காலப்போக்கில்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 3, 2022
பார்வையிட்டோர்: 3,789 
 
 

‘இதைச் சொல்லக்கூட தனக்கு உரிமை இல்லையா…?’ – என்று மனம் கேட்க அப்படியே இடிந்து போய் தன் அறையில் அமர்ந்தாள் செண்பகம்.

சிவா தன்னுடையத் துணிகளை சோப்புப் போட்டு கொல்லைக் கிணற்றடியில் மாங்கு மாங்கென்று துவைத்துக்கொண்டிருந்தான்.

‘தன் துணி துவைக்கக்கூடாது, இஸ்திரி செய்யக்கூடாது, இரு சக்கர வாகனம் துடைக்கூடாது,…. இன்னும் சின்ன சின்னத் தேவை, சேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடாது. அவர் வேலைகளை அவரே செய்ய வேண்டும். எதற்காகத் தன்னைக் கட்டிக் கொள்ள வேண்டும்..?!’ – அவளுக்குள் துக்கம் தொண்டையை அடைத்தது.

மூன்று வேளை சமைக்கவும், இரவில் படுக்கவும் மட்டும்தான் மனைவியா..? என்ன மனுசர் இவர்..? ஏனிப்படி நடந்து கொள்கிறார்..? அவரது வேலைகளை எனக்குச் சரியாக செய்யத் தெரியாதா…? செய்யத்தான் வராதா…? செய்யத்தான் முடியாதா…? ! ஏனிப்படி நடந்து கொள்ளவேண்டும்..?

தன்னுடைய வேலைகளையும் தேவைகளையும் தானே செய்து கொள்ள எதற்காக பெண்டாட்டி தேட வேண்டுமாம்…? ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக்கொடுத்து, கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் உதவிகள் செய்து, இன்பத்திலும் துன்பத்திலும் ஒருவருக்கொருவர் சரி சமமாக இருந்து, அன்பும் ஆதரவுமாக இருப்பதுதானே நல்ல வாழ்க்கை..?

அதிலும் திருமணமான ;புது பெண்களுக்குத் தன் கணவன்களுக்குப் பணிவிடைகள் செய்யும் சுகமே தனி. அவனின் துணிமணிகளை அவள் துவைக்கும்போது அவனின் வியர்வை நறுமணத்தைச் சுவாசிப்பதே சொல்லொதனாத சுவை, பூரிப்பு., புல்லரிப்பு, புளகாங்கிதம்.

இங்கே என்னவென்றால்… தன்னுடையக் கைக்குட்டையைக் கூட துவைத்துப் போட அனுமதி இல்லை.!!

நேற்று…

கணவனுக்குத்தான் அலுவலகம் சென்று வர நேரம் காலம் சரியாக இருக்கின்றதே நான்கு நாட்களாக ஒரு சட்டை அழுக்காகக் கிடக்கிறதே என்று துவைத்துப் போட்டது தண்டம்…!

மாலை வந்து வீட்டிற்குள் நுழைந்த அடுத்த வினாடி ….

“செண்பு…!” என்று காட்டமான அழைப்பு..

“என்னங்க…?” இவள் எதிரில் வந்து நின்றாள்….

“யாரு துவைச்சுப் போட்டா…?” கார சாரம்.

“இந்த வீட்டில என்னைவிட்டால் வேறு யாரிருக்கா..? ஏன் நான்தான் !”

“எதுக்குத் துவைச்சுப் போட்டே..?”

“அழுக்கா கொடியில், கிடந்தது. துவைச்சுப் போட்டேன். !”

“உன்னை நான் துவைச்சுப் போடச் சொன்னேனா..?”

“இ…இல்லே….!”

“பின்னே எதுக்காகத் துவைச்சுப் போட்டே..?”

‘என்ன பதில் சொல்ல…?’ – மெளனமாக நின்றாள்.

“இதோ பார்! உன் வேலையை நீ பார். என் வேலைகளை நான் பார்க்கிறேன். அனாவசியாமாய் என் வேலைகளில் தலையிட்டு அவஸ்தைப் படவேணாம். ஆமாம் சொல்லிட்டேன்!” கண்டித்து அறைக்குச் சென்றான்.

புதுப் பெண், புதுக்குடித்தனம் அதிகம் எதிர்த்துப் பேச திராணியின்றி செண்பகம் அப்படியே வாயடைத்துப் போனாள்.

அன்பிற்குக் குறைவில்லை, ஆசைக்குக் குறைவில்லை. என்றாலும் இது சோற்றில் கல் !

பொதுவாய் ஆண்கள் பிரம்மச்சாரியாய் இருக்கும்வரை தன்னுடையத் துணிமணி, தேவைகளையெல்லாம் தானே துவைத்துப் போட்டு பூர்த்தி செய்து கொள்வார்கள். சமச்சாரியாகி விட்ட அடுத்த நாளே எல்லா வேலைகளையும் வந்தவள் தலையில் கட்டி விட்டு வேலை பளுக்களை விட்டு விடுவார்கள்.

இவர் என்னவென்றால் திருமணமாகி இரண்டு மாதங்களாகியும் கட்டி வந்தவளுக்கு எதையும் விட்டுக் கொடுக்காமல் தானே செய்கின்றாரே..!!

இவளும், நிச்சயம் முடித்து தாலி கழுத்தில் ஏறும் வரை…

‘ கணவன் அலுவலகத்திலிருந்து உழைத்து களைத்து வீட்டிற்குள் நுழைந்ததும் ஷு கழற்ற வேண்டும். சட்டைகளைக் கழற்ற உதவி செய்ய வேண்டும். குளியலறைக்குச் சோப்பு எடுத்துக் கொடுக்க வேண்டும். முதுகு தேய்த்து விட வேண்டும். வாரம் ஒரு முறை உச்சத் தலையிலிருந்து உள்ளங்கால்வரை எண்ணெய் தேய்த்து விட வேண்டும்.

ஞாயிறு ஆனால்… அவன் துணிமணிகளை வெள்ளை வெளேரென்று துவைத்து அழகாய் அயர்ன் செய்து வைக்க வேண்டும். தினம் உடுத்திக்கொண்டு செல்ல பேண்ட், சட்டைகளை மேட்சாக எடுத்துக் கொடுக்க வேண்டும். செண்பகா.. ! என்று அழைப்பதற்கு முன் எதிரில் நிற்க வேண்டும். நல்ல மனைவியாய், தாயாய் சேவைகள் செய்ய வேண்டும் !

ஒரு நாள் தான் ஊரில் இல்லை என்றால்……..

“நீ…இல்லாம என்னால ஒன்னும் செய்ய முடியலடி!” என்று தவித்துப் பாராட்டும் அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும் ! என்று நினைத்து கற்பனை செய்து கொண்டிருந்தாள்.

அத்தனை கனவு, கற்பனைகளும் தாலி கட்டிய மறாவது நாளிலிருந்து பாழ்.!! கணவனுக்கு ஒரு உதவியும் தேவை இல்லை, செய்ய முடியவில்லை.

சோற்றுக்கும் பாய்க்கும் மட்டும்தான் பெண்டாட்டியா..? ஒரு வீட்டில் ஒரு வேலையும் கலந்து செய்யாமல் தனித்தனியாய் எப்படி வாழ்வது.? – செண்பகம் நினைத்து நினைத்து உருகினாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் உறுத்தல் உறுத்தலாக இருப்பது..? மனம் குமைவது..? இதற்கு ஒரு முடிவு வேண்டாமா…? தன்னுடைய சேவை, பணியவிடைகளெல்லாம் ஏன் கணவனுக்குத் தேவை இல்லை என்று தெரிய வேண்டாமா..? தான் எதுவும் செய்ய முடியாத கையாலாகாதவளா, தெரியாதவளா, முடியாதவளா…? தெரிந்து கொள்ள வேண்டும். ! தீர்மானத்துடன் எழுந்தாள்.

கிணற்றடியில் சிவா வேர்க்க விறுவிறுக்க தன் துணிகளை அலசிக்கொண்டிருந்தான்.

அவனது கஷ்டத்தைப் பார்க்க இவளுக்குள் ஆவேசம் வந்தது.

“ஏங்க..! உங்களுக்கு என்ன வந்தது..?” வெடித்தாள்.

மனைவியின் இந்த குரலை எதிர்பார்க்காத சிவா…

“ஏன் செண்பகம் ! என்னாச்சு உனக்கு..?” துணுக்குற்றுக் கேட்டான்.

“நான் ஒருத்தி இங்கே இருக்கிறது உங்களுக்குப் பிடிக்கலையா..?”

“ஏன் இப்படி கேட்குறே…?”

“என்னால இந்த வேலை எல்லாம் செய்ய முடியாதா…? எதுக்கு வேணாம்னு ஒதுக்குறீங்க…?”

சிவாவிற்கு மனைவியின் தாக்கம் தெரிந்தது. உள்ளம் புரிந்தது.

அலசிய துணியைப் பிழிந்து மேடை மேல் வைத்து விட்டு அருகில் வந்து அவள் தோளைத் தொட்டான்.

“காலப்போக்கில் என்னால உனக்கு ஒரு கஷ்டமும் சுமையும் வேணாம்ன்னுதான் இப்படி செய்யுறேன்.”

“புரியல..?!”

“சொல்றேன். இதோ பார் நீயும் நானும் துணை, இணையேத் தவிர ஒருத்தருக்கொருத்தர் சுமை கிடையாது. என் வேலைகளை நீ செய்தா உன் வேலைகளை யார் செய்வா…? இன்னைக்கு புதுசு, இளசு, ஆர்வக்கோளாறு…என் வேலைகளையெல்லாம் பிடுங்கி நீ செய்து என்னைச் சோம்பறியாக்கினால் நான் ஒண்ணுக்கும் உதவாத உதவாக்கரையாகி எல்லாத்துக்கும் உன்னையே எதிர்பார்க்கனும். இது தேவை இல்லே என்கிறது என் அபிப்பிராயம்..! செண்பகா ! அதிக வேலைகள் என்றால் பங்கு போட்டுக் கொள்ளலாம். அத்தியாவசிய தேவைகளை ஏன் பங்கு போட்டுக்கனும்..? நாளைக்கு நமக்குக் குழந்தைகள் பிறந்தால் கூடுதல் வேலையாகும். அந்த வேலைகளைப் பங்கு போட்டு செய்வோம். அப்போ யாருக்கு அதிக சுமையோ அதை பிரிச்சி செய்வோம். இப்போதைக்கு வேணாம். நீ ஆசைப்பட்டால் என் துணிகளைத் துவை. அதே மாதிரி உன் துணிகளையும் நான் துவைக்க அனுமதி கொடு. இதுதான் பரஸ்பர பங்கு பிரிப்பு. இதை விடுத்து…தானே சுமையை ஏத்திக்கிட்டு சுமைக் கழுதையாகிடாதே இதுதான் என் விருப்பம்!” சொல்லி அவளை ஆசையாக அணைத்தான்.

திருமணமான அடுத்த நாளே தன் வேலைகளை வந்தவள் மேல் சுமத்திவிட்டு உல்லாசமாக பறக்கும் இளைஞர்களுக்கு மத்தியில் தோலை நோக்குப் பார்வையில் எப்படி ஒரு நல்ல கணவன்! – செண்பகம் உள்ளம் பூரிக்க…. கணவன் மார்பில் ஆசையாகச் சாய்ந்தாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *