கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 18, 2024
பார்வையிட்டோர்: 12,397 
 

குழந்தை அழுது கொண்டே இருந்தது. சமையலை கவனித்துக்கொண்டே தொட்டிலை‌ ஆட்டிவிட்ட படி இருக்க அடுப்பில் தீய்ந்து போன சத்தம் வந்ததும் தொட்டிலை விட்டு, விட்டு பெட்ரூமிலிருந்து சமையலறைக்குள் ஓடியதும் ஆட்டப்பட்ட தொட்டில் அருகில் உள்ள பெட்டில் பட்டதும் குழந்தை ‘வீல்’ எனக்கத்த பதறியபடி அடுப்பு நெருப்பை அணைத்து விட்டு குழந்தையை எடுத்த போதும் அழுகை நிற்கவில்லை.

பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த நிகன் வெளியே வந்ததும் கத்த ஆரம்பித்தான் தனது காதல் மனைவி மகியைப்பார்த்து. 

“உனக்கு வர, வர அறிவு கொறைஞ்சுட்டே வருது…”

“உன்ற அறிவக்கொஞ்சம் கொடுக்க வேண்டியது தானடா…?”

“என்னடி வாடா, போடான்னு தாலி கட்டின புருசன மரியாதையில்லாமப்பேசறே….? உங்கொம்மா உங்கொப்பனுக்கு மரியாத கொடுத்திருந்தாத்தானே நீயும் கொடுப்பே…” சொன்னவன் அழுது கொண்டிருந்த குழந்தையை மனைவியிடமிருந்து பிடுங்கி தலையில் ஏதாவது அடி பட்டிருக்குமோ என தடவிப்பார்த்தான். குழந்தைக்கு ஒரு வயது தான் ஆகிறது என்றாலும் தந்தையின் தடவலில் அழுகை நின்றதும் மழலை மொழியில் ஏதேதோ பேசியது.

“அப்பனும் மகனும் ரெண்டு பேரும் என்னைத்திட்டுங்க. நான் யாரோ‌ ரோட்ல போறவங்க பெத்துப்போட்டுட்டு போன அனாதைதானே…?” பெட்டில் போய் கோபமாக அமர்ந்து கொண்டு அழத்தொடங்கிய மனைவியை அணைத்து அன்பாக கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.

“இதுக்கு கொறைச்சலில்ல. கண்டபடி பேசிப்போட்டு கொஞ்சினா எல்லாம் சரியாப்போகுமா? நானும் காலைல எழுந்ததுலிருந்து மிஷினாட்டா வேலை செய்யறேன் முடியவே மாட்டேங்குது. கொழந்தையும் பார்த்துட்டு சமையலையும் கவனிக்கிறது எத்தனை சிரமம் தெரியுமா உங்களுக்கு? போதாததுக்கு இட்லிக்கு ரெண்டு சட்னி இல்லாம சாப்பிடமாட்டீங்க மாப்பிளே…

ஒரு நாளாவது நான் எந்திரிக்கும் போது எந்திரிச்சு கூட மாட சமையலுக்கு உதவி பண்ணியிருப்பீங்களா…? லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டதும் பண்ணி கிட்டேன். இப்ப நானே ஒருத்தியா உங்க கூட சீரழிஞ்சு சிரமப்படறேன். பத்தாததுக்கு வேலையும் வீட்டிலிருந்தே பாக்கலேன்னா வீட்டு வாடகை, குடும்ப செலவுன்னு உங்க சம்பளம் எதுக்குமே பத்தாது” என பேசியவள் மீண்டும் அழுதவாறு குழந்தையை கணவனிடமிருந்து வாங்கியபடி காலை உணவான இட்லியை பாத்திரத்திலிருந்து எடுத்து தட்டில் போட்டு வந்து அலுவலகத்துக்கு நேரமானதால் அவசரமாக பேண்ட் சட்டையை அயன் பண்ணிக்கொண்டிருந்த கணவனுக்கு ஊட்டி விட்டாள்.

“எனக்கு நீ கெடைச்சது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா…?”

“ஆமாமா. நான் இங்கே நாய் படாத பாடு பட்டுகிட்டிருக்கேன் உங்களுக்கு அதிர்ஷ்டம் வந்து கொட்டுது. எங்க வீட்ல அவங்க சொன்ன மாப்பிள்ளைக்கு நான் சம்மதிச்சு கல்யாணம் பண்ணியிருந்தா குழந்தைய என்னோட அம்மாவே குளிப்பாட்டி, தொட்டிலாட்டி , ஆயத்தொடைச்சு, தாங்கு தாங்குன்னு தாங்கியிருப்பாங்க. தங்கிறதுக்கு இங்க பெங்களூர்ல சொந்தமா எனக்கு வீடே வாங்கி கொடுத்திருப்பாங்க. நீங்க தான் முக்கியம்னு பெத்தவங்களை ஒதுக்கி வெச்சிட்டு உங்க பின்னாடி ஓடி வந்தது எவ்வளவு தப்புன்னு இப்ப புரியுது. ஒன்னிப்புரிஞ்சு என்ன பண்ண முடியும்..?” மீண்டும் விசும்பினாள்.

மகியின் தொடர் அழுகை, வெறுப்பான பேச்சு வேலைப்பளு காரணமாக இப்படிப்பேசுகிறாள் என நிகனை யோசிக்க வைத்தது. உடனே அலைபேசியை எடுத்தவன் தனது டீம் லீடரிடம் இன்று கண்டிப்பாக லீவு வேண்டுமென கெஞ்சிக்கேட்டு லீவைப்பெற்றதும், இட்லித்தட்டை வாங்கி மனைவிக்கு ஊட்டி விட்டதோடு, குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்க வைத்ததும் மனம் மாறி மகிழ்ந்தவள் “சாரிடா. என்னால முடியலடா…” என கூறி அணைத்தபோது, சற்று முன் அவள் பேசிய ‘டா’ மரியாதை குறைவாகத்தெரிந்த நிலை மாறி தற்போது பேசிய ‘டா’காதலை அவள் மீது அதிகரிக்கச்செய்வதை உணர்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *