கல்லும் கதை சொல்லும்!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 19, 2020
பார்வையிட்டோர்: 4,923 
 
 

“வாழைக்காய் பஜ்ஜியால உனக்கு பெரிய கண்டம் வர இருக்கு “ன்னு ஜோசியரே சொல்லியிருந்தாலும் சுந்தரம் நம்பியிருக்க மாட்டார்!!

இத்தனைக்கும் சுந்தரத்துக்கு சாப்பாட்டில் சபலமே கிடையாது !

ஆனால் உலகத்திலேயே ஒரே விஷயத்துக்காக சொத்தெல்லாம் எழுதி வைப்பார் என்றால் அது பஜ்ஜிக்காகத் தானிருக்கும்!

அதிலும் குறிப்பாக வாழக்காய் பஜ்ஜி! சுந்தரத்தின் அம்மா அப்படியொரு பஜ்ஜி பண்ணிப் போட்டிருக்க வேண்டும்!

போன வாரம் பார்வதியின் தூரத்து சொந்தத்தில் ஒரு நிச்சயதார்த்தம்! அதற்கு போயே தீரணும் என்று பிடிவாதம்!

இந்த மாதிரி சமயத்தில் அவளுடைய தூரத்து சொந்தமெல்லாம் கிட்ட வந்துவிடும்!

ஆனால் சுந்தரத்தின் சொந்த அத்தை பேரன் கல்யாணத்துக்கு

“நம்ப அவங்களைப் பாத்ததேயில்லயே ? எனக்கென்னமோ போக வேண்டாம்னு தோணுது”என்று தள்ளி வைத்து விடுவாள்.

பாவம் சுந்தரம் ! சண்டையெல்லாம் போடத்தெரியாது!

நிச்சயதார்த்தத்தில் ‌அவருக்குப் பிடித்த வாழைக்காய் பஜ்ஜி !!!!!

அவருக்குத்தான் நிறுத்தத் தெரியாதே!

அன்றைக்கு ஆரம்பித்த ‌ வயிற்று வலி நிற்கவே யில்லை! இரண்டு நாளில் பொறுக்கமுடியாமல் சாப்பாடு கூட இறங்கவில்லை!

கூடவே தலை சுற்றல்! ‌B.P. வேறு கொஞ்சம் ஏறி விட்டது!

சுந்தரத்துக்கு இரண்டு பிள்ளைகள்!

ஒருத்தன் லண்டன்…! சின்னவன் நியூசிலாண்ட்….

இந்த மாதிரி சமயத்தில் பார்வதி உடனே குழந்தைகளுக்கு ஃபோனைப் போட்டு விடுவாள்!

பிள்ளைகள் , அப்பா அம்மாவுக்கு ஒண்ணு என்றால் உயிரையே‌ விட்டு விடுவார்கள்!

கூகிள் எல்லாம் மேய்ந்து , இது கிட்னி ஸ்டோன் மாதிரி இருக்கு!கண்டிப்பாக ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணி கம்ப்ளீட் செக்கப் பண்ணியே ஆக வேண்டும் என்று அவர்களே வியாதி என்ன என்று கண்டுபிடித்து , அதற்கான ட்ரீட்மெண்ட் பிளானையும் கொடுத்து விட்டார்கள்.

சுந்தரத்தை ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ணியாகிவிட்டது!

நல்ல AC வார்ட்…

பார்வதி யாரையும் உதவிக்கு கூப்பிட மாட்டாள்! தானே பார்த்து செய்தால் தான் திருப்தி!

ட்யுட்டி டாக்டர் வந்து எல்லா செக்கப்பும் செய்து விட்டு இரத்தம், யூரின் டெஸ்ட் , அப்டாமினல் ஸ்கேன் எல்லாம் எழுதிக் கொடுத்தார். சின்ன வயசுதான்!

நன்றாகப் பேசிவிட்டு “ரிப்போர்ட் வரட்டும் ! சரியா ??”என்றபடியே அடுத்த வார்டுக்கு நர்ஸ்கள் புடைசூழ கிளம்பி விட்டார்!

சுந்தரம் பஜ்ஜி சமாச்சாரத்தை மட்டும் மறைத்து விட்டார்!

பார்வதிக்கு பொழுது போக வேண்டாமா?

ஒவ்வொருத்தருக்காய் போன் போட்டு சொல்லி முடிப்பதற்கும் சீஃப் டாக்டர் பூபதி ரவுண்ட்ஸ் வருவதற்கும் சரியாயிருந்தது!

பூபதி கோயம்புத்தூரில் மிகச்சிறந்த gastroenterologist! சுந்தரம் எழுந்து நின்றார்.

“உக்காருங்க … உக்காருங்க.. ! இப்போ வயத்த வலி இருக்கா?”

“இல்லை டாக்டர்….விட்டு விட்டு வருது”

“மிஸ்டர் சுந்தரம் ! உங்க ‌ ஸ்கேன் ரிப்போர்ட் பாத்தேன் ….!!

வயத்தில ஒரு பிராப்ளமும் கிடையாது! சாயங்காலம் டாக்டர் சரவணன் வந்து ‌எல்லாம் சொல்லுவார்! ”

“டாக்டர் …!! பயப்படறமாதிரி வேறு ஏதாவது?”

முதல் முறையாக வாயைத் திறந்தாள் பார்வதி!

“எல்லாம் சரி பண்ணி விடலாம்! கவலய விடுங்க…. ”

மணி ஒன்று! நல்ல பசி!

ஒரு எவர் சில்வர் தட்டில் மூடி போட்டு அட்டெண்டர் சாப்பாடு கொண்டு வந்து வைத்தார்.

“இது பேஷண்ட் சாப்பாடும்மா! நீங்க உங்களுக்கு சொல்லியிருக்கீங்களாம்மா…??? இப்போ வந்துடும்”என்று மரியாதையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தான் !

இரண்டு சப்பாத்தி , தால்‌ , கொஞ்சம் சாதம், ஒரு கப் தயிர், பீன்ஸ் பொரியல்!

உப்பு சப்பு இல்லாமல்…

அப்பப்போ பிள்ளைகளுக்கு நியூஸ் அப்டேட் வேறு!!

இரண்டு பேரும் சாப்பிட்டு கொஞ்சம் கண்ணசரும் நேரம் நர்ஸ் உள்ளே நுழைந்தாள்.

“இந்த மாத்திரையை சாப்பிட்டு தூங்குங்க’ என்று கையிலிருந்த வெள்ளை , நீல மாத்திரைகளை நீட்டி தண்ணியும் கொடுத்தாள்!

சரியாக மூணு மணிக்கு டாக்டர் சரவணன் ப்ரத்யஷமானார்!

மிஸ்டர் சுந்தரம்….! இப்போ எப்படி இருக்கீங்க? வலி இன்னமும் இருக்குதா? உட்காருங்க!!’

அம்மா நீங்கதான் மனைவியா…? ரிப்போர்ட் எல்லாம் பாத்தேன்!

பயப்பட வேண்டாம்! இரண்டு கிட்னிலியும் ஸ்டோன்ஸ் இருக்கும்மா! இதோ பாத்தீங்களா! “என்று நர்ஸ் கையிலிருந்த ஸ்கேனை வாங்கி ,

“சுந்தரம் ! நீங்களும் பாருங்க ! தெரியுதா ? “என்று காட்டினார்.

இரண்டு பேருக்கும் சத்தியமாய் ஒன்றும் தெரியவில்லை! ”

இரண்டு நாள் அப்ஸர்வ் பண்ணலாம்! மாத்திரை எழுதியிருக்கேன்! நிறைய தண்ணி குடுங்கம்மா!

யூரின் போகும் போது வலி இருந்தால் பயப்பட வேண்டாம்!

ஸ்டோன்ஸ் போனால் வலி இருக்கும்! வலி மாத்திரை எழுதியிருக்கேன்!

Diatecian வந்து‌ ‌ diet plan சொல்லுவாங்க! அத கண்டிப்பா ஃபாலோ பண்ணணும்!

நல்லாயிடுவீங்க..!!???

என்று சுந்தரம் முதுகைத் தட்டிக் கொடுத்து விட்டு கிளம்பினார்!

பார்வதிக்கு இனிமே தூக்கமா வரும்?

“நம்ப பசங்க சொன்னது எவ்வளவு சரியா இருக்குது பாருங்க! ஸ்கேன் எடுக்காமலே கிட்னி ஸ்டோன் இருக்கும்னு சொல்லிட்டாங்களே!

என்னமோ இரண்டு காதுலேயும் வைரக்கல் போட்டமாதிரி இரண்டு கிட்னியிலேயும் கல் இருக்குன்னு சுலபமா சொல்றாரு! பயம்மா இருக்குங்க!”

“சும்மா இரு! என்னோட நண்பர்கள் எத்தன‌ பேருக்கு இருக்கு தெரியுமா? ! இப்பொ இதெல்லாம் சர்வ சாதாரணம்!”

“தண்ணி நிறைய குடிங்கன்னா கேட்டாதானே??”

“எப்போ சொன்ன ???”என்று கேட்க முடியுமா??”

காலிங் பெல் ஒலி! விசிட்டிங் நேரம்…! யார் அதுக்குள்ள??

யார் வரக்கூடாது என்று‌ நினைத்தாரோ அவனேதான்!

பார்வதியின் தம்பி ரகுவேதான்!

கையில் சாத்துக்குடி , ஹார்லிக்ஸ்….!!!!!

முதலில் வாட்ச்மென் கிட்ட சொல்லி இந்த இரண்டும் இருந்தால் உள்ளே அனுமதிக்கக் கூடாது என்று சொல்லணும்!

“என்ன மாமா? கிட்னியில கல் இருக்குதாமே!

சுந்தரத்துக்கு தூக்கிவாரிப் போட்டது!

“எனக்கு முன்னாலேயே டாக்டர் அவனுக்கு சொல்லி விட்டாரோ ? “என்று நினைத்தார் சுந்தரம்!

பார்வதி யாரிடமும் அப்புறம் பேசலியே!!

பாவம் ! வாட்ஸ்அப் என்று ஒன்று இருப்பதையே மறந்து விட்டார்!

மொத்தமாய் அவள் பிறந்த வீட்டு chat க்ரூப்புக்கு message போனதை அவர் என்ன கண்டார்!!

“அக்கா! டாக்டர் என்ன சொல்றாரு?அவங்களுக்கென்ன !

‘ ஒண்ணுமில்ல….நல்லாயிடுவீங்க’ அப்படிம்பாங்க!

என்னோட சினேகிதன் ஒருத்தனோட சித்தப்பா இப்படித்தான் , போன மாசம் வலின்னு அட்மிட் ஆனார் . Xray ,scan எல்லாம் எடுத்து கல்லுதான் சொன்னாராம்! ஒரு வாரம் கழித்து பார்த்தால் ஏதோ கட்டின்னு சொல்லி ……’ பாவம் மனுஷன் !!!!”

நல்ல வேளை பார்வதி நடுவில் புகுந்து “சுகுணா , பாப்பாவெல்லாம் எப்படி இருக்காங்க? என்று பேச்சை மாத்தினாள்!

சில பேருக்கு நோயாளிங்க கிட்ட என்ன பேசுவது என்றே தெரியாது!!

ரகு நல்லவன்தான்! ஆனால் சவடால்! ஜோக் அடிப்ப நினைத்து உளறுவான்!

“மாமா! நிறைய தண்ணி குடிங்க! அக்கா வெறும் வயத்தில இஞ்சி சாறு போட்டு குடு”ஒரு வாரம் குடிங்க மாமா! எந்த கல்லும் கரஞ்சுடும்! சரி வரேன்கா”

என்னவோ நேர்த்திக்கடன் கழித்த மாதிரி கிளம்பி விட்டான்!

இரண்டாம் நாள் பெரிதாய் வலி ஒண்ணையும் காணம்!

கல்லு‌ மாதிரி மூன்று இட்லி ! உப்பேயில்லாமல் சாம்பார்!

சுந்தரத்துக்கு ஒண்ணும் பெருசா வித்தியாசம் தெரியவில்லை! வீட்டு சாப்பாடு மாதிரிதான் இருந்தது…!!!

பார்வதியிடம் சொன்னால் சண்டைக்கு வருவாள்….

சரியாக எட்டு மணிக்கு diatecian வந்தாச்சு!

கல்லூரி மாணவி போல இருந்தாள்!

“குட் மார்னிங் சார் ! நல்லா தூங்கினீங்களா? இந்த diet follow பண்ணினீங்கனா சீக்கிரம் குணமாகிவிடும்!

உங்களுக்கு இருக்கிறது oxalate stones! கீரை, கடலை எல்லாம் சாப்பிடாதிங்க! இதிலே எழுதியிருக்கிற பழம் , காய்கறி நிறைய சாப்பிடலாம்!

அம்மா! உப்பு கம்மியாவே போடுங்க! நிறைய தண்ணி குடிங்க! வேறு ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்கம்மா! “

“நீங்க கட்டியிருக்கற புடவை ரொம்ப நல்லாருக்கு ! எங்க கிடைக்கும்?”

அந்தப் பெண் சிரித்து விட்டாள்!

“ஏங்க! என்னமோ கல்லு பேரு சொல்லுதே அந்த பொண்ணு! ”

“அது ஒண்ணுமில்லம்மா! நீ வித விதமான கல்லு தோடு போடலயா ,
அதுமாதிரி தான்! கல்லுக்கு தகுந்த மருந்து! ”

Duty doctor வந்தார்!

“மிஸ்டர் சுந்தரம் ! எப்பிடி இருக்கீங்க..??

இன்னிக்கு kidney C.T.scan ஒண்ணு எடுத்துடலாம்! பாத்ததும் சீஃப் அடுத்து என்னன்னு தீர்மானம் பண்ணுவார்! Okay?? ”

சாயங்காலம் …. பார்வையாளர் நேரம்..!!

பார்வதியின் அப்பா, அம்மா , அக்கா என்று மொத்த குடும்பமும் ஆஜர்!

இரண்டு டஜன் சாத்துக்குடி , ஹார்லிக்ஸ்..மாரி பிஸ்கட்…! !

“மாப்ளே! என்ன இப்படி பண்ணிட்டீங்க??”

சுந்தரம் விழித்தார்! என்னமோ அவர் தலையில் கல்லைத் தூக்கி போட்டமாதிரி !!!

“இனிமே எல்லாம் அசால்ட்டா இருக்காதிங்க! கண்டத சாப்பிடக் கூடாது! ( பஜ்ஜி சமாச்சாரத்தை மெஸேஜ் பண்ணியிருப்பாளோ ??)

வெறும் வயத்தில தினம் வாழத்தண்டு சாறு சாப்பிட்டு பாருங்க ! எந்த கல்லானாலும் சொல்லாம கொள்ளாம தன்னால வெளியே போய்டும்!!”

டாக்டரே கல்லு வெளியே போகும்போது வலி அதிகம் இருக்கும்னு சொன்னாரே!

இவரானால் சொல்லாம கொள்ளாம போய்டும்ன்னு சொல்றாரு ‘

சுந்தரத்துக்கு ஒண்ணும் புரியலை!

அடுத்த அரைமணி நேரம் சுந்தரம் இருப்பதையே சுத்தமாய் மறந்து விட்டார்கள்!

மாமியார் உடம்பு , மாமனார் கண் ஆபரேஷன் , அக்கா மருமகளின் அட்டகாசம் என்று ஒரு ரவுண்டு வந்து ‌ கடைசியில் ,

“சரி! உடம்ப பாத்துக்குங்க! டிஸ்சார்ஜ் ஆனதும் வீட்டுக்கு வரோம்!”என்று கிளம்பினார்கள்!

சாதாரணமாய் வீட்டுக்கு வராதவர்களெல்லாம் வந்து பார்த்தார்கள்! ஒரு வேளை சுந்தரம் திரும்பி வராமல் போனால்???

மறுநாள் டாக்டர் சரவணன் சுந்தரத்தை செக் பண்ணிவிட்டு,

“C.T. scan பார்த்தேன்! கல்லு அங்கேதான் இருக்கு! மாத்திரை எழுதி குடுத்திருக்கேன்! Strict diet follow பண்ணணும்! ஏதாவது பிராப்ளம் வந்தா உடனே அட்மிட் ஆய்டுங்க!

‌அடுத்த மாசம் ரெவ்யூ வந்திடுங்க! இன்னிக்கு டிஸ்சார்ஜ் ஆகலாம். பயப்படாதீங்கம்மா ! “

ஒரு வழியாக மூட்டை முடிச்செல்லாம் கட்டி கிளம்பியாச்சு! பார்வதிக்கு கடைசியா‌ ஒரு தடவை diatecian ஐப் பார்க்க வேண்டும் போல் இருந்தது!

டிரைவர் ஆனந்த் சரியான நேரத்துக்கு வந்து விட்டான்!! கார் கிளம்பியது!

“கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா??”

T.M.S.குரலில்…சுந்தரத்துக்கு பிடித்த பாட்டு!!

ஆனந்த்! பாட்ட நிறுத்துப்பா!

“ஸார் ! உங்களுக்கு பிடிக்குமே!”

“பிடிச்சதெல்லாம் சில நேரம் பிடிக்காம போகும் ஆனந்த்!!

வீடு வந்தாச்சு! வாசல் திண்ணையில் இரண்டு கட்டு கீரை!

“ராணி , இரண்டு நாளா ‘ அம்மா எங்கன்னு கேட்டுட்டே இருந்திச்சா? நான் தான் இன்னிக்கி கொண்டு வைக்க சொன்னேன்!”

“நீ எடுத்துக்க ஆனந்த் !!!”

“ஏம்மா! நான் ஒண்டிக்கட்டை! ஸாருக்கு வாய்க்கு ருசியா ஆக்கிப்போடுங்கம்மா!”

ஆனந்த் காரிலிருந்து எல்லாம் எடுத்து வைத்தான்! ‌

நாலு டஜன் சாத்துக்குடி , மூணு ஹார்லிக்ஸ்.இரண்டு பிஸ்கட் பேக்கட்….

“ஆனந்த்! சாத்துக்குடியும் , ஹார்லிக்ஸ் பாட்டிலும் எடுத்துக்கோ! ”

“ஐயோ ! நமக்கு ஆகாதும்மா! காய்ச்சல் இருந்தா கூட நானு பிரட், , ஹார்லிக்ஸ் இதெல்லாம் தொடவே மாட்டேன்!

பார்வதி குடுகுடு என்று சமையலறைக்குள் ஓடினாள்!

இனிமேல் நமக்கு உபசாரம் தான் என்று மகிழ்ந்தார் சுந்தரம்!

“இந்தாங்க ! தண்ணி குடிங்க! “இனிமே நிறைய தண்ணி குடிக்கணும்!

இதுக்குத் தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா???

‘தண்ணியைக்குடுத்தே சமாளிக்கப் பாக்கிறாளே!!?‘

இப்போது சுந்தரந்துக்கு மூன்றே மூன்று சந்தேகங்கள்!!!!

1. கீரைக்காரியை எப்படி சமாளிப்பது?

2. சாத்துக்குடி , ஹார்லிக்ஸ் பாட்டிலுக்கு என்ன ‌ வழி??.

3 வெறும் வயத்தில் என்ன குடிப்பது?

“பார்வதி ! உனக்கு தெரிஞ்சவங்க யாராச்சும் ஆஸ்பத்திரியில் இருக்காங்களா ? யோசிச்சு பாரு!!!”

அப்படியே அங்கே தள்ளிவிடலாமே…..!!!

ஆனால் பார்வதிக்கு ஒரே ஒரு கேள்வி தான்!

“அந்த diatecian பெண்ணை மூத்தவன் அரவிந்துக்குப் பார்த்தால் என்ன? சின்ன வயசிலிருந்தே பூஞ்சை உடம்பு! நல்லா பாத்துப்பா!!”

ஒரே ஒரு விஷயம் சுந்தரத்தின் மனசுக்கு நிம்மதியளிப்பதாய் இருந்தது! உங்களுக்கே தெரிந்திருக்கும்!

ஆமாம்! பஜ்ஜி சமாசாரம் தான்!!

யாருமே சிறுநீரகத்தில் கல் இருந்தால் வாழைக்காய் பஜ்ஜி ஆகவே ஆகாது என்று சொல்லவில்லை!

பாவம் சாப்பிட்டு விட்டு போகட்டும்! கண்ணு போட்டு விடாதீர்கள்!

கல்லடி ‌ பட்டாலும் கண்ணடி படலாமா???

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *