கவலைப்பட வேண்டாம்…!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 5, 2012
பார்வையிட்டோர்: 9,241 
 

எத்தனை நகரங்களுக்குப் போனாலும் மதுரையின் அனுபவமே தனிச்சிறப்பானது. உணர்ந்த மாதிரி தெளிவாகத்தான் இருந்தார், கார்த்திகேயன். அவரின் மனைவிதான் இனம் புரியாத குழப்பத்திலிருந்தாள். புதிய வீட்டில் சாமான்களை ஆங்காங்கே எடுத்து வைத்தபடியே கவனித்தவர் மெல்ல அவளருகே போய் ‘நானிருக்கேமா…’ என்பதாக இடது தோள்ப்பற்றினார், அந்த •பரிசம் பிடித்தாற்போல் தன்கையை சேர்த்துக் கொண்டாள்.அவள், கண்கள் சின்னதாய் கலங்கியது.

“பத்மா எதுவுமே காயமில்லை. நாட்களின் நகர்வு அனைத்தையும் ஆற்றிவிடும்னு மனச தேத்திக்கனும். இது மாதிரிலாம் நடக்கும்னு முன் கூட்டியே தெரிஞ்சிருந்தா நாமளும் கொஞ்சம் சுதாரிச்சிருப்போம்ல ” என்றார்.

“தாங்க முடியலங்க… டூர்முடிஞ்சி, பொனமாத்தாங்க இங்க வந்திருக்கேன். உசுரு மொத்தமும் வேலூர்லதான் கெடக்குதுங்க…”

வார்த்தைகள் தடுமாறியது. மனைவியை தன் நெஞ்சில் அணைத்துக் கொண்ட, கார்த்திகேயனுக்கும் மனசின் உள்ளே சங்கடம் முட்டினாலும் அதைக் காட்டிக் கொள்ளாது.

“எதையுமே நினைக்கக் கூடாதுன்னுதான் இருபது நாளுக்கு முன்பே இருப்பிடத்தையே காலிபண்ணி திருவண்ணாமலை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், இராமேஸ்வரம், கன்னியாகுமரின்னு கோயில் நகரங்கள சுத்திப்பாத்துட்டு இரண்டாவது தடவையா வாழ்க்கையை தொடங்க மதுரைக்கு வந்திருக்கோம். இனிமே கடுகளவுகூட வருத்தமில்லாம சந்தோஷத்த மட்டும் நாம அனுபவிக்கனும் பத்மா” என்ற கணவனை ஏறிட்டுப் பார்த்த பத்மாவுக்கு சிரிக்க வேண்டும் போலிருந்தது.

“எனக்கு தைரியம் சொல்லிட்டு நீங்க எப்படி குமுறுவீங்கனு எனக்காத் தெரியாது” நினைத்துக் கொண்டவள் அடிப்படிக்குள் போய், சாமான்களை எடுத்து செல்பில் அடுக்கலானாள்.

*****

“அம்மா,வேலையெல்லாம் முடுஞ்சிருச்சு நான் கிளம்பறேம்மா” அந்த பணிவுக்கு, கொஞ்சமும் சட்டை பண்ணாது கால்மேல் கால்போட்டு வார இதழொன்றை புரட்டிக் கொண்டிருந்த நிவேதா திரும்பிக் கூடப் பார்க்காது “போகலாம்” என்பதாக தலையால் மட்டுமே சைகை செய்தாள்.

‘ம்…அம்புட்டுப் பொருளையும் வேன்லேருந்து தூக்கியாந்து வீடுமுழுக்க வெச்சிருக்கோம் டீ சாப்பிட்டுப் போங்கன்னு ஒரு வார்த்தைக்குக் கூட சொல்லத் தோனலேயே “வங்கி மண்டல அதிகாரியான, நிவேதாவின் கணவன், ராம்குமாரின் உதவியாளர்.

மனசுக்குள் எண்ணியவாறே கிளம்பிய போது,கார் வந்து நின்றது.

ராம்குமார்தான் இறங்கினான்.

“கெளம்புரிகளா…இந்தாங்க டிபன் சாப்பிட்டுப் போங்க” என்று பர்ஸைத் திறந்த போது, “அய்யா வேணாம்யா நீங்க உள்ளப் போங்க” தலை குனிந்தபடியே நகர்ந்து விட்டார்.

“என்ன நிவேதா, வீடு ஏரியாலாம் பிடிச்சிருக்கா” கேட்டவாறே அறைக்குள் போய் கைலிக்கு மாறி வந்த, கணவனுக்காகத் தயாராய் காபியும்,பிஸ்கெட்டும் வைத்திருந்தவள் ” உண்மையாகவே எனக்கு புது அனுபவமாயிருக்குங்க காலேஸ் டூர் வந்தபோது இருந்த மதுரை இப்போது ரொம்ப, ரொம்ப பிரமிப்பாயிருக்குங்க. மீனாட்சியம்மன் கோயில் கோபுரங்கள் கட்டிடங்களின் பிரமாண்டம், மனிதர்களின் வருகை எல்லாக் காட்சிகளிலும் லயித்துப்போகிறேன். மனசு மொத்தமும் இப்ப லேசாயிருக்கு ஆனா…”

அவள் எதைக் கூறப் போகிறாள் என்பதை சட்டென யூகித்தவன் “வேணாம், வெகுதூரம் வந்திருக்கறதே மறக்க வேண்டிய அந்த விசயங்களை நினைக்காம இருக்கத்தான்.எதனாலோ உனக்கு சிலதுகள் பிடிக்காமல் போச்சு அத மாற்றியமைத்த விதம் வேணா மத்தவங்களுக்கு தப்பாகப்படலாம் ஆனா நம்மோட புதுவாழ்க்கைக்கு,என் தேவதையோட மகிழ்வுக்கு நான் எதையும் செய்வேன்னு நிருபிக்கவே இந்த மாதிரியான ஒரு முடிவுக்கு வரவேண்டியதாப் போச்சு” கொஞ்சம் பெருமையாக இதைக் கூறி “நாளை ஆபிஸ்க்கு லீவு போட்டுருக்கேன் கோயிலுக்குப் போயிட்டு அப்படியே போத்தீஸ், ஆலுக்காஸ் போகலாம்” என்றான், நிவேதாவைப் பார்த்து கண் சிமிட்டியபடியே.

தன் சாட்டைக்குச் சுழலும் பம்பரமான கணவன் அமைந்ததில் அதிகப்படியாகவே சந்தோஷப்பட்டாள், நிவேதா.

*****

காம்பவுண்டில் குடியிருப்போர் அனைவரும் அன்பாய்ப் பேசினார்கள், ஒட்டுதலாய்ப் பழகினார்கள். திடீரென வந்த இடத்தில் எதிர்பார்க்காத அந்னோனியம், ஈர்ப்பான உறவு கிடைத்ததில் பூரித்துதான் போனாள், பத்மா. தன்னில் கனமாயிருக்கும் வேதனைகள் அனைத்தும் இறக்கி வைக்கவே முடியாத பாரமென வருந்தியவளுக்கு கொஞ்சம்,கொஞ்சமாக பாரம் குறைந்த உணர்வு…வழக்கம்போல் அதிகாலையிலேயே எழுந்து விடுவாள். தினத்துக்கொருவர் தலைவாசல் தெளிக்கும் முறை, இப்போதெல்லாம் பத்மாவே கூட்டி, தெளித்து, மஞ்சள் நீரூற்றி மங்களமாக வைத்திருப்பதை கடமையாகக் கொண்டிருந்தாள்.

ஊர் விட்டு ஊர் வந்திருக்கிறோம் இங்கே உள்ள மனிதர்கள் எப்படியிருப்பார்களோனு உள்ளூரப் பயந்திருந்தவள் “என்னங்க இங்கிருக்க சனங்க ரொம்ப நல்லவங்க நம்மள யாருனே தெரிஞ்சிக்காம அனுசரணையா நடந்துக்கறாங்களே” ஒருநாள் இதைக்கூறிய மனைவியை ஆச்சரியத்துடன் பார்த்து அவள் கேசம் நீவினார் ‘கடவுள்கிட்ட இதத்தானே வேண்டினேன் பத்மா.. எனக்காக உன் உறவுகளையெல்லாம் துறந்து வந்தியே கடைசி நிமிஷம் வரை உன்னை நான் பூரணமா பார்க்கனும்.

ஏதோ இடையில சில சோகப்பாத்திரம் நடிக்க வேண்டியதாப் போச்சி எங்கே அது நிரந்தரமாகிடுமோனு நெனச்சேன். கடவுள் கைவிடல’ நெகிழ்ந்து, நினைத்துக் கொண்டார்,கார்த்திகேயன்.

ஏற்கனவே மாற்றக் கொடுத்தபடி கார்த்திகேயனுக்கான வங்கிக் கணக்கு, பென்ஷன், ரேசன்கார்ட் முகவரி, கேஸ்சிலிண்டர் எல்லாம் அவரை மதுரைவாசியாக்கி விட்டது. மீனாட்சியம்மனின் சுற்று வீதிகளில் நடைபயணம், காலை டிபன், நூலகம் போய் வரலாறு புதினங்கள் வாசித்தல், மாலையிலும் நடை, மங்கள விஷேசமென்றால்…கணவனும்.மனைவியும் ஆயிரங்கால் மண்டபமே நிம்மதியான சுகம் என தங்கி விடுவார்கள்.

நாளடைவில், “நமக்கென்ன வயசாப்போச்சி எதற்காக எல்லாம் முடிந்த மாதிரி தேமேனு இருக்கனும்?” கணவனின் உள்ளோட்டத்தை நகல் எடுத்தாற்போல் “என்னங்க சும்மாவே ஏன்னிருக்கனும்னு கை கால் மனசுலாம் மதமதக்குதோ” கேட்டாள்.

“ஆமா பத்மா நல்ல திடமாத்தானே இருக்கேன். இப்பவே ஏன் முடங்கிக்கனும்…வயசும்,வாழ்வும் இன்னும் நிறைய உள்ளதே” அவர் பொறி வைத்துப் பேசுவது அவளுக்கா புரியாது.

“ஏங்க பென்ஷன் வருது, மாசமானா டெபாஷிட்டுக்கு வட்டி வருது, இதுவே நம்ம ரெண்டுப் பேருக்கும் போதுமானதே பிறகு ஏங்க ஒடம்ப வருத்திக்கனும்”

“அடிப்படையுல நானொரு வியாபாரியோட மகன்…வீணா பொழுதக் கழிக்கறதுல உடன்பாடில்லாதவன். அந்த நேரத்துல ஒன்ன எப்படி ரெண்டாக்குரதுனு சிந்திக்கறவன்” தன் குலப்பெருமையை வெளிக்காட்டினார், கார்த்திகேயன்.

இப்போது பத்மாவுக்கு தெளிவாக புரிந்து போனது. ஏதோ திட்டம் வைத்திருக்கார்ப்போல். கார்த்திகேயனும் மூடி திறந்தார் “காளவாசல் ஏரியாவுல ஜீஸ், பழக்கடைப் போட்டா நல்லா வியாபாரமாகுமாம். வாக்கிங் போகும் போது நண்பரொருவர் சொன்னார். நாம அலைய வேணாம்,கடைக்கே சரக்கெல்லாம் வந்துரும். மொதல்ப் போட்டு, நாலு வேலையாட்கல வெச்சாப் போதும்னார். யோசித்ததில் சரியாத்தான்படுது, நீயென்ன சொல்ற பத்மா?”

கணவரைப் பற்றி அவளுக்குத் தெரியும் எந்த ஒன்றையும் செய்யும் முன் பல தடவைகள் ஆராய்ந்து விடுவார்… அதிலே சாதகமிருந்தாலொழிய அக்காரியத்தைச் செய்ய தயாராக மாட்டார் என்ற நம்பிக்கையில் சம்மதம் தெரிவித்தாள்.

*****

கணவனை தன் சொல் கேட்கும் தலையாட்டும் பொம்மையாக்கி கட்டுப்பாடுகளற்ற தனிமைதான் வாழ்வின் இனிமையென நிவேதா நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தாள். அவனும் நமக்கானது இதுதானென சகிப்புடன்தான் இருந்தான்னாலும், அவ்வப்போது உள்ளுக்குளொரு புகைமூட்டம்… மூச்சுமுட்டி மனசாட்சி வெளிவரும்!

‘ஒத்த மகன்…செல்லமகன்னு பார்த்து, பார்த்து உன் பெற்றோர் வளர்த்தாங்களே, படிப்புல நீ சுமார்தான் இருந்தும் உன்னை பணத்தக் கொட்டி உயர, உயரப் படிக்க வெச்சி, வங்கியில் வேலையும் வாங்கிக் கொடுத்து, நீயே எதிர்பாராவண்ணம் பெரிய இடத்துப் பெண்ணை உனக்கு மனைவியாக்கி உனக்கான புது வாழ்க்கைக்கு எத்தனை பெருமை சேர்த்தார்கள்… அந்த ஈன்ற இதயங்களுக்கு நீ செய்த கைமாறு என்ன?’

நெருஞ்சி முள் குவியலில் விழுந்த மாதிரியொரு வலியுணர்வான் சுந்தர். இனம் புரியாத குற்றம் அவனை தண்டிப்பது போலிருக்கும் மனசாட்சி விடவில்லை…

குத்துவிளக்கு ஏற்ற வந்தவள் குடும்பத்தையே குலைக்க யோசித்தாளே… அது கூடாது, அம்மா அப்பாவிற்கு நான் ஒரே பிள்ளை உன் யோசனை தப்பு என ஆரம்பத்திலேயே ஓங்கித் தட்டி விட்டாயா? பொம்மை செய்யும் முன் மண்ணைப்பிசைந்து அதன் தரம் பார்ப்பது மாதிரி, நீ பெத்தவங்க பக்கமா என்று நோட்டமிட்டு, இல்லை தன் மடியில்தான் என தெரியவும் பின் எத்தனை சூழ்ச்சி செய்தாள்…! கண்டும் காணாதிருந்து,பெத்தவங்களுக்கு எவ்வளவு மனத் துயரம் கொடுத்தாய் ஒருநாளாவது அந்த உள்ளங்கள் கோபம் கொண்டிருக்குமா? எல்லாம் சகித்துக் கொண்டிருந்தனரே… பெத்த பாசம். ஆனால் நீயோ…

திருமண நிகழ்ச்சிக்கு போன பெற்றோர்கள் வீடு திரும்பும் முன் தங்கள் உடமைகளை ஒதுக்கிக் கொண்டு தனிக்குடித்தனம் சென்றாயே…அந்த செயல் கண்டு ஊரே எள்ளி நகைத்ததே… அப்போதும் உன் பெற்றோர் அமைதியாகவே இருந்தனர். நீயும்தான் சுயநலத்தின் மொத்த உருவமாயிருந்தாய்…

சுந்தருக்கு தலைசுற்றியது. அப்படியே மெத்தையில் சாய்ந்தான். “என்னங்க சாயங்காலம் பெல் ஓட்டலுக்கு டிபன் பண்ணப்போகலாமா “என்றபடியே நிவேதா வர,தன் மனநிலையை காட்டிக் கொள்ளாது தலையாட்டி வைத்தான்.

*****

நண்பர் கூறியபடியே வியாபாரம் சூடு பிடித்து விட்டது. அதில் கார்த்திகேயனுக்கு தன்னார்வம் கூடிவிட, பொழுது பாராது ஜீஸ்சென்டரே கதியென இருந்தார். பத்மாவும் தன் பங்குக்கு பழமிச்சர் கலவைப் போட்டு, கடைப்பையனிடம் தினமும் இரு வேளை கொடுத்தனுப்பினாள்.

பழைய ஞாபகங்களின் வடு கொஞ்சம், கொஞ்சமாக ஆறியது. பலவித மனிதர்களின் சந்திப்பு, வியாபாரரீதியில் ஒரு சில நிமிடங்களே முகம் மலர்ந்த பேச்சுக்கள், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களானாலும் சின்னப் புன்னகை உதிர்த்த வணக்கம் எல்லாமும் புதியதோர் அனுபவத்திட்டில் நிறுத்தியது.

கடைமுன் கார் வந்து நின்றது.

“சேகர் டீஸன்டான கஸ்ட்டமர் வாராங்க கவனி” சொன்னதும் செல்ப்புக்கு பின்னால் உள்ள காலியான பழக்கூடைகளைச் சுத்தம் செய்ய நுழைந்தார், கார்த்திகேயன்.

காரிலிருந்து ராம்குமாரும், நிவேதாவும் இறங்கி வந்தனர்.

ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை பழங்கள் வாங்கினர். “ஆரஞ்ச் ஜீஸ் போடச் சொல்லட்டா ” மனைவியிடம் கேட்டு, அவள் தலையாட்டி அனுமதி கொடுக்கவும் ஆளுக்கொன்று ஆர்டர் செய்து பில்படி பணம் கொடுத்தான்.

அப்போது வெளிப்பட்ட கார்த்திகேயன் தன் கடையின் முன் நின்றிருந்த, மகனையும் மருமகளையும் கண்டு, இமைகள் விரிய அதிர்ச்சியின் உச்சிக்கேப் போனார். “எந்த உறவை கடைசி வரை பார்க்கக் கூடாதுன்னு வேலூரிருந்து குடி பெயர்ந்து மதுரை வந்தேனோ அதே மண்ணில் இப்படியொரு எதிர்பாராத சந்திப்பா?’ அவரால் தன்னை கட்டுக்குள் வைக்க முடியவில்லைதான், ஆனாலும் உணர்சிகளின் குரல்வளை நெறித்து, “சேகர் சாருக்கு வேண்டியதெல்லாம் போட்டாச்சா ” வழக்கமான மேனரீஸத்துடன் கடை வேலையை கவனிக்கலானார்.

“சார்” என்ற வார்த்தை குண்டூசியென குத்தியது… கண்களை மூடி பற்கள் கடித்தான், சுந்தர். நிவேதாவோ இனம் புரியாத தர்மசங்கடத்தில் நெளிந்தாள்.

“அப்பா, நீங்க டூர் போயிருக்கிங்கனுதானே மதுரைக்கு மாற்றல் வாங்கி வந்தேன்… நீங்களும் இங்கேயா குடி வந்திட்டீங்க ?”என நினைத்தவன் எச்சில் விழுங்கினான். நெஞ்சுக் கூட்டில் வலி.

நிவேதா, அவனை உலுக்கினாள். “இது பொது இடம் உடனே கிளம்புங்க” என்பதாக முறைப்புடன் சாடை செய்ய, அவன் எந்திரத்தனமாய் நடந்து போய் காரினுள் ஏறவும்.”என்னங்க உங்களுக்கு என்னாச்சி…அப்பாவப் பாத்தவுடன் பாசம் வந்து தடுமாற செய்தோ? உணர்ச்சிகளுக்கு எப்பவுமே முக்கியத்துவம் தரக்கூடாதுங்க. நல்லா விசாரிங்கனு நான்தான் தலையா அடிச்சேனே, கோயில் குளம்னு டூர் போயிருக்காங்க அப்படி இப்படினு சொன்னீங்க இப்ப என்னனா எதவிட்டு விலகனும்னு திட்டமிட்டோமோ அந்த உறவு முன்னாடியே வந்துட்டோம். எல்லாம் ஏந்தலையெழுத்து…” புலம்பினாள்.

கார் கண்ணாடி தட்டப்படும் சத்தம். அப்பாதான்! கிளாஸை இறக்கி விட்டான்.

“இதோ பாருப்பா இந்த சந்திப்ப நீ பொறுப்படுத்த வேணாம், யார் யாரையோ பாக்குறோம், ‘விஷ்’ பண்றோம், கைக்கொடுக்கறோம் ‘வரட்டா’ னு அடுத்த நிலைக்கு நகர்ந்துறோம். அது மாதிரியேதான் இந்த நிகழ்வும். எந்த சந்தர்பத்துலேயும் நீ என்னோட மகன். நிவேதா மருமகனு ஒருத்தர்டையும் சொல்ல மாட்டேன், மதுரை நகர்வாசிகள்ல நமக்குள்ள உறவுமுறை தெரிய வாய்ப்பேயில்லை. அதனால ‘என்னடா இங்கே இருக்காரே’னு கவலைப்பட வேணாம், துண்டித்தது தனியாகவே இருக்கறதுதான் நல்லது.” சூடாக இதை கார்த்திகேயன் கூற “அம்மா” சுந்தரை ‘பேசாதே…’என்னும் அர்த்தத்தோடு சைகை காட்டி “கசப்புகளையெல்லாம் நடந்து வந்து இப்ப ரொம்ப நிம்மதியா இருக்கா, மறுபடியும் அவ கண்ணுல நீ படாமயிருந்தா இன்னும் அதிக சந்தோஷம் அடைவா” அவ்வளவுதான்

“என்னங்க கார கிளப்புங்க ” வேகப்பட்டாள்,நிவேதா.

சுந்தரத்திற்கும் அனலுக்குள் நிற்பது மாதிரியோர் பிரமை, மனைவியின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, காருக்கு உயிரூட்டிக் கிளப்பினான்.

கடையை நோக்கி நடந்த கார்த்திகேயனுள் கனம்… ஆனாலும் இப்படியொரு நிகழ்வு நடந்ததாக பத்மாவிடம் தப்பித்தவறிக் கூட சொல்லி விடக்கூடாது என தனக்குள் உறுதியெடுத்துக் கொண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *