1984—-ஆம் ஆண்டு….
கதை புத்தகத்தை மூடி வைத்து தூங்கப்பா என்று மகனை சொல்லிக்கொண்டிருந்தாள் காமாட்சி.
இரும்மா…. இன்னும் கொஞ்சம் பாக்கியிருக்கு என தமிழ்வாணனின் துப்பறியும் நாவலை சுவாரசியமாக படித்து கொண்டிருந்தான் மகன் கணேஷ்.
ஏன்டா? இப்படி எப்ப பார்த்தாலும் கதை புத்தகமும் கையுமா இருக்கே?,,, தாய் அலுத்துக்கொண்டாள்.
பதினான்கு வயதாகும் 10-ஆம் வகுப்பு படிக்கும் கணேஷுக்கு கதை புத்தகம் என்றல் உயிர்.
ஐந்தாம் வகுப்பில் தொடங்கிய இந்த ஆர்வம் அவனுக்கு 10-ஆம் வகுப்பிற்குள் ஊரிலுள்ள அரசு நூலகத்திலுள்ள அனைத்து புத்தகங்களையும் படிக்க வைத்தது.
அந்த காலத்தில் பொழுது போக்க அவனுக்கு இருந்த வாய்ப்புகள் ரேடியோ கேட்பது / ஊர் மைதானத்தில் விளையாடுவது / நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றுவது ஆகியவை மட்டுமே…..
ஆனால் கதை புத்தகங்கள் தவிர அவனுக்கு வேறு எதிலும் ஈடுபாடு வரவில்லை!!
இந்த பழக்கமே நாளடைவில் அவனுடய மற்ற வழக்கமான வேலைகளை பாதித்தது.
காலை 6, 7 மணிக்கு எழுபவனின் கண்கள் தானாக கதை புத்தகம் நோக்கி நகரும். இரவு 1, 2, 3 மணியானாலும் படித்து கொண்டிருப்பான்.
சாப்பிடும்போது படிப்பான்…. வீட்டில் மற்றவர்கள் அரட்டை அடித்துகொண்டிருக்கும்போது இவன் கதை புத்தகம் படித்துக்கொண்டிருப்பான்……. பாட புத்தகம் படிக்க வேண்டிய வேளையிலும் கதை புத்தகம் படித்து கொண்டிருப்பான்…..ஏன்! பள்ளிகூடத்தில் ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தும்போதும் தன்னுடைய மேசையடியில் கதை புத்தகம் வைத்து படித்துக்கொண்டிருப்பான்….
அவ்வளவு ஏன்? தெருவில் நடக்கும்போதும் படிப்பான்,
பலமுறை முழு இரவுகள் விழித்திருந்து கதை புத்தகங்கள் படித்ததில் உடம்பு சரியில்லாமல் போனதும் உண்டு…அவன் புத்தகம் படிக்கும்போது அக்கம் பக்க என்ன நடக்கிறது என்ற சிந்தனையே இல்லாமல் படித்துக்கொண்டிருப்பான்.
விசாலாட்சிக்கு மகனின் கதை புத்தக பைத்தியதைக்கண்டு மிகவும் கவலை கொண்டாள்.
இப்படி கதை புத்தகம் படித்தால் இவன் எதிர்காலம் என்னவாகும், கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என தினமும் வேண்டிகொல்வாள். ஆனால் அவளால் மகனை திருத்த முடியவில்லை…..
2014…. ஆம் ஆண்டு….
ஆயிற்று 30 வருடங்கள் ஓடி விட்டன.
கணேஷுக்கு கல்யாணம் ஆகி அழகான மனைவி இரண்டு பெண் குழந்தைகளுடன் வளமாக பெற்றோருடன் வாழ்ந்து வருகிறான்.
தன் 14, 13 வயதிலிருந்த இரண்டு மகள்களையும் நல்ல படிப்பு விளையாட்டு என நல்லபடியாக வளர்த்து வந்தான்.
அனால் அவன் பிள்ளைகளுக்கு பெரிய பொழுது போக்காக டி.வி. பார்பதைதான் பழக்கமாக வைத்திருந்தனர்…..
அதுவும் டி.வி. மணிகணக்கில் பார்ப்பது அவர்களின் அன்றாட வேலை. சில சமயம் இரவு 12 மணி வரை பெரியவர்களுடன் சேர்ந்து டி.வி. பார்பதும் உண்டு!!!
பாட்டி காமாட்சிக்கு குழந்தைகள் பொழுதுக்கும் டி.வி. பார்ப்பது கவலையளித்தது.
அன்று குழந்தைகளுக்கு, பாட்டி விசாலாட்சி புத்திமதி சொல்லிகொண்டிருந்தாள்…….
சும்மா டி.வி. பாக்காதிங்கம்மா! கண்ணுக்கு கெட்டது – தலைவலி வரும் – மூளைக்கு அசதி தரும் என பாட்டி புத்தி சொல்லிகொண்டிருந்தாள்.
பாடம், விளையாட்டு நேரம் தவிர நாங்க பொழுதுபோக்க, என்ன பண்றது பாட்டி, என பேத்திகள் கேட்டு கொண்டிருந்தனர்.
நல்ல கதை புத்தங்கங்கள் படிங்கம்மா. புத்தகம் படிக்கும் பழக்கத்தை இப்போதிலிருந்தே ஏற்படுத்திக்கொள்ளுங்க, அது உங்க அறிவை வளர்க்கும்! வாழ்க்கையையும் சீர்படுத்தும்!!!,,,, என புத்தி சொல்லிக்கொண்டிருந்தாள்.
ஹாலில் உட்கார்ந்திருந்த கணேஷ் தனக்குள் பழயதை நினைத்து சிரித்து கொண்டான். முப்பது வருஷங்களுக்கு முன்னர் அம்மாவுக்கு தப்பாக தெரிந்த கதை புத்தகங்கள் இப்போது நல்லவையாக தெரிவதை பார்த்து சிரித்தான். இதுதான் காலமாற்றதில் மாறும் கோணங்களா ?
பின் குறிப்பு : தான் சிறுவயதில் பைத்தியமாக கதை படித்ததின் விளைவாக, நல்ல எழுத்தாற்றலை பெற்ற கணேஷ் பெரிய எழுத்தாளனாக பத்திரிக்கை உலகில் பணிபுரிந்துவருகிறான்…..