கிரஹப்பிரவேச காபி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 14, 2021
பார்வையிட்டோர்: 4,913 
 
 

நகராட்சி எல்லைக்கு அடுத்துள்ள ஊராட்சி ஒன்றியத்தின் ஆளுகைக்கு உட்பட்ட புறநகர் பகுதி அது. ஆட்டோகாரரிடம் வழி சொல்லி போக வேண்டிய ஓம் சக்தி நகரில் தான் கிரஹப்பிரவேசம்.

குடியிருந்த வீட்டை வாங்கி செப்பனிட்டமையால் அது சஷ்ட்டகர் மகளுக்கு புது வீடு. அவளின் தாய் வழி உறவுகள், தந்தை வழி உறவுகள், தந்தையின் மூன்று சம்பந்தி உறவுகள், இரு வேறு துறையைச் சேர்ந்த கணவன் மனைவியின் சக கொலீக்கள், மேலாளும் உயர் பதவியினர்கள், பழைய வீட்டு அக்கம் பக்கத்து நண்பர்கள், புதிய வீட்டின் அருகில் நட்புக் கொள்ள இருக்கிறவர்கள் என்று மிதமாக பிரவேசிக்கும் விருந்தினர்கள் கூட்டம்.

எடுப்பான, மிடுக்கான, கர்வம், ஆணவம், அடங்காமை, அடங்கும் தோற்றங்களை உடைய பல்வேறு முகங்கள். பணக்கார பந்தாக்களுடனும், ஏழ்மையின் தோழமையுடனும், என்றும் ஒரே நிலையில் இருக்கும் எளிமையுடனும் வரும் அனைத்து முகங்களிலும் ஒரே மாதிரியான புன்னகை, மகிழ்ச்சியை தெரிவிக்கும் அர்த்தமுள்ள புன்னகை.

புன்னகையின் போர்வைக்குள் அன்பு, பாசம், ஆற்றாமை, பொறாமை, எரிச்சல், பேராசை, பெருமிதம், போன்ற பண்புகளை தனித்தோ ஒருங்கிணைத்தோ ஒளித்து வைத்திருக்கும் விருந்தினர்களின் உணர்ச்சி பாவங்களை வாசலில் தொங்க விடப்பட்டிருந்த திருஷ்டி பூசணிக்காய் கிரகித்துக் கொண்டிருந்தது.

தொன்னூறு கிலோ மீட்டர் தூரம் பயணித்து எனது குடும்பத்தினர்களுடன் சென்றேன். காரில் சென்றிருந்தாலும் கார் காலமும், சரியில்லாத ரோடும் உடலுக்கு அலுப்பை ஏற்படுத்தியது.

காரை அடைத்துக் கொள்ளும் வகையில் கிஃப்ட் பாக்ஸ் இல்லாமல், கைக்கு அடக்கமான, விரலுக்கு பொருந்தக்

கூடிய. கோல்டு கிஃப்டுடன் வீட்டை அடைந்த போது விடிவெள்ளி மறைந்து ஆதவன் கண் விழிக்கும் விடியும் வேளையாய் இருந்தது.

இறங்கியதும் சூடான திடமான பில்டர் காபி குடித்ததும் இன்னும் ஒரு கப் காபி குடிக்க நாக்கு ஜொல்லு விட, மனம் அடங்கு என்று அறிவுறுத்த நாகரீக பவிசுடன் கிரஹபிரவேசம் செய்தேன்.

விநாயகர் பூஜை, நவக்கிரஹ ஹொமம், தன்வந்திரி ஹோமம், ஆயுஷ் ஹோமம் செய்து அப்போது தான் பூர்ணாஹூதி ஆயிற்று. கன்னத்தில் போட்டுக் கொண்டோம்.

சரியாக தூக்காத கண்களை ஹோம குண்டத்தின் அக்னி புகை மேலும் வறுத்தெடுத்தது. வரவையும் செலவையும் அதாவது எங்களின் வரவையும், நாங்கள் செய்த சீர் செலவையும் போட்டோ கேமராவும் வீடியோ கேமராவும் பதிவு செய்ய சிரிக்காமல் புன்னகைத்தேன்.

மகளும் மருமகனும் தம் மகள் மகனுடன் சாஷ்ட்டாங்க மாக நமஸ்கரித்த போது, சித்தியும் சித்தப்பாவுமான நாங்கள், அந்நால்வருக்கும் திருநீறு பூசி, அட்சதைப் போட்டு ஆசி வழங்கினோம்.

வீட்டை ஒருமுறை பார்த்து, டிபன் சாப்பிட்டு, ஆகாயத்தை மறைத்து நின்ற ஷாமினா டெண்ட் சேரில் உட்கார்ந்து விட்டேன்.

நேரமாக ஆக ஆர்டரின் பேரில் தருவிக்கப்பட்ட காலை சிற்றுண்டியும், அழைப்பின் பேரில் வரவழைக்கப் பட்ட விருந்தினர் கூட்டமும் குறைந்து கொண்டிருந்தது.

வந்தோமா, வீட்டைச்சுற்றி பார்த்தோமா, மொய்கவர் கொடுத்தோமா, நாஸ்தா சாப்பிட்டோமா, தாம்பூல பையை எடுத்துக் கொண்டு விடை பெற்றோமா என்று இல்லாமல் மதியமும் இருந்து விருந்து சாப்பிட்டு செல்லக்கூடிய ஒரு சில கட்டாய விருந்தினர்கள் பட்டியலில் நான் இடம் பெற்றமையால் தங்க வேண்டிய நிர்பந்தம். தங்கினேன்.

ஆண்களும் பெண்களுமாய், பெண்களும் ஆண்களுமாய் சேர்ந்து ஒருவருக்கு ஒருவர் நலன் விசாரித்து கலாய்த்துக் கொண்டு, கிண்டல் அடித்துக் கொண்டு கடந்த காலத்திய இனிய சம்பவங்களை நினைவு கூர்ந்து சிரித்து பேசி மகிழ்ச்சி கொள்ளும் உறவினர்கள் குழுவில் நானும் இணைந்தேன்.

கலகலப்பு குறைந்து தனிமையில் உட்கார்ந்திருந்த பொழுது தூக்கம் கண்ணை கட்டியது. வந்ததும் குடித்த அந்த பிரத்யேக பில்டர் காபியை குடிக்க நாக்கு நச்சரித்தது. எதிர்ப்பார்ப்பு இன்றி சுயசேவையில் இறங்கிய போது ஆர்வம் ஏமாற்றம் கண்டது. பிளாஸ்க்கில் காபி இருக்கு அருகில் கப் இல்லை.

ஏமாந்ததை காட்டிக் கொள்ளாமல் அசட்டு சிரிப்புடன் மூன்றாவது சகலர் அருகில் காலியாய் இருந்த சேரில் உட்கார்ந்தேன்.

நானும் காபி குடிக்கலாம் என்றிருந்தேன், டம்ளர் ஒன்றுகூட இல்லை தம்பி, என்றார் அங்கலாய்ப்புடன். என்னுடைய உணர்வும் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து பேப்பர் கப் வாங்கி வர. பையன் போயிருக்கான் …தோ வந்திடுவான் என்றார்கள், யாரு போயிருக்கா.,? எங்க போயிருக்காங்கன்னு ஒன்னும் புரியலை., ரொம்ப தூரம் வேற போகவேண்டியதிருக்கும் போல. பக்கத்தில வேற காபி கிளப் ஏதும் இருக்குறாற் போலத் தெரியலை, இருந்தால் காசை பார்க்காமல் போய் ஒரு மிடறு குடித்து விட்டு வரலாம் என்றார்.

என்னை விட அவருக்கு காபி தாகம் அதிகம் போல. . வாங்கண்ண அப்படியே நடந்து போய் பார்த்திட்டு வரலாம் என்று சொன்னதும் ஆமோதித்தார். இருவரும் நடந்தோம். காபி இல்லன்னாலும் தூக்கமாவது கலையும்.

இரண்டு மூன்று தெருக்களை கடந்து சென்றும் காபி கடை கண்ணில் தெரியாததால் ஏமாற்றத்துடன் திரும்பினோம். காபி பிளாஸ்கை மீண்டும் ஒரு முறை ஏக்கத்துடன் பார்த்த போது நம்பிக்கை ஒளி ஏற்பட்டது. காபி கப் ரோல் இருந்தது. விரைந்து அருகில் சென்று கப்புடன் பிளாஸ்க்கின் டேப்பை திருகிய போது வெறும் காற்று வந்தது. காபி வரவில்லை.

ஏமாற்றத்தை தவிர்க்க இருவரும், ஆளுக்கொரு மினி மினரல் வாட்டர் பாட்டில் கேட்டு வாங்கி காபி தாகத்தை தணித்துக் கொண்டோம்.

பெரிய சகலர் தலைமையில் விவாத மேடை ஆரம்பமாயிருந்தது. இவரது மூத்தமகள் தான் வீடு வாங்கி கிரஹப்பிரவேசம் நடத்துகிறாள்.

பெரிய சகலர் சற்று வித்தியாசமானவர். எங்கேயும் எப்போதும் அவரது பேச்சு தான் எடுபட வேண்டும் என்று உரக்கப் பேசுவார். அது பரவாயில்லை, பலர் இருக்கும் மத்தியில் பெண்கள் இருப்பதையும் சட்டை செய்யாமல் கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பார், எரிச்சல் வந்தால் அதனாலேயே சாடுவார். எனக்கு அவர் மீது அவ்வளவாக ஈடுபாடு கிடையாது. இந்த கெட்ட சுபாவத்தால் மட்டுமல்ல அதற்கு வேறு காரணங்களும் உண்டு.

என் கல்யாணத்தின் போது தலை வாருவதற்கு, மாப்பிள்ளையான என் சீப்பை எடுத்தார். அதனை கவனித்த கொழுந்தியாள் அது மாப்பிள்ளை சீப்பு . . அதை ஏன் தொடுரீங்க என்று கேட்டு கணவரை கண்டித்த போது, பதிலுக்கு அவர் சட்டென்று ஏன்., இந்த சீப்புல அவரு ‘மசுறு’ தான் படியும், என் ‘மசிறு’ படியாதா என்று கேட்டு அதனைப் பயன் படுத்திக் கொண்டார்.

கல்யாணம் ஆகி இருபது வருஷங்கள் கடந்த போதிலும் இன்றளவும் என்னால் ‘அதை’ சமாதானமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஃப்ர்ஸ்ட் இம்ப்ரஷன் பேட் இம்ப்ரஷனாக இருந்தால் கடைசி வரையில் அது பேட் ஆகத்தானிருக்கும்.

மற்ற விசேஷங்களிலும், மற்ற சந்தர்ப்பங்களிலும் சந்திக்கிற போது, நான் அவரின் நலம் விசாரிப்பதோடு சரி. மற்ற விவகாரங்களில் நானாக எதுவும் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. இருப்பினும், வீட்டுக்கு பெரிய மாப்பிள்ளை, உள்ளூர் முக்கியஸ்தர் என்ற வகையில் அவரின் அறுபதாம் கல்யாண மணிவிழாவில் நான் என் சொந்த கவிநடையில் பிரமாதமாய் வாழ்த்துப்பா ஒன்று எழுதி பரிசளித்தேன்.

அவரைத் தவிர ஏனைய மற்ற உறவினர்கள் அனைவரும் எனக்கு பாராட்டு தெரிவித்தனர். பட்டயத்துக்குச் சொந்தக்காரர் அவர் மட்டும் அன்றும் இன்றும் என்றும் ஒரு வார்த்தை சொன்னதில்லை. அந்த ஆதங்கம் இன்று வரையில் மனதில் குடிக்கொண்டிருக்கிறது. எப்படி பரஸ்பர சுமூகம் ஏற்படும்.?

மாமன், மச்சான், சகலர், கொழுந்தியாள், மச்சினிச்சி, இவர்களுக்கான பிள்ளைகள் என்று உறவின் சந்தோஷ பரிமாற்றங்கள் இரண்டாம் சுற்று ஆரம்பமாகியது.

சம்பாஷனைகளின் ஊடே பெரிய சகலர், காபிதான் காலியாயிடுச்சே அந்த காபி பிளாஸ்கை ஏற கட்ட வேண்டியது தானே.. ஏன் இன்னமும் அங்கேயே இருக்கு.,? எத்தனை பேர் பார்த்து பார்த்து ஏமாந்து போகிறார்கள் என்றார்.

அவர் பொதுப்படையாக சொன்னாலும் நான் ஏமாந்து போனதை குத்திக்காட்டி, வருத்துவதாக எனக்குப் பட்டது.

அதற்கு பெரிய மச்சான், ஏன்ன்டா வழக்கத்துக்கு மாறா இன்னிக்கு காலையிலேயே சாப்பிட்டாச்சு., சாப்பாடு வர லேட்டாகும் போலிருக்கு, எல்லோருக்கும் காபி வரவழைத்து தராமல் ஏற கட்டச் சொல்றே என்று கேட்டார்.

பெரிய மச்சானும், பெரிய சகலரும் நண்பர்களாய் வளர்ந்து மாமன் மச்சான் உறவு கொண்டவர்கள். கிட்டத் தட்ட உள்ளூர் லவ் மேரேஜ்.

சோத்த திங்கிற நேரத்துல போய் ‘எவனாவது’ காபி குடிப்பானாடா, அப்படி காபிய குடிச்சா, யாரும் சரியா சாப்பிட மாட்டாங்க, அதுக்காக சொன்னேன் என்றார். அது அகங்காரத்தயும், ஆணவத்தையும் காட்டியது.

சரியா சாப்பிடாமல், சாப்பாடு மீந்துடுச்சுன்னா ரிட்டேர்ன் கிஃப்டாக சாம்பார் சாதம் தயிர் சாதமாக பொட்டலம் போட்டு கொடுத்துபுடலாம் என்றார் சின்ன சகலர். காபி இருந்தால் நான் குடிப்பேன் என்று சொல்லாமல் சொன்னார்.

சின்ன சகலரிடம் சகஜமா பேசுவேன். அவரும் தம்பி . . தம்பி என்று வார்த்தைக்கு வார்த்தை தம்பி சொல்லி அன்பாக பழகுவார். தமாஷாகவும் பேசுவார்.

ஆழாக்கு அளவுக்கு காபி குடிக்கிறதால பசி எடுக்காம போகாது, நீ காபியை வரவழைச்சு குட்றா, என்றார் பெரிய மச்சான். கேட்கும் தோரணை காபி குடிக்கும் விருப்பத்தை வெளிச்சம் போட்டு காட்டியது.

அட ஏங்கத்தான் நீங்க ஒண்ணு., அவரோட பொண்ணு மாப்பிள்ளைக்கு செலவு ஆயிரக்கூடாதுன்னு சொல்றாற் போல., அது புரியாம பேசறீங்க., அப்படி தானேண்ணே., என்றார் சின்ன சகலர்.

நீங்களெல்லாம் நேத்திக்கே வருவீங்கன்னு எதிர்ப்பார்த்தோம். யாரும் சரியா வராததால ஏகப்பட்ட டிபன் மீந்து கெடக்குது. அதுக்கெல்லாம் என்ன பண்ணிக்கிறது.,? ஆவுற செலவு ஆயிட்டுத்தானே இருக்கு, எது நிக்கிது. பெரிய சகலர் ஆதங்கத்துடன் பேசினார்..

நீ ஏன் அவங்ககிட்ட போய் கோவமா பேசுறே, வந்த இடத்தில சிடுமூஞ்சியை காட்டாம, விடியற்காலையில் குடிச்ச மாதிரி நல்ல பில்டர் காபியா வாங்கி வரச் சொல்லு வற்புறுத்தி சொன்னார் பெரிய மச்சான்.

அசிங்க மான வார்த்தை சொல்லி, உனக்கு காபி குடிக்கனும் போல இருக்காடா. . அதான் காபி. . காபி..ன்னு அடிச்சுக்கிறே. . வந்த இடத்தில. ஏன்டா இப்படி அலையிற. . என்றார் பெரிய சகலர்.

கேனைத்தனமா பேசாதே, புது வீட்ல வந்து தங்க முடியாது. குடி இருக்கிற வீடும், தங்க கொள்ள இடம் போதாது, விடிய விடிய வந்தாலும் அவங்க அவங்க வீட்டில ரெடியாயிட்டு வர்றததான் நினைப்பாங்க, ராத்திரி டிபன் மீந்துடுச்சின்னு நீ புலம்புனா யாரு என்ன செய்ய முடியும்.

இதனால் கடுப்பான பெரிய சகலர் ‘அந்த’ கெட்ட வார்த்தையால திட்டிவிட்டு, நீ தான் பேப்பர் படிக்கிறீயே. . நீ பாட்டுக்கும் படிக்க வேண்டியது தானே. . பெருசா கருத்துச் சொல்ல வந்துட்டே.. என்றார் பெரியவர்.

எல்லாருக்கும் இல்லேன்னாலும் எனக்கு மட்டுமாவது காபி வாங்கிக் கொடு. எனக்கு வேணும் என்றார் பெரிய மச்சான். மாமன் மச்சான் உறவு காபியை விட ஸ்ட்ராங்க் இல்லையா., அதனால் உரிமையா கேட்டார்.

போடா, நேரே உள்ளப் போய் ஒன் தங்கச்சி கிட்ட பால் ஏதாவது இருக்கா. . காபி கிடைக்குமான்னு கேட்டு வாங்கிக் குடி, போ. .

ஏன் என் தங்கச்சிகிட்ட போய் கேட்கனும். உம் பொண்ணு வீடுதானே நீ கேட்டு வாங்கித் தாடா..

நான் வேற. . யேன் வூட்டுக்காரி வேறையா. . எனக்கு என் பொண்ணு வீடுன்னா உனக்கு தங்கச்சி பொண்ணு வீடு தானே., மாமாவுக்கு காபி ஒண்ணு கொடும்மான்னு கேட்டு வாங்கிக் குடி. இங்க இருக்கிறவங்க யாரும் உன் கிட்ட பங்கு கேட்க மாட்டாங்க.

அப்படி சொல்லாதீங்க அண்ணா நான் கேட்டால் தங்கச்சி வீட்டுக்காரருக்கு, மச்சான் கொடுத்து தான் ஆகனும் . . எனக்கெல்லாம் காபி குடிக்கத் தோனாதா.,? என்றார் சின்ன சகலர்.

சிரித்தப் படியே போச்சுடா அதுக்கும் கிராக்கி வந்துடுச்சா. . மச்சான் காபி குடிச்சாற் போலத்தான் என்றார் இரண்டாவது சகலர். இவர் யதார்த்த வாதி. பெரிசா இவரைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

யே. ன். . மாமா உங்களுக்கு காபி வேணுமா.,? சொல்லுங்க ஆளுக்குப் பாதியா குடிச்சுக்கலாம் என்றார் மச்சான்.

காபி குடிக்கலாம்ன்னு தான் நான் என் மவனை அழைச்சுகிட்டு டவுனுக்குள்ள போய் காபி கப் வாங்கி வந்தேன். கப் வாங்கி வந்த நேரத்தில பாப்பா ஆபிஸிலிருந்து அதிகாரிங்க வந்ததால, இருந்த காபியை கொடுத்து காலி பண்ணியாச்சு. . பேப்பர் கப் ல காசு போட்டதற்கு பேசாமல் காபி குடிச்சுட்டு வந்திருக்கலாம். கைக்காசு போனதற்கு விசனப்பட்டு பேசினார் இரண்டாவது சகலர்.

அட. . பாவமே. . சின்ன சகலர் பரிதாபத்துடன் சிரித்தார்.

காபி மட்டும் இப்ப கிடைச்சுதுன்னா மச்சான் தயவுல கொஞ்சம் காபி குடிச்சாற் போல இருக்கும் என்றார் இரண்டாமவர்.

கொஞ்சம் என்ன மாமா., உங்களுக்கென்னா, நான் பூரா காபியையும் கொடுத்துடுறேன் என்றார். பெரிய மச்சானுக்கு எப்போதுமே இரண்டாவது தங்கச்சி வீட்டுக்காரர் மீது தனி அக்கறையும் பாசமும் உண்டு. முதல் வெளியூர் மாப்பிள்ளைன்னு இருக்கலாம்.

ய்யேய் முண்டக் கூ. . . கெட்ட வார்த்தை பேசி. மொதல்ல பாலு இருக்கான்னு விசாரி. அப்புறமா பூரா காபியை தான் கொடு, இல்ல உன் பூரா சொத்தையும் தான் கொடேன் யாரு. . வேணாமுங்கிறாங்க என்றார் எரிச்சலுடன்.

அப்படியாவது மச்சான் சொத்துல உங்களுக்கு கொஞ்சம் கிடைக்குமுன்னு பார்க்கிறீங்களாண்ணா. . சின்ன சகலர் சிரித்தப்படியே கேட்டார்.

பொண்ணுங்களுக்கும் சொத்தில் பங்கு உண்டு என்ற அர்த்ததில் எனக்கு மட்டுமா சேருது என் மூலமா நாலு பேருக்கும் சேர்த்து தானே சொத்து கிடைக்குது என்றார்.

ய்யேன் . . கொடுத்ததெல்லாம் போதாதுன்னு இன்னும் வேற கொடுக்கனுமா.,? சொச்ச மிச்சம் இருக்கிறதை கொடுத்துட்டு நான் தெருவுல தான் நிக்கனும்.

ஐய்யைய்யோ. . ஒரு காபிக்காக சொத்தை பிரிக்கிற வயிற்றெரிச்சல் என்னால வர வேண்டாமடா சாமி. அண்ணன் சொன்ன மாதிரி மொதல்ல பால் இருக்கான்னு நான் விசாரிக்கிறேன் என்று இருக்கையிலிருந்து எழுந்தார் இரண்டாமவர்.

அப்போது காபி மணத்துடன் ஆவி பறக்க காபியை ஆற்றியபடி வெளியே வந்தார் மச்சானின் பெரிய தங்கச்சி.

அங்க பாருங்க பாசமலரை, அண்ணனுக்காக தங்கச்சியே காபி போட்டு எடுத்திட்டு வராங்க, அண்ணன் தங்கச்சி பாசமுன்னா இப்படித்தான் இருக்கனும் என்றேன் நான்.

காபியுடன் வந்த மைத்துனரின் பெரிய தங்கச்சி ஒன்றும் புரியாமல் அர்த்தப்புஷ்டியுடன் விழித்தார்.

நல்ல வேளை நீயாவது கரிசனத்துடன் காபி கொண்டு வந்தாயே, நீ நூறு வருஷம் நல்லா இருக்கனும் இப்படி கொடு பாப்பா என்று கைநீட்டிக் கேட்டார் பெரிய மச்சான்.

அட. . சும்மா கெடண்ணா நீ வேற. . சின்னது ( சின்ன மகள்) பிரதோஷம் விருதமின்னு காலையிலிருந்து பச்சத்தண்ணி பல்லுல படாம பட்டினி கெடக்கிறாள், காபியாவது குடிக்கட்டுமின்னு ஆத்திகிட்டு வர்றேன், நீ வந்து பிடுங்கிறே. .

இதைக் கேட்டதும் அனைவரும் சிரித்து விட்டனர். சிரிப்பு சத்தத்திற்கிடையே நான், அப்படின்னா இது பாசமலர் இல்லையா பத்து மாத பந்தமா என்றேன்.

பாசம், பந்தமின்னு நீங்க என்ன சொல்றீங்க. எனக்கு ஒன்னும் விளங்கல. .

உனக்கு ஒரு எழவும் புரிய வேண்டாம். காபியை ஏன்டீ இங்க கொண்டு வந்தே . . உள்ள கூப்பிட்டு குடிக்கச் சொல்றது தானே. . என்றார் பெரிய சகலர்.

நீங்க என்ன தான் காரியம் பாக்குறீங்க. . உள்ள கரண்டு போயிடுச்சு. . ஒரே அவியலா அவியுது, இவள தேடிட்டு வெளியே வந்து பார்த்தா. . ஆளாளுக்கு கூத்துக் கட்டுறீங்க. என்ன.,? காலையில பொங்கல் சாப்பிட்டது மப்பு தட்டுதா.?

அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா, அரை மணி நேரமா காபியை பற்றிதான் இங்க டிராமா ஓடுது. அதற்கேற்றாற் போல நீயும் காபியோடு வந்தியா., டிராமா கலைக்கட்டுது. சிரிப்பு குறையாமல் பேசினாள் சின்னவள். காபிக்குச் சொந்தக்காரி.

நான் உள்ளே ஒரு இடம் விடாம உன்னை தேடிகிட்டு இருக்கேன். . நீ இங்க உட்கார்ந்து வாய் பார்த்துகிட்டு இருக்கே. இந்தா இதைக் குடி.

உம் பேத்தி என்ன பன்றா. . ன்னு பார்க்க வெளியே வந்தேன். சித்தி, சித்தப்பா மாமாவெல்லாம் பேசிகிட்டு இருந்தாங்களா. . அப்படியே நானும் உட்கார்ந்துட்டேன். நீயும் உட்காரேன் பசியே எடுக்காது.

இன்னும் ஏன் முழிக்கிறே, சின்னதுகிட்ட காபியை கொடுத்துட்டு, போய் உன் அண்ணனுக்கு ஒரு காபி எடுத்து வந்து கொடு என்றார் பெரிய சகலர்.

என்ன ஒண்ணும் புரியாம தடுமாறீங்களா.! நானே பாலும் இல்லாமல் காபியும் இல்லாமல் என்ன பண்ணலாமுன்னு யோசிச்சு, கடைசியில சாமிக்கு நிவேத்தியம் வச்ச கொஞ்சம் பாலில் காபி போட்டு கொண்டுவாறேன். காபியெல்லாம் போட பால் இல்லை.

அம்மா. . எனக்கு பசிக்கலை நீ இந்த காபியை மாமாவுக்கு கொடுத்துடும்மா, மாமா பாவம் என்றாள் சின்னது.

பரவாயில்ல பாப்பா, எனக்கு காபி வேண்டாம். நீ குடி என்றார் பெரிய மச்சான்.

அப்போது, வெளியில் கோயிலுக்கு எங்கேயோ போயிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர் சின்ன மச்சானும் அவனது மனைவியும்.

தன் அக்காள் காபியை வைத்துக் கொண்டு நிற்பதும், அண்ணன் காபி வேண்டாம், என்று மறுப்பதும், யாருக்கும் தேவை இல்லாமல் ஒரு காபி வீணாக தவிக்கிறது என்ற நினைப்பில், அவசரமாக விரைந்து வந்து, அண்ணனுக்கு வேண்டாமின்னா காபியை இங்க கொடுக்கா. . இவ வயிறு சரியில்லாமல் காலையில சரியா சாப்பிடலை இவ குடிக்கட்டும் என்று சொல்லியபடி காபியை கை நீட்டிக் கேட்டான்.

இதை கேட்ட அனைவரும் கொல் என்று சிரித்து விட்டோம். சிரிப்பு மழை குறைய கொஞ்சம் நேரம் பிடித்தது.

அப்பா. . ஒரு காபிக்கு அண்ணனும் தம்பியும் ஆளாய் பறக்கிறார்கள். . சொல்லிவிட்டு சின்ன சகலர் சத்தம் போட்டு சிரித்தார்.

எங்கள் அனைவரின் சிரிப்பால் சின்ன மச்சானுக்கு அவமானமாகி விட்டது. இதை காண சகிக்காத சின்னது தன் தாயிடமிருந்து காபியை வாங்கி சின்ன மாமியிடம் வலுக்கட்டாயமாக கொடுத்து குடிக்கச் செய்து பிரதோஷ உபவாசத்தை தொடர்ந்தாள்.

நிலைமையை ஒரு வாறு யூகித்த பெரிய கொழுந்தியாள், தன் கணவரிடம், ஏங்க சாப்பாடு வர நாழியாகுமின்னா காபியை வரவழைச்சு எல்லோரும் ஒன்னா குடிக்கலாமுல்ல என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

கடைசியில், மதியம் சாப்பாடு வருகிற வரையில் காபி வரவில்லை. சாப்பாடு எண்ணிக்கையில் குறைத்து ஆர்டர் கொடுத்தார்களோ அல்லது காபி குடிக்காமல் காத்திருந்த விருந்தினர்கள், பெரிய சகலர் சொன்னது போல கோர பசி கொண்டு சாப்பிட்டார்களோ என்னவோ தெரியலை, சாப்பாடு பற்றாக்குறையாக இருந்தது.

வெவ்வேறு ஊர்களில் இருக்கும் சொந்தங்களை சந்திக்கவும், சம்பாஷிக்கவும் உண்டான தருணங்களில் ஒன்றாக இந்த புதுமனைப் புகுவிழா அமைந்ததில் ஒரு மகிழ்ச்சி.

நன்றி பெருக்குடன் பிரியா விடை கொடுத்து அனுப்பி வைத்தனர் மகளும் மாப்பிள்ளையும்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *