காட்டில் செழியன் நடந்து கொண்டிருந்தான். கனத்த, தடியான ‘ட்ரேக் ஷூ’ காலைக் கடிக்காவிட்டாலும், வேகமாக நடக்கும் போது மட்டும், கொஞ்சம் வலிக்கத் தான் செய்தது. உடன் வந்த நண்பர் ரோபர்ட் சுவாவின் முகத்தில் சுரத்தே இல்லை. சிங்கப்பூரிலிருந்து வரும்போதிருந்த உற்சாகம், துள்ளல் எல்லாமே சென்னையில் வந்திறங்கிய சில மணி நேரங்களி லேயே காணாமல் போயிருந்தது!
சென்னையின் நெரிசலும், டேக்சிக் காரர்களின் பேரமும், ஆட்டோக்காரர்களின் கோபமும், நடுத்தெருவில் நின்று அசிங்கம் செய்யும் சிலரின் அவலமும்……. அந்த சூழலே ரோபர்ட்டை முகம் சுளிக்க வைத்தது. ஆனால் செழியனோ எதையும் கண்டுகொள்ளவுமில்லை; கவலைப்படவும் இல்லை! சிங்கப்பூரிலிருந்து வந்த குறிக்கோளை உருப்படியாக நிறைவேற்றி திரும்ப வேணுமே என்பது மட்டுமே அவனது பெருங்கவலையாக இருந்தது! ரோபர்ட் சுவா சீனர்தான் என்றாலும், அலுவலகத்தில் மற்ற சீன, மலாய் நண்பர்களிடம் கூட இல்லாத நெருக்கம் செழியனிடம் இருந்தது. அதனால் தான் இந்த ‘கம்ப சித்ர சாகஸத்துக்கு உடன் வரவே ஒத்துக் கொண்டார்.
ஆனால், சென்னையில் வந்திறங்கிய இரவே தும்மலும், சளியும் பிடித்துக் கொண்டது. நிவாரணி மாத்திரைகளை உட்கொண்டு, காரில் பல மணிநேரம் பயணம் செய்து, இந்தக் காட்டுக்கு வந்து சேர்ந்தபோது, காலை சூரியன் கண்களை எரிக்கத் தொடங்கியிருந்தான். வெயில் பட்டவுடன், சளியும் தும்மலும் போன இடம் தெரியவில்லை ! காட்டுக்குள் போகும் முகப்பிலேயே, கூரை வேய்ந்த கடை மாதிரி, ஒரு தடுப்புக்குள் பெரியவர் ஒருவர் குனிந்து உட்கார்ந்திருந்தார். அங்கு கிடைத்த ‘கஞ்சி மாதிரி’ ஒன்றைப் பார்த்ததுமே சுவா தனக்கு வேண்டாமென்றிட்டார். செழியன் பேருக்கு குடிப்பதுபோல் பாவ்லா செய்தான்.
உழுத முகமும், காரைப்பற்களுமாய், பெரியவர் அவர்களை உறுத்துப் பார்த்தார்.
“காட்டுக்குள்ளார போறீங்களா?”
“ஆமாம், தாத்தா?”
விறு விறுவென்று உள்ளே போன பெரியவர், வெளியே வந்தபோது, அவர் கையில் என்னமோ இருந்தது. என்ன…. ஏது என்று. நிதானிக்கும் முன்னர், “இந்தாங்க, போட்டுக்குங்க” என்று பானை வடிவில் கோத்த தாயத்து இரண்டை சடாரென்று இருவர் கழுத்திலும் மாட்டி விட்டார். “பாத்து பதனமாப் போயிட்டு வாங்க” என்று பிளேடு கீறிய குரலில் பெரியவர் சொல்ல, “இந்தாங்க —தாத்தா!” என்று, ரூபாய் நோட்டுக்களை எடுத்து நீட்டினான் செழியன். ஒரு கணம் அவர்களை முறைத்துப்பார்த்த தாத்தா “முதல்லே பத்திரமா திரும்பி வாங்க ! அது போதும்” என்றவர், திரும்பியும் பார்க்காமல் உள்ளே போய்விட்டார். அதையே, பெரிய ஆசீர்வாதமாய் எடுத்துக் கொண்டு நடக்கத் தொடங்கினார்கள்.
சிங்கப்பூரில் புதிதாகத் தொடங்கிய ஆங்கிலப் பத்திரிகையின் முக்கிய நிருபர்கள், செழியனும் ரோபர்ட் சுவாவும். ‘கூகில்’ தேடலில் ஒருமுறை, இந்த முட்டுச்சந்து மலையைப் பற்றி படித்த போதே, செழியன் முடிவெடுத்து விட்டான். பரபரப்பான தகவல்களோடு செழியன் விளக்க விளக்க, ரோபர்ட்டுக்கு ஆர்வம் தாங்கவில்லை. சுவாரஸ்ய மான கட்டுரை மட்டுமல்ல, முடிந்தால் ஒரு ஆவணத்துக்கான குறிப்புக்களோடு வருகிறோம் என்று அலுவலகத்தில் சொல்லிவிட்டுப் புறப்படும் போது, ரோபர்ட்டுக்கு காட்டுக்குள் போகும் ‘த்ரில்’லைவிட, தமிழ் நாட்டுக்குப் போகும் ஆவல் தான் முந்தி இருந்தது. தோசை, இட்டலி, இடியாப்பம், கோழிக்கறி என தமிழ்நாட்டு உணவு வகைகள் என்றாலே கொள்ளைப் பிரியம் சுவாவிற்கு. பிறகு தமிழ் நாட்டுக்குப் போகத் தயக்கமா வரும்?
‘ட்ரேக் ஷூ’, உடம்பெல்லாம் பூச்சி கடிக்காதிருக்க மன்னாளித் தைலம், முகத்துக்கு ‘க்ரீம்’, தோள் பையில் மடக்குக் கத்தி, வேறு சில உபகரணங்கள், மருந்துப் பொட்டலங்கள், பிஸ்கட், உலர்பழங்கள், தேவைக்கேற்ப பசியாற்ற அத்தியாவசிய ‘ரெடிமேட்’ உணவுவகைகள், ‘மினரல் வாட்டர் பாட்டில்’கள், தோளில் கேமிரா, தூரப் பார்வைக்கு கைப்பிடியில் அடங்கும் நவீனரக ‘டெலஸ் கோப்’ என இருவருமே எல்லா முஸ்தீபுகளோடும்தான் நடந்து கொண்டிருந்தனர். அடி பெருத்த மரங்கள், சிறுத்து நீண்டு வளர்ந்த மரங்கள், கனத்து பெருத்து இலை, தழை என கொப்பும் கிளையுமாய் பிள்ளை குட்டி சகிதம் நிரம்பி வழிந்த மரங்கள், ‘உய்ஷ்ஷெ ‘ன்று நூதனமாய் அடிவயிறு கலங்கும் விதமாய் ஊளையிட்டபடியே காற்றில் சிலிர்த்தாடிய மரங்கள் என ஒவ்வொரு காட்சியாய் அவர்கள் கடந்து கொண்டிருந்தார்கள்.
‘க்ரீச்’சிட்டு சிறகடிக்கும் பட்சிகள், உர்ரென்று முறைத்துக் கொண்டு பார்க்கும் குரங்குகள், வழியெல்லாம் அப்பிக்கிடந்த அட்டைகள், நெருப்பாய் கனன்று நின்ற காட்டுக் கோழிகள் என ரோபர்ட்டின் காமிரா எல்லாவற் றையும் படம் பிடித்துக் கொண்டு வந்தது. இரண்டு மணி நேரமாக நடந்தும், செழியன் தேடி வந்த முட்டுச்சந்து மலையைக் கண்டு பிடிக்க முடியவில்லை. வெளியே வெயில் அப்படி எரித்தும், காட்டுக்குள் ‘கும்’மென்று இருளோடித் தான் கிடந்தது. முண்டும் முடிச்சுமாய் குட்டி குட்டி பாறைகளின் உடைந்த கல்கட்டிகள், எவ்வளவோ கவனமாய் நடந்தும் முட்டியைப் பதம் பார்க்கத் தவறவில்லை . திடீரென்று சலசலத்து ஓடும் சின்ன ஆறு குறுக்கிட்டது. பளிங்குபோல் தண்ணீரைக் கண்டதும் உடனே முகம் கழுவி ஒரு வாய் தண்ணீர் குடிக்கணும்போல் தோன்றவே, செழியன் ஆற்றை நெருங்கியதுதான் தாமதம்,“வேண்டாம், போகாதே” என்று ரோபர்ட் செழியனைப் பின்னாலிருந்து ஓடி வந்து தடுத்து நிறுத்தினான். “செழியன்! ஆற்று நீரை நன்றாகப் பார்”. உண்மைதான்! உற்றுக்கவனிக்க, வர்ணஜாலங்களில் நீர் பிரிந்து பிரிந்து ஓடிக் கொண்டிருந்தது.
வெலவெலத்துப்போனான் செழியன்.
இது விஷ நீர்! இந்த நீரை மட்டும் குடித்திருந்தால்…. பாதாதிகேசமும் நடுங்கிப்போய் சடாரென்று அருகே இருந்த பாறையில் உட்கார்ந்து கொண்ட செழியனுக்கு பசி, தாகம் எல்லாமே மறந்து போனது. ஆனால், ரோபர்ட், சிங்கப்பூரி லிருந்து கொண்டு வந்திருந்த, மினரல் வாட்டரைக் குடித்தான். பிஸ்கட்டைத் தின்று ஒரு ஆப்பிளையும் சாப்பிட்டு முடித்தபோது, செழியன் முட்டுச்சந்து மலையில் உள்ள குங்கிலியப் பாறையைப் பற்றி விளக்கி முடித்தான்.
“அப்படியானால் இந்த பயணத்தில் உன்னுடைய சுயநலமும் இருக்கிறதென்று சொல்!”
செழியனுக்கு சிரிப்பு வந்து விட்டது. இதற்கே இவன் மலைத்துப்போகிறானே! இன்னும் உள்ள உண்மையைத் தெரிந்து கொண்டால்……..
முட்டுசந்து காட்டுக்குள் உள்ள குங்கிலிய பாறையில் தான் தேடிவந்த விஷயத்தை அவன் இதுகாறும் யாரிடமும் சொல்லவில்லை. குங்கிலிய பாறையின் அடிவாரத்தில் தான், பூந்தேள் வடிவில், புஷ்பராகக்கற்கள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால், அந்த கூம்பிய பாறைக்கற்களைப் பார்த்துப் பார்த்து தான் தெரிவு செய்து வெட்டி எடுக்கணும். இல்லையென்றால் முதல் கூட மிஞ்சாது. அவ்வளவு கூர்மையான, ஆபத்தான கற்கள்! இந்தியாவிலிருந்து வந்த நாச்சிமுத்துப் பெரியவர் தான் இந்த அரிய சிதம்பரரகசியத்தைச் சொன்னவர்.
நாச்சிமுத்து ‘பாரெஸ்ட் ஆபிசராக’ பணிபுரிந்தவர். அதனாலேயே முட்டுச்சந்து மலையின் மரம், செடி, கொடி, இலை, தழை, ஓடை, ஆறு, பாறை, குன்று என ஒவ்வொரு தகவலும் விரல் நுனியின் துல்லியமாக விளக்கினார்.
“பிறகு ஏன் நீங்க அந்த கற்களை எடுக்க முயற்சிக்க வில்லை ?”
“நான் புள்ளைகுட்டிகாரன் தம்பி. எனக்கு இன்னும் கொஞ்சகாலம் கூட உயிர் வாழணும்னு ஆசையிருக்கு தம்பி.”
“அவ்வளவு ஆபத்தா அய்யா ! அப்படீனா அதை எப்படி வெட்டி எடுக்கறது?”
– “இளவட்ட சாமர்த்தியக்காரங்களுக்கு அதை இனம் கண்டுபிடிச்சு வெட்டி எடுக்கறது ஒரு பொருட்டே இல்லை. ஆனா, எனக்கு அதுக்கெல்லாம் துணிச்சல் இல்ல தம்பி. கரணம் தப்பினா மரணங்கற விபரீத விளையாட்டு இந்த வயசிலே எனக்கு தேவைதானா? சம்பாதிக்கறது உடம்பிலே ஒட்டினாலே போதுமே” என்று நாச்சிமுத்து சொல்லி விட்டுப் போனாலும், செழியனால் இதை அசட்டையாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஓடும் பாம்பைக்கூட. பிடிக்கும் துணிச்சல் இருக்கும்போது இது ஒரு விஷயமா? ‘அலுவலத்தில் ‘த்ரில்’லான ஒரு பயணக்கட்டுரை எழுதுகிறேன்’ என்று சொல்லி அனுமதி வாங்கியது பெரிய விஷயமல்ல. ஆனால் இதற்குப் பின்னால், செழியனுக்கு கடுமையான பணத்தேவை இருந்தது.
அண்மையில்தான் தன்னுடைய மூவறை வீட்டை விற்றுவிட்டு, பெரிய ‘கொண்டோமினியம்’ வீட்டை வாங்கியிருந்தான். மனைவி வேறு பிரசவ விடுப்பிலிருந்தாள். புதிய வீட்டின் ‘ரெனொவேஷன்’ செலவுக்கும், வீட்டுக் கடனுக்குமாய், பணத்துக்கு ஆலாய்ப் பறந்து கொண்டிருந்த நேரம். இந்த சந்தர்ப்பத்தில் தான் நாச்சிமுத்து இப்படியொரு திரியைக் கொளுத்திப் போட்டு விட்டுப் போனார். ‘என்ன வந்தாலும் சரி’ என்று கிளம்பி விட்டான்.
ரோபர்ட்டுக்கு இவன் ஏதோ மலையைப் பார்க்கும் ஆசையில் தான் வந்திருக்கிறான் என்று தோன்றினாலும் கூட, எங்கோ நெருடியது. செழியனின் பாய்ச்சலும், அவன் கண்கள் அலைந்த அலைச்சலும் ரோபர்ட்டுக்குப் புரியவில்லை.
லேசாக தூறல் போடத் தொடங்கியது. அப்படியும் வியர்க்கவே செய்தது. பகல் இரண்டு மணியாகியும் வெக்கை வெக்கை தான்! மேப்பை எடுத்து வைத்துக் கொண்டு செழியன் கர்மசிரத்தையாய் ஆராயத் தொடங்கினான்.
“சரியான கோணத்தில்தான் நடந்து வந்திருக்கோம். அதோ! எதிரில் ஒரு கோட்டிப்பாறை தெரிகிறது. இதிலிருந்து வலதுபுறம்தான் நடக்கவேண்டும்.
உற்சாகத்தோடு இரண்டடி எடுத்து வைத்தவர்கள் அப்படியே அதிர்ந்து போய் நின்று விட்டார்கள்! கனத்த, அடிவயிறு கொழுத்த பாம்புகள் இரண்டு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து சரசலீலையில் கிடந்தன. இது நல்ல சகுனமில்லையே என்று செழியனுக்குப்பட்டாலும், ரோபர்ட் செழியனை இழுத்துக் கொண்டு பாதையை விட்டு மேலேறி, குண்டும் குழியுமாக இருந்த பாறைத்துண்டங்கள் வழியாக நடந்த பத்தாவது நிமிடம் அந்த பிரம்மாண்டம் தெரிந்தது.
கன்னங்கரேலென்று பட்டுத்தெறித்த மின்னல் போல் அப்படி ஒரு பளபளப்பான கருமை. என்ன பொருத்த மான பெயர், குங்கிலிய பாறை! காட்டுச்செடிகளையும், காலில் அப்பிய அட்டைகளையும், ஊர்ந்து வந்த விஷ ஜந்துக்களையும், மிக மிக ஜாக்கிரதையாய் கடந்து வருவதே பகீரதப் பிரயத்தனமாயிருந்தது. தட்டி முட்டி மலைக்கு முன்னால் வந்து நின்றபோது, இனம் புரியாத பரவசத்தில் மேனி சிலிர்த்தது. கரும்பூதமென பாறை அசையாது நின்று அச்சுறுத்தியது. அக்கம் பக்கம் ஒரு அசைவும் இல்லை . பாறைக்குக் கீழே அக்னி போல் ஜ்வாலையாய் மின்னியது கற்கள். ஆனால் பாறைக்கு வலப்புறம் செந்தழலாய் குங்குமமும், சந்தனமும் தீற்றிய செங்குத்தான ஒரு சிறிய முக்கோணத் தூண் சரிந்து கீழே கிடந்தது. துணுக்கென்று பட்டாலும், அருகே சென்று தூணை நிமிர்த்தி வைத்தவன், அப்படியே திகைத்துப் போனான். அட! பிள்ளையார்! காட்டுப்பிள்ளையார்! அப்படியானால், இங்கு மனித நடமாட்டம் இருந்திருக்கிறது. சுற்றுமுற்றும் பார்க்க, கண்ணில் ஏதும் தென்பட வில்லை. ‘அதனாலென்ன? சாமிதானே? நாமும் கும்பிட்டால் போச்சு!’
ஒரு நிமிடம் அப்படியே குனிந்து பிள்ளையாரைத் தொட்டுக் கும்பிட்டான். பிறகுதான் ரோபர்ட்டின் ஞாபகமே வந்தது.
“ரோபர்ட்! இதுதான் குங்கிலிய பாறை! நாம் கண்டு பிடித்துவிட்டோம்!” என்று பரவசத்தோடு சொல்லிக் கொண்டே திரும்பியது தான் தெரியும்.
‘பொளேர்’ என்று செழியனின் கன்னத்தில் இடியாய் ஓங்கி அறைந்தான் ரோபர்ட்! நிலை குலைந்து போய் தரையில் விழுந்த செழியனுக்கு ஒரு வினாடி எதுவுமே புரியவில்லை. ‘உய்ய்ய்ய்ய்ங் ‘ என்று ஏதோ ஒன்று கண்ணுக்கு முன்னால் வட்டமடித்துப் பறந்தது மட்டுமே தெரிந்தது. ‘ஹேய்’ என்று சீறிப் பாய்ந்துகொண்டே கீழே கிடந்த நீண்ட கழியால், அந்த வண்டை விரட்டி அடித்தான் ரோபர்ட். கீழே கிடந்த செழியனைத் தூக்கி நிறுத்தி, அவன் கன்னத்தைத் தொட்டு, “எப்படி கடித்திருக்கிறது பார்” என்று சொல்ல, அப்பொழுது தான், கன்னத்தை தொட்டுப் பார்க்கவே தோன்றியது. சொரசொரப்பாக ஏதோ உணரமுடிந்தது. முகத்துக்கு கிரீம் தடவியிருந்ததால் பூச்சி கடித்தது கூடத் தெரியவில்லை .
“தேங்ஸ் ரோபர்ட்!” என்றவாறே உடையில் ஒட்டியிருந்த குப்பைகளைத் தட்டிவிட்டு, உடனே அடுத்து செய்ய வேண்டிய வேலையில் இறங்கினான். அதற்கு மேலும் வெட்டியாய் நேரம் கடத்த விரும்பவில்லை. சற்றுமுன்னர் தரையில் கிடந்து, தான் தூக்கி நிறுத்திய அந்த காட்டுப் பிள்ளையாரின் முன்னால் பயபக்தியோடு மண்டியிட்டு அமர்ந்தான். முதலில் பூமிபூஜை செய்யவேண்டும். ஆனால் அதற்கான ஸ்வீகரண ஜெபதபம் எதுவும் தெரியாததால், கையோடு கொண்டு போயிருந்த புத்தகத்தைப் பார்த்து குறிப்பிட்ட சில மந்திரங்கள் மட்டும் சொல்லும் போதே மனசு ஒருமுகப்பட்டிருந்தது. பிறகு, பால், சந்தனம், விபூதி, குங்குமம் என அந்தப் பிள்ளையாரின் மேல் பக்தி சிரத்தை யோடு கொட்டி, பாலொழுக ஒழுக, சந்தனம் மணக்க மணக்க, குங்குமம் மயக்க மயக்க, விபூதியில் சிலிர்க்க சிலிர்க்க, பிள்ளையார் பக்தப் பரவசமாய் அவனைப் பார்க்க, அதையே ஆசீர்வாதமாக எடுத்துக்கொண்டான்.
ரோபர்ட்டுக்கு இது புதுமையாகத் தெரிந்தது! என்ன ஏது என்று ரோபர்ட் கேட்குமுன்னரே செழியன் அடுத்த கட்ட வேலையில் இறங்கினான். தோள்பையிலிருந்து, குட்டி வெட்டுகத்தி, பாறையைக் குடைய குட்டி ‘மெஷின்’ என எடுத்து வைத்துக் கொண்டு, பாறையின் நடு பாகத்தி லிருந்து மெஷினால் ‘ட்ரில்’ செய்யத் தொடங்கினான். சில கற்கள் கீழே விழுந்தன. ஆனால் ஒழுங்கான ஒரு அமைப்பில் கற்கள் இல்லை!
கையில் எடுத்துப்பார்த்த ரோபர்ட்டுக்கு சிரிப்பு வந்தது. “இது எதற்கு? பார்க்க கொஞ்சம் மின்னுகிறதே ! அதனால் ஏதாவது கற்பனை செய்து விட்டாயா?”
“கேலி செய்யாதே ரோபர்ட் ! இது இந்துக்களின் பிரார்த்தனைக்கல் அதனால்தான் கொஞ்சம் கொண்டு போகலாம் என்று நினைக்கிறேன்.” வாய்தான் பேசியதே தவிர, வேலையில் செழியன் மும்முரமாய் இருப்பதைப் பார்த்து ரோபர்ட்டும் உதவினான்.
வியர்வை ஆறாய்ப் பெருக்கெடுக்க, இருவரும் முக்கி, மூச்செடுத்து, எப்படியோ சில கல்கட்டிகளைத்தான் பெயர்த் தெடுக்க முடிந்தது. அந்த சின்ன உபகரணங்களைக் கொண்டு, உடைத்தெடுப்பதொன்றும் அப்படி சின்னாங்கு வேலை அல்ல. உன்னைப்பிடி, என்னைப்பிடி என்று எப்படியோ கிடைத்தவரை லாபம் என, கிடைத்த கற்களை ‘சேஃப் பிளாஸ்டிக்’கில் பத்திரமாய் மூட்டை கட்டிப் போட்டான்.
அதற்குள் காடே இருண்டுபோய் விட்டது. இத்தனைக்கும் மாலை 6 மணியே ஆகியிருந்தது. சில்வண்டு களும், இரவுநேரப்பூச்சிகளும், அட்டைகளும், சின்ன சின்ன பாம்புகளும்கூட ஊர்ந்து போகத் தொடங்கி விட்டன. திரும்பிப்போகலாம் என்றால் ரோபர்ட் சந்தேகப்படுவான்.
என்ன செய்வது? அருகில் எங்காவது பூச்சி பொட்டு இல்லாத, சற்று மணல்பாங்கான இடத்தில், குட்டி டெண்ட் போட்டுத் தங்கி விட்டுப் பிறகு பார்க்கலாம் என்று அவர்கள் நடக்க, எங்குமே தோதான இடம் கிடைக்கவில்லை.
“அதோ பார்!” ரோபர்ட் கூவ, செழியனும் பார்த்தான். தூரத்தில் ஏதோ மின்மினி போல் விளக்கு எரிய, அதை நோக்கி ஆவலோடு தடக்கத் தொடங்கினார்கள். நெருங்கிப் போகவும், அது ஒரு குடிசை போல் தோன்றி னாலும், வெறும் நாலு தடுப்புக்களால் ஆன ஒரு மறைவிடம். அவ்வளவே!
யாரோ ஒரு பெண் வெளியே வருவது தெரிந்தது. “வெளியூர்க்காரங்களா?”
“ஆமாம், அண்டி” என்றவன் சட்டென்று நாக்கைக் கடித்துக் கொண்டு, “ஆமாம், ஆத்தா !” என்று திருத்திக் கொண்டான்.
“இந்த நேரத்திலே இங்கே என்ன பண்றிங்க ?”
“காடு சுத்திப்பாக்க வந்தோம், ஆத்தா? நேரமானதே தெரியலை, அதான்”
“அங், இப்படி ஒக்காருங்க! …….. கன்னிம்மா ! …. ஒரு வா சுக்குத்தண்ணி கொண்டா! ஆரோ வெளியூர்க்காரங்க வந்திருக்காங்க! கொஞ்சம் சீக்கிரம் வா, புள்ளே!” என்று உள்ளே பார்த்துக் கூவ, உடனே ஆள் வரவில்லை. அதுவரை சும்மா இருக்கவேண்டாமே என்று அவன் பேச்சு கொடுக்க, குப்பென்று சிரித்தாள் அந்த ஆத்தா.
“பயமா! ஊருக்குள்ளே இருக்கத்தான் பயப்படணும். இந்தக் காட்டிலே எல்லா பிராணிங்களும் அப்பிராணிங்க….. குழந்தைங்க மாதிரி! நீ மட்டும் அன்பா ஒரு பார்வை பாத்தா போதும்! அதுங்க நூறு மடங்கு அன்பை நம்ம கிட்டே காட்டுங்க. மனுஷனைக் காட்டிலும் இந்த காட்டுலெ இருக்கற பிராணிங்கதான் எங்களுக்கு பாதுகாப்பு” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது, ஆவி பறக்கும் மண் பானையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தாள் ஓர் இளம்பெண். சூடான அந்த பானத்தை இரண்டு மண் குவளையில் ஊற்றிக் கொடுத்த போது, ரோபர்ட்தான் தயங்கினான். ஆனால் செழியனுக்கு எந்த தயக்கமுமில்லை. அதுதான் வரும்போதே காட்டு முகப்பில் பார்த்த தாத்தா கழுத்தில் போட்டுவிட்ட தாயத்து இருக்கிறதே! போதா ததுக்கு சிங்கப்பூரிலிருந்து வரும்போதே, சிவாய மந்திரம் ஜெபித்த தாயத்தும் வேறு இடுப்பில் கட்டியிருக்கிறான். பிறகென்ன? மடக் மடக்கென்று சுக்குக்காப்பியை ஊதி ஊதி வேகமாகக் குடித்தான்,
அதுவரை அறியாதிருந்த பசி இந்த சுக்குநீரைக் குடித்ததும் கிளர்ந்தெழுந்தது. காலையிலிருந்தே, தான் இது வரை எதுவுமே சாப்பிடவில்லையே என்பதும், அப்பொழுது தான் ஞாபகத்துக்கு வந்தது.
“அப்ப சரி, ஆத்தா! நாங்க, அங்கே, வெளியிலேயே டெண்ட் போட்டுப் படுத்துக்கறோம். காப்பிக்கு ரொம்ப நன்றி ஆத்தா!” என்று சொல்லிக்கொண்டு, அவள் பதிலுக்கும் காத்திராமல் விடுவிடுவென்று நடந்து விட்டார்கள். முதுகுக்குப் பின்னால் ஏனோ ஆத்தாவின் விழிகள் வெறித்துப் பார்ப்பதை உணராமலில்லை. நாலு பக்கமும் கல்லை முட்டுக் கொடுத்து, குட்டி ‘டெண்ட்’ கட்டி, காலையிலிருந்து போட்டுக் கொண்டிந்த உடையைக் களைந்து, மாற்றுடை அணிந்து கொண்டார்கள். குளிக்க வில்லையே என்ற கவலை இருந்தாலும், இரவைக் கழிக்க வாவது ஓரிடம் கிடைத்ததே என்று நிம்மதியாக உள்ளே இருந்த பாறையில் அமர்ந்து கொண்டு, செழியன் சாப்பிடத் தொடங்கினான். இருந்த பசியில், கொண்டு போயிருந்த ‘பிரெட்’, ‘பிஸ்கட்’ எனக் கணிசமாக உள்ளே போனதே தெரியவில்லை. ‘மினரல் வாட்டரும்’ குடித்து முடித்த போது, “சாப்பிட வாறீகளா?” என்று கன்னிம்மாவின் குரல் கேட்டது.
“எங்களுக்கு வேண்டாம்” என்று சொல்ல வெளியே வந்த செழியன் திகைத்துப் போனான். அவள் சாப்பாடு கொண்டு வரவில்லை. ஒரு கருத்த மரத்தட்டு நிறைய காட்டுப் பழங்களை வைத்துக்கொண்டு நின்றிருந்தாள். “பழங்கள் தானே? சரி!” என்று வாங்கிக்கொண்டு உள்ளே நுழைய, “அப்ப ராத்திரிக்கு ஒண்ணும் வேண்டாமா?” என்று கன்னிம்மா கேட்டது புரியவில்லை. ‘வேண்டாம்’ என்று சொல்லிவிட்டு உள்ளே வந்து விட்டான். கத்தரிப்பூ கலரில் பழங்கள், முழுக்க முள்ளாய் சிலிர்த்த சிவப்புப்பழங்கள், பூவன்பழம் போலிருந்த ஊதாக்கலர் பழங்கள் என கனிந்த பழங்களாய் இருந்தன. ஆனால் செழியனோ, ரோபர்ட்டோ இதுவரை பார்த்தே இராத பழங்கள்! சாப்பிட, ‘என்னமோ ஏதோ என்று’ உள்ளூர கலக்கமாகத்தானிருந்தது. ரோபர்ட் ஏறேடுத்தும் பார்க்க மறுத்துவிட்டான். அதனால் கொஞ்ச நேரத்துக்கு பழங்கள் அப்படியே சீந்துவாரற்று பாறையின் மீதே கிடந்தது. “நான் டாய்லெட் போகணும்!” என்று ரோபர்ட் சிறிது நேரத்துக்கெல்லாம், ‘டோர்ச்’சை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டான். செழியனுக்கு ‘அப்பாடா!’ என்றிருந்தது. நிம்மதியாக, பெயர்த்துக் கொண்டு வந்த கற்களை மீண்டுமொருமுறை ‘டோர்ச்’ ஒளியில் கூர்ந்து பார்த்தான்.
பகலில் வெறும் கல்லாய்த் தோன்றியக் கற்கள், இரவில் அசாத்ய ஒளியோடு பிரகாசம் காட்டின! ரோபர்ட் சந்தேகப்படாமலிருக்கவும், அலுவலக நிமித்தமாகவும், அதுவரை பார்த்த தகவல்களையெல்லாம் எழுதத் தொடங் கினான். ஒரு மணிநேரமாகியும் ரோபர்ட் திரும்பவில்லை.
மனதுக்குள் ஏற்பட்ட கலக்கத்தில், உடனே வெளியே வந்து பார்த்தால், அங்கு எங்குமே ரோபர்ட்டைக் காணவில்லை. ‘டோர்ச்’ பாக்கெட்டில் இருந்தாலும், விளக்கே தேவையில்லை. பகலெல்லாம் இருண்டுக் கிடந்த அந்தக் காடு, இப்போது நிலவைப் பொழியவில்லை என்றாலும் மங்கலான மஞ்சள் வெளிச்சத்தில் பேரழகாய் காட்சியளித்ததை அவனால் நம்பவே முடியவில்லை.
காட்டுக்குள் இவ்வளவு மர்ம முடிச்சுக்களா? வியந்தவாறு நடக்கத் தொடங்கினான். சிறிது தொலைவில் சலசலவென்று ஓடும் அருவியின் கீழ், ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தாள். உடம்போடு ஒட்டிப் போயிருந்த மெல்லிய ஆடையில் மார்பும், இடுப்பும், தொடையும் பளிங்குத்துண்டங்களாய் மின்ன, செழியன் தன்னை மறந்து அந்தப் பெண்ணை நோக்கி நடந்தான்.
“அட! கன்னிம்மா!” –
“வாங்க! என்னா ….. தூங்க முடியலையா?” என்று ஏதோ இவ்வளவு நேரமும், அவனுக்காகவே காத்திருந்தாற் போல் கன்னிம்மா சர்வசாதாரணமாய் கேட்க, செழியனால் பேசவே முடியவில்லை . பிசிறாய் சிலிர்த்த கூந்தலும், ஈர உடம்பின் திரட்சியும், நாவற்பழ உதடுகளுமாய் கன்னிம்மா சிரிக்க, அந்த நேரத்தில் ஊடுருவிய லேசான குளிரில், உடம்பு முழுக்க உன்மத்தம் பிடித்து அலைந்தது.
காட்டுச்செடிகளையும், காலில் இடித்த கற்களையும் கடந்து அவன் முன்னேறினான். சூழ்நிலை மறந்து, ஊர் உலகம் மறந்து, அவளில் அப்படியே மூழ்கிப்போய் விடமாட்டோமா என்று பரிதவித்து, வா!’ என்று நாக்குழறி அவள் இடுப்பருகே கையை கொண்டு செல்ல, கன்னிம்மா விலகி ஓடவில்லை.
“இங்க வேணாம்…..தா….. அங்க போயிருவோம்” என்று கன்னிம்மா அவன் கைகளைப் பற்றியபோது சகலமும் பதறிக் கொண்டு உடம்பு துள்ளியது.
இப்பொழுதே, இந்த நிமிஷமே என்று தவியாய்த் தவித்த மனதைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. அருவிக் கப்பால் பொடிமணலாய்க் கிடந்த மணற்படுகை போன்ற இடத்தில், மணலில் இருவரும் சாய்ந்தபோது, செழியனால் தாங்க முடியவில்லை !
என்ன உடம்பு இது! ஒரு பெண்ணால் இப்படியும் கூட சுகம் தர முடியுமா! மின்சாரம் பட்டாற்போல் துடித்து, தவித்து, சில்லென்ற தணுப்பில் முழுகடித்து, பன்னீர்ச் சாரலாய் அவள் படர்ந்தபோது, திகட்டத் திகட்ட தேன் குடித்த வண்டாய் கிறங்கிப்போய் கிடந்தான் செழியன்.
குங்கிலியப்பாறைக் கற்கள், சிங்கப்பூரில் பிரசவித்துக் கிடக்கும் இளம் மனைவி, அலுவலகம், தான் வந்த காரியம், உடன் வந்த ரோபர்ட் என எல்லாமே அவன் நினைவிலிருந்து நழுவிப் போயின.
சட சடவென மழைத்துளிகள் ஊசிக்கம்பிகளாய் மேலே விழ, விடுபட முடியாமல் விடுபட்டு, இருவரும் சடாரென்று எழுந்து கொண்டனர். சுவையான விருந்தை ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, பாதியில் அடித்து விரட்டி எழுப்பி விட்டாற்போல், செழியனுக்கு வந்த கோபத்தின் எரிச்சல் தாங்கவில்லை. மழையிலிருந்து அவனை இழுத்துக் கொண்டு ஓடிய கன்னிம்மாவின் வேகத்துக்கு அவனால் ஈடு கொடுக்க முடியவில்லை.
திடீரென்று நடுமுதுகில் சுரீலென்று வலித்தது. வாந்தி வரும்போல் இருந்தது. வலி அடிவயிற்றுக்கும் பரவிய போது, மழை வலுத்துவிட்டது. நடக்கவே தடுமாறிய செழியன் அடிவயிற்றைப் பிடித்துக் கொண்டு மடிந்து உட்கார்ந்து விட்டான்.
சிறுநீர் கழிக்க வேண்டும் போலிருந்தும் சிறுநீர் பிரியவில்லை. கொஞ்ச நாட்களாகவே இந்த முதுகுவலி அடிக்கடி வருகிறது. வலி வந்தால் சில நிமிஷங்களுக்குத் துடித்துப் போய்விடுகிறான். முதன்முதலாக வலி வந்தபோதே மருத்துவர் சொல்லிவிட்டார். செழியனுக்கு சிறுநீரகத்தில் கற்கள் சேர்ந்துவிட்டதால், உடனே லேசர் அறுவை செய்து விட வேண்டுமென்று. ஆனால் செழியன் அலட்டிக் கொள்ளவே இல்லை. வலி வந்தால் சிலநிமிஷங்களுக்குத் தான். பிறகு வலி வந்த சுவடே தெரியாமல் போய்விடும். அதனாலேயே செழியனுக்கு இது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை .
-ஆனால், இப்படி நட்ட நடு காட்டில், அதுவும் இன்பமாய் ஒரு பெண்ணிடமிருக்கும் போதா இந்த இம்சை?
இப்போது வந்த வலி உயிர்நாடியையே தாக்கி, புழுவாய்த்துடிக்க வைத்தது. செழியன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அரற்ற, கன்னிம்மா ஒரு கணம் விக்கித்துப் போனாள். உடனே அவனைத் தூக்காத குறையாக, கிட்டத் தட்ட இழுத்துக் கொண்டு ஓடினாள். அருகிலிருந்த சுனைக்குப் பக்கத்திலேயே குகை போலிருந்த இடத்தில் அவனைக் கிடத்தினாள். வாயைத் திறக்கச் சொல்லி, நாக்கை இழுத்துப் பார்த்தாள். ‘சிப்பைக் கழற்றி உயிர்நாடியில் கை வைத்துப் பார்த்தாள். சிறுநீர் பிரியாமல் வலியில் அவன் துடிக்க, மீண்டும் அவன் வயிற்றை அமுக்கிப் பார்த்தாள்.
அடுத்த கணம் எங்கோ ஓடிப்போனாள். பேசாமல் மருத்துவர் சொன்ன மாதிரி லேசர் அறுவைக்கே போயிருக் கலாமே என்று செழியன் தன்னையே சபித்துக் கொண்ட நேரத்தில் கன்னிம்மா திரும்பி வந்தாள். கை நிறைய ஏதோ காட்டுப் பச்சிலைகளோடு வந்தவள், அருகில் இருந்த கல்லில் வைத்து இலைகளை நசுக்கி, சாற்றை அவன் வாயில் பிழிந்து ஊற்றினாள். |
செழியன் வேறு வழியின்றிக் குடித்துத் தொலைத் தான். பிறகு, வயிற்றில் இன்னொரு வகை பழுப்புப் பச்சிலையை இடித்து, பற்றுப் போட்டதுதான் நினைவில் இருந்தது. செழியன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது கால்களில் முட்டு கொடுத்து, அவன் எதிரே அமர்ந்திருந்தாள் கன்னிம்மா.
“வலி இப்ப எப்டி இருக்கு?”
“வலியே இல்லை……. கன்னிம்மா! உருவிவிட்டாற் போல் உடம்பு அவ்வளவு சுறுசுறுப்பா இருக்கு!”
“வீட்டுக்குப் போன பிறகு, நிறைய வாழைத்தண்டு பெரட்டி சாப்புடு! சாத்துக்குடி இல்லன்னா ஆரஞ்சாவது புளிஞ்சு குடி, என்ன? என்று சொல்லிவிட்டு அவள் எழுந்து கொள்ள, செழியன் தாபத்தோடு அவள் கைகளைப் பிடித் திழுத்தான். – ” தா! போதும்……கையை விடு!…..ரொம்பத்தான்! பொழுது விடியப் போகுது! ஆத்தா தேடும்! நான் இல்லன்னா கோவிக்கும்” என்று அவன் கைகளை உதறிவிட்டு கன்னிம்மா வேகமாய் நடக்க, செழியனுக்கும் வேறு வழி தெரியவில்லை.
மழை எப்போது நின்றதென்று தெரியவில்லை. வானம் மப்பும் மந்தாரமுமாய் அலமலந்து கிடந்தது.
“அட! இங்க பாரு!” என்று திடீரென்று கன்னிம்மா கூவினாள். குரல் வந்த திசையில் பார்த்த செழியன் திகைத்துப் போனான். நண்பன் ரோபர்ட் சுவா, ஒரு மரத்தின் கீழ் அமர்ந்து, குத்திட்டாற்போல் எங்கோ வெறித்தாற்போல் பார்த்துக் கொண்டிருந்தான்.
“ரோபர்ட், ரோபர்ட்” என்று எவ்வளவு உலுக்கியும், ரோபர்ட்டின் இமைகள் கூட அசங்கவில்லை. ஆணி அடித்தாற் போல் அப்படியே சிலையாக அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு ? கன்னிம்மா ?” என்று செழியன் பதற, “ஒண்ணும் பயப்படாதே ! நுணுச்சி இலையை சாப்ட்டிருக்கு, அதான்!… நுணுச்சி பழம், இலை எல்லாமே போதைதான்! இதை உங்கூர்ல என்ன சொல்வாங்கன்னு தெரியலை……… ஆனா, சாமியாருங்களைத்தவிர வேறு யாருமே, காட்டிலெ இந்தப் பக்கம் வர மாட்டோம். தா… வறேன்” என்றவள், அதே மரத்தின் நடு பட்டைகளை பிடித்து, வலித்து இழுத்தாள். பொலபொலவென்று பெயர்ந்து வந்த பட்டைகளை கல்லில் இடித்துப் பொடியாக்கினாள். பக்கத்தில் கிடந்த சில செடிகளிடம் போய் ஏதோ கிசுகிசுத்தாள். பிறகு, அந்த இலைகளையும் பறித்து, இன்னொரு கல்லில் இடித்து, பட்டைப்பொடியையும், இலைச்சாற்றையும் கலந்து, அதை ரோபர்ட்டின் மூக்கில் சுவாசிக்கவிட்டாள்.
பத்து நிமிடங்களுக்குப் பிறகு, மரத்தின் பின் பக்கமாக, குறிப்பிட்ட வேரில் போய் அழுந்தி நிற்க, சடசட வென்று மரத்திலிருந்து மழைநீர் போல் தண்ணீர் கொட்டியது. அது தான் தாமதம் என, உலுக்கி விட்டாற் போல் விருட்டென்று எழுந்து உட்கார்ந்த ரோபர்ட், உடம்பை சிலிர்த்துக் கொண்டான்.
“ஐயே! என்னா வீரம் பாரு!” என்று ரோபர்ட்டைப் பார்த்து கன்னிம்மா வாயைப் பொத்திக் கொண்டு சிரித்தாள். ரோபர்ட்டுக்குப் புரியவில்லை. “ஏன் சிரிக்கிறாள்?” என்று கேட்க, செழியன் பேசவில்லை. கோடிட்டாற்போல் விடு வென்று நடந்துகொண்டிருந்த கன்னிம்மாவின் வேகத்துக்கு, கிட்டத்தட்ட செழியன் ஓடிக் கொண்டிருந்தான். பின்னா லேயே ஓடிவந்து கொண்டிருந்த ரோபர்ட்டுக்கு கோபம்தான் வந்தது.
“பார்க்க “hitam manis” தான் என்றாலும் கூட இப்படியா ஒருவன் மயங்கிக் கிடப்பான்?”
“போடா……மடையா ! கருப்பாயிருந்தால் என்ன?” A rose is a rose என்று மனதுக்குள் செழியன் பூரித்துக் கிடந்தது ரோபர்ட்டுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
சட்டென்று நின்றாள் கன்னிம்மா!
“இடம் வந்திரிச்சில்ல, இனி என் பின்னாடி வர வேணாம்” என்று கறாராய்ச் சொல்லிவிட்டு கன்னிம்மா காணாமல் போனாள்.
“இப்பதான் நமக்கு வழி தெரியுமே! செழியன்! என்னோட வா ! நான் உனக்கு ஒரு அதிசயம் காட்டறேன்” என்று ரோபர்ட் அழைத்தான்.
‘போவதா…… வேண்டாமா…….’ என்று தயக்கம் ஏற்பட்டாலும் ரோபர்ட் விடவில்லை. ‘அங்கே பார்!’ என்று ரகசியமாய் கேமராவை சரி செய்ய, ஒருகணம் செழியனால் இமைகளை எடுக்க முடியவில்லை. வந்ததிலிருந்தே இதுவரை எந்த வனவிலங்கையும் பார்க்கவில்லையே என்ற ஏக்கம் இப்படியா விழி விரியும் ஆச்சரியத்தைத் தரும்? காட்டு ராஜாவான ஒரு யானைக்கு முன்னால் கரடி போன்ற ஒரு மிருகம் நின்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தது.
“அட! அது கரடியே தான்!” என்று ரோபர்ட் அழுத்தமாய் கூறினாலும், யானையும் கரடியும் இவ்வளவு சகஜமாக, அன்பொழுகப் பேசிக் கொண்டிருந்த கண் கொள்ளாக் காட்சிதான் இந்நூற்றாண்டின் அதிசயம் என்று மெய்சிலிர்த்துப் போனான் செழியன்.
“இது மட்டுமா? இந்தப் பக்கமாய் வா!” என்று ரோபர்ட் இன்னொரு பக்கமாய் இழுத்துக் கொண்டு போனான். என்ன அழகு! என்ன அழகு! பிரமித்துப் போனான் செழியன்!
கலர் கலரான காட்டுச்செடிகள், தாங்களே மெட்டு போட்டாற் போன்றதொரு இசைக்கு, சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தன. மந்திரித்துவிட்ட மங்கை போல் அந்த நர்த்தனம் காணக் கண்கள் போதவில்லை! செழியனின் காதில் மெதுவாய்க் கிசிகிசுத்தான் ரோபர்ட்.
“இப்போது பார்!!”
கீழே கிடந்த ஒரு சிறு கல்லை எடுத்து, குறி பார்த்து, அந்தச் செடிகளைப் பார்த்து வீச, அடுத்த கணம் செடிகள் அசைவற்று நின்றுவிட்டன. காற்றுக்குக் கூட அசைய வில்லை. காட்டுக்குள் தான் என்னென்ன மர்மங்கள்? என்னென்ன புதிர்கள்? என்று ஆவல் தாங்காமல், இந்த முறை ரோபர்ட் இழுக்கமாலேயே, அவனை பின்தொடர்ந்தான் செழியன். காட்டுக்குள்ளிருந்து நெடுக அடர்த்தியான மரங்களூடே நடக்க, ‘உய்ஷ்ஷென்று’ ஏதோ விசில் சத்தம் போல், காற்று வீசியது. சாக்குமூட்டை அடுக்கு போல் நெருங்கித் தெரிந்த கரும்பாறைகள் அருகில் வந்ததும் ரோபர்ட் நின்றான். கேலிப்புன்னகையோடு செழியனிடம், தன்னுடைய பைனாகுலரை நீட்ட, செழியனுக்குப் புரிய வில்லை. பார்த்தால், குத்திட்டு அமர்ந்திருந்த சாமியார்கள்!
நான்கு சாமியார்கள்! நீண்ட தாடியும், பழுப்பேறிய கண்களுமாய், மெய்மறந்து வானத்தை நோக்கிச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் முழு நிர்வாணமாய் அவர்கள் அமர்ந்திருந்த நிலை, செழியனுக்கு உண்மையிலேயே புரிய வில்லை. யாரிவர்கள்? சாமியார்கள் தானா? அல்லது சித்தர்களா? ஏனோ செடிகளையும் பிராணிகளையும் பார்த்து ரசித்தது போல், இந்த அம்மண உருவங்களை செழியனால் ரசிக்க முடியவில்லை . ஆனால் ரோபர்ட் அங்குலம் அங்குலமாய் ரசித்து ரசித்து அவர்களை பல கோணங்களில் படம் பிடித்துக் கொண்டிருந்தான்.
“இவர்கள் சுருட்டிப் போட்ட இலையைத்தான் எடுத்துக்கொண்டு போய், நானும் முகர்ந்தேன். பிறகு என்ன நடந்ததென்றே தெரியவில்லை. நீ வந்த பிறகு தான் எனக்கு நினைவே வந்தது”
“வேறென்ன, கஞ்சாவாகத்தானிருக்கும், இதைத் தான் கன்னிம்மா, நுணுச்சி இலை என்று சொன்னாள்” என்றெல்லாம் ரோபர்ட்டிடம் செழியன் விளக்கிக் கொண்டி ருக்கவில்லை. அடிக்கடி கன்னிம்மாவின் பெயரைச் சொன்னால், சிங்கப்பூருக்குப் போனதும், ரோபர்ட் அலுவலகத்தில் எப்படியெல்லாம் சொல்லிச் சிரிப்பான் என்பது செழியனுக்குத் தெரியாதா என்ன?” அவை போதை இலைகள்” என்பதோடு நிறுத்திக் கொண்டான். அதற்கு மேலும் எங்கும் சுற்ற சக்தியில்லை. ரோபர்ட்டுக்கும் பசி!
“தாமிரபரணியோட திரும்பிப் போறீங்களா?” என்று திடீரென்று அசரீரியாய் கேட்க, திடுக்கிட்டுத் திரும்பினால், அம்மணச் சாமி ஒன்று கெக்கெலித்தது. “நட்டகல்லும் பேசுமோ? நாதன் உள் இருக்கையில்! சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ” என்று ‘கோரஸாக’ நாலு சாமியார்களும் கெக்கெலிக்க, பொத்துக் கொண்டு வந்தது கோபம்! திரும்பிப் பாராமல் நடந்து விட்டான் செழியன். அவர்கள் பேசியதில் ஒரு வார்த்தை கூட அவனுக்குப் புரியவில்லை. புரிந்து கொள்ளுமளவுக்கு அவனுக்குத் தமிழில் ஆற்றல் இல்லை தான் என்றாலும், அவர்களின் சிரிப்பு கடும் கோபத்தை உண்டுபண்ணியது செழியனுக்கு!
‘கஞ்சா அடித்த சாமியாரெல்லாம் நம்மைக் கண்டு கேலி செய்யுமளவுக்கா இருக்கிறோம், சரிதான் போங்கடா!’ என்று வேகமாக நடக்க, ரோபர்ட்டுக்கோ பசியோ பசி! முதல் நாள் வயிற்று வலியும், முதுகுவலியுமாய் பட்ட அவதியில் செழியனுக்கும் களைப்பில் உடல் தடுமாறியது. கூடவே பசித்தது. ‘கொண்டு வந்த பிரெட், உலர்பழங்கள் என எல்லாமே முடிந்துவிட்டதே! எதைச் சாப்பிடுவது?’
கவலையோடு ‘டெண்டு’க்குள் நுழைந்த இருவரும் ஒரு கணம் அப்படியே திகைத்து நின்று விட்டார்கள். இந்த நேரத்தில் கன்னிம்மாவை இவர்கள் ‘டெண்டு’க்குள் எதிர் பார்க்கவேயில்லை. ராபர்ட்டின் பைக்குள் கையை விட்டு ரொம்ப சாவதானமாக எதையோ துழாவித் தேடிக் கொண்டி ருந்தாள் கன்னிம்மா. தேடியது கிடைத்தாற்போல் ‘அய்!’ என்று துள்ளினாள்; சிரித்தாள். பைக்குள்ளிருந்து எடுத்த புட்டியை நெஞ்சோடணைத்துக் கொண்டாள். எப்படி – திறப்பது, எந்தப்பக்கம் அமுக்குவது என்று கூடத் தெரியாமல், அவள் கஷ்டப்படுவது பார்த்து ரோபர்ட்டுக்கு சிரிப்பு வந்தது! செழியனுக்கோ கொலை வெறியே வந்து விட்டது. -ரோபர்ட்டின் பைக்குள் கையை விட்டவள், அடுத்து நம்முடைய பையைத் தானே குடைவாள் என்ற பதட்டத்தில் பாய்ந்து உள்ளே செல்ல, கையும் களவுமாய் பிடிபட்ட கன்னிம்மா ஒன்றும் பயந்து ஓடவில்லை! மாறாக வெட்கம் சிந்தும் புன்னகையோடு கேட்கிறாள்.
“என்ன இது? இதுதானே வாசனை மருந்து ? இதை மேல அடிச்சுக்கிட்டா இன்னைக்கெல்லாம் வாசனையாவே இருக்கலாம் தானே ? ம்ம்ம், மோந்து பாக்கவே அப்படி மயக்குதே வாசனை! அட, கேக்குறேன் இல்லே? பதிலே சொல்லமாட்டேங்கிறியே?”
“அதுக்காக இப்படித் தான் கேட்காம கொள்ளாம எடுக்கறதா?
“எதுக்குக் கேட்கணும் ? நீ கேட்டுத்தான் என்னைத் தொட்டியாக்கும்? போனவாட்டி வந்த ரெண்டு பள்ளிக் கூடத்து பொண்ணுங்க இதுமாதிரி ரெண்டு புட்டிங்க குடுத்துட்டுப் போனாங்க! சீக்கிரமே முடிஞ்சுபோச்சி! அதான்! நீயா குடுப்பேன்னு நினைச்சேன்! ஆனா……எங்கே? நீ தான் சும்மா இருக்கியே !”
அதற்குள் ரோபர்ட் அருகே வந்து பாட்டில் மூடியைத் திறந்து, மணக்கும் ‘பெர்ஃபுயுமை’ கன்னிம்மாவின் மேல் பிசிறித் தெளிக்க, ‘அய்’, ‘அய்’ என கன்னிம்மா பூரித்துப் போனாள். அடுத்த கணம் ரோபர்ட்டின் கன்னத்தில் இச்சென்று ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, செண்டு பாட்டிலோடு ஓடிப்போனாள்! கன்னிம்மாவின் முத்தம் செழியனை எரிய வைத்தது!
“சே! ஸ்டிங்கிங்!” என்று அருவருப்பில் கன்னத்தைத் துடைக்கப் போன ரோபர்ட், செழியனின் பார்வையைப் பார்த்து, நினைப்பை மாற்றிக் கொண்டான். ‘கொஞ்சம் எரியட்டும் இவனுக்கு’ என்று நினைக்கும் போதே சிரிப்பு வந்தது. ‘ரோபர்ட் ஏன் மலச்சிக்கல் வந்தாற்போல் முகத்தை வைத்துக்கொண்டு நம்மை நோட்டம் விடுகிறான்’ என்று செழியன் கவலைப்படவில்லை. அதற்குமேலும் ஒருவினாடி கூட அங்கிருக்க அவனுக்குப் பிடிக்கவில்லை . அவசரம் அவசரமாக மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டிருந்த போது, ரோபர்ட் மட்டும் அசையவில்லை. ஏதாவது சாப்பிடக் கொடுத்தாலொழிய இவன் அசைய மாட்டான் என்பது புரிய, வேறு வழி?
கன்னிம்மாவைத்தான் கேட்கணும் என வெளியே வந்தால், கன்னிம்மா எதிரே வந்து கொண்டிருந்தாள். ஏதோ காட்டு இலையில் அவித்த இனிப்புக்கிழங்கும், சூடான சுக்குக் காப்பியும் அந்த நேரத்துப் பசிக்கு அமிர்தமாயிருந்தது! “இந்த ஊத்துமாலிக்கிழங்கு சாப்பிட்டதுக்கு இன்னும் ரெண்டு நாளைக்குப் பசியே எடுக்காது” என்று கன்னிம்மா சொன்னது உண்மையே! ரெண்டு கிழங்கு சாப்பிட்டு முடிக்கும் போதே வயிறு ‘திம்’மென்று ஆகிவிட்டது.
“இந்தா கன்னிம்மா!” என்று கொஞ்சம் ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான் செழியன்.
“ஏன் இப்பவே……… அதான் உடனே திரும்பி வரப் போறீங்களே?”
“நான் உடனே திரும்பி வருவேன்னு எதை வச்சு சொல்றே?”
“ஆங்…… எனக்கு என்ன தெரியும்? ஆத்தா தான் சொல்லிச்சு ?”
இவளே ஒரு புதிர்! இதில் இவளது ஆத்தா வேறு சொன்னாளாம்? அந்தப் புதிரை வேறுபோய் கேட்கணு மாக்கும்.
சிங்கப்பூர் வந்து சேர்ந்த மூன்றாவது நாள் தான் செழியனுக்கு ஒழிந்தது.
மனைவி சியாமளாவைக் கொஞ்சியும், கைக் குழந்தையை உச்சி மோந்து சீராட்டியும் வீட்டில் நல்ல பேரெடுத்து விட்டான். ஒருவழியாக ‘சேஃப்டி’ பையைத் திறந்து, ஒரே ஒரு உருண்டைக்கல்லை தெரிவுசெய்து, கல்லும், மண்ணும் போக நன்றாகக் கழுவி, அலசித் துடைத்துக் கொண்டு, சிராங்கத்துக்குப் புறப்பட்டான்.
செழியன் சென்ற போது கடையில் கூட்டமே இல்லை. இத்தனைக்கும் நன்கு அறிமுகமான நகைக்கடை தான் என்றாலும், உரிமையாளர் எந்த சலுகையும் காட்ட வில்லை. ஏதோ ரசாயன நீரால் கல்லை மீண்டும் ஒருமுறை கழுவினார். பதினைந்து நிமிஷங்களுக்குப் பிறகு சொன்னார்.
“இது வெறும் சாதாக்கல்லு, தம்பி! பவுனுன்னு நினைத்து ஏமாந்து போறாப்பில, காக்காய்பொன்னை நம்பி ஏமாந்து போறவுங்க நிறைய பேர் இருக்காங்க! ஒரு விதத்திலே பார்த்தா இதுவும் காக்காய் பொன்னு தான்! ‘இமிடேஷன் ஜூவல்லரி’ கடையில வேணுன்னா ஒருவேளை வாங்கிப்பாங் களாயிருக்கும். போனாப்போவுது! இவ்வளவு தூரம் வந்ததுக்கு நானே ஒருவிலை கொடுத்து வாங்கிக்கறேன்” என்று சொல்லச் சொல்ல, செழியனால் நிற்கவே முடிய வில்லை; கலங்கிப்போனான். இந்த ஏமாற்றத்தை அவனால் தாங்கவே முடியவில்லை! பேசாமல் கல்லைக் கொடுக்காமல் திரும்பி வந்து விட்டான்.
ரோபர்ட்டுக்கு ஆச்சரியம். மூன்று நாட்களாக மாலையானால் செழியன் ‘பப்பில் உட்கார்ந்து விடுகிறான், அலுவலகத்திலும் சுரத்தே இல்லை. பத்து நாள் பட்டினி கிடந்தவன் போல் முகத்தில் தெம்பே இல்லை. ‘என்ன ஆச்சு இவனுக்கு?’ அன்று பப்பில் மௌனமாக மது அருந்திக் கொண்டிருந்த செழியனுக்கு எதிரே போய் அமர்ந்து கொண்டான். இரண்டாவது ‘பெக்’கும் உள்ளே போனபிறகு மென்மையாக ரோபர்ட் விசாரித்தான். கொஞ்சமும் யோசிக்காமல் பொலபொலவென்று கொட்டிவிட்டான் செழியன்.
“இவ்வளவு கஷ்டப்பட்டும் ஒரு பலனும் இல்லாமல் போய்விட்டதே” என்று அவன் புலம்ப, ரோபர்ட்டால் நம்பவே முடியவில்லை!
ஆக, சொந்த ஆதாயத்துக்காகத்தான் இவன் என்னை பயன்படுத்திக்கொண்டானா? ‘ராஸ்கல்……இடியட்! அனுபவிடா அனுபவி!’ என்று மனசுக்குள் திட்டிவிட்டு கிளம்பிவிட்டான். ரோபர்ட் சென்ற ஐந்தாவது நிமிடம் பர்மியரைப் போல் தோற்றம் கொண்ட சீனர் ஒருவர் அவன் எதிரே வந்தமர்ந்தார். “நாளை உங்களுக்கு நிதானமிருக்கும் போது என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்”. வெல வெலத்துப் போனான் செழியன்! அப்படியானால் இவ்வளவு நேரமும், தான் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் இந்த ஆள் கேட்டுக் கொண்டிருந்தானா? குடித்ததெல்லாம் அக்கணமே இறங்கிவிட்டது செழியனுக்கு!
“நானும் நகை வியாபாரிதான்! மியன்மாரிலிருந்து வருகிறேன். உங்களிடமுள்ள கல்லை நாளை இந்த முகவரியில் கொண்டு வந்து காட்டினால், நாம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு அந்த பர்மிய சீனர் போய்விட்டார்.
எப்படி யோசித்தும், தனித்துப் போகும் தைரியம் செழியனுக்கு வரவில்லை. ரோபர்ட் பிகு பண்ணவில்லை. உடனே ஒப்புக்கொண்டான்.
அலசி அலசி கழுவினார் பர்மிய சீனர். கூர்வட்டக் கண்ணாடியில் மாற்றி மாற்றி உன்னிப்பாக ஆராய்ந்தார். அரை மணிநேரத்துக்குப் பிறகு, நிமிர்ந்தார்!
இடுங்கிய கண்களால் அவர்களை ஆழமாகப் பார்த்தவர், பேசினார். “இது ஒரு ‘யூனிக்’கான கல்! விக்டோரியா மகாராணியின் மோதிரத்தில் கூட இப்படி ஒரு கல்லை இழைத்துச் செய்ததாகச் சரித்திரம் உண்டு. அதனால் இதை நல்ல விலை கொடுத்து நானே வாங்கிக்கொள்கிறேன். ஆனால், உங்களிடம் உள்ள எல்லாக் கற்களுமே எனக்கு வேண்டும்” என்று சொல்ல, பட்டென்று பதில் கூறினான் செழியன்.
“உதவாக் கல் என்று நினைத்து எல்லா கற்களையுமே தூக்கிக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டேனே!”
“நீங்கள் பொய் சொல்லவில்லையே! சரி, இனி கிடைக்கும் கற்களையெல்லாம் என்னிடமே கொண்டு வந்து விற்கவேண்டும், சரியா?”
‘அப்படியே’ என்று தலையாட்டினார்கள் இருவரும். பர்மிய சீனர் எடுத்து நீட்டிய பணத்தைப்பார்த்த செழியனுக்கு சந்தோஷத்தில் விசிலடிக்கத் தோன்றியது. ஆனாலும் உணர்ச்சியை முகத்தில் காட்டாமலிருக்க பெரும்பாடுபட வேண்டியிருந்தது. சரியாக ஆறுமாதங்களுக்குப் பிறகு, சிராங்கூன் சாலையில், சிங்கையின் முக்கியப்பிரமுகர் ஒருவரைக் கொண்டு, அந்த நகைக்கடை திறக்கப்பட்டது. கடையின் உரிமையாளர்கள் செழியனும் ரோபர்ட்டும் தான்! பத்திரிகை வேலையை இருவரும் விட்டுவிட்டார்கள்.
விதம் விதமாய் ஒளிரும் கற்களை தங்கத்திலிழைத்து முற்றிலும் புதிய டிசைன்களில், அழகழகாய் விற்பனைக்கு வைத்திருந்த நகைகளைப் பார்க்கப் பார்க்க பெண்களுக்கு ஆவல் தாங்கவில்லை. தமிழ்ப் பெண்கள் மட்டுமல்ல, எல்லா இனத்தவருமே ஆர்வத்தோடு வாங்கினார்கள்.
இரண்டே வருடத்தில் ஆர்ச்சர்ட் சாலையில் இன்னுமொரு கடை தொடங்கி, ரோபர்ட்டையும், தன்னுடைய மைத்துனனையும் அந்தக் கடையில் இருத்தினான்.
செழியனுக்கு ஏதோ லாட்டரி அடித்து விட்டதாக பேசிக்கொண்டார்கள். வெளியூரில் அவனுக்கொரு சின்ன வீடு இருப்பதாகவும் கூட பேசிக் கொண்டார்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல் இரண்டு மாசத்துக்கொருதரம், ‘பிசினஸ் ட்ரிப்’ என்று சொல்லி, செழியன் காணாமல் போய்விடுவான்.
திரும்பி வரும் போது தங்கபஸ்மம் சாப்பிட்டாற் போல் முகத்தில் அப்படியொரு மினுமினுப்புடன் சுறு சுறுப்பாக வளைய வருவான். அவனுடைய இளம் மனைவிக்கு பரவசம் தாங்காமல், இரண்டாவது குழந்தையை சுமந்து கொண்டிருந்தவள், ஒருநாள் கொஞ்சி, கொஞ்சி கேட்கிறாள்.
“என்னங்க ஆச்சு உங்களுக்கு? எனக்கு மட்டும் சொல்லுங்களேன்!”
“அய்யே! சொல்லவேண்டியதுதானே?” என்று யாரோ ‘களுக்’கென்று சிரிக்க, செழியன் பூரிப்போடு அண்ணாந்து நோக்க, ‘கன்னி ஜூவல்லர்ஸ்’ எனும் பெயர் பொறித்த பதாகை, வெயிலில் தகதகவென்று கண்ணைப் பறிக்கும் அழகோடு மின்னிக்கொண்டிருந்தது.
– யுகமாயினி.
– மீள்பிரசுரம்: தமிழ் முரசு