காத்திருந்து… காத்திருந்து…

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 3, 2012
பார்வையிட்டோர்: 11,732 
 
 

‘ஹா’ என்று இதயம் அதிர்ந்தது – கூடலழகர் கோயில் யானையின் துதிக்கையில் காசு கொடுத்து ஆசீர்வாதம் வாங்கிய இளம்பெண்ணைப் பார்த்து.

”மீனா!” என்றபடி அருகில் வந்தவனை வியப்புடன் பார்த்தாள் அவள். ”நான் மீனா இல்ல அங்கிள். என் பேரு ராதா. மீனா என் அம்மா. அவியளை ஒங்களுக்குத் தெரியுமா?”

உறைந்து நின்றான் மோகன். அச்சு அசலாக அப்படியே… மீனாவின் மகளா! அப்படியானால்..?

”மீனாவா… பரமக்குடி மீனாவா? அப்ப, உன் அப்பா..?” – தழுதழுத்த குரலில் கேட்டான்.

”என் அப்பா, நான் பொறக்கறதுக்கு முந்தியே என் அம்மாவைப் பிரிஞ்சுட்டாகளாம். ஏன் அங்கிள், அவியளையும் ஒங்களுக்குத் தெரியுமா?”

தலை சுற்றியது மோகனுக்கு. அதலபாதாளத்துக்குக் கால் நழுவியது.

”ராதா, அவிய உனக்கு அங்கிள் இல்லடா, பாக்கணும் பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தியே… அந்த உன் அப்பாதான் இவுக!” – நவக்கிரகங்களைச் சுற்றி வணங்கிவிட்டு வந்த ராதாவின் தாய் மீனா சொன்னபோது, ராதாவின் கண்களில் இருந்தது மகிழ்ச்சியா, வெறுப்பா? மோகனால் கண்டறிய முடியவில்லை.

”மீனா, நீயா? அப்படின்னா..?”

”ஒங்க பொண்ணுதேன்!” – மீனாவின் கண்களில் கண்ணீர் பிரவாகமாகப் புறப்பட்டது.

கூடலழகர் கோயிலின் ஒதுக்குப்புறப் பிராகாரத்தில் மூன்று பேரும் உட்கார்ந்து ஏன் கண் கலங்குகிறார்கள் என்று அந்தப் பக்கமாகப் போனவர்கள் கேள்விக்குறியுடன் பார்த்தார்கள்.

2

20 நீண்ட வருடங்கள்…

பரமக்குடி மாமா வீட்டில் தங்கி கல்லூரிக்குப் போய் வந்துகொண்டு இருந்தான் மோகன். வீட்டுக்குப் பக்கத்தில் காலியாக இருந்த இடத்தில் வாலிபால் வலை கட்டி இளைஞர் பட்டாளம் விளையாடுவது வழக்கம். அதில் அற்புதமாகச் சாதனை காட்டிய மோகனை விளையாட்டுப் பொட்டலை ஒட்டிய வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்து ரசித்தாள் மீனா.

இருவரும் ஒரே கல்லூரியில் படித்தது வசதியாகப் போய்விட்டது. விடுமுறை நாட் களின் மாலை வேளைகளில் வைகை ஆற்றில் இறங்கி மணலில் நடந்து எதிர்ப்புறம் எமனேஸ்வரத்துக்குத் தோழிகளுடன் போய் கரையோரம் அமர்ந்து பேசுகையில், மோகனும் அவன் நண்பர்களும் வந்துவிடுவார்கள். இளமைத் துள்ளலுடன் மீனாவும் மோகனும் எந்நேரமும் கேலி பேசி நையாண்டி செய்ததும், அடிக்கடி யாருக்கும் தெரியாமல் சினிமாவுக்குப் போனதும், பெருமாள் கோயில் படித்துறை பக்கத்து நூலகத்தில் போய் நல்ல நூல்களைத் தேடியெடுத்து, ஒருவருக்கொருவர் மாற்றிப் படித்ததும்…

மீனாவின் வீட்டுக்கு விஷயம் தெரியவந்தபோது விபரீதம் ஆரம்பித்தது. ”வெளியூர்க்காரப் பய நீ! என்ன சாதியோ… கருமமோ… ஒனக்கு எங்க பொண்ணு கேக்குதோ?” என்று நடுத் தெருவில் போட்டு அவனை மிதித்துத் துவைத்தார் மீனாவின் அண்ணன். வீட்டாரும் ஆளுக்கொரு கட்டையுடன் அவனைத் தாக்கினார்கள். தெருவே கூடி வேடிக்கை பார்த்தது.

கொதித்து எழுந்த மீனா, ”என் அண்ணனுக்கும் குடும்பத்துல மத்தவங்களுக்கும் சரியான பாடம் படிச்சுக் கொடுக்கணும். வர்ற வாரம் நாம மதுரைக்குப் போறம். அங்கே நம்ம கல்யாணம் நடக்கணும்!” என்று உறுதியாகச் சொன்னாள். நடுக்கத்துடன் அவளைப் பார்த்தான் மோகன்.

அடுத்த வாரம் அவர்கள் மதுரைக்குப் போய், மாசி வீதி மொட்டைப் பிள்ளையார் கோயிலில் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டார்கள்.

முனிச்சாலையில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்குப் பிடித்து, வாழ்க்கை தொடங்கியது. சிட்டுக்குருவிகளாகச் சிறகடித்துப் பறந்த இளம் ஜோடிக்கு எண்ணற்ற எதிர்காலக் கனவுகள்… மோகனுக்கு மட்டும் மீனாவின் அண்ணன் வீச்சரிவாளோடு துரத்தித் துரத்தித் தாக்க முயல்வதாகக் கனவுகள் வரும். இரவில் திடுக்கிட்டு எழுவான். வியர்வையில் உடம்பு குளித்திருக்கும். நடுங்கும் அவனை இறுக்கிக் கட்டிக்கொண்டு, ”பயப்படாதீங்க அத்தான், என்ன இது, சின்னக் கொழந்தையாட்டம்?” என்று மீனாதான் தேற்றுவாள்.

தெற்கு ஆவணி மூல வீதி மொத்த வியாபார ஜவுளிக் கடை ஒன்றில் அவனுக்குக் கணக்கு எழுதும் வேலை. ஒருநாள் வேலைக்குப் போய்விட்டு வீடு திரும்பியவன் தன் வீட்டருகில் வெள்ளை நிற கார் நிற்பதைப் பார்த்துத் தொலைவிலேயே நின்றான். அதிலிருந்து வாட்டசாட்டமான ஆட்கள் இறங்கினார்கள். மீனாவின் அண்ணன் தங்கராஜ் அவர்களில் ஒருவன். அனைவரின் கையிலும் அரிவாள்.

மீனாவின் அண்ணன் கையில் சிக்கினால், கொல்லாமல் விட மாட்டான். ஒரு கணத்தில் முடிவெடுத்தவன், முகத்தை கர்ச்சீப்பால் மறைத்தபடி தலை குனிந்து விறுவிறுவென்று திரும்பி நடந்தான். அவன் போய்ச் சேர்ந்த இடம், மதுரை ரயில்வே ஜங்ஷன். ரயில் எந்த ஊருக்குப் போகிறது என்ப தைக்கூட கவனிக்காமல் ஏறிவிட்டான். தன்னை விடாமல் அந்தக் கூட்டம் துரத்தி வருவதான நினைவு அவனை உலுக்க, உடம்பு தெப்பலாக வியர்த்துக்கொட்டியது. வண்டி கிளம்பியதும்தான் மூச்சுவிட்டான்.

3

”எங்கே அந்தக் களவாணிப் பய புள்ள?” ஆவேசமாக உள்ளே நுழைந்த கூட்டம் மீனாவைப் பார்த்துத் திடுக்கிட்டது.

”வாங்கப்பு, வாங்க. தங்கச்சிக்குக் கல்யாணச் சீர் கொண்டுவந்தீகளோ?” – கையில் அரிவாள்மணையுடன் நக்கலாகக் கேட்டாள் மீனா. ”சொத்துபத்தும் ஆள்பலமும் இருக்கிற தெகிரியத்துல வெளியூர்க்காரப் புள்ளையை நடுத்தெருவுல வெச்சு அடிச்சு மானக்கேடு பண்ணினீக. இங்கே எந்த மூஞ்சியோட வந்திருக்கீக?”

”ஏய், என்னா வார்த்தை நீளுது? அந்தப் பய எங்கே? அவனைக் கொல்லாம விட மாட்டோம்!”

”இங்ஙன தப்பு செய்தவ நாந்தேன். என்னியக் கொல்லுங்கப்பு. நீங்க என்ன கொல்றது? ஒரு அடி எடுத்துவெச்சீங்க, நானே என் கழுத்தை வெட்டிக்கிடுவேன். தெகிரியம் இருந்தா வாங்க!” – ஆவேசமாகக் கத்தினாள் மீனா.

தங்கராஜும் உடன் வந்தவர்களும் திகைத்து நின்றார்கள்.

”எப்ப என் மனசுக்குப் பிடிச்ச அப்புராணி மனுசரை நடுத்தெருவுல போட்டுக் காட்டுத்தனமா அடிச்சு அவமானப்படுத்தினீயளோ, அன்னிக்கே ஒங்க ஒறவு முடிஞ்சுபோச்சு. போங்க!”

தங்கராஜு திரும்பி நடந்தார். கூடவே அவருடைய நண்பர்களும்.

4

கணவன் வேலை முடிந்து வருவான் என்று காத்திருந்தவள், வருடக்கணக்காகக் காத்திருக்க வேண்டிய தன் தலைவிதியை நினைத்துக் கண்ணீர்விடாத நாளில்லை.

உறவுகளும் கைவிட்டன. கொண்டவனும் சொல்லாமல்கொள்ளாமல் ஓடிப் போய்விட்டான். எதிர்காலம் இருளா கத் தெரிந்தது. இரண்டே மாதங்களில் மாற்றம் தெரிந்தது. காலையில் வெறும் வயிற்றில் இரைச்சல், வாந்தி, குமட்டல்… ஒரு மாதமே வாழ்ந்தவனின் வாரிசு தன் வயிற்றில் வளர்வது தெரியவந்து துவண்டாள்.

யார் கையையும் எதிர்பாராமல் வாழ மனதுள் உறுதி எடுத்தாள். கணவன் வேலை பார்த்த கடையில் சேல்ஸ் வுமன் வேலை கிடைத்தது. கிடைத்த வருவாயில் வயிற்றுப்பாடு, சின்ன போர்ஷனில் வாழ்க்கை என்று ஓடியது. அக்கம்பக்கத்து மனிதர்கள் தங்கமானவர்களாக இருந்து உதவி செய்தார்கள்.

ஆறு மாதங்கள் கழித்து, மோகனிடம் இருந்து கடிதம் வந்தது. ”உன் குடும்பத்தாரின் கோபம், உன் அண்ணன் தூக்கிக்கொண்டு அலையும் வீச்சரிவாள் இதையெல்லாம் எதிர்க்கும் சக்தி எனக்கு இல்லை. நான் உன்னை உயிருக் கும் மேலாக நேசிக்கிறேன்… என்றும் நேசிப்பேன். ஆனால், நாம் சேர்ந்து வாழ்வது அந்தத் தெய்வத்துக்கே பிடிக்கலை போலிருக்கு. என்னை மன்னித்துக்கொள்!” என்ற கடிதத் தில் அவனுடைய முகவரி இல்லை.

காலம் ஓடியது. குழந்தை ராதா வளர்ந்தாள்.

அவனுடைய செயல்களுக்கு அடிப்படை அவனுடைய கோழைத்தனம் என்பது அவளுக்குப் புரிந்ததால், சலிப்பு வந்ததே தவிர… அவன் மீது கோபமோ, வருத்தமோ இல்லை.

5

கூடலழகர் கோயிலில் இருந்து அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினார்கள். முனிச்சாலை வீட்டில் இருந்து மாறியாயிற்று. அரசரடியில் ஒரு சின்ன போர்ஷன். கச்சிதமாக, சுத்தமாக இருந்தது. வீட்டுச் சுவரில் மோகனும் மீனாவும் திருமணத்தன்று எடுத்த புகைப்படம் மாட்டப்பட்டு இருந்தது. குற்ற உணர்வு குறுகுறுத்தது மோகனுக்கு.

ராதா குடிக்கத் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். காபி போட உள்ளே போனாள்.

”ஒங்களை எப்படியும் பார்த்துப்புடணுமின்னு ஒரு மாசமா மனசுக்குள் நெனைப்பு. வருஷப்பிறப்பு அன்னிக்கு நீங்க எங்கே இருந்தாலும், கூடலழகர் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் பண்றது வழக்கம்னு என்கிட்டே சொல்லிஇருக்கீக. இந்த இருவது வருஷமா ஒங்களைத் தேடணும், பார்க்கணும்னு நினைக்காத நான், இன்னிக்கு அவசியம் பாக்கணும்னு காலையில இருந்து கூடலழகர் கோயில்லயே காத்துக்கெடந்தேன். நான் கும்பிடற மீனாச்சி ரொம்பவும் சக்தி வாஞ்சவ. அவ எனக்கு ஒங்களைக் காட்டித் தந்துட்டா!” – பேசிக்கொண்டே போன மீனாவை ஏதும் புரியாமல் பார்த்தான் மோகன்.

”ஆமுங்க அத்தான்! என்னோட வாழ வாங்கன்னு ஒங்களைக் கூப்பிட எனக்கு மனசு இல்ல. இத்தினி வருசத்துக்கப்புறம் எனக்கு அது தேவையுமில்ல. ஆனாலும், ஒங்க ஒதவி இப்பம் எனக்குத் தேவையாயிருக்கு…”

”உதவியா?”

”பயந்துப்புடாதீக அத்தான்! ராதாப் புள்ளைக்கு செவகெங்கைலேர்ந்து ஒரு சம்பந்தம் வந்திருக்கு. கூடப் படிக்கிற பையன். இவளைக் கட்டியே தீரணும்னு ஒத்தக் கால்ல நிக்குது. அடுத்த மாசம் நிச்சியம் வெச்சுக்கலாம்கிறாக. எனக்குக் கையும் ஓடல, காலும் ஓடல. மாப்பிள்ளை வீட்டுக்காரவுக பொண்ணோட தகப்பனார் யாருன்னு கேட்டா நான் என்ன பதில் சொல்றது? நீங்க ஒங்க பொண்ணு நிச்சயத்துக்கும் கல்யாணத்துக்கும் ‘அப்பா’ன்னு சபையில வந்து நில்லுங்க. அப்புறம் ஒங்க வழியைப் பாத்துக்கிட்டுப் போயிடுங்க. யாராச்சும் கேட்டா, ‘மறுக்கவும் எங்களுக்குள்ளாற சண்டை வந்துடுச்சு. கோவிச்சுக்கிட்டுப் போயிட்டாக’ன்னு ஏதாச்சும் சொல்லிச் சமாளிச்சுக் கிறேன். எங்களுக்காவச் செய்வீகளா?” – கண்ணில் நீருடன் யாசித்தாள் மீனா.

20 வருடங்கள்… அவளே தன் சொந்தக் காலில் நின்று ஒரு வாரிசையும் பெற்றுச் சுமந்து எந்தத் துணையும் இல்லாமல் ஆளாக்கியிருக் கிறாள். அவள் இப்போது வைத்திருக் கும் கோரிக்கையில் உள்ள நியாயம் மோகனை உலுக்கியது.

”மீனா, நான் ஒனக்கு நெறய கஷ்டம் கொடுத்துப்புட்டேன். என்னுடைய கோழைத்தனத்தால, அன்னிக்கு உன் அண்ணன் அடியாட்களோட கார்ல வந்து இறங்கியதைப் பாத்துப் பயந்து ஓடிட்டேன். சென்னைக்குப் போனேன். நண்பன் ஒருத்தன் அடைக்கலம் கொடுத்தான். அவனோட ரியல் எஸ்டேட் பிசினஸ்ல உதவியா இருந்தேன். நெளிவுசுளிவு பழகி, அதே தொழிலைத் தனியாச் செய்யத் தொடங்கி நிறையப் பணம் சம்பாதிச்சேன்.

பணம் சேந்த அளவுக்குப் பயமும் இருந்துச்சு. ஒன்னைப் பார்க்கணும், ஒன்னை அழைச்சுக்கிட்டு வரணும்னு ஆசை. ஆனா, ஒன் பெரிய அண்ணன் தங்கராஜ் மேல இருக்கிற பயம் குறையல.

நீ இத்தனை காலம் கழிச்சு, ஒரு கோரிக்கை வெச்சே. அப்பா ஸ்தானத்துல வந்து என்னை நிக்கச் சொல்றே. ரொம்ப நியாயம். ஆனா, அதுல எனக்கு ரெண்டு பிரச்னை இருக்கு. ஒண்ணு, நான் இங்கே வந்தது ஒன் அண்ணனுக்குத் தெரிஞ்சு அரி வாளோட வருவாருங்கிற பயம். என்னால மறுபடியும் அவமா னப்பட முடியாது.”

சோகத்திலும் மீனா சிரித்தாள். ”நீங்க இன்னும் எந்தக் காலத் துல இருக்கீக? என்னை எங்க வீட்டாரும் எங்க வீட்டாரை நானும் எப்பவோ தலை முழுகியாச்சு. என் அண்ணன் ஹார்ட் அட்டாக்ல போயி அஞ்சு வருசம் ஆச்சு.”

”என்னது, ஒன் அண்ணன் தங்கராஜ் காலமாகிட்டாரா?” – சிறிது நேரம் மௌனமாக இருந்த மோகன் பேசினான்… ”அடுத்த பிரச்னை கொஞ்சம் சிக்கலானது. சொல்லவே கஷ்டமா இருக்கு மீனா. ஒன்னைப் பிரிஞ்சுபோன ஒரு வருஷத்துல என் ஃப்ரெண்ட் பிரகாஷின் தங்கை பிரியாவை நான் கல்யாணம் பண்ணிக்க வேண்டியதாப்போச்சு. ஆண் ஒண்ணு, பெண் ஒண்ணுன்னு ரெண்டு கொழந்தைகள். காலேஜ் படிப்பு முடிக்கிற நிலையில் இருக்காங்க. நான் இங்கே வந்து ஒரு வாரம், பத்து நாள் தங்கினா அங்க என் வீட்ல பிரச்னையாகும்னு பாக்கிறேன். நான் என்ன சொல்லி அவளைச் சமாளிக்கறது?”

”நிறுத்துங்க!” – அலறினாள் மீனா. அக்கினிப் பிழம்பாக அவள் விழிகள் கொதித்தன.

”வெளியே போங்க!” – உடம்பு நடுங்கியபடி, ஆவேசமாக அவள் வலது கை வாசலைச் சுட்டிக் காட்டியது.

ஓடி வந்து அம்மாவின் தோளைப் பற்றிய ராதா, ”அம்மா, ப்ளீஸ் காம் டவுன்!” என்று சமாதானப்படுத்தினாள்.

சந்நதம் வந்தவள் போல் தன் நெற்றியில் இருந்த குங்குமப் பொட்டை அழித்தாள் மீனா. தலையில் சூடியிருந்த குண்டு மல்லிகைச் சரத்தைப் பிய்த்து வீசினாள். அதே வேகத்தில் கழுத்தில் இருந்த திருமாங்கல்யக் கயிற்றையும் வலுவாக இழுத்து வீசி எறிந்தாள்.

திடுக்கிட்டு நின்றான் மோகன்.

அவனை நேருக்கு நேர் பார்த்துச் சொன்னாள், ”என்னால் ஒரு கோழைக்கு மனைவியா வாழ முடியும்… அந்தக் கோழை என்னோடு இல்லாவிட்டாலும்! ஆனா, ஒரு துரோகிக்கு மனை வியா என்னால ஒரு நொடிகூட இருக்க முடியாது. ஒங்க உதவி எனக்குத் தேவையில்ல. என் மகளுக்குத் தகப்பனாரா சபையில் நிக்க உங்களுக்கு அருகதையே கெடையாது. நான் ஒரு பித்துக் குளி… என் புருஷன் எப்பவோ செத்துப் போயிட்டாருன்னு தெரியாம பூவோடும் பொட்டோடும் வாழ்ந்துட்டிருக்கேன்!”

– 03-06-09

ஜே.வி.நாதன்,பொறுப்பாசிரியர்,‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ்,சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார். சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களை நேரில் தரிசித்து, அவை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *