தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2013
பார்வையிட்டோர்: 10,490 
 
 

“”சரளா… சரளா…”

“”என்னங்கப்பா?”

“”கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் எல்லாம் பார்க்க அழகா இருக்கும். வாம்மா, போய் பார்க்கலாம்.”

“”எனக்கு நிறைய படிக்க வேண்டியிருக்குப்பா… நாளைக்கு கணக்கு பரிட்சை இருக்கு… நான் வரலைப்பா.”

அதற்கு மேல் மகளை வற்புறுத்தவில்லை சாமிப்பிள்ளை.

“”சரிம்மா… கதவ பூட்டிக்கோ. பசிச்சா சாப்பிட்டுடு… எனக்காகக் காத்திருக்காதே!”

“”சரிப்பா,” என்றவாறே, படிப்பதில் மூழ்கி விட்டாள்.

குடவாயில் ஆண்கள் உயர்நிலைப் பள்ளியின் ஆசிரியர் சாமிப்பிள்ளை. அவர் மகள் சரளா, பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்புப் படிக்கும் மாணவி. பிறந்தவுடனேயே தாயைப் பிரிந்த மகளை, தன் தாயின் உதவியுடன் செல்லமாக வளர்த்தார். உற்றார், உறவினர்கள் எவ்வளவு வற்புறுத்தியும், மறுமணம் செய்து கொள்ள வில்லை. அதனாலேயே, அவர் மதிப்பு மேலும் கூடியது.

மிகவும் சிக்கனமானவர்; ஆனால், கஞ்சன் இல்லை. கறாராக நடந்து கொள்வார்; ஆனால், முசுடு இல்லை. இக்காலத்திற்கு ஒத்துவராத, ஒரு நல்லப் பழக்கம் அவரிடம் இருந்தது. அரசோ, அரசியல்வாதியோ, இலவசமாக யார் எதைக் கொடுத்தாலும், ஏற்றுக் கொள்ள மாட்டார்.
ஒரு முறை, மழை வெள்ள நிவாரணத்திற்காக, அனைத்துத் தரப்பினருக்கும் பணமும், பொருட்களும் வினியோகிக்கப்பட்டன. வாத்தியார், நிவாரணப் பணியில் முழு மூச்சுடன் ஈடுபட்டாரேயொழிய, எதையும் பெற்றுக் கொள்ள வில்லை.

பஞ்சாயத்துத் தலைவர் நல்லக்கண்ணு, ஒவ்வொரு முறையும் தன் பிறந்த நாளை முன்னிட்டு, ஊராருக்கு எதையாவது இலவசமாகக் கொடுத்துக் கொண்டேயிருப்பார். எப்படியாவது, அரசியலில் செல்வாக்குப் பெற்று, முதல்வர் பதவியைப் பெற வேண்டும் என்பது தான், அவர் கனவு. கனவல்ல, முடிவே செய்திருந்தார். இப்போது ஆகும் செலவை, பிற்பாடு சம்பாதித்து விடலாம் என்பது அவர் நம்பிக்கை.

ஒருமுறை அவர், தன் பிறந்த நாளை முன்னிட்டு, மாணவியர் அனைவருக்கும் இலவசமாக பள்ளிச்சீருடைக்கான துணிகளை வினியோகித்தார். அவர் மகன் ரகுபதி தான் வந்து கொடுத்தான். வாங்கிக் கொள்ளாமல் மறுத்து விட்டாள் சரளா. உள்ளுக்குள் கறுவிக் கொண்டான் ரகுபதி.

உள்ளூர் பிரமுகர் ஒருவர், ஏதோ காரணத்திற்காக, ஆண்கள் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவருக்கும், மிதிவண்டி வாங்கிக் கொடுத்தார். ஏற்கனவே, சைக்கிள் இருப்பவர்களும், “ஒன்றுக்கு இரண்டாக இருந்துட்டுப் போகட்டுமே…’ என்ற மனோபாவத்துடன், பெற்றுக் கொண்டனர்.

மிதிவண்டியே இல்லாத சாமிப்பிள்ளை வாங்கிக் கொள்ளவில்லை. அவருடைய இந்த கொள்கையால், பலரின் ஏளனத்திற்கும், சிலரின் விரோதத்திற்கும் கூட ஆளானார். சரளாவும், அப்பாவுக்குப் பொண்ணு தப்பாமல் பிறந்திருந்தாள்.

“அப்பா…’

“என்னம்மா?’

“இன்னிக்கு எங்க டீச்சர் என்னை ரொம்பவே திட்டிட்டாங்க…’

“ஏனம்மா…’

“சமுதாயத்துல, ஒரு அந்தஸ்துல இருக்கிறவங்க, பெரிய மனுஷங்க வந்து கொடுத்தாக் கூட, வாங்க மாட்டேங்குறே, ஆனாலும் உனக்கு ரொம்பவே திமிருன்னு திட்டினாங்க…’
“அதுக்காகக் கவலைப்படாதே… வாங்கிக் கொள்வதும், நிராகரிப்பதும் நம் விருப்பம்…’
“அன்னிக்குக் கூட வனிதா, எனக்கான பங்கை, அதான்ப்பா, யூனிபார்ம் துணிகளை அவளுக்கு வாங்கித்தரச் சொன்னா. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்…’

“நல்லதும்மா… ஏழைகள் தன்மானத்தோட இருக்கணும். எதற்கும் கையேந்தக் கூடாது. பசிக்கொடுமைக்கு பயந்து, உணவைப் பெற்றாலும், பதிலுக்கு உடலுழைப்பை கொடுக்கணும். எதையும் இலவசமா வாங்கிக்கக் கூடாதுங்கிற எண்ணம் நமக்கு வரணும்மா…’

“தர்மம் செய்றது, நல்லதுதானேப்பா?’

“நல்லதுதான்… ஆனா, அதை படாடோபத்துக்காக செய்யக் கூடாது. பணக்காரன்னாலும், பணிவு வேணும்மா!’

மீண்டும் வாத்தியாரே பேசினார்…

“அன்னிக்குப் பார்த்தியா சரளா… மழை நிவாரணப் பணம், நாமும் வாங்கலாம் தான். ஆனா, நமக்கு என்ன சேதம்… நாம் வாங்கிக்கலைன்னா அது ரொம்ப தேவைப்படற ஒருவருக்குப் போய் சேரும். நம்ம மாதிரி தேவைப்படாதவங்களுக்கும் கொடுக்கும் போது, நிவாரணம், இலவசம்ன்னு, வரிப்பணம், ஆக்கப் பணிகளுக்கு பயன்படுத்தப்படாம வீணாக்கப்படுகிறது…’
“ஏழை மக்கள் பாவமில்லையாப்பா?’

“பாவம் தான் சரளா… ஆனா, நிவாரணம் இல்லாமலேயே எத்தனை எத்தனை இலவசங்கள். வருஷா வருஷம், மழை வெள்ளம் வருவதும், குடிசைகளை அடிச்சிட்டுப் போறதும், கோடையில தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படறதும், எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தானே. பணத்தை இந்த மாதிரி சீரமைப்புப் பணிகளுக்கு செலவு செஞ்சா, மக்கள் பாதுகாப்பா இருப்பாங்கல்ல?’

“நீங்க மட்டும் வெயில் காலத்துல தண்ணீர்ப் பந்தல் வைச்சு, நீர் மோரெல்லாம் இலவசமாக தர்றீங்களே…’ பளிச்சின்னு கேட்டாள் சரளா.

“அதை நான் என் நலனுக்காக, நான் பிரபலமாகணும்ன்னு செய்யலம்மா. வெயில்ல தவிக்கிற மக்கள், தாகம் தணிச்சிக்கத் தான் அந்த ஏற்பாடு!’

மகள் மவுனமானாள்.

மிகப்பெரிய மாலையணிந்து, மேடையில் கம்பீரமாக உட்கார்ந்திருந்தார் நல்லக்கண்ணு. அவர் தன்னுடைய, எல்லாப் பிறந்த நாளையும் ரொம்ப விமரிசையாகக் கொண்டாடுவார். இது, சஷ்டியப்த பூர்த்தியாயிற்றே… விடுவாரா?

அவருடைய நண்பர்கள் மேடையேறி, வானளாவப் புகழ்ந்து, வாழ்த்துத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ஒரு பக்கம், பிறந்த நாளையொட்டி, இலவச வேஷ்டி – சேலைகள் கொடுத்துக் கொண்டிருந்தனர். மக்கள் கூட்டம் அங்கு அலைமோதியது. மேடையருகிலேயே, பொய்க்கால் குதிரையாட்டம் , கரகாட்டம் ஆரம்பித்திருந்தது. வாத்தியார் சாமிப்பிள்ளை மற்றும் அவர் சகாக்கள் மிகவும் பரவசத்துடன் அவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
நல்லக்கண்ணுவின் மகன் ரகுபதி, விழா நிகழ்ச்சிகளை மேற்பார்வையாகவும், பெண்கள் கூட்டத்தை கீழ்ப்பார்வையாகவும் பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானோ, இடையில் ஒரு நடை வீட்டிற்குப் போய் வர, வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பினான். வழியில்…

“அட, வாத்தியார் வீட்ல விளக்கு எறியுதே. திமிர் பிடிச்ச மனுஷன், பிறந்த நாள் விழாவுக்கு வராம வீட்டிலேயே இருக்கானா… ஒரு கை பார்ப்போம்…’ வண்டியை நிறுத்திவிட்டு, உள்ளே போனான்.

தனியே இருந்த சரளா, வேங்கையிடம் சிக்கிய புள்ளிமான் ஆனாள்!

கண்ணீர் வற்ற வற்ற அழுதாள். என்ன அழுது என்ன பயன். போன கற்பு மீண்டும் வருமா?
அந்த அயோக்கியன், உடலை மட்டுமா சின்னாபின்னமாக்கினான்? அப்பாவை, என் அன்பு அப்பாவை எப்படியெல்லாம் திட்டினான். “இலவசமாக வாங்க மாட்டீங்களோ… இப்ப நான், என்னையே உனக்கு இலவசமாத் தரப்போறேனே… அப்பனும், பொண்ணும் என்ன செய்வீங்க பார்க்கலாம். உனக்கும் திமிரு, உங்கப்பனுக்கும் திமிரு…’

நினைத்து நினைத்து அழுதாள்.

“பாவம் அப்பா… ம்கூம். இது அப்பாக்குத் தெரியக்கூடாது. தெரிஞ்சா தாங்க மாட்டாரு…’ விருட்டென்று எழுந்து, குளிக்கப் போனாள். வெகு நேரம் குளித்தாள்.

“இது கண்டிப்பா அப்பாவுக்குத் தெரியக் கூடாது…’ இயல்பாக இருக்க, பெரும் முயற்சி செய்
தாள்.

“”அம்மா சரளா…”

“”இதோ வந்துட்டேன்ப்பா,” சிரித்த முகமாக, இருக்க பெரும் முயற்சி செய்தாள். கதவைத் திறந்தாள்.

“”என்னம்மா, குளிச்சியா?”

“”ஆமாம்ப்பா… தூக்கம் தூக்கமா வந்தது, அதான் போய் குளிச்சிட்டேன்.”

“”சரி வாம்மா சாப்பிடலாம்… பசிக்குது.”

பழங்கால கிராமிய நடனங்களைப் பற்றி, புகழ்ந்து கொண்டே சாப்பிட்டார். சரளாவும், பேருக்கு சாப்பிட்டு முடித்தாள்.

ஏறத்தாழ நான்கு மாத காலம், வேகமாக ஓடியது.

“என்ன சரளா… இப்போல்லாம், ரொம்ப டல்லா இருக்கே?’ ஒரு ஆசிரியையின் கேள்வி.
“ஏண்டி… ரொம்ப எளைச்சிகிட்டே வர்றே?’ ஒரு தோழி கேட்ட போது தான் அவளுக்கு, “சுர்’ என்றது. நான்கு மாதங்களாக, “அது’ வரவில்லையே! நிறைய புத்தகங்கள் படிக்கும் பழக்கமுள்ளவள். “விஷயத்தை’ புரிந்து கொண்டாள்.

“”சரளா… என்னம்மா சீக்கிரம் வந்துட்டியா… இல்லே ஸ்கூலுக்கேப்போகலையா?” கூடத்தில் மகள் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து, பதற்றத்துடன் கேட்டார் சாமிப்பிள்ளை.
எப்போதும் அவர் தான், முதலில் வருவார். சிறப்பு வகுப்பு, கூடைப்பந்து பயிற்சி என்று, சரளா தினமும் மாலை, அப்பா வந்த ஒரு மணி நேரம் கழித்து தான் வருவாள். ஆக, சரளாவைப் பார்த்து ஆச்சரியமடைந்தார்.

பதில் சொல்லாமல் தலை குனிந்தாள் சரளா.

“”என்னம்மா… உடம்பு சரியில்லையா?” அருகில் வந்து தொட்டுப் பார்த்தார். அவ்வளவு தான், அப்பாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டு, குலுங்கி குலுங்கி அழுதாள்.

“”என்னம்மா… என்னம்மா… சொல்லும்மா,” வாத்தியார் பதறினார்.

அழுகையுடனே, எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள். மீண்டும் அழுதாள்.

சாமிப்பிள்ளை மிரண்டுபோனார். நல்லக் குறிக்கோளுடன், உயர்ந்த நெறியில் வாழ நெனச்சதுக்கு, இவ்வளவுப் பெரிய தண்டனையா? சில நிமிடங்கள் தான்!

“”அழாதேம்மா… எந்த பிரச்னைக்கும், அழுகை தீர்வாகாது,” உள்ளுக்குள் நொறுங்கினாலும், மகளைத் தேற்றினார்.

“”இலவசத்திற்குக் கையேந்தினால், உடல் உழைக்க மறுக்கும் என்பதைத் தானே வாழ்ந்து காட்ட முயற்சித்தோம். அது தப்பில்லையே சரளா… தைரியமாக இரு. நீ மனதால் கெடவில்லை, உடம்பாலும் கெடவில்லை, கெடுக்கப்பட்டிருக்கிறாய். நான் சொல்வதை மட்டும் நீ கேள். மீதியை நான் பார்த்துக்கிறேன்.”

மகளை மார்போடு அணைத்து, முதுகில் வருடினார். சரளாவுக்கு அது ஆறுதலாக இருந்தது.
இரவு முழுவதும் அழுதார். விடியும் முன்பாக, ஒரு தீர்மானத்திற்கு வந்தார்.

இரண்டே நாட்கள், தீர்மானித்ததை செயல்படுத்தினார். தக்க காரணம் சொல்லி, இருவருக்கும், பள்ளியில் சில மாதங்களுக்கு விடுப்பு வாங்கிக் கொண்டார். மகளுடன் சென்னையில் உள்ள, தன் உயிர் நண்பன் வீட்டிற்குப் புறப்பட்டார்.

கருவை கலைத்து விட்டு, மகளை சென்னையிலேயே படிக்க வைக்க வேண்டும் என்பது தான், அவர் தீர்மானம்.

நாம் நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே.

காலம் கடந்து விட்டதால், கருவை கலைப்பது ஆபத்து. அதற்காக செய்யும் முயற்சி, சரளாவின் உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் என்று மருத்துவர் கை விரித்து விட்டார்.

பாவம் சாமிப்பிள்ளை. இடிவிழுந்தது போலாகி விட்டது அவருக்கு. “”அண்ணே… கவலைப் படாதீங்க. குழந்தை நல்லவிதமா பொறக்கட்டும். அதை நாங்க வளர்த்துக்குறோம். நீங்க சரளாவை அழைச்சிட்டுப் போயிடலாம். இப்போதைக்கு நீங்கப் போங்க. நாங்க சரளாவை பார்த்துக்குறோம்,” நண்பரின் மனைவி, மிகவும் வற்புறுத்திக் கூறினாள். நண்பரும் அதையே மீண்டும் மீண்டும் சொன்னார்.

சாமிப்பிள்ளைக்கும், வேறு வழி தெரிய வில்லை. அவரும் மகளுடனேயே அங்கேயே தங்கிவிட்டார். ஆனால், அவ்வப்போது குடவாயில் சென்று வந்தார்.

நண்பரும், அவர் மனைவியும் சரளாவைத் தங்கமாகத் தாங்கினர். சரளா தான் பாவம். ஒரு சமயம் இருப்பது போல், மற்றொரு சமயம் இருக்க மாட்டாள்.

“அங்கிள்… ஆன்டி…’ என்று இருவருடனும், ஒட்டிக் கொண்டு சந்தோஷமாக இருப்பாள். மறு நிமிடம், “மூட் – அவுட்’ ஆகி, அழுது கொண்டிருப்பாள்.

ஒரு நேரம், அவர்களுடன் சேர்ந்து ஓட்டல், கோவில் என்று மகிழ்ச்சியுடன் சென்று வருவாள். மறு நேரம், யாருடனும் பேசாமல், மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப் பாள்.

அவளாக, தன் நிலைக்கு வரும் வரை, யாராலும் அவளைப் பேச வைக்க முடியாது. எங்கே அவளுக்கு பைத்தியம் பிடித்து விடுமோ என்று கூட பயந்தனர்.

சாமிப்பிள்ளையின் மனம் அனலாக எரிந்தது.

“பிறக்கும் இந்த குழந்தையை வைத்தே, அந்த ரகுபதியையும், அவன் குடும்பத்தையும் சந்தி சிரிக்க வைக்கிறேன் பார்…’ என்று கறுவிக் கொண்டார்.

காலம் விரைந்து ஓடியது. அழகான ஆண் மகவைப் பிரசவித்தாள் சரளா. குழந்தை பிறந்த பின்னும், மூன்று மாதங்கள் வரை இருவரும் சென்னையிலேயே தங்கியிருந்தனர். ஒரு நன்னாளில் குடவாயிலுக்கு வண்டி ஏறினர். எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல், குழந்தையுடன் தான் புறப்பட்டனர்.

“”அப்பா… கொஞ்சம் காபி சாப்பிடுங்க,” வற்புறுத்தி கொடுத்தாள் சரளா. வண்டி ஏறியது முதல், சாமிப்பிள்ளை சோகமாகவும், ஏதோ சிந்தனையாகவும் இருந்தார்.

“”நேரமாவுதப்பா… இட்லி சாப்பிடுங்க, ஆன்டி சமையல் ரொம்ப நல்லாயிருக்கில்லப்பா?”

“”ஆமாம்மா…”

ஏறத்தாழ ஒரு வருடமாக, துயரத்திலும், கண்ணீரிலும் புதைந்து போயிருந்த சரளா, இன்று வண்டியேறியது முதல், கலகலப்பாக பேசிக் கொண்டு, மிக சகஜமாக இருந்தாள்.
பழையபடி, தந்தையை மிக அன்புடன் கவனித்துக் கொண்டாள். குழந்தையைத் தான், அதிகம் கண்டு கொள்ளவில்லை. சகப் பயணிகளிடம் அதிகம் பேசாமல், இருவரும் எச்சரிக்கையுடன் இருந்தனர்.

சரளாவின் கேள்விக்குப் பதில் சொல்லிக் கொண்டே வந்தாலும், சாமிப்பிள்ளை உள்ளுக்குள் திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார்.

இக்குழந்தையை வைத்து, ரகுபதியையும், அவன் தந்தை நல்லக்கண்ணுவையும், ஊரில் வெட்கித் தலைகுனியும்படி செய்ய வேண்டும். அவமானத்தால், அந்த குடும்பமே நசிந்து, சின்னாபின்னமாக வேண்டும். யோசித்து யோசித்து, ஒரு திட்டத்தையும் உருவாக்கிக் கொண்டார்.

மாலை மறைந்து, இரவு வரத் துவங்கியது. எங்கும் இருள் கவியத் துவங்கியது. கும்பகோணம் சந்திப்பில் வண்டி நின்றது. அப்பாவும், மகளும் குழந்தையுடன் வண்டியை விட்டு இறங்கினர்.
பழைய கலகலப்புடனேயே இருந்தாள் சரளா. அவர் முகத்தில், ஒரு உறுதி தென்பட்டது. ஒரு உணவு விடுதியில், இரவு உணவை முடித்து, வீட்டை அடைந்தனர். பயணக் களைப்பு உறக்கத்தில் முடிந்தது.

“”சரளா… என் கண்ணே… ஏனம்மா இப்படி செஞ்சே,” அலறினார் சாமிப்பிள்ளை. தலையில் அடித்துக் கொண்டார். அவர் அலறலில் ஊரே கூடிவிட்டது. சூரியன் கூட வந்து எட்டிப் பார்த்தான்.

ரகுபதி வீட்டு வாசலில் அடர்ந்து வளர்ந்திருந்தது வேப்பமரம். அதில் சரளாவின் உடல் தொங்கிக் கொண்டிருந்தது. அவள் இடுப்பில் ஒரு வெள்ளைக் காகிதம் சொருகி இருப்பதைப் பார்த்து, ஒரு பெண் அதை எடுத்து படித்தாள்.

“டேய் ரகுபதி… நீ எதை வேணுமானாலும், இலவசமா தருவே… நான் எதையுமே இலவசமா வாங்க மாட்டேன்டா. இந்த குழந்தையைப் பற்றி சந்தேகமா இருக்கா… டி.என்.ஏ., டெஸ்ட் செய்து பாருடா…’

குழந்தை வீறிட்ட சப்தம் கேட்ட பாதிக் கூட்டம், ரகுபதி வீட்டு வாசலில் கிடத்தப்பட்டிருந்த சிசுவை நோக்கி ஓடியது.

– ஜெ.ராதை (ஜனவரி 2013)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *