‘அப்படியா…சரி…சரி…முதல்ல அத கவனி நாளக்கி வேலக்கி வரத் தேவல்ல…’

அவன் அவசரமாக வெளியேறினான். சற்றுத் தூரம் நடந்திருப்பான். மாணிக்கம் அவர் உரத்த குரலில் அழைத்தார். கிடைக்கும் ஓய்வு நேரங்களை எல்லாம் தனது வீட்டு வேலைகளில் விசுவாசமாக உதவும் ஒருவனுக்கு இந்த இக்கட்டான நிலையில் வெறுங்கையோடு அனுப்ப அவருக்கு மனம் இடம் கொடுக்கவில்லை.

‘ஏய் மாணிக்கம், செலவுக்கு சல்லி வச்சிருக்கியா?’

அவன் பதிலை எதிர்பாராத அவர் வேகமாக உள்ளே சென்று பணம் கொண்டு வந்து கொடுத்தார்.

அவன் நன்றியுடன் ஓடினான்.

‘ஏய் தண்ணிகிண்ணி போட்டு வீண் விரயம் செய்யாதே’

அவர் மீண்டும் எச்சரித்தார்.

அவன் குறுக்குப் பாதை வழியாக இறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் அவரைச் சந்திக்க வந்த நோக்கமே அறிவித்தல் கொடுப்பதற்கும், ஐயாவின் பங்களா வேலைக்கு நாளைக்கு அந்திக்கு வர முடியாத காரணத்தைச் சொல்லிவிட்டுப் போவதற்காகத்தான். அவரது பங்களா வேலை அவனுக்குக் கட்டாயம் இல்லை அது ஓய்வு நேரங்களில் செய்வது.

மனைவியின் பிரசவம் என்று ஒரு இக்கட்டான பொறுப்பிருந்தும், மெனக்கெட்டு வந்து சொல்லிவிட்டுப் போகிறானே! இந்தப் பண்பு அவனுக்கு எப்படி வந்தது.

இரண்டாம் நாள் மாணிக்கம் வந்து அழுது புலம்பினான். ‘பொட்டச்சியை பெத்துட்டு அவ கண்ணை மூடிட்டா ஐயா…மாணிக்கத்தின் சோகமும், அவனது பிள்ளையின் நிலைப்பாடும், ஆமித் தம்பதிகளின் நெஞ்சங்களை நெருடியது.

ஜினான் ஆமித்துக்கு அந்தப் பிள்ளையை எடுத்து வளர்க்க வேண்டும் என்ற ஆசை துளிர் விட்டது. ஆயினும் குழந்தைப் பருவத்தில் எடுத்து வளர்க்க அவளது உடல் நிலையும் இடம் தரவில்லை .

‘மாணிக்கம் நீ ஒன்றுக்கும் யோசிக்காத, ஒனக்கு விருப்பமிருந்தா சீக்கிரத்தில் உன் குழந்தையை எங்க கிட்ட கொண்டாந்து வுட்டுடு நாங்க வளர்ப்போம்…’ என்று உறுதி மொழி கூறினார்.

அது அவனுக்கு ஆறுதலாக இருந்தது. நடக்கும் பருவத்தில் செல்வியைக் கொண்டு வந்து பங்களாவில் விட்டபோது ஜினான் ஆமித்துக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

ஒரு மலையக மாணிக்கத்தின் புதல்வியை எடுத்து, ‘குட்டிம்மா’ என்று செல்லமாகத் தூக்கி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருந்தாள். மாணிக்கத்தின் கண்கள் கலங்கின.

அவனது மனதில் நம்பிக்கை நட்ஷத்திரம் மின்னியது. தாயில்லா புள்ளக்கி தாய் கிடச்சிருச்சி…ஐயா குடும்பத்தோட சேர்ந்துட்டா அவளுக்கு இனி நல்ல காலந்தான்.

ஆமித் குடும்பத்தில் ஒரு பெண் பிள்ளை இல்லாத வெறுமையை அகற்றவும், ஜினான் ஆமித்துக்கு உதவியாகவும், துணையாகவும் ஒரு புத்திரியானாள் செல்வி குட்டிம்மா.

குட்டிம்மாவின் பிறப்பு அத்தாட்சி தொடக்கம் சகல விதமான ஆதாரப் பத்திரங்களையும் ஒன்று திரட்டி உள்ளடக்கிய கோவையை பூரணப்படுத்திய போது இரவு பன்னிரண்டு பிந்திவிட்டது.

மறுநாள் காலையில் அவர் மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டார்.

எதையுமே அவர் அலட்டிக் கொள்ளவில்லை. பொலிஸ் பதிவு தேவையா? இல்லையா? என்றெல்லாம் விவாதிக்கவில்லை.

ஆதாரங்களுடன் வருவோம். பரிசீலனை செய்து விட்டுப் பிறகு ஒழுக்காற்று நடவடிக்கை எடுங்கள் என்று கூடச் சொல்லவில்லை.

சரி நாளைக்கு நாங்கள் வருகிறோம் என்றாவது ஒருவார்த்தை…

காலை உணவிற்குப் பிறகு சரியாக ஒன்பது மணிக்கு, ஆமித், ஜினான் ஆமித், செல்வி குட்டிம்மா ஆகிய மூவரும் ஒரு பழக்கப் பட்ட ஆட்டோவில் ஏறினார்கள்.

அரை மணி நேர ஓட்டம்.

பிறகு ஆட்டோவிலிருந்து இறங்கி, பொலிஸ் நிலையத்திற்குள் நுழைந்தார்கள்.

நேற்றிரவு வந்த அதிகாரிகள் அவர்களை இனங்கண்டு ஓ.ஐ.சி யின் முன் இருத்தினர்.

உரையாடலும் பரிசீலனையும் ஒரே நேரத்தில் நடந்து முடிந்தது.

மடுல் சீமைத் தோட்டத் தொழிலாளி மாணிக்கத்தின் மகள் செல்வியை அவளது மூன்றாவது வயதில் சட்டபூர்வமாக சுவீகாரம் எடுத்ததற்கான உறுதிப் பத்திரத்தை இரு முறை வாசித்தார். ஓ.ஐ.சி.

பொலிஸில் பதிவு தேவையில்லை இருந்தாலும் இனிமேலும் ‘செக்கிங்…’கு வராமல் இருக்க ஒரு ஸ்டேட்மன்ட்டை பதிவு செய்தால் நல்லது.

சுவீகார உறுதிப் பத்திரம் அந்த மூன்று அதிகாரிகளையும் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தது.

– மல்லிகை – நவம்பர் 2002.

– நாம் பயணித்த புகைவண்டி (சிறுகதைத் தொகுதி), முதற் பதிப்பு: 2003, மல்லிகைப் பந்தல் வெளியீடு, கொழும்பு.

ப. ஆப்டீன் (11 நவம்பர் 1937 - 9 அக்டோபர் 2015) என்ற பஹார்டீன் ஆப்டீன், ஈழத்து தமிழ்க் கலை இலக்கிய துறையில் பங்காற்றி வரும் மலையக முஸ்லிம் படைப்பாளிகள் வரிசையில் கவனத்துக்குரிய ஒரு படைப்பாளி ஆவார். இவர் இலங்கையின் மலையகத்திலுள்ள நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர். மலாய் இனத்தில் பிறந்தவர். 1962 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்த தமிழின்பம் எனும் சிற்றிதழில் வந்த உரிமையா? உனக்கா? எனும் முதல் சிறுகதை மூலம்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *