கானல் நீர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 30, 2023
பார்வையிட்டோர்: 2,114 
 
 

கதவில் நிழலாடியது போலத் தோன்ற, வாசலுக்கு வந்த ரவி வெளியே எட்டிப் பார்த்து ‘’வாங்க சார் என்ன விசேசம் எதாவது சமாச்சாரம் இல்லாமல் இப்போதெல்லாம் எங்க வீட்டுப் பக்கம் வரமாட்டிங்களே” என்று சிரித்தவாறு அப்பாவின் நண்பர் ஆனந்தை வரவேற்றான்.

உள்ளே வந்த ஆனந்த் ‘’அப்புறம் பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்? மனைவி உடல் நலம் எப்படி இருக்கிறது?” என்றார்.

“எல்லோரும் நல்லா இருக்காங்க.”

“உங்க மனைவி… ஏதோ சத்துணவு மையத்திற்கு வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்களே… என்னாயிற்று ரவி…”

“இரண்டாவது பெண் ரசி பிறந்ததிலிருந்து உடலுக்கு முடியல. வேலையை விட்டுவிட்டாள்.”

“அப்புறம் உங்களுக்கு வேலை இல்லை என கேள்விப்பட்டேன். எப்படி செலவெல்லாம் சமாளிக்கிறீர்கள்…”

“அது தான் சார்…” என்று ரவி ஆரம்பிப்பதற்குள் உள்ளே வந்த பிரபாகர் (ரவியின் தந்தை) “என்ன வெயில்” என தோளில் கிடந்த துண்டை எடுத்து துடைத்துக் கொண்டு “ஓய் ஆனந்த் எப்ப வந்தீர்?”

“இப்போது தான் வந்தேன் “என்றார்.

“ஓ! ஆனந்த் சார். அப்பா தான் உங்களை இங்க தூது அனுப்பிச்சாரா?” என்றான் ரவி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லேப்பா. சும்மா வந்து பாத்துட்டுப் போகலாம்னு… “ அவர் முடிப்பதற்குள் “எங்க அப்பாவிற்கு ஏன் என் எதிர்காலம் பற்றி புரியமாட்டேங்கிறது.” என்று கத்தினான் ரவி.

“டேய்… உன்னுடைய சூழ்நிலை… இப்பொதுள்ள அரசியல் சூழ்நிலை… உனக்குக் கிடைக்க வேண்டிய வேலைக்கு நீ தர விரும்புகிற பணம்… அது எப்படி…” என பிரபாகர் ஆரம்பித்தார்.

“சரி இப்போது இருந்து பேசி தீர்த்து விடுவது நல்லது. ” என்ற ரவி,

”ஆனந்த் சார். நீங்களும் வந்தது ஒரு விதத்தில் நல்லது தான், சொல்லுங்கப்பா” என்றான் ரவி.

”ரவி நீதான் சொல்லணும்.”என்றார் பிரபாகர்.

“நான் என்ன சொல்லணும்.”

“உங்க நண்பரைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க. நீங்க தான் சொல்லணும்” என்றான் ரவி.

ரவியின் மனைவி கீதா மூன்று கிளாசில் மோர் கொண்டு வைத்து விட்டுப் போனாள். மோரை எடுத்துக் குடித்து விட்டு “கீதா வேலைக்குப் போறதை நிறுத்தியாச்சி. ரவி உனக்கு நிரந்தரமான வேலை இல்லை. நானும் இரயிவே வேலையிலிருந்து ரிடையராகி பென்சன் வாங்கிக் கொண்டு ஏதோ அந்த வருமானத்தில் வண்டி ஓடுது.” என்று ஆரம்பித்தார் பிரபாகர்.

‘’உங்கள் வருமானத்தில் என்ன தான் செய்ய முடியும்? அதனால் தான் நான் அரசாங்க ஸ்கூல் டீச்சர் வேலைக்கு போறேண்ணு சொன்னேன்.” ரவி கோபப்பட ஆரம்பித்தான்.

ஆனந்த் இடைப்பட்டு “ரவி நீ கோபப்படுவதில் அர்த்தமில்லை. இருக்கிற அரசியல் சூழ்நிலை சரி இல்லை. வாத்தியார் வேலைக்கு ரெண்டு லட்சம் கொடுத்து வேலை கிடைக்கும் என்றால் ஓ கே. நல்ல விசயம் தான். ஆனால் அம்மா இறந்து போய் இருக்கிற அரசியல் சூழலில் நீ கொடுத்த பணமும் போய் வேலை கிடைக்காவிட்டால்….. “ என சொல்லிக் கொண்டிருந்த போது பிரபாகர் திரும்பவும் முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்து போய் ஓடிக் கொண்டிருந்த ஃபேனின் வேகத்தை அதிகரித்துவிட்டு “காசு என்ன கட்டியா வைத்திருக்கிறோம், தூக்கிக் கொடுக்க. இரயில்வே வேலையில் இருந்ததால் வேலையில் இருந்து ரிடையர் அங்கேயுள்ள குவார்ட்டஸில் தங்கி இருந்தோம். ஏதோ சேமிப்பில் இந்த இரண்டு கிரவுண்ட் தென்னந் தோப்பை வாங்கிப் போட்டேன். உன் கல்லாயணச் செலவு அது இது என வந்த பண்டு பணமெல்லாம் செலவாகிப் போக இன்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கிறோம்.

அந்த நிலத்தில் ஏதோ சுமாராக வருமானம் வருகிறது. என் பென்சன் பணத்தோடு எப்படியோ குடும்பம் நடத்துகிறோம்.

அந்தத் தென்னந் தோப்பை அடமானம் வைத்து இரண்டு லட்சம் வாங்கி உன் வாத்தியார் வேலைக்கு பணம் கொடுக்க வேண்டுமா? நாளைக்கு வேலை கிடைக்காவிட்டால்… முதலில் வேலை ஆர்டர் வரட்டும். அப்புறம் பணம் கொடுக்கலாம் என்று சொன்னேன்….” என்றார் முடிக்காமல்.

“சும்மா சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். பணம் கொடுக்கா விட்டால் வேலை தர மாட்டார்கள்.” என்று கத்தினானர் ரவி.

‘’சத்தம் போடாதே ரவி இந்தக் காலக் கட்டத்தில் நீ கொடுத்த பணத்திற்கு வேலை கிடைக்கவில்லை எனில் நாம் நடுத் தெருவில் தான் நிற்க வேண்டும். தோப்பையும் அடமானம் வைத்து பணம் கொடுத்து உனக்கு வேலை கிடைக்கவில்லை என்றால் தோப்பின் வருமானமும் போய்விட…

கொஞ்சம் யோசித்துப் பார். இப்போது தமிழக அரசியலின் சூழ்நிலையும் சரியில்லை. இதே நேரத்தில் இப்படி… எதாவது வம்பாகி பணம் போய்விட்டால்… உனக்கு வேலை கிடைக்காவிட்டால்.. ” என்று பிரபாகர் விட்டத்தைப் பார்த்தார்.

”தோப்பை வித்திருவோம்.” என்று கத்தினான் ரவி.

ஆனந்த் அவனைச் சமாதானப் படுத்தி “அதை வித்துட்டா…. உங்க அப்பா வாழ்ந்து முடித்தவர். உன்னுடைய வருங்காலத்தை யோசித்து தான் இவ்வாறு பேசுகிறார். அவர் வாங்கிய தென்னந்தோப்பை அவரா தூக்கிக் கொண்டு போவார்.

யோசித்துப் பார். இரண்டு லட்சம் பணத்தை இழந்து விட்டால் எப்படி நிர்க்கதியாய் நிற்பாய் என அப்பா பயப்படுகிறார் “ என்றார் ஆனந்த்.

“சார் தென்னந் தோப்பை அடமானம் வச்சி எனக்குப் பணம் தரமுடியுமா இல்லையாண்ணு கேட்டுச் சொல்லுங்க சார். இல்லேண்ணா ஆத்தில, கொளத்திலே விழுந்து குடும்பத்தோட செத்துத் தொலைக்கிறோம்.” கண்களில் நீர் வழிய கத்தினான் ரவி.

“ஏய் ரவி.. உனக்குப் பணம் தானே வேணும். நாளைக்கே ஏற்பாடு செய்கிறேன். போய் வேலையைப் பார்.” என்ற பிரபாகர், ”வா ஆனந்த் அந்தப் புரோக்கரை போய் பார்த்து விட்டு பணத்துக்கு ஏற்பாடு செய்யலாம்.” என்று எழுந்தார் பிரபாகர்.

மூன்றாம் நாள் செய்தித்தாளில் சின்னம்மா சிறைச்சாலை சென்றிட திரு.பன்னீர் செல்வம் பதவி இழந்திட புதிய தமிழக முதலமைச்சர் பதவி ஏற்ற அன்று அரசுப் பள்ளிகளில் ஆசீரியர் பணிக்கான வேலை ஒப்பந்தங்கள் ரத்து என்ற செய்தி முதல் செய்தியாய் வந்திருந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *