குடியிருந்த கோயில்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 6, 2014
பார்வையிட்டோர்: 8,198 
 

“ அம்மா!….வரவர தம்பி ரத்தினத்தின் போக்கே சரியில்லே! தினசரி இரவு வீட்டிற்கு ரொம்ப லேட்டா வருகிறான்.. நேத்து ராத்திரி இரண்டு மணிக்கு வந்து கதவைத் தட்டினான்.. நான் போய் திறந்து விட்டேன்…குடிச்சிருப்பான் போலிருக்கு…எனக்கென்னவோ சந்தேகமா இருக்கு!….”

“ அவன் சேர்க்கை சரியில்லே! நானும் தினசரி அவனுக்குப் புத்திமதி சொல்லிட்டுத் தான் இருக்கிறேன்!..”

“ நம்ம குடும்ப சூழ்நிலையில் எனக்கு கல்யாணம் எல்லாம் இப்ப வேண்டாமென்று தலையால் அடிச்சிட்டேன்!…நீ கேட்டயா?…இப்ப நம்ம குடும்ப மானமே போயிடும் போலிருக்கே?.. நீ வேறே சத்தம் போட்டுப் பேசாதே!..மெதுவாப் பேசு……சுஜாதா காதிலே விழுந்திடப் போகுது!…நான் அடிக்கடி சோர்ந்து போவதைப் பார்த்து அவ என்ன பிரச்னை என்று கேட்கிறா….தம்பி ரத்தினத்தைப் பற்றி என்ன சொல்லறது?….அப்புறம் அவங்க நம் குடும்பத்தைப் பற்றி என்ன நினைப்பாங்க..என் படிப்பு, குணம் உத்தியாகம் எல்லாம் பார்த்துத்தான் பொண்ணு கொடுக்க முன் வந்தாங்க..எனக்கென்னவோ நம்ம குடும்பம் இருக்கும் நிலையில் எனக்கு கல்யாணத்தில் இஷ்டமில்லைனு சொன்னேன்…நீதான் என்னை தர்ம சங்கடத்தில் சிக்க வச்சிட்டே!..”

“ இப்ப அதுக்கென்னடா குறைச்சல்?…சுஜாதா அடக்கமான அழகான பொண்ணு!…..என்னிடம் எவ்வளவு மரியாதையா நடந்துக்கிறா தெரியுமா!…அவங்க அப்பா இந்த கோயமுத்தூரிலேயே பேர் சொல்லக் கூடிய ஒரு தொழிலதிபர்…வசதிகள் ஏராளம்…நம்மிடம் எவ்வளவு தன்மையா நடந்து கொள்கிறார்கள்!..தெரியுமா?…கல்யாணத்தில் என்னடா குறை கண்டு பிடிச்சிட்டே?..”

“ ஐயோ!..நான் அதைச் சொல்லையம்மா…அதெல்லாம் நீடிச்சு நிற்க வேண்டுமல்லவா!….ரத்தினம் இப்படி ஊதாரியா சுற்றி கெட்ட பேர் வாங்கினால் அதெல்லாம் போயிடுமா.. எனக்கு அந்தக் கவலைதான்!..”

“ நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்திட்டேன்!…!…நீ ரொம்ப கவலைப் படாதே!…நான் எப்படியாவது நான் சரி செய்திடறேன்!..”

மாணிக்கம்- கல்யாணி தம்பதிகளுக்கு இரண்டு பையன்கள் மட்டுமே! அப்படியொன்றும் வசதி இல்லை. தினசரி வேலைக்குப் போய் பாடுபட்டால் தான் நாட்களைக் கடத்த முடியும்!

சரவணன் படிப்பில் படு சுட்டி. வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் அவன் தான் முதலாவதாக வந்தான்.

அவன் பத்தாவது படிக்கும் பொழுது, ஒரு சாலை விபத்தில் சிக்கி மாணிக்கம் உயிர் இழந்தார்.

எந்தவித சேமிப்பும் இல்லாத குடும்பம். சேமிப்பு இல்லாத குடும்பமும் நடுக் கடலில் புயலில் சிக்கிய படகும் ஒன்று தானே?

கல்யாணி நல்ல உழைப்பாளி. மன உறுதியும் கொஞ்ச நஞ்சமல்ல! புயலில் சிக்கிய குடும்பப் படகை கரை சேர்க்க படாத பாடு பட்டாள்.

சரவணன் பத்தாவது தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவனாகத் தேறினான்.

அவன் மேற்படிப்புக்கு மாநில அரசும், வேறு சில நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவ முன் வந்தன.

சரவணனுக்கு கல்லூரி கட்டணங்கள் தான் மான்யமாகக் கிடைத்தன. அவனுடைய இதர செலவுகளுக்கும், மற்ற குடும்ப செலவுகளுக்கும் கல்யாணி மாடாய் உழைக்க வேண்டியிருந்தது.

அந்த சூழ்நிலையிலும் இளையவன் ரத்தினத்தையும் பள்ளிக்கு அனுப்பினார்கள். இந்தக் காலப் பெற்றோர்களைப் போல் எந்த நேரமும் குழந்தையின் படிப்பின் மேல் கவனம் செலுத்துவது கல்யாணிக்குச் சாத்தியமில்லாமல் போய் விட்டது.!

அதன் விளைவு ரத்தினம் சின்ன வயசிலேயே கட்சி அரசியல், சினிமா ரசிகர் மன்றம் போன்ற வேண்டாத விஷயங்களில் கவனம் போனதால் படிப்பில் கவனம் செலுத்த வில்லை! சரவணனுக்கு தம்பியின் படிப்பை கவனிக்கும் வயசும் இல்லை. அவனுக்கு நேரமும் இல்லை. கல்யாணிக்கோ பகலில்

ஓய்வில்லாத பல வீட்டு வேலை! இரவில் அடித்துப் போட்ட பிணம் போல் தூங்குவாள்.

கவனிப்பாரற்ற ரத்தினம் பிஞ்சிலேயே பழுத்த பழமாகி விட்டான்.

சரவணன் எப்படியாவது தன் குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வர வேண்டுமென்று முழு மூச்சாகப் படிப்பில் கவனம் செலுத்தினான்.

எம்.எஸ்ஸி.எம்.எட். முடித்தவுடன், உள்ளூரிலேயே நல்ல கல்லூரியில் பேராசிரியர் வேலையும் கிடைத்து விட்டது.

சரவணன் வேலைக்குச் சேர்ந்த வருடம் தான், ரத்தினம் பத்தாவது வகுப்பில் இரண்டு முறை பெயில் ஆனான்.

அதற்குப் பிறகு தான் கல்யாணியும், சரவணனும் ரத்தினத்தை கூப்பிட்டு, நிறைய புத்திமதி சொன்னார்கள்.

அத்தனையும் கேட்டு விட்டு ரத்தினம், “எனக்கு படிப்பு வராது!…ஏதாவது வேலைக்குப் போகிறேன்!…” என்றான் பிடிவாதமாக.

நிறைய யோசித்துப் பார்த்த சரவணன், இரண்டு நாட்களில் நண்பர்களைக் கலந்து ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்து விட்டு, ரத்தினத்தை அழைத்தான் சரவணன்.

“ ரத்தினம்!..கோவையில் பம்பு செட் தயாரிக்கும் தொழில் தான் இன்று கொடி கட்டி பறக்கிறது..கோவையிலேயே நெம்பர் 1 கம்பனியில் உனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். நீ அங்கு வேலையில் சேர்ந்து அந்தத் தொழிலைக் கற்றுக் கொள். அடுத்த வருடமே வங்கிக் கடன் வாங்கி நாமே சொந்தமாக ஒரு தொழிற்சாலையைத் தொடங்கி விடலாம்!…” என்று அவனுக்கு நம்பிக்கை கொடுத்து வேலைக்கு அனுப்பினான்.

அந்த சூழ்நிலையில் தான், சுஜாதாவின் பெற்றோர் சரவணனுக்குப் பெண் கொடுக்க முன் வந்தார்கள்.

கல்யாணிக்கு அந்தக் குடும்பமும், சுஜாதாவும் ரொம்பப் பிடித்துப் போய் விட்டது.

ரத்தினத்திற்குப் பொறுப்பு வந்தவுடன் கல்யாணம் செய்து கொள்வதாக தாயிடம் எவ்வளவோ எடுத்துச் சொல்லிப் பார்த்தான் சரவணன். ஆனால் கல்யாணி அதை

நான் பார்த்துக் கொள்கிறேன் நீ காலா காலத்தில் கல்யாணம் செய்து கொள் என்று ரொம்ப வற்புறுத்தினாள்.

தாய் சொல்லைத் தட்டாத சரவணன் சுஜாதாவின் கழுத்தில் மூன்று முடிச்சைப் போட்டான். சுஜாதாவும் மாமியாருக்கு ஏற்ற மருமகளாக நடந்து கொண்டாள். அதனால் வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை.

ஆனால் ரத்தினத்தைத் திருத்த கல்யாணி பகீரதப் பிரயத்தனம் செய்தும் அதனால் எந்தப் பயனும் இருப்பதாகத் தெரியவில்லை.

அவனே சொந்தக் கம்பெனி ஆரம்பிக்க தக்க நடவடிக்கை எடுக்கத் தொடங்கினான். அதற்கு வேண்டிய மூலதனத்திற்கு ஏற்பாடு செய்து கொடுக்கும்படி சரவணனைக் கேட்டான்.

கொஞ்சநாள் போகட்டுமென்று சரவணன் சொன்னான். தன் உழைப்பு யாருக்கோ பயன் படுகிறது. அதற்கு தனக்கு இஷ்டமில்லை என்று உறுதியாக ரத்தினம் சொல்லி விட்டான்.

வேறு வழியில்லாமல் வங்கியில் கடன் வாங்கி ஒரு சிறிய அளவில் ஒரு பம்ப் செட் தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்துக் கொடுத்தான் சரவணன்.

கம்பெனி முதலாளி என்ற பொறுப்புக்கு வந்த பின் ரத்தினத்தின் கைகளில் பண புழக்கமும் ஏற்பட்டது. அதனால் நண்பர்கள் சேர்க்கையும் அதிகமாகி விட்டது. தட்டிக் கேட்கும் பொழுது, அம்மா, அண்ணன் மரியாதை எல்லாம் போகத் தொடங்கியது.

கல்யாணியை கவலை அரித்தது.ரத்தினத்தை திருத்தமுடியாத கவலையில் அவள் நடை பிணமாக உலவினாள்.

சுஜாதா முதல் பிரசவத்திற்கு தாய் வீடு போனாள். கல்யாணி, சரவணன் மனநிலையை நன்கு புரிந்த சுஜாதாவுக்கும் அங்கு போயும் நிம்மதி போய் விட்டது.

பிரசவத்திற்காகாகப் பிறந்தகம் போன சுஜாதா குழந்தை பிறந்து, அதற்கு ஆறுமாதமான பிறகு தான், புக்கத்திற்கு வந்தாள்.அதற்குள் வீட்டில் நிலமை மிகவும் சீர் கெட்டுப் போய் விட்டது. ரத்தினம் அம்மாவையும், அண்ணனையும் நேருக்கு நேர் அலட்சியப் படுத்த பழகி விட்டான். நண்பர்களோடு குடித்து விட்டு கிளப்பில் சீட்டாடி விட்டு, கண்ட நேரத்தில் வீட்டிற்கு வரத் தொடங்கி விட்டான்.

குழந்தையை எடுத்துக் கொண்டு சுஜாதா வீட்டிற்கு வந்த பத்தாவது நாள்.

இரவு இரண்டு மணியிருக்கும்.

வெளிக் கதவு ஓங்கி ஓங்கித் தட்டப் பட்டது. வழக்கமாக கல்யாணிதான் போய் கதவைத் திறந்து விடுவாள். அன்று அவள் அசந்து தூங்கி விட்டாள். அதனால் சரவணன் ஓடிப்போய் கதவைத் திறந்தான்.

குப்பென்று வாசம் அடித்தது.

“ ஏண்டா!..இப்படி கண்ட நேரத்தில் குடித்து விட்டு வந்து கதவைத் தட்டுகிறாயே….இது உனக்கே அசிங்கமாப் படலே?…”

“நீ மூடிட்டு உன் பெண்டாட்டி பக்கத்தில் படுத்திருக்க வேண்டியது தானே?….அம்மா வந்து திறப்பா…நீ உன் வேலையைப் பார்த்திட்டுப் போ!…” என்று குடிபோதையில் அலட்சியமாகச் சொன்னான் ரத்தினம்.

கோபத்தில் ஓங்கி அறைந்து விட்டான் சரவணன். பேச்சுச் சத்தம் கேட்டு சுஜாதா கைக் குழந்தையோடு எழுந்து வந்தாள். அதற்குள் கல்யாணியும் வந்து விட்டாள்.

“ ஓகோ!…நீ என்னை அடிக்கும் அளவுக்குப் பெரிய மனுஷனாகி விட்டாயா?….” என்று சத்தம் போட்ட ரத்தினம் சரவணனை எட்டி உதைத்து கீழே தள்ளி விட்டு, ஓங்கி அடிக்கப் போனான்..

அதைப் பார்த்த சுஜாதா “ ஐயோ!…” என்று சத்தம் போட்டு விட்டாள். கல்யாணி ஓடிப் போய் ரத்தினத்திற்கு குறுக்கே விழுந்தாள்.

“ என் மேல் கை வைக்கும் தைரியம் அவனுக்கு எப்படி வந்தது?…பெண்டாட்டி பக்கத்தில் இருக்கும் தைரியமா?…” என்று ரத்தினம் மீண்டும் கூச்சல் போட்டான்.

கல்யாணி“ டேய்!….இந்த நேரத்தில் சத்தம் போடாதே!..அக்கம் பக்கம் இருப்பவர்கள் எல்லாம் எழுந்துவந்து விடுவார்கள்!!….” என்று கெஞ்சினாள்.

அதற்குள் கைக் குழந்தை சத்தம் போட்டு அழுதது. சுஜாதா ஒரு கையில் குழந்தையைப் பிடித்துக் கொண்டே, கீழே விழுந்த சரவணன் எழுவதற்கு உதவி செய்தாள்.

சரவணன் எழுந்து சட்டையை சரி செய்து கொண்டு நின்றான்

.“ ஏண்டா இப்படி அறிவில்லாம நடந்துக்கிறே?… அவன் வந்தும் வராததுமா அவன் மேல் ஏன் கை வச்சே?…..” என்று சரவணனைப் பார்த்து கேட்டு விட்டு, ரத்தினத்தை சமாதானப் படுத்தி அழைத்துக் கொண்டு போனாள் கல்யாணி.

சுஜாதா எதுவும் புரியாமல் சிலை போல் நின்றாள். சரவணன் அவளை மெதுவாக தன் ரூமிற்கு அழைத்துப் போனான்.

அடுத்த வாரம். நாலு தெரு தள்ளி, தனியாக ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பேசி விட்டு, ரத்தினத்தைக் கூட்டிக்கொண்டு தனியாகப் போய் விட்டாள் கல்யாணி.

அவள் வீட்டை காலி செய்வதற்கு முன்பு சரவணன் கேட்டான். “ அம்மா!….நீ செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்லே!….நான் என்னம்மா தப்பு செய்திட்டேன்…எங்களை விட்டு நீ அவன் கூட தனியாப் போறே….”

“ எல்லாம் கை மீறிப் போய் விட்டது!….நீ அடிக்கடி சொல்வாயே குடும்ப மானம் என்று…அது போகாமல் இருக்க வேண்டும் என்றால் நாங்கள் தனியாகப் போவது தான் எல்லோருக்கும் நல்லது!…நான் யாரையும் கோபித்துக் கொள்ள வில்லை….” என்று சொல்லி விட்டு, ரத்தினத்தை அழைத்துக் கொண்டு கல்யாணி விடு விடுவென்று போய் விட்டாள்.

சரவணன், சுஜாதா இருவருக்குமே கல்யாணியின் இந்த திடீர் முடிவு பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

அம்மா போன பிறகு சரவணன் பல நேரங்களில் திக்பிரமை பிடித்து பைத்தியம் போல் உடகார்ந்திருப்பான். சுஜாதா தான் கொஞ்சம் கொஞ்சமாக அவனைத் தேற்றினாள்.

அதன் பின் வாரம் ஒருமுறையாவது சரவணன் தம்பி இல்லாத நேரத்தில் அம்மாவைப் போய் பார்த்து விட்டு வந்தான். போகும் பொழுதெல்லாம் வற்புத்தி செலவுக்குப் பணம் கொடுத்து வந்தான்.

தனியாகப் போனபிறகு ரத்தினத்திற்கு இன்னும் வசதியாகப் போய் விட்டது. குடி, கூத்தி என்று இஷ்டத்திற்கு சுத்த ஆரம்பித்து விட்டான்.

அப்படியே சில மாதங்கள் ஓடி விட்டன. வெளியில் குடிப்பதோடு நிற்காமல் வீட்டிலும் குடிக்க ஆரம்பித்தான். தடுக்கப் போன கல்யாணியை மூலையில் தள்ளி விட்டு, தாய் என்று பார்க்காமல் கேவலமாகத் திட்டி விட்டுப் போய் விட்டான்.

கல்யாணி உட்கார்ந்து அழுது கொண்டிருந்த பொழுது சரவணன் வந்து விட்டான். அந்த நேரத்தில் கல்யாணியாலும் மனசைக் கட்டுப் படுத்த முடியவில்லை! அழுது கொண்டே வீட்டில் தினசரி நடப்பதைச் சொல்லி விட்டாள்.

சரவணன் கொதித்துப் போய் விட்டான். “அவனுக்கு அவ்வளவு திமிரா ?..நான் அவனை என்ன செய்கிறேன் பார்!…” என்று கோபத்தோடு எழுந்தான்.

அவன் கைகளைப் பிடித்துக் கொண்ட கல்யாணி, “ நீ கூடவா என் பேச்சைக் கேட்க மாட்டே?…” என்று கெஞ்சினாள்.

“ ஐயோ!…அம்மா உனக்கு கொஞ்சம் கூட அறிவில்லே!…நீ தான் என் பேச்சைக் கேட்பதில்லை..என் வீட்டிற்கு வா..உன்னை நான் ராணி மாதிரி பார்த்துக்கிறேன்..உனக்கு இந்த குடிகாரனிடம் இத்தனை நாளா பேச்சுத்தான் கேட்டுக் கொண்டிருந்தாய்…இப்பொழுது அடியும் பட்டு விட்டாய்!…அப்பொழுது கூட உனக்கு புத்தி வர மாட்டேன்கிறது…உனக்கு எப்பவுமே என்னை விட இந்த குடிகார மகன் தான் பெரிசாப் போச்சு!…”

“ அப்படியெல்லாம் இல்லே!…நான் சமாளிச்சுக்கிறேன்!..மனசு கேட்காமே கொட்டி விட்டேன்!…நீ நேரத்தோடு வீட்டிற்குப் போ!…அங்கு சுஜாதாவும், குழந்தையும் உனக்காக காத்திருப்பாங்க!…”

“ அவனைக் கூட திருத்தி விடலாம்!…..உன்னை திருத்துவது தான் கஷ்டம்!…” என்று கோபத்தோடு கத்தி விட்டு எழுந்து சென்றான் சரவணன்.

அவன் கோபமாகச் செல்வதைப் பார்த்து சிரித்துக் கொண்டே அழுதாள் கல்யாணி.

கோபத்தில் இரண்டு மாதங்கள் அம்மாவைப் பார்க்க சரவணன் அங்கு போக வில்லை.

அடுத்த முறை மனசு கேட்காமல் சரவணன் அம்மாவைப் பார்க்கப் போகும் பொழுது, வீடு பூட்டியிருந்தது.

அக்கம் பக்கம் விசாரித்த பொழுது, ரத்தினத்திற்கு டி.பி. நோய் வந்து பெருந்துறை சானிடோரியத்தில் சேர்த்திருப்பதாகச் சொன்னார்கள்.

தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுமல்லவா?

உடனே பெருந்துறை சானிட்டோரியத்திற்கு ஓடினான்.

அங்கு ஜெனரல் வார்டில் ஒரு மூலையில் எலும்புக் கூடாகக் கிடந்தான் ரத்தினம். அந்த கட்டிலுக்குப் பக்கத்தில் ஒரு பீத்தப் பாயில் எலும்பும் தோலுமாகப் சுருண்டு படுத்திருந்த தன் தாயைப் பார்த்த சரவணனுக்கு உண்மையிலேயே கண்களில் ரத்தம் வடிந்தது.

சரவணனின் இதயம் வெடித்து சுக்கு நூறாகி விட்டது. அது ஆண்கள் வார்டு. அங்கு பெண்களுக்கு இரவு தங்க அனுமதியில்லை. வயசான பெண்மணி என்பதால் பாத் ரூமிற்குப் பக்கத்தில் இருந்த வெட்ட வெளியில் கொசுக்கடிக்கு மத்தியில் அம்மாவை படுக்க அனுமதித்திருந்தார்கள்.

இந்த வருடம் வெயில் அதிகம் என்று போன வாரம் தான் தன் ரூமிற்கு ஸ்பிலிட் ஏ.ஸி. வாங்கிப் பொருத்தியது சரவணனுக்கு நினைவுக்கு வந்து நெஞ்சு கனத்தது!

‘ஆண்டவா!…உனக்கு கருணையே இல்லையா?…என்னைப் பெற்றவள் இப்படி கஷ்டப் படுவதை எல்லாம் என்னை பார்க்கச் செய்கிறாயே!..’ என்று ஒரு மரத்தடியில் போய் நின்று கொண்டு மனம் விட்டு அழுதான் சரவணன்.

பின்னர் மருத்துவ மனை அலுவலகத்திற்குப் போய், ரத்தினத்தை ஸ்பெஷல் வார்டுக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்து விட்டு, மாலை வரை இருந்து அம்மாவுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் வாங்கிக் கொடுத்தான். கையிருந்த பணத்தை அம்மா கைகளில் கொடுத்து விட்டு இரவு கோவை திரும்பினான்..

சரவணன் வாரம் ஒரு முறை பெருந்துறை சானிடோரியம் போய் அம்மாவையும் தம்பியையும் பார்த்து வந்தான்.

டாக்டர்களை கேட்டதில் “உங்க தம்பிக்கு டி.பி. மட்டும் இல்லை…அளவுக்கு அதிகமாகக் குடித்துக் குடித்து முக்கால் வாசி நுரையீரல் கெட்டுப் போய் விட்டது… நாங்க எங்களால் முடிந்தவரை பார்த்துக் கொள்கிறோம்!..” என்று சொல்லி விட்டார்கள்.

இரண்டே மாதத்தில் சானிடோரியத்தில் இருந்து தம்பியின் மரணச் செய்தி வந்தது. உடனே குடும்பத்தோடு புறப்பட்டுப் போனான் சரவணன். அங்கேயே தம்பியின் ஈமச் சடங்குகளை எல்லாம் முடித்து விட்டு, சோகமே உருவான அம்மாவை தன்னோடு அழைத்துக் கொண்டு திரும்பினான் சரவணன்

தாயின் உடல் நிலையும் ரொம்பக் கெட்டுப் போயிருந்தது. நல்ல ரத்தம் இல்லை..

தூக்கம் கெட்டுப் போன நிலையில் கூட இரவு பகல் பாராத கடின உழைப்பு, மன அழுத்தம் எல்லாம் சேர்ந்து, அவளை சீரழித்து விட்டன.

கோவை வந்ததும் சரவணன் முதல் வேலையாக அம்மாவை ஒரு உயர்தர மருத்துவ மனையில் கொண்டு போய் சேர்த்தான்.

அன்று மாலை. கல்லூரியிலிருந்து திரும்பியதும் அம்மாவைப் பார்க்க மருத்துவ மனைக்கு ஓடினான்.

ஸ்பெஷல் வார்டில் நல்ல மருத்துவ வசதியோடு படுத்திருந்த கல்யாணி, சரவணனைப் பார்த்ததும் சிரித்தாள்.

கட்டிலுக்கு அருகில் உட்கார்ந்து கொண்ட சரவணன், அம்மாவின் கைகளை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு தடவிக் கொடுத்தான்.

மகனின் பாசத்தைப் பார்த்து கல்யாணியின் கண்களில் மளமள வென்று கண்ணீர் வழிந்தது.

“ அம்மா!..எனக்கு உன் மேல் உள்ள கோபம் மட்டும் போகாது!…”

“ அப்படி உனக்கு நான் என்னப்பா கெடுதல் செய்து விட்டேன்?…”

“ என்ன இருந்தாலும் உனக்கு என்னை விட ரத்தினத்தின் மேல் தானே பாசம் அதிகம்?…”

கல்யாணி கலகலவென்று சிரித்தாள். “ நீ எவ்வளவு தான் படிச்சு கல்லூரியில் பேராசிரியர் உத்தியோகம் பார்த்தாலும் உனக்கு ‘அம்மா’ன்னா அர்த்தம் தெரியலையடா!….”

“நான் எத்தனை முறை வந்து என் வீட்டிற்கு வரும்படி உன்னை கூப்பிட்டேன்… உனக்கு அந்த குடிகார தம்பி தான் பெரிசாப் போச்சு…என்னை நீ மதிக்கவே இல்லே!…”

“ அசடாட்டப் பேசாதேடா நீ என்ன படிச்சு என்ன பிரயோசனம்?….எதையும் சரியாப் புரிஞ்சுக்கிற சக்தி உனக்கு இன்னும் வரலே!…உனக்கு என்ன குறைச்சல்? உனக்கு படிப்பு, பதவி, நல்ல மனைவி, அழகான குழந்தை, பண்புள்ள உறவினர், நன்றாக வாழத் தேவையான வசதி…நல்லதையே நாடும் உன் புத்தி..உனக்கு என் துணை எதுக்கடா?…நீ எங்கிருந்தாலும் எனக்குப் பெருமை சேர்த்துக் கொண்டே இருப்பாய்…உன்னைப் பற்றி நான் எதற்கு கவலைப் பட வேண்டும்?…”

“ அதற்காக திருந்தாத ஒரு குடிகாரனுக்காக நீ உன் வாழ்க்கையே நாசம் செய்து கொள்ளலாமா?…”

“டேய்!…அவன் யாரோ இல்லையடா!….நான் பத்து மாசம் சுமந்து பெற்ற பிள்ளையடா!…தாய்க்கு எல்லாப் பிள்ளையும் ஒன்று தான்!….அவன் கெட்டுப் போய் விட்டான்…என்று உலகமே அவனை ஒதுக்கி விட்டது..பெற்ற தாயான நானும் மற்றவர்களைப் போல் அவனை ஒதுக்கத் துணிந்தால் தாய்க்கே அர்த்தம் இல்லாமல் போய் விடும்!….”

“ வேண்டுமென்றே கெட்டுப் போவேன் என்று பிடிவாதம் செய்பவனை என்ன செய்வது?..”

“ நீ ஒண்ணு தெரிஞ்சுக்கோ!….நல்வன்-கெட்டவன், ஏழை-பணக்காரன், படித்தவன்-படிக்காதவன், நோயாளி-ஆரோக்கியவான் என்ற பேதம் எல்லாம் தாய்க்கு கிடையாது! அவளுக்குத் தெரிஞ்சதெல்லாம் தான் பத்து மாசம் சுமந்து பெத்த குழந்தை என்பது தான்! மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் புறக்கணிக்கலாம்!…பெற்ற தாயால் எந்த சூழ்நிலையிலும் தான் பெற்ற குழந்தையைப் புறக்கணிக்க முடியாதடா!…”

“ அதற்காக உடல் நலமே நாசமாகிற அளவுக்கு அப்படி என்னம்மா பாசம்?..”

“ அது தாண்டா அம்மா!..தான் பெற்ற பிள்ளைக்காக உயிரே போனாலும் அதற்காக கவலைப் படாதவ தான் அம்மா!..அதனால் தான் உலகம் தாயை தெய்வம் என்று இன்றும் போற்றுகிறது!…மற்ற உறவுகளைப் போல் வசதி கண்ட இடத்தில் ஒட்டிக் கொள்வதா தாய் என்ற உறவு?…உனக்கு என் மேல் நிறைய பாசம் இருக்கு..எனக்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்வே…என் வசதிக்காக நான் உன்கூட வந்து விட்டா நான் எப்படியடா அம்மா ஆவேன்?

உன்னைப் பற்றியும் தெரியும்…உன் தம்பி ரத்தினத்தைப் பற்றியும் தெரியும்…நீ பீனிக்ஸ் பறவை எதையும் சமாளித்து பறந்து விடுவாய்..உன் தம்பி இரண்டு கால்களும் உடைந்த புறா… அவனைத் தான் கவனிக்க ஆள் வேண்டும்..குறையுள்ள- ஊனமுள்ள குழந்தை மேல் தான், எல்லாத் தாயும் அதிக அக்கறை காட்டுவா…அது உலக இயற்கை..அது தப்பே இல்லையடா..ஆடுகளை பட்டியில் அடைக்கப் போகும் இடையன் மொண்டி ஆட்டை தோளில் சுமந்து போய் பட்டியில் விடுவான்.. அவன் அதை கவனிக்கா விட்டால் எங்காவது அது தெருவில் அடி பட்டுச் செத்து விடும்!.. அந்த இடையன் செயல் தப்பு என்று நீ நினைக்கிறாயா?

நல்ல கெட்டிக்காரக் குழந்தைகளை ஊரே போற்றும்!….அவர்களுக்கு தாயின் கவனிப்பு தேவையில்லே!..எந்த சூழ்நிலையிலும் அது நிமிர்ந்து நிற்கும்..உன்னையே எடுத்துக்கோ…..ஒரு வயசுக்கு மேலே என் உதவி உனக்குத் தேவையில்லே! .மோசமான குழந்தை விஷயம் அப்படி அல்ல!..உன் தம்பியையே எடுத்துக்கோ….குடிச்சுபோட்டு வேட்டி கூட இல்லாமே நடு ரோட்டிலே கிடந்தா.. உறவு எல்லா பார்த்திட்டு திட்டிட்டுத் தான் போகும்!…பெத்த தாய் தான் மேலே துணியைப் போட்டு, மற்றவங்களைக் கெஞ்சிக் கூத்தாடி வீட்டிற்கு கொண்டு வந்து சேர்ப்பா!….தாயில்லாட்டா அந்தமாதிரி ஆட்கள் அனாதைப் பிணம் மாதிரி தான்!

நீ தான் பெற்ற தங்கமடா…தங்கத்திற்கு என்றும் எங்கும் மதிப்பு இருக்கும்!…அதனால்தான் சமுதாயத்தால் ஒதுக்கப் படும் உன் தம்பிக்கு நான் ஆதரவா இருந்தேன்!..அது தப்பில்லைடா…அம்மானா நீ என்ன நினைச்சிட்டிருக்கே?….”

சரவணன் அப்படியே அம்மாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். “அம்மா!.. நான் கூட இது வரை உன்னை கொஞ்சம் தப்பாத் தான் நினைச்சிட்டிருந்தேன்… எனக்குக் கூட இப்பத் தான் அம்மா என்றால் அதற்கு அர்த்தமும், அது நாம் குடியிருந்த கோயில் என்றும் புரிந்தது. கோயிலுக்குரிய புனிதத்தைப் புரிந்து அதற்குரிய மரியாதையைக் கொடுக்காதவன் எல்லாம் மனிதனே அல்ல என்றும் புரிந்து கொண்டேன்!…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *