கிணற்றுத் தவளைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 31, 2020
பார்வையிட்டோர்: 6,147 
 

காலைப்பொழுது விடிய இரண்டு நாழிகை இருக்கும்போது லாந்தாரோடு ஸ்வாமி தெரிசனத்துக்காக கிளம்பினான் கிருஷ்ணமூர்த்தி. தலையில் வெள்ளைப் பாகை. நெற்றியில் ஸ்ரீசூர்ணம்.

முழந்தாள் வரை நீண்ட வடநாட்டுப்பாணி நாகரிக உடுப்பு. மகா சப்தமெழுப்பிய பாதக் குறடு. அப்பாவின் காசு இவன் அலங்காரத்துக்காகவே தண்ணீரால் செலவாய் கொண்டிருந்தது. தெருமுனையில் ஸ்நேகிதன் நாராயணனும் இணைந்து கொண்டான். சில்வண்டுகளின் ரீங்காரம் தவிர்த்த ஸப்தம் ஏதுமில்லா ஏகாந்த விடிகாலை.

நெஜமாவே பிரேமிக்கிறீயா அவளை நாராயணின் ஸப்தம் அமைதியையும் இருளையும் ஒலிபாய்ச்சிக் கிழித்தது.

அப்படித்தான் நினைக்கிறேன். அவளையே விவாஹம் செய்யவேணுமாய் ஆசைப்படுகிறேன். பூர்வீக சொத்திருக்கு. என் பங்கே ஏழு தலைமுறையைக் காக்கும். மூனுவேளை போஜனம் எந்த கஷ்டமுமில்லாம நடக்கும். அப்பாவிடம் சொல்லி அனுமதி கேட்டு அவளோட பந்துக்களோட பேசவைக்கணும்.

பேசிக்கொண்டே நடக்கையில் கிருஷ்ணமூர்த்தியின் முகத்தை மாதிரியே கிழக்கும் வெளுத்தது. கால்மணிநேர நடைதூரத்தில் கோபுர தரிசனம். கையெடுத்து நமஸ்கரித்தார்கள்.

எம்மை மட்டுமல்ல இந்தப் பூமண்டலத்தையே எந்தப் பாதகமுமில்லாமல் காக்கணும் நாராயணா வாய்விட்டு ஸப்தம் எழுப்பிப் பிரார்த்தித்தான் நாராயணன்.

எந்த பிரச்சினையுமில்லாமல் சக்குபாயை மணம் முடிக்கணும் நாராயணா கிருஷ்ணமூர்த்தி மனசுக்குள் கிசுகிசுத்தான்.

சக்குபாயை கிருஷ்ணமூர்த்தி முதலில் கண்டது ஊர்ப் பொது கேணி பக்கத்தில். ஊரிலிருந்த ஒரே கேணியும் அதுதான். உடல் குளிக்க, சமையல் செய்ய, பாத்திரம் துலக்க எல்லாவற்றுக்கும் அந்தக் கேணியை ஊர் சார்ந்திருந்தது. நீர்மொள்ள பித்தளைத் தவலையை இடுப்பில் இடுக்கிக் கொண்டு வந்திருந்தாள். ஒடிந்திடும் போல இருந்தது அவள் இடை. புடவை கட்டியிருந்த அழகை வைத்துப் பார்த்தால், புதுசாகக் கட்டுகிறாள் என தெரிந்தது. வடநாட்டில் பம்பாயில் அவளது பால்யம் பாட்டனார் வீட்டில் நடந்ததாம். புஷ்பவதியாய் ஆனபின் வரன் பார்க்க சொந்தத்தில் ஊருக்கு அழைத்துக்கொண்டார் அவளது தகப்பனார். முதலாய் அவள் கேணிக்கு வந்ததும் அன்றுதான்.

வாலிபனான கிருஷ்ணமூர்த்தி அப்பாவுக்குத் தெரியாமல் சுருட்டுப் பிடிக்க கேணிக்குப் பின்னாலிருந்த பழைய வீட்டுக்கு ஸ்நேகிதர்-களோடு வருவான். அவ்வாறான ஒரு பொழுதில்தான் அவளைக் கண்டான்.
ஸ்ரீமான் இராமபிரானுக்கு சீதைப்-பிராட்டியைக் கண்டதும் வந்ததே காதல். அதுபோலவே மருண்டவிழி மானாம் சக்குபாயைக் கண்டதுமே கிருஷ்ணமூர்த்தியின் இதயம் அவன் வசமிழந்தது. இவளோடு விவாகம் செய்துதான் வம்சம் பெருக்குவேன் என்று சபதமிட்டான். அவள் வேறு ஸமூகம், இவன் வேறு ஸமூகமென்பதெல்லாம் அப்போது அவனுக்கு உள்ளத்தில் தோன்ற-வில்லை.

அடுத்தடுத்த நாட்களில் கிருஷ்ணமூர்த்தி கேணி பக்கமாக வந்தானென்றால், சுருட்டுப் பிடிக்க அல்ல. சக்குபாயைப் பார்க்க. அவளருகே நடந்து மெலிதாக உதடு பிரித்து ஸ்ருதி சேர்த்துப் பாடுவான். நின்னைச் சில வரங்கள் கேட்பேன்! அவை நேரே இன்றெனக்குத் தருவாய். அவன் உள்ளக்கிடக்கையை உணர்ந்தவளாய் சினேகமாய்ச் சிரிப்பாள். அவளுக்கும் அவன் மீது பிரேமம் உண்டென்று தெரியும் வண்ணமாய் பார்ப்பாள்.
கிருஷ்ணமூர்த்தியின் தகப்பனார் ரங்கபாஷ்யத்துக்கு பாதக்குறடு கொண்டு பளாரென முகத்தில் அடித்தது போலிருந்தது.

ஓய் நீரென்ன ஸமூகம், நாங்களென்ன ஸமூகம்? பெண்கேட்டு வெட்கம் கெட்டு வர்றீரே. ஆசைப்பட்டு சிறுபிள்ளையான உம் பிள்ளை அறிவுகெட்டுக் கேட்டானென்றால், வயசான உமக்கும் அறிவில்லையா?
ஸிங்கம் மானை விவாகிக்குமா? யோஸிக்க மாட்டீரா? சக்குபாயின் தகப்பன் பெருங்குரலெடுத்துக் கத்திப் பேசப் பேச தெரு கூடியது. திண்ணையில் அமர்ந்திருந்த ரங்கபாஷ்யத்துக்கு உடல் கூசியது. கையில் வைத்திருந்த வெத்தலச்செல்லத்தை இறுகப் பற்றினார். பதில் பேச நாகுழறியது. தெரு கூடியது. விஷயமறிந்து அவர் முகத்தில் காறி உமிழ்ந்தது. ஊரெதிரில் மானமிழந்த அவர் அன்று இரவே ஊருக்குத் தெற்கு எல்லையில் ஆலமரத்தில் கழுத்தில் கயிறு மாட்டிக் கொண்டு உயிரை மரித்தார்.

சிலநாள் கிரஹத்திலேயே அடைந்துகிடந்த கிருஷ்ணமூர்த்தி, மகாத்மா அழைப்பு விடுத்திருந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்து போராட வெளியூர் போனான். என்ன ஆனான் என்பது இன்றுவரை யாருக்கும் தெரியாது.

* * *

தண்ணீர் எடுக்க தன் வீட்டுப் பெண்கள் வாசல்தாண்டி குடத்துடன் ஆற்றுக்குச் செல்வது கோவிந்தராஜூக்கு சங்கடமாக இருந்தது. கொலுசு குலுங்க குடத்துடன் குதித்துக் கிளம்பும் பூரணியைப் பார்த்தார். வருஷம்தான் எப்படி ஓடுகிறது. காலம்தான் எப்படி மாறுகிறது. மரப்பாச்சிப் பொம்மைக்கு அலங்காரம் செய்து, அப்பா! என்னோட மீரா பாப்பா அழகாயிருக்காளா? என்று மழலை பேசிக் கொஞ்சியவள், எப்படி பூத்துக் குலுங்கிப் பேரழகுப் பெண்ணாய் ஆகிவிட்டாள். அழகான பெண்ணைப் பெற்ற அம்மாக்களுக்குதான் அடிவயிற்றில் நெருப்பு என்பார்கள். கோவிந்தராஜூ தன்னுடைய அடிவயிற்றில் அந்த வெம்மையை உணர்ந்தார்.

சீக்கிரமா நம்மோட கொல்லைப்புறத்தில் ஒரு கிணறு வெட்டலாம் பூர்ணிம்மா. அதுக்கப்புறம் நீ குடத்தோட இப்படி அல்லாட வேண்டியதில்லே.

அடுத்த வாரமே கிணறு வெட்ட வந்தான் ஒப்பந்தக்காரன் மதியழகன். சுண்டி விட்டால் இரத்தம் தெரியும் சிகப்பு. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டை. நெஞ்சில் தொங்கும் மைனர் செயின் வெளியே தெரிவதற்காக சட்டையின் முதல் பொத்தானை அவிழ்த்திருந்தான். லாம்பெரட்டா ஸ்கூட்டர் வைத்திருந்தான்.

பட்டமெல்லாம் படிச்சி முடிச்சிட்டேன். ஆனாலும் கட்சி, கிட்சின்னு அலைஞ்சுக்-கிட்டிருந்தேங்க. அப்பாதான் ஏதாவது தொழிலைப் பாரு. இருக்குற சொத்தை அழிக்கா-தேன்னு திட்டினாரு. நம்ம சுத்துவட்டாரத்துலே இப்போ கிணறு வெட்டதான் ஏகத்துக்கும் கிராக்கி. அதனாலே இந்தத் தொழிலில் இறங்கிட்டேன் படபடவெனப் பேசினான். கோவிந்தராஜூ வெத்தலைப் பாக்கோடு தட்டில் வைத்துக் கொடுத்த முன்பணத்தைப் பவ்யமாக வாங்கினான்.

கிணறு தோண்ட நாலு பேரை அழைத்து வந்திருந்தான். ஜோசியக்காரர் ஒருவர் சொன்ன இடத்தில் கோலமாவு கொண்டு வட்டம் போட்டான். சம்பிரதாயத்துக்குக் கடப்பாரை கொண்டு முதலில் கோவிந்தராஜூ தோண்ட, வேலை மும்முரமாக வளர்ந்தது. காலை, மதியம், மாலை என்று ஒருநாளைக்கு மூன்று முறை வந்து வேலை சுத்தமாக நடக்கிறதா என்று பார்ப்பான் மதியழகன்.

பஞ்சுவைத்த சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டே ஒருநாள் பாதிவரை தோண்டிய கிணற்றைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தான். கொலுசுச் சத்தமும், வளையல் சத்தமும் இணைந்து புதுவிதமான இனிமையான சப்தம் கேட்டது. மதியழகன் இதுவரை கேட்டறியா சப்தமிது. சட்டென்று சிகரெட்டைக் காலில் போட்டு நசுக்கி, திரும்பிப் பார்த்தான்.

அம்மா மோர் கொடுக்கச் சொன்னாங்க தலைகுனிந்து காலில் வட்டம் போட்டுக் கொண்டு நின்றிருந்தாள் பூரணி.

நன்றிங்க டம்ளரை வாங்கிக் கொண்டே அவளது வட்டமான முகத்தைப் பார்த்தான். குறுகுறுப்பும் மகிழ்ச்சியும் துள்ளி விளையாடும் கண்கள். சிவந்த அளவான நாசி. இதழ்களில் குறும்பான புன்னகை. அவளும் அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள். கிராப் வெட்டி எம்.ஜி.ஆர் மாதிரியிருந்தான். நெற்றியில் குங்குமம் இட்டு களையான முகம். அருகே எங்கோ வானொலியில் புதுப்பாடல் ஒலித்தது. தொட்டால் பூ மலரும்…. தொடாமல் நான் மலர்வேன்

கிணற்றில் ஊற்று வருவதற்கு முன்பாகவே அவர்களுக்குள் காதல் ஊற்றெடுத்துவிட்டது.

ஜாதியெல்லாம் இந்தக் காலத்துலே பிரச்சினை இல்லை பூரணி. கலப்புத் திருமணத்துக்கு அரசாங்கமே சட்டம் போட்டிருக்கு தெரியுமில்லே?

நீங்க நல்லமாதிரிதான் பேசறீங்க. ஆனா எங்காளுங்க வேறமாதிரி ஆளுங்க. சொந்த ஜாதியா இருந்தாக்கூட பொண்ணு கொடுக்க ஆயிரம் முறை யோசிப்பாங்க.

ஒரே வழிதான். ஓடிப்போயிடலாம். குழந்தை குட்டின்னு பொறந்தப்புறம் ஊருக்கு வரலாம். அதுக்கப்புறம் அவங்க நினைச்சாலும் நம்மைப் பிரிக்க முடியாது.

எங்காளுங்க மானத்துக்குக் கட்டுப்-பட்டவங்க. செத்துடுவாங்க. இல்லைன்னா நம்பளைத் தேடிச் சாகடிப்பாங்க.

அதெல்லாம் ஒன்னும் கிடையாது. நாலு நாளைக்கித் தேடிட்டு அப்படியே விட்டுடு-வாங்க. நாம ஒரு வாரம் கழிச்சி கடிதாசி போட்டு நமக்குக் கல்யாணம் ஆயிடிச்சின்னு சொல்லிக்கலாம். இன்னைக்கு ராத்திரி பன்னெண்டு மணிக்கு தெருமுக்குலே வேப்பமரத்துக்குக் கீழே நிக்கறேன். துணிமணி-யோடு வந்துடு.

ம்ம்ம்… அரைகுறை மனதோடு சம்மதித்தாள்.

மறுநாள் காலை மதியழகன் வெட்டிய அதே கிணற்றில் பூரணி மிதந்து கொண்டிருந்தாள்.

* * *

எல்.. ஓ.. வி.. ஈ..

திரும்பச் சொல்லு லவ்

ஏய் நித்யா. குழந்தைக்கு என்னடி சொல்லிக் கொடுக்கறே? அண்ணி சமையலறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

ம்.. உம்பொண்ணுக்கு லவ் பண்ணச் சொல்லிக் கொடுக்கறேன் அண்ணி.

உங்கண்ணன் காதுலே விழுந்ததுன்னா செருப்புப் பிஞ்சிடும்.

வெவ்வேவ்வ்வே அண்ணிக்குப் பழிப்புக் காட்டிவிட்டு தெருவுக்கு ஓடினாள் நித்யா. பத்தொன்பது வயது. பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு. வழக்கம்போல எல்லா கதாநாயகி-களையும் மாதிரி கொள்ளை அழகு.
தெருவில் ஒரு லாரி நின்றிருந்தது. விர்ர்ரென்று இரைச்சல் சத்தம்.

எல்.. ஓ… வீ.. ஈ… லவ்வு.. சொல்லு எல்.. ஓ.. வீ.. ஈ லவ் தன்னுடைய டயலாக்கையே யார் சொல்லிக் கொண்டிருப்பது என்று ஆச்சரியமாகப் பார்த்தாள். கூலிங் க்ளாஸ், டீஷர்ட், ஜீன்ஸ் பேண்ட் என்று கதாநாயக லட்சணங்களோடு தெருப்பையன்களோடு விளையாடிக் கொண்டிருந்தான் அவன்.

பேரு ஷரண். பக்கத்து ஊர் காலனிங்க. கஷ்டப்பட்டு இன்ஜினியரிங் படிச்சேன். கவர்மெண்ட் வேலையே கிடைச்சிடிச்சி. நம்ம சுத்துப்பட்டுலே கிணறெல்லாம் வத்திப் போச்சில்லையா.. அதுக்காகதான் அரசாங்கம் போர்வெல் போடுது. இந்த வேலையைக் கண்காணிக்கிற வேலை என்னோடதுதான் என விவரம் கேட்ட ஊர்ப்பெருசு ஒருவரிடம் விலாவரியாகச் சொல்லிக் கொண்டிருந்தான்.

யூகித்திருப்பீர்கள். ஒருவருக்கொருவர் புன்னகைத்திருப்பார்கள். லேசாக வெட்கப்பட்டு அறிமுகப்படுத்திப் பேசிக்கொண்டிருப்பார்கள். செல்பேசி எண்கள் பரஸ்பரம் பரிமாறிக்-கொள்ளப்பட்டிருக்கும். இறுதியில் ஷரணுக்கும், நித்யாவுக்கும் அமரக்காதல் மலர்ந்திருக்கும் என்பதைத் தனியாக சொல்லவே வேண்டியதில்லை. வேறு வேறு ஜாதி. வீட்டுக்குத் தெரிந்து பிரச்சினை. ஷரணைக் கண்டதும் வெட்டுவேன் என்று நித்யாவின் அண்ணன் அருவாளைத் தூக்கிக்கொண்டு யமஹாவில் சுற்றிக் கொண்டிருந்தான்.

ஒரு சுபயோக சுபமுகூர்த்த தினத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸில் பதிந்து தம்பதியாய் ஆனார்கள். உயிர்பிழைக்க ஊரைவிட்டு பெங்களூருக்கு ஓடினார்கள். அங்கும் நித்யாவின் அண்ணனும், அவனுடைய நண்பர்களும் தேடிவந்தது தெரியவர மும்பைக்கு ரயில் ஏறினார்கள்.

மும்பையில் இறங்கியதுமே ஷரணுக்கு ஏதோ தப்பாகப்பட்டது. அப்பாவுக்கு போன் அடித்தான். ரிங் போய்க்கொண்டே இருந்தது. தம்பியின் போன் நாட் ரீச்சபிள். நண்பனுக்கு போன் அடித்தான். எதிர்முனையில் போனை கட் செய்த நண்பன் எஸ்.எம்.எஸ். அனுப்பினான். விஷயமே தெரியாதாடா உனக்கு.. உடனே பேப்பரைப் பாரு.

நியூஸ் பேப்பர் கடையில் தினத்தந்தி வாங்கினான். தலைப்புச் செய்தியே அவர்கள்-தான். காதல் திருமண தகராறு. இரு சமூகங்களுக்குள் வன்முறை. தர்மபுரி அருகே மூன்று கிராமங்கள் சூறை.

(நன்றி : உண்மை – தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழ், 2014)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *