சித்தப்பா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2021
பார்வையிட்டோர்: 2,207 
 

அன்று மாலை நான் வீட்டிற்குள் நுழையும்போது அவளைத் தவிர வேறு யாரும் அந்த வீட்டில் இல்லை. அப்போது தான் அவள் கூடத்திலிருந்து கண்ணாடியின் முன்னால் நின்று முகத்தில் பெளடரைப் பூசிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் அவளைப் பார்க்கும்போது சமையலறைக்குத் திருடச்சென்ற கறுப்புப் பூனை, சாம்பலைப் பட்டதும் படாததுமாகப் பூசிக்கொண்டு எதிரே வருவது போலிருந்தது. அதைப் பார்த்ததும் என்னையும் அறியாமல் நான் சிரித்துவிட்டேன். எனது சிரிப்பின் ஒலியைக் கேட்டதும் அவள் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அப்பொழுது அவள் முகத்தில் தோன்றிய நாணத்தின் சாயல் எனக்கு ஒருவிதமான இதத்தைக் கொடுத்தது.

அடுத்த கணமே அவள் முகத்தை இரு கைகளாலும் பொத்திய வண்ணம் தன் அறைக்குள் ஒடி ஒளிந்து கொண்டாள்.

*⁠*⁠*

அவள் வேறு யாருமில்லை; அத்தையின் மகள்தான். பெயர் நீலா; நான் எப்படி தாய் தந்தையற்ற அனாதையோ, அதே மாதிரி அவளும் தாய் தந்தையற்ற அனாதை. இருவரும் எனது சித்தப்பாவின் பாதுகாப்பில் தான் இருந்தோம். அவர் எனது அப்பாவுடன் பிறந்தவர்தான்; ஆனாலும் என்னைக் கண்டால் அவருக்கு ஏனோ பிடிப்பதில்லை. சித்தி மட்டும் எங்களிடம் கூடியவரையில் விசுவாசத்துடனே நடந்து கொண்டாள்.

என்றைக்காவது ஒருநாள் இரவு வெகு நேரங் கழித்து நான் வருவேன். அம்மாதிரி சமயங்களில் எனக்காக என் சித்தி காத்திருக்க முடியாது. அவளை முதலில் சோற்றில் தண்ணீரைக் கொட்டிவிட்டு வந்து படுத்துக் கொள்ளச் சொல்வார் சித்தப்பா. அத்துடன் நின்றாலாவது எவ்வளவோ நன்றாயிருக்குமே; அதுவும் கிடையாது. தெருக்கதவை வேறு சாத்தித் தாளிட்டு விடுவார். நான் வந்தால் படுத்துக் கொள்வதற்கு வேறு எந்த வீட்டுத் திண்ணையாவது தேடிக் கொள்ள வேண்டியது தான். இந்த லட்சணத்தில் நீலா என்னைக் காதலித்தாள் என்றால் அது என்னுடைய கஷ்ட காலந்தானே?

அப்பொழுது நான் மேற்கொண்டிருந்த தொழிலோ பத்திரிக்கையில் வெளியாகும் கதைகளுக்குப் படம் போடுவது. நான் ஒன்றும் அப்படிப் பிரமாதமான ஓவியக்காரனல்ல; இளம் ஓவியக்காரன். ஓரிரண்டு பத்திரிகைகளில் இடம் கிடைப்பதே கஷ்டமாயிருந்தது. அதற்குக் கூட வழி காட்டியவன் எனது பள்ளிக்கூடத்து நண்பனான சுந்தர்தான். அவன் டெல்லியில் பிரசித்தி பெற்ற ஓர் ஆங்கில வாரப் பத்திரிக்கையில் மாதம் இருநூறு ரூபாய் சம்பளமாகப் பெறும் பேர் போன ஒவியக்காரன்; அவனும் தன்னால் ஆன மட்டும் எனக்கு எங்கேயாவது மாதச்சம்பளத்தில் வேலை தேடிக் கொடுக்க வேண்டும் என்று முயன்று வந்தான்; முடியவில்லை.

அதிகமாய்ப் போனால் மாதம் பத்துப் பதினைந்து ரூபாய்க்கு மேல் எனக்கு வரும்படி கிட்டாது. இது அப்படியே எனது சித்தாப்பாவுக்கு அர்ப்பணமானாலும் அவருக்குக் கொஞ்சம் திருப்தியாயிருக்கும். அதற்கும் குறுக்கே இருந்தது எனது ஒரே ஒரு தம்பியின் படிப்பு. “இப்படியிருந்தால் எந்தச் சித்தப்பாவுக்குத்தான் அதிருப்தி இல்லாமலிருக்கும்!” என்று என்னை நானே தேற்றிக் கொள்வேன்.

*⁠*⁠*

ஒரு நாள் என்னவோ அவளும் நானும் மணக் கோலத்தில் இருப்பது போல் படம் போட்டுப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசை உண்டாயிற்று. போட்டுப் பார்த்தேன்; வெகு நன்றாக அமைந்து விட்டது. எனது அறையில் உட்கார்ந்துகொண்டே அந்தப் படத்தை இப்படியும் அப்படியுமாக வைத்துப் பைத்தியக்காரன் மாதிரி பார்த்துக் கொண்டிருந்தேன். இந்தச் சமயத்தில் அடுப்பங்கரையில் இருந்தபடி சித்தி என்னைக் கூப்பிடவே, அதை அப்படியே மேஜைமீது வைத்துவிட்டு நான் எழுந்து சென்றேன். திரும்பி வருவதற்குள் அந்தப் படத்தை நீலா எடுத்துக் கொண்டு போய்விட்டாள். எனக்கு அவளிடமிருந்து எப்படியாவது அதைப் பிடுங்கிக் கொள்ள வேண்டுமென்று தோன்றிற்று. எப்படிப் பிடுங்கிக் கொள்வது? சித்தி வீட்டில் இருக்கிறாளே!

நல்ல வேளையாகப் பக்கத்து வீட்டில் கல்யாணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண்ணுக்கு நலங்கு வைக்கிறார்கள் என்பதற்காகச் சிறிது நேரத்திற்கெல்லாம் சித்தி சென்றுவிட்டாள். அதுதான் சமயம் என்று நான் மெல்ல அவளது அறையின் பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். அப்பொழுது அந்தப் படத்தை வைத்துக் கொண்டு அவள் வைத்த கண்வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“நீலா!” என்றேன்.

திரும்பிப் பார்த்தாள். “இந்தப் படத்தில் இருப்பவர்கள் யாரோ?” என்று ஏதும் அறியாதவள் போல் என்னைக் கேட்டாள்.

”ஏன், தெரியவில்லையா? நீயும் நானும்தான்!”

“இப்படி நடக்குமென்றா நினைக்கிறீர்கள்?”

“நடக்காது”

“ஏன் நடக்காது?”

“சித்தப்பா சொல்வதை நீ கேட்டதில்லையா?”

“என்ன சொல்கிறார்!”

“என்னுடைய லட்சணத்துக்கு உன்னைக் கல்யாணம் செய்து வைக்க வேண்டியது தான் பாக்கி என்கிறார்!”

“ஆமாம், உங்களைக் கண்டால் ஏன் அவருக்கு வெறுப்பாயிருக்கிறது?”

“இது தெரியாதா? நான் அவருடைய அண்ணாவின் பிள்ளை; அதிலும் வரும்படி கட்டை!”

“நான் துர்ப்பாக்கியசாலி உங்கள் அப்பாவாயிருந்தால் அப்படிச் சொல்வாரா?” என்றாள் அவள் சோகக் குரலில்.

“நானும் துர்ப்பாக்கியசாலிதான்” என்று சொல்லிக் கொண்டே அவளுடைய கையிலிருந்த படத்தை நான் பிடுங்கப் போனேன்.

“வேண்டாம், என்னிடமே இருக்கட்டும்” என்று சொல்லிக் கொண்டே அவள் அந்தப் படத்துடன் ஓட எத்தனித்தாள். நான் விடவில்லை; அவள் ஓட, நான் ஓட ஓடிக் கொண்டே இருந்தோம். கடைசியில் வேறுவழியின்றி அவளுடைய பின்னலைப் பிடித்துக் கொண்டேன்.

இந்தச் சமயத்தில் யாரோ தெரு வாயிலில் வருவது போலிருந்தது. திடுக்கிட்டுத் திடீரென்று பிடித்துக் கொண்டிருந்த பின்னலை விட்டுவிட்டு, ‘இந்தப் பூனையும் அந்தப் பாலை குடிக்குமா?’ என்பது போல் மெல்ல எனது அறைக்கு வந்து விட்டேன். நான் பின்னலை விட்ட வேகத்தில் அவள் கீழே விழுந்து விட்டாள். அப்பொழுது அங்கே சித்தி, “ஐயோ பெண்ணே!” என்று சொல்லி அவளை எடுத்து அணைத்துக் கொண்டாள்.

“புடவை தடுக்கி விழுந்து விட்டேன், மாமி!” என்று சொல்லிக் கொண்டே அவள் என்னைக் கடைக்கண்ணால் பார்த்துக் குறுநகை பூத்தாள். அப்பொழுது நான் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தேன்.

*⁠*⁠*

இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களுக்குப் பிறகு சித்தப்பா நான் வெகு நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு சேதியைக் கொண்டு வந்தார். அன்று அவர் வேலையிலிருந்து வரும்போதே என்றுமில்லாத உற்சாகத்துடன் சித்தியைக் கூப்பிட்டு “அடியே! நீலா அதிர்ஷ்டசாலி தான். அவளுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைத்து விட்டது. பிள்ளையாண்டானின் பெயர் சுந்தரராகவனாம். மாதம் இருநூறு ரூபாய் சம்பாதிக்கிறானாம். வரதட்சணை ஒரு தம்படிகூட வாங்கக்கூடாது என்கிறானாம். ஆனால் பெண்ணை நேரில் கண்டு ‘உனக்கு என்னைக் கல்யாணம் செய்து கொள்ள இஷ்டந்தானா?’ என்று ஒரு வார்த்தை கேட்டு விட்டுத் தான் கல்யாணம் பண்ணிக் கொள்ளச் சம்மதிப்பானாம். நாளைக்கு அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் நம் வீட்டுக்குப் பெண்ணைப் பார்க்க வருகிறார்கள்” என்றார்.

“நல்ல வரனைத் தேடிக்கொண்டு வந்து விட்டீர்கள் ஏன், வீட்டிலேயே இருக்கும் வரனுக்கு என்ன?” என்று எரிந்து விழுந்தாள் சித்தி.

“அதெல்லாம் எனக்குத் தெரியும்; நீ பேசாமல் வேலையைப் போய்ப் பார்!” என்றார் சித்தப்பா.

மறுநாள் பிள்ளை வீட்டார் வந்தார்கள். மாப்பிள்ளையைக் கண்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. அவன் வேறு யாருமில்லை; எனது பள்ளிக்கூடத்து நண்பன், சுந்தர் என்னும் புனைபெயர் பூண்ட சுந்தரராகவன்!

“செளக்கியமா?” என்று சம்பிரதாயப்படி நான் அவனை விசாரித்தேன்!

“செளக்கியந்தான்; இனிமேல் நீயும் செளக்கியமாயிருக்கலாம்” என்று ஒரு போடு போட்டான் அவன்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று கேட்டேன்.

“அதைப்பற்றி நான் உனக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்; இன்று வரும்” என்றான் அவன்.

இந்தச் சமயத்தில் சித்தப்பா அவனைக் கூப்பிட்டனுப்பினார் பெண்ணைப் பார்ப்பதற்காக. அவனும் “இதோ வந்துவிடுகிறேன்!” என்று என்னிடம் சொல்லி விட்டுச் சென்றான். அவன் சொன்னதைக் காதில் போட்டுக் கொள்ளாமல் நானும் அவனைப் பின் தொடர்ந்து சென்றேன்.

வீட்டு கூடத்தின் ஒரு மூலையில் சோகமே உருவாய் நின்று கொண்டிருந்தாள் நீலா. அந்த நிலையில் அவளைப் பார்க்க எனக்குப் பரிதாபமாயிருந்தது. அவள் குறிப்பை ஒருவாறு அறிந்து கொண்டவன் போல் “என்னைக் கல்யாணம் செய்துகொள்ள உனக்கு இஷ்டமில்லையல்லவா?” என்று கேட்டான் சுந்தர்.

“ஆ… மா…!” என்று மென்று விழுங்கிக் கொண்டே சொன்னாள். இதைக் கேட்டதும் சித்தப்பாவின் கண்களில் தீப்பொறி பறந்தது. “பின் யாரைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?” என்று அவர் கர்ஜித்தார்.

“அத்தா….னைத்….தான்!” என்று இழுத்தாள் நீலா.

“இந்தச் சாப்பாட்டு ராமனையா?”

“ஆமாம், மாமா!” அதற்குள்

“அட! உன்னை வீட்டில் வைத்துக் கொண்டா வரனாகத் தேடிப் பிடித்தார்கள்?” என்றான் சுந்தர் ஆச்சரியத்துடன்.

“ஆமாம், நான் வேலையில்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேனோ, இல்லையோ? அதனால் அவளும் எனக்கு வாழ்க்கைப்பட்டு ஏன் கஷ்டப்பட வேண்டும் என்று சித்தப்பா நினைத்தார்” என்று நான் அவனுக்குச் சமாதானம் கூறினேன்.

“இதெல்லாம் வாழ்க்கையில் சகஜந்தானே எனக்கு மட்டும் என்றைக்கும் வேலையிருக்குமென்பது என்ன நிச்சயம்? ஆனால், இனிமேல் உனக்கும் ஒன்றும் கஷ்டமில்லை. எங்கள் பத்திரிக்கை இம்மாதத்திலிருந்து வாரம் இருமுறையாக வருகிறது. இன்னொரு ‘ஆர்ட்டிஸ்ட்’ தேவை என்றார்கள். உன்னைப் பற்றிச் சொன்னேன். ‘சரி’ என்று ஒப்புக் கொண்டார்கள். எடுத்ததும் சம்பளம் நூறு ரூபாய். கடிதம் இன்று வரும் என்றேனே, அந்தக் கடிதத்தில் இதைத்தான் எழுதியிருக்கிறேன். ஆகவே எனக்குக் கல்யாணம் ஆவதற்குள் நீயும் இந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டு என்னுடன் டெல்லிக்குக் கிளம்பத் தயாராயிரு!” என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் சுந்தர்.

அவனுடைய சிரிப்பில் எனது சித்தப்பாவும் எதிர்பாராத விதமாக கலந்து கொண்டார்.

நான் நீலாவைப் பார்த்தேன்; நீலா தரையைப் பார்த்தாள்!

– விந்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *