காருண்யம் கட்டாய கடாட்சம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2012
பார்வையிட்டோர்: 6,692 
 
 

பாரதக் கதை படித்தவர்களுக்கு கர்ணன் என்றொரு மகா புருசனை தெரியாமல் இருக்காது, கர்ணனின் உறவுக்காரர்களை அவர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை, ஆனால் கர்ணனின் வாரிசுகளில் ஒருத்தியை எனக்குத் தெரியும் என்று நான் சொன்னால். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும், அது காலத்தின் கட்டாயம், கொக்கரக்கோ கொக்கரக்கோ

எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆக இன்னும் ஓரிரு முத்தங்கள் மன்னிக்கவும், ஓரிரு நாட்கள் பாக்கி இருக்கின்றன இந்த நாளில் என் மனைவியைப் பற்றி கூறுவது சிலாக்கியமானதாக இருக்கும். கர்ணனின் வாரிசு என்று நான் கூறியது சத்தியமாக என் மனைவியைத் தான், இதைக் கேள்விபட்டால் அவள் சந்தோக்ஷப்படுகிறாளோ இல்லையோ கர்ணன் சந்தோக்ஷப்படுவான், இதைக் கேள்விப்படும் உங்களின் சிலருடைய மனைவிமார்களுக்கு பொறாமை, ஆற்றாமை, இயலாமை, முடியாமை, கடலாமை போன்றவை ஏற்படும், நான் சொன்னதை நம்ப முடியாதவர்களுக்கு அஜீரணக் கோளாரும் வரக்கூடும். எனவேதான் சொல்கிறேன் இது காலத்தின் கட்டாயம், இதை நம்பித்தான் ஆக வேண்டுமென்று,

முல்லைக்கு தேர் தந்த பாரிக்கு தற்கால சந்ததியர் ‘அரைக் கிறுக்கன்’ பட்டம் தந்து சந்தோக்ஷப்பட்டுக் கொள்கிறார்கள். காட்டுக்கு வேட்டைக்குப் போன பாரி ஆள்படை இல்லாமலா போயிருப்பான்? ஒரு ஆள்வைத்து முல்லை படர பெரிய பந்தலே போட்டுத் தந்திருக்கலாமே. எதற்கு முன் யோசனை இல்லாமல் தன் தேரை அதற்கு தாரை வார்க்க வேண்டும் என்பது அவர்களின் வாதம். குதிரையையாவது கழட்டி விட்டானா இல்லை அதையும் தேரோடையே பலிபோட்டுட்டு வந்துட்டானா என்று சொல்லி கொக்கோக – மறுபடியும் மன்னிக்கவும் ‘கெக்…கெக்கே’ என்று சிரிக்கிறார்கள். வேட்டைக்குப் போன மனுசன் புலி, சிங்கம்னு அடிச்சி எடுத்துட்டு வராம வெறுங்கையோட வரதும் இல்லாம, கொண்டு போன தேரையும் இல்லை விட்டுட்டு வந்துட்டான்னு அவன் மனைவிக்கு எத்தனை கஷ்டமா போயிருக்கும், நானா இருந்திருந்தா விவாகரத்துக்கு போயிருப்பேன் என்று ஜீன்ஸ் பொண்ணு ஒண்ணு என்கிட்டயே கேட்டுச்சி. ‘பாரி கஷ்டத்தையும் அதுக்கான உதவியையும் மட்டுமே பாத்தான் ஆனா நீங்க…’ என்று ஆரம்பித்து பாரிக்காக நான் வாதாட ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவர்கள் ‘போதும் புலவரே… மீதி பாடலை நாளை பாடும்…’என்று சபையை கலைத்துக்கொண்டு மீண்டும் அதே கொக்கோ…கெக்…கெக்…க.

இதெல்லாம் மூளை கொண்டு யோசிப்பதனால் வரும் விபரீதம், இதயம் கொண்டு யோசித்தால் பாரியின் கருணையும் அதன் வீர்யமும். தாத்பர்யமும் புரியும். அதே போலத்தான் புத்திகொண்டு யோசிக்காமல் ரத்தமும் சதையுமான மனசால் யோசித்தால் என் மனைவின் கருணையும் அவர் கர்ணனின் நேரடி வாரிசு என்பதும் புரிந்து எவரும் அரசியல் செய்யாமல் இருப்பார்கள்.

கல்யாணமாகி மூன்றாம் நாள் நீங்கள் பேருந்து ஒன்றில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். (கல்யாணம் ஆகாதவர்கள்கூட கற்பனையாக மனைவியோடு பயணம் செய்வதாய் நினைத்துக் கொள்ளலாம். தவறில்லை) புது மனைவி. புது சொர்க்கம். அது பேருந்து அல்ல. தேவலோக ரதம். பக்கத்து இருக்கை பயணிகளெல்லாம் முப்பத்து முக்கோடி தேவர்கள். பக்கத்தில் தெய்வீக மணம் கமல மனைவி, புது மயக்கம், ஆனந்தத்தில் வாய் குளறி தெளிவாகப் பேசுவதாக நினைத்து பிதற்றுகிறீர்கள். எடுத்ததற்கெல்லாம் புன்னகை புரிகிறீர்கள். கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த அனுபவத்தை நான் சொல்லி புரிய வைக்க வேண்டிய அவசியமில்லை. சொல்லித் தெரிவதில்லை சொர்க்கம்.

கல்யாணம் முடிந்து சில இரட்டை வருடங்களைக் கடந்தவர்கள் அந்த சந்தோக்ஷம் ‘அன்றே கடைசி’ என்று முணுமுணுப்பது தெரிகிறது. உங்களுக்கு என் அனுதாபம். கல்யாணமாகாத கற்பனை மனைவியோடு பிரயாணம் செய்பவர்கள் அரைக்கண் மயக்கத்திலேயே அந்த அனுபவத்தில் விலாசம் தெரியாமல் தவிக்கிறார்களே. அவர்களுக்காக சொன்னேன். அவர்களுக்கும் என் அனுதாபம் தெரிவிப்பது அவசியமென்று கல்யாணமாகி நாள்பட்டவர்கள் வலியுறுத்துவதை நான் நிராகரிக்கிறேன். விசயம் என்னவென்றால் அப்படி பயணப்பட்டு தேவாமிர்தம் கண்டு இருக்கும் வேளையில் ஒரு வயதான மூதாட்டிக்கு புருக்ஷன் பக்கத்தில் இருக்கை தரும் வள்ளலாய் மனைவி இருந்தால் மனைவியை ரசிப்பீர்களா? என் மனைவி அப்படி செய்தாள். எழுந்து நின்று ஒரு கிழவிக்கு இருக்கை தந்தாள். கிழவியும் கல்யாணம் காட்சி பார்த்தவள்தானே! வேண்டாம் என்று சொல்லும் இங்கிதம் இல்லை, அவள் வயோதிகம் அவளுக்கு.

ரம்பா, ரவீணா, ஊர்வசி, ஊர்மிளா, குஷ்பு, குல்பி ஓவியா, காவியா, அது இது என்று நடிகைகளை வம்புக்கு இழுத்து அவர்களோடு ஒப்புமையிட்டு என் மனைவியின் அழகை நான் நிறுவப்போவதில்லை. நேரடியாக சொல்வதென்றால் அழகானவள். எந்த செயற்கை பம்மாத்துக்களும் இல்லாமல் நிஜமாகவே அழகானவள். என்னைவிட கூடுதல் சிவப்பென்றும் அதற்காக அவள் எந்த களிம்பும் களிமண்ணும் பூசுவதில்லை என்று சிகப்பழகு க்ரீம்கள் மீதும், சும்மா ஒரு பேச்சுக்கு கடலைமாவுகூட பூசிக்கொள்வதில்லை என்று அதே கடலைமாவின் மீதும் சத்தியம் செய்து கூறுகிறேன். இயற்கையான சிரிப்பும் கொஞ்சம் கூடுதல் யௌவனமும் பெற்றவள். தன் அழகைப்பற்றி தனக்கே தெரியாமல் மிக இயல்பாய் இருப்பவள். அவள்தான் என் மனைவி. ஒரே ஒரு பழக்கம் நெற்றியில் சுண்ணாம்பு அடித்தது போல் பழுக்க திருநீறு பூசிக்கொண்டு செக்கசிவப்பா குங்கும் வச்சிருப்பா. படிச்சது எம்.எஸ்.சி, கும்பிடறது பராசக்தி.

நான் ஏன் இத்தனை நீட்டி முழக்கி சொல்லறேன்னு கல்யாணம் ஆகி நான்கைந்து மாதம் பூர்த்தியாகாமல் போதையில் தள்ளாடும் கனவான்களுக்குப் புரியும். நானும் அப்படித்தான் புதுசு. அவள் படித்தவள் என்பதை நானாக சொன்னால்தான் உண்டு. அவள் நெற்றியைப் பார்த்த எவரும் இத்தனை மெய்ஞானி படித்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் நினைப்பார்கள். படித்து சும்மா இருந்தாள். கல்யாணம் செய்து கொண்டாள். பிறகு வேலைக்குப் போவேன் என்று அடம்பிடித்து வேலைக்குப் போனாள். இரண்டு மாதம் கழித்து வேலைக்கு போகமாட்டேன் என்று அடம் பிடித்து நின்று கொண்டாள். சாதுவானவள். தன்படிப்பை முன்னிட்டு கர்வமோ. அகங்காரமோ அவளிடம் இருந்ததில்லை. எல்லோரிடமும் சுலபத்தில் பழகுவாள். எவர் துக்கத்திற்கும் கண்ணீர் விடவும், எவர் சந்தோக்ஷத்திலும் கலந்து ஆனந்தமாய் மகிழவும் அவள் தயாராக இருந்தாள்.

உறங்கிக்கொண்டும் கனவில் புரண்டு கொண்டும் இருக்கும் என் சொக்காய்ப் பையில் இருக்கும் காசு, பலநாள் எவள் வீட்டிலாவது பாலாய், பாயாசமாய் மாறி கொதித்திருக்கிறது. நான் உறங்கும் வேளையில்தான் கடன் கேட்க அவளின் சினேகிதிகள் மூக்கை சிந்திக்கொண்டு வருவார்கள். என்னை, அதாவது அவளின் புருசனிடம் இது போன்ற சின்ன விசயத்திற்கெல்லாம் அனுமதிகேட்கத் தேவையில்லை என்று வியாக்கியானம் பேசி லோன் மேளா நடத்துவாள். அதில் பாதிவரும் மீதி தள்ளுபடிதான். அவளின் கருணையைப் பற்றி சொல்ல வேண்டி இருப்பதால் இதை சொல்ல வேண்டியதாயிற்று. மற்றபடி தர்மம் செய்ததை சொல்லிக் காட்ட வேண்டுமென்ற எண்ணமில்லை. அப்படிப்பட்ட வள்ளல். பக்திமான் ஒரு நாய்க்கு, தெருநாய்க்கு தவறிகூட ஒரு பருக்கை சோறு போட்டதில்லை. வேண்டுமென்றே தவிர்த்தாள். போடு என்று சொல்லியும் நாய்க்கு சோறு போடாத வள்ளல் அவள்.

பசித்த நாய்க்கு சோறு போடாதவள் என்பதால் எச்சில் கையில் காக்கை ஓட்டாதவள் என்று யாரும் அவளை நினைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் முன்பாரா அனாவசிய அளப்பெல்லாம். ஒரு குழந்தையோடும், வயிறு நிறைய பசியோடும் பேய் வரும் பத்துமணிக்கு வந்த பிச்சைக்காரியை, எவரும் போய்வா என்றுதான் சொல்வார்கள். வீட்டில் பழையது இருந்தாலும், இல்லை என்றுதான் சொல்வார்கள். அன்று அந்த பிச்சைக்காரி வந்த நேரம் நிஜமாகவே உணவேதும் இல்லை. நான் போய்வா என்று சொன்னேன். அவள் குழந்தையையும் பிச்சைக்காரியையும் பார்த்தாள். என்ன நினைத்தாலோ தெரியவில்லை, கொஞ்சம் பொறு என்று சொல்லி சமைக்கவே ஆரம்பித்துவிட்டாள்.

ஒரு வருடமாகியும் குழந்தை இல்லையா என்று ஊர்வாயின் பேச்சில் கொஞ்சமாய் கலங்கிப் போயிருப்பவளுக்கு பிச்சைக்காரியின் குழந்தை ஏதையாவது கிளறி விட்டிருக்கலாம். ஸ்விட்ச் போட்டதும் லைட் எரிகிறமாதிரி கல்யாணம் பண்ணதும் குழந்தை வேண்டும் என்கிற கிழடுகளால் திருமண சொர்க்கத்தில் கட்டப்பட்ட ஜோடிகள் நெஞ்சில் கத்தியை செருகிக் கொண்டு சந்தோச முகம் காட்டவேண்டி இருக்கிறது. பத்து மணிப் பிச்சைக்காரிக்கு உப்புமா செய்து போட்டு திண்னையிலேயே அமர வைத்து அவளும் குழந்தையும் சாப்பிடும் வரை காந்திருந்து, போதுமா என்று கேட்டு, குடிக்க நீர்தந்து போய்வா என்று சொல்ல ஒரு தாயால்தான் முடியும். இன்னும் கருத்தரிக்காத தாய் அவள். அதைப் பார்த்து பொய்யல்ல, நிஜமாகவே எனக்கு உள்ளுக்குள் மெல்ல நெகிழ்ந்து கண்ணீர் வடிந்தது. ஆனாலும் பத்து மணி பிச்சைக்காரிக்காக என்னை அந்த நேரத்தில் வெங்காயம் நறுக்க வைத்தது இன்றைக்கு நினைத்தாலும் கண் கலங்ககிறது.

அப்படிப்பட்டவள்தான் நாய்க்குப் போடு என்றும் சோறு போடாத வள்ளல். ஏன்? பஞ்சமா? பணக் கஷ்டமா? வறுமையா? என்அப்பாவின் அப்பா, தமிழில் தாத்தா என்று சொல்வார்களே அவர்தான், வேண்டிய மட்டும் சொத்து சேர்த்து வைத்திருக்கிறார். மூட்டை மூட்டையாக நெல் விளைகிறது. குத்தகைப் பணமாக கொட்டுகிறது. அவளும் நில புலன் கொண்ட அப்பனுக்கு மகளாகப் பிறந்து நெல்மூட்டையின் மேல் வளர்ந்தவள்தான். திரும்பிய பக்கமெல்லாம் தானியம், கால்வைத்த இடமெல்லாம் அரிசி, ஆனாலும் அந்த நாய்க்கு மட்டும் ஒரு கவளம் சோறு கிடையாது. மற்றபடி மனுஷர்கள் யார் வந்தாலும் வயிறு நிறைய போஜனம் உண்டு.

ஊரில் பல வீடிருந்தாலும், வயல்வெளி வீடு எங்கள் இருவருக்கும் ஒரு சேரப்பிடித்துப் போனதால் அங்குதான் எங்கள் ஜீவனம். அங்கிருக்கும் களத்துமேட்டில் பிறந்து வளர்ந்தது தான், கடந்த ஒருவருடமாக தீனி குறைந்துபோன இந்த நாய். அவள் கல்யாணம் செய்துகொண்டு வந்து இந்த வீட்டில் விளக்கு ஏற்றிய நாள் முதல் இந்த நாயின் வீட்டு விளக்கு அணைந்து போனது. அவள் சோறு போடாததும் இல்லாமல், என்னையும் போடக்கூடாது என்று சொல்லி விட்டாள். அவளுக்கு தெரியாமல் போடவேண்டியிருக்கிறது.

இரவானால் களத்து மேட்டில் உட்கார்ந்து அரைநிலா வெளிச்சத்திலும் குண்டு பல்ப் மஞ்சளிலும் தென்னையின் காற்றிலும் அவளின் கைப்பக்குவ வாசனையிலும் உணவை உண்பது அத்தனை பெரிய சொர்க்கம். நாய் கேட்டால் வருத்தப்படும். அது வருத்தப்பட்டாலும் உண்பவர்களுக்கு அது சொர்க்கம் தான்.

அன்றைக்கு. ஒரு முக்கால் நிலா இரவில் மனைவி வீட்டு திண்ணையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். களத்து மேட்டில் அந்த நாய் படுத்துக்கொண்டு, இவள் சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தது. சிவன் முன் இருக்கும் நந்திபோல. நான் கயிற்றுக் கட்டிலில் படுத்து என் விண்மீனை வானத்தில் பார்த்துக் கொண்டிருந்தவன் எதேச்சையாக நாயையும் பார்த்தேன். நாய் என்னைப் பார்த்தது. அந்த நாய் கர்ப்பமான நாய். பரிதாபம், கொஞ்சம் போசாக்கு கூடியிருக்க வேண்டிய நேரத்தில் உணவு இல்லாமல் இளைத்திருந்தது. இந்த ஒரு வருட காலத்தில் ஒரு முறைகூட அவள் சோறு போட்டதில்லை என்றாலும் அந்த நாய் எந்த நம்பிக்கையில் உட்கார்ந்திருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை.

அப்படி ஒரு நாய் அங்கே இல்லாததுபோலவே அவள் சாப்பாட்டை ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். அதை விரட்டுவதும் இல்லை, ஈவதும் இல்லை. அப்படி ஒரு குணம். ‘உன் வாயையே பாத்துகிட்டு இருக்கு, அந்த நாய்… அதுக்கு ஒருவாய் போடேன்,’ என்றால் ஒற்றை வார்த்தையில் முடியாது என்று சொல்லிவிடுவாள். ‘சரி உள்ளே போய் சாப்பிடேன். உன் வாயப் பாத்து அந்த நாய் ஏமாந்து இல்ல போகுது’ என்றால் ‘இது நாய் வீடா, இல்ல நம்ம வீடா? நான் ஏன் போகணும், அதை போகச் சொல்லுங்கோ’ என்பாள்.

ஒரு நாய்க்காக தென்னை இளம் தென்றலையும் வாழை தரும் சுகமான காற்றையும் அவள் இழக்கத் தயாராக இல்லை. ஒருமுறை இவளையே பார்த்துக்கொண்டு வாயில் நீர்சுரக்க கிடந்த நாயை நான் அடித்து விரட்டியிருக்கிறேன். நாய்மேல் கோபமா, இவள் மேல்கோபமா என்றே தெரியவில்லை. அவள் மிகக் கோபிக்கிறாள், பாவம் என்கிறாள், சாப்பாடு போடாதது பாவமில்லையாம். அடிப்பது பாவமாம். எந்த தர்ம புத்தகத்தில் இந்த விசயங்களெல்லாம் இருக்கிறதோ தெரியவில்லை.

‘ஒவ்வொரு ஜீவராசிக்கும் ஆண்டவன்தான் படியளக்கறான், அது அது சாப்பிடற சாப்பாட்டில் அது அது பேரை ஆண்டவன் எழுதி வச்சிருக்கான். நான் படியளக்க வேண்டிய அவசியமில்ல. எந்த சாப்பாட்டில இந்த நாயோட பேர் எழுதியிருக்கோ அந்த சாப்பாட்டை இது சாப்பிடட்டும். இந்த சோத்துல, நான் சாப்பிடற இந்த சோத்துல, அது பேர் எழுதியிருக்கல பாருங்க..’ என்று என்னிடம் தட்டை நீட்டி காட்டுகிறாள் என் மனைவி. பக்திப் பழமாக பேசப் பேச நான் வியப்பும் ஆர்வமும் கூடிப்போய் கேட்டேன் ‘இந்த நாய்க்கு, ஏன் உலகத்திலே இருக்கிற எல்லா நாய்க்கும் மனுஷன் தான் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணணும்னு ஆண்டவன் படைச்சிருக்கானே. அதுங்க காலம் காலமா மனுஷனை நம்பித்தானே வாழுதுங்க. மனுஷங்க அதுங்களோட வயித்தை கவனிக்கலைன்னா அதுங்க எங்க போகுங்க?’

‘ஒருத்தனை நம்பி அண்டித்தான் பிழைக்கணுன்னு எந்த ஜீவராசியையும் ஆண்டவன் படைக்கல. தன் உழைப்பிலதான் தன் வயித்துபாட்டை அதுங்க பாத்துக்கிடணும். எறும்பு, ஈ, நாய் எல்லாத்துக்கும் சேத்துதான் சொல்றேன்,’ மனைவி.

‘அதுங்க பாட்ட அதுங்க பாத்துக்கிடணுமா? நாய்ங்களால வயல்ல போய் ஏர் ஓட்டமுடியாது. பாட்டு பாடி பிச்சைகூட இதுங்களால எடுக்க முடியாது. அதுங்களுக்கு நம்ம கைய எதிர்பார்த்து இருக்க வேண்டிய கட்டாயம்’

‘யார் அப்படி கஷ்டப்பட்டு உயிர் வாழ சொன்னது?’

‘தற்கொலை பண்ணிக்க சொல்லறயா? அதுவும் அதுங்க கையாலாகாது. நாம பாத்து உதவி பண்ணாத்தான் உண்டு’

‘தற்கொலையா? கடவுளே… யார் இதுங்களை பொறக்க சொன்னாங்க. யார் பெத்துக்க சொன்னாங்க…?’

‘எல்லா நாய்க்கும் குடும்பக் கட்டுப்பாடு பண்ணிடலான்னு சொல்லறயா? அதுக்கு நாய்ங்க ஒத்துக்குமா? கேட்டுப்பாக்கறேன். அஞ்சிகிலோ அரிசி, ஒரு ஆப்பிள், கொஞ்சம் ரொட்டி கிடைக்கும்னா ஒரு வேளை ஒத்துக்குங்க’ என்றதும் அவள் சிரிக்க ஆரம்பித்தாள். கண் சுறுக்கம் என்னை மயக்கிற்று.

நாய் மேல்தான் இவளுக்கு இத்தனை வெறுப்பு. பூனைக்கு ஆறவைத்து பால் கொடுக்கிறாள். பசுவிற்கு வெல்லம் போட்ட சோற்றுருண்டையை தருகிறாள். ஐந்து வயதில் இவள் தம்பியை நாய் கடித்து விட்டதாம். மருத்துவன் மருந்து போட்டானாம். பூசாரி ஒருவன் ஜாதக தோசமிருக்குன்னு மந்திரம் போட்டானாம். பரிகாரம் சொன்னானாம். வீட்டில் நாய் வளர்க்காதே, நாய்க்கு சோறு போடாதே என்று பூசாரி குறி சொன்னானாம்.

அதனால் அவர்கள் வீட்டில் நாய் வளர்ப்பதே இல்லையாம். இது மட்டும் என்ன நாங்கள் வளர்க்கிற நாயா? ஒரு தெருநாய். ஒரு மழைக்காலத்தில் களத்து மேட்டு வைக்கோல் கதகதப்பில் போட்ட நான்கு குட்டிகளின் மிச்சம். எப்படியோ கிடைத்ததை கொண்டு வளர்ந்துவிட்டது. நாய்களெல்லாம் எங்கள் சொந்தக்காரர்களாக்கும் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிற குடும்பமும் அல்ல எங்களுடையது. வந்து வாய் பார்த்த நாய்க்கு சோறு போடாதே என்று குறிசொன்ன பூசாரியைக் கொன்று சிலைவைத்து கோயில் கட்டித்தான் கும்பிட வேண்டும், நாய் காத்த நாயகனென்று. அவன் வயிற்றை நிரப்பிக் கொள்வதற்காக குறிசொல்லப்போய் இந்த நாயின் வயிற்றில் அடித்த கதை அவனுக்கு தெரியாது. பாவம், நாய் என்றாலும் கர்ப்பிணிக்குக் கருணை காட்ட வேண்டும். எந்த நாயோ இவன் தம்பியைக் கடிக்கப் போய் இந்த நாய்க்கு தொப்புளை சுற்றி ஊசி.

ஆளைக் கடிக்கிற நாய்களுக்கு சோறு போடக்கூடாது என்றால் நாயை அடிக்கிற ஆளுக்கு மட்டும் ஏன் சோறு போடுகிறாள். ஒரு முறை அவள் அழகான பாதம் வீங்கிப் போகும் அளவிற்கு பசு மிதித்துவிட்டது. அதுவும் வெல்லம் சோறு தரும்போதே. அது தெரியாமல் மிதித்து விட்டதாம். இன்னமும் வெல்லம் சோறு தருகிறாள். பூனைகூட பிராண்டியிருக்கிறது. கை தவறிவிட்டதாம். பால் வைப்பது நிற்கவில்லை. நாய் மட்டும் திட்டமிட்டு வேண்டுமென்றே கடிக்கும் சனியனாம்.

எத்தனை எடுத்து சொல்லியும் நான் சொல்வதை அவள் கேட்பதாய் இல்லை. நிறைமாத கர்ப்பத்தில் அந்த நாய் பரிதாபமாய் அவள் உண்பதைப் பார்க்கையில் கஷ்டமாக இருந்தது. இந்த கர்ப்பிணிப் பெண்மேல் இரக்கம் வரக்கூடாதா என் மனைவிக்கு. அது என்ன பிரசவ செலவிற்கா பணம் கேட்கப் போகிறது. இல்லை எனக்கு வந்து பிரசவம் பார் என்றா கேட்கப் போகிறது. ஒரு வாய் உணவு.

நிலா பெய்து கொண்டிருக்கும் வெளிச்சமான இரவில் திண்ணையில் தேவதைபோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். தினப்படி கண்ட தோல்விக்குப் பின்னரும் புத்திவராத அந்த நாய், ஏதோ ஒரு நம்பிக்கையில் அவள் முன்னே, அமிர்தக்கலசமேந்திய மோகினிக்கு முன்னே அசுரன் போல் உட்கார்ந்து இருக்கிறது. அவள் அள்ள அள்ள குறையாமல் உணவு தரும் அட்சய பாத்திரமல்ல என்று அந்த நாய்க்கு தெரியாது. அவள் சாப்பிடும் அழகை வைத்த கண் வாங்காமல் அது பார்த்தபடி முன்புறமாக படுத்து இருக்கிறது. இடையிடையே அவள் பார்த்தால் வால் வேறு ஆட்டுகிறது மூளையற்ற நாய். அவள் கை தட்டிற்கும் வாய்க்கும் மேலும் கீழுமாய் போகும் போது இதும் கைபோன பக்கமெல்லாம் தலையை மேல்கீழ் ஆட்டிக் கொண்டு இருக்கிறது.

படுத்து விண்மீன் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பொறுக்கவில்லை. இத்தனை பக்கத்தில் ஒரு ஜீவன் வயிறு காய்ந்து வால் ஆட்டிக் கிடக்கையில் இவளுக்கு எப்படி வாய் ருசிக்கிறது. நான் எழுந்தேன். மரத்தடிக்கு போகிறவன் போல் போகிற போக்கில் நாயின் வாலை நன்றாக மிதித்தேன். மிதிபட்ட நாய் வலி பொறுக்காமல் ஒரு பெரிய ஓலத்தோடு கத்தியபடி எதிரில் இருந்த என் மனைவியின் மேல் ‘லப்’பென்று விழப்போனது. பயத்தில் வெலவெலத்துப்போனவள் பதறி எழப்போய் தட்டில் வைத்திருந்த சோறு தரையில் கொட்டியது. அட்சயப் பாத்திரத்து அமிர்தம் கீழே கொட்டியது. நாய் நாலாபக்கமும் வாலை ஆட்டிக்கொண்டு சாப்பிட்டது. ஒருவருட பசி. தேவதை பிசைந்த முழு சோறு தேவாமிர்தம் அதற்கு. என் மனைவி தள்ளி நின்று என்னை கோபத்தோடு பார்த்தாள். கால் தவறித்தான் நான் நாய் வாலை மிதித்தேன். வேண்டுமென்று செய்யவில்லை என்று நான் சொன்னதை அவள் நம்பவில்லை. ‘சரிவிடு. அந்த சோத்துப் பருக்கையில் ஆண்டவன் அந்த நாயின் பேரை எழுதி வச்சிருப்பான் போல இருக்கு’ என்று நான் சொன்னதையும் அவள் நம்பவில்லை,

மூன்று நாள் பேசமாட்டேன் என்று அடம் பிடித்தாள். நான்காம் நாள் அவள் அம்மா வந்தாள். அம்மாவிடம் என் போக்கிரித்தனத்தை சொல்லி சொல்லி கோபப்பட்டாள். வாய் வலிக்கும் வரை வம்பிழுத்தாள். பிறகு வாந்தி வருவதாக குமட்டி ஓடினாள். சோர்வாய் இருப்பதாய் நீர் குடித்தாள். தவிர்க்கவே முடியாமல் என் மடியில் படுத்தாள். மாமியர் பலபெற்ற பெருந்தகை. சரியாய்த்தான் சொன்னாள், ‘இது சிசு ரோதனை கர்ப்பப் பிதற்றல் என்று,’ வேறு வழியே இல்லை. எத்தனை வளர்த்தாலும் பெண்ணுக்கு சந்தோசம் பகிர்ந்து கொள்ள புருசன்தான் வேண்டியிருக்கிறது. கோபத்தை முடித்து வைக்கும் விதமாக கத்தை மயிர் பிடித்து காட்டுமிராண்டி என்றாள். அதன் உட்பொருள் விளங்கவில்லை. ‘என்ன நாய் கடிச்சிருந்தா என்னாயிருக்கும்… அந்த மாதிரி செஞ்சிட்டியே…’ என்றாள். ‘கடிக்காதுன்னு தெரியும்,’ என்றேன். குழந்தை பாக்கியம் தனக்கு கிடைத்தது அந்த நாய்க்கு சிந்திய ஒருவேளை உணவினால்தான் என்று நம்பினாள். இது ஒரு அபத்தம். அந்த நாய் மூன்று குட்டி போட்டிருக்கிறது. அந்த குட்டிகளுக்கு இந்த கதையை அந்த நாய் சொல்லுமா தெரியாது, ஆனால் என் மனைவி என் குழந்தைகளுக்கு இந்தக் கதையை நிச்சயம் சொல்லுவாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *