காக்கும் கரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 1,785 
 

ட்ட்ரிங்ங்ங்……

போன் ஒலித்தது. எடுத்தேன். அவர் தான். ‘ஏய் சரசு, சாயங்காலம் நாலு மணிக்கே வந்து விடுவேன். நம்ம சரவணன் சார் மகளுக்குக் குழந்தை பிறந்து இருக்கு; பார்க்கப் போகணும். ரெடியாய் இரு’ வைத்து விட்டார்.

சரவணன் கணவருடன் பணி புரிபவர். அதையும் தாண்டி இரண்டு குடும்பங்களுக்கும் நெருங்கிய தொடர்பு. முதலில் பக்கத்துப் பக்கத்துப் போர்ஷனில்தான் குடி இருந்தோம். பார்ப்பவர்கள் உறவா என்று அதிசயிப்பார்கள்.

இரண்டு பிள்ளைகளும் வயிற்றில் இருக்கும் போது மசக்கையில் தவித்த போது சரவணன் மனைவிதான் பெற்ற பெண் போலப் பார்த்துக் கொண்டார். அப்புறம் சொந்த வீடு கட்டி நாங்கள் இங்கு வர சற்றே தொடர்பு குறைவு. இருந்தாலும் அடிக்கடி போனிலும் நாள் கிழமையின் போது நேரிலுமாக எங்கள் உறவு தொடர்ந்தே வருகிறது. நேற்று கூட இந்த வாரம் குழந்தை பிறந்துவிடும் என்று டாக்டர் சொன்னதாகக் கூறினர்.

சட்டென இட்லி வார்த்துப் பொடியும், காரச்சட்னியும் செய்து சிறிது இடியாப்பமும் செய்து பேக் பண்ணி முகம் கழுவி, வேறு சேலைக்கு மாறவும் அவர் வரவும் சரியாக இருந்தது. காபி கொடுத்து கதவைப் பூட்டி பில்லியனில் தொற்றிக் கொண்டேன். குழந்தைகள் லீவுக்குக் கிராமம் சென்று இருந்தனர். எனவே சாவகாசமாக வரலம். குழந்தைகள் இல்லாமல் போரடித்த எனக்கு இந்த பயணம் மாற்றாக அமைந்தது.

இதோ ஹாஸ்பிடல் வந்து விட்டது. வாசலிலேயே சரவணன் வாயெல்லாம் பல்லாக, தாத்தா ஆன பரவசம். மாடியில் 10ம் நம்பர் பெட்டில் அவர் மகள் பாமா. பக்கத்தில் ரோஜாக் குவியலாகப் பெண் குழந்தை. அள்ளி எடுத்து என் கைகளில் தந்தார் சரவணனின் மனைவி லட்சுமி அக்கா. குழந்தையைக் கொஞ்சி குடும்பக் கதை பேசி புறப்பட்டோம். டிபன்பாக்ஸ் நாளை வரும்போது வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி விடை பெற்றோம். கீழே வந்து வண்டியை ஸ்டார் செய்ய எத்தனை உதை வாங்கியும் உறுமாமல் மௌனமாக நின்றது வண்டி. ‘சரி, பக்கத்து மெக்கானிக் ஷாப்பில் சரிசெய்து கொண்டு வருகிறேன். நீ உள்ளே போய் உக்கார்’ என்று வண்டியைத் தள்ளிக் கொண்டு சென்று விட்டார்.

விதியே என்று திரும்பவும் வரவேற்பு அறையில் வந்து அமர்ந்தேன். நகரின் மிகப் பெரிய மகப்பேறு மருத்துவமனை அது. ஸ்கேன், எக்ஸ்ரே, குடும்பநல அறுவை, மகப்பேறு இல்லாதவர்களுக்குச் சிறப்பு சிகிச்சை, ரத்தம், நீர் டெஸ்ட் என அனைத்து வசதிகளும் தன்னுள்ளே அடக்கி நீண்டு நிமிர்ந்து விரிந்து பரந்த மருத்துவமனை.

வண்ணமயமான தோட்டம். வரிசை வரிசையாக நின்ற நான்கு மூன்று இரண்டு சக்கர வாகனங்கள். பார்த்துப் பார்த்து சொர்க்கபுரியாக அமைக்கப்பட்ட வரவேற்பு அறையில் அமர்ந்தபடி கண்களைச் சுழல விட்டேன். இளவரசி போன்ற மிடுக்குடன் கண்ணாடித் தடுப்புக்குப் பின்னே ரிஷப்ஷனிஸ்ட். கம்ப்யூட்டர், நான்கு வண்ணங்களில் தொலைபேசி, அடுக்கடுக்காகப் பைல்கள்.

வெள்ளுடை தேவதைகள் பரபரப்பாக உலவ, காத்திருப்போர் எப்போது டாக்டர் வருவார் என்று எதிர்பார்ப்புடன், மீண்டும் கண்களைச் சுழல விட்டேன். கழுத்தை இறுக்கும் டையும், காலை இறுக்கும் பூட்சுமாக மருந்துக் கம்பெனி பிரதிநிதிகள். வாட்சை அடிக்கடி திருப்பிப் பார்த்தபடியே தவிப்புடன்.

சற்று தள்ளி கலர் கலராய் வளையலும், வெட்கச் சிரிப்புமாய்த் தலைச்சன் பிள்ளைக்காரி, பக்கத்தில் நெருக்கமும், பூரிப்புமாய் இளம் கணவன், நல்ல ஜோடிப் பொருத்தம்.

அடுத்து வேர்த்து விறுவிறுத்த முகத்துடன் உதடு கடித்து வலியை விழுங்கி இப்பவோ, அப்பவோ என்று அட்மிஷனுக்குக் காத்திருக்கும் நடுத்தர வயது பெண் தோளில் முதல் குழந்தையைச் சாய்த்துக் கவுண்டரில் விபரம் கூறிக் கொண்டு இருப்பவன் தான் கணவன் போலும்.

அப்புறம் தடுப்பூசி, மாதாந்திர டெஸ்ட் என்று நீண்ட வரிசை சற்று தள்ளிக் கலங்கிய கண்களும் சற்றே மேடிட்ட வயிறுமாக ஒரு பெண் பக்கத்தில் இருப்பது மாமியாரும் புருஷனும் என்பதைப் பேச்சிலிருந்தே ஊகிக்க முடிந்தது. ஏனோ அந்தப் பெண்ணைப் பார்த்ததும் என்னுள் ஒரு நெகிழ்வு. நெருங்கி விசாரித்தேன். முதலில் பெண். இப்போது இரண்டாவது ஆறு மாதம். நேற்று ஸ்கேன் எடுத்தோம், இன்று ரிசல்ட் என்று நறுக்குத் தெறித்தது போல் மாமியார்க்காரிக் கூறினாள்.

சற்றே சலசலப்பு. டாக்டரின் வருகை. கடவுளைக் கண்டது போல் ஒரு பரசவம் காத்திருந்தோர் முகத்தில். இவரும் ஒருவிதத்தில் காக்கும் கடவுள் தானே. சந்தன நிறம், புடவையும் அதே கலரில் ஜாக்கெட்டும், நவரத்ன டாலர் சங்கிலியுமாக டாக்டர் முன்னே வர தலைவனைத் தொடரும் தொண்டர்களாக சீரான இடைவெளியில் நடைபோடும் பணிப்பெண்கள். காக்கும் கடவுளைக் காக்கும் துவாரபாலகிகளாக இரு பெண்களும் அறைவாசலிலேயே நிற்க, டாக்டர் உள்ளே சென்று அமர்ந்தார். க்யூ மெல்ல நகர ஆரம்பித்தது.

ஏழாம் நம்பர் டோக்கன் யார்? நர்ஸ் வினவ, அந்தப் பெண்ணும், கணவனும் பதட்டத்துடன் உள்ளே நுழைந்தனர். இறுகிய முகத்துடன் மாமியார்க்காரி. சற்றே நேரத்தில் அழுத கண்ணும், சிந்திய மூக்குமாக அந்த பெண் வர, புருஷனும், மாமியாக்காரியும் மௌனமாக அமர்ந்தனர். சற்றைக்கெல்லாம் நர்ஸ் அழைக்க ஆபரேஷன் தியேட்டருக்குச் சென்றாள் அந்த பெண்.

எனக்கு ஒருவாறாகப் புரிய ஆரம்பித்தது. ஸ்கேனில் இரண்டாவதும் பெண் என்றதும் அழிக்க ஏற்பாடு. அடப்பாவிகளா! முன்னாலே எங்கே போச்சு அறிவு? என்னுள் புலம்பல். பார்த்தா படிச்சவங்க போலத் தெரியுது. என்ன படிச்சு என்ன பிரயோஜனம்?

கம்சனைப் போல டாக்டரம்மா, ஆபரேஷன் தியேட்டருக்குள் நுழைய ஒடுங்கிய குரலில் அந்தப் பெண்ணின் அலறல் வெளியே கசிந்தது. கூடவே என் கண்களும். சக்கர வியூகத்தில் புகுந்து வெளிவர முடியாது மாண்ட அபிமன்யுவின் கதியா அந்தக் குழந்தைக்கு? காக்கும் கடவுளான டாக்டருக்கு அழிக்க என்ன உரிமை இருக்கிறது. எல்லாம் காசு படுத்தும் பாடு. ஸ்கேன் அறையின் வெளியே இருந்த போர்டையே வெறித்தேன்.

ஆணா? பெண்ணா? என்று கூறுவது சட்டப்படி குற்றமாகும் என்ற வாசகம் என்னைப் பார்த்துக் கைகொட்டி சிரித்தது. ஒரே தலைவலி. காபி சாப்பிட்டால் தேவலாம். நல்லவேளை அதோ அவர் வந்து விட்டார். பக்கத்து ஓட்டலுக்குச் சென்றோம்.

ஏய், என்னாச்சு, ஆஸ்பத்திரி வாசனை ஒத்துக் கொள்ளவில்லையா? என்றவரிடம் மௌனமாக தலையாட்டி டிகாஷன் தூக்கலாய் சர்க்கரை கம்மியாய் இரண்டு காபி என்று சொல்லிவிட்டு இருக்கையில் கண்மூடி சரிந்தேன். மூடிய கண்களுள் ஆஸ்பிடல் சம்பவங்களின் அலைக்கழிப்பு.

‘என்னம்மா, மருமவளுக்கு எப்படி இருக்கு?’ ‘நல்லா இருக்கா’ அந்த மாமியார்க்காரியின் பதில். எனக்குப் பின்புறம் இருந்து வந்த குரல்கள் தொடர்ந்தன. எனக்குப் பற்றிக் கொண்டு வந்தது. தலைக்குள் சிவமணியின் டிரம்ஸ் அலறல்!

‘ஏதோ இந்த மட்டும் முன்னாடியே ஸ்கேன் பண்ணுனதால நல்லதாப் போச்சு. பெத்துக்கிட்டு அவதிப்படறத விட இதுமேல்தான். ஆனாலும் தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடுதும்மா நல்லாவே மாமியார்க்காரி நடித்தாள்!

‘என்னம்மா நீ ஊருக்குப் புத்திச் சொல்றவங்க. நீங்களே இப்படி உடைஞ்ச போகலாமா? அப்புறம் அந்தப் பெண்ணுக்கு யார் ஆறுதல் சொல்றது’

‘அந்தப் பொண்ணுதான் இந்த முடிவுக்கே வந்தது. நான் கூட வேண்டாம்னு தான் சொன்னேன். நல்லாத்தான் ப்ளேட்டைத் திருப்புறா, கெட்டிக்காரிதான். அந்தப் பொண்ணு இவகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிது. மகன்காரனும் சரியான அம்மாக் கோண்டு போ,. பல்லைக் கடித்தபடியே காப்பியை ஆற்றினேன். மேலும் பேச்சு தொடர்ந்தது.

‘முதல் ஸ்கேனிலேயே டாக்டருக்குச் சந்தேகம். அதான் இரண்டாவது ஸ்கேன். புள்ளக்குச் சரியான மூளை வளர்ச்சி இல்லையாம். என் குழந்தைய அந்த நிலைமையில பார்க்க முடியாது. அப்படியே பெத்துக் கிட்டாலும் எனக்குப் பிறகு யார் கவனிப்பா’ என்று பிடிவாதமாக இந்த முடிவுக்கு வந்துட்டா மருமவ. அவ சொல்றதும் நியாயம் தானேன்னு ரெண்டு பேரும் ஒத்துக்கிட்டோம். காந்திஜியே கருணைக் கொலை தப்பில்லன்னு சொல்லி இருக்காங்கன்னு டாக்டரும் சொன்னாங்க. அதான்’

எனக்குத் தலைசுற்றியது. நம்முடைய புத்தியை என்னன்னு சொல்றது. நல்லவேளை இப்பவாவது உண்மை தெரிஞ்சுது. அபாண்டமாக டாக்டரைப் பற்றி நினைச்சது எல்லாம் எவ்வளவு தப்பு. கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் என்று இப்போதுதான் புரிகிறது. அல்லதை நீக்கி நல்லதைக் காக்கும் மகிஷாசுரமர்த்தினி டாக்டரம்மா மானசீகமாகக் கன்னத்தில் போட்டுக் கொண்டேன். ‘என்ன ஆச்சு தலைவலி’ என்றவரிடம் ‘போயே போச்சு’ என்றேன் உற்சாகமாய்.

‘என்ன மாயம்! காபி சாப்பிட்டதும் எப்படி போச்சு’ என்றவரிடம் ‘வீட்டுக்கு வந்ததும் சொல்றேன். தலைவலி எப்படி வந்தது, எப்படி போச்சு’ என்று கண்ணடித்து சிரித்தேன். என் உற்சாகம் வண்டிக்கும் தொற்றிக் கொள்ள ‘தென்மேற்கு பருவக்காற்று சிலுசிலுவென்று வீசுது தேனிப்பக்கம்’ என்று முனகியபடியே பில்லியனில் தொற்றிக் கொண்டேன். வண்டி வெண்ணையாய் வழுக்கிச் சென்றது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *