கீரிமலை…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 11, 2024
பார்வையிட்டோர்: 2,032 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எப்போதும் இல்லாமல் வானம் புதிதாய் தெரிந்தது. சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பமும் சுகமாய் இருந்தது. மூட்டை முடிச்சுகளை கட்டிக்கொண்டு தன் மனைவி பிச்சையம்மாளுடன் தன் குழந்தைகள் இளவரசன், தன்யாவையும் அழைத்துக்கொண்டு போர்ட்பிளேயருக்கு கிளம்பி வந்தார் ரவி.

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான அடுத்தநாளே தன் மனைவியுடன் பிழைப்புத்தேடி அந்தமான் தீவுக்கு வந்தவர்; இப்போது தான் முதல் முறையாக தனது சொந்த ஊருக்கு செல்கிறார். மனதில் தன் சொந்த ஊர் நிகழ்வுகள் நிழலாடிக்கொண்டு இருந்தன.

குடும்பத்துடன் கப்பலில் அமர்ந்தார். அலைகள் மோதி மோதி கப்பலை அசைக்கத் தொடங்கின. நினைவலைகளோ ரவியின் உள்ளத்தை நனைக்கத் தொடங்கின.

கப்பலை விட ரவியின் மனம் வேகமாகவே பயணிக்கத் தொடங்கின. சொந்த கிராமத்தை முதல் முறையாக சந்திக்கப் போவதில் இளவரசனுக்கும் அவன் தங்கை தன்யாவுக்கும் ஆவல் அதிகமாகவே இருந்தது.

“நமது கிராமம் எப்படி இருக்கும். இங்கே உள்ளது போல் மேடு பள்ளமாக இருக்குமோ; உயரமான மரங்கள்; இதே போல் ஆங்காங்கே குட்டித் தீவுகள்; செல்வதற்கு பேருந்து வசதியை விட படகுப் போக்குவரத்து தான் அதிகமோ; இங்கே இருப்பது போல் பூமி வெப்பமா இருக்குமோ; எல்லோரும் எப்படிப் பேசிக்குவாங்க; அப்பாவும் அம்மாவும் நமக்கிட்ட எதுவும் சொல்லவே இல்லையே. தாத்தாவும் பாட்டியும் தான் இருக்குறதா சொன்னாங்க. அவங்களுக்கு மாசம் மாசம் ஆயிரம் ரூபா பணம் அனுப்பி வைப்பாங்க.”

சின்னப் பிள்ளைங்களா இருக்கும் போது தாத்தா கடிதம் ேபாடுவாரு.இப்பதான் பால ேபசிக்கின்றோம். தாத்தாகிட்டயும் எதும் கேட்கலயே.

குழந்தைகள் இருவரும் தங்களுக்குள்ளேயே பேசிக்கொண்டனர்.

“அண்ணே! கப்பல் போகும்போது பெரிய மீன்கள் எதிரே நீந்தி வருமாம். அதுகளுக்கு தவிடு, பொறி எல்லாம் போடுவாங்களாமே. எங்க பிள்ளைங்க சொன்னாங்க. உண்மையா அண்ணா!”

“ம்… அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன். போகும் போது பார்ப்போம்.”

கப்பல் கடலலைகளை கிழித்தவாறு வேகமாகவே பயணத்தைத் தொடங்கியது. மேலும் கீழும் அசைந்து நடனமாடியது.

குழந்தைகள் இருவரும் சன்னலை எட்டிப் பார்த்தனர். காற்றின் வாசம் புதிதாய் இருந்தது. புதிய உலகத்துக்கு செல்வதாகவே உணர்ந்தனர்.

“அங்க என்னத்த எட்டிப்பாக்குறீங்க. வந்து உக்காருங்க” செல்லமாக கடிந்து கொண்டாள் பிச்சையம்மாள்.

“பசங்கள விடு. மகிழ்ச்சியா இருக்கட்டும். இப்பத்தானே புள்ளைக முதன்முதலா கப்பல்ல போறாங்க”.

“அது சரிங்க.. இன்னும் மூணு நாளு கப்பல்ல தான் இருக்கனும். இப்படி ஆட்டம் போட்டாங்கன்னா போற வரைக்கும் வாந்தி எடுத்துக்கிட்டே தான் இருப்பானுக. அங்க பாத்திகளா.. அந்த அம்மா இப்பவே வாயால் பாயசம் கிண்டிட்டாங்க. சுத்தம் பண்றவங்க திட்டிக்கிட்டே போறாங்க”.

“விடும்மா… சின்னப்புள்ளைக தானே”. தன் மனைவியின் கூந்தலை நீவியபடி புன்முறுவல் பூத்தார் ரவி.

குழந்தைகள் இருவரும் ஓடிவந்து பக்கத்தில் அமர்ந்துகொண்டனர்.

“அப்பா! நம்ம ஊரு எப்புடி இருக்கும். அங்க யார் யாரெல்லாம் இருக்காங்க… எப்ப ஊருக்குப் போவோம்.” ஆவலோடு கேட்ட இளவரசனை அணைத்துக்கொண்டு முத்தமிட்டார்.

“அப்பா, எனக்கும் சொல்லுங்க..”

தன் குழந்தைகள் இருவரையும் தோளில் சாய்த்துக்கொண்டு பயணம் செய்யத் தொடங்கினார் தன் கிராமத்தில்…

“ஊருக்குள்ள நுழையும் போதே கிழக்குப் பக்கம் மூன்று மலைகள், மேற்குபக்கம் ஒரு மலை இருக்கும். மூனு மலையும் குளத்துக்குள்ள இருக்கும். முதல் மலைல சின்னதா கோயில் இருக்கும். அதுனால அத சாமி மலைனு சொல்லுவோம், அடுத்த மலை பேரு குருவிமலை, கடைசியா உள்ள மலை கொக்குமலை. இந்த மூனு மலையும் வரிசையா இருக்கும். சாமி மலைல மட்டும் ஒரே ஒரு மரம் இருந்துச்சு. மத்த ரெண்டு மலைலயும் எதுவுமே இல்ல. குளத்துல தண்ணி பெருகுச்சுனா பாக்க அவ்ளோ அழகா இருக்கும்..

“அப்டினா மேற்கே ஒரு மலை இருக்கே. அது நல்லா இருக்காதா”ஆவலோடு கேட்டான் இளவரசன்.

“இருக்குறதுலேயே அந்த மலை தான் ரொம்ப அழகா இருக்கும். சுத்திலும் வயல்வெளி, மலைல நிறைய மரம் இருக்கும். பக்கத்துல பனைமரம் அதிகமாவே இருக்கும். மலைல உசுலமரம் தான் நெறைய வளர்ந்து இருந்துச்சு. அந்த மலைல கீரி கூட்டம் கூட்டமா வாழும். அதுனால அத கீரிமலைனு சொல்லுவோம்..”

“அப்பறம்..” வினவினாள் தன்யா…

“மாடுகள ஓட்டிக்கிட்டுப் போயி அங்க விட்டுட்டு நாங்க எல்லாரும் அதுல தான் விளையாடுவோம். மலை ஓரத்துல பாத்தா நிறைய சப்பாத்திகள்ளி செடி இருக்கும். எங்களுக்கு பல நேரங்கள்ல மதிய சாப்பாடே சப்பாத்திகள்ளி பழமும்,நுங்கும் தான்”.

“அப்பா, அந்த கீரிக உங்கள கட்டிச்சிடாதா”, வியப்புடன் கேட்டாள் தன்யா.

“இல்லம்மா, அதுக ராத்திரில தான் வெளிய வரும். பகல்ல நாங்க விளையாடுறதால அத்தனையும் மலை இருக்குற பொந்துக்குள்ள அடஞ்சுக்கும்”.

“கீரி மட்டும் தான் இருக்குமா.” கேட்டான் இளவரசன்.

“ம்… முயலும் இருக்கு. இருங்க போனவுடனே உங்களுக்கு புடிச்சுத் தாரேன். தன் பங்குக்கு சொல்லி முடித்தாள் பிச்சையம்மாள்.

“அப்பா முயலும் இருக்கா…” ஆசையோடு கேட்டாள் தன்யா.

“ம்… நிறையவே இருக்கு. ஆனா ஆனா பகல்ல பாக்க முடியாது. நாங்க முயல பாக்குறதுக்காக நிலா வெளிச்சம் இருக்கும் போது பசங்களோட அங்க போயி வரப்புகளில மறஞ்சுக்குவோம். முயல், வயல்வெளில மேய வரும் போது பாப்போம்.”

“வேற எனங்கப்பா இருக்கு” தன் முகத்தில் கை வைத்தபடி கேட்டாள் தன்யா.

ஊருக்குப் பக்கத்துலேயே கோயில் கரைனு சின்னதா காடு இருக்கு. அதுக்குள்ள குதிரைசாமி இருக்கு. அதுல பனைமரங்களும் பாஞ்சாம் பழ செடிகளும் தான் அதிகமா இருக்கும்.

“பாஞ்சாம் பழம்னா என்னப்பா” வியப்புடன் கேட்டான் இளவரசன்.

“ஆனான் பழம் மாறியே இருக்கும். சிவப்பு நிறத்துல கொத்துக்கொத்தா பழுத்து தொங்கும். எங்கஊர் திராட்சைப் பழம்னு சொல்லுவோம். அந்தப் பழங்களுக்காகவே குரங்குகள் அதிகமா வாழுது”.

“குரங்கும் இருக்கா… உடனே பாக்கனும் போல இருக்குப்பா” மடியில் படுத்துக்கொண்டு கேட்டாள் தன்யா.

“ம்… அது மட்டும் இல்ல. அந்தக் காட்டுக்குப் பக்கத்துலேயே வெள்ளாறு குண்டாறுனு ரெண்டு ஆறு ஓடுது. மழைக்காலத்தில் அங்கதான் குளிப்போம்”. ஆற்றில் குளிக்க தன் குழந்தைளுக்கு ஆசையாக இருக்கு என்பதை அவர்களது கண்களை வைத்தே கண்டுபிடித்தார் ரவி.

தனது கிராமத்து நினைவுகள் ஒவ்வொரு நாளும் இப்படியே கழிந்தது. அதனால் பயணம் இனிதானது. மூன்று நாளும் மூன்று நொடி போல் இருந்தது.

சென்னை துறைமுகம் இனிதாய் வரவேற்றது. பேரம் பேசாமல் ஆட்டோவில் ஏறி கோயம்பேடு வந்தவர்களுக்கு புதுக்கோட்டை பேருந்து தயாராக இருந்தது.

இரவுப் பயணம் என்றாலும் பேருந்தில் யாருக்குமே தூக்கம் வரவில்லை. கிராமத்து பசுமை நினைவுகள் எதிரே வட்டமிட்டபடி இருந்தது.

அதிகாலை வந்திறங்கியவர்கள் கிராமத்திற்கு ஆட்டோவில் பயணமானார்கள்.

பொழுது நன்றாகவே விடியத் தொடங்கியிருந்தது. நெறிவயல் கிராமம் வரவேற்க தயாராக இருந்தது. ஊருக்கு வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தவர்களை சாமிமலை வரவேற்றது.

“அப்பா நீங்க சொன்ன மலை வந்துருச்சு’

“ஐ… வரிசையா மூனு மலை”

குழந்தைகள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாலும் அது நீடிக்கவில்லை.

மேற்கே திரும்பி பார்த்தால் கிரேன் இயந்திரங்கள் இரண்டு கம்பீரமாய் நின்றிருந்தன.

“அப்பா…கீரிமலை ஏக்கத்துடன் கேட்ட தன்யாவுக்கு பதில் சொல்ல முடியாமல் தவித்தார்.

கீரிமலை அழிக்கப்பட்டு குவாரியாகி இருந்தது. அருகில் இருந்த வயல்வெளிகளில் கிரானைட் கற்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. கீரிமலை இருந்ததற்கான தடயமே இல்லை….

எவ்வளவு பெரிய மலை கொள்ளையடிக்கப் பட்டுவிட்டதே சாமிமலை தப்பிவிடும். குருவிமலை கொக்கு மலையின் கதியும் இப்படி ஆகிவிடுமோ… மனசுக்குள் புலம்பலானார்.

குழந்தைகள் இருவரும் அப்பாவின் கைகளை இறுகப் பிடித்துக்கொண்டு தங்களது ஏமாற்றத்தை வெளிப்படுத்தினர். வாயடைத்துப் போய் நின்றாள் பிச்சையம்மாள்.

அப்போது எதிரே பத்துப் பதினைந்து லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு ஆற்றிலிருந்து வந்து கொண்டு இருந்தன.

ஈரம் மிகுந்த மணலில் இருந்து கண்ணீராக தண்ணீர் வழிந்து கொண்டு இருந்தது. இவை ஆறுகளும் சுரண்டப்பட்டு விட்டதையேக் காண்பித்தன.

வயல்வெளிகளில் நுங்கு காய்த்த பனைமரங்கள் செங்கல் சூளைக்கு துண்டாடப்பட்டு கொண்டு இருந்தன.

எஞ்சிய இயற்கையையாவது வருங்கால குழந்தைகள் முழுமையாக அனுபவிக்கட்டும் என்ற நினைப்பில் மக்களை திரட்டி தன் கிராமத்த மீட்டெடுக்க நிரந்தரமாக கிராமத்தில் தங்க முடிவெடுத்து ஊருக்குள் நுழைந்தார் ரவி.

அப்போது அந்தக் காலை வேளையில் வானம் கார்மேகத்தை அணைத்துக் கொண்டு இருந்தது. எங்கோ மயில் அகவும் சத்தமும் கேட்டது.

ரவியின் மனசுக்குள் தானாய் அடைமழை பெய்யத் தொடங்கியது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *