காதல் தர வந்தேன்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2024
பார்வையிட்டோர்: 4,488 
 
 

(2001ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 9-10 | அத்தியாயம் 11-13

அத்தியாயம்-11

பிறருக்கு நாம் செய்யும் பணிவிடை, கட்வுளுக்கு நாம் தரும் காணிக்கையாகும். நல்ல மனசுள்ளவர்களின் பணிவிடையும் பிரார்த்தனையும் ஒருநாளும் வீண் போனதில்லை. 

ஐந்தே மாதத்தில் குணவதி முழுக்க குணமாகி விட்டாள். அவளால் நன்றாகப் பேச முடிந்தது. நடக்க முடிந்தது. இதை தினகரே எதிர்பார்க்க வில்லை. ஆனந்த அதிர்ச்சியில் அம்மாவை அணைத்துக் கொண்டான். 

“தினகர்…” என்று கண்ணீர் தளும்ப மகனின் உச்சியில் முத்தமிட்டாள் குணவதி. 

“அம்மா… உங்க வாயால் என் பேரை கேட்டு எத்தனை வருஷமாச் சும்மா. எனக்கு இப்ப எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? கூப்பிடும்மா வாய் நிறைய என் பேரை சொல்லி கூப்பிட்டுக்கிட்டே இரும்மா!” 

“தினகர்… என் மகனே!” என்று சந்தோஷத்துடன் விம்மினார். 

“உன்னை பழையபடி திருப்பிக் கொடுத்த நம்ம டாக்டருக்கு நாம் ஏதாவது பெரிய பரிசர் தரணும் போலிருக்கும்மா!” 

“தினகர்.” 

“என்னம்மா?” 

“டாக்டர் கொடுத்த மருந்து மாத்திரையைவிட என்னை ஒரு குழந்தையை மாதிரி ஒரு தாய் ஸ்தானத்துல இருந்து பார்த்துக்கிட்ட மீனாவுக்குதான் நாம் பரிசு கொடுக்கணும். எனக்கு ஒரு பொண்ணு இருந்திருந்தாக் கூட இந்தளவு கவனிச்சு இருப்பாளாங்கிறது சந்தேகம்தான். ஆனா, கொஞ்சம் கூட முகம் சுளிக்காம எனக்கு சேவை பண்ணின மீனாவின் மனசு யாருக்கும் வராது தினகர்.” 

“மீனா…. மீனா….. மீனா! அப்படி யென்ன பண்ணிட்டா? சும்மாவா பண்ணினா? சம்பளம் வாங்கலே? வேளா வேளைக்கு மூக்கு பிடிக்க சாப்பிடலே? யாருமில்லாத அனாதைக்கு, புருஷனை இழந்த விதவைக்கு இப்படியொரு ராஜ வாழ்க்கை எளிதாக கிடைச்சிடுமா? சும்மா, இலவசமா வந்து சேவை செய்ய சொன்னா… செஞ்சிருப்பாளா? சம்பளம் கொடுத்தோம். வேலை செஞ்சா. அதோட முடிஞ்சு போச்சு. அது மட்டுமில்லே…” 

“…”

“அவளை இங்கே வேலைக்கு சேர்த்ததே உங்களுக்காகத்தான். இப்ப நீங்க முழுக்க குணமாயிட்டீங்க. இனி அவளுக்கு இங்கே வேலையில்லே… அவளோட கணக்கை முடிச்சிட்டு அனுப்பிட போறேன்.” 

“தினகர் வேணாம்ப்பா… பாவம் அந்தப் பொண்ணு! இவ்வளவு சின்ன வயசிலே பூவையும், பொட்டையும் இழந்துட்டு நிக்கறா! நாம் அப்படியொண்ணும் சம்பளத்தை அள்ளிக் கொடுத்திடலே இருந்தாலும் அந்தப் பணத்துக்காக வயித்துப் பசிக்காகத்தானே… ஊர்விட்டு ஊர் வந்து இங்கே வேலை செய்யறா? அவ வயித்திலே அடிக்கிற பாவத்தை நாம செய்ய வேணாம் தினகர். நம்மகிட்டே எத்தனையோ பேர் வேலை செய்யறாங்க. அதுல ஒருத்தியா அவளும் இருந்திட்டு போகட்டுமே. பாவம்ப்பா… சின்னப் பொண்ணு” மீனாவுக்காக மகனிடம் கெஞ்சினாள்.

“அம்மா… நீங்க அவளுக்கு ரொம்ப இடம் தர்றீங்க…!” 

“அவளும் என்னை மாதிரி ஒரு பொண்ணுதானே? நானே அவளுக்கு உதவலேன்னா… நான் மனுஷியா இருக்கவே தகுதியில்லே. அவளுக்கு இந்த வீட்லேயே ஏதாவது ஒரு வேலை போட்டு கொடுத்திடலாம்…” 

“சரி… சரி… அவளையும் இந்த வீட்லே ஒரு வேலைக்காரியா சேர்த்துக்குங்க. வீடு சுத்தமா இருக்கணும். ஒரு குப்பை காகிதம் பார்த்தாக் கூட அவ சீட்டை கிழிச்சிடுவேன்” போனால் போகட்டும் என்று சம்மதித்தான். 

“இந்த மட்டுமாவது சம்மதிச்சியே… ரொம்ப நல்லது தினகர்.” என்றாள் குணவதி. அவளுக்கு மீனாவை விட்டுப் பிரியவே மனசில்லை. அவளின் சாந்தமான முகம் அவளுக்கு மிகவும் பிடித்து விட்டிருந்தது. 

அன்றிலிருந்து மீனா ஆயா பதவியிலிருந்து இறக்கப்பட்டு வேலைக்காரி களில் ஒருத்தியானாள். இந்த வேலைதான் என்றில்லாது எல்லா வேலையும் செய்தாள். 

மார்க்கெட் செல்வாள், தோட்ட வேலை செய்வாள், பாத்திரம் தேய்ப்பாள், வீட்டை துடைப்பாள், எல்லாமே செய்வாள். 

மீனா எதற்காகவும் முகம் சுளிக்கவில்லை. அவள் எந்த வேலையும் செய்ய தயாராய் இருந்தாள். அவளுக்குத் தேவை இரண்டு வேளை உணவும், பாதுகாப்பான இடமும்தான். 

இந்த இரண்டு தேவைகளுக்காக அவள் தன் பொட்டையும், பூவையும் அல்லவா இழந்திருக்கிறாள். மண மேடையில் ஏறியதில்லை. மேள தாளம் முழங்க தாலியை கட்டிக் கொள்ளவில்லை. அட்சதை தூவவில்லை. ஆனால் மீனா விதவை. 

சிலசமயம் இதை நினைத்து அவளுக்கு சிரிப்பும் வரும், அழுகையும் வரும். 

‘அப்பா… எனக்கு ஒரு கல்யாணம் பண்ணிப் பார்க்க எவ்வளவு ஆசைப்பட்டீர்கள்? ஆனால் கல்யாணமே நடக்காமல் விதவையாகி விட்டேன் அப்பா! இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரிந்திருந்தால், மகாராஷ்ட்ரா வேலைக்கு போயிருக்க மாட்டீர்கள் அல்லவா? படித்து முடித்து நல்ல வேலைக்குப் போக ஆசைப்பட்டேன்; முடியலேப்பா. இந்த உலகம் ரொம்ப மோசம். எங்குமே எனக்கு பாதுகாப்பு கிடைக்கலேப்பா. அதனாலதான். எவ்வளவு திட்டினாலும் பொறுத்துக்கிட்டு இங்கேயே வேலை செய்யறேன். இங்கே எனக்கு எந்த பயமும் இல்லேப்பா’ அப்பாவின் போட்டோவை எடுத்து வைத்துக் கொண்டு கண் கலங்குவாள். 


மீனாவை எதையாவது சொல்லி திட்டிக் கொண்டும், விரட்டிக் கொண்டும் இருப்பதில் சுபாவை பழி வாங்கும் திருப்தி ஏற்பட்டது தினகருக்கு. 

அன்று அப்படித்தான். 

பொள்ளாச்சியிலிருந்து குணவதியின் தங்கை குடும்பம் குன்னூருக்கு வந்திருந்தது. எல்லோரும் மொத்தமாய் அமர்ந்து கலகலப்பாய் சிரித்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். மீனாதான் அனைவருக்கும் உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள். 

“இங்கே இதை வை.. அங்கே அதை வை!” என்று ஆளாளுக்கு அவளை விரட்டிக் கொண்டிருக்க பம்பரமாய் சுழன்றுக் கொண்டிருந்தாள் மீனா.

“மட்டன் குருமா.. நல்ல காரமா மணமா சூப்பரா இருக்குக்கா!” ரசித்து சாப்பிட்டாள் குணவதியின் தங்கை.

“எல்லாம் இந்த மீனாவோட கைமணம் தான். அற்புதமா சமைக்கிறா!” அம்மா பாராட்டு பத்திரம் வழங்கினாள். 

தினகருக்குள் எரிந்தது. 

“ஏய்…. கொஞ்சம் குருமா விடு!” அதட்டலாய் அழைத்தான். 

மீனா பரபரப்பாய் அவன் அருகே வந்து பரிமாற…. அந்த பதற்றத்தில் ஒரு துளி குழம்பு அவன் சட்டையில் பட்டுவிட… அந்த சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்தவனாய்… “நாயே… கண்ணு தெரியலே உனக்கு?” என்று பளாரென்று அவளை அறைய… கையிலிருந்த குழம்பு பாத்திரம் எகிறி அவள் முகத்திலேயே கொட்டி விட்டது. 

சூடும், காரமும் முகம் முழுக்க பரவ, “அம்மா…” என்றலறியபடி துடித்து விட்டாள் மீனா.. 

தினகர் குழம்பு முகத்தில் கொட்டி விடும் என்று எதிர்பார்க்கவில்லை. குற்ற உணர்வில் அங்கிருந்து எழுந்து போய்விட்டான்.
குணவதிதான் துடித்துப் போய் விட்டாள்.

“அம்மாடி…. மீனா…. என்னம்மா ஆச்சு?” 

“அம்மா… எரியுதும்மா… கண்ணை திறக்க முடியலேம்மா!” மீனா அழுதாள். 

குணவதிக்கு தாங்க முடியவில்லை. டாக்டரை வரவழைத்தாள். முகம் ரத்தமாய் சிவந்துப் போய் விட்டது. கண்களில் எரிச்சல் அடங்கவேயில்லை. தூக்கமேயில்லாமல் மூன்று நாட்கள் அவஸ்தைப் பட்டாள்.

நான்காவது நாள் எழுந்து நடமாடினாள். கண்கள்தான் கோவைப் பழமாய் சிவந்திருந்தது. 

“அவன்தான் கோபக்காரன்னு தெரியுதில்லே. கொஞ்சம் நிதானமா செய்யக் கூடாதா? பார்த்து பரிமாறக் கூடாதா? மீனா இப்ப எப்படி இருக்கு, வலிக்குதா?” பரிவாய் கேட்டாள் குணவதி. 

அந்த அன்பான வார்த்தையில் கரைந்துப் போனாள் “இப்பப் பரவாயில்லேம்மா. தப்பு என் பேர்லதான். நான் இனிமே கவனமா நடந்துக்கறேன்ம்மா!” என்றாள். 

தோட்டத்திலுள்ள குப்பைகளை எல்லாம் அகற்றி… தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தாள். 

எப்போதாவது மாலை நேரங்களில் வாக்கிங் போவது தினகரின் பழக்கம். அன்றும் அப்படித்தான் வாக்கிங் போனபோது… விசும்பல் சப்தம் கேட்டு அரண்டு நின்று விட்டான். 

‘யார் அழுகிறார்கள்? அதுவும் நம் தோட்டத்தில்?’ வியப்பு மேலிட சுற்றுமுற்றும் பார்த்தபோது ஒரு மரத்தின் பின்னால் அசைவு தெரிய… -ஆர்வமாய் முன்னேறினான். 

அங்கு…. 

மரத்தோடு மரமாய் சாய்ந்துக் கொண்டு, கண்கள் மூடி… இதயத்து வேதனைகளெல்லாம் விசும்பலாய் வடிவெடுக்க… மாலை மாலையாய் கண்ணீர்விட்டபடி நின்றிருந்தாள் மீனா. 

அந்தக் காட்சி… அவனை வெகுவாய் பாதித்தது. 

இந்தக் கண்ணீருக்கு என்ன காரணம்? நானா? அவனுள் கேள்வி எழ…. அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் வந்த சுவடே தெரியாமல் திரும்பி நடந்து விட்டான். 


அந்த சம்பவத்திற்குப் பின் மீனா அவன் கண்களில் அதிகமாய் தென்படுவதில்லை. 

அவன் அறையை சுத்தம் செய்வதெல்லாம் அவன் இல்லாதபோதுதான். அவள் கண்களில் தென்படாதது அவனுக்கும் நிம்மதியாக இருந்தது. 


“மீனா.மீனா.” அம்மாவின் குரல் கேட்டு தினகர் எட்டிப் பார்த்தான்.

‘அவளைப் பார்த்து எவ்வளவு நாளாகி விட்டது?’ என்ற யோசனையுடன்.

“இல்லேம்மா… மீனாவை நான்தான் மார்க்கெட்டிற்கு அனுப்பி வெச்சிருக்கேன்.” என்றபடி வந்தாள் சமையல்காரி அகிலாண்டம். 

“ஏன் அகிலாண்டம்! உனக்கு எத்தனை முறை சொல்லுவேன்? கடைக்கெல்லாம் மீனாவை அனுப்பாதேன்னு. அவ சின்னப் பொண்ணு, எல்லார் கண்ணும் ஒரே மாதிரியாவா இருக்கும்? மழை வேற பேயாட்டம் பெய்யுது! வேலனை அனுப்பி இருக்கக் கூடாதா? பாவம்… மழையில மாட்டிக்கிட்டு எங்கே அவஸ்தைப்படறாளோ…?” அம்மா கோபமாய் கத்தினாள். 

அடுத்த கணம். தினகரின் கால்கள் தன்னிச்சையாக நடந்து போர்டிகோவிற்கு சென்று காரில் ஏறியமர்ந்தான். 

“தினகர்… இந்த மழையிலே நீ எங்கேப்பா போறே?”

“அவசரமா எஸ்டேட் போக வேண்டியிருக்கும்மா!” சரேலென காரை உசுப்பி புறப்பட்டான். 

“இந்த மழையிலா?” கவலையாய் ஒலித்த அம்மாவின் குரல் அவன் காதில் எட்டவில்லை. 

மார்க்கெட் நோக்கி செலுத்தினான். மழையினால் கூட்டம் அதிகமில்லை. 

மீனாவை அவன் பார்த்து விட்டான். 

மழை கொட்டுவதை கூட பொருட்படுத்தாமல் தெப்பலாய் நனைந்து காய்கறி வாங்கிக் கொண்டிருந்தாள். குளிர் காற்றில் அவள் தேகம் நடுங்கிக் கொண்டிருந்தது. 

‘இப்படியா நனைவது? மழை விடும் வரை எங்காவது ஒதுங்கியிருக்கலாம் அல்லவா?’

அவளோ காரியமே கண்ணாக வாங்குவதை வாங்கிக்கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தாள் மழையில். 

தினகர் காரை விட்டிறங்கி அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். முழுக்க நனைந்து விட்டோம் என்பதை கூட உணராமல்… ஏன் வந்தோம், எதற்காக வந்தோம் என்றே புரியாத நிலையில் வெகு நேரம் நனைந்து கொண்டிருந்தான் தினகர். 

அத்தியாயம்-12 

சிரிப்பலையில் அந்த இடமே அதிர்ந்தது. 

ரொம்ப நாட்களுக்குப் பிறகு தினகர் மனம்விட்டு சிரித்தான். 

பின்னே இருக்காதா? அவனுடன் படித்த கல்லூரித் தோழர்கள் ஏழெட்டு பேர் இத்தனை வருடத்திற்குப் பிறகு வந்திருக்கின்றனர். இரண்டு நாட்கள் இங்கே தங்கி விட்டு செல்வதாக திட்டம். மகிழ்ச்சிக்கு பஞ்சமிருக்குமா என்ன? 

அவர்களுக்காக தினகர் இரண்டு நாட்களும் எஸ்டேட் பக்கமே திரும்பக் கூடாது என்று முடிவு செய்து விட்டான். 

“வீரேந்திரனை நீ பார்க்கறதுண்டா கமல்?” 

“ம்ஹும்… அவன் எங்கே இருக்கான்னே தெரியலே.. நம்ம பாலு கதை தெரியுமா?” 

“யாரு… படிக்கும்போதே… கீதாவை தள்ளிக்கிட்டுப் போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டானே அந்த பாலுவா?” 

“அதே… அதே! இப்ப அவனுக்கு எத்தனை குழந்தைங்க தெரியுமா? நாலு!” 

“நாலா… எப்படிடா?” ஆச்சரியமாய் கேட்டான் தினகர்.

“எப்படின்னு கேக்கறான் பார்! நம்ம பாலுவைப் பத்தி தெரியாதா உனக்கு? ஹார்ட் வொர்க் ஹானஸ்ட் பாலுன்னுதானே அவனுக்கு பேரே.”

“ஒஹ்ஹோ..” பயங்கரமாய் சிரிப்பு சத்தம் எழுந்து குன்னூரையே கிடுகிடுக்க வைத்தது. 

“ஆமா… தினகர்… நீ எப்ப குடுமி வச்சுக்கப் போறே?” சீரியஸாய் கேட்டான் குமரன். 

“என்னது குடுமியா?” 

“ஐ மீன்… நீ எப்ப குடும்பஸ்தனா மாறப்போறேன்னு கேட்டேன். கிட்டத்தட்ட நம்ம குரூப்ல உன்னைத் தவிர எல்லாருக்கும் கல்யாணமாய்டுச்சி” 

தினகரின் முகம் மாறிப் போனது. 

“ப்ளீஸ்…. ஃப்ரண்ட்ஸ்… இந்த விஷயத்தைப் பேச வேண்டாமே!’ என்றான் தயவாய். 

“ஸாரிடா தினகர். நானும் விஷயம் கேள்விப்பட்டேன். பட், அதுக்காக..”

“ப்ளீஸ்… ” என்றான் அழுத்தமாய். 

“ஓக்கே …. ஓக்கோ! அதைப்பத்தி பேசலே… நம்ம மாதவன் எங்கேயிருக்கான். எப்படியிருக்கான்? அவனைப் பத்தி எதுவும் தெரியலியே…” 

“மாதவனை ரெண்டு மாசம் முன்னாடி சென்னையிலே பார்த்தேன். ரியல் எஸ்டேட் பிஸினஸ் பண்றானாம். வெல் செட்டில்ட். அவனும் கூடிய சீக்கிரம் இங்கே வர்றதா ப்ராமிஸ் பண்ணினான்” என்றான் தினகர். உடம்பை சூடேற்றும் மது பானங்கள் காலியாகிக் கொண்டிருக்க… நண்பர்களின் குரலும், உடலும் தள்ளாடத் தொடங்கின. 

“சரி.. கீழே போகலாம் வாங்க… சாப்பிடலாம்!” 

“தினா… கீழே வேண்டாம்டா… அம்மா இருக்காங்க. எங்களை இப்படி பார்த்தாங்கன்னா தப்பா நினைச்சுப்பாங்க… சாப்பாட்டை இங்கே கொண்டு வந்துடச் சொல்லேன்… ப்ளீஸ்” கெஞ்சினான் குமரன். 

அவன் கூறுவதும் சரியெனப் படவே… இன்டர்காமில் தொடர்பு கொண்டு சாப்பாட்டை மேலே கொண்டு வரச் சொன்னான். 

இரண்டு வேலையாட்கள் லீவு எடுத்துக் கொண்டதால் வேறு வழியின்றி மீனாதான் அவர்களுக்குப் பரிமாற வேண்டியதாயிற்று. 

தினகர் அவளை எதிர்பார்க்காததால் தலைகவிழ்ந்துக் கொண்டான். மற்றவர்களின் கண்கள் அவளைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விரிந்தது. கிசுகிசுப்பாகக் கேட்டனர். 

“யார் தினா இது? சூப்பர் ஃபிகரு? மிஸ் பெமினா போட்டிக்கு அனுப்ப வேண்டியவங்களை இங்கே வச்சிருக்கே?” 

“பேர் என்னடா? ஆள் எப்படி? டச் பண்ணிட்டியா?”

“கமல்!” அதட்டினான். 

“ப்ச்… தெரிஞ்சுக்கலாம்னுதான். குளிர் பிரதேசம் வேற. சரக்கு உள்ளே போயிருக்கு. எதிரே லட்டு. கை பரபரங்குது தினா!” என்றான் முரளி. 

“ப்ளீஸ் கண்ட்ரோல் யுவர் டங்க்! இது நீங்க நினைக்கிற மாதிரி ஹோட்டல் இல்லே. இவளும் அப்படிப்பட்டவ இல்லே… பேசாம சாப்பிடு” மெல்லிய குரலில் அதட்டினான். 

அதன் பிறகு பேசாமல் சாப்பிட்டாலும் அவர்களின் கண்கள் மீனாவை துகிலுரித்தன. 

மீனா எதையும் கண்டுகொள்ளவில்லை. தினகருக்கு கோபமாய் வந்தது. 

‘இவள் எதற்கு இங்கு வர வேண்டும்?’ 

முரளி.. வேண்டுமென்றே டம்பளரை கீழே தள்ளிவிட மீனா… குனிந்து எடுக்க… ரசத்தை தட்டிவிட… அது அப்படியே மீனாவின் சேலை மேல் கொட்டிவிட… ‘அடடா” என்று பதறியபடி அவளை தொட்டு துடைத்து விட முற்பட்டான் முரளி. 

தினகருக்குப் புரிந்தது. முரளியின் வக்கிரம்! 

“ப… பரவாயில்லே சார்… பரவாயில்லே” என்று அவனிடமிருந்து விலகி, பாத்ரூம் நோக்கிச் சென்றாள். 

‘நீ வராதே… வேற ஆளை அனுப்பு’ என்று சொல்வதற்காக தினகரும் எழுந்து வந்தான். 

வெறுமனே சார்த்தியிருந்த பாத்ரூம் கதவை- கைகளால் தள்ளியவன் உறைந்து விட்டான். 

முந்தானையை விலக்கி… தண்ணீர் விட்டு துடைத்துக் கொண்டிருந்தாள். ஈரமான உடையில் அவளை பார்த்த தினகரின் உடல் சூடேறியது. சட்டென அவள் பார்க்கும் முன் கதவை இழுத்து சார்த்தி விட்டான். 


விடாமல் மழை பெய்துக் கொண்டிருந்தது. குன்னூரில் அங்கங்கே தண்ணீர் தேங்கி நின்று தேயிலைகள் நாசமாகி விட்டன. மண் சரிவு. வேறு ஏற்பட்டு பாதைகள் போக்குவரத்திற்கு இடையூறாக பாதிக்கப்பட்டிருந்தன. அதனால் காரில் செல்லாமல் நடந்தே சென்று எஸ்டேட்டை பார்வையிட வேண்டியதாயிற்று. 

வசதியாய் வாழ்ந்து பழகிய உடம்பு இந்த கடின உழைப்பை ஏற்றுக் கொள்ள மறுத்து… காய்ச்சலில் படுக்க வைத்து விட்டது. 

குணவதி அருகே இருந்து மகனை கவனித்துக் கொண்டாள். காய்ச்சல் இறங்குவதும், ஏறுவதுமாய் கண்ணா மூச்சி விளையாடியது. தினகரின் செல்போன் அலறியது. 

“ஹலோ…!” 

“ஹலோ… தினகர் நான் மாதவன் பேசறேன்!”

“வாட் எ சர்ப்ரைஸ்? எங்கேர்ந்து?” 

“மேட்டுப்பாளையத்திலிருந்துதான்! ஒரு வேலையா வந்தேன். நாளைக்கு குன்னூர் வரலாம்னு இருக்கேன். நீ ஃப்ரீயா இருக்கியா?” 

“நான் ஃப்ரீதான். ஆனா… அங்கங்கே மழையினால பாதை சரியாயில்லே… நீ எப்படி வந்து சேருவே?”

“பறந்தாவது வருவேன். கவலைப்படாதே! நான் முக்கியமான ஒரு நபரைத் தேடித்தான் அங்கே வர்றேன்” 

“முக்கியமான நபரா? யாரது?”

“நாளைக்கு சொல்றேனே..” என்று போனை கட் பண்ணி விட்டான்.

“யாருப்பா போன்ல?” 

“என் ஃப்ரெண்ட் மாதவன்ம்மா! நாளைக்கு இங்கே வர்றானாம்…”

“நல்லது… ஆனா எப்படி? மழையில பாதையெல்லாம்…” 

“அவன் எப்படியாவது வந்திடுவான்ம்மா! நீங்க போய் படுங்க…”

“உன்னை இப்படியே விட்டுட்டா? முடியாதுப்பா… டாக்டர் ரெண்டு மணி நேரத்திற்கொருமுறை மாத்திரை தர சொல்லியிருக்கார்.”

“நானே பார்த்துக்கறேன். நீங்க போய் ரெஸ்ட் எடுங்க.”

“நீதான்ப்பா நல்லா ரெஸ்ட் எடுக்கணும்!” 

“சரி, வேற யாரையாவது அனுப்புங்க… நீங்க போங்க.”

“வேலனும், செந்திலும் அவங்க வீடு மழையில வெள்ளம் புகுந்திடுச்சின்னு போய் இருக்காங்க. அகிலாண்டம் எட்டு மணிக்கே தூங்கப் போயிடுவா. இருக்கிறது மீனா மட்டும் தான்.” 

“சரி… அவளையே அனுப்பி வையுங்க….” என்றான் பட்டென்று.

“தி…ன…க..ர்.” ஆச்சர்யமாய் மகனைப் பார்த்தாள்.

அவளுக்கு சந்தோஷமாகவே இருந்தது. 

‘பாவம்… அந்த அபலைப் பெண் மீது கண்மூடித்தனமாக வைத்திருந்த கோபம் இப்போதில்லையே… அது போதும்’ என்று. 

தினகர் அதற்கு மேல் அம்மா எதையாவது கேள்வி கேட்டு விடப் போகிறாளோ என்கிற அச்சத்தில் கண்களை மூடிக் கொண்டாள். 

சற்று நேரத்தில் மீனா அவன் அறைக்கு வந்தாள். அவள் முகத்தில் ஒருவித பதட்டம் இருந்தது. அவன் எதிரே வருவதையே தவிர்த்தவளை… அவன் அறைக்கே போகச் சொன்னால்? 

‘கடவுளே.. நான் எதை செய்தாலும் குற்றம் கண்டுபிடிப்பவர். அவர் அறைக்கே போக வேண்டிய சூழ்நிலை. எனக்கு நிதானத்தைக் கொடு. எதையாவது செய்யப் போயி… அவன் கோபத்திற்கு ஆளாக்கி விடாதே!’ கடவுளை வேண்டிக் கொண்டாள் மீனா. 

இரண்டு நாள் காய்ச்சலில் பாதியாய் இளைத்து விட்டிருப்பதைப் பார்த்ததும் மீனா மனம் இளகினாள். 

அவளை ஏறிட்டுப் பார்த்த தினகர், “அப்படி உட்கார்” என்றான்.

“ப…. பரவாயில்லை சார்.” 

“விடியற வரைக்கும் நின்னுக்கிட்டே இருக்க முடியாது. சொன்னதை செய்.” கட்டளையிட்டான். 

சட்டென அமர்ந்தாள். 

“எந்தெந்த டாப்லெட்டை தரணும்னு தெரியுமா?”

“டாக்டரோட ப்ரிஸ்க்ரிப்ஷன் இருக்கு. அதை வச்சு தந்துடுவேன் சார்!” 

தெளிவாய் அவள் பேசிய விதம் அவனுள் வியப்பை ஏற்படுத்தியது.

“நீ எதுவரைக்கும் படிச்சிருக்கே?” 

‘பி..காம்’ என்று சொல்ல வாயெடுத்தவள், “எஸ்.எஸ்.எல்.சி.” என்றாள்.

“இந்தப் படிப்புக்கு சென்னையிலேயே ஏதாவது எக்ஸ்போர்ட் கம்பெனியிலே சேர்ந்திருக்கலாமே! எதுக்காக குன்னூருக்கு வந்தே?”

மறுபடி தன்னை சுபா என்ற சந்தேகத்தில் கேள்விகளை எழுப்புகிறான் என்று நினைத்தவன் பதில் சொல்ல தடுமாறினாள். 

“கேக்கறேன்ல?” 

“இ… இங்கே பாதுகாப்பா இருக்கலாமேன்னு…”

“ஓஹோ…” 

அந்த ஓஹோவில் ஏளனம் ஒளிந்திருப்பது போல் பட்டது மீனாவுக்கு. விடிய விடிய இப்படி பேசிக் கொண்டிருப்பானோ என்ற பயமும் எழுந்தது. 

“உன் கணவர் என்ன வேலை செய்துக் கொண்டிருந்தார்.”

“அது… அது வந்து… ஒரு வக்கீலிடம் கிளார்க்காக…” 

“எப்படி இறந்தார்..?” 

“ஆக்சிடெண்ட்டில்!” 

“சின்ன வயசு… ஏன் மறுமணம் பண்ணிக்கக் கூடாது”. 

“…”

“ஏன்…. புருஷனை மறக்க முடியலையா?”

“ம்….” 

“சும்மாவாச்சும் டயலாக் அடிக்கிறவங்களை கண்டாலே எரிச்சலாயிருக்கு. இந்தக் காலத்து லேடீஸுங்கதான் விதவிதமா ருசி பார்க்க ஆசைப்படறவங்களாச்சே! நீ மட்டுமென்ன விதிவிலக்கா?” 

மட்டமாய் பேசினான். மீனா வாயை இறுக மூடிக் கொண்டாள். அவனுக்கே தன்னைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு சமயம் மீனாவுக்காக பரிதாபப்படும் அதே இதயம்தான் அவளை வார்த்தைகளால் குத்தி கிழிக்க ஆசைப்பட்டது. அதை அவனால் தடுக்க முடியவில்லை. அவளை பார்க்க பார்க்க… சுபாவை பார்க்கிற வெறுப்புதான் மேலோங்கியது.

நேரமானதும் டாப்லட்டும், தண்ணீரும் எடுத்துக் கொண்டு அருகில் வந்தாள். 

அதை வாங்கி போட்டுக் கொண்டவன், “பக்கத்து அறையை சுத்தம் பண்ணி வச்சிடு. நாளைக்கு என் ஃப்ரண்ட் வர்றார்!” என்றான்.

“சரிங்க சார்!” 

கண்களை மூடினான். மீனா தன், இருக்கையை அவன் காலடியில் காத்திருந்தாள். போட்டு அமர்ந்து கொண்டு அடுத்த இரண்டு மணி நேரம் கரைய காத்திருந்தாள்.

கண்ணயர்ந்தான் தினகர்: நேரம் ஆக ஆக காய்ச்சல் அதிகரித்ததே தவிர குறையவில்லை. 

“….ம்” என்று அரற்றினான். 

பயந்துப் போன மீனா, “டாக்டரை அழைக்கட்டுமா சார்?” என்றாள்.

“வேண்டாம். மழையில் அவரால வர்றது கஷ்டம். விடியட்டும் பார்க்கலாம்.” 

“தைலம் தேய்ச்சு விடவா?” 

“செய்!”

தேய்த்தாள். மீனா தைலத்தை அவன் நெற்றியிலும் உள்ளங் கால்களிலும் எப்படி செய்தாலும் காய்ச்சல் விடவே மாட்டேன் என்றது. 

“அம்மாவை எழுப்பட்டுமா சார்?”

“பயந்திடுவாங்க… வேண்டாம்…” அவன் உடல் உதறிப் போட்டது.

“சார்… தண்ணீரில் துணியை நனைத்து உடலை துடைத்து விட்டால்… காய்ச்சல் இறங்கும்னு டாக்டரே சொல்லியிருக்கார்.” 

“நடுங்குது… பச்சை தண்ணியிலே உடம்பை துடைக்கறதா… விளையாடறியா?”  

“ப்ளீஸ் சார். இப்படியே விட்டா… ஃபீவர் அதிகமாகும். கொஞ்சம் பொறுத்துக்கிட்டீங்கன்னா..” என்றாள் கெஞ்சலாய். 

“சரி… சரி!” என்று அரை மனதாய் சம்மதித்தான். 

போர்த்தியிருந்த கம்பளியும், சட்டையும் கழற்றி விட்டு, தண்ணீரில் துணியை நனைத்து பிழிந்து அவன் உடம்பில் வைத்ததும்… “ஸ் ஸ்.. ஆ…” என்று நடுங்கினான்.

“கொஞ்சம்… கொஞ்சம் பொறுத்துக்குங்க..” சொல்லிக் கொண்டே அவன் உடம்பு முழுக்க துடைக்க பல்லைக் கடித்து பொறுத்துக் கொண்டான்.

பத்து நிமிடம் சென்றிருக்கும். காய்ச்சல் இறங்கியிருந்தது.

“சூடாய் பால் சாப்பிடறீங்களா சார்?” 

“ம்…!” 

ஃப்ளாஸ்கில் இருந்த பாலை டம்பளரில் சரித்து அவனிடம் கொண்டு கொண்டது. வந்து கொடுத்தபோது… மின்சாரம் துண்டானது. இருள் வந்து கவ்விக் கொண்டது.

“கேண்டில்… கேண்டில் எங்கே…?” 

“இதோ எடுக்கறேன் சார்!” யூகித்து அருகிலிருந்த டேபிள் மேல் பால் டம்பளரை வைத்து விட்டு டிராயரில் மெழுகு வர்த்தியை தேடினாள். 

அகப்படவேயில்லை.

“இன்னும் என்ன பண்ணிட்டிருக்கே…?” 

“கிடைக்கலே சார்!” 

தினகர் கட்டிலை விட்டிறங்கி தேட வந்தான். 

“நீ நகர்ந்துக்க….” என்றவன் அவள் மீது வந்து மோதினான். 

எதிர்பார்க்காத மீனா எந்தப் பக்கம் நகர்வது என்று புரியாமல் தடுமாற… தினகரின் தடுமாறிய கைகளில் அவள்தான் அகப்பட்டாள். படக்கூடாத இடங்களில் அவன் கைகள் பட… தினகர் தன்னை மறந்தான். அவளை இழுத்து அணைத்துக் கொண்டான். 

“சா..ர்!” மீனா தன்னை விடுவித்துக் கொள்ள பெரிதும் போராடினாள். ஆனால், இளமை, தனிமை, இருள், மழை, அவன் உடல் நிலை… தினகரை மூர்க்கனாக்கியது. 

எதை பாதுகாத்துக் கொள்ள அலைந்தாளோ… அதை வெகு எளிதாய் பறித்துக் கொண்டான் தினகர். 

அத்தியாயம்-13 

விடிந்தது. 

தினகர் கண் விழித்தான். நள்ளிரவில் நடந்ததெல்லாம் கனவு போல் மனத்திரையில் ஓட. புரியாமல் சுற்றுமுற்றும் பார்த்தான். போராடியதில் கைத் தவறி கீழே விழுந்திருந்த பால் தரையெங்கும் சிதறியிருந்தது. 

விதிர் விதிர்த்துப் போனான். 

“இல்லை… நிஜம்…. நடந்தது அத்தனையும் நிஜம்!” உறைத்தபோது மனசு வலித்தது. 

பட்டென்று நெற்றியில் அறைந்துக் கொண்டான். 

‘சே… நானா… இப்படியெல்லாம் நடந்துக் கொண்டேன்? அவள் முகத்தில் எப்படி விழிக்கப் போகிறேன்?’ பயத்தில் விட்டிருந்த காய்ச்சல் மறுபடி வரத் துவங்கியது. 

‘என்னப் பண்ணப் போகிறேன்?’ குழம்பினான். 

“ஐயா உங்களைத் தேடிக்கிட்டு யாரோ மாதவன்னு ஒருத்தர் வந்திருக்கிறார்!” என்றாள் அகிலாண்டம். 

“வரச் சொல்… அம்மா எந்திரிச்சிட்டாங்களா?” 

“பூஜை பண்ணிட்டிருக்காங்க…” 

“சரி… நீ போ… மாதவனை என் ரூமுக்கு அனுப்பு.” 

சற்று நேரத்தில் மாதவன் வந்தான். 

“ஹாய் தினா… எப்படிடா இருக்கே? என்னடா நோயாளி மாதிரியிருக்கே?” 

“இப்ப நோயாளிதான்.. நீ எப்படியிருக்கே? இப்பதான் இந்த தினகரைப் பார்க்க மனசு வந்துச்சா?” 

“இப்பவும் மனசு வரலேதான். வேற ஒரு காரியமாகத் தான் குன்னூர் வந்தேன். அதை சாக்கா வச்சு அப்படியே உன்னைப் பார்த்துட்டு வரலாமனுதான் வந்தேன்.” 

“படவா… நீயெல்லாம் ஒரு ஃபிரண்டாடா..? அந்தக் சண்டைய அப்புறம் வச்சுக்கறேன். ஆமா, நேத்துக்கூட நீ சொன்னேயில்லே… முக்கியமான நபரை பார்க்கத்தான் இங்கே வரப்போறேன்னு… யார் அப்படிப்பட்ட இம்பார்ட் டென்ட் பர்சன்? எங்கேயிருக்காங்க?” 

“இங்கே உன்னோட வீட்லே” 

“இங்கே என் வீட்லேயா?” புருவம் மேலேற கேட்டான்.

“யெஸ்… இங்கேதான்!” 

“யாருப்பா அது?” 

“மீனா” 

“மீ…னா?” தூக்கி வாரிப் போட்டது தினகருக்கு. 

“மீ…மீனாவையா?” 

“ஆமாம் தினகர். அவளை நான் எங்கெங்கோ தேடிட்டிருந்தேன். போன வாரம்தான் எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் மீனாவை குன்னூர் தினகர் எஸ்டேட் பங்களாவுல பார்த்தேன்னு சொன்னாங்க. சர்ப்ரைசா இருக்கட்டுமேன்னுதான் நான் சொல்லலே. அவளை கூப்பிடு தினகர்… நான் பார்க்கணும்.” 

“நீ சொல்றது எனக்கு ஒண்ணுமே புரியலே. மீனா யாரு? நீ ஏன் அவளைத் தேடறே?” 

“அதுசரி… மீனா என் வொய்ஃபோட தங்கச்சி. யாருக்கும் தெரியாம அவ இங்கே வந்துட்டா…” 

“அப்ப நிச்சயமா நீ தேடி வந்த மீனா இங்கேயில்லே. இங்கே வேலை செய்யற மீனா ஒரு விதவை. விபத்துல கணவனை பறி கொடுத்தவ…”

“அப்படியா சொல்றே? எனக்கு தகவல் சொன்ன நபர் மீனாவை நன்கு அறிந்தவர். அவர் எப்படி தவறான தகவலை கொடுக்க முடியும்? எனக்கு குழப்பமாயிருக்கு தினகர்.”

“அவங்க போட்டோ வச்சிருக்கியா?” 

“இதோ இருக்கு…” ப்ரீப்கேஸை திறந்து ஒரு போட்டோவை எடுத்து காண்பித்தான் மாதவன். 

அதைப் பார்த்த தினகரின் சப்த நாடியும் ஒடுங்கியது. போட்டோவில் மீனாவேதான். அழகாய் நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டும், தலை நிறைய மல்லிகைப் பூவுமாய் தேவதைப் போலிருந்தாள். 

“மாதவன்…. இவள்தான் மீனா…ஆனா அவ தன்னை ஒரு விடோன்னு…”

“சேச்சே… அவளுக்கு இன்னும் கல்யாணமே ஆகலே தினகர்…”

“அப்ப ஏன் அப்படியொரு பொய் சொல்லி இங்கே வேலைக்கு சேரணும்?” 

“பெண்… இந்தியப் பெண்… குறிப்பா தமிழ்நாட்டுப் பெண்ணாச்சே. தன்னை, தன் கற்பை காப்பாத்திக்க ஒரு பெண் என்ன மாதிரி வேஷமெல்லாம் போட வேண்டியிருக்கு பார்த்தியா? பாவம் மீனா.. அவளுக்கு வந்த கஷ்டம் வேற யாருக்கும் வரக்கூடாது…” என்ற மாதவன் மீனாவைப் பற்றிய முழு விபரத்தையும் கூறினான். 

அப்பா இறந்தது முதல் தாமோதரன் அவளை சிதைக்க முயற்சித்தது வரை எல்லாமே சொன்னான். 

நெஞ்சு கப்பென அடைத்துக் கொள்வது போலிருந்தது தினகருக்கு. 

‘சே… என்ன காரியம் பண்ணிவிட்டேன்? தன் கற்பை காப்பாற்றிக் கொள்ள விதவை வேஷம் போட்ட மீனா எங்கே? காதலை காலில் போட்டு நசுக்கி கற்பை கடைச் சரக்காக்கி விக்னேஷ் பின்னால் ஓடிப் போன சுபா எங்கே? உருவத்தில் ஒரே மாதிரி இருக்கின்ற ஒரே காரணத்திற்காக… மீனாவை என்ன பாடுபடுத்தி விட்டேன்? எதை பாதுகாக்க இங்கே ஓடி வந்தாளோ… அதை நானே… ச்சே…?” தன்னையே நொந்துக் கொண்டான் தினகர். 

“தினகர்….நான் முதலில் மீனாவைப் பார்க்கணும்…” 

“ஒரு நிமிஷம்….” என்று கூறி விட்டு அகிலாண்டத்தை மேலே வரச் சொல்லி இன்டர்காமில் அழைத்தான். 

அகிலாண்டம் வந்தாள். 

“மீனாவை வரச் சொல்” என்றான்.

“மீனாவா…. அந்தப் பொண்ணு இங்கில்லையே…?” 

“என்ன சொல்றே?” 

“ஆமாங்கய்யா… அந்தப் பொண்ணு காலையிலேயே பெட்டியும், கையுமா புறப்பட்டுடுச்சு. எங்கேம்மா போறே அப்படின்னு கேட்டேன். எனக்கே தெரியாதுன்னு சொல்லிவிட்டு போய்கிட்டே இருந்துச்சு.”

“மை காட் தலையை பிடித்துக் கொண்டான் தினகர். 

“ஸாரி… ஸாரி… மீனா… ஸாரி…” 

“தினகர் என்னாச்சு? மீனா எங்கே போயிட்டா? எதுக்காக போயிட்டா?” மாதவன் அரண்டு போய் கேட்டான். 

“தெ. தெரியலே மாதவன்…” 

“எனக்கு பார்க்கணும்.. மீனாவை பார்த்தே ஆகணும். அவளுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கித் தரணும்னுதான் ஓடி வந்தேன். இப்ப எங்கே போய் கஷ்டப்படறாளோ? தினகர் அவளை நான் பார்க்கணும். இனியும் அவ கஷ்டப்படக்கூடாது!” 

“நானும் மீனாவைப் பார்க்கணும் மாதவன். இல்லேன்னா காலம் முழுக்க குற்ற உணர்ச்சியிலே துடிச்சி துடிச்சே செத்துப் போயிடுவேன்” என்றான் குரல் தழுதழுக்க… 

“நீ என்ன சொல்றே?” 

“எல்லாம் பிறகு சொல்றேன். மீனாவை முதல்ல தேடி கண்டுபிடிச்சாகணும்… அவ நிச்சயம் குன்னூரைத் தாண்டி போயிருக்க முடியாது. ஹர்ரி அப்…” என்று விரைந்தெழுந்தான் தினகர். 

அவசர அவசரமாய் உடை யை மாற்றிக் கொண்டு கார் சாவியை பொறுக்கிக் கொண்டு தினகர் கீழிறங்க… மாதவன் பின் தொடர்ந்தான். அம்மா எதிர்ப்பட்டாள். 

“என்னப்பா… உடம்பு சரியில்லாத பிள்ளை… இந்த மழையிலே எங்கே போகிறே?” 

“என் உயிரைத் தேடி…” என்று ஒரு வார்த்தையில் பதில் கூறி விட்டு நகர… குணவதி மகனை குழப்பமாய் பார்த்தாள். 

மாதவனுக்கு அந்த வார்த்தை எதையோ உணர்த்தியது. 

கார் சீறிப் புறப்பட்டது. மழையினால் பாதை மண் சரிந்து, மரம் முறிந்து அங்கங்கே அடைப்பட்டிருக்க… குறுக்கு வழியிலெல்லாம் காரை நுழைத்து பஸ்ஸ்டாண்ட் நோக்கி விரைந்தான். 

மீனா… நிச்சயம் அங்குதான் சென்றிருப்பாள். 

தினகர் முகத்தில் தெரிந்த பயமும், பதட்டமும் மாதவனுக்கு ஒருவித சந்தோஷத்தைத் தந்தது. 

எப்படியோ காடு மேடு பள்ளங்களைத் தாண்டி பஸ் ஸ்டாண்ட் வந்து விட்டான். 

நிறுத்தியிருந்த ஒவ்வொரு பஸ்ஸிலும் ஏறி தேடினர். 

“எங்கே போயிருப்பா?” 

“எனக்கு பயமாயிருக்கு தினகர்!” 

“இல்லே… எனக்கு நம்பிக்கையிருக்கு… மீனாவை நிச்சயம் பார்ப்போம்கற நம்பிக்கை எனக்கிருக்கு. அதோ மாதவன்… அதோ அங்கே ஒரு பஸ் கிளம்பப் போகுது. அதுல பார்க்கலியே…” 

தினகர் தன் உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் ஓடினான். பஸ்ஸும் ஓடத் துவங்கியது. அதுவரை தலை கவிழ்ந்திருந்த மீனா, கண்ணீரைத் துடைத்தபடி நிமிர்ந்து உட்கார்ந்தாள். 

மாதவன் ஜன்னலருகே தெரிந்த மனாவைப் பார்த்து, விட்டான். “மீ…னா..” என்று கத்தினான். 

குரல் கேட்டு திரும்பிய மீனா, மாதவனைப் பார்த்து, அதிர்ந்து… கண்டக்டரிடம் சொல்லி விட்டு இறங்கினாள். 

மூச்சிரைக்க தினகரும், மாதவனும் அவள் முன் போய் நின்றனர். இருவரையும் எதிர்பார்க்காத மீனா செய்வதறியாது நின்று விட்டாள். அதிலும் தினகரைப் பார்த்தபோது அழுகை குமுறிக் கொண்டு வந்தது. ‘இவன் எதற்கு வந்திருக்கிறான்?’ 

“என்ன மீனா, இப்படி பண்ணிட்டே? என்கிட்டேகூட சொல்லாம கொள்ளாம ஓடி வந்திட்டியே… உன்னை அழைச்சிட்டுப் போகத்தான் நான் இங்கே வந்தேன்…” என்றான் மாதவன். 

மீனா பதிலேதும் பேசாமல் கண்ணீர் வழிய நின்றிருந்தாள். “கிளம்பும்மா… உன்னை நல்லவன் ஒருத்தன் கையிலே ஒப்படைக்கிறது என் பொறுப்பு! வயசுப் பொண்ணு… தனியா இப்படி ஊர் விட்டு ஊர் போறது பெரிய தப்பு. கிளம்பு இனிதான் உனக்கு எல்ல எதிர்காலமே இருக்கு!” 

“எனக்கா?” அழுகை வெடித்துக் கொண்டு வந்தது மீனாவுக்கு. அவள் அழுகை தினகரின் இதயத்தை கூறு போட்டது. 

“வா… மீனா… கிளம்பலாம்… தினகர்… பஸ் கிளம்பப் போகுது.. நாங்க வர்றோம்” என்று அவள் கையைப் பற்றி அழைத்துச் சென்றான் மாதவன். அவளும் பின்தொடர… தினகர் பதறினான். 

“மீ..னா..” 

“…”

“மீனா.. நில்லு…” 

“…”

நிற்காமல் நடந்தாள். 

“ஸாரி.. மீனா…”

“…”. 

“மீனா… ஐ.. லவ் யூ…” 

சட்டென நின்றன கால்கள். மீனா விழிகள் விரிய பார்த்தாள். 

மாதவன் இதை எதிர்பார்த்தவனாய் தனக்குள் சிரித்தான். தினகரின் பதட்டம், அம்மாவிடம் சொல்லி விட்டு வந்த வார்த்தை மீனாவின் அழுகை… ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என்பதை மாதவன் உணர்ந்து கொண்டான். 

“நான் உன்கிட்டே ரொம்ப மோசமா நடந்துக்கிட்டேன். மீனா… ஆனா, அந்த கோபத்துக்கு காரணம் எங்கே நான் உன்னை காதலிச்சிடுவேனோங்கற பயம்தான். காதல் ஜெயிச்சிடுச்சி மீனா! நான் உன்னை கேட்காமலேயே உன்னை பறிச்சிக்கிட்டேன். அதுக்கு பதிலா நான் என் காதலை தர வந்திருக்கேன். ஏத்துக்குவேயில்லே?” தன் அந்தஸ்து ஈகோவையெல்லாம் கழற்றி எறிந்து விட்டு கெஞ்சலாய் கேட்டான் தினகர்.

மீனாவின் விழிகள் கண்ணீரை நிறுத்தின. திடீரென்று குளிர் காற்று வீசியது. மீனாவின் வறண்டிருந்த வானத்தில் காதல் மேகங்கள் திரண்டன. உதடுகள் துடித்தன. 

தினகர் கையை நீட்ட.. மீனா நடுங்கும் கைகளால் அதைப் பற்றிக் கொள்ள… அந்த நடுக்கத்தைப் போக்க மேலும் இறுக்கினான் தினகர்.

“இதென்னப்பா… கதையே மாத்திப்புட்டே?” மாதவன் கேட்டான்.

“…”

அவர்களிடம் பதிலில்லை. அவர்கள் இந்த உலகத்தில் இருந்தால்தானே? 

“மீனா… நீயும் என் கூட வர்ற ஐடியா இல்லையா?” 

“…”

“ம்ஹூம்.. உங்களை கலைக்க முடியாது போலிருக்கே. பாட்டு ஏதும் பாடற ஐடியா இருந்தா… அப்படி தோட்டத்து பக்கமா போயிடறது பெட்டர். இது பஸ் ஸ்டாண்ட். டிஸ்டர்ப் பண்ணாதே தினகர்.” 

மாதவன் கத்தினாலும் அவர்கள் காதில் விழப் போவதில்லை.

பார்வைகளால் ஒருவர் இதயத்தில் மற்றவர் இறங்கிக் கொண்டிருக்கையில்… எந்த தொந்தரவும் அவர்களை அசைக்கப் போவதில்லை.

மீனாவின் கனவு இன்று நனவாகி விட்டது. 

(முற்றும்)

– காதல் தர வந்தேன்…! (நாவல்), ஏப்ரல் 2001, ரமணிசந்திரன் மாத இதழ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *