காய்ச்சல்காரன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2012
பார்வையிட்டோர்: 7,171 
 

வாய் கைய்த்தது. உடல் கொஞ்சம் குளிர்ந்தது மாதிரி இருந்தது. நல்ல வெயில் எறித்த காலை நேரம். வெளியில் கூவிய குயில்கூட கொஞ்சம் உசார் இல்லாமல் கூவியமாதிரி இருந்தது. அம்மாவிடம் கேட்டு ஒரு பிளேன் ரீ குடித்தாயிற்று.

முற்றத்தில், நேற்று வந்திறங்கிய விறகுக் குற்றிகள் குவித்து வைக்கப்பட்டிருந்தன. மண்ணிறம், சாம்பல் நிறங்களில் காட்டு மரங்கள், ஒருவித வாசனையுடன். சில குற்றிகளில் பச்சை இலைகள் ஒன்றிரண்டு இன்னும் காயாமல் இருந்தன. பத்து மணிக்குக் கிட்ட விறகு கொத்த ஆள் வரலாம். குவியலாக இருந்த விறகுக் குற்றிகளை உருட்டி விட்டேன். ஓணான் ஒன்று அவசரமில்லாமல் ஓடியது.

“குரங்கு!, கால்ல விறகுக்குத்தி விழப்போகுது” அப்பா கத்திக் கேட்டது. அப்பா கோபமாக இருந்தால் ‘குரங்கு, கழுதை’ என விளிப்பார். கொஞ்சம் குஷி ‘மூட்டில்’ இருந்தால் ‘பெரிய பண்டி’ என்று கூப்பிடுவார். அக்காவை ‘மகாராணி’ என்றுமட்டும்தான் கூப்பிடுவார். ‘மகாராணியார்’ என்று சொன்னால் ஏதோ பிடிக்கவில்லை என்றாகும்.

“காச்சல்காரனை ஏன் திட்டுறியள்?” அம்மா சப்போர்ட்டிற்கு வந்தா.

“இன்னும் மாறல்லையே” அப்பா கிட்ட வந்து நெற்றியில் கை வைத்துப் பார்த்தார். “வெளிக்கிடு ஆஸ்பத்திரிக்கு” என்றார்.

****

“வாயை ‘ஆ’ காட்டு” டாக்குத்தர் ரோ(ர்)ச்லைற் அடித்துப்பார்த்தார். எனக்கு மனிசன் ஊசி போடப்போகிறாறோ என்றுதான் பயம் வந்தது.

“எத்தினை நாளாக் காச்சல்?” அப்பாவைப் பார்த்துக் கேட்டார்.

“மூண்டு நாளாச்சு”

“வயித்துக் குத்து, வயித்தோட்டம் இருக்கே?” எனக்குக் கொஞ்சம் வெட்கம். வெளியில் இருந்த ஆட்களுக்குக் கேட்டிருக்குமோ?

“இல்லை” அவசரமாக மறுத்தேன்.

“இவன் ஒழுங்காக கக்கூசுக்குப் போறேல்லை” என்று அப்பா சொல்ல வெட்கம் பிடுங்கித் தின்றது.

“கடைசியாக எப்ப போனவர்?” என்று டாக்குத்தர் அப்பாவைக் கேட்க, எழுந்து வெளியே ஓடலாம் போலிருந்தது.

டாக்குத்தரைப் பார்க்க எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மாதிரி இருப்பார், குண்டாகத் தள தள என்று. மீசை இல்லை. எப்பவும் புன்சிரிப்புடன் இருப்பார். என்றாலும் மனிசனைப் பார்த்தால் ஊசி ஞாபகம் வருவதால் நெஞ்சு கொஞ்சம் ‘பக் பக்’ என்று அடித்துக்கொள்ளும். இன்றைக்கு ஊசி போடவேண்டி வரவில்லை. மனிசன் குனிந்து சதுரவடிவ வெள்ளைத்தாளில் எழுதத் தொடங்கினார்.

“இதை எடுத்துப்பாருங்கோ, 3, 4 நாளில் மாறிவிடும்” என்றார்.

சின்ன மஞ்சள் குளிசைகள், சிவப்பில் இன்னொரு வகை (நக்கினால் மேல்பக்கம் இனிக்கும்), பிறகு கூட்டுக் குளிசைகள், காய்ச்சல் இருக்கும்போது விழுங்க வெள்ளைக் குளிசைகள் (காய்ச்சல் இருந்தால் மட்டும் எடுக்கவும்). இத்தோடு சிவப்புக் கலர் ‘சிரப்’ ஒன்றும் குடிக்கவேண்டும். ஒருபாதி மஞ்சளாகவும் மற்றப்பாதி சிவப்பாகவும் இருந்த கூட்டுக்குளிசைதான் எழுப்பமானது. காய்ச்சல் மாறின பிறகு பள்ளிக்கூடம் போனால் ‘கப்சூல்’ குளிசை விழுங்கித்தான் காய்ச்சல் மாறியது என்று பீற்றிக்கொள்ளலாம்.

கிளினிக்கில் இருந்து ஊசி போடாமல் வந்தது சந்தோஷம். என்றாலும் மிக முக்கிய வேலை ஒன்று மிச்சம் இருந்தது.

“அப்பா” உலகத்தின் ஆகத்திறம் அப்பாவை, ஆகத்திறம் மகன் கூப்பிடுகிறமாதிரிக் குரலை வைத்துக் கொண்டேன்.

“என்னடா?”

“வி.சு.க்.கோ.த்.து…” ஒருமாதிரி மெல்லமாக இழுத்துச் சொல்லிவிட்டு உண்மையாகவே கொஞ்சம் தயங்கினேன். அப்பா என்னைப் பார்த்தார். ஆள் இளகிவிட்டார். சைக்கிள் கணேஸ் கடையை நோக்கித் திரும்பியது. நான் உண்மையாகவே மகாராசா மாதிரிப் பாவனை பண்ணிக்கொண்டு சைக்கிள் ‘கரியலில்’ உட்கார்ந்து இருந்தேன்.

திரும்பி வரும்போது சைக்கிள் ஹாண்டிலில் கொழுவிருந்த வயர்க்கூடையில் இருந்த 250 கிராம் ‘நைஸ்’ பிஸ்கட்டிலும், தோடம்பழ இனிப்புச் சரையிலும்தான் மனம் இருந்தது.

“தம்பிமாருக்கும் குடுத்துத் தின்ன வேணும், தெரியுதே?”

“ம்ம்ம்.. ” அரைகுறை மனத்துடன் சொன்னேன்.

“கொக்கா கேட்கமாட்டாள், அவளுக்கும் ஒரு விசுக்ககோத்துக் குடு என்ன?”

“சரி அப்பா”. அக்காவிற்கு கொடுத்துவிட்டுத் திருப்பி வாங்குவது கஷ்டம் இல்லை.

****
பின்னேரம் தாத்தா வந்தார். கையில் இருந்த பையில் மூன்று செவ்விளநீர்களும் இரண்டு தோடம்பழங்களும்.

“இவனுக்குக் காய்ச்சல் எண்டு கேள்விப்பட்டன்”, உரத்த குரலில் சொல்லிக்கொண்டு வந்தார். இவர் மெல்லிய குரலில் சொன்னால்தான் அதிசயம். காய்ச்சல் நேரத்தில் இளநீர் எனக்குப் பிடிக்காது. யார் அதைக் கணக்கில் எடுத்தது? தாத்தா மொட்டைக் கத்தியால் ‘சத், சத்’என்று இளநீர் வெட்டுவது கேட்டது. குடித்தே ஆகவேண்டும். தப்ப முடியாது.

“இந்தக் காலத்துப் பெடியங்களுக்குக் காச்சல் பீச்சல் எண்டு எப்பவும்; நானும் இருந்தன், சின்னப்பிள்ளை வயதில ஒரு காச்சல் வந்திருக்குமே?” தாத்தா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார். எவர்சில்வர் கப்பில் இளநீர் வந்தது. இளநீரைக் குடிக்க ‘சத்தி’ வரும்போல் இருந்தது. ஒருமாதிரி அடக்கிக் கொண்டேன். தம்பிமார் இளநீர் வழுக்கைக்கும் ‘கயருக்கும்’ அடிபடத் தொடங்கினார்கள்.

****
இரவு நித்திரை கொள்ளமுடியவில்லை. இடையில் அப்பா வந்து வியர்த்துப் போயிருந்த தலையைத் கோதிவிட்டார்; பிறகு போர்வையை இழுத்துக் கழுத்துவரை மூடிவிட்டார். பிறகு அம்மாவும் அக்காவும் அதே வேலையை இரண்டு இரண்டு மணித்தியால வித்தியாசத்தில் செய்தார்கள்.

காலையில் எழும்போது தலை நல்ல ‘கிளியராக’ இருந்தது. பசியும் வயிற்றைக் கிள்ளத் தொடங்கியது. இனிக் காய்ச்சல் அடிக்கமாட்டாது என்று புரிய எதையோ இழந்தது மாதிரி இருந்தது.

————–
பண்டி – பன்றி
கொக்கா (யாழ் பேச்சு வழக்கு) – உனது அக்கா

– December 8, 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *