கலையும் ஒப்பனைகள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 16, 2015
பார்வையிட்டோர்: 11,519 
 
 

பங்கஜத்துக்கு ஒரு நிமிஷம் நெஞ்சு நின்றுவிடும் போலிருந்தது. மனதை முகம் காட்டிவிடக் கூடாது என்று பிரயத்தனப்பட்டு ஒரு புன்னகையை நழுவ விட்டாள். அவளுக்கு எதிரே உட்கார்ந்திருந்த பார்வதி பங்கஜத்தின் மனதை அறியாதவளாய் “”என்னமோ போ, கோமதி பொண்ணுக்கு ரொம்ப அதிர்ஷ்டம்தான். பார்த்த முதல் ஜாதகமே ஒத்துப்போய், வர வெள்ளிக்கிழமை அவா நிச்சயதார்த்தம் பண்ண வராளாம் . ஒரு வாரத்திலே எல்லா வேலையையும் எப்படித்தான் கோமதி சமாளிக்கப் போறாளோ?” என்றாள்.

கலையும் ஒப்பனைகள்

பங்கஜம் “”கோமதி ரொம்ப கெட்டிக்காரி மாமி. எல்லாத்தையும் சமாளிச்சுப்பா” என்று சிரித்தாள்.

“”நீதான் அவளோட பெஸ்ட் பிரண்டாச்சே , உன்னைப் பாக்க இப்போ அவ வருவா. நான் யதேச்சையா சீட்டுப் பணம் கட்டணும்னு போனேன். அப்ப இந்த விஷயத்தை காதிலே போட்டா. யமுனா எங்கே? அவளுக்கும் சட்டுன்னு எதாவது திகைஞ்சா நன்னா இருக்கும்” என்றாள் பார்வதி.

“”உள்ளே படுத்திண்டிருக்கா. இன்னிக்கி ஆபிஸ் இல்லேன்னு. அது சரி, பையன் யாராம்? சொந்தத்திலா?” என்று பங்கஜம் கேட்டாள்.

“”சொந்தமா? சரியாப் போச்சு. அவா ஐயங்காராம். ஹெப்பால் ஐயங்கார் என்று சிரித்தாள்” பார்வதி.

பார்வதிக்கு எப்போதுமே கொஞ்சம் வம்பு வாய். இதைச் சொல்லத்தான் மெனக்கெட்டு இங்கே வந்திருக்கிறாளோ என்று பங்கஜத்துக்குத் தோன்றிற்று.

“”அப்படியா! கோமதி தஞ்சாவூர் ஐயராச்சே. கோமதியின் ஆத்துக்காரர் ரொம்ப ஸ்ட்ரிக்ட் வேறே. எப்படி ஒத்துண்டார்” என்று பங்கஜம் கேட்டாள்.

“”எல்லாம் பணத்தால அடிச்சாப் போச்சு” என்றாள் பார்வதி. “”கோமதியின் பொண்ணும் பார்க்க சுமார்தானே, இல்லையா ஆனா கோமதி ஆத்துக்காரர் வக்கீல் தொழில்ல அப்படி ஒரு சம்பாத்தியம். அவரும் காசை விட்டெறிஞ்சுடறேன்னுட்டார்.

பணம் பணத்தோட ஒட்டி உறவாடிக்க ஆரமிச்சாச்சு பையன் ஆத்துக்காராளும் ரொம்ப பணக்காராளாம். கிருஷ்ணன் கோயில்ல ஞாயித்துக்கிழமைல ஜாதகப் பரிவர்த்தனை பண்றா இல்லையா? அங்கதான் கோமதியின் பொண்ணு ஜாதகத்தைப் பாத்துட்டு வந்தாளாம்”.

“”பையன் என்ன படிச்சிருக்கானாம்? எங்கே வேலை பாக்கறான்?” என்று பங்கஜம் கேட்டாள்.

“”பி.இ. படிச்சிட்டு இன்போசிஸ்ல மானேஜரா இருக்கானாம்”.

“”பி.இ. மட்டும்தானா சந்திரா டபுள் கிராஜுவேட்டாச்சே”.

“”அதான் அப்பவே சொன்னேனே. பணம் பத்தும் பண்ணும் போ” என்று எழுந்தாள் பார்வதி. பங்கஜம் நீட்டிய சிமிழில் இருந்து குங்குமத்தை எடுத்து நெற்றியில் இட்டுக்கொண்டு போனாள்.

அலைபாயும் மனத்துடன் பங்கஜம் உட்கார்ந்திருந்தாள் கோமதியின் பெண் சந்திரா, யமுனாவைவிட இரண்டு வயது சிறியவள். யமுனாவுக்காக ஜாதகக் கட்டை பங்கஜம் தூக்க ஆரம்பித்து நான்கு வருஷமாகப்போகிறது. ஆனால் ஒன்றும் சரியாக அமையவில்லை. படிப்பு, வயது, வேலை, சம்பளம், வேலை பார்க்கும் இடம், அழகு என்று தடங்கலுக்குத் துணை புரிய எவ்வளவு விஷயங்கள்? இதை எல்லாம் மீறி ஜாதகப் பொருத்தம் வேறு அமைய வேண்டும்.

சொந்தத்தில் அவ்வளவு ஒன்றும் சரியான வரனாக அமையவில்லை. சிநேகித வட்டாரத்திலும் அதே கதைதான். அதனால் தமிழ் மேட்ரிமோணி, எஸ்.எஸ்.மேட்ரி என்று மூன்று மாசத்துக்கோ ஆறு மாசத்துக்கோ பணம் கட்டி வரன்களை சலித்துப் பார்த்துப் பார்த்து …. வாரங்கள், மாதங்களாகி வருடங்களாக உருண்டோடி விட்டன. ஆனால் யமுனாவுக்குக் கல்யாணம் திகையவில்லை . ஒரு கோயில், ஒரு கடவுள் பாக்கியில்லாமல் போய்ப் பார்த்து அர்ச்சனைகளும், அபிஷேகங்களும், புடவை சார்த்தலும், மஞ்சள் முடிதலும் என்று அப்படி ஒரு பிரார்த்தனை, வேண்டுதல் எல்லாம் நடந்தன. யாரோ சொன்னார்கள் என்று யமுனாவை ஆபிசில் லீவ் எடுக்கும்படி கெஞ்சிக் கூத்தாடி அவளையும் அழைத்துக்கொண்டு பங்கஜம் திருமணஞ்சேரிக்குப் போய் வேண்டிக்கொண்டு சுவாமியும் அம்பாளும் அணிந்திருந்த மாலையை வாங்கி யமுனாவின் கழுத்தில் போட்டுவிட்டு வந்தாள். அந்த மாலையை, கல்யாணமான பிறகு மறுபடியும் அணிந்துகொண்டு கணவனுடன் யமுனா கோயிலுக்குப்போய் நமஸ்கரித்துவிட்டு வரவேண்டும். அந்த மாலை இன்னும் பூஜை அறையில் யமுனாவின் கணவனின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறது. எப்போது பிராப்தம் வரப் போகிறதோ?

பங்கஜம் கனக்கும் மனதுடன் உள்ளே சென்றாள்.

ஹாலில் இருந்த ஊஞ்சலில் படுத்திருந்த யமுனா அவளைப் பார்த்து “”வம்பெல்லாம் கேட்டு முடிச்சாச்சா” என்று சிரித்தாள்.

“”ஆமா. உனக்கு எல்லாம் சிரிப்பாத்தான் இருக்கும்” என்று பங்கஜம் அவள் மீது எரிந்து விழுந்தாள்.

“”எதுக்கும்மா உனக்கு இந்த கோபம், வருத்தம் எல்லாம்?”

“”யார் சொன்னா எனக்கு கோபம் வருத்தம்னு”

“”எதுக்காக ஐயங்கார் அய்யர் பத்தி நீ விஜாரப்படணும், வேற ஜாதி, வேற மதம், வேற நாடுன்னு எல்லாம் மாறிப் போயிடுத்து. ஐயங்கார் ஐயர் வித்தியாசம்னு இப்ப எங்கேயாவது இருக்கா அது கல்யாணத்தை நிறுத்திடுமா?”

“”என்ன உளர்றே?”

“”அப்புறம் படிப்பு பத்தி எதுக்கு நீயும் அந்த வம்பம்மா பார்வதியும் கவலைப்படறேள்? மனசுக்குப் பிடிச்சவனைப் பண்ணிக்கிறதுக்காக பெரிய பணக்காரி எல்லாம் குப்பத்திலே இருக்கிற தற்குறியை விரட்டி விரட்டி லவ் பண்றான்னு எவ்வளவு ஆயிரம் சினிமா எடுத்தாச்சு? அதை எல்லாம், மறந்துட்டு நீங்க ரெண்டு பேரும் படிப்பு வித்தியாசம்னு பெரிசு பண்ணிண்டு பேசணுமா? போதாக்குறைக்கு பணத்தைப் பத்தி வேறு இழுத்து வச்சு பேசணுமா என்ன?”

“”சரி போ, இனிமே உன்னைக் கேட்டுண்டு எல்லார்கிட்டேயும் பேசறேன். ஏன்னா நீ ரொம்ப பெரிய கெட்டிக்காரி இல்லையோ” என்று வேகமாக உள்ளே சென்றாள்.

ஆனால் மனது அலைபாய்ந்து கொண்டுதான் இருந்தது. கோமதியின் அதிர்ஷ்டத்தைவிட, யமுனாவின் துரதிர்ஷ்டம்தான் அவள் மனதைப் பிசைந்தது. இல்லாவிட்டால், யமுனாவின் அழகுக்கு உறை போடக் காணாத சந்திராவுக்கு முதல்முறையாக எதிர்ப்பட்ட வரனே எப்படி நிச்சயமாகி இருக்க முடியும். பண விஷயத்தில் யமுனாவின் அப்பாவும் கை நிறையச் சம்பாதித்துக் கொண்டுதான் இருக்கிறார். யமுனாவின் சிறுவயதிலேயே அவள் கல்யாணத்துக்கென்று நகைகளும், பாத்திரங்களும், தங்கத்திலும், வெள்ளியிலும் சேர்த்து வைத்தாயிற்று. அவர்கள் இருக்கும் சொந்த வீடும் அவர்கள் காலத்துக்குப்பின் யமுனாவைத்தான் சென்று அடையும். யமுனாவுக்கு வேலையும் ஒரு வெளிநாட்டு வங்கியில் கை நிறையச் சம்பளத்துடன் இருக்கிறது. அப்படியும் ….பங்கஜத்துக்கு அழுகை வரும்போல இருந்தது.

தனது கல்யாணமும் தட்டிப்போய்க் கொண்டேதான் இருந்தது என்று பங்கஜம் நினைத்தாள். தன் அதிர்ஷ்டத்தின் நிழல் யமுனாவின் மீது கவிழ்ந்து விழுகின்றதா. ஆனால் பங்கஜத்துக்கு தாமதமாகக் கல்யாணம் ஆனாலும் கிடைத்த புருஷன் அவளைக் கண்ணில்வைத்துக் காப்பாற்றும் கணவனாக இருந்தான். எப்போதும் அவள் மனதைப் புரிந்து கொண்ட பொறுமைசாலி என்று பங்கஜம் சொந்தக்காரர்களிடமும், சிநேகிதிகளிடமும் சொல்லி மாய்ந்து போயிருக்கிறாள். கல்யாணமான இந்த இருபத்தி ஐந்து வருஷங்களில் பெரும் மனஸ்தாபம், சண்டை என்று எந்தப் பிரளயமும் அவர்களிடையே ஏற்பட்டதில்லை. அப்படி ஒரு நிறைவான வாழ்க்கை.

இதெல்லாம் நினைவில் வந்து அடிக்கடி விழுந்து அவளைச் சமாதானப்படுத்த முயன்றாலும் பங்கஜத்தின் மனது கேட்க மாட்டேன் என்றது. எவ்வளவோ முயன்று கடைசியில் ஏழெட்டு வரன்கள் ஒரு மாதிரி ஒத்துக்கொண்டு வருகிறது போலிருந்தது. ஆனால் நவீனகால வழக்கப்படி ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் சரியாகப் புரிந்துகொள்ள முதலில் பேசிப் பார்க்க வேண்டும் என்று பெண்ணும் ஆசைப்பட்டாள். பையன்களும்கூட. கல்யாணத்துக்கு முன்பே பேசிப் பழகி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டபின்தான் மற்றதெல்லாம் என்றார்கள். நாங்கள் இருபது வருஷம் வாழ்ந்து புரிந்துகொண்டதை இரண்டு மாதத்தில் செய்ய வேண்டும் என்கிறீர்களே என்கிற பெரியவர்களின் வார்த்தை அவர்கள் காதுகளில் ஏறவில்லை. இளக்காரமாகப் பார்த்தார்கள்.

அமெரிக்காவில் இருந்த ஒரு பையன் அவளோடு பேசிய நாலைந்து நாள்களில் அம்மா, தினமும் நன்னா தூங்கிண்டு இருக்கறச்சே போன் பண்றான்மா” என்று பங்கஜத்திடம் சொன்னாள் யமுனா.

“”இங்கே பகல்னா, அங்கே ராத்திரியா இருக்கே. வேறென்ன பண்ணுவான் பாவம்” என்றாள் பங்கஜம்.

“”இல்லேம்மா. டைம் அட்ஜஸ்ட் பண்ணி பேசலாம்மா. ஆனா என்னை டெஸ்ட் பண்றதுக்காக நடுராத்திரியில போன் பண்றதா சொல்றான்”

“”என்னது”

“”ஆமா. அவன் போனுக்காக நான் காத்திண்டு இருக்கேனான்னு பாக்கறானாம்”.

“”அட கடவுளே!” என்றாள் பங்கஜம்.

“”நானும் சொல்லிட்டேன். எனக்கு உன்னைவிட தூக்கம்தான் பெரிசுன்னு”

பங்கஜத்துக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. தூக்கத்தைக் கெடுத்துக்கொண்டு ஒருத்தி தன் காதலைத் தெரிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவனின் மனநிலையை அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. கல்யாணம் ஆன பின்பு அவன் வீட்டுக்கு வர நேரமானால் அப்போதும் அவள் அவனுக்காகத் தூங்காமல் இருக்க வேண்டும் என்று வற்புறுத்துவானோ என்று பங்கஜத்துக்கு பயமுண்டாயிற்று.

இன்னொரு பையன் கனடாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவன் யமுனாவோடு பேசியபோது, “”பெங்களூர் பெண்களுக்கு தைரியம் ஜாஸ்தி இல்லை” என்று கேட்டுச் சிரித்தானாம். யமுனா அவனிடம் “”அப்படீன்னா என்ன அதுக்கு எதுக்கு சிரிக்கிறே?” என்று கேட்டாளாம். இல்லே, “”பாய் பிரண்ட்ஸ் எல்லாம் வச்சிண்டு…”ன்னு மென்னு முழுங்கினானாம். உனக்கும் பாய் பிரண்ட்ஸ் உண்டான்னு கேட்டானாம். “”ஓ, உண்டே” என்று யமுனா பதில் அளித்தாளாம். மறுநாளிலிருந்து பேசுவதை அவன் நிறுத்திவிட்டானாம்”. இவன்லாம் எதுக்கு ஆதிவாசி மனசோட கனடா, ஜப்பான்னு வெளிநாட்டுக்குப் போய் இந்தியாவோட மானத்தை வாங்கணும்? கூடுவாஞ்சேரியிலே பொண்ணு பாத்து கல்யாணம் பண்ணிண்டு காலத்தை ஓட்ட வேண்டியதுதானே” என்று திட்டினாள்.

சரி வெளிநாட்டு வரன்கள்தான் ஒத்துக் கொள்ளவில்லை என்று இந்தியாவுக்குள்ளேயே பார்க்கலாம் என்றால் அவையும் ஒத்து வரவில்லை. பம்பாயில் பெரிய உத்தியோகத்தில் இருந்த ஒரு பையன் யமுனா கல்யாணத்துக்குப் பிறகு வேலை பார்க்கக் கூடாது என்று கட்டளை இட்டான். ஏன் என்று கேட்டதற்கு வீட்டு வேலை எல்லாம் யார் பார்க்கிறது என்றான். இருவர் சம்பாத்தியத்தில் தாராளமாகக் வேலைக்காரர்களை வைத்து நடத்தலாம் என்றால் அவன் ஒத்துக் கொள்ளவில்லை. அப்புறம் யாரோ சொன்னார்கள், அவனுக்கு மனைவியைத் தன் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானமாம். “”ஏதாவது நாய்க்குட்டி கழுத்தில் சங்கிலி போட்டு இழுத்துக்கொண்டு போகட்டும்” என்றாள் யமுனா. இந்த ஒருவரை ஒருவர் பார்த்துப் பேசிப் புரிந்துகொள்ளும் கண்றாவி இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை யமுனாவிற்கு கல்யாணம் ஆகி இருக்கலாம் என்று பங்கஜத்துக்கு அவ்வப்போது தோன்றும்.

ஆனால், ஒரு தடவை யமுனா, “”அம்மா, என் எதிர்கால வாழ்க்கையை ஒருத்தனுடன் ஒப்படைக்கறப்போ, அட்லீஸ்ட் அவனைப் பத்தி கொஞ்சமாவது முன்னாடியே நான் தெரிஞ்சிக்க வேண்டாமா” என்று கேட்டாள். மாறி வரும் காலகட்டத்தில் அவள் சொல்வதும் நியாயமாகப்பட்டது பங்கஜத்துக்கு, அதுபோக, பையன்களும் அல்லவா பேச வேண்டும் என்கிறார்கள். கோமதியின் பெண் கல்யாணம் இந்த விவகாரங்கள் எதுவும் இல்லாமல் நிச்சயமாகிவிட்டது. கோமதி அதிர்ஷ்டக்காரி.

நாலைந்து நாள் கழிந்திருக்கும். மாலையில் பால்கனியில் போட்டிருந்த சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து

கொண்டு தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் பங்கஜம். யமுனா இன்னும் வேலையில் இருந்து திரும்பவில்லை.

ஏழெட்டு கட்டடங்கள் தள்ளி இருந்த கோமதியின் வீட்டு வாசலில் நாலைந்து கார்கள் நின்று கொண்டிருந்தன.

இரண்டு மூன்று நாள்களாக அப்படியொரு போக்குவரத்து. காரிலும், ஆட்டோவிலும், ஸ்கூட்டரிலும் என்று மனிதர்கள் வந்து போன மணியமாய் இருந்தார்கள். உறவினர்கள், நண்பர்கள், கடைக்காரன், பூக்காரி, வேலை ஆட்கள் என்று வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

நிச்சயதார்த்தம் பற்றி கோமதி, பார்வதி வந்துவிட்டுப் போன சில மணி நேரங்கள் கழித்து பங்கஜத்தைப் பார்க்க வந்தபோது கூறியிருந்தாள். நிச்சயதார்த்தத்துக்கே இப்படி என்றால் இன்னும் கல்யாணத்துக்கு எவ்வளவு இருக்கோ என்று ஒரு கணம் பங்கஜத்துக்கு மலைப்பாக இருந்தது.

அப்போது, கோமதி வீட்டிலிருந்து பார்வதி வெளியே வந்து, தன்னை நோக்கி வருவதைப் பங்கஜம் பார்த்தாள். பார்வதி அவளைப் பார்த்து கை அசைத்து, வருவதை சைகை காட்டினாள். பங்கஜம் எழுந்திருந்து வாசல் கதவைத் திறக்கச் சென்றாள்.

உள்ளே நுழைந்த பார்வதிக்கு மூச்சிரைத்தது.

“”லிஃப்ட்லதானே வந்தேள்? ஏன் இப்படி மூச்சு இரைக்கிறது? ஜலம் தரட்டா?” என்று கேட்டபடி ஃபிரிட்ஜைத் திறந்தாள் பங்கஜம்.

குளிர்நீரைப் பருகி விட்டு பார்வதி பங்கஜத்திடம் விஷயத்தை கேட்டா, “”நீ மயக்கம் போட்டு விழுந்திடுவே” என்று சற்றுக் கலவரமான குரலில் கூறினாள்.

“”ஏன்? என்ன ஆச்சு?”

“”கோமதியோட பொண்ணு நிச்சயதார்த்தம் நின்னு போயிடுத்து”

“”என்னது?”

“”ஆமா. என் தங்கை அவாத்து விசேஷத்துக்கு சமையலுக்கு ஒத்துண்டு இருந்தா. அவளைப் பாக்கலாம்னு போனேன். உள்ளே போனா ஒரு சப்தம் இல்லே. என்னடா இது இழவு வீடுபோல அடைஞ்சு கிடக்கேன்னு பதறிண்டுதான் உள்ளே போனேன். கூடத்து உள்ள பேயறஞ்ச மாதிரி நாலஞ்சு பொண்டுகள். நடுப்பற கோமதி கசங்கிய கண்ணும், அழுத மூக்குமா பிரம்மஹத்தி பிடிச்ச மாதிரி உட்கார்ந்துண்டு இருக்கா. அப்புறமா விஷயம் தெரிஞ்சது”

பங்கஜத்துக்கு உடலுக்குள், மனதுக்குள் “ஜிவ்’வென்று ஏதோ எழுந்தது. அலை அலையாகப் பரவிய “ஜில்’லென்ற குளிர்ச்சியைக் குற்ற உணர்வுடன் உணர்ந்தாள். நெஞ்சு வெடித்துவிடும்போல இருந்தது. ஆனால் வலியின் சுவடு எதுவுமின்றி உடம்பு “பர பர’ வென்றது. கை கால்களை நெட்டி முறித்து நிற்க வேண்டும் போல இருந்தது. நிற்கவா, இல்லை ஆடவா என்று புரியவில்லை. கண்கள் பொலபொலவென்று நீரைக் கொட்டின. அது சுடாமல் இதமாக இருப்பது போலிருந்தது பங்கஜத்துக்கு.

“”அழாதே. அழாதே. எனக்கு புரியறது. உன் ப்ராண சிநேகிதிக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்துடுத்தேன்னு உன்னால தாங்க முடியலைன்னு எனக்கு தெரியறது. எல்லாம் பகவான் செயல். நம்ம கைல என்ன இருக்கு?” என்றாள் பார்வதி பரிவுடன்.

“”ஏன் நின்னு போச்சாம்?” என்று பங்கஜம் கேட்டாள்.

“”அந்தப் பையன் வேற யாரையோ அடுத்தவாரம் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு எழுதி வச்சிட்டு ஆத்தை விட்டுப் போயிட்டானாம்”.

“”அடக் கண்றாவியே” என்றாள் பங்கஜம். “”உலகம் ரொம்ப கெட்டுப் போச்சு”.

“”சரி, இருட்டிண்டு வரது, நீயும் கோமதியைப் பார்க்கப் போகணுமே” என்று விடை பெற்றுக்கொண்டாள் பார்வதி.

பங்கஜம் புடவையை மாற்றிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்தாள். லிஃட்டில் வந்து கீழே இறங்கி கட்டட வாசலருகே வந்தபோது எதிரே யமுனா வந்தாள்.

“”எங்கே “ஜிலு ஜிலு’ன்னு கிளம்பிட்டே பங்கஜம்” என்று கேட்டாள் யமுனா. அவளுக்கு மூடு வந்து விட்டால் இப்படி அம்மாவை பேர் சொல்லிக் கூப்பிடுவது அவள் வழக்கம்.

“”யமுனா, கோமதியை பாக்கப் போயிண்டிருக்கேன். சந்திராவோட கல்யாணம் நின்னு போச்சாம்” என்றாள் பங்கஜம்.

“”ஐயையோ, ஏனாம்?”

பார்வதி தன்னிடம் கூறிய தகவல்களை பங்கஜம் யமுனாவிடம் கூறினாள். “”பாவம்டி யமுனா, கோமதி ரொம்ப நல்லவள். சந்திராவுக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்க வேண்டாம்” என்றாள் பங்கஜம்.

யமுனா அம்மாவை உற்றுப் பார்த்தாள். பிறகு மெதுவாக “”இப்ப திருப்திதானே” என்றாள்.

பங்கஜம் வாய் அடைத்துப்போய் பெண்ணைப் பார்த்தாள்.

“”ஆமாம். உனக்கு திருப்திதான்” என்று சொல்லிவிட்டு, தலை குனிந்தபடி வீட்டைப் பார்க்கச் சென்றாள் யமுனா.

– ஜூலை 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *